மனம் போன போக்கில்

Archive for June 21st, 2011

முன்கதை

அத்தியாயங்கள் – 1, 2, 3, 4, 5, 6, 7

8

‘தலைவிதி’ என்றார் ஞானேஷ்வர் ராவ். ‘இவனுங்ககிட்டேயெல்லாம் குப்பை கொட்டணும்-ன்னு நம்ம தலையில அழுத்தமா எழுதியிருக்கு, வேற என்ன சொல்றது?’

‘சத்தமாப் பேசாதீங்க சார்’ என்றான் அரவிந்தன். ‘இங்கே யாருக்காவது தமிழ் தெரிஞ்சிருக்கப்போகுது.’

‘தெரியட்டுமே, என்ன பெரிசா?’ கைகளை அகல விரித்துச் சொன்னார் அவர். ‘ஒவ்வொரு மீட்டிங்லயும் பத்து விஷயம் புதுசாக் கேட்கறானுங்க. எதுக்கும் எக்ஸ்ட்ரா காசு கொடுக்கமாட்டாங்க, இவனுங்களுக்கு இப்படி இலவசமாச் சேவை செய்யணும்-ன்னு நமக்கென்ன?’

அவருடைய கோபத்தைப் பார்க்கையில் அரவிந்தனுக்குச் சிரிப்புதான் வந்தது. அவனுடைய நிறுவனத்தின் மும்பைப் பிரதிநிதி ஞானேஷ்வர் ராவ். இந்தத் துறையில் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குமேல் அனுபவஸ்தர். இப்படியெல்லாம் புலம்புவதில் கொஞ்சமும் அர்த்தமில்லை என்று அவருக்கும் நன்றாகத் தெரியும். காசு கொடுக்கிறவன் கை எப்போதும் உயரத்தில்தான் இருக்கும். வாங்கிக்கொள்கிறவர்கள் அண்ணாந்து பார்த்துப் பெருமூச்சு விடுவதில் என்ன பிரயோஜனம்?

‘எல்லாம் பக்காவாச் செஞ்சுடலாம் சார்’ என்றான் அரவிந்தன். ‘ஒண்ணும் பெரிய கஷ்டமில்லை. ஆனா, உடனடியா முடியாது. கொஞ்ச நாளாவும்-ன்னு சொல்லி டைம் வாங்கிக் கொடுங்க’

‘இனிமே என்னால அவங்ககிட்டே பேசமுடியாது அரவிந்தன்’ என்றார் அவர். ‘வேணும்-ன்னா நீங்களே பேசிக்குங்க. இல்லாட்டி நீங்க உடனேக் கிளம்பி பெங்களூர் போயிடுங்க. இவனுங்க எக்கேடோ கெட்டுப்போகட்டும்!’

அவனை நேருக்கு நேர் பார்த்துப் பேசிய ஞானேஷ்வரைக் கண்ணிமைக்காமல் முறைத்தான் அரவிந்தன். அவருடைய கோபமும் குத்தலான பேச்சும் தன்மீது எறியப்படுவதுதான் என்பது அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.

ஏனெனில், இப்படி அலட்சியமாகத் தூக்கி வீசுமளவு இந்த கஸ்டமர் சாதாரணமானவனில்லை. அரவிந்தனுடைய நிறுவனத்தின் பெரும்பகுதி வருமானம் இந்த ஒற்றை வாடிக்கையாளரிடமிருந்துதான் வருகிறது. ஆகவே அவன் தலைக்குமேல் ஏறிக் குதித்தாலும் ‘நல்லா அருமையாக் குதிக்கறீங்க சார், பரத நாட்டியம் கத்துகிட்டிருக்கீங்களா?’ என்றுதான் தாழ்ந்து பணிந்து வணங்கிடவேண்டும்.

ஆனால் அரவிந்தன் அப்படிக் குழையாமல் ’என் வேலை முடிந்தது. நான் ஊருக்குப் போகிறேன்’ என்று துடிப்பது ஞானேஷ்வருக்கு எரிச்சல். அதை நேரடியாகச் சொல்லமுடியாமல் வேறு யாரையோ திட்டுவதுபோல் அவனுடைய அவசரத்தின் பின்விளைவுகளைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறார்.

