கார்காலம் – 12
Posted July 18, 2011
on:- In: கார்காலம் | Fiction | Thodarkathai | Uncategorized
- 8 Comments
முன்கதை
ஜில்லென்ற அந்த வெண்ணிறத் துண்டை முகத்தில் பரப்பி ஒற்றியெடுத்தபோது கை நிறைய பனிக்கட்டிகளை அள்ளிப் பூசிக்கொண்டாற்போல் இதமாக இருந்தது அரவிந்தனுக்கு.
மும்பையின் ராட்சஸப் போக்குவரத்தில் சுமார் ஒரு மணி நேரம் பயணம் செய்து வந்ததில் முகமெல்லாம் எரிந்துகொண்டிருந்தது. ஆகவே இந்தச் செயற்கைப் பனிப்பூச்சை இன்னும் சிறிது நேரம் அனுபவிக்கவேண்டும்போல் ஏக்கமாக இருந்தது அவனுக்கு.
வீட்டுக்குத் திரும்பும் எல்லாப் பயணங்களுமே இன்பமயமானவைதான். இப்படித் தாமதமாகித் திரும்புவதென்றால் இன்னும் விசேஷம்.
ஆனால் விமானத்தினுள் நுழைகிற விநாடிவரை அரவிந்தனுக்கு இந்தப் பயணம் எந்த அளவுக்கு நிச்சயமானது என்பது தெரியவில்லை. கடைசி நேரத்தில் அழைத்து ‘நீ பெங்களூர் போகமுடியாது, உடனடியாக ஆஃபீசுக்குத் திரும்பி வா!’ என்று சொல்லிவிடுவார்களோ என பயந்து விமான நிலையத்திற்கு வந்ததும் செல்பேசியைக்கூட அணைத்துவிட்டான்.
அதன்பிறகு, எல்லாமே அதிவிரைவாக நடப்பதுபோலிருந்தது. ஏற்கெனவே திறந்த டிக்கெட்டை இன்றைய மாலை விமானத்திற்கு மாற்றிக்கொண்டிருந்தான். அதை உறுதி செய்து பாதுகாப்புப் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறி உட்கார்ந்து மிட்டாய் தின்று காதில் பஞ்சு பொருத்திக்கொண்டு ஜில் துண்டில் முகம் துடைத்துக்கொண்டாகிவிட்டது.
ஆனால் இந்த வேகமெல்லாம் அரவிந்தனுக்குப் போதவில்லை. ஒருவேளை இது கற்பனையாகவோ கனவாகவோ இருந்தாலும்கூட, அது கலைவதற்குள் இந்த விமானம் பெங்களூருக்குச் சென்றுவிடாதா என்றிருந்தது அவனுக்கு.
இந்தப் பயணம் நேற்றைக்கே அநேகமாக முடிவாகிவிட்டது. நீண்ட விவாதங்களுக்குப்பிறகு இப்போதுள்ள பட்டியலில் எவையெல்லாம் புதிய விஷயங்கள், எவை பழைய பிரச்சனைகள் என்று வகை பிரித்து, எவற்றை எப்போது முடிக்க இயலும் என்று தேதிவாரியாகக் குறிப்பிட்டு உறுதி தந்தபிறகு ‘ஒழிஞ்சு போ’ என்கிற தோரணையில் அரவிந்தனைக் கிளம்ப அனுமதித்தார்கள்.
ஆனால் இதுபோன்ற வாக்குவாதங்கள் எப்போதும் முழுசாக முடிவடைவதில்லை என்பதுதான் அரவிந்தனின் அனுபவம். எந்த விநாடியிலும் எதிர்த்தரப்பில் யாரேனும் ஒருவர் திடீரென்று கோபப்பட்டு ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுகளையெல்லாம் மொத்தமாகக் கிழித்து வீசிவிட்டு அரவிந்தனை அவனுடைய நாற்காலியிலேயே கட்டிப்போட்டுவிடலாம்.
