Archive for September 2011
விழுந்த எண்ணங்கள்
Posted September 27, 2011
on:- In: Gangai Amaran | Ilayaraja | K J Yesudoss | Music | Suradha | Uma RamaNan | Uncategorized | Vairamuthu
- 14 Comments
இன்றைய Random பாட்டு, ‘ஆனந்த ராகம், கேட்கும் காலம்’.
ராஜா இசையில் உமா ரமணன் எத்தனையோ அருமையான பாடல்கள் பாடியிருந்தாலும் இந்தப் பாடல் அவரது வாழ்நாள் சாதனை. எனக்குப் பிடித்த அவரது மற்ற சில பாடல்கள்: பூங்கதவே தாள் திறவாய், செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு, மஞ்சள் வெயில், கண்ணனே நீ வரக் காத்திருந்தேன், கஸ்தூரி மானே, பொன்மானே கோபம் ஏனோ, ஊருறங்கும் சாமத்திலே, கீதம் சங்கீதம், ஆகாய வெண்ணிலாவே, ஏலேலங்குயிலே, ஹோ உன்னாலே நான், and of course, ‘ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்.’
இதில் ‘ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்’ பாடலை அவர் பாடியிருப்பதே பலருக்குத் தெரியாது. காரணம் படத்தில் அவரது குரல் இல்லை. ஏதோ காரணத்தால் அந்தச் சரணத்தைமட்டும் வெட்டிவிட்டார்கள்.
ஆனால் எனக்கு அந்த முதல் சரணம் ரொம்பப் பிடிக்கும். ஏதோ பாட்டுவாத்தியார் பக்கத்தில் கையைக் கட்டிக்கொண்டு பாடுகிற மாணவியைப்போல் ட்யூனை அட்சரசுத்தமாக அவர் பாடுவது ரொம்பப் பிரமாதமாக இருக்கும்.
சாதாரணமாகவே ராஜாவின் ட்யூன்களை உமா ரமணன் பாடும்போது இந்த ‘கையைக் கட்டிய’ பாவனையைச் சுலபமாகப் பார்க்கலாம். கூடப் பாடுவதும் ராஜாவே என்றால் இன்னும் மோசம் – சந்தேகமிருந்தால் ’பாட்டுப் பாட வா’ படத்தில் வரும் ‘நில் நில் நில்’ என்ற டூயட்டைக் கேட்டுப்பாருங்கள், ஆண் குரல் தன்னிஷ்டத்துக்கு எங்கெங்கோ எகிறிப் போக, இவர்மட்டும் துளி பிசகில்லாமல் வரம்புக்குள் நின்று ஆடியிருப்பார்.
’ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்’ பாடலில் இந்த வித்தியாசம் இன்னும் தெளிவாகத் தெரியும். ’கொள்ளிடம் நீர்மீது’ எனத் தொடங்கும் முதல் சரணத்தில் உமா ரமணன் திராவிட்போல ’மடி’யாக Text Book Cricket ஆட, ‘கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்’ எனத் தொடங்கும் இரண்டாவது சரணத்தில் எஸ். பி. பி. சச்சின்போல் ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்.
அதென்ன சச்சின்? சேவாக் / தோனி என்று சொல்லப்படாதா?
சொல்லலாம். ஆனால் வாத்தியார் முன் கை கட்டின ரேஞ்சுக்கு இல்லாமல் சுதந்தரமாகப் பாடினாலும்கூட எஸ்.பி.பி. அந்த ரெண்டாவது சரணத்திலும் அழகாக டெஸ்ட் க்ரிக்கெட்தான் ஆடுகிறார். 20:20 ரேஞ்சுக்கு Fun Cricket ஆக்கிவிடுவதில்லை.
போகட்டும். கிரிக்கெட் உதாரணங்கள் போரடிக்கின்றன. வேறு ஏதாவது பேசுவோம்.
இன்றைய காலை நடையின்போது துணைக்கு வந்தது ‘மண் வாசனை’. குறிப்பாக ‘அரிசி குத்தும் அக்கா மகளே’ என்ற பாட்டு.
’கிராமத்தில் ஓர் இளைஞன் தன்னுடைய முறைப்பெண்ணைக் கிண்டல் செய்து பாடும் பாட்டு’ என்பதுதான் ஒன்லைன். எந்த முக்கியத்துவமும் இல்லாமல் கடந்து சென்றுவிடக்கூடிய சூழ்நிலைதான். மேலோட்டமாகப் பார்த்தால் இதுவும் இன்னொரு ‘டண்டனக்கா’ மெட்டுதான். ஆனால் இந்தச் ‘சாதாரண’ப் பாட்டுக்குள் ராஜா செய்திருக்கும் சில அசாதாரண விஷயங்களைக் கவனித்தால் ’ஆளில்லாத கடையில இந்தாள் யாருக்காகய்யா டீ ஆத்தினார்?’ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
உதாரணமாக, இந்தப் பாட்டின் மெட்டு, இசை, குரல்களையெல்லாம் மறந்துவிட்டு வெறும் தாளக்கட்டைமட்டும் ஐந்து நிமிடத்துக்குத் தொடர்ந்து கவனித்துப்பாருங்கள். ’தொகையறா’வுக்குத் தருகிற அட்டகாசமான அலங்கரிப்பில் தொடங்கிப் ’பல்லவி’யின் தொடக்கத்தில் சிறிது நேரம் காணாமலே போய்ப் பின்னர் (கதாநாயகி நாயகனைத் தேடும் நேரத்தில்) குறும்பான சிறுதாளமாகத் திரும்பி வந்து, மீண்டும் பல்லவியோடு இழைந்து செல்லும் தாளம் சரணங்களுக்கு முந்தைய இடையிசைகளில் முற்றிலும் மாறுபட்ட ஓர் உருவமெடுக்கிறது. பெண் குரலுக்கு வேறுவிதம், ஆண் குரலுக்கு சற்றே மாறுபட்ட இன்னொரு விதம் என்று பகடி செய்கிறது, ’உன்னைக் கட்டிக்க என்னை விட்டா யாரு மச்சான்’ என்ற வரியில் மீண்டும் பிரதான இழையுடன் வந்து இணைந்துகொள்கிறது, அதேநேரம் இதுவரை காணாமல் போயிருந்த உலக்கைச் சத்தத்தை இங்கே சரியாகக் கொண்டுவந்து சேர்க்கிறார் ராஜா – இந்தப் பாடலில் தாளம் எந்த இடத்தில் மாறுகிறது, ஏன் மாறுகிறது என்று யோசிக்க ஆரம்பித்தால் பல கற்பனைகளுக்கு இடம் உண்டு.
மீண்டும் ‘ஆனந்த ராக’த்துக்கு வருவோம். இந்தப் பாடல் இடம் பெற்ற படம் ‘பன்னீர் புஷ்பங்கள்’, எழுதியவர் கங்கை அமரன், இயக்கம் பாரதி – வாசு (சந்தான பாரதி – பி. வாசு). ராஜா ரசிகர்களுக்கு ரொம்பப் பிடித்த இந்தப் பாடலைப் பின்னர் ராம்கோபால் வர்மா தனது ஹிந்திப் படம் ஒன்றில் இடம் பெறச் செய்தார். ’சாரா யே ஆலம்’ என்ற அந்தப் பாடலைப் பாடியவர் ஷ்ரேயா கோஷல்.
இந்த ’ஆனந்த ராக’த்தில் கொஞ்சம் கவனித்துக்கேட்டால்மட்டுமே உறுத்தக்கூடிய ஒரு வரி, முதல் சரணத்தில் இருக்கிறது:
கள்ளம் இன்றி உள்ளங்கள் துள்ளி எழ
கட்டிக்கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ
உமா ரமணன் இப்படிதான் பாடுகிறார். ஆனால் இந்த வரியில் ’எண்ணங்கள் மெல்ல விழ’ என்பது சரியா?
என் கணிப்பு, ‘எண்ணங்கள் மெல்ல அவிழ’ (அதாவது, எண்ணங்கள் மெதுவாக மலர) என்று கங்கை அமரன் எழுதியிருக்கவேண்டும், அல்லது எழுத நினைத்திருக்கவேண்டும். பின்னர் அதனை மெட்டில் உட்காரவைப்பதற்காக எண்ணங்களை விழவைத்துவிட்டார். கொஞ்சம் கரடுமுரடாகிவிட்டது.
இதேபோல் இன்னொரு வேடிக்கையான விஷயம், ’ஜோடி’ படத்தில் வரும் ’வெள்ளி மலரே’ பாடலில் ஒரு வரி, வைரமுத்து எழுதியது:
மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள்
கண்ணொளியில் மலர்வன காதல் பூக்கள்
உண்மையில் வைரமுத்து எழுத நினைத்தது ‘மின்னல் ஒளியில் மலர்வன தாழம்பூக்கள்’ – சூரியனைக் கண்டு தாமரை மலர்வதுபோல, மின்னல் ஒளியில் தாழை மலரும் என்று ஒரு நம்பிக்கை. உவமைக்கவிஞர் சுரதா ஒரு பாட்டில் ‘சுடர்மின்னல் கண்டு தாழை மலர்வதுபோலே’ என்று எழுதியிருக்கிறார்.
ஆனால் இங்கே, ரஹ்மானின் மெட்டில் ‘மின்னல்’க்கு இடம் இல்லை. ‘மின்னல் ஒளியில் மலர்வன தாழம்பூக்கள்’ என்று எழுதமுடியாது. சட்டென்று ‘மின்னொளி’ என்று சுருக்கிவிட்டார் வைரமுத்து. மின் ஒளி – Electric light வெளிச்சம் பட்டுத் தாழம்பூ மலர்வதாக அர்த்தம் வந்துவிட்டது.
சில சமயங்களில் கவிஞர்கள் சரியாகவே எழுதியிருப்பார்கள். பாடுகிறவர்கள் சொதப்பிவிடுவார்கள், அல்லது பதிவு செய்கிறவர்கள் சொதப்பிவிடுவார்கள். இதற்கு நல்ல உதாரணம் ‘சிந்திய வெண்மணிச் சிப்பியில் முத்தாச்சு’ என்கிற ‘பூந்தோட்டக் காவல்காரன்’ பாட்டு. எழுதியவர் கங்கை அமரன்.
