Archive for July 11th, 2011
கார்காலம் – 11
Posted July 11, 2011
on:- In: கார்காலம் | Fiction | Thodarkathai | Uncategorized
- 4 Comments
முன்கதை
ஞாயிற்றுக்கிழமை காலை செல்வியைத் தொலைபேசியில் அழைத்தபோது அவள் ஓரளவு உற்சாகமான மனோநிலையில் இருப்பதாகவே தோன்றியது. ‘ஜுரம் போயே போச்’ என்றாள் சிரித்து.
‘அப்புறம்? ரெண்டு நாளா என்ன செஞ்சே?’ செல்பேசியைத் தோளிடுக்கில் பொருத்திக்கொண்டிருந்த அரவிந்தன் ரொட்டியில் ஜாம் தடவியபடி கேட்டான்.
‘எப்பவும்போல சும்மாதான் இருக்கேன்’ என்றாள் அவள். ‘உனக்குதான் சனி, ஞாயிறு விசேஷம். நீ ஊர்ல இல்லாட்டி எனக்கு எல்லா நாளும் ஒரேமாதிரிதான்.’
‘நானும் எங்கயும் வெளியே போகலை’ என்றான் அரவிந்தன் ‘ரெண்டு நாளாக் கண்டபடி தூங்கறேன்.’
‘நாளைக்கு மறுபடி ஆஃபீஸா?’ என்ற செல்வி, திடீரென்று நினைத்துக்கொண்டாற்போல் ‘ஹேய், இன்னிக்கு ரொம்ப போரடிக்குது-ன்னு நம்ம கல்யாண வீடியோவை எடுத்துப் பார்த்துகிட்டிருந்தேன்’ என்றாள்.
‘கல்யாண வீடியோவா? மை காட்!’ நெஞ்சைப் பிடித்துக்கொண்டான் அவன். ‘இதுவரைக்கும் நூத்தி எழுபத்தெட்டரை தடவை பார்த்துட்டே. இன்னும் உனக்கு அது சலிக்கலையா?’
‘என்னப்பா பண்றது? எனக்குச் சோகப் படம்ன்னா ரொம்பப் பிடிக்கும்’ என்று கிண்டலாகச் சொன்னவள் ‘சும்மா சொல்லக்கூடாது. கல்யாணத்தின்போது உனக்குத் தொப்பை இல்லவே இல்லை’ என்றாள்.
இதற்கு அரவிந்தன் பதில் சொல்வதற்குள் ஏதோ கோளாறில் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. அதன்பிறகு ஒன்றிரண்டு முறை முயன்றும் கிடைக்கவே இல்லை.
நேற்று செல்வியுடன் பேசியதை அசைபோட்டுக்கொண்டிருந்த அரவிந்தன் அனிச்சையாகத் தனது தொப்பையைத் தடவியபடியிருந்தான். திருமணமான புதிதில் தன்னுடைய சாப்பாடு எப்படியிருக்குமோ என்று நிச்சயமில்லாத செல்வி எல்லாவற்றிலும் எண்ணெயையும் நெய்யையும் தூக்கலாக ஊற்றி வளர்த்த தொப்பை.
அதன்பிறகு வெண்ணெய்ச் சுவைக்கு நாக்கு நன்றாகப் பழகிக்கொண்டது. பனீரும் பாலாடைக்கட்டியுமாகத் தினந்தோறும் தின்றதில் அரவிந்தனுடைய தனிப்பட்ட அடையாளமாகச் சொல்லுமளவு தொப்பை பெருத்துவிட்டது.
இப்போதுதான் சில நாள்களாக வீட்டினுள் ட்ரெட் மில்லில் நடைப் பயிற்சி செய்கிறான். மிஞ்சிப்போனால் மாதத்துக்குக் கால் கிலோவோ அரைக் கிலோவோ குறைகிறது. அதுவும் ஒழுங்காக வயிற்றைக் கட்டினால்தான்.
ஆனால் வெளியூர்ப் பயணம் என்று இப்படிக் கிளம்பிவிட்டால் அதற்கும் வழியில்லாமல்போய்விடுகிறது. வெளியே எங்கு செல்வதானாலும் டாக்ஸி அல்லது ஆட்டோ. ஆகவே சாதாரணமாக நடப்பதற்குக்கூட வாய்ப்பில்லை. இதற்கு நேரெதிராக, சாப்பிடுவதெல்லாம் கொழுப்பு நிறை உணவுகள் என்பதால் ஒவ்வொரு நிமிடமும் உடம்பு பெருத்தபடியிருக்கிறது.
மேஜைமேலிருந்த பாட்டிலில் தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்தான் அரவிந்தன். அடியில் கொஞ்சூண்டு இருந்தது. லேசாகத் தொண்டையைமட்டும் நனைத்துக்கொண்டு மீண்டும் வேலையில் மூழ்கினான்.
இங்கே வந்த தினத்திலிருந்து புதிதாக இவர்கள் அள்ளிப்போட்டிருக்கிற எல்லாத் தேவைகளையும் பட்டியலிட்டு அவற்றில் எது முக்கியம், எது அவசரம், எது அவசர முக்கியம் என்று வகைப்படுத்தும்படி உத்தரவு. அந்தப் பட்டியலை வைத்துக்கொண்டு எதை எப்போது செய்வது என்று முடிவெடுப்பார்களாம்.
