மனம் போன போக்கில்

Archive for June 13th, 2011

முன்கதை

அத்தியாயங்கள் – 1, 2, 3, 4, 5, 6

7

அலாரம் பலமாக ஒலித்து அவனை எழுப்பியபோது மணி எட்டரை.

ஆறரைக்கே அலாரம் வைத்திருந்தான். ஆனால் ராத்திரி தூக்கம் வராமல் நெடுநேரம் புரண்டு கொண்டிருந்ததால் ஒருவழியாகக் கண்களை மூடி நித்திரையில் ஆழ்ந்த மறுவிநாடியே அந்த அலாரம் அலறினாற்போலிருந்தது.

ஆகவே பாதி சலிப்பு மீதி எரிச்சலுடன் புரண்டு படுத்த அரவிந்தன் ஆறரை மணி அலாரத்தை ஏழு மணிக்கு மாற்றிவைக்க எண்ணினான். ஆனால் தூக்கக் கலக்கத்தில் எட்டரைக்கு மாற்றிவிட்டான்போல.

பதற்றத்துடன் எழுந்துகொண்டான். இனிமேல் பல் தேய்த்து முகச்சவரம் முடித்துக் குளித்துச் சாப்பிட்டுத் தயாராவதற்குள் மணி பத்தைத் தாண்டிவிடும்.

அலுவலகத்துக்குச் சீக்கிரமாகப் போயாகவேண்டும் என்று கட்டாயமெல்லாம் எதுவும் இல்லை. ஆனால் வெளியூரிலிருந்து இங்கே வந்து தங்கியிருக்கும்போது நேரத்தைக் கொஞ்சமும் வீணடிக்கக்கூடாது என்பது பாலபாடம். ஒரே வேகத்தில் முழுமூச்சாக உட்கார்ந்து வேலையை முடித்துவிடவேண்டும், சோர்வு ஏற்பட்டுவிட்டால் மீள்வது கஷ்டம்.

ஆனால் வெளியூர்ப் பயணம் என்று எங்காவது கிளம்பும்போதுதான் ஊரில் உள்ள சோம்பலெல்லாம் மொத்தமாக வந்து கவிந்துகொள்கிறது. காலையில் கண் விழிப்பதில் தொடங்கி ராத்திரி தூங்குவதுவரை அவனுடைய நேரம் முழுவதையும் அவனே திட்டமிட்டுக்கொள்ளலாம் என்கிற அதீத சுதந்திரம் கட்டுப்பாடுகளை அவிழ்த்துவிடுகிறது.

தூக்கம், சாப்பாடு, தினசரி நடவடிக்கைகள் என்று இப்படி எல்லாமே ஒழுங்கற்றுத் தடம்புரண்டுவிடுவதால் மனதுக்கும், உடம்புக்கும் ஏற்படுகிற அழுத்தம் அவன்மட்டும் அனுபவிக்கிற அவஸ்தை.

நல்லவேளையாக, அர்த்தமற்ற சவசவ வேலைகளுக்கெல்லாம் அரவிந்தனை யாரும் வெளியூர்ப் பயணம் அனுப்புவதில்லை. ரொம்பச் சவாலான பிரச்சனை ஏற்படும்போதுதான் அவனை அழைக்கிறார்கள். ஆகவே அவற்றைச் சமாளித்து முடுக்கிச் சரி செய்கையில் ஒரு முரட்டுக் குதிரையை அடக்கி மேலேறி ஜெயிக்கிறாற்போலொரு வெறியும் குரூரமான திருப்தியும் உண்டாகிறது.

ஆனால் இந்த முறை அந்த நிம்மதியும் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அரவிந்தனை இங்கே வரவழைத்துவிட்டு, இங்கே வந்தபின் வேறு பல வேலைகளைத் தலையில் கட்டுகிறார்கள். ‘அதான் வந்துட்டியே, இதையும் முடிச்சுக் கொடுத்துட்டுப் போ’ என்று அதட்டுகிறார்கள். ‘கொசுறா இதையும் செஞ்சுகொடேன்’ என்று அல்பமாகக் கெஞ்சுகிறார்கள்.