இந்தப் பாட்டின் இரண்டாவது சரணத்தில் கே. ஜே. யேசுதாஸ் பாடும் சில வரிகள்:
தாய் தந்த பாசம்,
தந்தை உன் வீரம்,
சேய் கொள்ள வேண்டும் அன்பே, அன்பே
’தந்தை ***உன்*** வீரம்’ என்று வருவதால் இந்த வரிகளைப் பெண் குரல் (பி. சுசீலா) பாடியிருக்கவேண்டுமா? அல்லது ‘தந்தை என் வீரம்’ என்று எழுதப்பட்டிருந்ததைப் பாடகர் தவறாகப் பாடிவிட்டாரா? நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
Followup: https://nchokkan.wordpress.com/2011/10/21/rgtwrng/
***
என். சொக்கன் …
27 09 2011
மதிப்பு
Posted September 26, 2011
on:- In: Bangalore | Music | Price | Uncategorized | Value | Visit
- 12 Comments
ட்விட்டர் நண்பர் கவிராஜன் (https://twitter.com/#!/kavi_rt) பெங்களூரு வந்திருந்தார். இன்னொரு ட்விட்டர் நண்பர் சுரேஷ் (https://twitter.com/#!/raaga_suresh) ஏற்பாட்டில் அவரைச் சந்திக்கமுடிந்தது. இரண்டு மணி நேரம் நல்ல அரட்டை.
வழக்கமாக வெளியூர் நண்பர்கள் பெங்களூரு வந்தால் ஏதேனும் ஒரு Shopping Mall Food Courtல் சந்திப்பதுதான் வழக்கம். இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக, ஓர் antique shopல் சந்தித்தோம்.
காரணம், கவிராஜன் வினைல் ரெக்கார்டுகளைச் சேகரித்துவருகிறார். பெங்களூரு அவென்யூ ரோட்டில் உள்ள ஒரு பழம்பொருள் கடையில் கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரம் வினைல் ரெக்கார்டுகள் உள்ளன என்கிற செவிவழிச் செய்தியின் அடிப்படையில் மூவரும் அந்தக் கடையைத் தேடிச் சென்றோம்.
லேசான பழுப்புத் தூசு படிந்த நீளக் கடை. அதனுள் மர அலமாரிகளில் புராதன சாமான்கள் – ஃப்ரேம் செய்யப்பட்ட அந்தக் கால விளம்பரங்கள், சினிமா போஸ்டர்கள், வால்வ் ரேடியோக்கள், ’ட்ரிங் ட்ரிங்’ டயல் ஃபோன்கள், பீங்கான் ஜாடிகள், மொழமொழன்னு யம்மா யம்மா பொம்மைகள், மங்கிய ஓவியங்கள், விநோத வடிவங்களில் நாற்காலிகள், மேஜைகள், டிரங்குப் பெட்டிகள், விசிறிகள், சைக்கிள்கள், இன்னும் ஏதேதோ.
இந்த விநோதக் கலவையைப் பார்க்கும்போது எனக்கு ரா. கி. ரங்கராஜன் மொழிபெயர்த்த ஜெஃப்ரே ஆர்ச்சர் சிறுகதை ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. அதன் பெயர் என்ன என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே கடைக்காரர் தோளில் துண்டை உதறிப்போட்டபடி வந்தார். ‘என்ன வேணும் சார்?’
‘வினைல் ரெக்கார்ட்ஸ்!’
‘ஹிந்தியா, கன்னடமா?’
‘தமிழ்!’
‘அதெல்லாம் மேலே இருக்கு’ என்றவர் படிகளில் விறுவிறுவென்று மேலேறினார். இன்னொரு ‘பழுப்புத் தூசு படிந்த நீளக் கடை’யைத் திறந்து காட்டினார். அதன் மூலையில் அலமாரியொன்றில் கட்டுக்கட்டாக வினைல் ரெக்கார்ட்கள் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், பக்திப்பாடல், கர்நாடக சங்கீதம் என்று வகைவகையாகச் சரித்துவைக்கப்பட்டிருந்தன.
கடைக்குள் ஒரே இருட்டாக இருக்குமோ என்ற எண்ணத்தில் சுரேஷ் டார்ச் விளக்கெல்லாம் எடுத்துவந்திருந்தார். இங்கே நிலைமை அந்த அளவு மோசமில்லை. ஆனால் அந்த வினைல் ரெக்கார்ட்களை நெருங்குவதுதான் பெரும்பாடாக இருந்தது. கடைக்காரர் எப்படியோ சந்துபொந்துகளில் நுழைந்து எதையோ எங்கேயோ மாற்றி வழி பண்ணிக் கொடுத்தார். கவிராஜன் உற்சாகமாக உள்ளே புகுந்து ரெக்கார்ட்களைத் தேட ஆரம்பித்தார்.
‘பார்ட்டி மாட்டிச்சு’ என்று நினைத்த கடைக்காரர் தன்னுடைய விதிமுறைகளை அவிழ்த்துவிட்டார். ‘ஒவ்வொரு ரெக்கார்டும் 150 ரூபாய் சார், அப்புறம் பேரம் பேசக்கூடாது!’
இந்தியாவில் பேரம் பேசக்கூடாது என்றால் எவன் மதிப்பான்? ‘பார்க்கலாம் சார், ஹிஹி’ என்றோம்.
‘அதெல்லாம் பார்க்கறதுக்கு இல்லை சார், வாங்கறதுன்னா 150 ரூபாய் கொடுத்து வாங்கிக்கோங்க, நீங்க நூறு ரெக்கார்ட் ஒண்ணா வாங்கினாலும் அதான் விலை!’ என்றார் அவர். ‘ஒருவேளை நீங்க என்னோட கலெக்ஷன் மொத்தத்தையும் வாங்கறதுன்னா 20 ரூபாய்ன்னு போட்டுத் தர்றேன், மத்தபடி ஒரு பைசா குறைக்கமாட்டேன்!’ என்று சொல்லிவிட்டுக் கீழே நடந்தார்.
எனக்கு ஆச்சர்யம். முப்பது ரூபாய் சிடியில் நூற்றுச் சொச்ச எம்பி3கள் கொழிக்கிற இந்தக் காலத்தில் ஏழெட்டுப் பாடல்களுக்கு 150 ரூபாய் எவர் தருவார்?
ஆனால் கவிராஜன் தரத் தயாராக இருந்தார். இதில் வரும் ஒலித்தரம் வேறெதிலும் கிடைக்காதாம். அந்த அனுபவத்துக்கே இந்த விலை தாராளமாகத் தரலாமாம். நான் என்னத்தைக் கண்டேன்?
உண்மையில் நான் இப்போதுதான் முதன்முறையாக ‘வினைல் ரெக்கார்ட்’ என்கிற சமாசாரத்தைப் பார்க்கிறேன். ஒரு முழ விட்டத்தில் சிடியின் நெகட்டிவ் பிரதிமாதிரி கன்னங்கரேல் என்று இருக்கிறது. வெளியே சச்சதுரமாக நல்ல கெட்டி அட்டையில் உறை. அதில் அந்தந்தப் படத்தின் ஹீரோ, ஹீரோயின், இசையமைப்பாளர், பாடலாசியர், முக்கியமாகத் தயாரிப்பாளர்களின் பெப்பெரிய புகைப்படங்களைப் பார்க்கமுடிந்தது. இளையராஜா, தேவா, எஸ். ஏ. ராஜ்குமார், பி. வாசு, கங்கை அமரன், வைரமுத்து போன்றோரின் அபூர்வப் புகைப்படங்களை ரசித்துக்கொண்டிருந்தேன். அந்தக் கால ஆடியோ புக் – கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ தென்பட்டது – இப்போதைய ‘சீயான்’ விக்ரமின் முதல் படமாகிய ‘தந்துவிட்டேன் என்னை’ ஸ்டில் ஒன்றுகூடக் கிடைத்தது. அச்சு அசல் ‘கருத்தம்மா’ ராஜாபோலவே இருக்கிறார் மனிதர்.
ஆனால் இந்தச் சுவாரஸ்யமான Archive அலசலெல்லாம் கொஞ்ச நேரம்தான். என்னுடைய வழக்கமான தூசு ஒவ்வாமை(Dust Allergy)த் தும்மல்கள் வழிமறிக்க, கொஞ்சம் விலகி நின்றுகொண்டேன். தூசு குறைவாக இருந்த ஒரு வினைல் ரெக்கார்டைக் கையில் எடுத்துப் பார்த்தேன். ‘கவிராஜன், இந்த ரெக்கார்டெல்லாம் இவ்ளோ அழுக்கா இருக்கே, ஒழுங்கா ஓடுமா? எந்த தைரியத்துல 150 ரூபாய் கொடுத்து இதை வாங்கறீங்க?’
அதை ஏதோ ஒரு கோணத்தில் வைத்துப் பார்த்தால் நல்ல ரெக்கார்டா கீறல் விழுந்ததா என்று தெரிந்துகொள்ளலாம் என்றார் கவிராஜன். அதோடு நிறுத்தவில்லை. சர்ஃப் பொடிக் கலவையை ராத்திரி முழுக்க ஊறவைத்துத் துகள்களை நீக்கிச் சோப்புத் தண்ணீரைமட்டும் எடுத்து ரெக்கார்ட்களைச் சுத்தப்படுத்துவது எப்படி என்று நிறுத்தி நிதானமாக விவரித்தார். அப்போது அவர் தன் குழந்தைக்குத் தலைக்குத் தேய்த்துக் குளிப்பாட்டுகிற ஓர் இளம் தாயைப் போன்ற பரவசத்தோடு தென்பட்டார்.
கவிராஜன் புரட்டிப் போட்டுத் தேடிக்கொண்டிருந்த வினைல் ரெக்கார்ட்களுக்கு மத்தியில் சுரேஷ் கையில் ஒரு கேஸட் தென்பட்டது. எடுத்துப் பார்த்தால் சோனி ம்யூசிக் வெளியிட்ட ‘Mask Of Zorro’ பாடல்கள். மேலுறைகூடப் பிரிக்காத புத்தம்புதுசு. ‘Antique Shopல இது எப்படி?’ என்று ஆச்சர்யப்பட்டோம்.
சிறிது நேரம் கழித்து, கவிராஜனின் தேடல்கள் முடிந்தன. எட்டு ரெக்கார்ட்களை எடுத்துவைத்தார். கடைக்காரர் அவற்றைக் கவனமாக எண்ணிப்பார்த்துவிட்டு, ‘1200 ரூபாய்’ என்றார்.
‘ஆயிரம்ன்னு சொல்லுங்களேன்!’
‘நோ பார்கெய்ன்னு ஆரம்பத்திலயே சொன்னேனே சார்’ என்று சலித்துக்கொண்டார் அவர். ‘எனக்கு இதுல ஒரு பைசா லாபம் இல்லை. நஷ்டத்துக்குதான் விக்கறேன். தெரியுமா?’
’சரி சரி’ என்றபடி அவரிடம் ‘Mask Of Zorro’ கேஸட்டைக் காட்டினார் சுரேஷ். ‘இது என்ன விலை?’
‘எடுத்துக்கோங்க சார். ஃப்ரீ’ என்றார் கடைக்காரர்.
பழம்பொருள் கடையில், பிரிக்கப்படாத புதுப்பொருளுக்கு மதிப்பு அவ்வளவுதான்!
