மனம் போன போக்கில்

Archive for August 2011

சமீபத்தில் மங்கையின் பள்ளியில் ‘பெற்றோர் – ஆசிரியர் சந்திப்பு’க்குச் சென்றிருந்தோம். அவளுடைய ஆசிரியை ஒரு சுவாரஸ்யமான விஷயம் சொன்னார்.

‘இந்த வயசுல குழந்தைகளுக்கு நிறைய கோவம் வரும், நாம அதைப் பெரும்பாலும் கவனிக்கமாட்டோம். ஆனா அவங்க சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட நம்மேல எரிச்சலாவாங்க, கண்டதையும் தூக்கி வீசுவாங்க, எதையாவது போட்டு உடைப்பாங்க, அது வெறும் குறும்பு-ன்னு நாம நினைப்போம், முதுகுல நாலு வைப்போம், அது அவங்களைக் கட்டுப்படுத்தாது, கோபத்தை இன்னும் அதிகமாக்கும்.’

‘அதுக்குப் பதிலா, அவங்களோட கோபத்துக்கு வடிகாலா ஏதாவது செய்யணும், கையில ஒரு பேப்பர், பென்சில் கொடுங்க, இஷ்டப்படி கிறுக்கச் சொல்லுங்க, அதன்மூலம் அவங்களோட கோபம் தானாக் குறையும், நீங்க நம்பமாட்டீங்க, ஆனா இது உண்மை.’

‘கொஞ்ச நாள் கழிச்சு, அதே பேப்பர்ல ஒரு வட்டம் போட்டுக் கொடுங்க, அந்த வட்டத்துக்குள்ள கிறுக்கச் சொல்லுங்க, ஒரு கிறுக்கல்கூட அந்த வட்டத்தை மீறி வெளியே போகக்கூடாதுன்னு சொல்லுங்க. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா அவங்களோட கோவத்தைக்கூட க்ரியேட்டிவிட்டியா மாத்தலாம்.’

யோசித்துப்பார்த்தால், அவர் சொன்னது நிஜம்தான் என்று புரிகிறது – காகிதத்தில் கிறுக்கிக் கோபம் தணிவது குழந்தைகளுக்குமட்டுமல்ல, பெரியவர்களுக்கும் பொருந்தும், என்ன, காகிதத்துக்குப் பதில் blog அல்லது twitter அல்லது facebook அல்லது Google Plus அல்லது ஏதோ ஒன்று, பென்சிலுக்குப் பதில் keyboard :>

ஒரே விஷயம், அந்த வட்டத்தை நமக்கு யாரும் போட்டுத்தரமாட்டார்கள். நாமே போட்டுக்கொண்டு நம் எழுத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தால்தான் உண்டு. செய்கிறோமா என்பது நம் சமர்த்து!

***

என். சொக்கன் …

22 08 2011

சமீபத்தில் ஒரு நெட்புக் வாங்கினோம். தக்கனூண்டு சைஸ், அதனினும் தக்கனூண்டு கீபோர்ட், அந்தக் காலத்து வீடியோ கேஸட்டைவிடக் கொஞ்சமே கொஞ்சம்தான் பெரியது, அசந்தால் பேன்ட் பாக்கெட்டில் செருகிக்கொண்டு நடந்துவிடலாம், எடை அதிகமில்லை, எல்லோரும் பயமுறுத்திய அளவு பர்ஃபார்மென்ஸும் மோசமில்லை.

அது நிற்க. இந்தப் பதிவின் நோக்கம் நெட்புக் விற்பது அல்ல. ஒரு வாரமாக அந்த நெட்புக்கின் மேலுறை(பவுச்)சைக் காணவில்லை.

மேலுறை இல்லாமலும் நெட்புக் அழகுதான். ஆனால் அதைத் தூக்கிக்கொண்டு சுற்றுவது சிரமம். தெருவில் நம்மைப் பார்ப்போர் அநாவசிய பந்தாவென்றெண்ண இடமாகும்.

உண்மையில், அந்த பவுச் தொலைந்த தினத்தன்று நான் ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டியிருந்தது, நோட்ஸ் எடுக்கவேண்டியிருந்தது, எவ்வளவோ தேடியும் பவுச் கிடைக்காததால் வேறு வழியின்றி அம்மண நெட்புக்குடன் நான் கிளம்ப, பஸ்ஸில் என்னைப் பார்த்த ஒருவர் நெருங்கி வந்து ‘2 ஜிபி மாடலா சார்? என்ன விலை ஆச்சு? எத்தினி ஹவர் பேட்டரி வருது?’ என்றெல்லாம் அக்கறையாக விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்.

இந்த அவஸ்தையே வேண்டாம், ஆட்டோவில் போய்விடலாம் என்று பார்த்தால் கையில் நெட்புக்கைப் பார்த்தவுடன் ஆட்டோக்காரர்கள் நமுட்டுச்சிரிப்போடு 2 கிலோமீட்டர் தூரத்துக்கு எழுபத்தைந்து ரூபாய் கேட்கிறார்கள். ‘கையில கம்ப்யூட்டர்ல்லாம் வெச்சிருக்கான், கொடுக்கட்டுமே!’

அன்று வீடு திரும்பியதும் மனைவியாரிடம் அறிவித்தேன். ‘முதல் வேலையா என்னோட நெட்புக் பவுச்சைக் கண்டுபிடிச்சுக் கொடு!’

‘அஸ்கு புஸ்கு, நானா தொலைச்சேன்? நீயே தேடிக் கண்டுபிடிச்சுக்கோ!’

‘நான் வீட்லதான் வெச்சேன், நீதான் ஒரு நாளைக்கு ஏழெட்டு தடவை வீட்டை க்ளீன் பண்றேன் பேர்வழின்னு என்னவோ செஞ்சுட்டே!’

‘ம்ஹூம், நான் அந்தப் பவுச்சைப் பார்க்கவே இல்லை, வேணும்ன்னா உன் பொண்ணுங்களைக் கேளு!’

‘அதுங்களைக் கேட்கறதுக்குச் சும்மாவே இருக்கலாம்’ என்றேன் நான். ’யார் தொலைச்சாங்களோ, நீதான் கண்டுபிடிச்சுத் தரணும்.’

என் மிரட்டல் யாரிடமும் செல்லுபடியாகாது. முக்கியமாக வீட்டில்.

