சாப்பாட்டுப் பயணங்கள்
Posted September 14, 2011
on:- In: Books | Food | Kumbakonam | Mannargudi | Travel | Uncategorized
- 30 Comments
’சமஸ்’ எழுதிய ‘சாப்பாட்டு புராணம்’ என்ற புத்தகத்தை நீங்கள் வாசித்திருக்கிறீர்களோ, தெரியாது. நான் மனப்பாடமே செய்திருக்கிறேன். தஞ்சை, சுற்றுவட்டாரங்களில் உள்ள அட்டகாசமான ‘சாப்பாட்டு’க் கடைகளைச் சுவாரஸ்யமான மொழியில் வர்ணனை செய்து அடையாளம் காட்டும் புத்தகம் அது.
‘சாப்பாட்டு புராண’த்தைப் படித்தபின்னர் அந்தப் பக்கம் பயணம் செல்வது என்றாலே இதில் உள்ள கடைகளை லிஸ்ட் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றாக டேஸ்ட் பார்ப்பது பழக்கமாகிவிட்டது. அநேகமாக ஒன்றுகூட சோடை போனதில்லை.
எனக்குத் தெரிந்து ‘சாப்பாட்டு புராணம்’ இப்போது அச்சில் இல்லை. என்னிடம் இருந்த பிரதியையும் யாரோ கடன் வாங்கிச் சென்றுவிட்டார்கள். ஆகவே சமீபத்திய பயணங்களின்போது சாப்பாட்டு அம்சங்கள் குறைந்துபோயின.
போன வாரம் ஒரு திருமணத்துக்காக மன்னார்குடிக்குக் கிளம்பினோம். அந்தச் செய்தியை ட்விட்டரில் அப்டேட் செய்தேன். நண்பர் சந்தோஷ் குரு பதில் எழுதி ‘கும்பகோணம், மன்னார்குடியில் இருக்கும் சாப்பாட்டு புராணக் கடைகளை விட்றாதீங்க’ என்றார்.
’எனக்கும் ஆசைதான். ஆனா எந்தெந்தக் கடைன்னு மறந்து போச்சே!’ என்றேன்.
’சாப்பாட்டு விஷயத்தில் இப்படி மனம் வருந்தலாமா?’ என்று நெகிழ்ந்த சந்தோஷ் குரு உடனடியாக அந்தக் கடைகளைப் பட்டியல் போட்டு ஈமெயிலில் அனுப்பிவைத்தார். திருமணம், கோயில் பயணங்களுக்கு நடுவே அவர் அனுப்பியவற்றில் ஐந்து கடைகளைமட்டும் நேரில் சென்று பார்க்கமுடிந்தது. அந்தக் குறிப்புகள் இங்கே.
1. நீடாமங்கலம் – பால் திரட்டு
மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய ஊர் நீடாமங்கலம். ‘வீரா’ படம் பார்த்தவர்களுக்கு இந்த ஊர் நன்றாக நினைவிருக்கும்
நீடாமங்கலம் மேல ராஜ வீதியில் உள்ள ’கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம்’ அலுவலகத்தில் மாலை 4 மணிக்குமேல் கிடைக்கும் என்று சமஸ் குறிப்பிட்டிருந்தார். நாலே முக்கால் மணிக்கு அந்தப் பக்கம் சென்று விசாரித்தோம். உடைந்து விழும் நிலையில் இருந்த ஒரு கட்டடத்தைக் காண்பித்து ‘ பின்னாடி போங்க’ என்றார்கள். போனோம். மாடு இருந்தது. பால் இருந்தது. ஆனால் பால் திரட்டு இல்லை.