அரவிந்தன் மௌனமாகத் தன் கணினியில் மூழ்கியிருந்தான். எப்படியும் இன்றைக்கு ஊருக்குப் போகமுடியாது என்று நிச்சயமாகத் தெரிந்துவிட்டபிறகு ஞானேஷ்வரின் கோபமோ வேறெதுவுமோ அவனுக்கு முக்கியமாகப் படவில்லை.

’நிஜமாகவே நான் இப்போது சொல்லாமல் கொள்ளாமல் பெங்களூர் கிளம்பிப் போய்விட்டால் என்ன செய்வார்கள்?’ என்று யோசித்தான் அரவிந்தன். செல்வியின் மலர்ந்த முகம்தான் சட்டென்று நினைவுக்கு வந்தது.

ஆனால், செல்வியைத்தவிர வேறு யார் முகமும் மலராது. ‘அங்கே உனக்கு என்ன குறைச்சல்? இன்னும் நாலு நாள் கூடுதலாகத் தங்குவதில் என்ன பிரச்சனை? நாங்கள்தான் நல்ல ஸ்டார் ஹோட்டலில் அறை எடுத்துக் கொடுத்துக் கூடவே சாப்பாடு, மற்ற எல்லா வசதிகளுக்கும் காசு கொடுக்கிறோமே’ என்று அலறுவார்கள், அவனுடைய அவசரத்தைப் பொறுப்பற்ற செயல் என்று வர்ணித்து நடவடிக்கை எடுப்பார்கள். மறுபடியும் வேலை தேடவேண்டியிருக்குமோ என்னவோ.

பிரச்னை அந்த அளவுக்குத் தீவிரமாகாவிட்டாலும் இப்போதே அதற்குத் தயாராகிக்கொள்வது நல்லது என்று நினைத்தான் அரவிந்தன். இப்படி அடிக்கடி ஊர் சுற்றவேண்டிய அவசியமில்லாமல் வேறொரு நல்ல வேலையாகப் பார்த்துக்கொண்டால்தான் பரவாயில்லை.

ஆனால், அப்படியொரு உத்தமமான நல்ல வேலை எங்காவது இருக்கிறதா? அப்படியே இருந்தாலும், இப்போது வருகிற சம்பளம் கிடைக்குமா? மீசையில் ஒட்டாத சவுகர்யமான கூழை யார் தயாரிக்கிறார்கள்?

அரவிந்தனுக்குப் பசித்தது. காலையில் அவசரமாகக் கிளம்பிவந்தபிறகு உள் பேச்சுவார்த்தை, வெளிப் பேச்சுவார்த்தை என்று நேரம் ஓடிவிட்டது. மீட்டிங்கில் கொஞ்சூண்டு பிஸ்கட்டும் கேவலமான காஃபியும் குடித்ததுபோக வேறெதற்கும் நேரமிருக்கவில்லை. வயிறு ஆக்ரோஷமாகப் பொருமிக்கொண்டிருக்கிறது.

சட்டென்று எழுந்த அரவிந்தன் கணினியைப் பூட்டிக்கொண்டு கிளம்பினான். பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஞானேஷ்வரிடம் சொல்லிக்கொள்ளவேண்டும் என்றுகூட தோன்றவில்லை.

‘எங்கே போறீங்க அரவிந்தன்?’ அவன் பத்தடி தூரம் நடப்பதற்குள் அவரே கேட்டுவிட்டார்.

அரவிந்தன் தயக்கத்துடன் திரும்பிப் பார்த்தபோது ஞானேஷ்வருடைய முகத்தில் கொஞ்சமும் கோபம் இல்லை. ஆனால் ஏதோ குறுகுறுப்பு தெரிந்தது. இப்படி திடுதிப்பென்று எழுந்ததும் அவன் பெங்களூரை நோக்கி ஓடக் கிளம்பிவிட்டான் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ.

