Archive for June 28th, 2011
கார்காலம் – 9
Posted June 28, 2011
on:- In: கார்காலம் | Fiction | Thodarkathai | Uncategorized
- 4 Comments
முன்கதை
அத்தியாயங்கள்:
9
பதற்றத்துடன் இன்னொருமுறை நன்றாக அழுத்தித் திறந்துபார்த்தான் அரவிந்தன். ம்ஹும்! கதவு பிடிவாதமாகத் திறக்க மறுத்தது.
பொதுவாக இதுபோன்ற நட்சத்திர ஹோட்டல் அறைக் கதவுகள் உள்பக்கக் கைப்பிடியை லேசாகத் தொட்டாலே திறந்துகொள்ளும். வெளிப்பக்கத்திலிருந்துதான் நமது அனுமதியின்றி யாரும் திறக்கமுடியாது.
ஆனால் இந்தக் கைப்பிடியைச் சுமார் 90 டிகிரிக்குமேல் சுற்றியும்கூடக் கதவில் சிறு சலனமும் இல்லை. கதவிடுக்கு வழியே வழிகிற வெளிச்சத்தில் கண் வைத்துப் பார்த்தபோது கைப்பிடியின் அசைவிற்கும் கதவு திறப்பதற்குமான இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதுபோல் தோன்றியது.
இந்தக் கதவின் உள்பக்கமாக சாவித்துளையும் இல்லை. ஆகவே சாவி கொண்டு கதவைத் திறப்பதும் நடக்காது. இப்போது மிச்சமிருப்பது ஒரே ஒரு வழிதான். வெளியிலிருந்து யாராவது சாவி கொண்டு கதவைத் திறக்கவேண்டும்.
யாரைக் கூப்பிடலாம் என்று நினைக்கையில் அரவிந்தனுக்குப் பதற்றம் கூடியது. திடீரென்று தெரிந்தவர்கள் எல்லோரும் தொலைந்துபோய்விட்டாற்போலிருந்தது. கையிலிருந்த செல்ஃபோனில் யாரையாவது கூப்பிடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் அவனுக்குத் தன்னுடைய மடத்தனம் புரிந்தது. சட்டென்று அறையினுள் ஓடி ஹோட்டலின் உள் தொலைபேசியை எடுத்து வரவேற்பறையை அழைத்தான். ‘ஹலோ ஸார், குட் ஈவினிங்’ என்று எந்திரப் புன்னகையோடு பேச்சைத் தொடங்கினாள் ஒருத்தி.
‘என் ரூமைத் திறக்கமுடியவில்லை’ என்றான் நேரடியாக.
‘உங்களிடம் சாவி இருக்கிறதா ஸார்?’
‘நான் இப்போ ரூமுக்குள்ளேதான் இருக்கேன்’ என்றான் அரவிந்தன். ‘ஆனா கதவைத் திறந்துகிட்டு வெளியே வர முடியலை.’
‘ஏன் ஸார்?’, என்று அவள் பரிதாபமாக விசாரித்தபோது அவனுக்குக் கோபம்தான் வந்தது. ‘உங்க டப்பாக் கதவில் ஏதோ கோளாறு. உடனடியாகக் கவனியுங்கள், ப்ளீஸ்!’
‘ஷ்யூர் ஸார்’ என்று தொலைபேசி இணைப்பைத் துண்டித்தாள் அவள்.
மீண்டும் கதவருகே சென்று நின்றுகொண்டான் அரவிந்தன். யார் வருவார்கள்? எப்படிக் கதவைத் திறப்பார்கள்? அவர்களிடம் இன்னொரு சாவி இருக்குமா? ஒருவேளை இல்லாவிட்டால்? சாவி இருந்தும் அது திறக்காவிட்டால்? கதவை அறுத்துத் திறப்பார்களா? உடைத்துத் திறப்பார்களா? அதற்கெல்லாம் எத்தனை நேரமாகும்? அரவிந்தனுக்குச் சட்டென்று பசிக்கத் தொடங்கியது.
செல்வியைத் தொலைபேசியில் அழைத்துச் சொல்லலாமா என்று நினைத்தவன் உடனடியாக அந்த எண்ணத்தைத் துடைத்தெறிந்தான். அநாவசியமாக அவளை ஏன் பதற்றப்படுத்தவேண்டும்? இந்தப் பிரச்னை அநேகமாக இன்னும் சில விநாடிகளில் தீர்ந்துவிடப்போகிறது.
அப்போதுதான் இரண்டு நாள்களாக செல்விக்கு ஃபோன் செய்யவே இல்லை என்று ஞாபகம் வந்தது. அவன் இன்றைக்குத் திரும்பி வரப்போகிறான் என்று நினைத்து எதிர்பார்த்துக்கொண்டிருப்பாள், பாவம்.
அப்படியானால், இப்போது அவளுக்குக் கண்டிப்பாக ஃபோன் செய்தாகவேண்டும். உடனடியாகச் செய்யலாமா? அல்லது, ஒன்பதரை மணிக்குமேல்? எதுவானாலும் இந்தப் பூட்டுப் பிரச்னை தீர்ந்தபிறகுதான்.
அரவிந்தனுக்கு ஏஸி அறையிலும் ஏகமாக வியர்த்துக்கொண்டிருந்தது. இந்த ஒன்றரையணா பூட்டைப் பரிசோதிக்கவேண்டியவர்கள் எப்போது வருவார்களோ தெரியவில்லை.
மீண்டும் உள்ளே சென்று ரிஸப்ஷனைத் தொலைபேசியில் அழைத்தான் ‘ஹலோ, குட் ஈவினிங்’ என்று தொடங்கியவளைக் கத்தரித்து ‘பூட்டைச் சரி செய்ய ஆள் அனுப்பினீங்களா? இல்லையா?’ என்றான்.
‘சார், நீங்க உங்க ரூம் நம்பரைச் சொல்லவே இல்லை’ பரிதாபமாகச் சொன்னாள் அவள்.
‘அதனால என்ன? நான் எந்த ரூமிலிருந்து ஃபோன் செய்றேன்னு உங்களால பார்க்கமுடியாதா?’ அதட்டலாகக் கேட்டான் அரவிந்தன்.
‘இப்போ முடியும் ஸார்’ என்றாள் அவள். ‘ரூம் நம்பர் 210. இதோ ஆள் அனுப்பிட்டேன்’ என்று புன்னகைத்து ‘வேறெதாவது வேண்டுமா ஸார் ?’, என்றாள் சம்பிரதாயமாக.
‘நோ தாங்க்ஸ்’ முறைப்பாகச் சொல்லிவிட்டு ஃபோனைக் கீழே வைத்தான் அரவிந்தன். அறைக்குள் பூட்டப்பட்டுக் கிடக்கிறவனுக்கு வேறென்னதான் வேண்டியிருக்கும்? அவன் அலுவலகத்தைப்போலவே இங்கேயும் அபத்தமான சடங்குகள், அர்த்தமில்லாத கார்ப்பரேட் பூச்சுவேலைகள். மின்விசிறியைப் பெரிதாக்கிக்கொண்டு படுக்கையில் சரிந்துகொண்டான்.
வெள்ளைவெளேரென்ற மேல் சுவரில் பூப்போன்ற வடிவங்கள் செய்து அதன் நடுவே மின்விசிறியைப் பொருத்தியிருந்தார்கள். அது வேகமாகச் சுழலும்போது மெல்லிய திரையின்பின்னே பூக்களைப் பார்ப்பதுபோலிருந்தது.
இப்போது ஒருவேளை பம்பாயில் பூகம்பம் வந்தால் தன்னால் வெளியே ஓடக்கூட முடியாது என்று சிரிப்புடன் நினைத்துக்கொண்டான் அரவிந்தன். யார் கண்டது? பூகம்பத்தின் அதிர்ச்சியில் இந்தக் கதவு திறந்துகொள்ளுமோ என்னவோ!
ஒன்றிரண்டு நிமிடங்களுக்குப்பின் யாரோ கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. ‘என்ன ஆச்சு ஸார்?’ என்று கொச்சை ஹிந்தியில் எவனோ விசாரிப்பதை மெலிதாகக் கேட்கமுடிந்தது.
சட்டென்று கதவருகே ஓடினான் அரவிந்தன். ‘கதவைத் திறக்கமுடியலை’ என்றான் சத்தமாக.
கதவுக்கு வெளியே இருந்தவன் பலமாக அதை ஒருமுறை தட்டினான். பின்னர் வெளியிலிருக்கும் கைப்பிடியைச் சுழற்றிப்பார்த்தான். பலனில்லை. மேலும் ஒன்றிரண்டுமுறை முயன்றுபார்த்துவிட்டு ‘சாவி கொடுங்க ஸார்’ என்றான்.
‘ஏன்? உங்ககிட்டே டூப்ளிகேட் சாவி இல்லையா?’ எச்சரிக்கையுடன் கேட்டான் அரவிந்தன்.
‘கீழே போய்தான் வாங்கிட்டு வரணும் ஸார். லேட் ஆவும்’ என்றான் அவன். ‘உங்க சாவியை மெதுவா கதவுக்குக்கீழே தள்ளுங்க.’
சிறு தயக்கத்திற்குப்பின், கதவின் அருகே இருந்த சுவரில் பத்திரமாகப் பொருந்திக்கொண்டிருந்த சாவியைப் பிடுங்கினான் அரவிந்தன். உடனே, அந்தச் சாவியுடன் இணைக்கப்பட்டிருந்த பிரதான மின்சாரப் பொறி துண்டிக்கப்பட்டுச் சட்டென்று அறையின் எல்லா விளக்குகளும் அணைந்தன.
இருட்டில் கதவு எங்கே இருக்கிறது என்றுகூடத் தெரியவில்லை. நல்லவேளையாக, வெளியிலிருந்த மின் வெளிச்சம் கதவுக்குக்கீழே வழிந்துகொண்டிருந்தது. அந்த ஒளிக்கீற்றை இலக்காக வைத்து சாவியைத் தள்ளிவிட்டான் அரவிந்தன்.
வெளியே அவன் சாவியை எடுத்துச் சுழற்றுவதும் ‘க்ளிக்’ என்கிற சப்தமும் நன்றாகக் கேட்டது. பின்னர் கதவு அகலத் திறந்துகொண்டது.
அந்த விநாடியில், சிலுசிலுவென்று வீசும் எதிர்க்காற்றில் நிற்பதுபோல் உணர்ந்தான் அரவிந்தன். சுதந்திரக் காற்றை ஆழச் சுவாசித்தபடி, அறைக்கு வெளியே நின்றிருந்தவனுக்கு மனமார நன்றி சொன்னான்.
‘தேங்க்ஸ் ஸார்’ என்று பதில் மரியாதை செய்த அவன் பாக்கெட்டிலிருந்து ஒரு பெட்டியைக் கையிலெடுத்தான். அதிலிருந்து சில உபகரணங்களைப் பொறுக்கிக்கொண்டான். பின்னர் கதவுக்கு முத்தமிடுவதுபோன்ற கோணத்தில் நின்றபடி கைப்பிடியைக் கழற்றலானான்.
அவனுடைய லாகவமான பணிவேகத்தை வியந்தபடி சில நிமிடங்களுக்கு அவனை கவனித்துக்கொண்டிருந்தான் அரவிந்தன். பின்னர் பசி வென்றுவிட்டது. ‘நீங்க இதைப் பாருங்க, நான் சாப்பிட்டுட்டு வந்துடறேன்’ என்றான்.
‘ஓக்கே ஸார்’ என்று சிறிய சல்யூட் ஒன்றைச் செய்தான் அவன். ‘சாவியைமட்டும் இங்கயே விட்டுட்டுப் போங்க, நான் வேலையை முடிச்சுட்டு ரிஸப்ஷன்ல கொடுத்துடறேன்’ என்றான்.
‘ஷ்யூர்’ என்றபடி, அவனைக் கடந்து வெளியேறினான் அரவிந்தன். விறுவிறுவென்று லிஃப்ட்கள் நிறைந்த மையப்பகுதியை நோக்கி நடந்தான்.
பத்தடி நடந்தபிறகு திடீரென்று ஒரு சந்தேகம். ‘இந்த ஆளை நம்பி ரூம் சாவியைக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேனே, ஒருவேளை இவன் எதையாவது லவுட்டிக்கொண்டு ஓடிவிடுவானோ?’
அரவிந்தன் அறையில் மதிப்புமிக்க பொருள் என்று எதுவும் இல்லை, அலுவலகச் சொத்தாகிய லாப்டாப்பைத் தவிர. அதைத் தொலைத்தால் இவன்தான் கையிலிருந்து காசு அழவேண்டும். எதற்கு ரிஸ்க்? சட்டென்று திரும்பி நடந்தான்.
அவனுடைய அறைக் கதவு அகலத் திறந்து கிடந்தது. பாத்ரூம் முன்னால் சம்மணமிட்டு அமர்ந்திருந்த பூட்டு நிபுணன் கையில் இருந்த உலோக டப்பாவினுள் எதையோ தீவிரமாக நோண்டிக்கொண்டிருந்தான்.
’எக்ஸ்க்யூஸ்மீ’ என்று அவனிடம் மன்னிப்புக் கெட்டுக்கொண்டு உள்ளே நுழைந்தான் அரவிந்தன். மேஜைமீது திறந்து கிடந்த லாப்டாப்பை மடித்துக் கையில் எடுத்துக்கொண்டான். வெளியேறினான். ‘பை!’
அந்தப் பூட்டு நிபுணன் நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. மிஞ்சிப்போனால் 20 வயது இருக்குமா? இவனைப்போய் சந்தேகப்பட்டுவிட்டோமே என்று சற்றே வெட்கமாக உணர்ந்தான் அரவிந்தன்.
ஆனால், இந்தக் காலத்தில் யாரைதான் நம்பமுடிகிறது? என்னதான் தர்மராஜாவாக இருந்தாலும், பாடுபடாமல் கிடைக்கும் பொருள் என்றால் கசக்குமா? நாம்தான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துகொள்ளவேண்டும்.
அந்த ஹோட்டலின் பொதுப்பகுதிகளில் எங்கும் ஸ்பீக்கர்வழியே ஸாக்ஸஃபோன் கசிந்துகொண்டிருந்தது. ஆங்காங்கே மரச்சுவர்களில் நவீன ஓவியங்கள். பொதுவாக எல்லா நட்சத்திர ஹோட்டல்களிலும் இப்படி விளங்கிக்கொள்ளச் சிரமமான நவீன ஓவியங்கள் மாட்டப்பட்டிருப்பதின் தாத்பர்யம் என்ன என்று யோசித்தபடி தனக்கான லிஃப்டை அழைத்தான் அரவிந்தன்.
அவனுடைய பசியைப் புரிந்துகொண்டாற்போல் லிஃப்ட் உடனே வந்துவிட்டது. அதில் புகுந்து முதலாவது மாடிக்கான பொத்தானை அழுத்தியபோது செல்விக்குத் தொலைபேசவேண்டும் என்று மீண்டும் நினைவு வந்தது.
முதலாவது மாடியிலிருந்த உணவகத்தின் அருகே ஒரு சிறு நீச்சல் குளம் உண்டு. இப்போது அங்கே அதிகக் கூட்டம் இருக்காது என்பதால் அங்கிருந்து செல்வியை அழைக்கலாம் என்று தீர்மானித்துக்கொண்டான் அரவிந்தன்.
அவன் நினைத்தபடி நீச்சல் குளம் வெறிச்சோடிக்கிடந்தது. தூரத்தில் ஒரே ஒரு சின்னஞ்சிறுமி அம்மா துணையுடன் தண்ணீரை அளைந்துபார்த்துக்கொண்டிருந்தாள்.
நீள நாற்காலிகளில் ஒன்றில் நன்றாகச் சரிந்து அமர்ந்தான் அரவிந்தன். இந்தச் சில நிமிடங்களுக்குள் கையில் அதீதமாகக் கனக்க ஆரம்பித்திருந்த லாப்டாப்பை மேஜைமீது வைத்தான்.
லாப்டாப்பில் மணிக்கணக்காக வேலை செய்யும்போதெல்லாம் சுமை தெரிவதில்லை. அதை மடித்துக் கையில் அல்லது முதுகில் தூக்கிக்கொண்டு அலையும்போதுதான் கனம் உறுத்துகிறது.
பெருமூச்சுடன் கை விரல்களைக் கோர்த்து மடித்துச் சொடக்கிட்டான் அரவிந்தன். செல்பேசியில் வீட்டு எண்ணை அழைத்தான்.
சில நிமிடங்களுக்குப்பிறகு செல்வியின் ’ஹலோ’ கேட்டது. அவளது குரலில் அதீத சோகம் தொனிப்பதுபோலிருந்தது அவனுடைய குற்றவுணர்ச்சியை அதிகப்படுத்தியது.
‘நான்தான் செல்வி, எப்படி இருக்கே?’
‘எனக்கென்ன குறைச்சல்?’ என்று சிரித்தாள் செல்வி. ‘ஐம் ஃபைன். ஹவ் ஆர் யூ?’
‘ஓக்கே’ என்றான் அரவிந்தன். ‘உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்.’
‘என்னது? நீ இன்னிக்கு வரலை. இன்னும் நாலஞ்சு நாளாகும். அதானே?’ ஏதோ நாளைக்கு சனிக்கிழமை என்று சொல்வதுபோல் சாதாரணமாகக் கேட்டாள் செல்வி.
‘அது எப்படி உனக்குத் தெரியும்?’ அரவிந்தனுக்கு ஆச்சரியம் தாளவில்லை.
‘வெள்ளிக்கிழமை ஃப்ளைட்ல திரும்பி வரவேண்டிய ஆளு ராத்திரி ஒன்பது மணிக்கு இப்படி ஃபோன் செஞ்சா அதுக்கு ஒரே ஒரு அர்த்தம்தான் இருக்கமுடியும் எஞ்சினியர் ஸார்’ என்று சிரித்தாள் அவள்.
‘ஸாரி செல்வி, அல்மோஸ்ட் எல்லாம் முடிஞ்சமாதிரிதான். ஆனா சில புது விஷயமெல்லாம் கேட்கறாங்க’ என்று தயக்கத்துடன் விளக்கத்தொடங்கினான் அரவிந்தன்.
‘நோ ப்ராப்ளம். இருந்து எல்லா வேலையையும் முடிச்சுட்டு வா. ஒண்ணும் அவசரமில்லை’ என்றாள் செல்வி, ‘இப்படித் தாமதமாகலாம்-ன்னு கொஞ்சம் முன்னாடியே சொல்லியிருந்தேன்னா நான் எங்க அம்மா வீட்டுக்குப் போய்ட்டு வந்திருப்பேன்’ என்றாள் தொடர்ந்து.
அவள் உற்சாகமாகதான் பேசினாள். என்றாலும் அரவிந்தன் குற்றவுணர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் திணறிக்கொண்டிருந்தான். இப்போது அவள் சொன்னதைக் கேட்டதும் அந்த வேதனையும் தன்னிரக்கமும் இன்னும் அதிகமாகிவிட்டது.
‘இப்போதான் என்ன? போய்ட்டு வா செல்வி’ என்றான்.
‘அதெல்லாம் வேணாம்’ தீர்மானமாகச் சொன்னாள் அவள். ‘அப்புறம் நீ அடுத்த வாரம் திரும்பி வரும்போது நான் அங்கே இருப்பேன். அநாவசியமா மறுபடியும் கஷ்டம். நான் எங்கயும் போகலை. இங்கயே இருக்கேன்!’
‘ஏண்டி, நான் வேலை விஷயமா உன்னைத் தனியா விட்டுட்டு டூர் போகும்போது நீ உங்க அம்மாவைப் பார்க்கறதுக்காக நாலு நாள் போய்ட்டு வரக்கூடாதா? நான் சமாளிச்சுக்கமாட்டேனா?’
‘அது சரி, நீ டூர் போனாதான் வீட்ல அடுப்பு எரியும், உன்னைப் பார்த்து நானும் ஜாலியா டூர் கிளம்பிட்டா குடும்பம் உருப்பட்டமாதிரிதான்’ என்று சிரித்தாள் செல்வி. ‘அதெல்லாம் வேணாம்ப்பா. நான் இப்ப எங்கேயும் போகலை.’
‘ஓக்கே’ என்றான் அரவிந்தன். ‘குரல் கொஞ்சம் பிசிறடிக்குதே. ஏன்?’
‘ஒண்ணுமில்லை, லேசா ஜுரம்’ என்றாள் செல்வி. ‘ரெண்டு நாளா ஜலதோஷம், தலைவலி தாங்கலை. இன்னிக்கு ஜுரமும் வந்துடுச்சு.’
‘அச்சச்சோ, உடனடியா ஒரு டாக்டரைப் பார்க்கவேண்டியதுதானே?’ பதற்றத்துடன் கேட்ட அரவிந்தனுக்கு இப்போதே அவளைப் பார்க்கவேண்டும்போலிருந்தது. தலையில் ஒரு பழைய ஜாக்கெட்டைச் சுற்றிக் கட்டிக்கொண்டு, மூச்சுவிடச் சிரமத்துடன், நைட்டியில் ஒரு கர்ச்சீப்பைப் பின் வைத்துக் குத்திக்கொண்டு அதில் அடிக்கடி மூக்கைச் சிந்திக்கொண்டிருப்பாள். பாவம்!
‘இன்னிக்கு நீ வந்துடுவே, நாளைக்கு உன்னோட டாக்டர்கிட்டே போகலாம்-ன்னு இருந்தேன்ப்பா’ என்றாள் அவள். ‘சரி, நானே போய்ட்டு வர்றேன்’ என்றாள் தொடர்ந்து.
‘ரொம்ப ஸாரிம்மா’ என்றான் அரவிந்தன். ‘தனியா உனக்கு ரொம்பக் கஷ்டம், பாவம்.’
‘அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா. நான் பார்த்துக்கறேன்’ என்றாள் செல்வி. ‘நீ என்னைப்பத்தி கவலைப்படாம உன் வேலையைக் கவனி’ என்றாள் உறுதியான குரலில்.
‘அது எப்படி முடியும் செல்வி?’ என்றான் அவன். ‘என் நினைப்பெல்லாம் அங்கேதான் இருக்கு. பெங்களூர்ல கொலை, கொள்ளைன்னு எந்த ரிப்போர்ட் படிச்சாலும் மனசு பதறுது.’
‘ஐயோ மக்கு’ என்று சிரித்தாள் அவள். ‘கண்டதையும் கற்பனை செஞ்சுகிட்டுக் கவலைப்படாதே. இது சாதாரணத் தலைவலி, காய்ச்சல். எல்லாம் தானா சரியாப்போயிடும்.’
‘அப்படீன்னா நீ டாக்டர்கிட்டே போகமாட்டியா?’ குற்றம் சாட்டும் குரலில் கேட்டான் அவன்.
‘போறேன்ப்பா’ என்று சிரித்தாள் அவள். ‘நாளைக்கு ஈவினிங்வரைக்கும் காய்ச்சல் இருந்தா டாக்டரைப் பார்க்கறேன். சரியா?’
‘ஓக்கே’ என்று அரைமனதாகச் சொன்னான் அவன். ‘வேறென்ன விசேஷம்?’
‘வேற ஒண்ணும் இல்லை’ என்றாள் அவள். ‘நீ வேலையை முடிச்சுட்டுச் சீக்கிரமா ஓஓஓஓடி வந்துடுவியாம். சரியா?’
‘சரிம்மா’ என்றான் அவன். ‘டேக் கேர், குட் நைட், ஸ்வீட் ட்ரீம்ஸ், ஐ லவ் யூ!’
அவன் செல்பேசியை அணைத்துப் பாக்கெட்டில் போடும்வரை காத்திருந்த உணவகப் பணியாளன் பவ்யமான தூரத்தில் நெருங்கி ‘குடிப்பதற்கு ஏதாவாது வேண்டுமா ஸார்?’, என்றான் பணிவாக. அந்த அரையிருட்டில் அரவிந்தனின் முகத்தில் படிந்திருந்த கலவை உணர்ச்சிகளை அவனால் கவனித்திருக்கமுடியாது.
சில விநாடிகள் யோசித்த அரவிந்தன் ‘லஸ்ஸி’ என்றான்.
(தொடரும்)
***
என். சொக்கன் …
28 06 2011