ஜவ்வு மிட்டாய்க் கலைஞர்கள்
Posted August 15, 2011
on:- In: Art | Bangalore | Creativity | Food | Fun | Imagination | Kids | Memories | Memory | Relax | Visit
- 16 Comments
முன்குறிப்பு: இது மெகாசீரியல் இயக்குனர்களைப் பற்றிய பதிவு அல்ல
ஓர் உயரமான மனிதர். அவரைவிட உயரமான குச்சி. அதன் உச்சியில் துணி பொம்மை ஒன்று. அதன் கால் பகுதியில் குண்டாகத் தொடங்கும் இரு வண்ணங்கள் பின்னிப் பிணைந்த மிட்டாயைப் பாலித்தீன் பேப்பர் கொண்டு மறைத்திருப்பார். அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உடல் மெலிந்து கீழே ஒரு வால்மட்டும் நீட்டிக்கொண்டிருக்கும். அதை இழுத்தால்அதே இரட்டை வண்ண stripesஉடன் கச்சிதமாக ஒரு நாடா நீண்டு வரும்.
ஆனால் இதை யார் வேண்டுமானாலும் இழுத்துவிடமுடியாது. அதற்கென்று பல வருட அனுபவம் தேவை. அப்போதுதான் ஒவ்வோர் இழுப்பிலும் கச்சிதமாக ஒரே நீளம், ஒரே அகலம், ஒரே தடிமனில் நாடாக்கள் கிடைக்கும். நீள அகல தடிமன் கூடக் குறைய அந்த நாடாவின் flexibility மற்றும் stability பாதிக்கப்படும், அதற்கு ஏற்பப் பொம்மையின் அழகும் குறைந்துவிடும்.
ஆனால் தேர்ந்த ஜவ்வு மிட்டாய்க் கலைஞர்களுக்கு அந்தப் பிரச்னை எப்போதும் இருப்பதில்லை. கச்சிதமான அளவில் நாடா இழுப்பதும் அதனை லாகவமாக மடித்து வளைத்து விதவிதமான பொம்மைகளைச் செய்வதும் அவர்களுடைய ரத்தத்தில் கலந்துவிட்ட பாடம். மனம் நினைக்கக் கை செய்யும், படபடவென்று பதினைந்து முதல் இருபது விநாடிகளில் ஒரு பொம்மை உருவாகிவிடும்.
பெரும்பாலும் கைக்கடிகாரம்தான் எங்களுடைய பர்ஸனல் ஃபேவரிட். எட்டணா கொடுத்து அதைச் செய்யச்சொல்லிக் கையில் கட்டி(ஒட்டி)க்கொண்டதும் அரை இஞ்ச் உயரமாகிவிட்டதுபோல் சுற்றியிருப்போரைக் கர்வமாகப் பார்ப்போம். அதைப் புரிந்துகொண்டதுபோல் ஜவ்வு மிட்டாய்க்காரர் எங்கள் நெற்றியில் ஒரு மிட்டாய்ப் பொட்டு வைத்து ராஜ அலங்காரத்தைப் பூர்த்தி செய்வார்.
கைக்கடிகாரம் தவிர, பூ, பறவை (கிளி மற்றும் மயில்), ஏரோப்ளேன் போன்ற பொம்மைகளும் உண்டு. வடிவம் எதுவானாலும் மிட்டாயின் சுவை ஒன்றுதான் என்கிற உண்மை புரியாத வயது என்பதால் தினசரி எந்த பொம்மையைச் செய்யச்சொல்லிக் கேட்கலாம் என்கிற யோசனையிலேயே வெகுநேரம் செலவழியும். ஒருவழியாக ஏதோ ஒரு பொம்மையைச் செய்து வாங்கியபின்னர், அடுத்தவன் கையில் இருப்பதைப் பார்த்ததும் ‘அதைக் கேட்டிருக்கலாமோ’ என்று தோன்றும், டூ லேட்!
’ஜவ்வு மிட்டாயில் சர்க்கரை தவிர வேறேதும் சத்து இல்லை’ என்று எங்கள் பிடி மாஸ்டர் அடிக்கடி சொல்வார். ‘பல்லுக்குக் கேடுடா’ என்கிற அவரது விமர்சனத்தை யார் மதித்தார்கள், நாங்களெல்லாம் நாக்கெல்லாம் இனிப்பும் சிவப்புமாகதான் பெரும்பாலான பள்ளி நாள்களைத் தாண்டினோம்.
பள்ளிக் காலத்தில் தினந்தோறும் அனுபவித்த அந்த ஜவ்வு மிட்டாயை அதன்பிறகு பல நாள்கள் பார்க்கவில்லை. இன்று லால்பாகில் பார்த்தேன். எட்டணா பொம்மை காலவசத்தில் ஐந்து ரூபாயாகியிருக்கிறது, மற்றபடி நுட்பத்திலோ சுவையிலோ துளி மாற்றமில்லை. நானும் மகள்களும் நெடுநேரம் அனுபவித்துச் சாப்பிட்டோம். மனைவியாருக்குப் பார்சல்கூட வாங்கிவந்தோம். அது பத்தே நிமிடத்தில் கரைந்து வடிவம் தெரியாமல் மாறிவிட்டதுதான் ஒரே சோகம்.
அது நிற்க. நெடுநாள் கழித்து அகப்பட்ட அந்த ஜவ்வு மிட்டாய்க் கலைஞரின் கைவண்ணத்தை இரண்டு அமெச்சூர் வீடியோ படங்களாக எடுத்துவைத்தேன். நாஸ்டால்ஜியா ஆர்வலர்களுக்காக அவை இங்கே:
அனைவருக்கும் இனிய சுதந்தர தின வாழ்த்துகள் 🙂
***
என். சொக்கன் …
15 08 2011
16 Responses to "ஜவ்வு மிட்டாய்க் கலைஞர்கள்"

அருமை.


இதை எல்லாம் ஒலிம்பிக் ல சேக்க மாட்டாங்களா ? #டவுட்டு


sirithu neram kulandai aanen


ஆகா,, நம்ம பள்ளிக்கூட வாசல்ல விப்பாங்களே, நியாபகப்படுத்திட்டீங்க!!!


அருமை.


very nice sir……


ஜவ்வு மிட்டாய் வியாபாரியை தொடர்புகொள்ள செல் நம்பர் அல்லது விலாசம் தேவை … இருந்தால் எனக்கு கொடுக்கவும் … அவருடைய தொழில் மேலும் சிறக்க பல வாய்ப்புகள் காத்துக்கொண்டிருகிறது ..

1 | Devarajan
August 15, 2011 at 5:33 pm
ஜவ்வு மிட்டாய் ஞாபகத்தை இழுத்து விட்டீர்கள். 🙂 சூப்பர்..!! சுதந்திர தின வாழ்த்துகள்..!!