மனம் போன போக்கில்

விழுந்த எண்ணங்கள்

Posted on: September 27, 2011

இன்றைய Random பாட்டு, ‘ஆனந்த ராகம், கேட்கும் காலம்’.

ராஜா இசையில் உமா ரமணன் எத்தனையோ அருமையான பாடல்கள் பாடியிருந்தாலும் இந்தப் பாடல் அவரது வாழ்நாள் சாதனை. எனக்குப் பிடித்த அவரது மற்ற சில பாடல்கள்: பூங்கதவே தாள் திறவாய், செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு, மஞ்சள் வெயில், கண்ணனே நீ வரக் காத்திருந்தேன், கஸ்தூரி மானே, பொன்மானே கோபம் ஏனோ, ஊருறங்கும் சாமத்திலே, கீதம் சங்கீதம், ஆகாய வெண்ணிலாவே, ஏலேலங்குயிலே, ஹோ உன்னாலே நான், and of course, ‘ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்.’

இதில் ‘ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்’ பாடலை அவர் பாடியிருப்பதே பலருக்குத் தெரியாது. காரணம் படத்தில் அவரது குரல் இல்லை. ஏதோ காரணத்தால் அந்தச் சரணத்தைமட்டும் வெட்டிவிட்டார்கள்.

ஆனால் எனக்கு அந்த முதல் சரணம் ரொம்பப் பிடிக்கும். ஏதோ பாட்டுவாத்தியார் பக்கத்தில் கையைக் கட்டிக்கொண்டு பாடுகிற மாணவியைப்போல் ட்யூனை அட்சரசுத்தமாக அவர் பாடுவது ரொம்பப் பிரமாதமாக இருக்கும்.

சாதாரணமாகவே ராஜாவின் ட்யூன்களை உமா ரமணன் பாடும்போது இந்த ‘கையைக் கட்டிய’ பாவனையைச் சுலபமாகப் பார்க்கலாம். கூடப் பாடுவதும் ராஜாவே என்றால் இன்னும் மோசம் – சந்தேகமிருந்தால் ’பாட்டுப் பாட வா’ படத்தில் வரும் ‘நில் நில் நில்’ என்ற டூயட்டைக் கேட்டுப்பாருங்கள், ஆண் குரல் தன்னிஷ்டத்துக்கு எங்கெங்கோ எகிறிப் போக, இவர்மட்டும் துளி பிசகில்லாமல் வரம்புக்குள் நின்று ஆடியிருப்பார்.

’ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்’ பாடலில் இந்த வித்தியாசம் இன்னும் தெளிவாகத் தெரியும். ’கொள்ளிடம் நீர்மீது’ எனத் தொடங்கும் முதல் சரணத்தில் உமா ரமணன் திராவிட்போல ’மடி’யாக Text Book Cricket ஆட, ‘கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்’ எனத் தொடங்கும் இரண்டாவது சரணத்தில் எஸ். பி. பி. சச்சின்போல் ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்.

அதென்ன சச்சின்? சேவாக் / தோனி என்று சொல்லப்படாதா?

சொல்லலாம். ஆனால் வாத்தியார் முன் கை கட்டின ரேஞ்சுக்கு இல்லாமல் சுதந்தரமாகப் பாடினாலும்கூட எஸ்.பி.பி. அந்த ரெண்டாவது சரணத்திலும் அழகாக டெஸ்ட் க்ரிக்கெட்தான் ஆடுகிறார். 20:20 ரேஞ்சுக்கு Fun Cricket ஆக்கிவிடுவதில்லை.

போகட்டும். கிரிக்கெட் உதாரணங்கள் போரடிக்கின்றன. வேறு ஏதாவது பேசுவோம்.

இன்றைய காலை நடையின்போது துணைக்கு வந்தது ‘மண் வாசனை’. குறிப்பாக ‘அரிசி குத்தும் அக்கா மகளே’ என்ற பாட்டு.