ஆகவே, மிரட்டலில் இருந்து இறங்கி வந்து வேறோர் அஸ்திரத்தைப் பிரயோகித்தேன். ‘புது பவுச் 600 ரூபாய் ஆகும், வாங்கிடட்டுமா?’

இப்போது மனைவியார் அடிபட்டார். ‘ஒருவாட்டி தேடிடறேன், அப்புறமா வாங்கலாம்!’ என்றார்.

ஒருவாட்டி என்பது இரண்டுவாட்டி ஆனது நாலுவாட்டி ஆனது பத்துவாட்டி ஆனது. தினம் மூன்று வேளை சாப்பிடுவதுபோல் எல்லோரும் எந்நேரமும் வீடு முழுக்கச் சல்லடை போட்டுத் தேடியும் அந்தப் பவுச் கிடைக்கவில்லை.

அப்போதும், அவர் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. கிட்டத்தட்ட அந்தப் பவுச்மாதிரியே அளவு கொண்ட ஒரு சின்னப் பையைக் கொடுத்து ‘இதில உன் கம்ப்யூட்டரைப் போட்டுக்கோ’ என்றார்.

எனக்குச் சிரிப்புதான் வந்தது. காரணம், அந்தப் பை சினிமாக்களில் கல்யாணத் தரகர்கள் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு வருவார்களே, அந்த மோஸ்தர். அதில் நெட்புக்கைப்  போட்டுக்கொண்டு தெருவில் இறங்கமுடியுமா?

வேறுவழியில்லை. புதுசு வாங்கிதான் ஆகவேண்டும் என்று முடிவெடுத்தோம். வரும் ஞாயிற்றுக்கிழமை அதற்கென ஒதுக்கப்பட்டது.

இன்று ஆஃபீசில் ஒரு மீட்டிங். அதற்குச் செல்வதற்காகத் தோள் பையிலிருந்து என்னுடைய பெரிய லாப்டாப்(அலுவலகத்தில் கொடுத்தது)பின் பவுச்சை எடுத்து ஜிப்பைத் திறந்தால், அதற்குள் குட்டி உறை சமர்த்தாகப் படுத்திருக்கிறது.

***

என். சொக்கன் …

18 08 2011

’அது தஞ்சாவூர் பெயின்டிங்தானே?’

ஃபோனில் மெயில் மேய்ந்துகொண்டிருந்தவன் அந்தக் கடைசிக் கேள்விக்குறியில்தான் கவனம் கலைந்து நிமிர்ந்தேன். பரபரப்பாக வெளியே பார்த்தால் சுவர் போஸ்டரில் கன்னட ஹீரோ ஒருவர்தான் முறைத்தார். ‘எந்த பெயின்டிங்? எங்கே?’

’அந்தத் தெரு முனையில ஒரு சின்னக் கடை வாசல்ல’ என்று பின்னால் கை காட்டினார் மனைவி. ‘நீ பார்க்கறதுக்குள்ள டாக்ஸி திரும்பிடுச்சு!’

‘சரி விடு, அடுத்தவாட்டி பார்த்துக்கலாம். இப்ப திரும்பிப் போகவா முடியும்?’

எங்கள் வீட்டிலிருந்து ரயில்வே நிலையம் செல்லும் வழியில் இருக்கும் ஒரு தக்கனூண்டு தெரு அது. அதன் மூலையில் இன்னும் தக்கனூண்டாக ஒரு கடை. அதன் வாசலில்தான் சம்பந்தப்பட்ட ‘பெயின்டிங்’ நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. நான் சில விநாடிகள் தாமதமாக நிமிர்ந்துவிட்டதால், அது தஞ்சாவூர்ப் படைப்புதானா என்று உறுதி செய்துகொள்ளமுடியாமல்போனது.

அந்த விஷயத்தை நான் அதோடு மறந்துவிட்டேன். ஆனால் மனைவியார் மறக்கவில்லை. ரயில் ஏறி ஊருக்குச் சென்று திரும்பி பெங்களூர் ஸ்டேஷனில் இறங்கி டாக்ஸிக்குள் நுழைந்ததும் கேட்டார். ‘இப்ப அந்தக் கடை வழியா போவோமா?’

‘எந்தக் கடை?’

‘அன்னிக்கு தஞ்சாவூர் பெயின்டிங் பார்த்தோமே, அந்தக் கடை!’

’முதல்ல அது தஞ்சாவூர் பெயின்டிங்கா-ன்னு தெரியாது, அப்படியே இருந்தாலும், பார்த்தோம் இல்லை, நீமட்டும்தான் பார்த்தே.’

‘கிராமர் கெடக்குது கழுதை, நாம அந்தக் கடை வழியாப் போவோமா-ன்னு சொல்லு முதல்ல.’

’ம்ஹூம், அது ஒன் வே, நாம இப்ப வேற வழியா வீட்டுக்குப் போறோம்.’

சட்டென்று மனைவியார் முகம் சுருங்கிவிட்டது. ‘ஓகே’ என்றார் சுரத்தே இல்லாமல்.

சில வாரங்கள் கழித்து, இன்னொரு வெள்ளிக்கிழமை, இன்னொரு பயணம், இன்னொரு டாக்ஸி, ஆனால் அதே தெரு, உள்ளே நுழையும்போதே சொல்லிவிட்டார், ‘லெஃப்ட்ல பாரு, அந்தக் கடை வரும், வாசல்லயே ஒரு கிருஷ்ணர் ஓவியம் இருக்கும், அதைப் பார்த்துத் தஞ்சாவூர் பெயின்டிங்கான்னு சொல்லு.’

‘ஏம்மா காமெடி பண்றே? அன்னிக்கு நீ பார்த்த பெயின்டிங் இன்னிக்கும் அதே இடத்தில இருக்குமா?’ கிண்டலாகக் கேட்டேன். ‘இதுக்குள்ள அது வித்துப்போயிருக்கும்.’

’இல்லை, அங்கேயேதான் இருக்கு, பாரு’ சட்டென்று என் முகத்தைத் திருப்பிவிட்டார்.

பார்த்தேன். ரசித்தேன். தஞ்சாவூர் ஓவியம்தான். அதைச் சொன்னதும் மனைவியார் முகத்தில் புன்னகை ‘நான் அப்பவே சொன்னேன்ல, அது தஞ்சாவூர் பெயின்டிங்தான்!’ என்றார் மகளிடம்.

சிறிது நேரம் கழித்து, அடுத்த கேள்வி. ‘என்ன விலை இருக்கும்?’

