அரை மாத்திரை அதிகம்
Posted September 13, 2011
on:- In: A. R. Rahman | Art | நவீன அபத்தங்கள் | Ilayaraja | Importance | Jency | K J Yesudoss | Language | Learning | Music | Perfection | Pulambal | Sujatha | Uncategorized | Unni Krishnan | Vairamuthu
- 38 Comments
இன்றைய Random பாட்டு, ‘இரு பறவைகள் மலை முழுவதும்’. நிறம் மாறாத பூக்கள்’ என்ற படத்தில் ராஜா இசையில் கண்ணதாசன் எழுதி ஜென்ஸி பாடியது.
ஜென்ஸி எனக்கு ரொம்பப் பிடித்த பாடகி. ராஜாவின் இசையில் மிக நல்ல பாடல்களைமட்டுமே பாடிய அதிர்ஷ்டசாலிகளில் அவர் ஒருவர். (மற்ற இருவர் பி. ஜெயச்சந்திரன், ஷ்ரேயா கோஷல்) மிகக் குறைவான எண்ணிக்கையில் பாடினாலும், தடாலென்று பாடுவதையே நிறுத்திப் பல வருடங்கள் ஆகிவிட்டாலும் தமிழ்த் திரையிசையில் அவருக்கென்று ஒரு நிரந்தர ரசிகர் வட்டம் இருக்கிறது – கிட்டத்தட்ட எழுத்துலகில் ஜெயகாந்தன்மாதிரி என்று சொல்லலாம்.
ஆனால் ஜென்ஸியிடம் ஒரே பிரச்னை, அவருக்கு ர, ற வித்தியாசம் என்றைக்குமே புரிந்ததில்லை. இரண்டையும் இஷ்டப்படி மாற்றிப் பாடுவார். காது வலிக்கும்.
இன்னொரு வேடிக்கை, இடையின ர, வல்லின ற இரண்டிற்கும் தலா அரை மாத்திரை கூடுதலாகச் சேர்த்து வேறொரு ர, ற கூட்டணியை இவர் கண்டுபிடித்துவைத்திருக்கிறார். உதாரணமாக இந்த வீடியோவில் உள்ள ’இரு பறவைகள் மலை முழுவதும்’ பாட்டைக் கேட்டுவிட்டு வாருங்கள் (எச்சரிக்கை: வீடியோவைப் பார்க்கவேண்டாம், கண் வலிக்கும்!)
முதல் வரியிலேயே ‘இரு’ ஓகே, ஆனால் ‘பறவைகள்’ என்று பாடும்போது வேண்டுமென்றே அழுத்தம் கூடி ‘ற’னாவுக்கு அரை மாத்திரை எகிறிவிடுகிறது.
ஆனால் ரெண்டு வார்த்தை தள்ளி ‘பறந்தன’ என்று பாடும்போது ‘ற’ சரியாக விழுகிறது. பிழையில்லை.
பல்லவி, அனுபல்லவி முடிந்து சரணம் தொடங்குகையில் ‘சாரல்’ என்று ஒரு வார்த்தை. அங்கே ‘ர’னாவுக்கு அரை மாத்திரை கூடுகிறது – அதாவது, ஜென்ஸி ‘சாரல்’ என்று சரியாகவும் பாடுவதில்லை ‘சாறல்’ என்று தவறாகவும் பாடுவதில்லை, இரண்டுக்கும் நடுவே ஒரு இடைவல்லின ‘ர’வைப் பயன்படுத்துகிறார். இதுவும் சில இடங்களில்தான், இதே பாட்டில் வேறு பல இடங்களில் ‘ர’, ‘ற’ சரியாக ஒலிக்கிறது.
ஆக, ஜென்ஸிக்கு ர, ற வித்தியாசம் தெரியாமல் இல்லை. எங்கே எது வரவேண்டும் என்பதுதான் புரியவில்லை. ஆகவே randomஆக ஏதாவது ஒன்றைப் போட்டுப் பாடிவிடுகிறார். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அவருக்கு இந்த நுணுக்கமான வித்தியாசமெல்லாம் தானாகப் புரியும் என்று எதிர்பார்ப்பதும் தவறுதான்.
இன்னோர் உதாரணம், ‘ஜீன்ஸ்’ படத்தில் இருந்து ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும்’ என்ற பாட்டு. ரஹ்மான் இசையில் வைரமுத்து எழுதிய இந்தப் பாடலைப் பாடிய உன்னி கிருஷ்ணன், சுஜாதா இருவருக்குமே தமிழ் தாய்மொழி இல்லை (என்று நினைக்கிறேன்!)
இங்கே பல்லவியின் இரண்டாவது வரியில் உன்னி கிருஷ்ணன் ‘வன்னத்துப் பூச்சி’ என்று பாடுகிறார். அதே உன்னி கிருஷ்ணன் சில வரிகள் தள்ளி ‘கல் தோன்றி மண் தோன்றி’ என்று பாடும்போது ‘ண்’ சரியாக வருகிறது.
சுஜாதாமட்டும் சளைத்தவரா? பல்லவியில் ‘வாசமுல்ல பூ’, ‘துலி’ என்று தவறு செய்கிறார். ஆனால் அடுத்த வரியில் ‘மழை நீர்’ என்று மிகத் துல்லியமாகப் பாடுகிறார்.