’கிராமத்தில் ஓர் இளைஞன் தன்னுடைய முறைப்பெண்ணைக் கிண்டல் செய்து பாடும் பாட்டு’ என்பதுதான் ஒன்லைன். எந்த முக்கியத்துவமும் இல்லாமல் கடந்து சென்றுவிடக்கூடிய சூழ்நிலைதான். மேலோட்டமாகப் பார்த்தால் இதுவும் இன்னொரு ‘டண்டனக்கா’ மெட்டுதான். ஆனால் இந்தச் ‘சாதாரண’ப் பாட்டுக்குள் ராஜா செய்திருக்கும் சில அசாதாரண விஷயங்களைக் கவனித்தால் ’ஆளில்லாத கடையில இந்தாள் யாருக்காகய்யா டீ ஆத்தினார்?’ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

உதாரணமாக, இந்தப் பாட்டின் மெட்டு, இசை, குரல்களையெல்லாம் மறந்துவிட்டு வெறும் தாளக்கட்டைமட்டும் ஐந்து நிமிடத்துக்குத் தொடர்ந்து கவனித்துப்பாருங்கள். ’தொகையறா’வுக்குத் தருகிற அட்டகாசமான அலங்கரிப்பில் தொடங்கிப் ’பல்லவி’யின் தொடக்கத்தில் சிறிது நேரம் காணாமலே போய்ப் பின்னர் (கதாநாயகி நாயகனைத் தேடும் நேரத்தில்) குறும்பான சிறுதாளமாகத் திரும்பி வந்து, மீண்டும் பல்லவியோடு இழைந்து செல்லும் தாளம் சரணங்களுக்கு முந்தைய இடையிசைகளில் முற்றிலும் மாறுபட்ட ஓர் உருவமெடுக்கிறது. பெண் குரலுக்கு வேறுவிதம், ஆண் குரலுக்கு சற்றே மாறுபட்ட இன்னொரு விதம் என்று பகடி செய்கிறது, ’உன்னைக் கட்டிக்க என்னை விட்டா யாரு மச்சான்’ என்ற வரியில் மீண்டும் பிரதான இழையுடன் வந்து இணைந்துகொள்கிறது, அதேநேரம் இதுவரை காணாமல் போயிருந்த உலக்கைச் சத்தத்தை இங்கே சரியாகக் கொண்டுவந்து சேர்க்கிறார் ராஜா – இந்தப் பாடலில் தாளம் எந்த இடத்தில் மாறுகிறது, ஏன் மாறுகிறது என்று யோசிக்க ஆரம்பித்தால் பல கற்பனைகளுக்கு இடம் உண்டு.

மீண்டும் ‘ஆனந்த ராக’த்துக்கு வருவோம். இந்தப் பாடல் இடம் பெற்ற படம் ‘பன்னீர் புஷ்பங்கள்’, எழுதியவர் கங்கை அமரன், இயக்கம் பாரதி – வாசு (சந்தான பாரதி – பி. வாசு). ராஜா ரசிகர்களுக்கு ரொம்பப் பிடித்த இந்தப் பாடலைப் பின்னர் ராம்கோபால் வர்மா தனது ஹிந்திப் படம் ஒன்றில் இடம் பெறச் செய்தார். ’சாரா யே ஆலம்’ என்ற அந்தப் பாடலைப் பாடியவர் ஷ்ரேயா கோஷல்.

இந்த ’ஆனந்த ராக’த்தில் கொஞ்சம் கவனித்துக்கேட்டால்மட்டுமே உறுத்தக்கூடிய ஒரு வரி, முதல் சரணத்தில் இருக்கிறது:

கள்ளம் இன்றி உள்ளங்கள் துள்ளி எழ

கட்டிக்கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ

உமா ரமணன் இப்படிதான் பாடுகிறார். ஆனால் இந்த வரியில் ’எண்ணங்கள் மெல்ல விழ’ என்பது சரியா?

என் கணிப்பு, ‘எண்ணங்கள் மெல்ல அவிழ’ (அதாவது, எண்ணங்கள் மெதுவாக மலர) என்று கங்கை அமரன் எழுதியிருக்கவேண்டும், அல்லது எழுத நினைத்திருக்கவேண்டும். பின்னர் அதனை மெட்டில் உட்காரவைப்பதற்காக எண்ணங்களை விழவைத்துவிட்டார். கொஞ்சம் கரடுமுரடாகிவிட்டது.