‘சாப்பாடு’ என்பதுபோல் கை விரல்களைக் குவித்து பாவனையாக வாயில் திணித்துக் காண்பித்தான் அரவிந்தன் ‘பத்து நிமிஷத்தில வந்துடறேன்.’

‘கொஞ்சம் பொறுங்க. நானும் வர்றேன்’. அவரும் கணினியைப் பூட்டிவிட்டு எழுந்துகொண்டார். இருவரும் பேசிக்கொள்ளாமல் மௌனமாக நடந்தார்கள்.

அந்த அலுவலகத்தின் ஏழாவது மாடியிலேயே ஒரு சாப்பாட்டுக் கூடம் இருந்தது. ஆனால் இப்போது உணவு நேரம் இல்லை என்பதால் வெறும் தண்ணீரும் உருளைக் கிழங்கு சிப்ஸும்தான் கிடைக்கும்.

ஆனாலும் இந்த ஊரில் அநியாயத்துக்கு உருளைக் கிழங்கு தின்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டான் அரவிந்தன். பரோட்டாவில் உருளைக் கிழங்கு, தோசையில் உருளைக் கிழங்கு, பானி பூரி, பேல் பூரி என்று எதைத் தின்றாலும் உருளைக் கிழங்கு, போதாக்குறைக்கு அதிலேயே போண்டா செய்து அதைப் பிளந்த ரொட்டித் துண்டுகளுக்கு நடுவே வைத்துச் சாப்பிடுகிறார்கள்.

‘எங்கே போகலாம்?’ ஞானேஷ்வரின் குரலில் கலைந்த அரவிந்தன் ‘எனக்குப் பசிக்கிறது’ என்றான் நேரடியாக.

‘பம்பாய்ல வேர்க்கடலை ரொம்ப விசேஷம். நல்லாப் பெரிசு பெரிசாக் கடலை, மொறுமொறுன்னு அருமையா இருக்கும். நம்ம ஊர்லயெல்லாம் அப்படிப் பார்க்கவேமுடியாது!’ என்றார் அவர். ‘இப்போ நாம கொஞ்சம் கடலை வாங்கிக் கொறிச்சுகிட்டே நடப்போம். இந்தத் தெரு முனையில ஒரு நல்ல ஹோட்டல் இருக்கு.’

‘ஓக்கே’ என்று தோள்களைக் குலுக்கினான் அரவிந்தன். திடீரென்று அவனுக்குச் சாப்பிடுகிற ஆர்வம் குறைந்திருந்தது. ஆனாலும் பசித்தது.

பேருந்து நிறுத்தத்தை ஒட்டினாற்போல் பெரிய குடையொன்றை விரித்து அதன்கீழே ஒருவன் வேர்க்கடலை, பட்டாணிக் கடலை, பொட்டுக்கடலை என்று நிறைத்து வைத்திருந்தான். அவனிடம் ஐந்து ரூபாய்க்கு வேர்க்கடலை வாங்கினார் ஞானேஷ்வர். ஒரு சிறிய குடுவையில் கடலையை எடுத்து அதை உள்ளங்கையில் கொட்டித் தேய்த்துத் தோல் நீக்கிக் கொடுத்தான் கடைக்காரன். காகிதக் கூம்புகளில் ஆளுக்குக் கொஞ்சமாகக் கடலையைப் பிரித்துக்கொண்டு நடந்தார்கள்.

உண்மையிலேயே கடலை ரொம்ப ருசியாக இருந்தது. நூறு ரூபாய்க்கு அவனிடமே கடலை வாங்கித் தின்று பசியாறலாம் என்று தோன்றியது அரவிந்தனுக்கு.

அந்தக் கடைக்காரன் நூறு ரூபாய்க் கடலைகளுக்கும் தோல் நீக்குவதற்கு எவ்வளவு நேரமாகும் என்று அரவிந்தன் யோசித்தபோது ஞானேஷ்வர் குறிப்பிட்ட உணவகம் வந்துவிட்டது.