கணினி நுட்பங்கள் தெரியாதவர்களின் கையில் அது சம்பந்தமான வேலைகள் மாட்டிக்கொள்வதுதான் இந்தத் துறையின் மிகப் பெரிய சோகம். இந்த மேலாளர்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதைச் சொல்லிவிட்டுச் சும்மா இருந்தால் என்னவாம்? ‘இப்படிச் செய்’, ‘அப்படிச் செய்’ என்று அவர்கள் தருகிற பைத்தியக்காரத்தனமான யோசனைகளில் மண்டை காய்கிறது. ‘என்னை என்போக்கில் விடுங்களேன்’, என்று கத்தத் தோன்றுகிறது.

வாடிக்கையாளர்தான் தெய்வம் என்று காந்தியோ நேருவோ சொல்லியிருக்கிறார்கள். இல்லையென்றால் கம்ப்யூட்டரைத் தூக்கி இந்தக் கஷ்டமர்கள் தலையில் போட்டு உடைத்துவிட்டுக் கிளம்பியிருப்பான் அரவிந்தன்.

என்ன செய்வது? பணமெல்லாம் அவர்கள் கையில்தான் மாட்டிக்கொண்டிருக்கிறது. கம்ப்யூட்டருக்குச் சம்பந்தப்படாத பெரிய கம்பெனிகள், தொழிலகங்கள்கூட ஒரு வருடத்துக்கு இத்தனை கோடி என்று கணினி சார்ந்த முன்னேற்றங்களுக்கு ஒதுக்கிவிடுகிறார்கள். இந்தப் பெருந்தலைகள் அந்தக் காசைக் கையில் வைத்துக்கொண்டு கேரட் துண்டுபோல் அதை ஆட்டிக் காண்பித்து ‘நீ வர்றியா? உன்னால முடியுமா?’ என்று சிறு கம்பெனிகளை விரட்டுகிறார்கள்.

காசு இருக்கிறது, ஆனால் அதை வைத்துக்கொண்டு இதையெல்லாம் செய்துமுடிக்கவேண்டும் என்கிற திட்டமிடல் இல்லை. ஆளாளுக்குத் தங்கள் மனதில் தோன்றியதையெல்லாம் செய்யக் கேட்கிறார்கள். அவர்கள் சிந்திக்கிற வேகத்துக்கு சாஃப்ட்வேர் எழுதவேண்டும் என்றால் முடியுமா?

பெருமூச்சுடன் எழுந்து பல் தேய்க்கச் சென்றான் அரவிந்தன். எப்படியோ, கடந்த நாலு நாள்களில் அவர்கள் அவன் தலையில் கட்டிய புதிய வேலைகளெல்லாம் ஓரளவு முடித்து ஏறக்கட்டிவிட்டான். சில பெரிய வேலைகளைமட்டும் பெங்களூர் சென்றுதான் செய்யவேண்டும்.

அதற்கும் பெரிய சண்டை நடந்தது. ‘ஏன்? அதையும் இங்கேயே செய்யமுடியாதா?’ என்று கண்ணாடி, குறுந்தாடியோடு பிறந்த ஒரு மேனேஜர் அதட்டினார்.

‘இது தனியாகச் செய்கிற விஷயம் இல்லை ஸார். கொஞ்சம் பெரிய வேலை. சரியாகத் திட்டமிட்டுச் செய்யவேண்டும். ஆகவே குறைந்தது, நாலு பேராவது தேவைப்படும்’ என்றான் அரவிந்தன்.

‘நீயே நாலு நாள் கூடுதலாகத் தங்கி முடித்துவிடேன்’ என்று அதிபுத்திசாலித்தனமாகக் கேட்டார் அவர்.

பக்கத்திலிருந்த கண்ணாடி தம்ளரை எடுத்து அவர்மீது வீசியெறியலாமா என்று ஆத்திரமாக வந்தது அரவிந்தனுக்கு. பத்து மாத கர்ப்பத்துக்குபதிலாக பத்து பெண்களைச் சேர்த்து ஒரே மாதத்தில் குழந்தை பெற்றுவிடமுடியும் என்று நம்புகிறவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?