இதேபோல் இன்னொரு வேடிக்கையான விஷயம், ’ஜோடி’ படத்தில் வரும் ’வெள்ளி மலரே’ பாடலில் ஒரு வரி, வைரமுத்து எழுதியது:

மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள்

கண்ணொளியில் மலர்வன காதல் பூக்கள்

உண்மையில் வைரமுத்து எழுத நினைத்தது ‘மின்னல் ஒளியில் மலர்வன தாழம்பூக்கள்’ – சூரியனைக் கண்டு தாமரை மலர்வதுபோல, மின்னல் ஒளியில் தாழை மலரும் என்று ஒரு நம்பிக்கை. உவமைக்கவிஞர் சுரதா ஒரு பாட்டில் ‘சுடர்மின்னல் கண்டு தாழை மலர்வதுபோலே’ என்று எழுதியிருக்கிறார்.

ஆனால் இங்கே, ரஹ்மானின் மெட்டில் ‘மின்னல்’க்கு இடம் இல்லை. ‘மின்னல் ஒளியில் மலர்வன தாழம்பூக்கள்’ என்று எழுதமுடியாது. சட்டென்று ‘மின்னொளி’ என்று சுருக்கிவிட்டார் வைரமுத்து. மின் ஒளி – Electric light வெளிச்சம் பட்டுத் தாழம்பூ மலர்வதாக அர்த்தம் வந்துவிட்டது.

சில சமயங்களில் கவிஞர்கள் சரியாகவே எழுதியிருப்பார்கள். பாடுகிறவர்கள் சொதப்பிவிடுவார்கள், அல்லது பதிவு செய்கிறவர்கள் சொதப்பிவிடுவார்கள். இதற்கு நல்ல உதாரணம் ‘சிந்திய வெண்மணிச் சிப்பியில் முத்தாச்சு’ என்கிற ‘பூந்தோட்டக் காவல்காரன்’ பாட்டு. எழுதியவர் கங்கை அமரன்.

இந்தப் பாட்டின் இரண்டாவது சரணத்தில் கே. ஜே. யேசுதாஸ் பாடும் சில வரிகள்:

தாய் தந்த பாசம்,

தந்தை உன் வீரம்,

சேய் கொள்ள வேண்டும் அன்பே, அன்பே

’தந்தை ***உன்*** வீரம்’ என்று வருவதால் இந்த வரிகளைப் பெண் குரல் (பி. சுசீலா) பாடியிருக்கவேண்டுமா? அல்லது ‘தந்தை என் வீரம்’ என்று எழுதப்பட்டிருந்ததைப் பாடகர் தவறாகப் பாடிவிட்டாரா? நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

Followup: https://nchokkan.wordpress.com/2011/10/21/rgtwrng/

***

என். சொக்கன் …

27 09 2011

Advertisements

14 Responses to "விழுந்த எண்ணங்கள்"

ஏற்கனவே இந்த பாட்டு எல்லாம் ரொம்ப பிடிக்கும். இதில் நீங்கள் எழுதிய பின் கேட்கும் போது இசையை மறந்து வரிகளை மட்டும் கவனிக்கத் தூண்டுகிறது.

எவ்வளவு நுணுக்கமா ஆராய்ச்சி பண்றீங்க ? சூப்பர் சார். உங்கள் 365 பா, இந்தப் பாடல் இதெற்கெல்லாம் பின் உள்ள உழைப்பு வியக்க வைக்கிறது. Truely inspirational.

மண்வாசனை பாடல் – சரியான நேரத்தில் உலக்கை ஓசையை ராஜா திரும்பக் கொண்டு வந்த நேர்த்தி – நுணுக்கமாக கவனித்திருக்கிறீர்கள். நான் இந்த அளவு உன்னித்ததில்லை. மெல்ல அவிழ என்று நீங்கள் சொல்லியது தான் சரி. அதுசரி, ஆனந்த ராகம் யூடியூபில் கிடைக்கலையா?

//ஆனால் இங்கே, ரஹ்மானின் மெட்டில் ‘மின்னல்’க்கு இடம் இல்லை. ‘மின்னல் ஒளியில் மலர்வன தாழம்பூக்கள்’ என்று எழுதமுடியாது. சட்டென்று ‘மின்னொளி’ என்று சுருக்கிவிட்டார் வைரமுத்து. மின் ஒளி – Electric light வெளிச்சம் பட்டுத் தாழம்பூ மலர்வதாக அர்த்தம் வந்துவிட்டது//

மின் – அப்படின்னாலே மின்னல்னு அர்த்தம் உண்டு


மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை – உன்னுமின் நீரே

அப்படிங்கறது நம்மாழ்வார் வரி.

