தொலைந்தது கிடைத்தது
Posted August 6, 2011
on:- In: (Auto)Biography | Books | Change | Reading | Reviews | Technology
- 21 Comments
மைக்ரோசாஃப்ட் நிறுவனர்களில் ஒருவரான பால் ஆலென் (பில் கேட்ஸின் இளம் பருவத் தோழர்) சுயசரிதை ‘Idea Man‘ வாசித்துக்கொண்டிருக்கிறேன். சுவாரஸ்யமான, திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கை. ஆனால் கொஞ்சம் போரடிக்கும் பாடப் புத்தக நடை. (ஆச்சர்யமான விஷயம், ஆப்பிள் நிறுவனர்களில் ஒருவரான Steve Wozniak எழுதிய iWoz என்ற சுயசரிதையும் எனக்கு இப்படிதான் தோன்றியது – பில் கேட்ஸ் / ஸ்டீவ் ஜாப்ஸ் தங்களுடைய சுயசரிதைகளை எழுதினால், ஒருவேளை இந்தக் கணிப்பு மாறலாம்)
பால் ஆலென் புத்தகத்தின் நடை எனக்கு அலுப்பூட்டினாலும், சொல்லப்படும் விஷயங்கள் ஒவ்வொன்றும் புதுசு, அல்லது அரதப்பழசு. அதை ரசித்து ருசித்து வாசிக்கிறேன்.
உதாரணமாக, அந்தக் கால ப்ரொக்ராமர்கள் பஞ்ச் கார்ட்களில் ப்ரொக்ராம் எழுதி (அல்லது குத்தி) அதை ரப்பர் பாண்ட் போட்டுக் கட்டிவைத்து யாரிடமோ கொடுத்துவிட்டு ‘இதையெல்லாம் கம்ப்யூட்டர்ல லோட் பண்ணிக் கொடுங்க சாமியோவ்’ என்று கெஞ்சிக் கூத்தாடி நிற்பார்களாம். அந்தக் கம்ப்யூட்டர்களின் மேய்ப்பர்கள் தங்களுக்கு நேரம் உள்ளபோதுதான் ப்ரொக்ராம்களை (வந்த வரிசைப்படி) ஒவ்வொன்றாக ஏற்றுவார்களாம். இதற்குச் சில மணி நேரங்கள், சில நாள்கள், சில வாரங்கள்கூட ஆகலாம். அதுவரை அந்த ப்ரொக்ராமர்கள் பல் குத்திக்கொண்டு காத்திருக்கவேண்டும், வேறு வழியே இல்லை.
அப்படியே அந்த ப்ரொக்ராம் லோட் ஆனாலும், அது சரியாக இயங்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. ஏதாவது தப்பு நேர்ந்துவிட்டால், மறுபடி பூஜ்ஜியத்தில் ஆரம்பித்துக் குத்தவேண்டியதுதான்.
முந்தின இரண்டு பத்திகளில் நான் சொன்ன விஷயத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் அதைக் கண்ணெதிரே நடப்பதுபோல் பால் ஆலென் நுணுக்கமாக விவரிக்கும்போது ஏனோ மிகப் பரவசமாக இருந்தது.
இதேபோல் இன்னோர் அத்தியாயத்தில் ஒரு கால்பந்து மைதானம் வெடிகுண்டுகளால் பொடிப்பொடியாக்கப்படுவதை நேரடி வர்ணனை செய்கிறார் பால் ஆலென். வேறோர் இடத்தில் பில் கேட்ஸ் ப்ரொக்ராம் எழுதிக்கொண்டே கீபோர்ட்மீது தூக்கக் கலக்கத்தில் சொக்கி விழுகிறார். அரை மணி நேரம் கழித்து அப்படியே எழுகிறார், ப்ரொக்ராமை விட்ட வரியில் இருந்து தொடர்கிறார். இப்படி இன்னும் ஏகப்பட்ட unique first person account சம்பவங்கள் – முதல் 50 பக்கங்களில் ‘சுமார்’ என்று நினைத்த நான் இப்போது 210 பக்கங்கள் தாண்டியபிறகு அதே புத்தகத்தை ‘Strongly recommended’ என்று பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பது அதனால்தான். (குறிப்பு: நான் இன்னும் இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கவில்லை)