‘டைட்டானிக்’ என்று நீல வண்ணத்தில் பெயர் அறிவித்த அந்தக் கடைக்குள் நுழைந்து இடம் தேடி அமர்ந்தார்கள். சூழலுக்குப் பொருத்தமில்லாமல் ஜில்லென்று தண்ணீர் கொண்டுவந்து வைத்த வெள்ளை உடைப் பணியாளன் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று விசாரித்துக்கொண்டு விலகினான்.

‘சொல்லுங்க, அரவிந்தன், உங்களுக்கு இப்போ என்ன பிரச்சனை?’ நேரடியாக விஷயத்துக்கு வந்தார் ஞானேஷ்வர். இந்தக் கேள்வியை அவர் கேட்ட தோரணையையும் அவருடைய குறுந்தாடியையும் இணைத்துப் பார்க்கும்போது அவர் ஒரு மன நோய் மருத்துவர்போல் தோன்றினார் அரவிந்தனுக்கு. அவர்முன்னே ஒரு நீண்ட படுக்கையில் தான் படுத்திருப்பதுபோலவும், அவர் அவனை ஹிப்னாடிஸத்துக்கு ஆளாக்கி அவனுடைய எல்லா ஞாபகங்களையும் பிரித்தெடுப்பதுபோலவும் கற்பனை தோன்றியது.

ஒவ்வொரு ஞாபகமாக வெளியிலெடுத்துப் பக்கத்திலிருக்கிற குப்பைத் தொட்டியில் போடுகிறார் அவர். சில விநாடிகளுக்குள் அது முழுவதுமாக நிரம்பிவிடுகிறது.

‘ச்சை’ என்று அலுத்துக்கொள்கிறார் அவர். குப்பைத் தொட்டியினுள் ஒருமுறை எட்டிப்பார்த்துவிட்டு ‘எல்லாமே வீட்டு ஞாபகமா இருக்கு’ என்கிறார். ‘இவன் என்னத்துக்கு பம்பாய்க்கு வந்தான்? ஆஃபீஸ் வேலை பார்க்கிறதுக்கா? இல்லை எப்பவும் வீட்டையே நினைச்சுகிட்டிருக்கிறதுக்கா?’

இப்படிச் சொல்லிவிட்டு அவர் மீண்டும் அவனுக்குள் கையை நுழைத்து வேறொரு ஞாபகத்தை எடுக்கிரார். அது என்ன என்று அவர் பார்ப்பதற்குள் அவன் ஆவேசமாக அலறுகிறான். ‘ப்ளீஸ், ப்ளீஸ், அந்த ஒண்ணைமட்டும் எடுக்காதீங்க. வாணாம்!’

அவன் கத்துவதைப் பார்த்ததும் நிதானமானதொரு வில்லன் சிரிப்பை வெளிப்படுத்துகிறார் ஞானேஷ்வர். இதற்காகத்தானே காத்திருந்தேன் என்பதுபோல் அவருடைய நடவடிக்கை இருக்கிறது. இப்போது கையிலெடுத்த ஞாபகத்தைக் குப்பைத் தொட்டியில் போடாமல் மேஜைமீது வைத்து கூரான கத்தியால் குத்திக் கிழிக்கிறார்.

அரவிந்தன் மேலும் அதிக ஆவேசத்துடன் கத்துகிறான். ஆனால் அவனுடைய கைகளை யாரோ கட்டிப்போட்டதுபோல் செயலற்றிருக்கிறான். ஞானேஷ்வரின் கொலை நடவடிக்கையைப் பார்த்துப் பார்த்து இன்னும் இன்னும் சத்தமாகக் கத்துவதுமட்டுமே அவனால் முடிகிறது.

மேஜையின்மீது கச்சாமுச்சாவென்று கிழிந்து கிடக்கும் அவனது ஞாபகத்தை முள் கரண்டியால் குத்தித் தூக்கிச் சுவைக்கிறார் ஞானேஷ்வர்.