எனக்குத் தெரியவில்லை. அதிக ரிஸ்க் எடுக்காமல் ‘ஃப்யூ தௌசண்ட்ஸ்?’ என்றேன் மையமாக.

‘யம்மாடி! அவ்ளோ விலையா?’

‘பின்னே? ஒவ்வொண்ணும் கையில செய்யறதில்லையா?’

அவர் யோசித்தார். பின்னர் ’அத்தனை பெரிய ஓவியம் மாட்டறதுக்கு நம்ம வீட்ல இடம் இல்லை’ என்றார்.

’உண்மைதான். லெட்ஸ் லீவ் இட்.’

அதெப்படி விடமுடியும்? சில நிமிடங்கள் கழித்து அடுத்த கேள்வி. ‘இதேமாதிரி ஓவியம் சின்னதா கம்மி விலையில கிடைக்குமா?’

‘எனக்குத் தெரியலையே!’

‘விசாரிப்போம்.’

‘எப்போ?’

‘அடுத்தவாட்டி!’

நிஜமாகவே, அடுத்தமுறை ஊருக்குச் செல்வதுவரை அவர் இந்த விஷயத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. இப்படி ஓர் ஓவியத்தை வாங்க விரும்பியதாகச் சுவடுகள்கூடக் காட்டவில்லை. ஆனால் அடுத்த பயணத்துக்காக வேறொரு டாக்ஸியில் ஏறி அதே தெருவில் நுழைந்து அதே முனையை நெருங்கியதும் அவரது கண்களில் பரவசம் தொற்றிக்கொண்டது. ‘அந்தத் தஞ்சாவூர் பெயின்டிங், விசாரிக்கணும்!’ என்றார்.

சில நிமிடங்களில் அதே கடை, வாசலில் அதே கிருஷ்ணர் ஓவியம் (யாரும் வாங்கவில்லைபோல ) தொங்கிக்கொண்டிருந்தது.

இந்தமுறை ஒரே ஒரு வித்தியாசம், என் தலை உருளவில்லை. மனைவியாரே ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தார், கடை வாசலில் உட்கார்ந்திருந்தவரிடம் ‘இது என்ன விலை?’ என்று கேட்டார்.

தஞ்சாவூர் ஓவியத்தை ஓடும் காரில் இருந்து விலை கேட்பார்கள் என்று அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. திணறினார். அவர் வார்த்தைகளைக் கவ்விப்பிடித்துப் பதில் சொல்வதற்குள் எங்கள் டாக்ஸி அந்தத் தெருவைக் கடந்து சென்றுவிட்டது.

இதுவரை மூன்று பயணங்கள் ஆச்சா? போன வாரம் நான்காவது பயணம். இந்தமுறை மனைவியார் டாக்ஸிக்காரரிடம் சொல்லிவிட்டார். ‘அந்தத் தெரு முனையில கொஞ்சம் மெதுவாப் போங்க.’

’ஓகே மேடம்!’

டாக்ஸி மெதுவாகச் சென்றது. மனைவியார் எட்டிப் பார்த்து ’இதுமாதிரி சின்ன பெயின்டிங் கிடைக்குமா?’ என்றார்.

‘கிடைக்கும் மேடம், வாங்க!’ என்றார் அவர். ‘நிறைய இருக்கு, நிதானமாப் பார்த்து வாங்கலாம். விலையும் அதிகமில்லை!’

மனைவியார் பதில் சொல்வதற்குள் கார் திரும்பிவிட்டது. ‘நிறுத்தணுமா மேடம்?’ என்றார் டிரைவர்.

‘வேண்டாம். அடுத்தவாட்டி பார்த்துக்கலாம்.’

எனக்கு நடப்பது ஓரளவு புரிந்துவிட்டதால் கொஞ்சம் சமாதான முயற்சியில் இறங்கினேன். ‘எச்சூச்மி, நாம இந்த இடத்துக்கு நிதானமா வரப்போறதில்லை. எப்பவும் ரயில்வே ஸ்டேஷன் போற வழியில எட்டிப்பார்ப்போம், இப்படி ஒவ்வொரு ட்ரிப்பின்போதும் அரை நிமிஷம் அரை நிமிஷமாப் பேசிகிட்டிருந்தா நீ எப்பவும் அந்தத் தஞ்சாவூர் பெயின்டிங்கை வாங்கமுடியாது.’

‘ஸோ? இப்ப என்ன செய்யலாம்ங்கற?’

‘காரை நிறுத்தச் சொல்றேன், நீ போய் அந்தச் சின்ன பெயின்டிங்ஸைப் பார்த்து விலை விசாரிச்சுட்டு வா, ஓகே-ன்னா வாங்கிடு.’

‘சேச்சே, அதைத் தூக்கிட்டு ஊருக்குப் போகமுடியுமா? உடைஞ்சுடாது?’

‘அப்ப வேற என்னதான் வழி?’

’பார்த்துக்கலாம்.’

அவ்வளவுதான். விவாதம் முடிந்தது. நான் வழக்கம்போல் தலையில் அடித்துக்கொண்டு ஒதுங்கிவிட்டேன்.

அப்புறம் ஒரு யோசனை, அடுத்த மாதம் மனைவியாருக்குப் பிறந்தநாள் வருகிறது. அவருக்கு சர்ப்ரைஸ் பரிசாக அந்தத் தஞ்சாவூர் ஓவியத்தை வாங்கிக் கொடுத்துவிட்டால் என்ன?

செய்யலாம். ஆனால் ஒரே பிரச்னை, அவர் நிஜமாகவே தஞ்சாவூர் ஓவியம் வாங்க விரும்புகிறாரா, இல்லை சும்மா (டாக்ஸி) விண்டோ ஷாப்பிங்கா என்று எனக்கு இதுவரை புரியவில்லை. அவசரப்பட்டு வாங்கிக்கொடுத்துவிட்டு அப்புறம் யார் திட்டு வாங்குவது? பயணம்தோறும் அரை நிமிடம் என்ற விகிதத்தில் அவரே நிதானமாக அதைப் பேரம் பேசி வாங்கட்டும். வேடிக்கை பார்க்க நான் ரெடி!

***

என். சொக்கன் …

17 08 2011

முன்குறிப்பு: இது மெகாசீரியல் இயக்குனர்களைப் பற்றிய பதிவு அல்ல

ஓர் உயரமான மனிதர். அவரைவிட உயரமான குச்சி. அதன் உச்சியில் துணி பொம்மை ஒன்று. அதன் கால் பகுதியில் குண்டாகத் தொடங்கும் இரு வண்ணங்கள் பின்னிப் பிணைந்த மிட்டாயைப் பாலித்தீன் பேப்பர் கொண்டு மறைத்திருப்பார். அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உடல் மெலிந்து கீழே ஒரு வால்மட்டும் நீட்டிக்கொண்டிருக்கும். அதை இழுத்தால்அதே இரட்டை வண்ண stripesஉடன் கச்சிதமாக ஒரு நாடா நீண்டு வரும்.

ஆனால் இதை யார் வேண்டுமானாலும் இழுத்துவிடமுடியாது. அதற்கென்று பல வருட அனுபவம் தேவை. அப்போதுதான் ஒவ்வோர் இழுப்பிலும் கச்சிதமாக ஒரே நீளம், ஒரே அகலம், ஒரே தடிமனில் நாடாக்கள் கிடைக்கும். நீள அகல தடிமன் கூடக் குறைய அந்த நாடாவின் flexibility மற்றும் stability பாதிக்கப்படும், அதற்கு ஏற்பப் பொம்மையின் அழகும் குறைந்துவிடும்.

ஆனால் தேர்ந்த ஜவ்வு மிட்டாய்க் கலைஞர்களுக்கு அந்தப் பிரச்னை எப்போதும் இருப்பதில்லை. கச்சிதமான அளவில் நாடா இழுப்பதும் அதனை லாகவமாக மடித்து வளைத்து விதவிதமான பொம்மைகளைச் செய்வதும் அவர்களுடைய ரத்தத்தில் கலந்துவிட்ட பாடம். மனம் நினைக்கக் கை செய்யும், படபடவென்று பதினைந்து முதல் இருபது விநாடிகளில் ஒரு பொம்மை உருவாகிவிடும்.

பெரும்பாலும் கைக்கடிகாரம்தான் எங்களுடைய பர்ஸனல் ஃபேவரிட். எட்டணா கொடுத்து அதைச் செய்யச்சொல்லிக் கையில் கட்டி(ஒட்டி)க்கொண்டதும் அரை இஞ்ச் உயரமாகிவிட்டதுபோல் சுற்றியிருப்போரைக் கர்வமாகப் பார்ப்போம். அதைப் புரிந்துகொண்டதுபோல் ஜவ்வு மிட்டாய்க்காரர் எங்கள் நெற்றியில் ஒரு மிட்டாய்ப் பொட்டு வைத்து ராஜ அலங்காரத்தைப் பூர்த்தி செய்வார்.

கைக்கடிகாரம் தவிர, பூ, பறவை (கிளி மற்றும் மயில்), ஏரோப்ளேன் போன்ற பொம்மைகளும் உண்டு. வடிவம் எதுவானாலும் மிட்டாயின் சுவை ஒன்றுதான் என்கிற உண்மை புரியாத வயது என்பதால் தினசரி எந்த பொம்மையைச் செய்யச்சொல்லிக் கேட்கலாம் என்கிற யோசனையிலேயே வெகுநேரம் செலவழியும். ஒருவழியாக ஏதோ ஒரு பொம்மையைச் செய்து வாங்கியபின்னர், அடுத்தவன் கையில் இருப்பதைப் பார்த்ததும் ‘அதைக் கேட்டிருக்கலாமோ’ என்று தோன்றும், டூ லேட்!

’ஜவ்வு மிட்டாயில் சர்க்கரை தவிர வேறேதும் சத்து இல்லை’ என்று எங்கள் பிடி மாஸ்டர் அடிக்கடி சொல்வார். ‘பல்லுக்குக் கேடுடா’ என்கிற அவரது விமர்சனத்தை யார் மதித்தார்கள், நாங்களெல்லாம் நாக்கெல்லாம் இனிப்பும் சிவப்புமாகதான் பெரும்பாலான பள்ளி நாள்களைத் தாண்டினோம்.

பள்ளிக் காலத்தில் தினந்தோறும் அனுபவித்த அந்த ஜவ்வு மிட்டாயை அதன்பிறகு பல நாள்கள் பார்க்கவில்லை. இன்று லால்பாகில் பார்த்தேன். எட்டணா பொம்மை காலவசத்தில் ஐந்து ரூபாயாகியிருக்கிறது, மற்றபடி நுட்பத்திலோ சுவையிலோ துளி மாற்றமில்லை. நானும் மகள்களும் நெடுநேரம் அனுபவித்துச் சாப்பிட்டோம். மனைவியாருக்குப் பார்சல்கூட வாங்கிவந்தோம். அது பத்தே நிமிடத்தில் கரைந்து வடிவம் தெரியாமல் மாறிவிட்டதுதான் ஒரே சோகம்.

அது நிற்க. நெடுநாள் கழித்து அகப்பட்ட அந்த ஜவ்வு மிட்டாய்க் கலைஞரின் கைவண்ணத்தை இரண்டு அமெச்சூர் வீடியோ படங்களாக எடுத்துவைத்தேன். நாஸ்டால்ஜியா ஆர்வலர்களுக்காக அவை இங்கே:

அனைவருக்கும் இனிய சுதந்தர தின வாழ்த்துகள் 🙂

***

என். சொக்கன் …

15 08 2011

’டாய், யாரைப் பார்த்துடா மென்டல்ன்னு சொன்னே? பொறுக்கி நாயே!’

ஆவேசமான அந்தக் குரலைக் கேட்டு எல்லோரும் திகைத்துத் திரும்பினோம். ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி கடுங்கோபத்துடன் யாரையோ திட்டிக்கொண்டிருந்தார்.

அவருடய குரல் சென்ற திசையில் ஒரு லுங்கிப் பேர்வழி தரையில் கால்களை நீட்டி வட்டம்போல் இணைத்து உட்கார்ந்திருந்தார். நன்கு ‘அருந்தி’யவர் என்பது பார்த்தாலே தெரிந்தது. கண்கள் நிலையற்றுத் தடுமாற, தாடை அடிக்கடி சொக்கிக் கீழே விழுந்தது.

ஆனால் அத்தனை போதையிலும் அவருக்குப் ‘பொறுக்கி’ என்ற வார்த்தை உறுத்தியிருக்கவேண்டும். ‘ஏய், மரியாதையாப் பேசுடீ’ என்றார் உட்கார்ந்த நிலையிலேயே.