தலைப்புக்கு வருவோம். பால் ஆலென் சின்ன வயதில் நிறையப் புத்தகங்கள் படித்திருக்கிறார், ஒரு பர்ஸனல் கலெக்ஷனைப் பெருமையுடன் உருவாக்கியிருக்கிறார்.
அதன்பிறகு, அவர் மைக்ரோசாஃப்ட் ஆரம்பித்துப் பெரியாளாகி நிறைய சம்பாதித்துவிட்டார். இப்போது அவரிடம் ஏகப்பட்ட புத்தகங்கள் சேர்ந்திருந்தன – கம்ப்யூட்டர் தொழில்நுட்ப சமாசாரங்கள்மட்டுமில்லை, நாவல்கள், சரித்திரம், அறிவியல் எட்ஸட்ரா, எட்ஸட்ரா.
ஒரே குறை, அவரது இளம் வயது புத்தக கலெக்ஷன் மொத்தமும் அவரது பெற்றோர் வீட்டில் இருக்கிறது. அதைப் போய் எடுத்துவரவேண்டும்.
என்றைக்கோ ஒருநாள், பால் ஆலெனுக்குத் தன் சிறுவயதுப் புத்தகங்களைப் பார்க்கும் ஆசை. தான் பிறந்து வளர்ந்த வீட்டுக்குச் செல்கிறார். தேடுகிறார். எதையும் காணோம். தாயிடம் விசாரிக்கிறார், ‘என்னோட புக்ஸெல்லாம் எங்கேம்மா?’
‘அந்தப் பழைய குப்பை இப்ப எதுக்கு? எல்லாத்தையும் எடைக்குப் போட்டுட்டேன்’ என்கிறார் அவரது தாய். ‘மொத்தமா 75 டாலர் கிடைச்சது, தெரியுமா?’
பால் ஆலென் நொந்துபோகிறார். அம்மாவைத் திட்டவா முடியும்? வருத்தத்துடன் திரும்பிச் செல்கிறார்.
சில நாள் கழித்து, அவருக்கு ஓர் ஐடியா. தன்னுடைய சின்ன வயதுப் புகைப்படம் ஒன்றைத் தேடி எடுக்கிறார். பலமடங்கு பெரிதாக்கிப் பார்க்கிறார்.
அந்தப் புகைப்படத்தில், அவருக்குப் பக்கத்தில் அந்தச் சிறுவயது லைப்ரரி இருக்கிறது. அதில் உள்ள எல்லாப் புத்தகங்களின் பெயரும் எழுதியவர் பெயரும் (Book Spineல்) பளிச்சென்று தெரிகின்றன.
போதாதா? ஒவ்வொரு புத்தகத்தையும் தேடிப் பிடித்து வாங்குகிறார் பால் ஆலென். தொலைந்த கலெக்ஷன் திரும்பக் கிடைத்துவிட்டது.
‘இது ஒரு பெரிய விஷயமா?’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் என்னைமாதிரி புத்தகப் பைத்தியத்துக்கு இது பெரிய விஷயம்தான். இப்படி ஒருவர் தன்னுடைய மொத்த கலெக்ஷனையும் இழந்தது, திரும்பப் பெற்றதை வாசிக்கும்போது, நிஜமாகவே எனக்குப் புல்லரித்தது. பால் ஆலென் ஒரு பெரும் புதையலைக் கண்டுபிடித்தேன் என்று எழுதியிருந்தால்கூட நான் இப்படிப் பரவசப்பட்டிருக்கமாட்டேன்.
அது நிற்க. நீங்கள் இப்படி ஆசையோடு பாதுகாத்த புத்தகம் ஏதாவது தொலைந்துபோய் திரும்பக் கிடைத்திருக்கிறதா? உங்களுடைய சிறுவயது புத்தகக் கலெக்ஷன் இப்போது எங்கே? பத்திரமாக உள்ளதா? அதுபற்றிப் பின்னூட்டத்தில் (அல்லது உங்கள் பதிவில்) எழுதுங்களேன்.
***
என். சொக்கன் …
06 08 2011
21 Responses to "தொலைந்தது கிடைத்தது"