சில மணி நேர விவாதத்திற்குப்பின் ஒருவழியாக அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்தது. இன்னும் பதினைந்து நாள்களுக்குள் எல்லா வேலைகளையும் சரியாக முடித்து அனுப்பிவைக்கிறேன் என்று அரவிந்தன் நாகப்பாம்புபோல் தரையில் கொத்திச் சத்தியம் செய்தபிறகுதான் அரைமனதாக நம்பினார்கள்.

அதன்பிறகும், ‘எங்கள் வேலையைக் கெடுக்க வந்த சண்டாளா’ என்பதுபோல்தான் எல்லோரும் அவனைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு அவனால் எதுவும் செய்யமுடியாது, செய்தும் பிரயோஜனமில்லை.

ஆகவே அநாவசியமாக அதைப்பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்காமல் இப்போதைக்குக் கையில் மிச்சமிருக்கிற கொசுறு வேலைகளையெல்லாம் இன்றைக்கே முடித்துவிட்டுக் கிளம்பிவிடவேண்டும் என்று திட்டமிட்டிருந்தான் அரவிந்தன். தவறினால் சனி – ஞாயிறு வந்துவிடும்.

இந்தப் புண்ணியவான்கள் வானம் கரைந்து பூமியை நிரப்பினாலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை பார்க்கமாட்டார்கள். ‘மன்டே பார்த்துக்கலாம்’ என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். அதன்பிறகு அவன் மேலும் இரண்டு நாள்களை இங்கே வெட்டியாகக் கழிக்கவேண்டியிருக்கும்.

‘எப்படியும் இன்றைக்குக் கிளம்பிவிடவேண்டும்’ என்று ஒருமுறை சற்று பலமாகவே முணுமுணுத்துக்கொண்டான் அரவிந்தன். இன்றைக்கும் ஷேவ் செய்யவேண்டுமா என்று தாடையைத் தடவியபோது மெலிதான முள் தாடி உறுத்தியது.

பிரிவை முன்னிட்டுத் தாடிகூட வளர்க்கமுடியாத அலுவல் வாழ்க்கையை நினைத்து வெறுப்பாக இருந்தது அவனுக்கு. யாரோ தினசரி அவனது கன்னத்தைத் தடவிப் பார்த்து ஆடிட் செய்யப்போவதுபோல் மழுங்க மழுங்க சவரம் செய்தாகவேண்டும்.

ஷேவிங் க்ரீமைத் திறந்து கையில் பிதுக்கியவன் பிறகு ஏதோ நினைத்துக்கொண்டாற்போல் மீண்டும் ஒருமுறை தாடையைத் தடவினான். விளக்கைப் போட்டுவிட்டு இடுப்புயரக் கண்ணாடியில் பார்த்தபோது ஒரு நாள் தாடி அப்படியொன்றும் வெளிப்படையாகத் தெரியவில்லை என்று தோன்றியது. அவன் தாடியோடு சென்றாலும் மொட்டையடித்துக்கொண்டு சென்றாலும் இந்தக் கஸ்டமர் அவனைப் பிழிந்தெடுக்கப்போவதுமட்டும் நிச்சயம். அப்புறம் எதற்கு அநாவசியமாக ஒரு கூடுதல் அலங்காரம்?

கையிலிருந்த க்ரீமைக் கழுவித் துண்டில் துடைத்துக்கொண்டான் அரவிந்தன். பக்கத்தில் நெட்டுக்குத்தலாக நின்றிருந்த ஃபோனை எடுத்து ரூம் சர்வீஸை அழைத்து காஃபி சொன்னான்.

எதிர்முனையில் ஒரு பெண் ‘ஃபில்டர் காஃபியா? ப்ரூவா சார்?’, என்றாள் விளம்பரம்போல.

‘ஏதோ ஒண்ணு’ என்றான் அரவிந்தன். இரண்டும் கண்றாவியாகதான் இருக்கப்போகிறது. தூக்கத்தை விரட்டுவதற்குச் சூடாக ஏதாவது உள்ளே இறங்கியாகவேண்டும், பல வருடக் கெட்ட பழக்கம்!