ஆக, இங்கேயும் பாடகர்களுக்கு ந, ன, ண அல்லது ல, ள, ழ அல்லது ர, ற போன்றவற்றை வித்தியாசப்படுத்திச் சரியானமுறையில் உச்சரிக்கத்தெரியாமல் இல்லை. எங்கே ந, எங்கே ன, எங்கே ண என்பதில்தான் பிரச்னை.
இங்கே யார்மீது தப்பு? தமிழ் நன்கு உச்சரிக்கத் தெரிந்தவர்களைதான் பாடவைப்போம் என்று நினைக்காத இசையமைப்பாளர்கள்மீதா? ’குரல் நன்றாக இருந்தால் போதும், இப்படி ஒன்றிரண்டு சிறு பிழைகள் இருந்தால் பரவாயில்லை’ என்று அவர்கள் வாதிட்டால்?
ஒருவேளை, கவிஞர்கள் முன்வந்து தங்களுடைய வரிகள் சரியாக உச்சரிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டுமா? அவர்கள்தான் பாடல் பதிவின்போது பக்கத்தில் இருந்து பாடகர்களுக்கு உதவவேண்டுமோ? இதற்கும் பல உதாரணங்கள் இருக்கின்றன.
’இளமைக் காலங்கள்’ என்ற படத்தில் ‘ஈரமான ரோஜாவே’ என்ற பாட்டு. ராஜா இசை. வைரமுத்து எழுதியது. கே. ஜே. யேசுதாஸ் பாடியது.
அந்தப் பாடலில் ஒரு வரி, ‘தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து’. இதை யேசுதாஸ் ‘மூள்காது’ என்று பாடினாராம். பக்கத்தில் இருந்த வைரமுத்து திருத்தினாராம்.
ஆனால் அவர் எத்தனை முறை சொல்லியும் யேசுதாஸுக்கு ‘மூழ்காது’ என்று சரியாகப் பாட வரவில்லை. எரிச்சலாகிவிட்டார். ‘சாகும்வரை திருத்துவீங்களா?’ என்று வைரமுத்துமீது எரிந்து விழுந்தாராம்.
‘தமிழ் சாகாதவரை’ என்று வைரமுத்து பதில் சொன்னாராம்.
வைரமுத்துவின் கவித்துவ மிகைப்படுத்தலையும் மீறி, இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்திருக்கக்கூடும் என்று நம்பலாம். பின்னாளில் அதே வைரமுத்துவின் பாடல்களை உதித் நாராயண், சாதனா சர்கம் வகையறாக்கள் கைமா செய்து போட்டதும் சரித்திரம்.
எதார்த்தமாக யோசித்தால் ஒரு கவிஞர் தன்னுடைய வரிகள் பதிவாகும் இடங்களுக்கெல்லாம் போய் நின்று திருத்தம் சொல்லிக்கொண்டிருப்பது சாத்தியம் இல்லை. வேண்டுமானால் பாடல் பதிவானபின் கேட்டுப் பிழை திருத்தலாம்.
ஆனால் அதற்குள் பாடிய பாடகர் ஊர் போய்ச் சேர்ந்திருப்பார். இன்னொருமுறை அவரைக் கூப்பிட்டு அந்த ஒரு வார்த்தையைமட்டும் மாற்றுவது கஷ்டம், செலவு.
பேசாமல் ஒன்று செய்யலாம், தமிழ் உச்சரிப்பு நன்றாகத் தெரிந்த ஒருவரை இசையமைப்பாளர்கள் தங்களுடைய உதவியாளராக வைத்துக்கொள்ளலாம். நடிகர், நடிகைகளுக்கு வசனம் சொல்லித்தருவதுபோல் இவர்கள் பாடல் பதிவின்போது பாடகர்களுடைய உச்சரிப்பைத் திருத்தலாம்.
இன்னும் பெட்டர், பாட்டில் சத்தத்தை அதிகப்படுத்தி உச்சரிப்புக் கோளாறுகள் எவையும் வெளியே கேட்காதபடி செய்துவிடலாம். இப்போது அதைத்தான் அதிகம் செய்கிறார்கள்.
போகட்டும். ஒரு பழைய கதை சொல்லவா? பிளாக் அண்ட் வொய்ட் காலத்துக் கதை.
அந்த இளம் பெண் பாடல் பதிவுக்காகக் காத்திருந்தார்.
இன்னும் இசையமைப்பாளர் வரவில்லை. வாத்தியக்காரர்களைக்கூடக் காணோம். ஒருவேளை, இன்றைக்குப் பாடல் எதுவும் பதிவாகவில்லையோ?
அவர் சந்தேகமாக எழுந்து நின்றார். ஆனால் யாரை விசாரிப்பது என்று புரியவில்லை.
அந்தப் பெண்ணின் பெயர் சுசீலா. சொந்த ஊர் ஆந்திரா. பெரிய திரைப்படப் பின்னணிப் பாடகியாகிற கனவோடு தமிழகத்துக்கு வந்திருந்தார்.
பதினைந்து வயதிலேயே அவருக்கு முதல் பாடல் சான்ஸ் கிடைத்துவிட்டது. அது ஒரு சுவாரஸ்யமான கதை.