‘வாடி போடின்னா பிச்சுப்புடுவேன்’ என்றார் அந்தப் பெண்மணி. ‘குடிகார நாயே, பொம்பளைங்க இருக்கற எடத்துல உனக்கு என்னடா வேலை?’

‘என்ன பொம்பளை ஆம்பளை? ரயில்வே ஸ்டேஷன் எல்லாருக்கும்தான்சொந்தம், உங்க குடும்பத்துக்குதான் பட்டா போட்டுக் கொடுத்தாங்களா? போடி!’

அந்தப் பெண் அடிக்கப்போவதுபோல் முன்னால் வந்தார். ‘பொம்பளைங்களை அசிங்கமாப் பார்க்கறே, சைகை காட்டறே, அதைத் தட்டிக் கேட்டா, நான் மென்டலா? போய் உங்க அக்கா, தங்கச்சியை சைட் அடிக்கவேண்டியதுதானே?’

‘ஆமா, இவ பெரிய ஐஷ்வர்யா ராய், சைட் அடிக்கறாங்க, உன் மூஞ்சுக்கு அது ஒண்ணுதான் குறைச்சல்!’

‘நாயே, உன்னை இன்னிக்கு ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்’ என்று பையைத் தூக்கி முதுகில் மாட்டிக்கொண்டார் அவர். ‘போலிஸைக் கூட்டிகிட்டு வர்றேன், நீ மெய்யாலுமே ஆம்பளையா இருந்தா இந்த இடத்தை விட்டு நகரக்கூடாது!’

‘நீ யாரைக் கூட்டிகிட்டு வந்தாலும் நான் நகரமாட்டேன், போடி சர்த்தான்!’

இந்தத் தொடர் தாக்குதல் அந்தப் பெண்மணிக்குத் தன்னிரக்கத்தைத் தந்திருக்கவேண்டும். சட்டென்று குவியத்தை எங்கள் பக்கம் திருப்பினார். ‘இத்தனை பேர் மத்தியில ஒருத்தன் ஒரு பொம்பளையைத் தப்பாப் பேசறான், யாரும் தட்டிக்கேட்கமாட்டீங்களா? உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லை?’

சட்டென்று இன்னொருவர் எகிறினார். ‘என்னம்மா பேசறே? நீதான் அந்தாளைத் திடீர்ன்னு திட்ட ஆரம்பிச்சே, பதிலுக்கு அந்தாளும் திட்டறான், இதுல யார் பக்கம் நியாயம்ன்னு எங்களுக்கு எப்படித் தெரியும்? பொம்பளைங்கறதால நாங்க உனக்கு சப்போர்ட் செய்யணுமா?’

‘உங்க வீட்டுப் பொம்பளைக்கு நாளைக்கு இப்படி நடந்தா சும்மா பார்த்துகிட்டு நிப்பீங்களா? நீங்கல்லாம் ஆம்பளைங்கதானா?’

இப்போது இன்னொரு பெண்ணுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘மரியாதையாப் பேசும்மா, உன் பிரச்னைக்கு எங்க வூட்டு ஆளுங்களையெல்லாம் அசிங்கமாப் பேசுவியா நீ?’

இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே எங்கிருந்தோ இரண்டு ரயில்வே போலிஸார் வந்தார்கள். விஷயத்தைக் கேட்டு அந்தக் குடிகாரரை ரெண்டு தட்டு தட்டித் துரத்திவிட்டார்கள் . (அவரிடம் டிக்கெட்கூட இல்லை என்பது முதல் குற்றம். மற்றபடி அவர் நிஜமாகவே அந்தப் பெண்ணை அல்லது வேறு பெண்களை சைட் அடித்தாரா, அதைத் தட்டிக்கேட்ட இவரை மென்டல் என்று அழைத்தாரா என்பதையெல்லாம் யாராலும் உறுதி செய்யமுடியாது!)

ஒருவழியாகப் பிரச்னை முடிந்தது. நாங்கள் ரயில் வருகிறதா என்று பார்க்கத் திரும்பினோம்.

அந்தப் பெண்மணி விடவில்லை. இப்போது அவர் போலிஸாரைத் திட்ட ஆரம்பித்தார். ‘இந்தமாதிரி ஆளுங்களையெல்லாம் வளர்த்திவிடறதே உங்களைப்போல போலிஸ்காரங்கதான், இன்னிக்குப் பட்டப்பகல்ல இப்படி ஒரு அக்கிரமம் பண்றவன், நாளைக்கு ராத்திரி நேரத்துல தனியா இருக்கற பொண்ணுங்களைக் கையைப் பிடிச்சு இழுக்கமாட்டான்னு என்ன நிச்சயம்?’

போலிஸ்காரர்களுக்கும் கோபம் வந்துவிட்டது. ‘சும்மா விஷயம் தெரியாம எதையாவது பேசாதேம்மா, நீ பிரச்னைன்னு சொன்னதும் விசாரிச்சு நடவடிக்கை எடுத்தோம்ல? அதோட நிறுத்து, இந்த ரௌடிப்பசங்களை வளர்த்துவுடறதுதான் எங்க வேலையா? அவனவனுக்கு வேற பொழப்பில்ல?’

அவர்கள் கிளம்பிச் சென்று நெடுநேரமாகியும் அந்தப் பெண்மணி புலம்பிக்கொண்டுதான் இருந்தார். ரயில் வந்து தன் பெட்டியை நோக்கி ஓடும்போதும் அவர் பேசுவதை நிறுத்தவில்லை. ‘சுத்தி இத்தனை பேர் நிக்கறாங்க, யாரும் ஒரு வார்த்தை கேட்கலியே!’

அவரது தொடர் புலம்பலில் நியாயம் உண்டுதான். பெண்களுக்கு எதிரான சில்மிஷங்கள் நிறைந்த இந்தியாவில் இப்படி ஒரு பெண் அதனை நேருக்கு நேர் எதிர்க்கத் துணிந்ததை நிச்சயம் பாராட்டவேண்டும், வரவேற்கவேண்டும். ஒருவேளை நிஜமாகவே அந்தக் குடிகாரர் தவறு செய்திருக்கலாம். ஆனால் அதை நிரூபிப்பதற்கான கண்டிப்பான வழிமுறைகள் எவையும் இல்லாத சூழ்நிலையில் சுற்றியிருந்த நாங்கள் வேறென்ன செய்திருக்கமுடியும்? இவர் ஒரு பெண், எதிர்த்தரப்பில் உள்ளவர் மது அருந்தியிருக்கிறார் என்கிற இரண்டே காரணங்களுக்காக நாங்கள் விஷயம் புரியாமல் ஒருதலைப்பட்சமாகப் பேசியிருக்கமுடியுமா? பேசியிருக்கவேண்டுமா?

இன்னொரு கோணத்தில் பார்த்தால், இது ஒரு Communication Problem. தன்னுடைய பிரச்னையை ஆவேசமாக முன்வைப்பதில் செலுத்திய தீவிர கவனத்தினால் அவர் தேர்வு செய்த வார்த்தைகள் மிகப் பெரிய தவறு – இதன்மூலம் அவர் சுற்றியிருந்த எல்லோரையும் – போலிஸார் உள்பட பகைத்துக்கொண்டுவிட்டார். என்னதான் நம் பக்கம் நியாயம் இருப்பினும், நமக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பினும், ஆதரவு திரட்டச் சென்ற இடத்தில் அவர்களைக் கெஞ்சவேண்டாம், கேவலமாகத் திட்டுவது புத்திசாலித்தனம் இல்லையே!

***

என். சொக்கன் …

14 08 2011

மைக்ரோசாஃப்ட் நிறுவனர்களில் ஒருவரான பால் ஆலென் (பில் கேட்ஸின் இளம் பருவத் தோழர்) சுயசரிதை ‘Idea Man‘ வாசித்துக்கொண்டிருக்கிறேன். சுவாரஸ்யமான, திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கை. ஆனால் கொஞ்சம் போரடிக்கும் பாடப் புத்தக நடை. (ஆச்சர்யமான விஷயம், ஆப்பிள் நிறுவனர்களில் ஒருவரான Steve Wozniak எழுதிய iWoz என்ற சுயசரிதையும் எனக்கு இப்படிதான் தோன்றியது – பில் கேட்ஸ் / ஸ்டீவ் ஜாப்ஸ் தங்களுடைய சுயசரிதைகளை எழுதினால், ஒருவேளை இந்தக் கணிப்பு மாறலாம்)

Buy Idea Man: A Memoir By The Co-founder Of Microsoft

பால் ஆலென் புத்தகத்தின் நடை எனக்கு அலுப்பூட்டினாலும், சொல்லப்படும் விஷயங்கள் ஒவ்வொன்றும் புதுசு, அல்லது அரதப்பழசு. அதை ரசித்து ருசித்து வாசிக்கிறேன்.

உதாரணமாக, அந்தக் கால ப்ரொக்ராமர்கள் பஞ்ச் கார்ட்களில் ப்ரொக்ராம் எழுதி (அல்லது குத்தி) அதை ரப்பர் பாண்ட் போட்டுக் கட்டிவைத்து யாரிடமோ கொடுத்துவிட்டு ‘இதையெல்லாம் கம்ப்யூட்டர்ல லோட் பண்ணிக் கொடுங்க சாமியோவ்’ என்று கெஞ்சிக் கூத்தாடி நிற்பார்களாம். அந்தக் கம்ப்யூட்டர்களின் மேய்ப்பர்கள் தங்களுக்கு நேரம் உள்ளபோதுதான் ப்ரொக்ராம்களை (வந்த வரிசைப்படி) ஒவ்வொன்றாக ஏற்றுவார்களாம். இதற்குச் சில மணி நேரங்கள், சில நாள்கள், சில வாரங்கள்கூட ஆகலாம். அதுவரை அந்த ப்ரொக்ராமர்கள் பல் குத்திக்கொண்டு காத்திருக்கவேண்டும், வேறு வழியே இல்லை.

அப்படியே அந்த ப்ரொக்ராம் லோட் ஆனாலும், அது சரியாக இயங்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. ஏதாவது தப்பு நேர்ந்துவிட்டால், மறுபடி பூஜ்ஜியத்தில் ஆரம்பித்துக் குத்தவேண்டியதுதான்.

முந்தின இரண்டு பத்திகளில் நான் சொன்ன விஷயத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் அதைக் கண்ணெதிரே நடப்பதுபோல் பால் ஆலென் நுணுக்கமாக விவரிக்கும்போது ஏனோ மிகப் பரவசமாக இருந்தது.

இதேபோல் இன்னோர் அத்தியாயத்தில் ஒரு கால்பந்து மைதானம் வெடிகுண்டுகளால் பொடிப்பொடியாக்கப்படுவதை நேரடி வர்ணனை செய்கிறார் பால் ஆலென். வேறோர் இடத்தில் பில் கேட்ஸ் ப்ரொக்ராம் எழுதிக்கொண்டே கீபோர்ட்மீது தூக்கக் கலக்கத்தில் சொக்கி விழுகிறார். அரை மணி நேரம் கழித்து அப்படியே எழுகிறார், ப்ரொக்ராமை விட்ட வரியில் இருந்து தொடர்கிறார். இப்படி இன்னும் ஏகப்பட்ட unique first person account சம்பவங்கள் – முதல் 50 பக்கங்களில் ‘சுமார்’ என்று நினைத்த நான் இப்போது 210 பக்கங்கள் தாண்டியபிறகு அதே புத்தகத்தை ‘Strongly recommended’ என்று பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பது அதனால்தான். (குறிப்பு: நான் இன்னும் இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கவில்லை)

தலைப்புக்கு வருவோம். பால் ஆலென் சின்ன வயதில் நிறையப் புத்தகங்கள் படித்திருக்கிறார், ஒரு பர்ஸனல் கலெக்‌ஷனைப் பெருமையுடன் உருவாக்கியிருக்கிறார்.

அதன்பிறகு, அவர் மைக்ரோசாஃப்ட் ஆரம்பித்துப் பெரியாளாகி நிறைய சம்பாதித்துவிட்டார். இப்போது அவரிடம் ஏகப்பட்ட புத்தகங்கள் சேர்ந்திருந்தன – கம்ப்யூட்டர் தொழில்நுட்ப சமாசாரங்கள்மட்டுமில்லை, நாவல்கள், சரித்திரம், அறிவியல் எட்ஸட்ரா, எட்ஸட்ரா.

ஒரே குறை, அவரது இளம் வயது புத்தக கலெக்‌ஷன் மொத்தமும் அவரது பெற்றோர் வீட்டில் இருக்கிறது. அதைப் போய் எடுத்துவரவேண்டும்.

என்றைக்கோ ஒருநாள், பால் ஆலெனுக்குத் தன் சிறுவயதுப் புத்தகங்களைப் பார்க்கும் ஆசை. தான் பிறந்து வளர்ந்த வீட்டுக்குச் செல்கிறார். தேடுகிறார். எதையும் காணோம். தாயிடம் விசாரிக்கிறார், ‘என்னோட புக்ஸெல்லாம் எங்கேம்மா?’

‘அந்தப் பழைய குப்பை இப்ப எதுக்கு? எல்லாத்தையும் எடைக்குப் போட்டுட்டேன்’ என்கிறார் அவரது தாய். ‘மொத்தமா 75 டாலர் கிடைச்சது, தெரியுமா?’

பால் ஆலென் நொந்துபோகிறார். அம்மாவைத் திட்டவா முடியும்? வருத்தத்துடன் திரும்பிச் செல்கிறார்.

சில நாள் கழித்து, அவருக்கு ஓர் ஐடியா. தன்னுடைய சின்ன வயதுப் புகைப்படம் ஒன்றைத் தேடி எடுக்கிறார். பலமடங்கு பெரிதாக்கிப் பார்க்கிறார்.

அந்தப் புகைப்படத்தில், அவருக்குப் பக்கத்தில் அந்தச் சிறுவயது லைப்ரரி இருக்கிறது. அதில் உள்ள எல்லாப் புத்தகங்களின் பெயரும் எழுதியவர் பெயரும் (Book Spineல்) பளிச்சென்று தெரிகின்றன.

போதாதா? ஒவ்வொரு புத்தகத்தையும் தேடிப் பிடித்து வாங்குகிறார் பால் ஆலென். தொலைந்த கலெக்‌ஷன் திரும்பக் கிடைத்துவிட்டது.

‘இது ஒரு பெரிய விஷயமா?’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் என்னைமாதிரி புத்தகப் பைத்தியத்துக்கு இது பெரிய விஷயம்தான். இப்படி ஒருவர் தன்னுடைய மொத்த கலெக்‌ஷனையும் இழந்தது, திரும்பப் பெற்றதை வாசிக்கும்போது, நிஜமாகவே எனக்குப் புல்லரித்தது. பால் ஆலென் ஒரு பெரும் புதையலைக் கண்டுபிடித்தேன் என்று எழுதியிருந்தால்கூட நான் இப்படிப் பரவசப்பட்டிருக்கமாட்டேன்.

அது நிற்க. நீங்கள் இப்படி ஆசையோடு பாதுகாத்த புத்தகம் ஏதாவது தொலைந்துபோய் திரும்பக் கிடைத்திருக்கிறதா? உங்களுடைய சிறுவயது புத்தகக் கலெக்‌ஷன் இப்போது எங்கே? பத்திரமாக உள்ளதா? அதுபற்றிப் பின்னூட்டத்தில் (அல்லது உங்கள் பதிவில்) எழுதுங்களேன்.

***

என். சொக்கன் …
06 08 2011

நேற்று சூப்பர் ‘மோர்’க்கெட் ஒன்றில் பற்பசை வாங்கச் சென்றிருந்தேன். ஒரு ஷெல்ஃப் நிறைய ஏகப்பட்ட options, பல வண்ணங்கள், சுவைகள், மவ்த்வாஷ், ஃபயர் அண்ட் ஃப்ரீஜ் இன்னபிற innovations, சிறுவர்க்கு, டீனேஜருக்கு, 100% சைவருக்கு (அசைவ, வைணவ வெரைட்டிகளும் இருக்கக்கூடும்?) முதியோருக்கு, மூலிகைப் பிரியருக்கு எனப் பல specialisations…. பிரமித்து நின்றேன்.

ஒரே பிரச்னை, இவற்றை ஒப்பிடுவது பெரும்பாடாக உள்ளது. ஒவ்வொன்றும் வெவ்வேறு எடை, வெவ்வேறு விலை, எதுவும் ரவுண்டாக இன்றி 170 கிராம் 38 ரூ, 190 கிராம் 42 ரூ, 245 கிராம் 90 ரூ என்று போட்டுக்குழப்புகிறார்கள். டூத் பேஸ்ட் விஷயத்தில் Brand Choice / Loyalty ஏதும் இல்லாதவர்கள் இவற்றில் எது cost effective என ஒப்பிட்டுப் பார்க்கக் குறைந்தபட்சம் ஒரு scientific calculator தேவைப்படும்போலிருக்கிறது.

கொஞ்சம் உற்றுப்பார்த்தபோது, இதேமாதிரி குழப்படி அநேகமாக எல்லா மளிகை சாமான்களிலும் இருப்பதைப் பார்க்கமுடிந்தது. உதாரணமாக, ஒரு ஷாம்பூ சிறிய சேஷேயில் வாங்கினால் ரூ 3/- அதையே டப்பாவாக வாங்கினால் ரூ 67/- நீங்கள் மாதாந்திரத் தேவைக்கு எதை வாங்குவீர்கள்?

அநேகமாக நாம் எல்லோரும் டப்பா ஷாம்பூதான் சிக்கனம் என்று நினைப்போம். ஆனால் கொஞ்சம் கவனித்துக் கணக்குப்போட்டால், சில Brandகளில் டப்பா ஷாம்பூ விலை குறைவாக உள்ளது, வேறு சிலவற்றில் ஒரு டப்பா வாங்குவதற்குப் பதில் 20 சாஷேக்கள் வாங்கினால் அதே அளவு ஷாம்பூ கிடைக்கிறது, பணம் கிட்டத்தட்ட 20% மிச்சமாகிறது. இது எப்படி என்று எனக்குப் புரியவில்லை – சாஷேவைப் பிரித்துப் பயன்படுத்துகிற சிரமம் இல்லாமல் டப்பாவாக வாங்குவதால் நம்மிடம் கூடுதல் காசு (Convenience fee) வசூலிக்கிறார்களா? அல்லது, பிளாஸ்டிக் டப்பாவுக்கு 20% எக்ஸ்ட்ரா காசா? அல்லது, ’சாஷே வாங்குவோர் ஏழைகள், ஆகவே அவர்களுக்கு விலையைக் குறைக்கிறோம்’ என்கிற பொதுநல நோக்கமா? (சிரிக்காதீர்கள்! 🙂 )

யோசித்துப்பார்த்தால், இன்றைய தேதிக்குத் தங்களுடைய மாதாந்திர மளிகை சாமான்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்குவோர் வெவ்வேறு பிராண்ட்களின் விலைகளை one to one ஒப்பிட்டுப் பார்த்து எது மலிவு, எதை வாங்கலாம் என்று முடிவெடுக்க எளிய வழி எதுவுமே இல்லை. அவரவர் இஷ்டப்படி ஆளுக்கோர் அளவு, விலை என்று வைத்தால், கால்குலேட்டர் இன்றி கணக்குப் போட்டு முடிவெடுக்கமுடியாது, அதற்கு வாய்ப்பு / விருப்பம் இல்லாதவர்கள், அல்லது ‘என்னத்தை ஒப்பிட்டு என்ன ஆகப்போகுது?’ என்று நினைப்பவர்கள் காசை இழக்க வாய்ப்பு அதிகம் – அதைத்தான் இந்த பிராண்ட்கள் விரும்புகின்றனவோ?

