மதிப்பு
Posted September 26, 2011
on:- In: Bangalore | Music | Price | Uncategorized | Value | Visit
- 12 Comments
ட்விட்டர் நண்பர் கவிராஜன் (https://twitter.com/#!/kavi_rt) பெங்களூரு வந்திருந்தார். இன்னொரு ட்விட்டர் நண்பர் சுரேஷ் (https://twitter.com/#!/raaga_suresh) ஏற்பாட்டில் அவரைச் சந்திக்கமுடிந்தது. இரண்டு மணி நேரம் நல்ல அரட்டை.
வழக்கமாக வெளியூர் நண்பர்கள் பெங்களூரு வந்தால் ஏதேனும் ஒரு Shopping Mall Food Courtல் சந்திப்பதுதான் வழக்கம். இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக, ஓர் antique shopல் சந்தித்தோம்.
காரணம், கவிராஜன் வினைல் ரெக்கார்டுகளைச் சேகரித்துவருகிறார். பெங்களூரு அவென்யூ ரோட்டில் உள்ள ஒரு பழம்பொருள் கடையில் கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரம் வினைல் ரெக்கார்டுகள் உள்ளன என்கிற செவிவழிச் செய்தியின் அடிப்படையில் மூவரும் அந்தக் கடையைத் தேடிச் சென்றோம்.
லேசான பழுப்புத் தூசு படிந்த நீளக் கடை. அதனுள் மர அலமாரிகளில் புராதன சாமான்கள் – ஃப்ரேம் செய்யப்பட்ட அந்தக் கால விளம்பரங்கள், சினிமா போஸ்டர்கள், வால்வ் ரேடியோக்கள், ’ட்ரிங் ட்ரிங்’ டயல் ஃபோன்கள், பீங்கான் ஜாடிகள், மொழமொழன்னு யம்மா யம்மா பொம்மைகள், மங்கிய ஓவியங்கள், விநோத வடிவங்களில் நாற்காலிகள், மேஜைகள், டிரங்குப் பெட்டிகள், விசிறிகள், சைக்கிள்கள், இன்னும் ஏதேதோ.
இந்த விநோதக் கலவையைப் பார்க்கும்போது எனக்கு ரா. கி. ரங்கராஜன் மொழிபெயர்த்த ஜெஃப்ரே ஆர்ச்சர் சிறுகதை ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. அதன் பெயர் என்ன என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே கடைக்காரர் தோளில் துண்டை உதறிப்போட்டபடி வந்தார். ‘என்ன வேணும் சார்?’
‘வினைல் ரெக்கார்ட்ஸ்!’
‘ஹிந்தியா, கன்னடமா?’
‘தமிழ்!’
‘அதெல்லாம் மேலே இருக்கு’ என்றவர் படிகளில் விறுவிறுவென்று மேலேறினார். இன்னொரு ‘பழுப்புத் தூசு படிந்த நீளக் கடை’யைத் திறந்து காட்டினார். அதன் மூலையில் அலமாரியொன்றில் கட்டுக்கட்டாக வினைல் ரெக்கார்ட்கள் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், பக்திப்பாடல், கர்நாடக சங்கீதம் என்று வகைவகையாகச் சரித்துவைக்கப்பட்டிருந்தன.
கடைக்குள் ஒரே இருட்டாக இருக்குமோ என்ற எண்ணத்தில் சுரேஷ் டார்ச் விளக்கெல்லாம் எடுத்துவந்திருந்தார். இங்கே நிலைமை அந்த அளவு மோசமில்லை. ஆனால் அந்த வினைல் ரெக்கார்ட்களை நெருங்குவதுதான் பெரும்பாடாக இருந்தது. கடைக்காரர் எப்படியோ சந்துபொந்துகளில் நுழைந்து எதையோ எங்கேயோ மாற்றி வழி பண்ணிக் கொடுத்தார். கவிராஜன் உற்சாகமாக உள்ளே புகுந்து ரெக்கார்ட்களைத் தேட ஆரம்பித்தார்.
‘பார்ட்டி மாட்டிச்சு’ என்று நினைத்த கடைக்காரர் தன்னுடைய விதிமுறைகளை அவிழ்த்துவிட்டார். ‘ஒவ்வொரு ரெக்கார்டும் 150 ரூபாய் சார், அப்புறம் பேரம் பேசக்கூடாது!’
இந்தியாவில் பேரம் பேசக்கூடாது என்றால் எவன் மதிப்பான்? ‘பார்க்கலாம் சார், ஹிஹி’ என்றோம்.
‘அதெல்லாம் பார்க்கறதுக்கு இல்லை சார், வாங்கறதுன்னா 150 ரூபாய் கொடுத்து வாங்கிக்கோங்க, நீங்க நூறு ரெக்கார்ட் ஒண்ணா வாங்கினாலும் அதான் விலை!’ என்றார் அவர். ‘ஒருவேளை நீங்க என்னோட கலெக்ஷன் மொத்தத்தையும் வாங்கறதுன்னா 20 ரூபாய்ன்னு போட்டுத் தர்றேன், மத்தபடி ஒரு பைசா குறைக்கமாட்டேன்!’ என்று சொல்லிவிட்டுக் கீழே நடந்தார்.