***
என். சொக்கன் …
26 09 2011
செம்பட்டைக்குக் கல்யாணம்
Posted September 21, 2011
on:- In: Characters | Gangai Amaran | Ilayaraja | Malaysia Vasudevan | Music | Salem | Uncategorized
- 14 Comments
நேற்று இணையத்தில் ஒரு திரைப்பட விமர்சனம் வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு வரி: ‘படத்தில் சில நிமிடங்களே வருகிற சின்னச் சின்னக் கதாபாத்திரங்களைக்கூட இயக்குனர் கவனித்துச் செதுக்கியிருக்கிறார்.’
இதைப் படித்தபோது (வழக்கம்போல்) எனக்கு ஒரு பாட்டுதான் நினைவுக்கு வந்தது: ’அன்னக்கிளி’ புகழ் தேவராஜ் – மோகன் இயக்கத்தில் வெளிவந்த ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் ‘வெத்தல வெத்தல வெத்தலயோ’!
மிஞ்சிப்போனால் ஆறு நிமிடம்மட்டுமே ஒலிக்கும் பாடல் இது. ஆனால் அதற்குள் ஒரு கிராமத்தின் குறுக்குவெட்டுத்தோற்றத்தைப் பார்த்துவிடமுடியும்.
அந்தக் கிராமத்தின் பெயர் வண்டிச்சோலை. அங்கே வசிக்கும் செம்பட்டை என்பவனுக்குக் கல்யாணம். அதைப்பற்றி ஊரில் உள்ளவர்களுக்குச் சொல்லியபடி பாடிச் செல்கிறான்.
பொதுவாக திரையிசையில் மெலடிக்குதான் மரியாதை அதிகம். கொஞ்சம் வேகமான தாளக்கட்டோடு வருகிற பாடல்களெல்லாம் ரசிக்கப்படும், விரைவில் மறக்கவும் படும்.
ஆனால் இந்தப் பாட்டு அப்படியில்லை. மேலோட்டமாகப் பார்க்கும்போது வெறும் துள்ளாட்டப் பாடலாகத் தெரிந்தாலும், வெளியாகி முப்பது வருடங்கள் கடந்து இன்றும் அதே துள்ளலுடன் கேட்கப்படுவதே இதன் தரத்துக்குச் சாட்சி.
’வெத்தல வெத்தல வெத்தலையோ’ என்று தொடங்கும் பல்லவியில் ஒரு குழந்தைக் குதூகலத்தைக் கொண்டுவருகிறார் மலேசியா வாசுதேவன். பின்னர் சரணங்களில் இது இன்னும் authenticஆக ஒலிக்கிறது (‘ச்சொன்னாங்க ச்சொன்னாங்க’). இந்தப் பாடலில் ஏகப்பட்ட பரத நாட்டிய பாவனைகளோடு நடித்திருக்கும் சிவக்குமாருக்கு இவருடைய குரல் மிகக் கச்சிதமாகப் பொருந்திப்போகும்.
சிவக்குமாரைப்பற்றி ஒன்று சொல்லவேண்டும். இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்கள் கமல், மோகன், ராமராஜனுக்குதான் சென்றிருக்கின்றன என்று சொல்வார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் முன்பாக அந்த அதிர்ஷ்டம் சிவக்குமாருக்கு அடித்தது. தன்னுடைய முதல் பட நாயகன் என்பதாலோ என்னவோ, இவருக்குமட்டும் ராஜா குறை வைத்ததே இல்லை. சாம்பிள் வேண்டுமென்றால், ’மனிதனின் மறுபக்கம்’ படத்தில் வருகிற ‘ஊமை நெஞ்சின் சொந்தம்’ அல்லது ‘கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன?’ பாடல்களைக் கேட்டுப் பாருங்கள்.
நிற்க. சிவக்குமார் புராணம் போதும், செம்பட்டைக்குத் திரும்புவோம்.
’வெத்தல’ப் பாட்டில் ’அரை டவுசர்’ சகிதம் ஊரைச் சுற்றிவரும் செம்பட்டை சந்திக்கும் முக்கியமான பாத்திரங்கள்: ‘ஏலே சோதாப்பயலே, ஜோரா நடந்து வாடா முன்னாலே’ என்றும் ‘கோணவாயா’ என்றும் அவனால் விளிக்கப்படுகிற உதவிப்பையன்கள் இருவர், கிராமவாசிகளுக்கு இட்லி விற்கும் பாட்டி, மோர்ப்பந்தல் தாத்தா, கள்ளுக்கடை வாசலில் மஸாஜ் செய்துகொண்டபடி சின்னப் பானையில் போதை ஏற்றிக்கொள்ளும் உள்ளூர் பயில்வான்.
பாட்டியிடம் இட்லி (ஓர் அணாவுக்கு நான்கு) வாங்கித் தின்னும் சின்னப் பையன் ஒருவன் ‘இட்லி வரவர எளைச்சுகிட்டே வருதே’ என்று குற்றம் சாட்டுகிறான். அதற்குப் பாட்டி சொல்லும் பதில்: ‘ரெண்டணாவுக்கு ஒரு இட்லி வாங்கித் தின்ற காலம் வரும்டா’!.
இப்போது இலையில் இட்லி பரிமாறும் பாட்டிக் கடைகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அவர்களுக்குச் சரவண பவன் / அடையாறு ஆனந்த பவன் விலை நிலவரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பாட்டியின் கடையில் செம்பட்டை இட்லி சாப்பிடுவதில்லை. திருமண விவரத்தைச் சொல்கிறான். ‘சேலத்துக்குப் போறேன், ஏதாவது வாங்கிவரணுமா?’ என்று கேட்டு ஒரு மினி மளிகை லிஸ்டை வாங்கிக்கொள்கிறான். இதுவும் கிராமத்துப் பழக்கம்தான். என்னைமாதிரி பட்டணத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்குப் புரியாது.
செம்பட்டையிடம் பத்தமடைப் பாயும் ஏலக்காயும் வாங்கிவரச் சொல்லும் பாட்டி கடைசியாகக் குரலை இறக்கி ‘ஒரு மூக்குப்பொடி டப்பி’யும் வாங்கிவரச் சொல்கிறாள். இதில் ரகசியம் ஏன் என்பது நம் ஊகத்துக்கு விடப்படுகிறது.
தவிர, பாட்டி சொல்வது ‘டப்பா’ இல்லை, ‘டப்பி’. ஹிந்தியிலிருந்து வந்த ‘டப்பா’ இப்படி மாறியதற்குக் காரணம் புரியவில்லை. இப்போது யாரும் இதைப் புழங்குகிறார்களா என்பதும் தெரியவில்லை.
வசனக் காட்சிகள் முடிந்ததும், Raja takes over. கம்பன் வீட்டுக் கட்டுத்தறி, சுஜாதாவின் லாண்டரிக் கணக்கு வரிசையில் ஒரு மளிகை லிஸ்டை மெட்டில் உட்காரவைத்து, அதையும் ரசிக்கும்படி செய்தது ராஜா – கங்கை அமரன் (பாடலாசிரியர் அவர்தான் என்று நினைவு) இருவரின் மேதைமைதான்.
செம்பட்டை அடுத்ததாகச் சந்திக்கும் தாத்தா ஒரு ஜொள்ளர். வயசுப்பெண்ணிடம் ‘என்னைக் கட்டிக்கறியா?’ என்று கேட்டு அறை வாங்குகிறார். அதைப் பார்த்துச் சிரிப்பதற்காக ஒரு வெட்டிக் கூட்டம் அங்கே உட்கார்ந்திருக்கிறது.
அவரிடம் போய் செம்பட்டை தன்னுடைய திருமணத்தைப் பற்றிச் சொல்கிறான். ‘உன் பொண்டாட்டிக்கு மொதோ ராத்திரியில மொதோ ஆசிர்வாதம் நான்தான் செய்வேன். சம்மதமா?’ என்கிறார் சபலிஸ்ட் தாத்தா. விவரம் புரியாத செம்பட்டை ‘ஆகட்டுமுங்க’ என்கிறான். வெட்டிக் கூட்டம் விழுந்து விழுந்து சிரிக்கிறது. இவன் திருதிருவென்று விழித்தபடி விலகிச் செல்கிறான்.
அப்போதும் அவனுக்கு விஷயம் புரியவில்லை. ‘(மனைவியை அழைத்துக்கொண்டு) நெசமாக வருவேங்க, வயசான மனுஷங்க, வாயார மனசார வாழ்த்தணும் நீங்க’ என்று பாடியபடி செல்கிறான்.
அடுத்து வரும் பயில்வானும் ஒரு சுவாரஸ்யமான பாத்திரம்தான். அவருக்கு ஏற்கெனவே செம்பட்டையின் திருமணத்தைப்பற்றித் தெரிந்திருக்கிறது. அவனிடமே முந்திரியும் பாதாமும் பிஸ்தாவும் திராட்சையும் வாங்கிவரச்சொல்லிப் பரிசளிக்கிறார். ‘இதையெல்லாம் சாப்பிட்டு உடம்பைத் தேத்திக்கோ’ என்கிறார்.
வழக்கம்போல், செம்பட்டை விழிக்கிறான். ‘எதுக்குங்க? நான் என்ன குஸ்தியா பிடிக்கப்போறேன்?’ என்கிறான்.
’குஸ்தி ரொம்ப சுலபம். இது அப்படியில்லை’ என்று கண்ணடிக்கிறார் பயில்வான். செம்பட்டை இதையும் பாடியபடி சேலத்தை நோக்கி நடக்கிறான்.
சேலம்? பின்னாளில் ‘செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே, சேல உடுத்தத் தயங்கறியே’ என்று பாடி அருளிய மிஸ்டர் சின்ராசுவின் வண்டிச்சோலைதானா இது? சேலம் அருகே எங்கே இருக்கிறது? அடுத்தமுறை அந்தப் பக்கம் போகும்போது விசாரிக்கவேண்டும்.
இன்னொரு சந்தேகம், பயில்வான் ’ஏழு தோலானுக்கு பாதாமும் பிஸ்தாவும்’ என்கிறாரே. அதென்ன தோலான்? எடை அளவா? அல்லது அந்தக் காலக் கரன்ஸியா? (Update: ’தோலா’ புதிருக்கு விடை இங்கே: http://minnalvarigal.blogspot.com/2011/09/blog-post.html )
நிறைவாக, அதிமுக்கியமான கேள்வி, செம்பட்டைக்குக் கல்யாணம் ஆச்சா, இல்லையா? அந்த மோர்ப்பந்தல் தாத்தாவுக்கு?
