மனம் போன போக்கில்

ஆடை விளையாட்டு

Posted on: September 2, 2011

’அலை பாயுதே’வில் எல்லோருக்கும் பிடித்த ‘ரகசிய சிநேகிதனே’ பாட்டில் வைரமுத்து எழுதிய ஒரு வரி:

உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்

இந்தப் படம் வந்த அதே நேரத்தில் (அல்லது சில மாதங்கள் முன் பின்னாக) ‘மின்னலே’ என்ற  படத்தின் ஒலிநாடா வெளியானது. அதில் ஹாரிஸ் ஜெயராஜ் என்ற புதுமுகம் ‘தாமரை’யின் பாடல் வரிகளுக்கு இசையமைத்திருந்தார். அதிலும் ‘ரகசிய சிநேகிதனே’போல் ஒரு female-solo பாட்டு, ‘வசீகரா’ என்று தொடங்கிய அந்தப் பாடலிலும் இதேமாதிரி ஒரு வரி:

சில சமயம்,

விளையாட்டாய்

உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்

இதைக் கேட்டபோது ’வைரமுத்து, தாமரை இருவரில் யார் யாரைப்  பார்த்துக் காப்பி அடித்தார்கள்?’ என்று நாங்கள் பேசிக்கொண்டோம். விளையாட்டாகதான்.

பல வருடம் கழித்து, இன்றைய #365paa வரிசைப் பாடலுக்காகப் ‘பத்துப் பாட்டு’ தொகுப்பில் உள்ள ‘பட்டினப் பாலை’யை முழுமையாகப் படித்துக்கொண்டிருந்தேன். அங்கே ஒரு பகுதி:

துணைப் புணர்ந்த மடமங்கையர்

பட்டு நீக்கித் துகில் உடுத்து,

மட்டு நீக்கி மது மகிழ்ந்து,

மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்,

மகளிர் கோதை மைந்தர் மலையவும்…

’பாலை’த் திணையின் இலக்கணம், பிரிதலும் பிரிதல் நிமித்தமும். ஆனால் தலைப்பிலேயே ‘பாலை’யை வைத்திருக்கும் ஒரு புத்தகத்தில் இப்படி ஒரு ‘குறிஞ்சி’க் காட்சியா என்று ஆச்சர்யமானேன். இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம் என்று என்னிடம் உள்ள உரைகளைப் புரட்டிப் பார்த்தபோது பல சுவாரஸ்யமான அலசல்கள் கிடைத்தன.

முதலில், கடைசி 2 வரிகள். மைந்தர் கண்ணி, அதாவது ஆண் கழுத்தில் உள்ள மாலையை, மகளிர் சூடவும், மகளிர் கோதை, அதாவது பெண் கழுத்தில் உள்ள மாலையை மைந்தர் சூடவும்… பள்ளியறைக்குள் மாலை மாற்றிக்கொள்ளும் விளையாட்டு. ஓகே.

அதற்கு முந்தைய வரி, ‘மட்டு நீக்கி மது மகிழ்ந்து’, இந்த வரிக்கும் பலவிதமான விளக்கங்கள் கிடைத்தன, அதில் மிகச் சுவாரஸ்யமானது என்று பார்த்தால் ‘கள் அருந்துவதை விடுத்து, காதல் இன்பத்தைச் சுவைத்தார்கள்’. இதுவும் ஓகே.

இப்போது முக்கியமான வரி, ‘பட்டு நீக்கித் துகில் உடுத்து’. இதற்கும் இரண்டுவிதமான விளக்கங்களைச் சொல்கிறார்கள்:

  • பெண்கள் பகலெல்லாம் அணிந்த பட்டாடையைக் கழற்றிவிட்டு, துகில் – மென்மையான பருத்தி ஆடையை அணிகிறார்கள் – சங்க கால Lingerie? Smile
  • பெண்கள் தங்களுடைய பட்டாடையைக் கழற்றிவிட்டு, விளையாட்டாகத் தங்களுடைய கணவரின் ஆடை (துகில்) அணிகிறார்கள் – அணிந்திருந்த மாலைகளை மாற்றிக்கொண்டதைப்போலவே

ஆக, ரகசிய சிநேகிதனையும் வசீகரனையும் பாடிய பெண்களுக்கு முன்னோடிகள் சங்க காலத்தில் இருக்கிறார்கள்!