சின்னஞ்சிறுமியாகத் துள்ளி விளையாடவேண்டிய பருவத்தில், சுசீலாவுக்குப் பாட்டுக் கற்றுக்கொடுக்கிறேன் என்று உட்காரவைத்தார் அப்பா. ஒவ்வொரு பாடமாக வற்புறுத்திச் சொல்லித்தந்து பல மணி நேரம் சாதகம் செய்தால்தான் ஆச்சு என்று அவர் பிடிவாதம் பிடிக்க, குழந்தை சுசீலாவுக்கு அழுகைதான் வந்தது.
அப்போதும், அப்பா விடமாட்டார், ‘முதல்ல பாட்டை ஒழுங்காப் பாடு, அப்புறம் உன் இஷ்டம்போல எவ்ளோ நேரம் வேணும்ன்னாலும் அழுதுக்கோ’ என்றுதான் சொல்வார்.
இப்படி அப்பாவின் கட்டாயத்தால் பாட்டுக் கற்க ஆரம்பித்த சுசீலா, விரைவில் இசைப் பிரியையாக மாறிப்போனார். பள்ளிப் பாடங்களைவிட, கலைவிழா மேடைகள்தான் அவரை ஈர்த்தன. பரீட்சைகளில் நல்ல மார்க் வாங்குகிறாரோ இல்லையோ, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பிரமாதமாகப் பாடிக் கைதட்டல் வாங்கத் தவறியதில்லை.
ஒருகட்டத்தில், படிப்பு தனி, பாடல் தனி என்று அவர் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. இசைக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். மேடைக் கச்சேரிகள், ரேடியோ நிகழ்ச்சிகள் என்று ரொம்ப பிஸியாகிவிட்டார்.
சென்னை வானொலியில் அவர் அடிக்கடி கலந்துகொண்டு பாடிய ஒரு நிகழ்ச்சி ‘பாப்பா மலர்’. அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ‘வானொலி அண்ணா’வுக்கு சுசீலாவின் குரல் மிகவும் பிடித்துப்போய்விட்டது.
ஒருநாள், வானொலி அண்ணா சுசீலா வீட்டுக்கு நேரில் வந்தார். அவருடைய தந்தையைச் சந்தித்துப் பேசினார், ‘உங்க மகளுக்கு இசைத்துறையில பிரமாதமான எதிர்காலம் இருக்கு, நீங்க அவளைச் சினிமாவில பாடவைக்கணும்’ என்றார்.
சுசீலாவின் அப்பாவுக்குப் பாரம்பரிய இசையில்தான் ஆர்வம். ’சினிமாவா? அதெல்லாம் நமக்கு வேணாம்’ என்று தட்டிக்கழித்துவிட்டார்.
பாவம் சுசீலா, திரைப்படங்களில் பாடவேண்டும் என்கிற ஆசை இருந்தும், அப்பாவுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அந்த விருப்பத்தைத் தன் மனத்துக்குள் விழுங்கிக்கொண்டார். மற்ற இசை வாய்ப்புகளில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
அப்போது, ‘பெண்டியால நாகேஸ்வர ராவ்’ என்று ஒரு பிரபலமான இசையமைப்பாளர் தன்னுடைய படத்தில் பாடுவதற்குப் புதுக் குரல்களைத் தேடிக்கொண்டிருந்தார். இதற்காக அவர் சென்ற இடம், அகில இந்திய வானொலி.
’உங்க நிகழ்ச்சிகள்ல ரெகுலராப் பாடற திறமைசாலிப் பெண்கள் இருப்பாங்களே, அதில நல்ல குரல்களா நாலஞ்சு பேரைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்க. அவங்களுக்குச் சினிமாவில பாட விருப்பம் இருந்தா என்கிட்ட அனுப்பிவைங்க.’
உடனடியாக, வானொலி நிலையம் ஐந்து பெண்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பியது. அதில் நான்கு பேர் குரல் தேர்வில் நிராகரிக்கப்பட்டார்கள். கடைசியாக, சுசீலாவைமட்டும் தேர்வு செய்தார் பெண்டியால நாகேஸ்வர ராவ்.
ஆனால், அப்பா? அவரது சம்மதம் இல்லாமல் சுசீலா சினிமாவில் பாடுவது எப்படி?
நல்லவேளையாக, அவருடைய அப்பா ஒரு படி இறங்கிவந்தார். பதினைந்து வயது சுசீலா திரைப்படப் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.
சுசீலாவின் வசீகரமான புதுக் குரல் பலதரப்பட்ட ரசிகர்களை ஈர்த்தது. அவர்களில் ஒருவர், ஏவிஎம் நிறுவன அதிபர் மெய்யப்பன்.
