கார்காலம் – 10
Posted July 6, 2011
on:- In: கார்காலம் | Fiction | Thodarkathai | Uncategorized
- 3 Comments
முன்கதை
அத்தியாயங்கள்:
அரவிந்தன் அறைக்குத் திரும்பும்போது நள்ளிரவு தாண்டியிருந்தது. படுக்கைக்கு அருகிலிருந்த டிஜிட்டல் கடிகாரத்தில் நேரம் பார்த்துவிட்டு திகைத்தவன் பிறகு தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டான். ‘நாளைக்குச் சனிக்கிழமைதானே? விருப்பப்படி தூங்கலாம், லேட்டா எழுந்திருக்கலாம். எந்தப் பயலும் கேள்வி கேட்கமுடியாது!’
உடை மாற்றக்கூடத் தோன்றாமல் படுக்கையில் விழுந்தான். கைக்கடிகாரத்தைக் கழற்றிக் குறு மேஜைமீது வைத்தபோது அங்கிருந்த செல்வியின் புகைப்படம் கீழே விழுந்தது. நிமிர்த்திவைத்தான்.
அந்த நிழற்படத்தில் புகைப் பின்னணியில் செல்வி மலர்ந்து சிரித்துக்கொண்டிருந்தாள். அவனுக்கு ரொம்பப் பிடித்த புகைப்படம் அது. தேனிலவுக்குக் கொடைக்கானல் சென்றபோது எடுத்தது.
செல்விக்கு இந்தப் புகைப்படம் அவ்வளவாகப் பிடிக்காது. ‘பல்லெல்லாம் தெரியுது. வெவ்வெவ்வே’ என்பாள் கிண்டலாக.
இதே பயணத்தின்போது எடுத்த வேறொரு படம்தான் அவளுக்குப் பிடித்தமானது. ஆளரவமில்லாத ஓர் ஒற்றையடிப் பாதையில் புகைப்படக் கருவியின் தானியங்கித் தொழில்நுட்பத்தைக் கொண்டு அவர்கள் தங்களைத் தாங்களே எடுத்துக்கொண்ட படம் அது.
இத்தனைக்கும் அதில் விசேஷமாக எதுவுமே இல்லை. ஒருவரையொருவர் அணைத்துக்கொள்வதுகூட இல்லை, பிரமாதமான சிரிப்பு இல்லை, இருவர் முகத்திலும் லேசான புன்னகை, துணையின் அருகே நெருக்கமாக நிற்கிற புதுப் பெருமிதம், அவ்வளவுதான்.
ஆனால் எதனாலோ செல்விக்கு அந்தப் படம் விருப்பமானது. கொடைக்கானலில் அவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட மற்ற படங்கள் எல்லாம் அவ்வப்போது அந்தந்த இடங்களில் இருந்த மூன்றாம் நபர்கள் யார் யாரோ எடுத்துக்கொடுத்தவை. அப்படியின்றித் தனிமையின் ருசியும் இந்தப் படத்தில் கலந்திருக்கிறது என்பாள் அவள்.
மேஜைமேலிருந்த செல்வியின் படத்தைக் கையிலெடுத்துப் பார்த்தான் அரவிந்தன். சென்ற விநாடியில்தான் பிடித்ததைப்போன்ற ஒரு புத்துணர்ச்சி அதில் தெரிந்தது.
இடையே ஒன்றிரண்டு வருடங்கள் கழிந்திருந்தாலும் இந்தப் படத்திலிருக்கும் செல்விக்கும் இப்போதைய செல்விக்கும் பெரிதாக வித்தியாசங்கள் எதுவும் இல்லை. அந்தச் சிரிப்புதான் அவளை எப்போதும் புதிதாக வைத்திருக்கிறதுபோல என்று நினைத்துக்கொண்டான் அரவிந்தன்.
அந்தப் படத்தைப் பார்க்கப் பார்க்க அதன் பின்னணியிலிருக்கிற புகை நிஜமாகவே அவனைச் சுற்றிப் படர்வதுபோல் தோன்றியது. கொஞ்சம் முயன்றால் அந்தப் பயணத்தின் ஒவ்வொரு விநாடியையும் தெள்ளத்தெளிவாக நினைவுக்குக் கொண்டுவந்துவிடமுடியும் என்று நினைத்தான் அவன்.
ஏனெனில், அதன்பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து எங்கும் பயணம் சென்றதில்லை. கடந்த சில ஆண்டுகளாக அவனுக்கு வாய்ப்பதெல்லாம் இதுபோன்ற தனிமைப் பயணங்கள்தான். இந்தமுறை பெங்களூர் திரும்பியதும் கண்டிப்பாகச் செல்வியுடன் எங்காவது தொலைந்துபோய்விடவேண்டும் என்று உறுதியாக நினைத்துக்கொண்டான் அரவிந்தன்.
ஆனால் அப்படியொரு பயணம் இதுவரையிலான இழப்புகளை ஈடுகட்டுமா என்றுதான் தெரியவில்லை.