ஆகவே இதுவரை அவன் செல்விக்கு ஃபோன் செய்யவில்லை. திரும்பி வருவதாகச் சொல்லவில்லை. சுவாமி புண்ணியத்தில் ஒழுங்காக நேரத்தில் ஊர் போய்ச் சேர்ந்தால் ‘உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாமே-ன்னுதான் சொல்லாமலே கிளம்பி வந்துட்டேன்’ என்று சொல்லி அவளைச் சிரிக்கவைக்கலாம்.
விமானம் தனது ஓடுபாதையில் அதிவேகமாக ஓடி ஜிவ்வென்று மேற்கிளம்பியபோது அரவிந்தனுக்கு வயிற்றைப் பிசைகிறாற்போலிருந்தது. வழக்கம்போல் கண்களை இறுக மூடிக்கொண்டான். அந்த இருட்டுக்குள்ளும் ஒரு புன்னகை. ‘இனிமேல் என்னை யாரும் திருப்பி அனுப்பமுடியாது! அட்லீஸ்ட், இப்போதைக்கு.’
ஏனோ ரொம்பக் களைப்பாக இருந்தது. அப்படியே தூங்கிவிடலாம் என்று நினைத்தான் அரவிந்தன். ஆனால் விமானத்தில் சாப்பாடு போடுவார்களே!
அதனால் என்ன? அப்போதைக்கு விழித்துக்கொண்டால் ஆச்சு என்று எண்ணியபடி இருக்கையில் நன்றாகச் சரிந்து அமர்ந்துகொண்டான் அரவிந்தன். கண்கள் மூடியிருந்தாலும் தூங்கமுடியாதபடி காதுகளுக்குள் பிடிவாதமான விமானச் சத்தம் உறுத்தியது.
ஆனால் விழிப்புக்கும் தூக்கத்துக்கும் இடையிலான இந்தத் திரிசங்கு நிலை அவனுக்குப் பிடித்திருந்தது. வானத்தையும் தொடாமல் தரையிலும் இல்லாமல் நடுவே விரைகிற இந்த விமானத்தைப்போல.
சிறிது நேரத்துக்குப்பின் அவனுடைய காதுகளில் மெலிதாக ஒரு சத்தம் கேட்கிறாற்போலிருந்தது. ‘லப் டப்’ என்கிற இதயச் சத்தம்போல் ஏதோ தொடர்ச்சியான இரட்டைக் கிளவிமாதிரி ஒலி.
இன்னும் கூர்ந்து கேட்டபோது, அது ‘லப் டப்’ இல்லை, ‘டொக் டொக்’ … குதிரை ஓடுகிற சத்தம்தான்.
நன்கு அலங்கரிக்கப்பட்ட அந்தத் தேரில் மொத்தம் நான்கு குதிரைகள் பூட்டியிருக்கிறது. பிரதானமான பகுதியில் அரவிந்தன் கம்பீரமாக அமர்ந்திருக்கிறான். அவனுக்குச் சற்று முன்னால் ஒருவன் விரைவாகக் குதிரைகளைச் செலுத்திக்கொண்டிருக்கிறான்.
‘வேகமாகப் போ’ என்கிறான் அரவிந்தன். சாலையின் இருபுறமும் பசுமை அழகு கொஞ்சும் இயற்கைக் காட்சிகள். ஆனால் அவனுக்குதான் எதையும் பார்க்க நேரமில்லை, பொறுமையில்லை. நன்கு சரிந்து உட்கார்ந்து கண்களை மூடிக்கொள்கிறான். ‘இன்னும் வேகம்’ என்கிறான் சத்தமாக.
‘நம் குதிரைகள் காற்றின் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன’ நான்கு குதிரைகளும் அவற்றின் கால்கள் தரையில் படுவதுகூட தெரியாத வேகத்தில் விரைந்துகொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் அந்த ஓட்டுனர். ‘இதற்குமேல் வேகம் போவது சிரமம்.’
‘அதெல்லாம் எனக்குத் தெரியாது’ என்கிறான் அரவிந்தன். ‘எனக்குத் தாமதமாகிவிட்டது, வேகமாகப் போ’ என்றபடி இல்லாத சவுக்கைக் காற்றில் முடுக்கிக் காட்டுகிறான்.
‘உங்கள் தாமதத்துக்கு நான் பொறுப்பாகமுடியாது’ என்கிறார் அவர், ‘தயவுசெய்து உங்களுடைய கவலைகளை என்மீது திணிக்கப்பார்க்காதீர்கள். நான் என் குதிரைகளை இதற்குமேல் வதைக்கமாட்டேன்.’
அவர் சொல்வதைக் கேட்டதும் ஆத்திரத்தில் அரவிந்தனுக்குக் கண்கள் சிவக்கின்றன. ‘என்ன தைரியம்?’ என்றபடி இடையிலிருந்து வாளை உருவுகிறான். ஆனால், அவரைக் கொன்றுவிட்டால் ஆளில்லாத ரதத்தில் பயணம் செய்வது எப்படி என்று நினைத்ததும் கோபம் தானாகத் தணிகிறது.
‘தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள்’ என்று குழைகிறான் அரவிந்தன். ‘கார்காலத்துக்குள் திரும்பி வருவதாக அவளிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். இப்போதே ரொம்பத் தாமதமாகிவிட்டது.’
இப்படி அவன் சொல்லிமுடிப்பதற்குள் சடசடவென்று பெருமழை பெய்யத் தொடங்குகிறது. ‘ஐயோ, கார்காலம்’ என்று அலறுகிறான் அரவிந்தன்.
‘கார்காலம் தொடங்கி ரொம்ப நாளாகிவிட்டது’ என்று சிரிக்கிறார் அவர். ‘ஆனாலும் நீங்கள் ரொம்பத் தாமதம்.’
‘ஆமாம், ஆமாம்’ என்று அவசரமாக ஒப்புக்கொண்டான் அரவிந்தன். ‘எல்லாவற்றிலும் நான் தாமதம்தான். இப்போது நீங்கள் உதவினால்தான் நான் கார்காலம் முடிவதற்குள்ளாவது வீட்டுக்குச் சென்று சேர முடியும்.’
‘பார்க்கலாம்’ என்று ஒட்டாமல் பேசுகிறார் ரத சாரதி. ‘இதெல்லாம் நீங்கள் முன்பே யோசித்திருக்கவேண்டும்.’
‘ரொம்ப யோசித்தாகிவிட்டது’ என்று சலித்துக்கொள்கிறான் அரவிந்தன். ‘ஒரு யுத்தம் தொடங்கிவிட்டால் அது எப்போது முடியும் என்று யார்தான் சொல்லக்கூடும்?’
‘அப்படியானால், அதற்குமுன்பே, கார்காலத்தில் திரும்பி வருகிறேன் என்று சத்தியம் செய்வதற்குமுன்பே யோசித்திருக்கவேண்டும்’ என்று அவர் சொன்னதும், அரவிந்தன் சட்டென்று மௌனமானான்.
‘ஒரு விஷயம் சொல்லுங்கள், இப்போது நீங்கள் வீடு திரும்பத் துடிப்பது உங்கள் காதலியைப் பார்க்கிற ஆசையிலா? அல்லது சொன்ன வாக்கை நிறைவேற்றியாகவேண்டும் என்கிற துடிப்பிலா?’
அவருடைய கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நகம் கடித்துக்கொண்டிருக்கிறான் அரவிந்தன். மழையில் அவனது தேகம் முழுதும் நனைந்துகொண்டிருக்கிறது. இதே மழையைப் பார்த்தபடி செல்வி தனிமையில் புலம்பிக்கொண்டிருப்பாள் என்று நினைக்கையில் உடல்மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றினாற்போலிருக்கிறது.
அந்த விநாடியில், பூமி தொடாமல் ஓடிக்கொண்டிருந்த குதிரைகள் திடுமென்று தரையில் மோதுகின்றன. அதிர்ச்சியில் அரவிந்தனுக்குத் தூக்கிவாரிப்போடுகிறது.
‘பெங்களூர் சர்வதேச விமான நிலையம் உங்களை வரவேற்கிறது’ என்று ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் அறிவிக்கிறாள் ஒருத்தி, வெளியே என்ன வெப்ப நிலை என்று அவள் தசமத் துல்லியத்துடன் தெரிவித்துக்கொண்டிருக்க, ஜன்னலைத் திறந்து பார்த்த அரவிந்தன் தீவிரமாகப் பெய்துகொண்டிருந்த மழையின் வேகத்தில் திகைத்துப்போனான்.
விமானம் சில நிமிடங்களுக்கு ஓடுபாதையில் விரைவாக ஓடிப் பின்னர் வேகம் குறைந்து நகர்ந்தது. கண்ணாடிமயமான விமான நிலையக் கட்டடத்திற்குப் பாதுகாப்பான தூரத்தில் அது நின்றதும் படிகள் பொருத்தப்பட்டன.
படிகளில் இறங்கி, அங்கே காத்திருந்த சிற்றுந்தில் ஏறிக்கொள்வதற்குள் அரவிந்தன் நன்றாக நனைந்துவிட்டான். ஆனால் இந்த மழை வெந்நீராக இல்லாமல் குளிர்வாகத் தாலாட்டியது.
இரண்டு நிமிடச் சிற்றுந்துப் பயணத்தின் முடிவில் விமான நிலையக் கட்டிட வாசலில் இறங்கிக்கொண்டான் அரவிந்தன். இப்போது ஆட்டோவோ டாக்ஸியோ பிடிப்பதற்காக வெளியே சென்றால் மீண்டும் நனைய நேரிடும்.
‘நனையலாம், என்ன போச்சு?’, என்றபடி வெளியேறி வந்தான் அரவிந்தன். ஆசையாகத் தழுவும் மழைத்துளிகளை அலட்சியப்படுத்தியபடி டாக்ஸி ஸ்டாண்டை நோக்கி நடந்தான். ஆனால் இந்த மழையில் அங்கே ஒரு வண்டிகூட இருப்பதாகத் தெரியவில்லை.
ஓரமாக இருந்த சிறு கட்டிடத்தின் மறைவில் ஒதுங்கிக்கொண்டபடி வீடு செல்லும் அடுத்த ரதத்துக்காகக் காத்திருக்கிறான் அரவிந்தன். மழை அடித்துப் பெய்துகொண்டிருக்கிறது.
(முற்றும்)
***
என். சொக்கன் …
18 07 2011
8 Responses to "கார்காலம் – 12"

அருமையான பதிவு.


நல்ல கதை..தொடருங்கள்..


ஆரம்பத்துக்கே திரும்பிவிட்ட பிரமை ஏற்படுகிறது. மிக சுவாரஸ்யம்.
நன்றி.

1 | kullabuji
July 18, 2011 at 4:01 pm
வார்த்தைகளை தேடி தோற்றுவிட்டேன் உங்களை பாராட்ட.மிகையாக என்னவேண்டாம்.அவ்வளவு அ௫மை.
ஒவ்வொ௫ திங்களும் அலுவலகம் வந்ததும் நான் சொடுக்கும் சுட்டி உங்களது வலைப்பூவாக தான் இ௫க்கும்.
குறிப்பாக,இந்த கடைசி பதிவு.கணவுலகிற்கே அழைத்து சென்றுவிட்டீர்.
//நன்கு அலங்கரிக்கப்பட்ட அந்தத் தேரில் மொத்தம் நான்கு குதிரைகள் பூட்டியிருக்கிறது. பிரதானமான பகுதியில் அரவிந்தன் கம்பீரமாக அமர்ந்திருக்கிறான்.//
//மழை அடித்துப் பெய்துகொண்டிருக்கிறது//—-எனது மனதிலும்.