விடுவோமா? நமக்குதான் நாக்கு நீளமாச்சே. அங்கிருந்த ஒருவரிடம் விசாரித்தோம். எங்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டு ‘இப்பல்லாம் பாலுக்கு ரொம்ப டிமாண்ட் ஆகிடுச்சுங்க, அதனால பால் திரட்டு போடறதை நிறுத்திட்டோம்’ என்றார்.
’வேற எங்கேயாவது கிடைக்குமா?’
‘சான்ஸே இல்லை!’
ஓகே. முதல் விக்கெட் டவுன்!
2. மன்னார்குடி – குஞ்சான் செட்டி கடை
மன்னார்குடி கடைத்தெருவில் இருக்கும் தக்கனூண்டு கடை. இங்கே மிக்ஸர், காராபூந்தி, இன்னபிற வீட்டுப் பலகாரங்கள் பிரபலமாம்.
அநேகமாக எல்லா ஆட்டோ டிரைவர்களுக்கும் குஞ்சான் செட்டி கடையைத் தெரிந்திருந்தது. பேருந்து நிலையத்திலிருந்து சற்றுத் தொலைவில் வலதுபக்கம் திரும்பினால் கடைத்தெரு. அங்கே இரண்டு நிமிடம் நடந்தால் வலதுபக்கம் இந்தக் கூரை வேய்ந்த சிறிய கடை வருகிறது. கொஞ்சம் அசந்தால் மிஸ் செய்துவிடுவீர்கள்.
கடை வாசலில் சின்னக் கூட்டம். எட்டிப் பார்த்தபோது குவித்த பலகாரங்களுக்கு நடுவே சம்மணமிட்டிருந்த ஒருவர் மும்முரமாக எடை போட்டுப் பொட்டலம் கட்டிக்கொண்டிருந்தார்.
இங்கே அதிக variety இல்லை. ஆனால் அநேகமாக எல்லாப் பலகாரங்களும் சூப்பர் சுவை. குறிப்பாகக் காராபூந்தி, மைசூர்பாக்.
விலையும் மலிவுதான் (கிலோ ரூ 100/-). நீங்கள் ஐந்து ரூபாய்க்குக் கேட்டாலும் பொட்டலம் கட்டித் தருகிறார்கள். நான்கு நாள்வரை வைத்துச் சாப்பிடலாம் என்கிறார்கள்.
3. மன்னார்குடி – டெல்லி ஸ்வீட்ஸ்
குஞ்சான் செட்டி கடையிலிருந்து அரை கிலோமீட்டர் நடந்தால் இடதுபக்கம் டெல்லி ஸ்வீட்ஸ் வருகிறது. இதுவும் சின்னக் கடைதான். உன்னிப்பாகப் பார்த்தால்தான் கண்ணில் படும்.
According to ‘சாப்பாட்டு புராணம்’, இங்கே ஃபேமஸான ஐட்டம், முந்திரி அல்வா! நாங்கள் இங்கே நின்றிருந்த 10 நிமிடத்துக்குள் குறைந்தது ரெண்டு கிலோ முந்திரி அல்வா விற்றிருக்கும். இன்னும் பல பெரிய டப்பாக்களில் சுடச்சுட அல்வா வந்தபடி இருந்தது.
முந்திரி என்றவுடன் என் மனைவி பயந்துவிட்டார். ‘அத்தனையும் கெட்ட கொழுப்பு, கலோரி-ரிச், உடம்புக்குக் கேடு, வாங்காதே’ என்றார்.
‘சரி, ஐம்பது க்ராம்மட்டும் வாங்கறேன், சும்மா டேஸ்ட் பார்ப்போம்’ என்றேன் மனமில்லாமல்.