***
என். சொக்கன் …
21 09 2011
உருகிய கிளி(கள்)
Posted September 17, 2011
on:- In: Ilayaraja | Imagination | Music | Poetry | Vairamuthu
- 19 Comments
இன்றைய Random பாடல், ’ஒரு கிளி உருகுது, உரிமையில் பழகுது, ஓ மைனா, மைனா.’ (படம்: ஆனந்தக் கும்மி, இசை: இளையராஜா, எழுதியவர்: வைரமுத்து)
இந்தப் படத்தை நான் பார்த்ததில்லை. யார் நடித்தது, என்ன கதை என்று எந்தத் தகவலும் தெரியாது. ஆனால் இந்தப் பாட்டின்மீது படுமோசமான மயக்கம் உண்டு. இதுவரை கிட்டத்தட்ட ஐநூறு தடவையாவது கேட்டிருப்பேன். ஒருமுறைகூட ‘ஒன்ஸ்மோர்’ கேட்காமல் அடுத்த பாடலுக்குச் சென்றது கிடையாது.
பாடலின் தொடக்கத்தில் வருகிற முன்னிசையிலேயே ராஜ வைத்தியம் ஆரம்பமாகிவிடுகிறது. கொஞ்சம்போல் ‘பாடும் பறவைகள்’ படத்தில் வரும் ‘கீரவாணி’ பாடலின் முன்னிசையை நினைவுபடுத்தும். அந்த ராகமாகக்கூட இருக்கலாம். கண்டுபிடிக்குமளவு எனக்கு ஞானமில்லை.
எஸ். ஜானகி, எஸ். பி. ஷைலஜா கொஞ்சம் வித்தியாசமான கூட்டணிதான். யார் இந்த இரண்டு பெண்கள்? பாடல் வரிகளை வைத்துப் பார்க்கும்போது அவர்கள் கிராமத்திலோ ஒரு மலைப் பிரதேசத்திலோ வளர்ந்த தோழிகள் என்று தோன்றுகிறது. ராஜா பயன்படுத்தியிருக்கும் தாளக் கட்டமைப்பும் இடையிசையும் இதை உறுதிசெய்வதுபோலவே இருக்கிறது.
ஆனால் ‘உரிமையில் பழகுது’ என்று அவர்கள் பாடுவது என்னமாதிரியான உரிமை? ‘இருமனம் இணையுது, இரு கிளி தழுவுது’ என்றெல்லாம் தோழிகள் பாடுவதுபோல் கேட்டதில்லையே? ஒருவேளை தோழி #1 ஒருவனைக் காதலிக்க அவர்களுடைய ரகசியத்தைத் தெரிந்துகொண்ட தோழி #2 அவளைக் கிண்டலடித்துப் பாடுகிறாளோ?
பல்லவி தாண்டிச் சரணம் வந்ததும் முதல் வரி, ‘நிலவெரியும் இரவுகளில் மணல்வெளியில் சடுகுடுதான்’. கற்பனை செய்துபார்க்கச் சுகமான காட்சி.
அடுத்து வரும் ‘கிளிஞ்சல்களே உலை அரிசி’ என்பதும் அழகான வரிதான். ஆனால் எனக்கு அதன் அர்த்தம் சரிவரப் புரிந்ததில்லை. சின்னப் பிள்ளைகள் சொப்பு (அல்லது கொஞ்சம் modernஆகச் சொல்வதென்றால் Kitchen Set) வைத்து விளையாடுவதுபோல் கிளிஞ்சல்களை வைத்துச் சமையல் விளையாட்டா? அப்போது அது ‘கிளிஞ்சல்களில் உலை அரிசி’ என்றல்லவா இருக்கவேண்டும்? ஒருவேளை கிளிஞ்சலையே உலை அரிசியாகச் சமைத்துச் சாப்பிடுவதா? அதன்மூலம் ‘வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாகளா’ ரேஞ்சுக்கு வெள்ளை நிறம் கிடைக்கும் என்பது உட்பொருளா? குறிஞ்சி மலை நிலத்தில் நெய்தல் கிளிஞ்சல் எப்படி வந்தது?
இந்தப் பாடலின் இரண்டாவது சரணத்துக்கு முன்பாக வரும் இடையிசை மிகவும் அற்புதமானது. மிக எளிய வாத்தியங்களின்மூலம் ஒரு ஊர்கோலம்மாதிரியான காட்சியைக் கொண்டுவருவார் ராஜா. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், கார், பஸ் மாதிரியான தொடர்ச்சியான பயணமாக இல்லாமல், பல்லாக்குபோல், அல்லது ஊஞ்சல்போல் ஆடி அசைந்து செல்லும் ஊர்வலம் – ‘இலைகளிலும்… கிளைகளிலும்… ஓ மைனா… ஓ மைனா’ என்று தொடங்கும் சரணத்தின் ஒவ்வொரு வரியும்கூட இந்தப் பல்லாக்கு அசைவைப் பார்க்கமுடியும்.
முத்தாய்ப்பாக, ‘மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது’ என்ற வரிகள் இதனை மீண்டும் ஒரு ‘தோழிமார் கதை’யாகவே கொண்டுவந்து நிறுத்துகிறது. அதே பெயரில் அமைந்த வைரமுத்துவின் கவிதை ஒன்றையும் நினைவுபடுத்துகிறது. அதிலிருந்து பொருத்தமான சில வரிகள்மட்டும் இங்கே. மீதத்தைக் கீழே உள்ள வீடியோவில் கவிஞர் குரலிலேயே கேட்கலாம்:
ஆத்தோரம் பூத்த மரம், ஆனை அடங்கும் மரம்
கிளையெல்லாம் கூடு கட்டிக் கிளி அடையும் புங்க மரம்
புங்க மரத்தடியில், பூ விழுந்த மணல் வெளியில்,
பேன் பார்த்த சிறு வயசு, பெண்ணே நினைவிருக்கா?
*
ஒண்ணா வளர்ந்தோம், ஒரு தட்டில் சோறு தின்னோம்,
பிரியாதிருக்க ஒரு பெரிய வழி யோசிச்சோம்.
ஒரு புருஷங்கட்டி, ஒரு வீட்டில் குடி இருந்து
சக்களத்தியா வாழ சம்மதிச்சோம் நெனைவிருக்கா?
பின்குறிப்பு: இந்தப் பாடலை எத்தனையோ முறை கேட்டும்கூட, இதன் காட்சியமைப்பை வீடியோவாகப் பார்க்கவேண்டும் என்று இதுவரை தோன்றியதில்லை. பாடலைக் கேட்கும்போது, வரிகளை யோசிக்கும்போது கிடைக்கும் மனப் பிம்பம் அதனால் படுமோசமாகக் குலைந்துபோய்விடக்கூடும் என்பது என் அனுபவம். ஆகவே, ஒருவேளை உங்களிடம் இந்தப் பாடலின் யூட்யூப் வீடியோ இருந்தால், கொடுத்துவிடாதீர்கள்!
***
என். சொக்கன் …
17 09 2011
சாப்பாட்டுப் பயணங்கள்
Posted September 14, 2011
on:- In: Books | Food | Kumbakonam | Mannargudi | Travel | Uncategorized
- 30 Comments
’சமஸ்’ எழுதிய ‘சாப்பாட்டு புராணம்’ என்ற புத்தகத்தை நீங்கள் வாசித்திருக்கிறீர்களோ, தெரியாது. நான் மனப்பாடமே செய்திருக்கிறேன். தஞ்சை, சுற்றுவட்டாரங்களில் உள்ள அட்டகாசமான ‘சாப்பாட்டு’க் கடைகளைச் சுவாரஸ்யமான மொழியில் வர்ணனை செய்து அடையாளம் காட்டும் புத்தகம் அது.
‘சாப்பாட்டு புராண’த்தைப் படித்தபின்னர் அந்தப் பக்கம் பயணம் செல்வது என்றாலே இதில் உள்ள கடைகளை லிஸ்ட் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றாக டேஸ்ட் பார்ப்பது பழக்கமாகிவிட்டது. அநேகமாக ஒன்றுகூட சோடை போனதில்லை.
எனக்குத் தெரிந்து ‘சாப்பாட்டு புராணம்’ இப்போது அச்சில் இல்லை. என்னிடம் இருந்த பிரதியையும் யாரோ கடன் வாங்கிச் சென்றுவிட்டார்கள். ஆகவே சமீபத்திய பயணங்களின்போது சாப்பாட்டு அம்சங்கள் குறைந்துபோயின.
போன வாரம் ஒரு திருமணத்துக்காக மன்னார்குடிக்குக் கிளம்பினோம். அந்தச் செய்தியை ட்விட்டரில் அப்டேட் செய்தேன். நண்பர் சந்தோஷ் குரு பதில் எழுதி ‘கும்பகோணம், மன்னார்குடியில் இருக்கும் சாப்பாட்டு புராணக் கடைகளை விட்றாதீங்க’ என்றார்.
’எனக்கும் ஆசைதான். ஆனா எந்தெந்தக் கடைன்னு மறந்து போச்சே!’ என்றேன்.
’சாப்பாட்டு விஷயத்தில் இப்படி மனம் வருந்தலாமா?’ என்று நெகிழ்ந்த சந்தோஷ் குரு உடனடியாக அந்தக் கடைகளைப் பட்டியல் போட்டு ஈமெயிலில் அனுப்பிவைத்தார். திருமணம், கோயில் பயணங்களுக்கு நடுவே அவர் அனுப்பியவற்றில் ஐந்து கடைகளைமட்டும் நேரில் சென்று பார்க்கமுடிந்தது. அந்தக் குறிப்புகள் இங்கே.
1. நீடாமங்கலம் – பால் திரட்டு
மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய ஊர் நீடாமங்கலம். ‘வீரா’ படம் பார்த்தவர்களுக்கு இந்த ஊர் நன்றாக நினைவிருக்கும்
நீடாமங்கலம் மேல ராஜ வீதியில் உள்ள ’கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம்’ அலுவலகத்தில் மாலை 4 மணிக்குமேல் கிடைக்கும் என்று சமஸ் குறிப்பிட்டிருந்தார். நாலே முக்கால் மணிக்கு அந்தப் பக்கம் சென்று விசாரித்தோம். உடைந்து விழும் நிலையில் இருந்த ஒரு கட்டடத்தைக் காண்பித்து ‘ பின்னாடி போங்க’ என்றார்கள். போனோம். மாடு இருந்தது. பால் இருந்தது. ஆனால் பால் திரட்டு இல்லை.
விடுவோமா? நமக்குதான் நாக்கு நீளமாச்சே. அங்கிருந்த ஒருவரிடம் விசாரித்தோம். எங்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டு ‘இப்பல்லாம் பாலுக்கு ரொம்ப டிமாண்ட் ஆகிடுச்சுங்க, அதனால பால் திரட்டு போடறதை நிறுத்திட்டோம்’ என்றார்.
’வேற எங்கேயாவது கிடைக்குமா?’
‘சான்ஸே இல்லை!’
ஓகே. முதல் விக்கெட் டவுன்!
2. மன்னார்குடி – குஞ்சான் செட்டி கடை
மன்னார்குடி கடைத்தெருவில் இருக்கும் தக்கனூண்டு கடை. இங்கே மிக்ஸர், காராபூந்தி, இன்னபிற வீட்டுப் பலகாரங்கள் பிரபலமாம்.