ஆனால் ஹோட்டல் காஃபி, ஆஃபீஸ் காஃபி இரண்டுமே அவனுக்கு ஒத்துக்கொள்வதில்லை. சில உணவகங்களில் கசப்புச் சுவை நாக்கில் தங்கும்படி அற்புதமான காஃபி கொடுப்பார்கள். அதுகூட அவனுக்குப் பிடிப்பதில்லை.

அவனுடைய காஃபி நீர்த்து இருக்கவேண்டும். அதற்காக அதிகப் பால் கலந்து வாடையடித்தாலும் அவனுக்குப் பிடிக்காது. ரொம்பக் கசப்பாகவும் இல்லாமல் தித்திப்பாகவும் இல்லாமல் நடுத்தரமான பதத்தில் சூடாகக் குடிப்பதுதான் விருப்பம்.

இப்படிப்பட்ட காஃபி வெளியே எங்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது. பெரும்பாலான ஹோட்டல் காஃபிகளில் நுரை பொங்கும் கசப்பைதான் விநியோகிக்கிறார்கள். அல்லது சும்மா ஒரு கடமைக்குக் காஃபியைத் தொட்டுக்கொண்டு பால் ருசி நேரடியாக நாக்கில் அறைகிறது.

அலுவலகங்களில் கிடைக்கும் எந்திரக் காஃபியில் வேறு பிரச்னை. அந்தக் காஃபி இயந்திரங்களில் திரவப் பால் பயன்படுத்துவதும் பராமரிப்பதும் கஷ்டம் என்பதால் கிலோக்கணக்கில் பால் பவுடரை நிரப்பிவிடுகிறார்கள். ஆகவே, அதீதமாகப் பால் பவுடர் வாடை.

குறிப்பாக, இந்த வடநாட்டவர்களுக்குக் காஃபியில் சுத்தமாக ஆர்வமில்லை. அவர்களுடைய விருப்ப பானம் ‘சாயா’தான். யாரேனும் காஃபி கேட்டால் வேண்டாவெறுப்பாகத் தயாரிப்பதைப்போன்ற ஓர் அலட்சியம் தெரிகிறது.

இப்படிப் பல காரணங்களால், வெளியூருக்கு வரும்போதெல்லாம் வீட்டுக் காஃபிக்கு ஏக்கம் வந்துவிடுகிறது. இங்கே ஒவ்வொருமுறை காஃபி என்று எதையாவது குடிக்கும்போதும் வீட்டில் கிடைக்கிற காஃபியை அதோடு ஒப்பிட்டுப் பார்க்கத்தோன்றுகிறது. இதற்காகவே சீக்கிரம் திரும்பிப்போய்விடவேண்டும் என்று தோன்றுகிறது. உருப்படியாக தினசரி காலை ஒரு காஃபிகூடக் குடிக்கமுடியாதபடி என்ன ரோமத்துக்குச் சம்பாதிக்கவேண்டும்?

அறைக்கதவினடியில் ஒளிந்திருந்த ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வை வெளியிலெடுத்துப் பிரித்தான் அரவிந்தன். மறுவிநாடி அழைப்பு மணியை ஒலித்துக்கொண்டு காஃபி வந்துவிட்டது.

‘குட் மார்னிங் ஸார்’ பவ்யமாகச் சொன்னபடி உள்ளே வந்த பையன் மேஜைமீது ஒரு பெரிய தட்டை வைத்தான். அதன் மத்தியில் காலியான கோப்பையையும் அதனருகில் ஒரு ஃப்ளாஸ்கில் காஃபியையும் வைத்தான். பக்கத்திலேயே சின்ன பிளாஸ்டிக் பெட்டியொன்றில் வெள்ளைச் சர்க்கரை, வெல்லச் சர்க்கரை மற்றும் செயற்கைச் சர்க்கரைப் பொட்டலங்கள்.

ஒரு துண்டுச்சீட்டில் கையெழுத்து வாங்கிக்கொண்டு அவன் கிளம்பியபிறகு காஃபியைக் கோப்பையில் ஊற்றி ஒரு பொட்டலம் சர்க்கரையைப் பிரித்துப் போட்டுக்கொண்டான் அரவிந்தன். சிறிய ஸ்பூனால் அதைக் கலக்கியபடி விளையாட்டுப் பகுதியைப் படித்துமுடித்தான்.

அதிசயமாகச் சரியான சூட்டுடனிருந்த காஃபியைக் கையில் எடுத்து உதட்டுக்குக் கொண்டுசென்றபோது அவனது செல்பேசி பலமாக ஒலித்தது. கோப்பையைக் கீழே வைத்துவிட்டுத் தொலைக்காட்சிக்கு அருகே இருந்த செல்பேசியைக் கையில் எடுத்துப் பார்த்தான். உள்ளூரிலிருந்துதான் யாரோ அழைக்கிறார்கள். ‘ஹலோ, அரவிந்தன்’

‘ஹாய் அர்விந்தன், ப்ரவீண் ஹியர்’ எதிர்முனையில் போலி உற்சாகம். ‘ஹவ் ஆர் யு?’

அரவிந்தனுக்கு அந்தக் குரல் கடும் எரிச்சலூட்டியது. அதற்கு நியாயமான காரணம் உண்டு.

இந்தப் ப்ரவீண் என்பவன் அரவிந்தன் இப்போது சென்றாகவேண்டிய அலுவலகத்தின் பெருந்தலைகளில் ஒருவன். அவனைப் பெங்களூருக்குத் திரும்பவிடாமல் மேலும் மேலும் புதிய வேலைகளைச் சுமத்திக்கொண்டிருக்கிற அயோக்கியக் கூட்டத்தின் பிரதான தலைவன்.

‘ஹாய் ப்ரவீண், ஹவ் ஆர் யூ?’, என்று போலிக் குழைவோடு விசாரித்தபோது அரவிந்தனுக்கே அவனது குரல் எரிச்சலூட்டியது. என்னத்துக்கு வெட்டியாக ஒரு ‘ஹவ் ஆர் யூ’? நேற்று மாலை பார்த்த ஜந்து, இன்று காலைக்குள் என்ன பெரிதாக ஆகியிருக்கப்போகிறது? சம்பிரதாயமாம், மண்ணாங்கட்டி!

‘ஐம் ஃபைன்’ என்ற ப்ரவீண், பதிலுக்குக் காத்திருக்காமல் ‘இன்னிக்குக் காலையில ஒரு மேனேஜ்மென்ட் மீட்டிங் இருக்கு’ என்றான் ஹிந்தியில்.

‘அப்படியா? எனக்குத் தெரியாதே!’

‘சொல்ல மறந்துட்டேன்’ அலட்சியமாகச் சொன்னான் அவன். ‘ஒன்பதரைக்கு மீட்டிங், வந்துடுவீங்கதானே?’

மிகுந்த தயக்கத்துடன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான் அரவிந்தன். ஏற்கெனவே மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. இனிமேல் குளித்து சாப்பிட்டுக் கிளம்புவதற்குள் கண்டிப்பாக ஒன்பதரைக்குமேலாகிவிடும்.

இப்படிக் கடைசி நேரத்தில் தகவல் சொன்னால் எப்படி வரமுடியும்? ‘வரமுடியாது போடா’ என்று சொல்லிவிடலாமா என்று யோசித்தான் அவன்.

ஆனால், இது கொஞ்சம் உயர்மட்டப் பேச்சுவார்த்தையாகத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தைத் தள்ளிப்போட்டால் அரவிந்தன் கிளம்புவது இன்னும் தாமதமாகிவிட வாய்ப்புண்டு.

ஆகவே ‘வந்துடறேன் ப்ரவீண்’ என்றான் அரவிந்தன். ‘இன்னும் பதினஞ்சு நிமிஷத்தில அங்கே இருப்பேன்’. வழக்கம்போல் சம்பிரதாயமாக விடைபெற்றுக்கொண்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டு குளியலறைக்குள் கிட்டத்தட்ட ஓடினான்.

அவனை முழுமையாகத் துயிலெழுப்பியிருக்கவேண்டிய காஃபி ஆறிக்கிடந்தது.

(தொடரும்)

***

என். சொக்கன் …

13 06 2011


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 621,011 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

June 2011
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930