புண்ணியவான்கள் எதையாவது சீக்கிரம் செய்து தொலைக்கட்டும். இப்படிக் காலத்துக்கும் இங்கேயே தங்கிக்கொண்டிருக்க அவனால் முடியாது.
இதுபோன்ற தனியார் நிறுவனங்களுக்கெல்லாம் பிறக்கும்போதே இரட்டை நாக்குதான். தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது ஒரு நாக்கு, வெளியாள்களிடம் பேசுகையில் வேறொரு நாக்கு. இவர்களாக ஒரு வேலையைச் செய்யும்போது அதற்குக் கால நேர வர்த்தமானக் கட்டுப்பாடுகளெல்லாம் அவசியப்படாது. புராதனம் படிந்த அரசாங்க அலுவலகங்களைப்போல சின்னச் சின்ன வேலைகளைக்கூட இவர்கள் பல மாதங்களுக்கு இழுத்தடித்துச் செய்துகொண்டிருக்கிற ஆமை வேகத்தைப் பார்க்கிறபோது அவனுக்கு ஆத்திரமாக வரும்.
ஆனால் அதே வேலையை வெளியாள் ஒருவரிடம் ஒப்பந்த அடிப்படையில் கொடுத்தால் இத்தனை நாள்களுக்குள் இந்தத் தரத்தில் முடித்தாகவேண்டும் என்று அதட்டுவார்கள். நியாயம்தான். ஆனால், அந்த வேலைக்கு அவர்கள் தருகிற கால அவகாசம்தான் மகா அநியாயமாக இருக்கும் – பத்து நாளில் முடிகிற வேலையை மூன்றாவது நாள் சாயங்காலம் முடித்தாகவேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்பார்கள். ‘உன்னால் முடியாதென்றால், நான் வேறு ஆள் பார்த்துக்கொள்கிறேன்’ என்று திமிரோடு மிரட்டுவார்கள்.
வேறு எந்த ஆள் வந்தாலும் அந்த வேலையை மூன்று நாள்களுக்குள் முடிக்கமுடியாது என்று நிச்சயமாகத் தெரிந்திருந்தாலும், இதுபோன்ற பெருந்தலை வாடிக்கையாளர்களை வேறொரு கம்பெனியிடம் இழந்துவிடக்கூடாதே, அதற்காக ‘எட்டு நாள்ன்னா கொஞ்சம் முயற்சி பண்ணலாம் சார்’ என்று அசிங்கமாக பேரம் பேசிக் கெஞ்சவேண்டியிருக்கும்.
கடைசியில், பத்து நாள் வேலையை ஆறு நாளில் முடித்தாகவேண்டும் என்று முடிவாகும். அதற்கான காசை வாங்கிப் பையில் போட்டுக்கொண்டு விற்பனையாளர்கள் பறந்துவிட, கடைசியில் மாட்டிக்கொள்வது அரவிந்தனைப்போன்றவர்கள்தான். இப்படிச் செய்து செய்துதான் இந்தத் துறையில் எட்டு மணி நேர வேலை என்பதே வழக்கொழிந்துவிட்டது.
இத்தனை வருடங்களில் ராத்திரி பகலெல்லாம் அர்த்தமிழந்துவிட்ட இந்த வேலைக்கு அரவிந்தன் நன்றாகவே பழகிக்கொண்டிருந்தான். என்றாலும், இப்படி வாடிக்கையாளர்களின் அலுவலகங்களில் அமர்ந்திருக்கிறபோது, சுற்றியிருக்கிற எல்லோரும் ஐந்து மணிக்கு ஸ்விட்ச் போட்டாற்போல் எழுந்து வீட்டுக்குச் சென்றுவிடுகையில் இவன்மட்டும் தனியே உட்கார்ந்து குப்பை கொட்டிக்கொண்டிருப்பது சலிப்பாக இருந்தது.
தனக்கென்று அமைக்கப்பட்டிருந்த தாற்காலிக மேஜையின் அறைகளைத் திறந்து பார்த்தான் அரவிந்தன். ஒன்றில் சில உதிரித் தாள்களும் ஒரு நீல நிற பேப்பர் வெயிட்டும் இருந்தது. இன்னொன்று அழுந்த மூடியிருந்தது. அதை வேகமாகத் திறந்தபோது ஒரு நிழற்படம் விடுபட்டுச் சரிந்துவந்தது.
இனம்புரியாத ஆர்வத்துடன் அதைக் கையிலெடுத்தான் அரவிந்தன். அழகான ஒரு பெண்ணின் புகைப்படம் அது. அவன் எப்போதும் தனது பயணப் பெட்டியில் வைத்திருக்கும் செல்வியின் புகைப்படத்தைப்போலவே கச்சிதமாக லாமினேட் செய்யப்பட்டு மேஜையின்மேல் நிற்கவைக்கும்படியான அமைப்புடன் கம்பீரமாக இருந்தது.