எனக்கு ஆச்சர்யம். முப்பது ரூபாய் சிடியில் நூற்றுச் சொச்ச எம்பி3கள் கொழிக்கிற இந்தக் காலத்தில் ஏழெட்டுப் பாடல்களுக்கு 150 ரூபாய் எவர் தருவார்?
ஆனால் கவிராஜன் தரத் தயாராக இருந்தார். இதில் வரும் ஒலித்தரம் வேறெதிலும் கிடைக்காதாம். அந்த அனுபவத்துக்கே இந்த விலை தாராளமாகத் தரலாமாம். நான் என்னத்தைக் கண்டேன்?
உண்மையில் நான் இப்போதுதான் முதன்முறையாக ‘வினைல் ரெக்கார்ட்’ என்கிற சமாசாரத்தைப் பார்க்கிறேன். ஒரு முழ விட்டத்தில் சிடியின் நெகட்டிவ் பிரதிமாதிரி கன்னங்கரேல் என்று இருக்கிறது. வெளியே சச்சதுரமாக நல்ல கெட்டி அட்டையில் உறை. அதில் அந்தந்தப் படத்தின் ஹீரோ, ஹீரோயின், இசையமைப்பாளர், பாடலாசியர், முக்கியமாகத் தயாரிப்பாளர்களின் பெப்பெரிய புகைப்படங்களைப் பார்க்கமுடிந்தது. இளையராஜா, தேவா, எஸ். ஏ. ராஜ்குமார், பி. வாசு, கங்கை அமரன், வைரமுத்து போன்றோரின் அபூர்வப் புகைப்படங்களை ரசித்துக்கொண்டிருந்தேன். அந்தக் கால ஆடியோ புக் – கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ தென்பட்டது – இப்போதைய ‘சீயான்’ விக்ரமின் முதல் படமாகிய ‘தந்துவிட்டேன் என்னை’ ஸ்டில் ஒன்றுகூடக் கிடைத்தது. அச்சு அசல் ‘கருத்தம்மா’ ராஜாபோலவே இருக்கிறார் மனிதர்.
ஆனால் இந்தச் சுவாரஸ்யமான Archive அலசலெல்லாம் கொஞ்ச நேரம்தான். என்னுடைய வழக்கமான தூசு ஒவ்வாமை(Dust Allergy)த் தும்மல்கள் வழிமறிக்க, கொஞ்சம் விலகி நின்றுகொண்டேன். தூசு குறைவாக இருந்த ஒரு வினைல் ரெக்கார்டைக் கையில் எடுத்துப் பார்த்தேன். ‘கவிராஜன், இந்த ரெக்கார்டெல்லாம் இவ்ளோ அழுக்கா இருக்கே, ஒழுங்கா ஓடுமா? எந்த தைரியத்துல 150 ரூபாய் கொடுத்து இதை வாங்கறீங்க?’
அதை ஏதோ ஒரு கோணத்தில் வைத்துப் பார்த்தால் நல்ல ரெக்கார்டா கீறல் விழுந்ததா என்று தெரிந்துகொள்ளலாம் என்றார் கவிராஜன். அதோடு நிறுத்தவில்லை. சர்ஃப் பொடிக் கலவையை ராத்திரி முழுக்க ஊறவைத்துத் துகள்களை நீக்கிச் சோப்புத் தண்ணீரைமட்டும் எடுத்து ரெக்கார்ட்களைச் சுத்தப்படுத்துவது எப்படி என்று நிறுத்தி நிதானமாக விவரித்தார். அப்போது அவர் தன் குழந்தைக்குத் தலைக்குத் தேய்த்துக் குளிப்பாட்டுகிற ஓர் இளம் தாயைப் போன்ற பரவசத்தோடு தென்பட்டார்.
கவிராஜன் புரட்டிப் போட்டுத் தேடிக்கொண்டிருந்த வினைல் ரெக்கார்ட்களுக்கு மத்தியில் சுரேஷ் கையில் ஒரு கேஸட் தென்பட்டது. எடுத்துப் பார்த்தால் சோனி ம்யூசிக் வெளியிட்ட ‘Mask Of Zorro’ பாடல்கள். மேலுறைகூடப் பிரிக்காத புத்தம்புதுசு. ‘Antique Shopல இது எப்படி?’ என்று ஆச்சர்யப்பட்டோம்.
சிறிது நேரம் கழித்து, கவிராஜனின் தேடல்கள் முடிந்தன. எட்டு ரெக்கார்ட்களை எடுத்துவைத்தார். கடைக்காரர் அவற்றைக் கவனமாக எண்ணிப்பார்த்துவிட்டு, ‘1200 ரூபாய்’ என்றார்.
‘ஆயிரம்ன்னு சொல்லுங்களேன்!’
‘நோ பார்கெய்ன்னு ஆரம்பத்திலயே சொன்னேனே சார்’ என்று சலித்துக்கொண்டார் அவர். ‘எனக்கு இதுல ஒரு பைசா லாபம் இல்லை. நஷ்டத்துக்குதான் விக்கறேன். தெரியுமா?’
’சரி சரி’ என்றபடி அவரிடம் ‘Mask Of Zorro’ கேஸட்டைக் காட்டினார் சுரேஷ். ‘இது என்ன விலை?’
‘எடுத்துக்கோங்க சார். ஃப்ரீ’ என்றார் கடைக்காரர்.
பழம்பொருள் கடையில், பிரிக்கப்படாத புதுப்பொருளுக்கு மதிப்பு அவ்வளவுதான்!
***
என். சொக்கன் …
26 09 2011
12 Responses to "மதிப்பு"

கலக்கல்ஸ் 😉


//பழம்பொருள் கடையில், பிரிக்கப்படாத புதுப்பொருளுக்கு மதிப்பு அவ்வளவுதான்!//
முத்தாய்ப்பான வரிகள் சாரே.. 🙂


நல்ல பதிவு. நீங்கள் இதுவரையில் வினைல் ரெகார்ட் பார்த்ததில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நானும் அவர் அந்த கேசட் இலவசமாக கொடுப்பார் என்று நினைக்கவில்லை !!


Antique shop address please!


நான் ஒரு தடவை கூட இந்தத் தட்டில் பாட்டுக் கேட்டதில்லை என்பது ஆதங்கத்தை அளிக்கிறது இந்தப் பதிவைப் படிக்கும்போது.
கடைசி வரி நல்ல ’நச்.’


அருமையான பதிவு.


அந்த கேசட்டை இலவசமாக மட்டும் கொடுத்ததாக தோன்றவில்லை. என்னவொரு அலட்சிய முகபாவம் அவரிடம் வெளிப்பட்டது! 🙂
வினைல் ரெக்கார்டிலோ அல்லது சிடியிலோ இசை கேட்பது என்பதை ஒலித்தரம், துல்லியம், ஒலி வளம்? (rich sound), ஒலி மேடை (sound stage) என்பதோடெல்லாம் தொடர்புபடுத்தலாம் என்றாலும் சில அறிவியல் அடிப்படை கொண்டவை சில நாம் உணர்பவை! கேட்கும்போது செலவழித்த பணம் நினைவுக்கு வருவதால் 🙂
நகைச்சுவை தவிர்த்து, அனலாக் வடிவத்தில் ரெக்கார்டிங் செய்யப்பட்ட ”லைவ் ஆர்கெஸ்ட்ரா” காலங்களின் இசையை வினைல் ரெக்கார்டுகளில் கேட்கும்போது ஒரு நிறைவான உணர்வு தோன்றுவதென்னவோ உண்மை.


வினைல் ரெக்கார்டுகள் எப்படி இருக்குமென்று நானும் பார்த்ததில்லை. படம் போட்டிருக்கலாம் சொக்கன் சார்!


பாலகனாய் உறவினர் வீட்டில் வி.ரெ கேட்ட ஞாபகத்தைக் கிளரிவிட்டது இப்பதிவு. நானும் அக்கடையில் இருப்பதைப் போல் நினைக்க மனசெல்லாம் குஷி. நன்றி.


Pazhamperum Potrukal endrum vilai mathipatravai, nanbargal pazhya ‘oru roobai’ notai 100/1000 rs koduthu vaanguvathai kaankiren.
Mega suvarasiyamaana pathivu!!! velinaadugalil(foreign) vinyl record ippothu meendum athigam puzhakathirrukku varugirathu! Still i’m able to find old vinyl records/gramophones in ‘Goodwill’ stores in US(but only old eng classics).
I was longing to hear some of Raja Sir’s song on Vinyl records, this article had boosted me to buy one immediately, particularly “Kaaki Chattai”, “Nenjathai Killathae” and “Tic Tic Tic”

1 | பலே பிரபு
September 26, 2011 at 4:11 pm
உண்மைதான் சில பொருட்களின் மதிப்பு பல பேருக்கு தெரிவதில்லை. வினைல் ரெகார்ட்க்கு ஒரு படம் போட்டு இருக்கலாமே. நாங்களும் பார்த்து இருப்போம்.