ஃபோட்டோவை அதனிடத்தில் வைத்துவிட்டுக் கைகளைத் தலைக்குப் பின்னே கோர்த்தபடி படுத்துக்கொண்டான் அரவிந்தன். வேலை, வேலை என்று நான் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கையில், வேறு வழியில்லாமல் கூடவே ஓடுகிறவள் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாளோ? அவளுடைய விருப்பங்கள், தேவைகள் என்ன என்று கொஞ்சம் நின்று விசாரித்திருக்கலாம்.
இன்று மதியம் ஞானேஷ்வர் திடுதிப்பென்று விவாகரத்தைப்பற்றிப் பேசியது அவனுக்குள் தாளாத ஓர் அதிர்வை உண்டாக்கியிருந்தது. ஆரம்பத்தில் பலமாக இருந்த அதிர்வுகள் இப்போது ஓரளவு தணிந்திருக்கின்றன. என்றாலும் உள்ளுக்குள் அடிபட்ட பறவைபோல் ஏதோ படபடத்தபடியிருந்தது.
தன்னுடன் பணிபுரிகிற மற்றவர்கள் இந்தப் பிரச்சனையை எப்படிச் சமாளிக்கிறார்களோ தெரியவில்லை என்று வியந்துகொண்டான் அரவிந்தன். அலுவல் வாழ்க்கையையும், குடும்ப வாழ்க்கையையும் சரிவிகிதத்தில் பிரித்து இரண்டுக்கும் உரிய முக்கியத்துவம் தருவது எப்படி? முதலில், அப்படியொரு சமநிலை சாத்தியம்தானா?
திருமணமானதிலிருந்து, இப்படிப் பிரச்சனை வந்தபோதெல்லாம் (சில சமயங்களில் பிரச்சனையே வராதபோதும்கூட) தான் தொடர்ந்து ஒரே பக்கம்தான் சாய்ந்துவந்திருக்கிறோம் என்று கசப்புடன் நினைத்துக்கொண்டான் அரவிந்தன். வேறுவிதமாக இதைக் கையாளமுடியுமா என்றுகூட யோசித்ததில்லை. ‘வேலைதான் முக்கியம்’ என்கிற போர்வையில், செல்வியின் பெருந்தன்மையைத் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்திவந்திருக்கிறேன்.
இதைப்பற்றியெல்லாம் செல்வி யோசித்திருப்பாளா என்று தெரியவில்லை. அடக்கிவைக்கப்பட்டவர்களின் கோணம் தங்களையறியாமல் அடக்குமுறை செய்கிறவர்களுக்குக்கூடப் புரியாதுதான்.
அரவிந்தனுக்குச் சிறுவயதில் படித்த கதையொன்று நினைவுக்கு வந்தது.
ஒரு பெரிய கடலுக்கு நடுவே சில சின்னத் தீவுகள், அல்லது மண் திட்டுகள். அந்தச் சிறு நிலப்பகுதி தினந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டிருந்தது. கூடவே கடல் நீரும் குறைய, ஒருகட்டத்தில் கடலுக்கு நடுவே தீவுகள் என்பதுபோய் தீவுகளுக்கு நடுவேதான் அங்கும் இங்கும் கடல் என்கிற நிலைமை உலகமெங்கும் உருவாகிவிட்டதாம்.
இப்படியே போனால் உலகத்தில் கடலே இல்லாமல் போய்விடும் என்று எண்ணிய கடவுள் தனது மந்திரக் கோலை உயர்த்தினாராம். உடனே நிலப்பகுதி வளர்வதும் கடல் பகுதி தேய்வதும் குறைந்துவிட்டதாம். நாம் இப்போது பார்க்கிற நாடுகளெல்லாம், அப்படி உருவானவைதானாம்.
மூன்றாம் வகுப்பிலோ அல்லது அதற்குமுன்போ கேட்ட கதை. விதவிதமான முக பாவனைகளுடன் நீட்டி முழக்கிக் கதை சொன்ன டீச்சரைக்கூட இன்னும் பளிச்சென்று நினைவிருக்கிறது.
கடல் தேய்ந்து நிலம் வளர்ந்து எல்லாமே தனது விருப்பத்திற்கு எதிராகச் சென்றுகொண்டிருப்பதைப் பார்க்கும் கடவுளின் மனோநிலையில்தான் இப்போது அவன் இருந்தான். உடனடியாக ஏதாவது செய்யவேண்டும். இல்லையென்றால் விபரீதமாகிவிடும்.
தனக்கான மந்திரக்கோலை எங்கே தேடுவது என்று எண்ணுவதற்குள், அரவிந்தனுக்குத் தூக்கம் வந்துவிட்டது.
(தொடரும்)
***
என். சொக்கன் …
06 07 2011
3 Responses to "கார்காலம் – 10"

[…] 6, 7, 8, 9, 10 […]


[…] 10, […]

1 | revathinarasimhan
July 9, 2011 at 10:21 pm
அமைதியான
தூக்கம் மட்டுமே அவனுக்குச் சொந்தமோ…
இன்னும் இவனைப் போல எத்தனை நபர்கள்.
கடைசிப் பக்கத்துக்குப் போக ஆவல் அதிகரிக்கிறது.