அதுனால மின்னொளிங்கறது மின்னல்லேர்ந்து வர ஒளின்னு பொருள் எடுத்தக்கலாம்.

அருமையான பதிவு.

Sir, we don’t know how of much effort you are putting for these articles, but it really helps music lovers(like me) to pay more attention to words and gives a different dimension to hear songs.
Intha “yaarumae illaatha kadaikku tea aathukira vela” neraiya Raja sir songs’la irrukku ( but ofcourse, it shows his dedication to music)
Padam: Gopurangal Saivadhilai; Paadal: Poovadai kaatru…, intha padalil varum rendavathu BGM score, oru symphony poola avalavu azhagaga irrukkum, Mohan’um Radh’um oru light poota set’il romba simple’a serithae oodividum….
Ithil Kamal, Sivaji kooda vithivelakala!!! “Engengo Sellum en enangal…”(Pattakathi Bairavan), “Peerai sollava…”(padam: Guru), intha rendu padagalilum Orchestration miga miga arputham!!!intha kaalam poola multi tracking illamal, verum 2 track’la recording seithavai, error free code maathiri entha pisurum illamal irrukkum, aanal Kamal/Sivaji screen’il ishtathukku yedho seivaargal, oru justification’ae irrukkaathu, directors/dance masters Raja sir alavukku eedu kodukka mudiyaamal thenari poirrupaargal…
Nadanamae illamal Raja Sir isai’ku edukodutha padalgalum undu…”Chinna ponnu seela…(Thiyagarajan, Saritha)”, “Aagaya gangai poonthen malar..(Rajini,Sridevi)”, “Poomalarthida…(Kamal, Madahavi)

Arisi kuthum akka magalae, intha padalin kadaisi varyin poothu Olaikai sathma thalam miss aagira maathiri keetkirathu(just one beat)

இதே போல் இன்னொரு பாட்டு , சந்திரலேகா படம் , ” அல்லா உன் ஆணைப்படி ” என்ற பாடல். இதில் ஒரு வரி வரும் – நீ வீட்டில் இருந்தால் சோலைவனம் பாலை ஆகும் எனக்கு , ஆனால் பாலை வனம் சோலை ஆகும் எனக்கு என்று இருந்திருக்க வேண்டும். ஆனால் ஹீரோ நடித்த மொக்கை படத்தையே பார்க்க முடியவில்லையே , இதில் வீட்டிலேயே இருந்தால் என்னாவது என்பதைத்தான் ஹீரோயின் இப்படி படுகிறாரோ என்று நினைத்து ஆறுதல் அடைந்து கொள்வேன் . சட்டநாதன் – கழுகுமலை

Sattanathan Sir, antha line: ennidam irrukkum song version’la

“Nee Neengi irrunthaal Solai vanam paalai aagum enakku” endru keetkirathu

இளையராஜா பாடல்களில் உங்களுக்கு p h d கொடுக்கலாம் போல!!!!!

இளையராஜா பாடல்களில் உங்களுக்கு double phd koda கொடுக்கலாம்.nanum uma ramanan songs la like pani ketpanan

பொன்னார் மேனியனே பதிகத்திலும் ‘…மின்னார் செஞ்சடை…’ என்றும் வருமே.

உத்துப் பாக்குறது மாதிரி… இது உத்துக் கேக்குறது. 🙂

சொல்லிக் கொடுத்த சுருதிக்குள்ளயே பாடுறது உமாரமணன் பாணி. இவ்வளவு புதுப்பாட்டெல்லாம் நீங்க தேட வேண்டாம். ராஜா இசையில் அமுதே தமிழே அழகிய மொழியே கேளுங்க. அதுலயே பி.சுசீலா பாடுறதுக்கும் உமாரமணன் பாடுறதுக்கும் வேறுபாடு தெரியும்.

மின்னொளி சரிதான்னு எனக்குத் தோணுது.

சிந்திய வெண்மணி பாட்டுல அந்த வரியைப் பி.சுசீலா பாடனுமா ஏசுதாஸ் பாடனுமாங்குற சந்தேகம் எனக்கும் உண்டு. 🙂

good analysis:)

[…] முந்தைய இரண்டு பதிவுகளில் (விழுந்த எண்ணங்கள் & மழை) ஒரு சின்னக் குழப்பம், ஒரு […]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 526 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 457,514 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

September 2011
M T W T F S S
« Aug   Oct »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Advertisements
%d bloggers like this: