தூறல் நின்னு போச்சு
Posted July 28, 2011
on:- In: கார்காலம் | Download | eBook | Fiction | Thodarkathai
- 17 Comments
கடந்த 3 மாதங்களாக இந்த வலைப்பதிவில் ‘கார்காலம்’ என்ற தொடர்கதையை எழுதிவந்தேன். அதிகப் பேர் படித்திருக்கமாட்டார்கள் – தினமும் 300 பேர் வருகிற ஒரு வலைப்பதிவில் கதை படிக்கிறவர்கள் 30 பேர் இருந்தால் அதிகம் என்பதே உலக எதார்த்தம், அந்தக் கதை ஒன்றிரண்டு page downsல் முடிந்துவிடாமல் பல அத்தியாயங்களுக்குத் தொடர்ந்தால் இந்த எண்ணிக்கை இன்னும் குறைந்துவிடும் – கடைசியாக நான் தொடர்கதை படித்துச் சில வருடங்கள் ஆகிவிட்டன எனும்போது, என் தொடர்கதையை அதிகப் பேர் படிக்கவில்லை என்று புலம்புவது நியாயமில்லைதான் :>
ஆனால், அபூர்வமாக (’ன’ இல்லை) இந்தக் கதையைப் படித்த நல்ல உள்ளத்தார் சிலர் வெகுவாகப் பாராட்டினார்கள். பல ட்வீட்கள், உருக்கமான ஈமெயில்கள், ஒரு ப்ளாக் விமர்சனம்கூட வந்தது. குறிப்பாக, ஐடி துறையில் உள்ளவர்கள், அடிக்கடி பயணம் செய்ய நேர்கிறவர்களுக்கு இந்தக் கதை பிடித்திருப்பது புரிந்தது. சொல்லவந்த விஷயத்தை ஒழுங்காகப் பதிவு செய்திருக்கிறேன் என்று புரிந்துகொண்டேன். அதுவே பெருமகிழ்ச்சி!
இந்தக் கதையை ரசித்த நண்பர்கள்கூட ‘ஆரம்பத்துல நல்லா இருந்தது. ஆனா போகப்போகக் கொஞ்சம் இழுவை’ என்றார்கள். உண்மைதான். ஆனால் நான் எழுத நினைத்தது மர்மத் தொடர் அல்ல, இலக்கியத் தொடர் எழுத எனக்குத் தெரியாது. நான் மாதத்தில் 20 நாள்கள்வரை ஆஃபீஸ் டூர் போய்க்கொண்டிருந்த தினங்களைக் கிட்டத்தட்ட டைரி எழுதுவதுமாதிரி பதிவு செய்துவைக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆகவே க்ரிஸ்பாகச் செதுக்கி ஒரு வடிவத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்று தோன்றாமல் போய்விட்டது. மன்னிக்க.
தவிர, ‘கார்காலம்’ என்ற தலைப்புக்குக் காரணமே அதுதான். சங்க இலக்கியங்களில் தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள் சேர்க்கச் செல்லும்போது திரும்பி வருவதாகச் சொல்லும் deadline கார்காலம். ஆனால் பெரும்பாலான காதலன்கள் கார்காலத்தில் திரும்பி வருவது இல்லை, தாமதப்படுத்துகிறார்கள், அதனால் காதலிகள் வாட, பல அருமையான பாக்கள் நமக்குக் கிடைக்கின்றன. இதைக் கொஞ்சம் திருப்பிப்போட்டு, கார்காலத்தில் திரும்பமுடியாத கட்டாயத்தில் உள்ள காதலன்களின் அனுபவத்தை எழுத நினைத்தேன். ரொம்ப நேரம் தொடர்ந்து மழையில் நனைவது எரிச்சலாக இருந்தாலும் அந்த ‘நசநச’ப்பு எல்லா அத்தியாயங்களிலும் இருந்தாகவேண்டும் என்று விரும்பினேன். அச்சுப் பத்திரிகைகள்போல் பக்கக் கட்டாயம் இல்லாமல் வளவளவென்று கதையளக்க முடிந்தது. இணையத்தின் பலங்களில் அது ஒன்று. சகித்துக்கொண்டு படித்தவர்களுக்கு என் நன்றி.
இந்தத் தொடரின் இறுதி அத்தியாயம் வெளியான தினத்தன்று ‘என்னய்யா கதை எழுதறே? கடைசிவரைக்கும் ஹீரோவும் ஹீரோயினும் சந்திச்சுக்கவே இல்லையே’ என்று கூகுள் சாட்டில் அங்கலாய்த்தார் ஒரு நண்பர். ’அது அவசியமா என்ன?’ என்று கேட்டேன். கோபித்துக்கொண்டுவிட்டார். இந்தப் பதிவின்மூலம் அவரிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
அது நிற்க. நண்பர் ‘வலைமனை’ சுகுமார் கார்காலத்தின் மொத்த அத்தியாயங்களையும் ஒரே கோப்பாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். அவருக்கு என்னுடைய நன்றி. ஆர்வமுள்ளவர்கள் இந்த நாவலை அமேசான் மற்றும் கூகுள் புக்ஸ் இணையத் தளங்களில் வாங்கிக்கொள்ளலாம்:
http://www.amazon.com/dp/B00OWW3WC0
https://play.google.com/store/books/details?id=0A0VBQAAQBAJ
***
என். சொக்கன் …
28 07 2011
17 Responses to "தூறல் நின்னு போச்சு"

உங்கள் பதிவு முழுவதும் ஈமெயில்க்கு வந்து விடுகிறது. இதனால் நிறைய பேர் அங்கேயே படித்து இருப்பார்கள். (நான் அதில்தான் படித்தேன்.) எனவே பதிவின் ஈமெயில்க்கு அளவை குறைக்கவும்.


கார் காலம் நன்றாக இருந்தது.
தொடர்ந்து படித்தேன்.
வாழ்த்துக்கள்.


உங்க கதையைத் தொடர்ந்து நானும் படித்தேன். இழுவையாக இருந்தது என்பதென்னவோ உண்மை தான். 🙂 சில நேரங்களில் தலைவி ஏதோ தப்பு செய்கிறாளோ; அதைத் தான் குறிப்பாகச் சொல்கிறீர்களோ என்றெல்லாம் தோன்றியது சில இடங்களில். 🙂 கடைசியில ‘சே. ஏன் தான் நம்ம புத்தி இப்படி போகுதோ? நிறைய கதைகள்ல அப்படி படிச்சு கெட்டுப் போயிட்டோம்’னு தோணிச்சு. 🙂


கார் காலம் நன்றாக இருந்தது.
தொடர்ந்து படித்தேன்.


அருமையான கதை
ரசித்து படித்தியன் ஒவேவரு அத்தியாயம் வரும் போதும் உடனே படித்து முடிதியன்
சில நேரம் படைப்பின் அருமை படைபளிக்கு புரிவதில்லை அதுபோல் உள்ளது


உங்கள் கதையை தொடர்ந்து படித்தேன். மிகவும் அழகான எழுத்து நடை.
ஆனால், சில இடங்களில், குறிப்பாக மேசை இழுப்பறையில் அந்தப் பெண்ணின் புகைப்படம், வெளியூரில் நண்பனை சந்திக்க நினைத்து பின்னர் சந்திக்காமல் தவிர்த்தது ஆகிய இடங்களில் ஏதோ திருப்பு முனை, சஸ்பென்ஸ் இருக்க போவது போல ஒரு உணர்வு கதை படிக்கும் போது ஏற்பட்டு, பின்னர் அது சும்மா சப்பென்று முடிந்தது போல தோன்றியதை தவிர்க்க முடியவில்லை.


நேற்று ஆரம்பித்து முழுவதுமாகப் படித்துவிட்டேன்.
பாதி படித்துவிட்டு இன்று காலை ட்விட்டரில் சொன்னதில் இருந்து பெரிய மாற்றுக் கருத்து இல்லை.
எனக்கு இழுவையாகத் தெரியவில்லை.
தனி மனித உணர்சிகளையும் எண்ணங்களையும் அடிப்படையாக வைத்து எழுதப் பட்டதால் சிலருக்கு அரவிந்தனின் தனிமொழிகள் (soliloquies) இழுவையாகப் பட்டிருக்கலாம்.
கடைசியில் தேரில் பயணிக்கும் தலைவன் வரும் கனவுக் காட்சிதான் சற்று மிகையாகத் தெரிந்தது. அதற்கும் இந்த முடிவுரை இடுகையில் சங்க இலக்கிய மேற்கோள் கொடுத்துவிட்டீர். இந்த முடிவுரையை முதலில் படித்து விட்டு முழுத் தொடரையும் படிப்பவர்களுக்கு இழுவையாக இருக்காது என்று நம்புகிறேன்.
நீங்கள் விவரிக்கும்படியே நிஜ வாழ்கையில் கஷ்டப் பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய மென்பொருள் வல்லுனர்களுக்கும் இது இழுவையாகத் தெரிய வாய்புகள் குறைவு. நாம் நினைப்பதை, அனுபவிப்பதை, இவர் அழகாக எழுதியிருக்கிறார் என்ற எண்ணமே பலருக்கு வரும்/வந்திருக்கும்.
நல்ல தொடர். நன்றி சொக்கன்.


உங்களோட கார்காலம் கதைய இப்பதான் படிச்சி முடிச்சேன்( ஒரு மணிநேரத்துல ). இது எனக்கான கதை மாதிரியே இருக்கு. இதுல வர்ற அரவிந்தன் நானே தான். என்னோட அதே எண்ணங்கள் தான் அங்கே அரவிந்தன் நினைக்கிறார். அரவிந்தன் நினைக்கிறத தான் நானும் நெனச்சேன். 100/100 இயல்பான ஒரு கதை. மிக்க நன்றி.

1 | பலே பிரபு
July 28, 2011 at 5:01 pm
ஹலோ சார்
நான் இதில் கடைசி மூன்று பகுதி மட்டும் படிக்கவில்லை. படித்து விட்டு சொல்கிறேன்.