அதன்பிறகு, ஏவிஎம் தயாரிக்கும் படங்களில் தொடர்ந்து பாடுகிற வாய்ப்பு சுசீலாவுக்குக் கிடைத்தது. அவரும் இந்தப் பாடல்களில் தனது முழுத் திறமையை வெளிக்காட்டினார்.
சுசீலாவின் குரல் தனித்துவமானதுதான். எல்லோரையும் கவரக்கூடியதுதான். ஆனாலும், அவருக்கென்று ஒரு நல்ல ‘ப்ரேக்’ அமையவில்லை. அதற்கு என்ன காரணம் என்று யாருக்கும் புரியவில்லை.
யோசனையோடு தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தார் சுசீலா, ‘இன்னிக்கு ரெகார்டிங் இருக்கா, இல்லையா?’
திடீரென்று அந்த அறையின் கதவு திறந்தது. தயாரிப்பாளர் ஏவிஎம் மெய்யப்பனும் இன்னொருவரும் உள்ளே நுழைந்தார்கள்.
அவர்களைப் பார்த்ததும் சட்டென்று எழுந்து நின்றார் சுசீலா, ‘வணக்கம் சார்.’
‘வணக்கம்மா’ என்றார் மெய்யப்பன், ‘இவர் யார் தெரியுதா?’
சுசீலா அவரை இதற்குமுன்னால் பார்த்த நினைவில்லை. மறுப்பாகத் தலையசைத்தார்.
‘இவர் பேரு லஷ்மி நாராயண். இனிமே இவர்தான் உனக்குத் தமிழ் வாத்தியார்.’
சுசீலாவுக்குத் திகைப்பு, ‘வாத்தியாரா? நான் என்ன சின்னப் பிள்ளையா, இவரிடம் பாடம் கற்றுக்கொள்ள?’
அவருடைய குழப்பம் புரிந்ததுபோல் சிரித்தார் மெய்யப்பன், ‘நீ ஒவ்வொரு பாட்டையும் கஷ்டப்பட்டு நல்லாதான் பாடறேம்மா. ஆனா, சில வார்த்தைகள் தப்பா வருது, அசலூர் வாடை அடிக்குது, கேட்கும்போதே மொழி தெரியாத யாரோ பாடறாங்க-ன்னு புரிஞ்சுடுது. மக்கள் அதை மனசார ஏத்துக்கமாட்டேங்கறாங்க!’
‘நீயோ தெலுங்குப் பொண்ணு. உனக்குத் தமிழ் உச்சரிப்பு சரியா வரலைன்னா அது நிச்சயமா உன்னோட தப்பில்லை. அதனாலதான் ஒரு நல்ல தமிழ் வாத்தியாராப் பார்த்து ஏற்பாடு செஞ்சிருக்கேன். உனக்குக் கஷ்டமா இருக்கிற வார்த்தைகளுக்கெல்லாம் இவர்கிட்ட சரியான உச்சரிப்புகளைக் கத்துகிட்டு நல்லாப் பாடிப் ப்ராக்டீஸ் எடுத்துக்கோம்மா. நீ ரொம்ப நல்லா வருவே’ என்று ஆசிர்வதித்தார் ஏவிஎம் மெய்யப்பன்.
இருபது வயதில் ஒரு வாத்தியார் உதவியுடன் தமிழ் உச்சரிப்புப் பழக ஆரம்பித்த சுசீலா, படிப்படியாகத் தன்னுடைய தவறுகளைத் திருத்திக்கொண்டார். ஒவ்வொரு வார்த்தையையும் மிகச் சரியாக உச்சரிக்கப் பழகினார், அதன்பிறகு வந்த அவரது பாடல்களில் இந்த மெருகு ஜொலித்தது. தமிழக மக்களும் அவருடைய திறமையைக் கொண்டாட ஆரம்பித்தார்கள், தங்கள் மனத்துக்கு நெருக்கமாக உட்காரவைத்துக் கௌரவித்தார்கள்.
‘இசையரசி’ என்று தமிழர்களால் பெருமையோடு அழைக்கப்படும் பாடகி பி. சுசீலாவின் தமிழ்ப் பாடல்களை யார் கேட்டாலும், அவரைத் தெலுங்கு தேசத்திலிருந்து வந்தவராக நினைக்கவேமாட்டார்கள். அந்த உச்சரிப்புத் துல்லியமும், பாடல் வரிகளுக்கு ஏற்ற உணர்ச்சிகளைக் கச்சிதமாகக் கொட்டும் குரலும் அவர் எங்கிருந்தோ வாங்கிவந்த வரம் அல்ல, முனைந்து செதுக்கியது.
அந்த அக்கறை, அர்ப்பணிப்பு, தொழில் பக்தியும் சும்மா வராது.
***
என். சொக்கன் …
13 09 2011
Update:
எல்லாக் குறில்களுக்கும் மாத்திரை அளவு சமம்தான், வல்லினம் மெல்லினம் இடையினம் உச்சரிப்பில்மட்டுமே மாறுபடும். நான் இங்கே வித்தியாசம் காட்ட மாத்திரை என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது பெரிய தவறு. மன்னிக்கவும். சுட்டிக்காட்டிய நண்பர்கள் குமரன், சுப இராமனாதன் இருவருக்கும் நன்றி.
38 Responses to "அரை மாத்திரை அதிகம்"