‘என்ன அரவிந்தன்? அடிக்கடி இப்படி திடீர்ன்னு மௌனமாகிடறீங்க?’ ஞானேஷ்வர் சிரிப்புடன் கேட்க, சட்டென்று கற்பனை கலைந்தான் அரவிந்தன். எதிரே குறுந்தாடி ஞானேஷ்வர் வெண்ணெய் தடவிய ரொட்டியைத் துண்டாக்கிச் சென்னா மசாலாவில் தோய்த்துத் தின்றுகொண்டிருந்தார்.

‘ஒ-ஒண்ணுமில்லை’ லேசான வெட்கப் புன்னகையுடன் சொன்னான் அரவிந்தன்.

‘அப்பாடா, இன்னிக்கு தேதிக்கு முதல்வாட்டி சிரிக்கறீங்க’ என்று பெரிதாகச் சிரித்தார் ஞானேஷ்வர். ‘அரவிந்தன், கொஞ்ச நேரம் முன்னாடி நீங்களும் நானும் ஒருத்தரையொருத்தர் ஜென்ம விரோதிங்கமாதிரி முறைச்சுகிட்டோமே, அது நிஜமா? இல்லை, இப்போ சிரிச்சுப் பேசிகிட்டிருக்கோமே, இது நிஜமா?’

அரவிந்தன் பதில் பேசாமல் சாப்பாட்டுத் தட்டைப் பார்க்கக் குனிந்துகொண்டான்.

‘கமான் அர்விந்தன், இந்தமாதிரி கேள்விங்களைச் சந்திக்கத் தயங்கவேகூடாது. அப்புறம் நாம என்ன தப்பு செய்யறோம்-ன்னே நமக்குத் தெரியாமபோயிடும்’ அவன் தோளில் தட்டிச் சொன்னார் ஞானேஷ்வர்.

அவர் சொல்வதை ஏற்பதுபோல் சங்கடமான புன்னகை ஒன்றைச் செய்தான் அரவிந்தன். ‘விடுங்க, அப்போ ஏதோ கோவம், இப்போ சரியாகிடுச்சில்ல?’ என்றான் தொடர்ந்து.

‘இல்லை அரவிந்தன். இன்னும் சரியாகலை’ என்றார் அவர். ‘இப்போ உங்களுக்கு பெங்களூர் திரும்பணும்ன்னு ஆசை. ஆனா எனக்கு, நீங்க இங்கயே இன்னும் ரெண்டு மூணு நாள் தங்கி பாக்கியிருக்கிற வேலையையெல்லாம் முடிச்சுட்டுதான் போகணும்-ன்னு விருப்பம். இந்த ரெண்டு விருப்பத்தில ஏதாவது ஒண்ணுதான் நடக்கமுடியும். இல்லையா?’

அரவிந்தன் சம்மதமாகத் தலையசைக்கும்வரை மௌனமாகக் காத்திருந்தார் அவர். பின்னர் கோபமில்லாத குரலில் ‘அதனாலதான் கேட்கறேன், நீங்க இன்னும் கொஞ்ச நாள் இங்கயே தங்கறதில என்ன பிரச்சனை?’ என்றார்.

இப்போதும் அரவிந்தன் பதில் சொல்லத் தயங்கினான். பதில் தொண்டைக்குழியில் அடைத்துக்கொண்டு காத்திருந்தது. ஆனால் அதை நேரடியாகச் சொன்னால் ‘உடனே அம்மாவைப் பார்க்கணும்ம்ம்ம்ம்ம்’ என்று கதறியழுகிற எல். கே. ஜி. பள்ளிப் பையனைப்போல் உணரப்பட்டுவிடுவோமோ என்று அவனுக்குத் தயக்கமாக இருந்தது.

அவனுடைய தயக்கத்தின் காரணம் ஞானேஷ்வருக்குப் புரிந்ததோ, இல்லையோ. அவர் அவனுடைய பதிலுக்காகக் காத்திருந்தார். ‘எதுவானாலும் தயங்காம சொல்லுங்க அரவிந்தன்’ என்று அவனை உற்சாகப்படுத்தினார். ‘நான் உங்களோட பாஸ் இல்லை. ஸோ, நீங்க என் பேச்சைக் கேட்டே ஆகணும்-ன்னு எந்த அவசியமும் இல்லை. வெளிப்படையாப் பேசலாம்.’