அநேகமாக எல்லா ஆட்டோ டிரைவர்களுக்கும் குஞ்சான் செட்டி கடையைத் தெரிந்திருந்தது. பேருந்து நிலையத்திலிருந்து சற்றுத் தொலைவில் வலதுபக்கம் திரும்பினால் கடைத்தெரு. அங்கே இரண்டு நிமிடம் நடந்தால் வலதுபக்கம் இந்தக் கூரை வேய்ந்த சிறிய கடை வருகிறது. கொஞ்சம் அசந்தால் மிஸ் செய்துவிடுவீர்கள்.
கடை வாசலில் சின்னக் கூட்டம். எட்டிப் பார்த்தபோது குவித்த பலகாரங்களுக்கு நடுவே சம்மணமிட்டிருந்த ஒருவர் மும்முரமாக எடை போட்டுப் பொட்டலம் கட்டிக்கொண்டிருந்தார்.
இங்கே அதிக variety இல்லை. ஆனால் அநேகமாக எல்லாப் பலகாரங்களும் சூப்பர் சுவை. குறிப்பாகக் காராபூந்தி, மைசூர்பாக்.
விலையும் மலிவுதான் (கிலோ ரூ 100/-). நீங்கள் ஐந்து ரூபாய்க்குக் கேட்டாலும் பொட்டலம் கட்டித் தருகிறார்கள். நான்கு நாள்வரை வைத்துச் சாப்பிடலாம் என்கிறார்கள்.
3. மன்னார்குடி – டெல்லி ஸ்வீட்ஸ்
குஞ்சான் செட்டி கடையிலிருந்து அரை கிலோமீட்டர் நடந்தால் இடதுபக்கம் டெல்லி ஸ்வீட்ஸ் வருகிறது. இதுவும் சின்னக் கடைதான். உன்னிப்பாகப் பார்த்தால்தான் கண்ணில் படும்.
According to ‘சாப்பாட்டு புராணம்’, இங்கே ஃபேமஸான ஐட்டம், முந்திரி அல்வா! நாங்கள் இங்கே நின்றிருந்த 10 நிமிடத்துக்குள் குறைந்தது ரெண்டு கிலோ முந்திரி அல்வா விற்றிருக்கும். இன்னும் பல பெரிய டப்பாக்களில் சுடச்சுட அல்வா வந்தபடி இருந்தது.
முந்திரி என்றவுடன் என் மனைவி பயந்துவிட்டார். ‘அத்தனையும் கெட்ட கொழுப்பு, கலோரி-ரிச், உடம்புக்குக் கேடு, வாங்காதே’ என்றார்.
‘சரி, ஐம்பது க்ராம்மட்டும் வாங்கறேன், சும்மா டேஸ்ட் பார்ப்போம்’ என்றேன் மனமில்லாமல்.
வாங்கினோம். டேஸ்ட் பார்த்தோம். அது முந்திரி அல்வா இல்லை. வழமையான அல்வா, நெய்கூட இல்லை, எண்ணெயில் செய்ததுதான். ஆங்காங்கே முந்திரிகள் தென்பட்டன. அவ்வளவுதான்.
ஆனால் சுவை அபாரம், இன்னும் கொஞ்சம் வாங்கிக்கொண்டோம் – இதுவும் விலை மலிவுதான், கிலோ ரூ 120/-
4. கும்பகோணம் – முராரி ஸ்வீட்ஸ்
மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் திரும்பி ரயில் ஏறுமுன் முராரி ஸ்வீட்ஸைத் தேடிச் சென்றோம். பெரிய கடைவீதியில் முதலாவதாக இருக்கிறது. எல்லா ஆட்டோ டிரைவர்களுக்கும் தெரிந்திருக்கிறது. நேராகக் கொண்டு இறக்கிவிடுகிறார்கள்.
முராரி ஸ்வீட்ஸ் நூற்றாண்டைத் தொடப்போகும் நிறுவனம். அவர்களது வளர்ச்சியைச் சிறு ஃபோட்டோ கண்காட்சிபோல் வைத்துள்ளார்கள். கருப்பு வெள்ளைப் படங்களைப் பார்க்க செம ஜாலியாக இருக்கிறது – 70 வருடம் முன்னால் முராரி ஸ்வீட்ஸ் இன்றைய குஞ்சான் செட்டி கடைமாதிரிதான் இருந்திருக்கிறது!
முன்பு எப்படியோ, இப்போதைய முராரி ஸ்வீட்ஸில் வட இந்திய ஸ்வீட்ஸ் பிரபலம். குறிப்பாக, ’பாஸந்தி’தான் சாப்பாட்டு புராணத்தில் இடம் பெற்ற ஸ்பெஷல் இனிப்பு.
வழக்கமான பாஸந்திகளில் இனிப்பு ஓவராகக் கடுப்பேற்றும். ஆனால் இங்கே ஏதோ டயட் பாஸந்திபோல மெலிதான இனிப்பு, அட்டகாசமான சுவை, தவறவிடாதீர்கள் (விலை? மறந்துபோச்சு!)
5. கும்பகோணம் – ரோஜா மார்க் இனிப்புகள்
கடைசியாக, கும்பகோணத்தின் ஸ்பெஷல் கமர்கட், பொரி உருண்டை, கடலை உருண்டை போன்றவை ‘ரோஜா மார்க்’ நிறுவனத்தில் வாங்கவேண்டும் என்று ‘சாப்பாட்டு புராணம்’ அருளியிருந்தது. தேடிச் சென்றோம்.
பிரம்மன் கோயில் தெருவில் ஒரு சின்ன ஓட்டு வீடு. அதுதான் ரோஜா மார்க் தயாரிப்பு நிறுவனம். அநேகமாக ‘ஜென்டில் மேன்’ படத்தில் வரும் அப்பள ஃபேக்டரி மாதிரி இருக்கும் என்று நினைக்கிறேன்.
எங்களுடைய நேரம், ரோஜா மார்க் ஃபேக்டரிக்கு ஞாயிற்றுக்கிழமை லீவாம். ‘பெங்களூரிலிருந்து இதுக்காகவே வர்றோம்’ என்று ஐஸ் வைத்தும்கூட கதவைத் திறக்க மறுத்துவிட்டார்கள். ஆகவே ஃபோட்டோமட்டும் எடுத்துக்கொண்டு திரும்பினோம்.
ஆக, ஐந்துக்கு மூன்று பழுதில்லை. நன்றி சந்தோஷ் குரு. நன்றி சமஸ்
***
என். சொக்கன் …
14 09 2011
அரை மாத்திரை அதிகம்
Posted September 13, 2011
on:- In: A. R. Rahman | Art | நவீன அபத்தங்கள் | Ilayaraja | Importance | Jency | K J Yesudoss | Language | Learning | Music | Perfection | Pulambal | Sujatha | Uncategorized | Unni Krishnan | Vairamuthu
- 38 Comments
இன்றைய Random பாட்டு, ‘இரு பறவைகள் மலை முழுவதும்’. நிறம் மாறாத பூக்கள்’ என்ற படத்தில் ராஜா இசையில் கண்ணதாசன் எழுதி ஜென்ஸி பாடியது.
ஜென்ஸி எனக்கு ரொம்பப் பிடித்த பாடகி. ராஜாவின் இசையில் மிக நல்ல பாடல்களைமட்டுமே பாடிய அதிர்ஷ்டசாலிகளில் அவர் ஒருவர். (மற்ற இருவர் பி. ஜெயச்சந்திரன், ஷ்ரேயா கோஷல்) மிகக் குறைவான எண்ணிக்கையில் பாடினாலும், தடாலென்று பாடுவதையே நிறுத்திப் பல வருடங்கள் ஆகிவிட்டாலும் தமிழ்த் திரையிசையில் அவருக்கென்று ஒரு நிரந்தர ரசிகர் வட்டம் இருக்கிறது – கிட்டத்தட்ட எழுத்துலகில் ஜெயகாந்தன்மாதிரி என்று சொல்லலாம்.
ஆனால் ஜென்ஸியிடம் ஒரே பிரச்னை, அவருக்கு ர, ற வித்தியாசம் என்றைக்குமே புரிந்ததில்லை. இரண்டையும் இஷ்டப்படி மாற்றிப் பாடுவார். காது வலிக்கும்.
இன்னொரு வேடிக்கை, இடையின ர, வல்லின ற இரண்டிற்கும் தலா அரை மாத்திரை கூடுதலாகச் சேர்த்து வேறொரு ர, ற கூட்டணியை இவர் கண்டுபிடித்துவைத்திருக்கிறார். உதாரணமாக இந்த வீடியோவில் உள்ள ’இரு பறவைகள் மலை முழுவதும்’ பாட்டைக் கேட்டுவிட்டு வாருங்கள் (எச்சரிக்கை: வீடியோவைப் பார்க்கவேண்டாம், கண் வலிக்கும்!)
முதல் வரியிலேயே ‘இரு’ ஓகே, ஆனால் ‘பறவைகள்’ என்று பாடும்போது வேண்டுமென்றே அழுத்தம் கூடி ‘ற’னாவுக்கு அரை மாத்திரை எகிறிவிடுகிறது.
ஆனால் ரெண்டு வார்த்தை தள்ளி ‘பறந்தன’ என்று பாடும்போது ‘ற’ சரியாக விழுகிறது. பிழையில்லை.
பல்லவி, அனுபல்லவி முடிந்து சரணம் தொடங்குகையில் ‘சாரல்’ என்று ஒரு வார்த்தை. அங்கே ‘ர’னாவுக்கு அரை மாத்திரை கூடுகிறது – அதாவது, ஜென்ஸி ‘சாரல்’ என்று சரியாகவும் பாடுவதில்லை ‘சாறல்’ என்று தவறாகவும் பாடுவதில்லை, இரண்டுக்கும் நடுவே ஒரு இடைவல்லின ‘ர’வைப் பயன்படுத்துகிறார். இதுவும் சில இடங்களில்தான், இதே பாட்டில் வேறு பல இடங்களில் ‘ர’, ‘ற’ சரியாக ஒலிக்கிறது.
ஆக, ஜென்ஸிக்கு ர, ற வித்தியாசம் தெரியாமல் இல்லை. எங்கே எது வரவேண்டும் என்பதுதான் புரியவில்லை. ஆகவே randomஆக ஏதாவது ஒன்றைப் போட்டுப் பாடிவிடுகிறார். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அவருக்கு இந்த நுணுக்கமான வித்தியாசமெல்லாம் தானாகப் புரியும் என்று எதிர்பார்ப்பதும் தவறுதான்.
இன்னோர் உதாரணம், ‘ஜீன்ஸ்’ படத்தில் இருந்து ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும்’ என்ற பாட்டு. ரஹ்மான் இசையில் வைரமுத்து எழுதிய இந்தப் பாடலைப் பாடிய உன்னி கிருஷ்ணன், சுஜாதா இருவருக்குமே தமிழ் தாய்மொழி இல்லை (என்று நினைக்கிறேன்!)
இங்கே பல்லவியின் இரண்டாவது வரியில் உன்னி கிருஷ்ணன் ‘வன்னத்துப் பூச்சி’ என்று பாடுகிறார். அதே உன்னி கிருஷ்ணன் சில வரிகள் தள்ளி ‘கல் தோன்றி மண் தோன்றி’ என்று பாடும்போது ‘ண்’ சரியாக வருகிறது.
சுஜாதாமட்டும் சளைத்தவரா? பல்லவியில் ‘வாசமுல்ல பூ’, ‘துலி’ என்று தவறு செய்கிறார். ஆனால் அடுத்த வரியில் ‘மழை நீர்’ என்று மிகத் துல்லியமாகப் பாடுகிறார்.
ஆக, இங்கேயும் பாடகர்களுக்கு ந, ன, ண அல்லது ல, ள, ழ அல்லது ர, ற போன்றவற்றை வித்தியாசப்படுத்திச் சரியானமுறையில் உச்சரிக்கத்தெரியாமல் இல்லை. எங்கே ந, எங்கே ன, எங்கே ண என்பதில்தான் பிரச்னை.
இங்கே யார்மீது தப்பு? தமிழ் நன்கு உச்சரிக்கத் தெரிந்தவர்களைதான் பாடவைப்போம் என்று நினைக்காத இசையமைப்பாளர்கள்மீதா? ’குரல் நன்றாக இருந்தால் போதும், இப்படி ஒன்றிரண்டு சிறு பிழைகள் இருந்தால் பரவாயில்லை’ என்று அவர்கள் வாதிட்டால்?
ஒருவேளை, கவிஞர்கள் முன்வந்து தங்களுடைய வரிகள் சரியாக உச்சரிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டுமா? அவர்கள்தான் பாடல் பதிவின்போது பக்கத்தில் இருந்து பாடகர்களுக்கு உதவவேண்டுமோ? இதற்கும் பல உதாரணங்கள் இருக்கின்றன.
’இளமைக் காலங்கள்’ என்ற படத்தில் ‘ஈரமான ரோஜாவே’ என்ற பாட்டு. ராஜா இசை. வைரமுத்து எழுதியது. கே. ஜே. யேசுதாஸ் பாடியது.
அந்தப் பாடலில் ஒரு வரி, ‘தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து’. இதை யேசுதாஸ் ‘மூள்காது’ என்று பாடினாராம். பக்கத்தில் இருந்த வைரமுத்து திருத்தினாராம்.
ஆனால் அவர் எத்தனை முறை சொல்லியும் யேசுதாஸுக்கு ‘மூழ்காது’ என்று சரியாகப் பாட வரவில்லை. எரிச்சலாகிவிட்டார். ‘சாகும்வரை திருத்துவீங்களா?’ என்று வைரமுத்துமீது எரிந்து விழுந்தாராம்.
‘தமிழ் சாகாதவரை’ என்று வைரமுத்து பதில் சொன்னாராம்.
வைரமுத்துவின் கவித்துவ மிகைப்படுத்தலையும் மீறி, இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்திருக்கக்கூடும் என்று நம்பலாம். பின்னாளில் அதே வைரமுத்துவின் பாடல்களை உதித் நாராயண், சாதனா சர்கம் வகையறாக்கள் கைமா செய்து போட்டதும் சரித்திரம்.
எதார்த்தமாக யோசித்தால் ஒரு கவிஞர் தன்னுடைய வரிகள் பதிவாகும் இடங்களுக்கெல்லாம் போய் நின்று திருத்தம் சொல்லிக்கொண்டிருப்பது சாத்தியம் இல்லை. வேண்டுமானால் பாடல் பதிவானபின் கேட்டுப் பிழை திருத்தலாம்.
ஆனால் அதற்குள் பாடிய பாடகர் ஊர் போய்ச் சேர்ந்திருப்பார். இன்னொருமுறை அவரைக் கூப்பிட்டு அந்த ஒரு வார்த்தையைமட்டும் மாற்றுவது கஷ்டம், செலவு.
பேசாமல் ஒன்று செய்யலாம், தமிழ் உச்சரிப்பு நன்றாகத் தெரிந்த ஒருவரை இசையமைப்பாளர்கள் தங்களுடைய உதவியாளராக வைத்துக்கொள்ளலாம். நடிகர், நடிகைகளுக்கு வசனம் சொல்லித்தருவதுபோல் இவர்கள் பாடல் பதிவின்போது பாடகர்களுடைய உச்சரிப்பைத் திருத்தலாம்.
இன்னும் பெட்டர், பாட்டில் சத்தத்தை அதிகப்படுத்தி உச்சரிப்புக் கோளாறுகள் எவையும் வெளியே கேட்காதபடி செய்துவிடலாம். இப்போது அதைத்தான் அதிகம் செய்கிறார்கள்.
போகட்டும். ஒரு பழைய கதை சொல்லவா? பிளாக் அண்ட் வொய்ட் காலத்துக் கதை.
அந்த இளம் பெண் பாடல் பதிவுக்காகக் காத்திருந்தார்.
இன்னும் இசையமைப்பாளர் வரவில்லை. வாத்தியக்காரர்களைக்கூடக் காணோம். ஒருவேளை, இன்றைக்குப் பாடல் எதுவும் பதிவாகவில்லையோ?
அவர் சந்தேகமாக எழுந்து நின்றார். ஆனால் யாரை விசாரிப்பது என்று புரியவில்லை.
அந்தப் பெண்ணின் பெயர் சுசீலா. சொந்த ஊர் ஆந்திரா. பெரிய திரைப்படப் பின்னணிப் பாடகியாகிற கனவோடு தமிழகத்துக்கு வந்திருந்தார்.
பதினைந்து வயதிலேயே அவருக்கு முதல் பாடல் சான்ஸ் கிடைத்துவிட்டது. அது ஒரு சுவாரஸ்யமான கதை.
சின்னஞ்சிறுமியாகத் துள்ளி விளையாடவேண்டிய பருவத்தில், சுசீலாவுக்குப் பாட்டுக் கற்றுக்கொடுக்கிறேன் என்று உட்காரவைத்தார் அப்பா. ஒவ்வொரு பாடமாக வற்புறுத்திச் சொல்லித்தந்து பல மணி நேரம் சாதகம் செய்தால்தான் ஆச்சு என்று அவர் பிடிவாதம் பிடிக்க, குழந்தை சுசீலாவுக்கு அழுகைதான் வந்தது.
அப்போதும், அப்பா விடமாட்டார், ‘முதல்ல பாட்டை ஒழுங்காப் பாடு, அப்புறம் உன் இஷ்டம்போல எவ்ளோ நேரம் வேணும்ன்னாலும் அழுதுக்கோ’ என்றுதான் சொல்வார்.
இப்படி அப்பாவின் கட்டாயத்தால் பாட்டுக் கற்க ஆரம்பித்த சுசீலா, விரைவில் இசைப் பிரியையாக மாறிப்போனார். பள்ளிப் பாடங்களைவிட, கலைவிழா மேடைகள்தான் அவரை ஈர்த்தன. பரீட்சைகளில் நல்ல மார்க் வாங்குகிறாரோ இல்லையோ, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பிரமாதமாகப் பாடிக் கைதட்டல் வாங்கத் தவறியதில்லை.
ஒருகட்டத்தில், படிப்பு தனி, பாடல் தனி என்று அவர் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. இசைக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். மேடைக் கச்சேரிகள், ரேடியோ நிகழ்ச்சிகள் என்று ரொம்ப பிஸியாகிவிட்டார்.
சென்னை வானொலியில் அவர் அடிக்கடி கலந்துகொண்டு பாடிய ஒரு நிகழ்ச்சி ‘பாப்பா மலர்’. அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ‘வானொலி அண்ணா’வுக்கு சுசீலாவின் குரல் மிகவும் பிடித்துப்போய்விட்டது.
ஒருநாள், வானொலி அண்ணா சுசீலா வீட்டுக்கு நேரில் வந்தார். அவருடைய தந்தையைச் சந்தித்துப் பேசினார், ‘உங்க மகளுக்கு இசைத்துறையில பிரமாதமான எதிர்காலம் இருக்கு, நீங்க அவளைச் சினிமாவில பாடவைக்கணும்’ என்றார்.
சுசீலாவின் அப்பாவுக்குப் பாரம்பரிய இசையில்தான் ஆர்வம். ’சினிமாவா? அதெல்லாம் நமக்கு வேணாம்’ என்று தட்டிக்கழித்துவிட்டார்.
பாவம் சுசீலா, திரைப்படங்களில் பாடவேண்டும் என்கிற ஆசை இருந்தும், அப்பாவுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அந்த விருப்பத்தைத் தன் மனத்துக்குள் விழுங்கிக்கொண்டார். மற்ற இசை வாய்ப்புகளில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
அப்போது, ‘பெண்டியால நாகேஸ்வர ராவ்’ என்று ஒரு பிரபலமான இசையமைப்பாளர் தன்னுடைய படத்தில் பாடுவதற்குப் புதுக் குரல்களைத் தேடிக்கொண்டிருந்தார். இதற்காக அவர் சென்ற இடம், அகில இந்திய வானொலி.
’உங்க நிகழ்ச்சிகள்ல ரெகுலராப் பாடற திறமைசாலிப் பெண்கள் இருப்பாங்களே, அதில நல்ல குரல்களா நாலஞ்சு பேரைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்க. அவங்களுக்குச் சினிமாவில பாட விருப்பம் இருந்தா என்கிட்ட அனுப்பிவைங்க.’
உடனடியாக, வானொலி நிலையம் ஐந்து பெண்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பியது. அதில் நான்கு பேர் குரல் தேர்வில் நிராகரிக்கப்பட்டார்கள். கடைசியாக, சுசீலாவைமட்டும் தேர்வு செய்தார் பெண்டியால நாகேஸ்வர ராவ்.
ஆனால், அப்பா? அவரது சம்மதம் இல்லாமல் சுசீலா சினிமாவில் பாடுவது எப்படி?
நல்லவேளையாக, அவருடைய அப்பா ஒரு படி இறங்கிவந்தார். பதினைந்து வயது சுசீலா திரைப்படப் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.
சுசீலாவின் வசீகரமான புதுக் குரல் பலதரப்பட்ட ரசிகர்களை ஈர்த்தது. அவர்களில் ஒருவர், ஏவிஎம் நிறுவன அதிபர் மெய்யப்பன்.
அதன்பிறகு, ஏவிஎம் தயாரிக்கும் படங்களில் தொடர்ந்து பாடுகிற வாய்ப்பு சுசீலாவுக்குக் கிடைத்தது. அவரும் இந்தப் பாடல்களில் தனது முழுத் திறமையை வெளிக்காட்டினார்.
சுசீலாவின் குரல் தனித்துவமானதுதான். எல்லோரையும் கவரக்கூடியதுதான். ஆனாலும், அவருக்கென்று ஒரு நல்ல ‘ப்ரேக்’ அமையவில்லை. அதற்கு என்ன காரணம் என்று யாருக்கும் புரியவில்லை.
யோசனையோடு தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தார் சுசீலா, ‘இன்னிக்கு ரெகார்டிங் இருக்கா, இல்லையா?’
திடீரென்று அந்த அறையின் கதவு திறந்தது. தயாரிப்பாளர் ஏவிஎம் மெய்யப்பனும் இன்னொருவரும் உள்ளே நுழைந்தார்கள்.
அவர்களைப் பார்த்ததும் சட்டென்று எழுந்து நின்றார் சுசீலா, ‘வணக்கம் சார்.’
‘வணக்கம்மா’ என்றார் மெய்யப்பன், ‘இவர் யார் தெரியுதா?’
சுசீலா அவரை இதற்குமுன்னால் பார்த்த நினைவில்லை. மறுப்பாகத் தலையசைத்தார்.
‘இவர் பேரு லஷ்மி நாராயண். இனிமே இவர்தான் உனக்குத் தமிழ் வாத்தியார்.’
சுசீலாவுக்குத் திகைப்பு, ‘வாத்தியாரா? நான் என்ன சின்னப் பிள்ளையா, இவரிடம் பாடம் கற்றுக்கொள்ள?’
அவருடைய குழப்பம் புரிந்ததுபோல் சிரித்தார் மெய்யப்பன், ‘நீ ஒவ்வொரு பாட்டையும் கஷ்டப்பட்டு நல்லாதான் பாடறேம்மா. ஆனா, சில வார்த்தைகள் தப்பா வருது, அசலூர் வாடை அடிக்குது, கேட்கும்போதே மொழி தெரியாத யாரோ பாடறாங்க-ன்னு புரிஞ்சுடுது. மக்கள் அதை மனசார ஏத்துக்கமாட்டேங்கறாங்க!’
‘நீயோ தெலுங்குப் பொண்ணு. உனக்குத் தமிழ் உச்சரிப்பு சரியா வரலைன்னா அது நிச்சயமா உன்னோட தப்பில்லை. அதனாலதான் ஒரு நல்ல தமிழ் வாத்தியாராப் பார்த்து ஏற்பாடு செஞ்சிருக்கேன். உனக்குக் கஷ்டமா இருக்கிற வார்த்தைகளுக்கெல்லாம் இவர்கிட்ட சரியான உச்சரிப்புகளைக் கத்துகிட்டு நல்லாப் பாடிப் ப்ராக்டீஸ் எடுத்துக்கோம்மா. நீ ரொம்ப நல்லா வருவே’ என்று ஆசிர்வதித்தார் ஏவிஎம் மெய்யப்பன்.
இருபது வயதில் ஒரு வாத்தியார் உதவியுடன் தமிழ் உச்சரிப்புப் பழக ஆரம்பித்த சுசீலா, படிப்படியாகத் தன்னுடைய தவறுகளைத் திருத்திக்கொண்டார். ஒவ்வொரு வார்த்தையையும் மிகச் சரியாக உச்சரிக்கப் பழகினார், அதன்பிறகு வந்த அவரது பாடல்களில் இந்த மெருகு ஜொலித்தது. தமிழக மக்களும் அவருடைய திறமையைக் கொண்டாட ஆரம்பித்தார்கள், தங்கள் மனத்துக்கு நெருக்கமாக உட்காரவைத்துக் கௌரவித்தார்கள்.
‘இசையரசி’ என்று தமிழர்களால் பெருமையோடு அழைக்கப்படும் பாடகி பி. சுசீலாவின் தமிழ்ப் பாடல்களை யார் கேட்டாலும், அவரைத் தெலுங்கு தேசத்திலிருந்து வந்தவராக நினைக்கவேமாட்டார்கள். அந்த உச்சரிப்புத் துல்லியமும், பாடல் வரிகளுக்கு ஏற்ற உணர்ச்சிகளைக் கச்சிதமாகக் கொட்டும் குரலும் அவர் எங்கிருந்தோ வாங்கிவந்த வரம் அல்ல, முனைந்து செதுக்கியது.
அந்த அக்கறை, அர்ப்பணிப்பு, தொழில் பக்தியும் சும்மா வராது.
***
என். சொக்கன் …
13 09 2011
Update:
எல்லாக் குறில்களுக்கும் மாத்திரை அளவு சமம்தான், வல்லினம் மெல்லினம் இடையினம் உச்சரிப்பில்மட்டுமே மாறுபடும். நான் இங்கே வித்தியாசம் காட்ட மாத்திரை என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது பெரிய தவறு. மன்னிக்கவும். சுட்டிக்காட்டிய நண்பர்கள் குமரன், சுப இராமனாதன் இருவருக்கும் நன்றி.
சேர்த்தலும் பிரித்தலும்
Posted September 8, 2011
on:- In: Boredom | Ilayaraja | Music | Uncategorized | Walk
- 24 Comments
மதியம் சாப்பிடச் செல்லும்போது வழக்கமான ராஜா கலெக்ஷனைக் காதில் ஓடவிட்டிருந்தேன். அதில் ஒரு பாட்டு, தர்மதுரை படத்திலிருந்து ‘சந்தைக்கு வந்த கிளி’.
இதுவரை இந்தப் பாடலைக் குறைந்தபட்சம் நூறு முறையாவது கேட்டிருப்பேன். ஆனால் இந்தமுறை அனுபல்லவியில் வரும் ‘குத்தாலத்து மானே, கொத்துப் பூ வாடிடும் தேனே’ என்ற வரி கொஞ்சம் உறுத்தியது.
அதென்ன ‘பூ வாடிடும் தேனே’? பூ வாடினால் அதில் ஏது தேன்?
அநேகமாக அந்த வரி ‘பூ ஆடிடும் தேனே’ என்றுதான் இருந்திருக்கவேண்டும். பூவில் ஊறுகிற தேன் என்ற பொருளில். புணர்ச்சி விதிப்படி அது ‘பூவாடிடும் தேனே’ என்ற மாறியிருக்கும், ட்யூனிலும் அழகாக உட்கார்ந்திருக்கும். அதனால் அர்த்தம் கொஞ்சம் மாறுவதைப் பாடியவரோ அவருக்கு உதவியவரோ கவனிக்காமல் விட்டுவிட்டார்கள்.
இதேமாதிரி இன்னோர் உதாரணம், ’ராஜகுமாரன்’ படத்தில் வருகிற ‘என்னவென்று சொல்வதம்மா’ என்ற பாடலில் உண்டு. அந்த வரி:
அந்தி மஞ்சள் நிறத்தவளை,
என் நெஞ்சில் நிலைத்தவளை
’மாலை நேர வானத்தின் மஞ்சள் நிறம் கொண்டவள், என் மனத்தில் நிலைத்தவள்’ என்கிற நல்ல அர்த்தத்தில் எழுதப்பட்ட இந்த வரிகள் மெட்டில் உட்காரும்போது ‘நிறத் தவளை’, ‘நிலைத் தவளை’ என்று ஒரு சின்ன pause உடன் விழுந்திருக்கும். பாடகரும் அப்படியே அட்சரசுத்தமாகப் பாடிவைத்திருப்பார். இதனால் சம்பந்தப்பட்ட கதாநாயகி மஞ்சள் கலர் தவளை, நெஞ்சில் உட்கார்ந்திருக்கும் தவளை என்று ஒரு விபரீத அர்த்தம் வந்துவிடுகிறது.
’இதையெல்லாம் யாரு உன்னை வேலை மெனக்கெட்டுக் கவனிக்கச் சொன்னாங்க?’ என்கிறீர்களா? அதானே!
***
என். சொக்கன் …
08 09 2011
தனிக் காவிரி
Posted September 5, 2011
on:- In: Change | Characters | Classroom | Coimbatore | Confidence | Expectation | Learning | Life | Memories | Men | Peer Pressure | People | Positive | Rules | Statistics | Students | Uncategorized | Women
- 13 Comments
கல்லூரியில் நான் படித்தது Production Engineering. அது மெக்கானிகல் எஞ்சினியரிங்கின் உடன்பிறவாச் சகோதரி.
சும்மா ஓர் உலக (தமிழக 😉 ) வழக்கம் கருதியே ‘சகோதரி’ எனும் வார்த்தையைப் பயன்படுத்தினேன், மற்றபடி இவ்விரு எஞ்சினியரிங் பிரிவுகளுமே பெரும்பாலும் சேவல் பண்ணைகள்தாம், பெண் வாசனை மிக அபூர்வம்.
எங்கள் வகுப்பில் 30 பையன்கள், 2 பெண்கள், பக்கத்து மெக்கானிக்கல் வகுப்பில் 60 பையன்கள், ஒரே ஒரு பெண். இந்தப் பொருந்தா விகிதத்துக்குக் காரணம், இயந்திரங்களுடன் போராடப் பழக்கும் இந்த சப்ஜெக்ட்கள் பெண்களுக்கு ஏற்றவை அல்ல என்கிற நம்பிக்கைதான்.
அப்போது எங்கள் கல்லூரியில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுப்பவர்களுக்கு சிவில், ப்ரொடக்ஷன் துறைகள் ‘ஒதுக்க’ப்படும். பையன்களே பெரும்பாலும் அங்கே விருப்பமில்லாமல்தான் வந்து விழுந்தோம் எனும்போது, அந்த இரு பெண்களின் நிலை குறித்துப் பரிதாபப்பட்டவர்களே அதிகம்.
மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட் அப்படியில்லை. அங்கே சேர்ந்த எல்லோரும் சுய விருப்பத்தின்பேரில் இதைத் தேர்ந்தெடுத்துப் படித்து நிறைய மார்க் வாங்கி வந்தவர்கள், அந்த ஒற்றைப் பெண் காவிரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உள்பட.
இதனால் பலர் காவிரியைப் பார்த்து வியந்தார்கள். சிலர் பரிதாபப்பட்டார்கள். ‘பெண்களுக்குப் பொருந்தாத ஒரு சப்ஜெக்டை இந்தப் பெண் விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறதே, இத்தனை பசங்களுக்கு நடுவே தன்னந்தனியாக லேத்தையும் ஃபவுண்டரியையும் மேய்த்து இந்தப் பெண்ணால் சமாளிக்கமுடியுமா?’
இந்தச் சந்தேகம் பெரும்பாலோருக்குக் கடைசி வருடம்வரை நீடித்தது. அத்தனை பெரிய வகுப்பின் ஒரு மூலையில் தனி பெஞ்ச்சில் காவிரி ஒரு சாம்ராஜ்ய கம்பீரத்துடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தபிறகும் பலரால் அதை ஜீரணித்துக்கொள்ளமுடியவில்லை. ‘மற்ற பெண்களைப்போல் இவரும் கம்ப்யூட்டர், எலக்ட்ரிகல், கம்யூனிகேஷன் என்று சொகுசாகப் போயிருக்கலாமே’ என்கிற அயோக்கியத்தனமான கேள்வி அடிக்கடி ஒலித்தது.