சரி செய்துகொள்ளுவதால் உயரங்களை எட்டுவதற்கும், உயரங்களை எட்டியாதாலேயே சரி இருக்கட்டும் என்பதற்குமான வித்யாசம் அது. 🙂


இங்கே யார்மீது தப்பு?
பாடுபவர்களுக்கு கொஞ்சம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்றாலும் இசை அமைப்பாளர்கள் மீது தான் தப்பு என்று நான் கருதுகிறேன். இசை அமைப்பாளர்களுக்கு நல்ல தமிழ் உச்சரிக்கத் தெரிந்தாலே போதும், இதைத் தவிர்க்கலாம் என்று பல முறை இளையராஜா தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். என்ன செய்ய? அவர் மகன், “ஒரு கல் ஒரு கன்னாடி” என்று பாடுகிறார். “நேரங்கள் தீருதே வேகங்கள் கூடுதே பூவே உன் கன்னுக்குல்லே பூமிப்பந்துச் சுத்துதே” என்று பாடுகிறார். ஆஸ்கார் நாயகனோ “கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புல்லியே” என்கிறார். தமிழில் அடுக்கு மொழியில் பட்டையைக்கிளப்பும் T.R கூட “உன்னைப்போளே என்னைப்போளே காதளிக்க யாருமில்லை” னு பாடுகிறார். பாடும் போது ரசிக்கத்தானே செய்கின்றனர்? எத்தனை பேர், “அவள் உலக அழகியே” என்பதை சரியாக பாடுவர்?
சுசீலா அம்மா மாதிரியும் S.P.B. மாதிரியும் சொந்த முயற்சியில் தமிழ் சரியாக உச்சரிப்பவர்கள் ரொம்பக் குறைவு என்பதே வருத்ததிற்குரிய செய்தி. தசாவதாரம் படத்தில் ஒரு உரையாடல் வரும். “இந்தியாவில ஹிந்திக்கு அப்பறம் அதிகம் பேசற மொழி தெரியுமா” என்று பல்ராம் நாயுடு கேள்வி கேட்க “தமிழ்” என்பார் கோவிந்த். “இல்லை, தெலுங்கு” என்பார் பல்ராம். மேலும், “தெலுங்கு பேசும் நான், தமிழ்ல பேசறேன், நீ தமிழ்ல பேசாம englishல பேசினா எப்டியா தமிழ் வாழும்” னு கேட்பார். அதற்கு கோவிந்த், “உங்கள மாதிரி தெலுங்குக்காரங்க வந்து வாழ வெப்பாங்க” னு சொல்லுவார். அப்படித் தான் இருக்கிறது நிலைமை.


மிக அழகாக சொல்கிறீர்கள். ஆனால் எனக்கு இந்தத் தவறுகள் குறித்து கவனிக்கத் தெரியவில்லை.


சுசீலா அம்மாவே தமிழ் கத்துகிட்டாங்களா…. இன்னிக்கு இந்த மாதிரி இருந்தா தமிழ் படித்த எல்லாருக்கும் வேலை இருக்கும்.


சாதனா சர்கம் தமிழில் பல பாடல் சொற்களைக் குதறி எடுத்ததென்னவோ உண்மை தான். ஆனால், தன்னை கேலி பேசியவர்களுக்கு அவர் அளித்த “அழகி”ய பதில் அபாரமானது. என்னமோ எனக்குத்தான் அந்தப்பாடல் பிடிக்காமல் போயிற்று. 😦
தேசிய விருது பொறுத்த வரையில், சிறப்பாக உச்சரிப்பு கொண்ட ஹரிணிக்கு அது கிட்டாமல் போனதில் அவரை விட எனக்குத்தான் வருத்தம் அதிகம்! சிந்து பைரவி – பாடறியேன் பாடல் போல் கருத்து, நுட்பம், இசை வரிகள், பாடலின் சூழல் முதலிய பலவற்றைக் கொண்ட பார்த்திபன் கனவு – ஆலங்குயில் பாடலுக்கு கிட்டிடும் என நினைத்திருந்தேன்.


எனக்கென்னவோ ஹரிஷ் ராகவேந்தர் உச்சரிப்பை சரியாக செய்கிறார் என்றே நினைக்கிறேன்.,. உங்கள் கருத்து?


/* பின்னாளில் அதே வைரமுத்துவின் பாடல்களை உதித் நாராயண், சாதனா சர்கம் வகையறாக்கள் கைமா செய்து போட்டதும் சரித்திரம்.
*/
வைரமுத்துவின் பருப்பு ரகுமானிடம் வேகவில்லை…
ஜேசுதாஸ் கூட ஒரு முறை சொன்னார்.. “ நான் பாட வந்த போது தமிழ் உச்சரிப்பு சரியில்லை என்று திட்டினார்கள்… இப்போது பாடுபவர்களை என்னவென்று சொல்ல” என்று…


அருமையான பதிவு.


>>>>>வைரமுத்துவின் பருப்பு ரகுமானிடம் வேகவில்லை…
கால ஓட்டத்துடன் செல்வதனால்தான் வரைமுத்து வைரமுத்து! வாலியும் கூட. 🙂
காலம், ரசனை மாறிவிட்டதை உணராமல் தேய்ந்து விட்டவர்கள் பலர் (உதாரணம்: பாரதிராஜா, ராஜேந்தர்)


is this some republish of old version ? music recording now a days doesnt happen at same place is what we know! Mainly for ARR, his gents singer and lady singer record their voices on a pre recorded music CD and send back which gets mixed by the composer.. where can someone go correct pronunciation in this deal ? its all done once the poet has written the song!


//சுசீலாவின் தமிழ்ப் பாடல்களை யார் கேட்டாலும், அவரைத் தெலுங்கு தேசத்திலிருந்து வந்தவராக நினைக்கவேமாட்டார்கள்.//
— உண்மை தான்.. அந்த தொழில் பக்தியை எவ்வளவு மெச்சினாலும் தகும்..
//அதே வைரமுத்துவின் பாடல்களை உதித் நாராயண், சாதனா சர்கம் வகையறாக்கள் கைமா செய்து போட்டதும் சரித்திரம்.//
— அதிலும் உதித் நாராயண்.. கேட்பவர்களை படுத்தியெடுக்கிறார்..


சொக்கன்,
நீங்க சொல்றதைப் பாத்தா இடையினத்திற்கும் வல்லினத்திற்கும் மாத்திரை வேறுபாடு உண்டு என்று சொல்வது போல் இருக்கிறதே? குறிலை விட நெடில் ஒரு மாத்திரை கூடுதல் என்று மட்டுமே படித்த நினைவு. அதனால் இடையின குறிலுக்கும் வல்லின குறிலுக்கும் மாத்திரை அளவில் ஒரு மாத்திரை தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். தவறா?


தற்போதெல்லாம் இசையமைப்பாளர்கள் புதிய வித்யாசமான
குரல் வேண்டுமென்று நினைக்கிறார்களே தவிர உச்சரிப்பு
பற்றி கவலைபடுவதாக தெரியவில்லை.


>>>>>> [Kumaran]: இடையின குறிலுக்கும் வல்லின குறிலுக்கும் மாத்திரை அளவில் ஒரு மாத்திரை தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
குமரனின் கருத்து சரியானது என்று நினைக்கிறேன். ன-வுக்கும் ண-வுக்கும் வேறுபாடு நாக்கு மேல்வாயை எங்கு தொடுகிறது என்பதில்தான் (ல-ள-ழ, ர-ற போன்றவற்றுக்கும் இதே வேறுபாடு தான்). இல்லையா?
எனது தமிழையா திருமூர்த்தியை இந்நேரம் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். நான் அடுத்து சேர்ந்த பள்ளியில் தமிழ் ஆசிரியை மாணவர்களை நோக்கி “கீப் கொய்ட்” சொன்னது ஏற்படுத்திய அதிர்ச்சி இன்னும் விலகவில்லை. 🙂


என்ன ஒரு ஆராய்ச்சி என்ன ஒரு கணிப்பு.ஆஹா .எல்லாவற்றையும் மேலோட்டமாக பார்த்து போய்கொண்டிருக்கும் இந்த அவசர உலகத்தில்,உங்களை படித்தபிந்தான் உள்ளுக்குள்ளே இவ்வளவு விசயங்களா.என்ற ஆச்சர்யம் எழுகிறது.படிக்கும் இளைய தலைமுறை நிச்சயம் கொடுத்து வைத்தவர்கள். நன்றி.


Sir,நீங்க சொல்லி இருக்கற விஷயத்த (இரு பறவைகள்) நா notice பண்ணிருக்கேன். உங்க பதிவ படிச்சதுகப்றம் “ஆஹா நம்ம யோசிச்சத ஒரு வழியா இன்னொருத்தர் சொல்லிடருப்பா” ஒரு சின்ன smile முகத்துல.

1 | Priya Raju
September 13, 2011 at 4:37 pm
சோனு நிகம் பரவாயில்லை. கன்னடப் பாடல்களைப் பாடும்போது, நல்ல உச்சரிப்புடன் பாடுவதாகத் தெரிகிறது.