இதைப் படித்தபோது கவிஞர் வாலி தனது சுயசரிதையாகிய ‘நானும் இந்த நூற்றாண்டும்’ புத்தகத்தில் குறிப்பிட்ட ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. இணையத்தில் அதைத் தேடிப் பிடித்தேன் (from http://www.tfmpage.com/ppp/)

ஒரு சமயம், தாதாமிராசி இயக்கி எஸ்.எம்.சுப்பையாநாயுடு இசையமைத்த ஒரு படத்தில் நான் ஒரு பாடலின் பல்லவியை நான் இப்படி எழுதினேன்:

    தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும்
சாந்தம் உன் மனதில் நிலவட்டும்
தூக்கமும் சாந்தமும் – நானாவேன்!

நான் எழுதிய இந்தப் பாடலுக்கு திரு. எஸ்.எம்.எஸ் அவர்கள் மிகச் சிறப்பாக இசையமைத்து விட்டார்கள். பாடல் ஓரிரு நாளில் ஒலிப்பதிவாக இருந்தது. அப்போது தாதாமிராசியின் உதவி டைரக்டர் ஒருவர் வந்து, எங்களிடம் –

    தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே! – அந்தத்
தூக்கமும் அமைதியும் – நானானால்..

என்று ஒரு பாடல் கண்ணதாசன் எழுதி “ஆலயமணி” படத்திற்காகப் போன வாரம் ஒலிப்பதிவாயிருக்கிறது என்று சொன்னார்.

இந்தச் செய்தியைக் கேட்டு நான் வியக்கவில்லை. ஆனால் தாதாமிராசி வியந்து போய் என்னிடம் “மிஸ்டர் வாலி! Great men think alike!.. உங்களுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரே மாதிரி கற்பனை உருவாகியிருக்கு. அவர் சொன்ன நினைத்ததை நீங்களும் நென்ச்ச்சிருக்கீங்க..இதுக்குப் பேர்தான் டெலிபதி!” என்றார்.

உடனே நான் அவரிடம் “சார்! இதுக்குக் காரணம் டெலிபதி இல்ல..அம்பிகாபதி” என்றேன். அவருக்குப் புரியும் படியாக விளக்கினேன்.

எம்.கே.தியாகராஜ பாகவதர் அம்பிகாபதியாக நடித்த படத்தில், நிலவொளியில் அமராவதியின் உப்பரிகைக்குக் கீழே நின்று கொண்டு அமராவதி

    தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும்!
சாந்தம் உன் மனதில் நிலவட்டும்!…ஆஹா!
அந்தத் தூக்கமும் சாந்தமும் – நானானால்!

என்று தனக்குத் தானே விரகதாபத்தோடு பேசி பெருமூச்சு விடுவான். இது அந்தப் படத்திற்காக திரு. இளங்கோவன் எழுதிய வசனம். இந்த வசனம் கூட இளங்கோவனின் மொழிபெயர்ப்புத்தான். ரோமியோ-ஜூலியட் நாடகத்தில் வருகின்ற வசனத்தின் தமிழாக்கமே இது.

நானும் கண்ணதாசனும் சந்தர்ப்பம் வரும் போது இந்த வசனத்தை உபயோகிக்க முயற்சித்திருக்கோம்; அவ்வளவுதான்! மற்றபடி நாங்கள் இருவரும் எழுத நேர்ந்ததுக்குக் காரணம், டெலிபதி அல்ல; அம்பிகாபதிதான்.

***
என். சொக்கன் …

02 09 2011

Advertisements

42 Responses to "ஆடை விளையாட்டு"

அநேகமாக நிறைய இது போல இருக்கும். இலக்கியவாதிகளை கேட்டால் தெரியும்.

என்னமா எழுதறீங்க! அதுவும், பலப்பல விஷயங்களைப் பற்றி. கவிஞர் வைரமுத்து ஒரு சமயம் சினிமாத்துறைக்கு பாடலெழுத வந்தப் புதிதில், அவருடைய ஒருப பாடல் பதிவாகும் தருணத்தில் கவிஞர் கண்ணதாசனின் பாடலை பேரூந்தில் போகும் பொழுது கேட்டார். அதன் வரிகள் தான் அப்பொழுது எழுதியப் பாடலின் வரிகளை ஒத்து இருந்ததை உணர்ந்து, பேரூந்தில் இருந்து இறங்கி ஆட்டோ பிடித்து பிரசாத் லேப் சென்று பாடல் பதிவாகும் முன் வரியை மாற்றியதாக எங்கோ படித்த ஞாபகம். What integrity!
amas32

am i allowed to comment some romantic lines, to this poem & post?:)

Sooooooooooooooooopur……………

அடடா! அலை பாயுதே பாட்டுக்கும் ஷேக்ஸ்பியருக்கும் கனெக்‌ஷன் தெரியுதே

🙂

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே பாட்டு ஷேக்ஸ்பியரின் வரிகள் என்று படித்ததாக நினைவு.