வெவ்வேறு பிராண்ட்கள் என்றாலாவது பரவாயில்லை, தர வித்தியாசத்தினால் விலை வித்தியாசம் என்று சொல்லலாம் – பெரும்பாலும் ஒரே பிராண்ட்க்குள் இருக்கும் வெவ்வேறு பொட்டல வகைகளின் விலைகள்கூடக் கேனத்தனமாக வைக்கப்படுகின்றன. உதாரணமாக, இந்த (கற்பனை) பட்டியலைப் பாருங்கள்:

  • பிஸ்கட் எக்ஸ் – 19 கிராம் – 5 ரூபாய்
  • பிஸ்கட் எக்ஸ் – 46 கிராம் – 12 ரூபாய்
  • பிஸ்கட் எக்ஸ் – 95 கிராம் – 20 ரூபாய்
  • பிஸ்கட் எக்ஸ் – 220 கிராம் – 48 ரூபாய்

நான்கு பாக்கெட்களுக்குள்ளும் இருப்பது ஒரே பிஸ்கட்தான் – ஆனால் இந்த நான்கில் நான் எதை வாங்கினால் மலிவு? ஒவ்வொன்றையும் 1 கிலோ எடைக்கு மாற்றிக் கணக்குப் போட்டு எது பெட்டர் என்று முடிவெடுப்பதற்குள் பொழுது விடிந்துவிடாதா?

ஆக, கடைக்கு வருகிறவர்கள் எதையும் யோசித்துப் பார்த்து முடிவெடுக்கக்கூடாது, Brand Value பார்த்துப் பொருள்களை அள்ளிச் செல்லவேண்டும். அதன்மூலம் மாதம் ஐநூறோ, ஆயிரமோ மிச்சமாகக்கூடும் என்று யோசிக்கக்கூடாது. அப்படியே யோசித்தாலும் ‘கால்குலேட்டரை வெச்சு கணக்குப் போட்டு வாங்கற நேரத்துல ஏதாவது ஒரு பிராண்டை எடுத்துகிட்டுப் போயிடலாம்’ என்று தீர்மானிக்கவேண்டும். அவ்வளவுதான் விஷயம்.

இப்படிக் குழப்பியடிக்காமல் பொருள்கள் அனைத்தும் 100 கிராம், 200 கிராம், கால் கிலோ, அரைக் கிலோ போன்ற standard அளவுகளில் வந்தால் ஒரே பிராண்டுக்குள், அல்லது போட்டி பிராண்ட்களை விரைவாக ஒப்பிட்டு வாங்குவது வசதியாக இருக்கும். அப்படி ஒரு சட்டம்(அல்லது Guideline?)கூட இந்தியாவில் இருக்கிறதாம். ஆனால் அதை மீறுகிறவர்கள் பொட்டலத்தின்மீது ‘Non-standard size’ என்று ஒரு Warning Message அச்சிட்டுவிட்டால் போதுமாம். சுத்த அபத்தம்!

இந்தப் பிரச்னையைத் தீர்க்க சுலப வழி என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு Consumerஆக என் அனுபவத்தைச் சொல்வதென்றால், ஒவ்வொரு பொட்டலத்தின்மீதும் (அது எந்த அளவாக இருந்தாலும் சரி) அதன் 1 கிலோ / 1 லிட்டர் விலை என்ன என்பதை அந்தக் கம்பெனியே கணக்கிட்டு அச்சிடவேண்டும். மேலே பார்த்த உதாரணத்தை இதன்படி மாற்றினால், 19, 46, 220 கிராம் பொட்டலங்களைவிட, 95 கிராம்தான் cost effective என்று உடனே புரியும்:

  • பிஸ்கட் எக்ஸ் – 19 கிராம் – 5 ரூபாய் (கிலோ ரூ 263)
  • பிஸ்கட் எக்ஸ் – 46 கிராம் – 12 ரூபாய் (கிலோ ரூ 260)
  • பிஸ்கட் எக்ஸ் – 95 கிராம் – 20 ரூபாய் (கிலோ ரூ 210)
  • பிஸ்கட் எக்ஸ் – 220 கிராம் – 48 ரூபாய் (கிலோ ரூ 218)

இந்த வழிமுறை அமலுக்கு வந்தால் இரண்டு வெவ்வேறு பிராண்ட்கள், அல்லது ஒரே பிராண்டின் இரண்டு வெவ்வேறு பொட்டலங்களைச் சட்டென்று பார்த்து எது விலை மலிவு என்று சிரமமில்லாமல் கணக்கிடமுடியும், ஒப்பிடமுடியும், அதன்பிறகு அவற்றில் விலை குறைவானதை வாங்குவதோ விலை அதிகமானதை வாங்குவதோ என் இஷ்டம்!

அஃப்கோர்ஸ், இப்படி வாங்குபவருக்குச் சாதகமான ஒரு திட்டத்தை யாரும் அமல்படுத்தமாட்டார்கள், அமல்படுத்தவிடமாட்டார்கள் என்பது நிச்சயம், அது வேறு சமாசாரம்!

***

என். சொக்கன் …

05 08 2011

UPDATE:

நான் சொன்ன இந்த யோசனை ஏற்கெனவே பல நாடுகளில் அமலில் இருப்பதாக அறிகிறேன். நண்பர் இலவசக் கொத்தனார் ஒரு ஃபோட்டோகூட அனுப்பிவைத்திருக்கிறார். அதைக் கீழே தந்துள்ளேன். உலகம் சுற்றாத வாலிபனாக இருப்பதில் இதுதான் ஒரே அவஸ்தை :>

***

என். சொக்கன் …

10 08 2011


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,740 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

August 2011
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031