புகைப்படத்திலிருந்த அந்தப் பெண்ணை அவன் கண்டிப்பாக இதற்குமுன் பார்த்ததில்லை. என்றாலும், ஏதோ ஒரு விதத்தில் மிகவும் பரிச்சயமானவளாகத் தோன்றினாள் அவள். சிரிக்கும் அந்தக் கண்களும் கூர் மூக்கும் அலைபாயவிட்டிருக்கும் தலைமுடியும் சந்தன நிறச் சேலையும் அவளை இன்னமும் பலமடங்கு அழகாகக் காட்டின. அந்தப் புகைப்படத்தை எடுத்தவன் ஒரு மகா கலைஞனாகதான் இருக்கவேண்டும் என்று எண்ணத்தோன்றியது.
யார் இவள்? இதற்குமுன் இந்த இருக்கையில் அமர்ந்திருந்தவனின் மனைவியாகவோ, காதலியாகவோ இருப்பாளா? யோசனையுடன் அந்தப் புகைப்படத்தை மேஜைமீது வைத்தான். ‘இது என் இடம்’ என்று அறிவிப்பதுபோன்ற உரிமையுடன் சரியாகப் பொருந்தி நின்றுகொண்டது.
அந்தப் புகைப்படத்தையே சில விநாடிகளுக்குக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் அரவிந்தன். அதிலிருக்கும் பெண் யார் என்கிற ஆரம்பக் குறுகுறுப்பு குறைந்து இப்போது வேறுவிதமான கேள்விகள் அல்லது ஊகங்கள் தோன்றியிருந்தன.
திடீரென்று அந்தத் தாற்காலிக இருக்கைக்கு மிகவும் நெருக்கமானவனாகத் தன்னை உணர்ந்தான் அரவிந்தன். தனக்குமுன் அதில் உட்கார்ந்திருந்தவர் யாராக இருந்தாலும், அவர் அனுபவித்திருக்கக்கூடிய உணர்வுகள் இப்போது கை மாறித் தன்னிடம் வந்துவிட்டதுபோல் தோன்றியது. ஒருவேளை இந்தப் புகைப்படத்தில்தான் அவர் தனது மனத்தைக் கொட்டிவைத்திருந்தாரா? இடம் மாறிச் செல்லும்போது இங்கேயே விட்டுச் சென்றுவிட்டாரா?
உடனடியாக அவரைக் கண்டுபிடித்து இந்த ஃபோட்டோவை அவரிடம் கொடுத்துவிடவேண்டும்போல் துடிப்பாக இருந்தது அரவிந்தனுக்கு. ‘இந்தாய்யா உன் பொருள்’ என்று பாரத்தை அவரிடம் ஒப்படைத்துவிட்டு அந்த இடத்தில் செல்வியின் புகைப்படத்தை வைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டான் அவன்.
ஆனால், செல்வியின் புகைப்படம் எதற்கு இங்கே இருக்கவேண்டும்? இது என்னுடைய இடம் இல்லை. நான் நாளைக்கோ அதற்கு மறுநாளோ பெங்களூருக்குப் பறந்துவிடப்போகிறேன். அதன்பிறகு என் அலுவலகத்தில் என் சொந்த மேஜையில் செல்வியின் படத்தை வைத்துக்கொண்டால் போதாதா?
அந்தக் காட்சி அரவிந்தனின் நெஞ்சு முழுதும் நிரம்பியது. இப்போதைக்கு அது கற்பனைதான் என்பதை நினைக்கக்கூட விரும்பாதவனாக அதைப் பெரிதாக்கி, விரிவாக்கி, பின்னர் அதனுள் தாவிக் குதித்துவிடவேண்டும் என்று ஆவலோடு எண்ணத் தொடங்கிவிட்டான். லேசாக மூச்சுத் திணறலானது அவனுக்கு.
சட்டென்று மேஜைமேலிருந்த அந்தப் புகைப்படத்தை எடுத்து இருந்த இடத்திலேயே திரும்ப வைத்துவிட்டான் அரவிந்தன். இந்த விநாடியே ஊருக்குத் திரும்பிவிடவேண்டும்போல் ஒரு படபடப்பு தொடங்கியது.
கணினியை மூடிப் பைக்குள் வைத்துக்கொண்டு வாசலை நோக்கி நடந்தபடி செல்பேசியில் வீட்டு எண்ணை முயன்றான் அரவிந்தன். நினைத்த மாத்திரத்தில் இப்படித் தொலைபேசியில் அழைத்துப் பேசுவதுபோல மனிதர்களும் நொடிக்கு நொடி ஓர் ஊரிலிருந்து இன்னோர் ஊருக்குப் பறந்து சென்று திரும்ப முடிந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தபோது அந்தச் சிந்தனையின் அபத்தப் பின்னணி புரிந்தும் ஆனந்தமாக இருந்தது.
‘இந்தத் தடத்தில் எல்லா இணைப்புகளும் உபயோகத்தில் உள்ளன!’ என்றது அவனுடைய செல்பேசி.
(தொடரும்)
***
என். சொக்கன் …
11 07 2011