Loved your post. We have a beautiful library at home which houses the earliest books my children read and also the text books that my husband and myself bought after our marriage for our respective degrees. Technology helped Paul Allen get back his books. I hope to keep ours well preserved for the future!
amas32


சிறு வயதில் சொந்த புத்தகம் எல்லாம் இல்லை. ஆனால் வாரா வாரம் “இரும்புக் கை மாயாவி” படிப்பேன். இப்போது அவை கிடைப்பது இல்லை. அதை மிஸ் செய்கிறேன். பின்னர் ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல்கள். அது இப்போது படிப்பது இல்லை.
அப்புறம் நூலகமே கதியென கிடந்து படித்த நீதிக் கதைகள் எல்லாம் இப்போ அங்கே இல்லை.
சொந்த புத்தகம் எதையும் தொலைத்த அனுபவம் இல்லை.
ஆனால் நான் ஒரு புத்தகம் வாங்கினால் ரொம்ப நாள் கழித்து தான் படிப்பேன். ஏனோ தெரியவில்லை அப்படியே பழகி விட்டது. இன்னும் படிக்காத புத்தகங்கள் நிறைய உள்ளன.
புத்தக collection எதுவும் பெரிதாக இல்லை. படித்த புத்தகங்கள் சில நண்பர்களிடம் கொடுத்து விடுவேன். அதே சமயம் நண்பர்களிடம் புத்தகம் வாங்கினால் அவர்கள் கேட்டால் ஒழிய நானாக திரும்பக் கொடுத்தது இல்லை.
முக்கியமான விஷயம் எண்டமூரி வீரேந்திரநாத் அவர்களின் தமிழ் மொழிப் பெயர்ப்பு நாவல்களை தேடிக் கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.
அட என்ன டைப் செய்து இருக்கேன்? அட விடுங்க புத்தகம் பற்றி பேச ஆரம்பித்தாலே இப்படிதான்.


நிஜம் தான். புத்தகத்தின் அருமை படித்து பாதுகாப்பவர்களுக்கு தான் தெரியும்.
வாழ்த்துக்கள்.


மிக்க நன்றி. மிக சுவையாக எங்கள் பார்வைக்கு வைத்ததற்கு. நன்றி பல. about home library: என் முதல் புத்தகங்கள் ஆயிரதொரு இரவு அரபுநாட்டு கதைகள் 7 பாகங்கள் தமிழ் வெளிநாட்டு பதிப்பு,மதன காமராஜன், சீவக சிந்தாமணி, விக்க்ரமாதித்யன் 5ஆம் வகுப்பு படிக்கும்போதே முடித்துவிட்டேன். அதன்பின் புத்தகங்கள் ஏராளம் ஏராளம். பராமரிக்க முடியவில்லை என்பதாலும் என்போன்று புத்தக புழு எவரும் ஆத்மார்தமாக நெருங்கி வரவில்லை என்பதாலும் 2 வருடம்கள் முன்பு மிக மன வருத்ததுடனும் வேதனையுடனும் குப்பை தொட்டியில் போட வேண்டியதாயிற்று. உங்கள் பதிவுக்கு நன்றி.


i keep my books properly ( around 500-600) !
when i was 16. i has some more collection ( includes comics) , but i dont know where it is?! 😦


எங்க போனாலும் ஒட்டகம் திமிலை சுமக்குற மாதிரி புத்தங்க மூட்டையையும் இல்லா சென்னை மும்பை பெங்களூர் னு சுமந்துகிட்டே போய் காப்பாத்தி வச்சிருக்கோம்… 😀
இங்க பாருங்க..
http://www.livingincolors.com/about-2/jaywalker/


Nice


பள்ளி பருவத்தில் ராணி காமிக்ஸ் புத்தகங்கள் என்றால் உயிர் …ஆனால் அதை வாங்குவதற்கு கையில் காசு இருக்காது … எப்பாடு பட்டாவது நண்பர்களிடம் கடன் வாங்கி படித்து விடுவது வழக்கம்… ஆசிரியர் வகுப்பிற்கு வருவது கூட தெரியாமல் ரொம்ப ஆழ்ந்து படித்து மாட்டிக் கொண்டிருக்கிறேன் … மாயாவி மற்றும் மாடஸ்தி காமிக்ஸ் என்றால் உயிர்….
அப்புறம் எங்கள் தெருவில் இருக்கும் தமிழ் அய்யாவின் வீட்டில் இருக்கும் குமுதம், ஆனந்த விகடன் , ராஜேஷ் குமார், பால குமாரன் , சுபா நாவல்களை படிப்பதுண்டு….
அவற்றில் ஆனந்த விகடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்கிற பழக்கம் இப்போதும் உண்டு.


திரு சொக்கன், என்னிடம் அப்படி ஒரு அருமையான தொகுப்பு இருந்தது. அத்தனையும் பாலகுமாரன் புத்தகங்கள். என் அனுபவத்திலும் தாய் தான் விளையாடினார். வாடகை வீட்டில் பத்திரமாக இருந்தது, சொந்த வீட்டில் காணாமல் போய்விட்டது. ஹ்ம் குறை ஒன்றும் இல்லை – என்றென்றும் அன்புடன் சிவா

1 | andalmagan
August 6, 2011 at 8:30 pm
நல்ல பதிவுதான்… வாசிப்பனுபவத்தை விரிவாக எழுதலாமே!