எப்படியோ..பாலைத்திணையில்
மகிழ்ந்த பெண்கள் இப்பவும் உயிர்த்திருக்கிறார்கள்.
திரை இசையில்!

>ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது< உங்க நினைவாற்றலுக்கு ஒரு அளவே இல்லையா.. சுவாரசியமான பதிவுக்கு நன்றி 🙂

அருமையான பதிவு.
நன்றி.

ஆண்கள் அணியும் மாலைக்கு ஒரு பெயரும், பெண்கள் அணியும் மாலைக்கு மறு பெயரும் கொண்ட மொழியை, இன்று வளம் இல்லை என்று சொல்லும் மூடர்களை நினைத்தால் ………………………..

கோதை-கண்ணி = பெண்மாலை-ஆண்மாலை
தொங்கல்-தொடையல் = ஆண்மாலை-பெண்மாலை

ஆனா ஆண்மாலையான தொங்கலை, மரபை மீறி, தனக்குத் தொங்க விட்டுக் கொண்டவள் ஆண்டாள் என்னும் நம் கோதை!:)
இந்த Lingerie Exchange பத்தி, ரொம்ப வெவகாரமாவே பாடி வச்சிருக்கா, கிளுகிளு-ன்னு:))

அவன் இடுப்பு வாசம் எனக்கு வேணும்! அவன் இடுப்பு ஆடையை விசிறி எனக்கு வீசீரே!
அவன் மாலையைக் கொண்டு, என் மார்பை அழுத்தி அழுத்தீரே!
அவன் குழலில் இருக்கும் எச்சில் நீரைக் கொண்டு என் முகம் கழுவீரே!

தனி அறை!
குத்து விளக்கு எரிகிறது!
நல்ல Sponge Bed!
அவன் மணிக்கு ஒருமுறை களைத்து விட்டான்!
அவள் களைக்காமல் இளைக்கின்றாள்!
அவன் மாலையை இழுத்து தன் மார்பில் அழுத்திக் கொண்டாள்!
தன் தலையில் உள்ள பூச்சரத்தை எடுத்து, அவன் கை-காலைக் கட்டி விட்டாள், கட்டிலிலே!
இனி No Escape until சிற்றஞ் சிறுகாலை:))

குத்து விளக்கெரிய
கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின்
மேல் ஏறிக்
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை
கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா…
வாய் திறவாய்!!!

Lingerie Xchg – I like it so much:))

அதுவும் காதலனுக்குத் தெரியாமல், அவன் பெட்டியில் இருக்கும் சட்டையைத் “திருடி”
அதை இறுக்க அப்பப்போ அணைத்துக் கொண்டு…
ஒரு நாள், அவன் சட்டையிலேயே, அவனுக்கு முன்பாகத் தோன்றிக் குடுக்கும் Suprise Lingerie Darisanam….
Lingerie Xchg – I like it so much:))

Tele-pathi, Ambika-pathi sooperu:)

ஆனா, சொக்கன், சங்கத் தமிழ்ப் பாட்டுக்கு, நீங்க சொன்ன பொருளில் பெரும் பிழை செய்து விட்டீர்கள்! 🙂 ஐயகோ! நெஞ்சு பொறுக்குதில்லையே! :((

//மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்,
மகளிர் கோதை மைந்தர் மலையவும்…//

இது வரைக்குஞ் சரி!
அவன் கண்ணி மாலையை அவ சூடிக்கிட்டா!
அவள் கோதை மாலையை அவன் மலைஞ்சிக்கிட்டான்! (மாட்டிக்கிட்டான்)
ஆனா…ஆனா…ஆனா…

அவன் துணியை இவ போட்டுக்கிட்டா, இவ துணியை அவன் போட்டுக்கிட்டான்-ன்னும் சொல்லிட்டீரே! 😦
என்ன கொடுமை! ஐயகோ! காதல் கொஞ்சும் சங்கப் பாட்டை இன்னொருகா வாசிங்க…

* மட்டு நீக்கி = மட்டு-மரியாதை, வெட்கம் எல்லாம் நீக்கி…
* மது மகிழ்ந்து = மதுவை, கோப்பையிலும் + இதழிலும் மகிழ்ந்து…

* பட்டு நீக்கித் = தன்னோட பட்டுச் சீலையை நீக்கி
* துகில் உடுத்து = அவனோட மெல்லீய துகிலை உடுத்தி
* துணைப் புணர்ந்த மட மங்கையர் = துணைவனைப் “புணர்ந்தாள்” மங்கை!

அதாச்சும்…
அவளோட பட்டு நீக்கி, அவன் துகிலைப் போட்டுக்கிட்டா!
ஆனா அவன், அவ பட்டுச் சீலையா போட்டுக்கிட்டான்?:) = இல்லை! ஒன்னுமே போட்டுக்கலை :)))

அவள் = பட்டு நீக்கித், துகில் உடுத்து-ன்னு சொன்ன கவிஞர்
அவன் = துகில் நீக்கி, பட்டு உடுத்தி-ன்னு சொல்லவே இல்ல!

அவள்:
அவளுக்கு காதல் பொங்கினாலும், உள்ளுக்குள்ள குறுகுறு வெட்கமும் கூட!
அதான் அவன் துகில் = Light, Transparent, See through…அதைப் போட்டுக்கிட்டா…
You cant say, that shez undressed! அவள் அங்கம் தெரியாது ஆனா தெரியும்:)

அவன்:
அவன் போட்டுக்கிட்டு இருந்த துகிலும் போயிருச்சி!:) பாவம்..என்ன பண்ணுவான்? முருகா!
என்ன பண்ணுவான்? = துணைப் “புணர்ந்த” மட மங்கையர்-ன்னு கவிஞர் கமுக்கமா முடிச்சிட்டாரு! நானும் முடிச்சிக்கிறேன்! முருகா! வெக்க வெக்கமா வருது:)

அண்ணார் Kannabiran Ravi Shankar (KRS) அவர்கள் இங்கு வந்து விளக்கேற்றியிராவிட்டால், தமிழ் படங்களின் மு.இ காட்சி போல தொக்கி நின்றிருக்கும்!! :))

சொக்கா.. சோக்கா சொல்றீர் ஐயா.. திரு.கண்ணபிரான் உங்களுக்கு சரியாத் தான் பெயர் வைத்து இருக்கிறார்கள் 🙂

இன்றைக்கும் பெருமாள் கோவில்களில் பெருமாள் தாயார் வேடத்திலும் தாயார் பெருமாள் வேடத்திலும், சிவன் கோவில்களில் சிவன் அம்பாள் வேடத்திலும் அம்பாள் சிவன் வேடத்திலும் அலங்காரங்கள் செய்யப்படுகின்றன; கண்ணனும் இராதையும் இந்த விளையாட்டு விளையாடியிருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்ல வந்தேன். அதற்குள் வழக்கம் போல் இந்த இரவிசங்கர முந்திரிக்கொட்டை வந்து என்னென்னமோ சொல்லி மூடை (mood) மாத்திவிட்டிருச்சு.

அருமையான பதிவு.
Thank you.

இதே மாதிரி இன்னோரு மேட்டர் (சும்மா சில வருடங்கள் முன் பின்னாக)

கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள… (திருக்குறள் – மிஸ்டர் வள்ளுவர்)

ஏ…. கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு.. இந்தப்
பெண்ணில் இருக்கு…. (சிம்ரனைப்பார்த்து சூர்யா பாடும் வரிகள் நேருக்கு நேர் படத்தில் – திருவாளர் கவிப்பேரரசு வைரமுத்து)

இதுக்கு என்ன சொல்றீங்க?

சுவாரஸ்யமா எழுதுறீங்க.நன்றி.

நான் ரொம்பவும் ரசித்தேன்.உங்களது அயராத தேடுதலை கண்டு வியக்கிறேன்.ஒரு சின்ன நூலை பிடித்து மூலாதாரத்திர்க்கே அழைத்து சென்று விட்டீர்கள்.நன்றி

இப்ப புரியுது. இந்த பதிவு ஏன் இவ்வளவு பெரிய ஹிட் என்று

ஆமாமா :>

நன்றி. அது எந்தப் பாடல் என்று நினைவிருக்கிறதா?

பூந்து விளையாடுக 🙂

நன்றி லோகேஷ் 🙂

பட்டாம்பூச்சி சுனாமி ஞாபகம் வருதோ? 😉

:>

நன்றி ரேவதி நரசிம்மன்

நன்றி யாத்ரீகன்

நன்றி ரத்னவேல்

🙂 சொல்வதெல்லாம் நிஜமாகிடுமா? :>

அட்டகாசமான ‘விளக்கு’, ச்சே, விளக்கம் 😉 நன்றி கேயாரெஸ் :>

:)))

நன்றி 🙂

:))) அதான் சொல்லிட்டீங்களே!

நன்றி கோவை கவி 🙂

இது காப்பி அல்ல ஐயா, திருக்குறளைச் சுட்டும்வகையில் வைரமுத்து எழுதியது, அதனால்தான் அதே வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்

நன்றி சுபா

நன்றி கிருஷ்ணகுமார்

ஹிஹி 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 521 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 451,670 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

September 2011
M T W T F S S
« Aug   Oct »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Advertisements
%d bloggers like this: