உறை
Posted August 18, 2011
on:- In: (Auto)Biography | Bangalore | Funny Mistakes | Price | Uncategorized
- 20 Comments
சமீபத்தில் ஒரு நெட்புக் வாங்கினோம். தக்கனூண்டு சைஸ், அதனினும் தக்கனூண்டு கீபோர்ட், அந்தக் காலத்து வீடியோ கேஸட்டைவிடக் கொஞ்சமே கொஞ்சம்தான் பெரியது, அசந்தால் பேன்ட் பாக்கெட்டில் செருகிக்கொண்டு நடந்துவிடலாம், எடை அதிகமில்லை, எல்லோரும் பயமுறுத்திய அளவு பர்ஃபார்மென்ஸும் மோசமில்லை.
அது நிற்க. இந்தப் பதிவின் நோக்கம் நெட்புக் விற்பது அல்ல. ஒரு வாரமாக அந்த நெட்புக்கின் மேலுறை(பவுச்)சைக் காணவில்லை.
மேலுறை இல்லாமலும் நெட்புக் அழகுதான். ஆனால் அதைத் தூக்கிக்கொண்டு சுற்றுவது சிரமம். தெருவில் நம்மைப் பார்ப்போர் அநாவசிய பந்தாவென்றெண்ண இடமாகும்.
உண்மையில், அந்த பவுச் தொலைந்த தினத்தன்று நான் ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டியிருந்தது, நோட்ஸ் எடுக்கவேண்டியிருந்தது, எவ்வளவோ தேடியும் பவுச் கிடைக்காததால் வேறு வழியின்றி அம்மண நெட்புக்குடன் நான் கிளம்ப, பஸ்ஸில் என்னைப் பார்த்த ஒருவர் நெருங்கி வந்து ‘2 ஜிபி மாடலா சார்? என்ன விலை ஆச்சு? எத்தினி ஹவர் பேட்டரி வருது?’ என்றெல்லாம் அக்கறையாக விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்.
இந்த அவஸ்தையே வேண்டாம், ஆட்டோவில் போய்விடலாம் என்று பார்த்தால் கையில் நெட்புக்கைப் பார்த்தவுடன் ஆட்டோக்காரர்கள் நமுட்டுச்சிரிப்போடு 2 கிலோமீட்டர் தூரத்துக்கு எழுபத்தைந்து ரூபாய் கேட்கிறார்கள். ‘கையில கம்ப்யூட்டர்ல்லாம் வெச்சிருக்கான், கொடுக்கட்டுமே!’
அன்று வீடு திரும்பியதும் மனைவியாரிடம் அறிவித்தேன். ‘முதல் வேலையா என்னோட நெட்புக் பவுச்சைக் கண்டுபிடிச்சுக் கொடு!’
‘அஸ்கு புஸ்கு, நானா தொலைச்சேன்? நீயே தேடிக் கண்டுபிடிச்சுக்கோ!’
‘நான் வீட்லதான் வெச்சேன், நீதான் ஒரு நாளைக்கு ஏழெட்டு தடவை வீட்டை க்ளீன் பண்றேன் பேர்வழின்னு என்னவோ செஞ்சுட்டே!’
‘ம்ஹூம், நான் அந்தப் பவுச்சைப் பார்க்கவே இல்லை, வேணும்ன்னா உன் பொண்ணுங்களைக் கேளு!’
‘அதுங்களைக் கேட்கறதுக்குச் சும்மாவே இருக்கலாம்’ என்றேன் நான். ’யார் தொலைச்சாங்களோ, நீதான் கண்டுபிடிச்சுத் தரணும்.’
என் மிரட்டல் யாரிடமும் செல்லுபடியாகாது. முக்கியமாக வீட்டில்.
ஆகவே, மிரட்டலில் இருந்து இறங்கி வந்து வேறோர் அஸ்திரத்தைப் பிரயோகித்தேன். ‘புது பவுச் 600 ரூபாய் ஆகும், வாங்கிடட்டுமா?’
இப்போது மனைவியார் அடிபட்டார். ‘ஒருவாட்டி தேடிடறேன், அப்புறமா வாங்கலாம்!’ என்றார்.
ஒருவாட்டி என்பது இரண்டுவாட்டி ஆனது நாலுவாட்டி ஆனது பத்துவாட்டி ஆனது. தினம் மூன்று வேளை சாப்பிடுவதுபோல் எல்லோரும் எந்நேரமும் வீடு முழுக்கச் சல்லடை போட்டுத் தேடியும் அந்தப் பவுச் கிடைக்கவில்லை.
அப்போதும், அவர் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. கிட்டத்தட்ட அந்தப் பவுச்மாதிரியே அளவு கொண்ட ஒரு சின்னப் பையைக் கொடுத்து ‘இதில உன் கம்ப்யூட்டரைப் போட்டுக்கோ’ என்றார்.
எனக்குச் சிரிப்புதான் வந்தது. காரணம், அந்தப் பை சினிமாக்களில் கல்யாணத் தரகர்கள் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு வருவார்களே, அந்த மோஸ்தர். அதில் நெட்புக்கைப் போட்டுக்கொண்டு தெருவில் இறங்கமுடியுமா?
வேறுவழியில்லை. புதுசு வாங்கிதான் ஆகவேண்டும் என்று முடிவெடுத்தோம். வரும் ஞாயிற்றுக்கிழமை அதற்கென ஒதுக்கப்பட்டது.
இன்று ஆஃபீசில் ஒரு மீட்டிங். அதற்குச் செல்வதற்காகத் தோள் பையிலிருந்து என்னுடைய பெரிய லாப்டாப்(அலுவலகத்தில் கொடுத்தது)பின் பவுச்சை எடுத்து ஜிப்பைத் திறந்தால், அதற்குள் குட்டி உறை சமர்த்தாகப் படுத்திருக்கிறது.
***
என். சொக்கன் …
18 08 2011
20 Responses to "உறை"

Very Good Sir.


ஆட்டை தோளில் தொங்க விட்டு கொண்டு தேடிய இடயன் என்று சொல்வாங்களே அந்த நினைவு வந்துடுச்சு.


கண்டுகொண்டேன்ன்ன்னன்……. பாட்டு பாடினிங்களா சார்..?! 🙂


அடி விழுந்தா எப்படி சத்தம் போடுவீங்கன்னு சொல்லி முடிச்சிருக்கலாம். அதானே Climax


if you continue posts like that, you will not get any help/funds from home department. 🙂


ஒரு சின்ன Back Pack வாங்கி (தமிங்கிலத்தில் எழுதினால் பேக் பேக் என்று வருகிறது!) அதில்தான் எனது நெட் புக் அளவிலான லேப்டாப்பை எடுத்துச் செல்கிறேன். லேப்டாப் கொண்டு செல்கிறோம் என்கிற மாதிரி தெரியாது, அதே சமயம் லேப்டாப்புகளுக்கான பிரத்யேக பைகளை விட வசதியாகவும் உள்ளது.


உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன்.நல்லாஇருக்கு.
உங்கள் “என் நிலைக்கண்ணாடியில் உன் முகம்” தொகுப்பு படித்து இருக்கிரேன்.அதில் எல்லா கதையும் பிடிக்கும்.குறிப்பாக
“கொடை” படிக்கும் போது என்னையே அந்த கதையில் பார்க்கிறேன்.நான் நிறைய புத்தகம் வைத்திருக்கிறேன்.
ஆனல் என் மகனுக்கு தமிழ் படிக்க தெரியாது.


தமிழ் படிக்க தெரியாது என்பதை பெருமையாக சொல்லவில்லை.தொடக்ககல்வி வேறு மாநிலங்களிலில் இருந்ததுதான் காரணம்.


ஹா ஹா ஹா
நானும் நிறைய நேரம் இப்படித் தேட உள்ளேன்.
எப்படியோ அறுநூறு மிச்சம்.

1 | ahamed5zal
August 18, 2011 at 4:04 pm
Finally you found out cver for your kutti netbook..apa treat enga sir?