மேலும் சிறிது நேரம் யோசித்தபின் அரவிந்தன் தனது வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசினான். ‘ஞானேஷ்வர், பொதுவா எந்த வேலையானாலும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்தான் வேலை நேரம்ன்னு சொல்வாங்க. ஆனா நம்ம துறையில அப்படி இல்லை. அந்த எட்டு பத்தாகறதும், பத்து பன்னிரண்டாகறதும் சகஜம்’ என்று சொல்லிவிட்டு மூச்சை நன்றாக உள்ளிழுத்துக்கொண்டு அழுத்தமாகச் சொன்னான். ‘இப்போ அந்தப் பத்தும் பன்னிரண்டும் போய் இருபத்து நாலாகிடுச்சு. அது எனக்குப் பிடிக்கலை. ஏன்னா ஆஃபீஸுக்கு வெளியேயும் எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கு. அதுக்கும் நான் நேரம் ஒதுக்கவேண்டியிருக்கு.’

‘வெல் ஸெட்’ என்றார் ஞானேஷ்வர். ‘மனசிலிருக்கிறதை பளிச்சுன்னு சொல்லிட்டீங்க அரவிந்தன். எனக்கு அது ரொம்பப் பிடிச்சிருக்கு’ என்றார்.

அதன்பிறகும் அவர் ஏதாவது பேசுவார் என்று அரவிந்தன் எதிர்பார்த்துக்கொண்டிருக்க ஞானேஷ்வர் மும்முரமாகச் சாப்பிடத் தொடங்கிவிட்டார். அரவிந்தனும் தயக்கத்துடன் சாப்பாட்டுக்குத் திரும்பினான்.

சாப்பிட்டு முடித்ததும் இருவருக்கும் இனிப்பு லஸ்ஸி வந்தது. ‘வாவ், எனக்கு லஸ்ஸி ரொம்பப் பிடிக்கும்’ என்றபடி ஸ்ட்ராவை லஸ்ஸியில் நனைத்து வெளியிலெடுத்து நாக்கில் விட்டுச் சுவைத்த ஞானேஷ்வர் ‘க்ரேட்’ என்று சப்புக்கொட்டினார்.

மோரில் உப்புக்கு பதிலாக இனிப்பைக் கரைத்ததுபோலிருக்கும் லஸ்ஸி அரவிந்தனுக்குப் பிடிக்காது. ஆனால் இங்கே பழக்கமாகிவிட்டது. அவனும் மௌனமாகக் குடிக்க ஆரம்பித்தான்.

கோப்பையில் பாதியை காலி செய்தபின் திடீரென்று நினைத்துக்கொண்டாற்போல் ‘அரவிந்தன், குடும்பத்துக்காகவும் நேரம் ஒதுக்கணும்ன்னு நீங்க மனப்பூர்வமா நினைக்கிறது ரொம்ப நல்ல விஷயம்’ என்றார் ஞானேஷ்வர்.

அரவிந்தனுக்குச் சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது. அதை எதிர்பார்த்தவர்போல் ஞானேஷ்வரும் சிரித்தார். அந்தக் கலகலப்பு ஓய்ந்தபின் ‘அடிக்கடி இந்தமாதிரி ட்ராவல் பண்ணுவீங்களா?’ என்றார்.

இதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் சட்டைப் பையிலிருந்து நீல வண்ண அட்டையொன்றை எடுத்துக் காண்பித்தான் அரவிந்தன். அடிக்கடி விமானப் பயணம் செய்கிறவர்களுக்கான சலுகை அடையாள அட்டை அது.

அந்த அட்டையை ஆவலோடு அவனிடமிருந்து வாங்கிப் பார்த்தார் ஞானேஷ்வர். ‘சில்வர் கார்ட்’ என்று சத்தமாகச் சொன்னவர், எதற்காகவோ  மெல்லச் சிரித்துவிட்டு அவருடைய பர்ஸிலிருந்து அதேபோன்ற அட்டையொன்றை எடுத்துக் காண்பித்தார்.

இப்போது அரவிந்தன் வாய் விட்டுச் சிரித்தான். ‘நீங்களும் என்னைமாதிரிதானா?’

‘உங்களைவிட மோசம்’ என்றார் ஞானேஷ்வர். ‘மாசத்தில குறைஞ்சபட்சம் இருபத்தஞ்சு நாள் வெளியூர்ப் பயணம்தான். இன்னிக்குதான் அதிசயமா உள்ளூர்ல இருக்கேன்’ என்று சிரித்தார். ‘இதுக்காகவே என் பொண்டாட்டி என்னை டைவர்ஸ் பண்ணப்போறேன்னு பதினஞ்சு வருஷமா சொல்லிகிட்டிருக்கா!’

அவர் நிஜமாகதான் சொல்கிறாரா என்பதுபோல் திகைப்புடன் ஞானேஷ்வரைப் பார்த்தான் அரவிந்தன். ‘பயப்படாதீங்க, அவளாலயும் அது முடியாது. உங்க வொய்ஃபாலயும் முடியாது’ என்றார் ஞானேஷ்வர். ‘ஏன்னா, அவங்க நம்மைவிட புத்திசாலிங்க.’

அரவிந்தன் மௌனமாகத் தலை கவிழ்ந்துகொள்ள அதன்பிறகு ஞானேஷ்வரின் குரல் எங்கோ அசரீரிபோல் கேட்டுக்கொண்டிருந்தது.

கையிலிருந்த பயண அட்டையை ஒருமுறை எச்சரிப்பதுபோல் ஆட்டிக் காண்பித்த ஞானேஷ்வர் ‘இதெல்லாம் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்ததுக்கு நாம கொடுக்கிற விலை. எதிர்காலத்தை நினைச்சு நினைச்சு நிகழ்காலத்தை எரிச்சுக்கற முட்டாள்தனம்தான் இன்னிக்குப் புத்திசாலித்தனம், அது உங்களுக்குப் புரியுதோ இல்லையோ, உங்க மனைவிக்குக் கண்டிப்பாப் புரியும்’ என்றபடி எழுந்துகொண்டார். ‘இதுக்குமேல நான் உங்களை வற்புறுத்தினா நல்லாயிருக்காது அரவிந்தன். இனிமே இந்த ப்ராஜெக்ட் போனாப் போகட்டும்ன்னு விட்டுட்டுக் கிளம்பறதும், இருந்து முடிச்சுட்டுப் போறதும் உங்க இஷ்டம்! நீங்க எந்த முடிவை எடுத்தாலும் எனக்கு சம்மதம்தான்.’

பில்லைக் கையிலெடுத்துக்கொண்டு கதவுப்பக்கமாக நகர்ந்த ஞானேஷ்வர். ‘ஆனா ஒண்ணு, நீங்க என்ன முடிவெடுக்கப்போறீங்க-ன்னு எனக்கு இப்பவே தெரியும்’ என்றபடி திரும்பினார். ‘என்னதான் ஊருக்குத் திரும்பணும்ன்னு உங்க மனசு துடிதுடிச்சாலும், தேவைப்பட்டதைவிட அதிகமாகவே பம்பாய்ல தங்கியாச்சுன்னு நீங்க ஆதங்கப்பட்டாலும், இதையெல்லாம் இப்படியே விட்டுட்டுப் போகிறதுக்கு உங்களால கண்டிப்பா முடியாது. அதுதான் நம்ம பலவீனம்!’ என்று சொல்லிச் சிரித்தபோது அவருடைய சிரிப்பைக் கல்லெறிந்து உடைத்துவிடுகிற ஆவேசம் கொண்டான் அரவிந்தன்.

(தொடரும்)

***

என். சொக்கன் …

21 06 2011


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 621,011 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

June 2011
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930