நான் அந்த மெக்கானிக்கல் வகுப்பில் இல்லாததால், இயந்திரப் பயிற்சி வகுப்புகளை காவிரி எப்படிச் சந்தித்தார், சமாளித்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் வகுப்பின் ‘க்ரீம்’மிலேயே அவர் எப்போதும் இருந்தார் என்பதுமட்டும் நினைவுள்ளது.
சில மாதங்கள் முன்பாக ‘புதிய தலைமுறை கல்வி’ இதழில் பிரபல கவிஞர் தாமரையின் கட்டுரை ஒன்றை வாசித்தேன். அவர் எங்களுடைய அதே (GCT, கோவை) கல்லூரியில் அதே மெக்கானிகல் பிரிவில் அதே எண்ணிக்கைப் பையன்கள் மத்தியில் தனிப் பெண்ணாகப் படித்தவர், அங்கே அவர் சந்தித்த சவால்கள், பின்னர் தொழிற்சாலையொன்றில் ஒரே பெண் எஞ்சினியராகப் பணியாற்றியபோது அனுபவித்த சிரமங்களையெல்லாம் விவரித்திருந்தார். அதைப் படித்தபோது, நிலைமை இப்போது மாறியிருக்கிறதா என்று அறிய ஆவல் எழுந்தது.
பெண்கள் மெக்கானிகல் எஞ்சினியரிங் சேரும் விகிதம் அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா, இந்தத்துறை நிறுவனங்கள் பெண் எஞ்சினியர்களை வேலைக்கு எடுக்கின்றனவா? அவர்கள் ஆண்களுக்குச் சமமாக நடத்தப்படுகிறார்களா? இவர்களிடையே சம்பள விஷயத்தில் வித்தியாசம் உண்டா? இதையெல்லாம்விட முக்கியம், பெண்களுக்கு இந்தத் துறை ஏற்றதல்ல என்கிற கருத்தாக்கம் இன்னும் இருக்கிறதா?
இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரியக் குறைந்தபட்சம் ஒரு தலைமுறை தாண்டவேண்டும், இப்போதைக்குப் பூனாவிலிருந்து வந்துள்ள ஒரு செய்தி, அதுதான் இந்தப் பதிவுக்கான தூண்டுதல்.
பூனாவில் உள்ள Cummins மகளிர் பொறியியல் கல்லூரியில் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு பேட்ச் (ஈடு?) பெண் மெக்கானிகல் எஞ்சினியர்கள் வெளிவந்துள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கையில் வேலையுடன்.
கேம்பஸ் இண்டர்வ்யூவில் வேலை பெறுவதுமட்டும் வெற்றிக்கான அடையாளம் (அ) உத்திரவாதம் ஆகிவிடாதுதான். ஆனால் அது ஒரு குறியீடு, இதனால் ‘பெண்களுக்கு இன்னமாதிரி வேலைகள்தான் பொருந்தும்’ என்கிற இடது கை அங்கீகாரம் கொஞ்சமேனும் மாறினால் சந்தோஷம்.
***
என். சொக்கன் …
05 09 2011
ஆடை விளையாட்டு
Posted September 2, 2011
on:- In: Poetry | Uncategorized
- 42 Comments
’அலை பாயுதே’வில் எல்லோருக்கும் பிடித்த ‘ரகசிய சிநேகிதனே’ பாட்டில் வைரமுத்து எழுதிய ஒரு வரி:
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
இந்தப் படம் வந்த அதே நேரத்தில் (அல்லது சில மாதங்கள் முன் பின்னாக) ‘மின்னலே’ என்ற படத்தின் ஒலிநாடா வெளியானது. அதில் ஹாரிஸ் ஜெயராஜ் என்ற புதுமுகம் ‘தாமரை’யின் பாடல் வரிகளுக்கு இசையமைத்திருந்தார். அதிலும் ‘ரகசிய சிநேகிதனே’போல் ஒரு female-solo பாட்டு, ‘வசீகரா’ என்று தொடங்கிய அந்தப் பாடலிலும் இதேமாதிரி ஒரு வரி:
சில சமயம்,
விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
இதைக் கேட்டபோது ’வைரமுத்து, தாமரை இருவரில் யார் யாரைப் பார்த்துக் காப்பி அடித்தார்கள்?’ என்று நாங்கள் பேசிக்கொண்டோம். விளையாட்டாகதான்.
பல வருடம் கழித்து, இன்றைய #365paa வரிசைப் பாடலுக்காகப் ‘பத்துப் பாட்டு’ தொகுப்பில் உள்ள ‘பட்டினப் பாலை’யை முழுமையாகப் படித்துக்கொண்டிருந்தேன். அங்கே ஒரு பகுதி:
துணைப் புணர்ந்த மடமங்கையர்
பட்டு நீக்கித் துகில் உடுத்து,
மட்டு நீக்கி மது மகிழ்ந்து,
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்,
மகளிர் கோதை மைந்தர் மலையவும்…
’பாலை’த் திணையின் இலக்கணம், பிரிதலும் பிரிதல் நிமித்தமும். ஆனால் தலைப்பிலேயே ‘பாலை’யை வைத்திருக்கும் ஒரு புத்தகத்தில் இப்படி ஒரு ‘குறிஞ்சி’க் காட்சியா என்று ஆச்சர்யமானேன். இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம் என்று என்னிடம் உள்ள உரைகளைப் புரட்டிப் பார்த்தபோது பல சுவாரஸ்யமான அலசல்கள் கிடைத்தன.
முதலில், கடைசி 2 வரிகள். மைந்தர் கண்ணி, அதாவது ஆண் கழுத்தில் உள்ள மாலையை, மகளிர் சூடவும், மகளிர் கோதை, அதாவது பெண் கழுத்தில் உள்ள மாலையை மைந்தர் சூடவும்… பள்ளியறைக்குள் மாலை மாற்றிக்கொள்ளும் விளையாட்டு. ஓகே.
அதற்கு முந்தைய வரி, ‘மட்டு நீக்கி மது மகிழ்ந்து’, இந்த வரிக்கும் பலவிதமான விளக்கங்கள் கிடைத்தன, அதில் மிகச் சுவாரஸ்யமானது என்று பார்த்தால் ‘கள் அருந்துவதை விடுத்து, காதல் இன்பத்தைச் சுவைத்தார்கள்’. இதுவும் ஓகே.
இப்போது முக்கியமான வரி, ‘பட்டு நீக்கித் துகில் உடுத்து’. இதற்கும் இரண்டுவிதமான விளக்கங்களைச் சொல்கிறார்கள்:
- பெண்கள் பகலெல்லாம் அணிந்த பட்டாடையைக் கழற்றிவிட்டு, துகில் – மென்மையான பருத்தி ஆடையை அணிகிறார்கள் – சங்க கால Lingerie?
- பெண்கள் தங்களுடைய பட்டாடையைக் கழற்றிவிட்டு, விளையாட்டாகத் தங்களுடைய கணவரின் ஆடை (துகில்) அணிகிறார்கள் – அணிந்திருந்த மாலைகளை மாற்றிக்கொண்டதைப்போலவே
ஆக, ரகசிய சிநேகிதனையும் வசீகரனையும் பாடிய பெண்களுக்கு முன்னோடிகள் சங்க காலத்தில் இருக்கிறார்கள்!
இதைப் படித்தபோது கவிஞர் வாலி தனது சுயசரிதையாகிய ‘நானும் இந்த நூற்றாண்டும்’ புத்தகத்தில் குறிப்பிட்ட ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. இணையத்தில் அதைத் தேடிப் பிடித்தேன் (from http://www.tfmpage.com/ppp/)
ஒரு சமயம், தாதாமிராசி இயக்கி எஸ்.எம்.சுப்பையாநாயுடு இசையமைத்த ஒரு படத்தில் நான் ஒரு பாடலின் பல்லவியை நான் இப்படி எழுதினேன்:
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும்
சாந்தம் உன் மனதில் நிலவட்டும்
தூக்கமும் சாந்தமும் – நானாவேன்!நான் எழுதிய இந்தப் பாடலுக்கு திரு. எஸ்.எம்.எஸ் அவர்கள் மிகச் சிறப்பாக இசையமைத்து விட்டார்கள். பாடல் ஓரிரு நாளில் ஒலிப்பதிவாக இருந்தது. அப்போது தாதாமிராசியின் உதவி டைரக்டர் ஒருவர் வந்து, எங்களிடம் –
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே! – அந்தத்
தூக்கமும் அமைதியும் – நானானால்..என்று ஒரு பாடல் கண்ணதாசன் எழுதி “ஆலயமணி” படத்திற்காகப் போன வாரம் ஒலிப்பதிவாயிருக்கிறது என்று சொன்னார்.
இந்தச் செய்தியைக் கேட்டு நான் வியக்கவில்லை. ஆனால் தாதாமிராசி வியந்து போய் என்னிடம் “மிஸ்டர் வாலி! Great men think alike!.. உங்களுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரே மாதிரி கற்பனை உருவாகியிருக்கு. அவர் சொன்ன நினைத்ததை நீங்களும் நென்ச்ச்சிருக்கீங்க..இதுக்குப் பேர்தான் டெலிபதி!” என்றார்.
உடனே நான் அவரிடம் “சார்! இதுக்குக் காரணம் டெலிபதி இல்ல..அம்பிகாபதி” என்றேன். அவருக்குப் புரியும் படியாக விளக்கினேன்.
எம்.கே.தியாகராஜ பாகவதர் அம்பிகாபதியாக நடித்த படத்தில், நிலவொளியில் அமராவதியின் உப்பரிகைக்குக் கீழே நின்று கொண்டு அமராவதி
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும்!
சாந்தம் உன் மனதில் நிலவட்டும்!…ஆஹா!
அந்தத் தூக்கமும் சாந்தமும் – நானானால்!என்று தனக்குத் தானே விரகதாபத்தோடு பேசி பெருமூச்சு விடுவான். இது அந்தப் படத்திற்காக திரு. இளங்கோவன் எழுதிய வசனம். இந்த வசனம் கூட இளங்கோவனின் மொழிபெயர்ப்புத்தான். ரோமியோ-ஜூலியட் நாடகத்தில் வருகின்ற வசனத்தின் தமிழாக்கமே இது.
நானும் கண்ணதாசனும் சந்தர்ப்பம் வரும் போது இந்த வசனத்தை உபயோகிக்க முயற்சித்திருக்கோம்; அவ்வளவுதான்! மற்றபடி நாங்கள் இருவரும் எழுத நேர்ந்ததுக்குக் காரணம், டெலிபதி அல்ல; அம்பிகாபதிதான்.
***
என். சொக்கன் …
02 09 2011