வாங்கினோம். டேஸ்ட் பார்த்தோம். அது முந்திரி அல்வா இல்லை. வழமையான அல்வா, நெய்கூட இல்லை, எண்ணெயில் செய்ததுதான். ஆங்காங்கே முந்திரிகள் தென்பட்டன. அவ்வளவுதான்.
ஆனால் சுவை அபாரம், இன்னும் கொஞ்சம் வாங்கிக்கொண்டோம் – இதுவும் விலை மலிவுதான், கிலோ ரூ 120/-
4. கும்பகோணம் – முராரி ஸ்வீட்ஸ்
மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் திரும்பி ரயில் ஏறுமுன் முராரி ஸ்வீட்ஸைத் தேடிச் சென்றோம். பெரிய கடைவீதியில் முதலாவதாக இருக்கிறது. எல்லா ஆட்டோ டிரைவர்களுக்கும் தெரிந்திருக்கிறது. நேராகக் கொண்டு இறக்கிவிடுகிறார்கள்.
முராரி ஸ்வீட்ஸ் நூற்றாண்டைத் தொடப்போகும் நிறுவனம். அவர்களது வளர்ச்சியைச் சிறு ஃபோட்டோ கண்காட்சிபோல் வைத்துள்ளார்கள். கருப்பு வெள்ளைப் படங்களைப் பார்க்க செம ஜாலியாக இருக்கிறது – 70 வருடம் முன்னால் முராரி ஸ்வீட்ஸ் இன்றைய குஞ்சான் செட்டி கடைமாதிரிதான் இருந்திருக்கிறது!
முன்பு எப்படியோ, இப்போதைய முராரி ஸ்வீட்ஸில் வட இந்திய ஸ்வீட்ஸ் பிரபலம். குறிப்பாக, ’பாஸந்தி’தான் சாப்பாட்டு புராணத்தில் இடம் பெற்ற ஸ்பெஷல் இனிப்பு.
வழக்கமான பாஸந்திகளில் இனிப்பு ஓவராகக் கடுப்பேற்றும். ஆனால் இங்கே ஏதோ டயட் பாஸந்திபோல மெலிதான இனிப்பு, அட்டகாசமான சுவை, தவறவிடாதீர்கள் (விலை? மறந்துபோச்சு!)
5. கும்பகோணம் – ரோஜா மார்க் இனிப்புகள்
கடைசியாக, கும்பகோணத்தின் ஸ்பெஷல் கமர்கட், பொரி உருண்டை, கடலை உருண்டை போன்றவை ‘ரோஜா மார்க்’ நிறுவனத்தில் வாங்கவேண்டும் என்று ‘சாப்பாட்டு புராணம்’ அருளியிருந்தது. தேடிச் சென்றோம்.
பிரம்மன் கோயில் தெருவில் ஒரு சின்ன ஓட்டு வீடு. அதுதான் ரோஜா மார்க் தயாரிப்பு நிறுவனம். அநேகமாக ‘ஜென்டில் மேன்’ படத்தில் வரும் அப்பள ஃபேக்டரி மாதிரி இருக்கும் என்று நினைக்கிறேன்.
எங்களுடைய நேரம், ரோஜா மார்க் ஃபேக்டரிக்கு ஞாயிற்றுக்கிழமை லீவாம். ‘பெங்களூரிலிருந்து இதுக்காகவே வர்றோம்’ என்று ஐஸ் வைத்தும்கூட கதவைத் திறக்க மறுத்துவிட்டார்கள். ஆகவே ஃபோட்டோமட்டும் எடுத்துக்கொண்டு திரும்பினோம்.
ஆக, ஐந்துக்கு மூன்று பழுதில்லை. நன்றி சந்தோஷ் குரு. நன்றி சமஸ்
***
என். சொக்கன் …
14 09 2011
30 Responses to "சாப்பாட்டுப் பயணங்கள்"

சுவையான பதிவு 🙂


Excellent!


அன்புள்ள சொக்கன்,
உங்கள் ‘சாப்பாட்டுப் பயணங்கள்’ கட்டுரையை வாசித்தேன். பயனுள்ளதாக இருக்குமே நினைக்கிறேன். நான் 2004 முதல் 2009 வரை மதுரையிலிருந்து கும்பகோணம் வழியாக அல்லது நாகப்பட்டினம் வழியாக காரைக்கால் சென்றிருக்கிறேன் பலமுறை. அத்தகைய உணவகங்களை அறிந்ததில்லை. மீண்டும் ஒருமுறை செல்லும்போது கும்பகோணம் – முராரி ஸ்வீட்ஸ், ரோஜா மார்க் இனிப்புகள், நீடாமங்கலம் – பால் திரட்டு முயற்சி செய்கிறேன். நன்றி.


அருமையான பதிவு.
இனிக்கிறது.
வாழ்த்துக்கள்.


மாயவரம் முரளி உணவகத்தில் சாப்பாடு மிகவும் ருசியாக வீட்டு சாப்பாடு போல இருக்கும். அதையும் சுவைத்து விட்டு வாருங்கள்


பொதுவாகவே கும்பகோணம்,மாயவரம் பகுதிகளில் சாப்பாடு
நல்லா இருக்கும்.10 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில்
சாப்பிட்ட பூரி,மசால்,டிகிரி காபி இன்னும் நினைவில் உள்ளது.


இப்புத்தகத்தில் மன்னர்குடியின் சிறப்புகளாக டெல்லி ஸ்வீட்ஸ் அல்வா, குஞ்சான் கடை பக்கோடா, அன்வர் கடை மிலிட்டரி பரோட்டா, மன்னார்குடி ‘உடுப்பி கிருஷ்ண பவன்’ ரவா தோசை கடப்பா மற்றும் நேதாஜி ஸ்டால் டீ பற்றி குறிப்பிட்டுள்ளார்.


அருமையான பதிவு…
சமஸ் அவர்களின் வலைப்பூ-http://writersamas.blogspot.com/(http://samasidam.blogspot.com/)
தினமணி இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றும் சமஸ் அவர்கள் எழுதியுள்ள புத்தகம் சாப்பாட்டுப் புராணம். இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் ‘தினமணி’ இணைப்பிதழான ‘கொண்டாட்ட’த்தில் ‘ஈட்டிங் கார்னர்’ பகுதியில் ஓராண்டாக வெளிவந்தது. மன்னார்குடியை பூர்வீகமாகக்கொண்ட சமஸ் அவர்கள் வெவ்வேறு ஊர்களின் சிறப்பான உணவு வகைகளைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். இப்புத்தகத்தில் மன்னர்குடியின் சிறப்புகளாக டெல்லி ஸ்வீட்ஸ் அல்வா, குஞ்சான் கடை பக்கோடா, அன்வர் கடை மிலிட்டரி பரோட்டா, மன்னார்குடி ‘உடுப்பி கிருஷ்ண பவன்’ ரவா தோசை கடப்பா மற்றும் நேதாஜி ஸ்டால் டீ பற்றி குறிப்பிட்டுள்ளார்.
உயிர்மை பதிப்பகத்தில் சாப்பாட்டு புராணம் புத்தகம் கிடைக்கக்கூடும்!
நன்றி.


நீங்கள் அசைவப்பிரியராக இருக்கும்பட்சத்தில் சீர்காழி – சிதம்பரம் சாலையில் புத்தூர் என்ற ஊரில் இருக்கும் ஜெயராமன் ஹோட்டலில் முயற்சி செய்து பாருங்கள்


அட ! நீடாமங்கலம் என்னோட சொந்த ஊர்ங்க ! எங்க ஊர் பால் திரட்டு இவ்ளோ பேமஸ் ஆகிடுச்சா? நான் ஊருக்கு போகும் போது எங்க அம்மா எனக்கு பிடிக்கும்னு வாங்கி வைப்பாங்க. அடுத்த முறை நிச்சயம் வாங்கி சாப்பிடனும். மன்னை, குடந்தை என நம்ம ஊர் பக்கம் ஒரு ரவுண்டு வந்திருக்கீங்க. பதிவை மிக ரசித்தேன். நீங்க சொன்ன மற்றவை முயற்சித்ததில்லை. முயற்சிக்கணும்


//நான் அ-அசைவன். ஆகவே இதனை முயற்சி செய்வதற்கில்லை. மன்னிக்க //
The reason why vegetarians are good in pulling legs is, NVs are அசைவப் பிரியர்கள்; Vs are அசைவுப் பிரியர்கள். வ-வு 🙂


thiruvarur ashoka halwa try panunga

1 | Pavithra Srinivasan
September 14, 2011 at 11:27 am
சூப்பர் போஸ்ட். 🙂