மனம் போன போக்கில்

Archive for October 2011

முன்குறிப்பு:

இது கட்டுரை அல்ல. கற்பனைக் கதையும் அல்ல. ஆங்காங்கே கவனித்த உண்மைகள் கொஞ்சம், மிகைப்படுத்தல் கொஞ்சம், Rational Thinking கொஞ்சம், கெக்கேபிக்கே சிந்தனை கொஞ்சம், பொதுபுத்தி கொஞ்சம், உணர்ச்சிவயப்’படுத்தல்’ மிச்சம் என எல்லாம் கலந்த ஏதோ ஒன்று. ‘மல்லிகை மகள்’ இதழின் தீபாவளி மலரில் வெளிவந்தது

1

சில வருடங்களுக்கு முன்னால், பெங்களூரில் ஒரு புத்தக வெளியீட்டு விழா. அதற்குத் தலைமை தாங்கியவர் கணிதமேதை சகுந்தலா தேவி. ’குழந்தைகளுக்குக் கணக்கில் ஆர்வம் ஊட்டுவது எப்படி?’ என்கிற தலைப்பில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் சொன்ன ஒரு சம்பவம் இது:

எங்கள் வீட்டில் பழைய பேப்பர் நிறையச் சேர்ந்துவிட்டது. அவற்றை எடை போடுவதற்காக எடுத்துச் சென்றேன்.

பழைய பேப்பர் கடையில் ஒரு சிறுவன்தான் இருந்தான். பள்ளிச் சீருடைகூட அணிந்திருந்தான். அப்பாவுக்கு உதவியாக வேலை பார்க்கிறேன் என்றான். அவனுடைய பொறுப்புணர்ச்சியைப் பார்த்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

நான் கொண்டுசென்ற காகிதங்களை அவன் இரண்டாகப் பிரித்தான். செய்தித் தாள்களைத் தனியே எடை போட்டான், ‘நாற்பது ரூபாய்’ என்றான், மற்ற பத்திரிகைகளைத் தனியே எடை போட்டான், ‘முப்பது ரூபாய்’ என்றான்.

அடுத்து, அவன் ஒரு கால்குலேட்டரை எடுத்தான். 40 + 30 என்று கணக்குப் போட்டு ‘எழுபது ரூபாய்’ என்றான். எனக்கு அதிர்ச்சி!

’ஏன்ப்பா, உன்னைப் பார்த்தால் ஹைஸ்கூல் படிக்கிறவனைப்போல் இருக்கிறாய், நாப்பதும் முப்பதும் எழுபது என்று மனக்கணக்குப் போடமாட்டாயா? அதற்குக்கூடக் கால்குலேட்டர் தேவையா?’ என்று வருத்தத்துடன் கேட்டேன்.

அவன் சிரித்தான். ‘மேடம், கைக்கு எட்டற தூரத்துல கால்குலேட்டர்தான் இருக்கே, அப்புறம் எதுக்கு அநாவசியமா மூளையைக் கசக்கிக்கணும்? கால்குலேட்டரால சுலபமாச் செய்யமுடியற வேலைகளை நாம ஏன் சிரமப்பட்டுச் செய்யணும்? வேஸ்ட்தானே?’

2

கடந்த மாதம், என்னுடைய மகளின் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு தினம். அப்போது அங்கே ஒரு தாய் வீராவேசமாகப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது. ‘என் பையனுக்கு நீங்க ரொம்ப ஹோம்வொர்க் தர்றீங்க மேடம், அவன் பாவம், கையெல்லாம் வலிக்குதுன்னு அழறான்!’

‘ஸாரிங்க. மத்த பாடத்திலெல்லாம் அவனுக்கு ஹோம்வொர்க் அதிகம் தர்றதில்லை’ என்றார் ஆசிரியை. ‘இங்க்லீஷ்லமட்டும்தான். அதுவும் குறிப்பா ஹேண்ட்ரைட்டிங்க்குமட்டும்தான் நிறைய வீட்டுப்பாடம் தர்றோம்.’

‘அதான் ஏன்?’

‘இதென்ன கேள்வி?’ என்பதுபோல் ஆசிரியை அந்தத் தாயை விநோதமாகப் பார்த்தார். ‘உங்க பையன் ரெண்டாங்கிளாஸ் படிக்கறான். ஆனா அவனுக்குக் கையெழுத்து இன்னும் சரியா வரலைங்க. முதல் வரியில எழுத ஆரம்பிச்சா மூணாவது வரியில போய் நிக்கறான். எழுத்து எதுவும் நாலு வரியில நிக்காம ஒவ்வொண்ணும் ஒவ்வொரு சைஸ்ல ஏத்தியும் தாழ்த்தியும் இருக்கு. இதையெல்லாம் சரி செஞ்சாதானே நாளைக்கு அவன் சரியா எழுதமுடியும்? அதுக்காகதான் எக்ஸ்ட்ரா ஹோம்வொர்க் தர்றோம். தப்புகளைத் திருத்தறோம். எல்லாம் அவனோட நல்லதுக்குதானே?’

‘நான்சென்ஸ்’ என்றார் அந்தத் தாய். ‘இந்தக் காலத்துல யார் பேனா பிடிச்சு எழுதறாங்க மேடம்? முந்தின தலைமுறையில எல்லோரும் ஏ, பி, சி, டி எழுதினாங்கங்கறதுக்காக இவங்களுக்கும் சொல்லித்தர்றீங்க, அவ்ளோதான். மத்தபடி படிப்பை முடிச்சு வெளியே வந்தப்புறம் அவன் பேனாவையே தொடப்போறதில்லை, ஒரு வார்த்தைகூடப் பேப்பர்ல எழுதப்போறதில்லை. எல்லாம் கம்ப்யூட்டர்தான். இந்தக் காலத்துலபோல் ஹேண்ட்ரைட்டிங்கை அழகுபடுத்தறேன்னு நேரத்தை வீணடிக்கறீங்களே, சுத்தப் பைத்தியக்காரத்தனம். அதையெல்லாம் நிறுத்திட்டு ஒழுங்காப் பாடத்தைமட்டும் சொல்லிக்கொடுங்க. புரியுதா?’

3

பாட்டுப்போட்டி ஒன்று. எட்டு வயதுப் பையன் ராகங்களைப் போட்டுப் புரட்டிக்கொண்டிருந்தான். அட்டகாசமான குரல். பிசிறில்லாத உச்சரிப்பு. கச்சிதமான உணர்ச்சிகள். எல்லாவற்றையும்விட முக்கியமாக, சிரித்த முகம்.

ஆச்சர்யமான விஷயம், அவனை அடுத்துப் பாடவந்த எல்லோருமே இப்படிதான் தூள் கிளப்பினார்கள். மூன்று வயது மழலை ஒன்றுகூட மேடையேறி அசத்தியது. திகட்டத் திகட்ட இன்னிசை மழை!

ஒரே பிரச்னை, பாடியவர்கள் யாரும் ‘மூன்று நிமிட’ இலக்கை மதிக்கவில்லை. மணி ஒலித்தபின்னும் தொடந்து பாடிக்கொண்டே இருந்தார்கள். பாட்டை முடிக்காமல் யாரும் கீழே இறங்கவில்லை.

இதனால் ஒருகட்டத்தில் விழா அமைப்பாளர்கள் சலித்துப்போய்விட்டார்கள். ‘இப்படியே போய்க்கொண்டிருந்தால் ரெண்டு மணி நேர நிகழ்ச்சி எட்டு மணி நேரத்துக்கு நீண்டுவிடும்’ என்று மேடையிலேயே அறிவித்தார்கள். ‘இனிமேல் மூன்று நிமிடம் தாண்டியதும் மைக்கை அணைத்துவிடுவோம். நீங்கள் பாட்டை நிறுத்தியே தீரவேண்டும்.’

இப்போது ஒரு பெண் மேடையேறினாள். பன்னிரண்டு வயது மதிக்கலாம். நல்ல கம்பீரமான குரல். மேடை பயமெல்லாம் இல்லாமல் நன்றாகப் பாடினாள்.

மூன்று நிமிடம் முடிந்தது. மணி ஒலித்தது. ஆனால், பாடல் முடியவில்லை. இன்னொரு கால் நிமிடம் பொறுத்துப் பார்த்த விழா அமைப்பாளர்கள் மைக்கை அணைத்துவிட்டார்கள்.

அவ்வளவுதான். அதுவரை சிரித்தபடி பாடிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் முகம் சட்டென்று மாறியது. கோபத்தில் மைக்கைப் பிடுங்கிக் கீழே அடித்து உடைத்துவிட்டாள். அதோடு நிறுத்தாமல், மைக்கே தேவைப்படாத சுருதியில் பெரிதாக அழத் தொடங்கினாள். பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி.

இதைவிடக் கொடுமை, அந்தப் பெண்ணின் பெற்றோர் நடந்துகொண்ட விதம். மேடையில் தங்களுடைய மகள் செய்தது தவறு என்பதை ஒப்புக்கொள்ளக்கூட அவர்கள் தயாராக இல்லை. ‘மத்தவங்கல்லாம் தாராளமா அஞ்சு நிமிஷம், ஏழு நிமிஷம்கூடப் பாடினாங்க, இவளுக்குமட்டும் மூணு நிமிஷமா?’ என்று சண்டைக்குதான் போனார்கள்.

அன்றைக்கு அந்தப் பெண்ணுக்குப் பரிசு கிடைக்கவில்லை. காரணம், அவளது திறமைக்குறைவு அல்ல.

4

மாதாந்திர ஷாப்பிங். ஆட்டோவில் சில கிலோமீட்டர்கள் பயணம்.

வழியில் ஒரு டிராஃபிக் சிக்னல் வந்தது. சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. ஆட்டோவை நிறுத்திய ஓட்டுனர் முன்னும் பின்னும் பார்த்தார். இறங்கி அந்தப் பக்கமாக எட்டிப்பார்த்தார். திருப்தியுடன் தலையாட்டிவிட்டு ஆட்டோவைக் கிளப்பி ஓட்ட ஆரம்பித்தார்.

என் மகளுக்கு அதிர்ச்சி. ‘அப்பா, Red Means Stopன்னு படிச்சோமே. இந்த டிரைவர் அங்கிள் ரெட் லைட் எரியும்போது வண்டியை ஓட்டறாரே!’

இதைக் கேட்ட ஆட்டோ டிரைவர் சிரித்தார். ‘பாப்பா, அதையெல்லாம் பார்த்துகிட்டிருந்தா பொழைக்கமுடியாது, டிராஃபிக் கான்ஸ்டபிள் இருக்காரா-ன்னு ஒரு லுக் விட்டுட்டு, அவர் இல்லாட்டி வண்டியை ஓட்டிகிட்டுப் போகவேண்டியதுதான், ரெட் லைட்டாவது இன்னொண்ணாவது!’

சிறிது நேரத்தில், சூப்பர் மார்க்கெட் வந்துவிட்டது. ஆட்டோவுக்குப் பணம் கொடுத்துவிட்டு உள்ளே சென்று எங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கினோம். பில் போடும் இடத்துக்கு வந்தோம்.

அங்கே ஏழெட்டு வரிசைகள். அநேகமாக ஒவ்வொன்றிலும் பத்துப் பேருக்குமேல் நின்றுகொண்டிருந்தார்கள். ஆளுக்கு மூன்று நிமிடம் என்று வைத்துக்கொண்டால்கூட, அரை மணி நேரத்துக்கு மேலாகிவிடும். பெருமூச்சுடன் ஏதோ ஒரு க்யூவில் நின்றோம்.

எங்களுக்குப் பக்கத்துக் க்யூவில் ஒரு குடும்பம். அப்பா, அம்மா, இரண்டு குழந்தைகள். அவர்கள் கையில் இருந்த கூடையில் நான்கைந்து பொருள்கள்தான் இருந்தன. அவற்றை பில் போடுவதற்காகச் சுமார் 15 நிமிடங்கள் காத்திருக்க அவர்கள் விரும்பவில்லை.

ஆகவே, அந்தக் குடும்பத் தலைவர் தன்னுடைய மனைவி, மகன், மகளை அழைத்தார். அவர்கள் கையில் ஆளுக்கு ஒரு பொருளைக் கொடுத்தார். ‘நீங்கல்லாம் வெவ்வேற க்யூவில போய் நில்லுங்க, ஒரே ஒரு ஐட்டம்தான், நான் முன்னாடி பில் போட்டுக்கறேன்னு சொல்லுங்க, நாம சட்டுன்னு வெளியே போயிடலாம்.’

அவர் சொன்னபடியே நடந்தது. நாங்களெல்லாம் மாக்கான்களைப்போல் ஒழுங்குமுறைப்படி வரிசையில் நின்றிருக்க, அவர்கள் எல்லோருக்கும் முன்பாக பில் போட்டுவிட்டு வெளியேறினார்கள். அந்தக் குழந்தைகள் முகத்தில் தங்களுடைய ’பிழைக்கத் தெரிந்த’ தந்தையின் ‘புத்திசாலித்தன’த்தைப்பற்றிய பெருமிதம்.

5

நண்பர் மகனுக்குப் பிறந்த நாள். அவர் வீட்டிலேயே ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

வழக்கமாக இதுபோன்ற பார்ட்டிகளின்போது குழந்தைகள் பாட்டுப் பாடும், ஆட்டம் போடும், கேக் வெட்டும், பலூன்களைத் தூக்கிப் போட்டுத் துரத்தும், கையில் முகத்தில் ’டாட்டூ’ படங்களை வரைந்துகொள்ளும், சின்னச் சின்ன விளையாட்டுகளெல்லாம் இருக்கும்.

ஆனால் இந்தப் பார்ட்டி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. குழந்தைகளுக்கென்று ஓர் அறை ஒதுக்கப்பட்டு அங்கே ஏழெட்டுக் கம்ப்யூட்டர்கள், லாப்டாப்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் வெவ்வேறு வீடியோ கேம்ஸ்.

போதாதா? பார்ட்டிக்கு வந்த குழந்தைகள் எல்லாம் அந்த அறைக்குள் புகுந்துகொண்டு வெளியே வரவே இல்லை. சிப்ஸ், மிக்ஸர், கேக், ஸ்வீட் என எல்லாம் அங்கேயே மேஜையில் பரிமாறப்பட்டது. குழந்தைகள் மாறி மாறி விளையாடியபடி வளையவந்தார்கள். பெரியவர்கள் வெளியே அரட்டையடித்துக்கொண்டிருந்தார்கள்.

நான் சும்மா அந்த அறைக்குள் எட்டிப்பார்த்தேன். இரண்டு பொடியன்கள் லாப்டாப்பில் கார் ரேஸ் ஆடிக்கொண்டிருந்தார்கள். எதிர்ப்பட்டவர்களையெல்லாம் டமால் டமால் என்று அடித்து வீழ்த்தினார்கள். ‘எங்கப்பா காரை இவ்ளோ ஸ்பீடா ஓட்டமாட்டேங்கறார், வேஸ்ட்’ என்றான் ஒரு சிறுவன்.

அன்றைக்குப் பிறந்தநாள் கொண்டாடும் சிறுவனின் தந்தையிடம் சென்றேன். ‘பர்த்டே பார்ட்டியில வீடியோ கேம்ஸெல்லாம் எதுக்குங்க?’ என்றேன்.

‘இந்தக் காலப் பசங்க வேற எதை விளையாடறாங்க, சொல்லுங்க?’ என்றார் அவர். ‘என் பையனுக்கு லேட்டஸ்ட் வீடியோ கேம் கன்ஸோல் வாங்கிக் கொடுத்திருக்கேன், ஸ்கூல்லேர்ந்து வந்ததும் அதுமுன்னாடி உட்கார்ந்துடறான். ஒன் ஹவர் அந்த ரூம்லேர்ந்து வெளியே வரமாட்டான், கிரிக்கெட், டென்னிஸ், கபடி, கார் ரேஸ்ன்னு எல்லா கேம்ஸையும் விளையாடிச் சலிச்சப்புறம்தான் ஹோம் வொர்க்ல்லாம்.’

‘இதே கேம்ஸை அவன் வெளியே போய் நிஜமான ஃப்ரெண்ட்ஸோட விளையாடலாமே?’

’வாஸ்தவம்தான். ஆனா இந்தக் காலத்துல யாரை நம்பமுடியுது சொல்லுங்க? யாரோட பழகினாலும் ஏதாவது கெட்ட பழக்கங்களைக் கத்துகிட்டு வந்துடறான், இல்லாட்டி அடிதடி, சண்டை, காயம், கலாட்டா, அப்புறம் அவனைப் பிடிச்சு வீட்டுக்கு இழுத்துட்டு வர்றதுக்குள்ள நம்ம தாவு தீர்ந்துடுது. அதான், வீட்டுக்குள்ளயே விளையாடுடா-ன்னு விட்டுட்டேன், ஒன் ஹவர் முடிஞ்சதும் கரண்டைப் பிடுங்கிடுவேன்னு மிரட்டினா ஒழுங்கா கேம்ஸை அணைச்சுட்டு ஹோம்வொர்க் செய்ய உட்காருவான்.’

6

உறவினரின் மகள் சிநேகா. ப்ளஸ் டூ படிக்கிறாள். நல்ல படிப்பாளி. எப்போதும் முதல் ரேங்க். சராசரிக்குமேல் ஐ.க்யூ.

சிநேகா ஓர் இன்டர்நெட் பிரியை. எந்நேரமும் ஃபேஸ்புக், ட்விட்டர் என்று வளையவருகிறவள். அவள் எங்கே போகிறாள், என்ன செய்கிறாள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரிவதற்குமுன்னால் இணையத்திற்குத் தெரிந்துவிடும். ‘ஃபேஸ்புக்ல எனக்கு 1500 ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க, தெரியுமா?’ என்று அடிக்கடி பெருமையாகச் சொல்லிக்கொள்வாள்.

சமீபத்தில் ஒரு பிரச்னை. ‘ஆன்லைன் சிநேகிதி’ ஒருத்தி சிநேகாவுடன் ‘காய்’ விட்டுவிட்டாள். ஃபேஸ்புக்கில் அவளைக் கண்டபடி திட்டி எழுதிவிட்டாள்.

அவ்வளவுதான். சிநேகாவின் உற்சாகமெல்லாம் எங்கேயோ பறந்துவிட்டது. எதையோ பறிகொடுத்தவளைப்போலவே வளையவந்துகொண்டிருந்தாள்.

சிநேகாவின் பெற்றோர் மகளுக்கு எதார்த்தத்தைப் புரியவைக்க முயன்றார்கள். ‘ஃப்ரெண்ட்ஸ் வர்றதும் போறதும் சகஜம், ஃப்ரெண்ட்ஸுக்குள்ள சண்டையும் சகஜம். ஒருவேளை நிஜமாவே அந்தப் பொண்ணு உன்னோட சண்டை போட்டாக்கூட, ஃபேஸ்புக்ல உனக்கு இன்னும் 1499 ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களே!’

இந்தச் சமாதானங்கள் சிநேகாவுக்குப் போதவில்லை. அவள் தொடர்ந்து புலம்பியபடிதான் இருந்தாள். ஆன்லைன் சிநேகிதங்களெல்லாம் வெறும் டிஜிட்டல் புள்ளிவிவரங்கள்தான் என்பதும் அவளுக்கு விளங்கவில்லை, இதை நிஜம் என்று நம்பத் தொடங்கும்போது உண்மையான நட்புகளைத் தொலைத்துவிடுகிறோம் என்பதும் புரியவில்லை.

ஒருவிதத்தில் சிநேகாகூடப் பரவாயில்லை. இந்தியாவின் மிகப் பெரிய தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஒன்றில் படிக்கிற மாணவி ஒருத்தி, ஃபேஸ்புக்கில் தன் காதலன் ஏதோ எழுதிவிட்டான் என்பதற்காக மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டுவிட்டாள்.

தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் உலகம் சுருங்கிக்கொண்டுவருகிறது என்கிறோம். அதோடு சேர்ந்து மனிதர்களும் சுருங்க ஆரம்பித்துவிட்டோமோ? இன்றைய உலகத்தில் பிழைப்பதற்கான வழிகள் இவை இவை என்கிற வரையறைகளை அமைத்துக்கொண்டு அவற்றில்மட்டும் கவனம் செலுத்துவதற்கான சேணங்களைக் கட்டிக்கொண்டுவிட்டோமோ? நம் குழந்தைகளுக்கும் அவற்றை வலுக்கட்டாயமாகக் கட்டிவிடுகிறோமோ?

படிப்பு, புத்திசாலித்தனம், ஐ.க்யூ. என்பவை ஒருபக்கம். அதனால் மார்க் வருகிறது, நல்ல காலேஜில் சீட் கிடைக்கிறது, பிரமாதமான வேலை வாய்க்கிறது, கை நிறையச் சம்பளம் குவிகிறது, வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளமுடிகிறது. இந்த விஷயத்தில் குறைபட்டவர்கள் வாழ்நாள்முழுக்கச் சிரமத்தை அனுபவிக்கவேண்டியதுதான். இதைத்தான் எல்லாத் தலைமுறைகளிலும் பெற்றோர் குழந்தைகளுக்குத் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். ‘படிக்காட்டிக் கழுதை மேய்க்கவேண்டியதுதான்!’

ஆனால் அதேசமயம் வெறுமனே படிப்பில்மட்டும் கவனம் செலுத்தினால் போதும், அதற்காக வேறெதையும் இழக்கலாம் என்கிற மனோநிலை மிகவும் ஆபத்தானது. இதனால் தனி மனிதர்களும் சரி, சமூகமும் சரி, வருங்காலத்தில் பல அதிர்ச்சிகளைச் சந்திக்கவேண்டியிருக்கும்.

மனித வள நிபுணர்கள் ஒருவரை எடைபோடும்போது ‘முழுமையான வளர்ச்சி இருக்கிறதா’ என்று பார்க்கிறார்கள். ஒருவருக்குக் கை, கால்மட்டும் சரியாக வளர்ந்து தலையும் வயிறும் மிகப் பெரியதாக இருந்தால் பார்ப்பதற்கு அவலட்சணமாக இருக்குமல்லவா? அதுபோல புத்திசாலித்தனத்தை வளர்த்துக்கொள்வதோடு நிறுத்திவிடாமல் அடுத்தவர்களுடன் பழகுவது, குழுவாக இணைந்து வேலை பார்ப்பது, படைப்பூக்கத்துடன் புதிதாகச் சிந்திப்பது, அடுத்தவர்களது கோணத்திலிருந்து சிந்தித்து மனிதாபிமானத்துடன் செயல்படுவது, சூழ்நிலைக்கு ஏற்ப ‘அட்ஜஸ்ட்’ செய்துகொண்டு முன்னேறுவது, வேலையையும் வாழ்க்கையையும் சமமாக மதித்து ஒன்றுக்காக இன்னொன்றை இழந்துவிடாமல் இருப்பது, பரபரப்பு வாழ்க்கைக்கு நடுவே ரிலாக்ஸ் செய்துகொள்ளப் பழகுவது, இயற்கையை ரசிப்பது, நாம் முன்னேறுவதற்காக இன்னொருவரை மிதித்துச் செல்வது நியாயமில்லை என்பதை உணர்வது, நம்மைப்போலவே இந்த உலகம் மற்ற மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும்கூடச் சொந்தமானது என்பதை உணர்வது, நேர்மை, காலம்தவறாமை, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல் உள்ளிட்ட பல மென்கலைகளும் இன்றைய உலகத்திற்குத் தேவைப்படுகின்றன. அவற்றைப் புறக்கணித்துவிட்டு வெறும் அறிவு வளர்ச்சியில்மட்டும் கவனம் செலுத்தினால், நாளைய உலகம் புத்திசாலித் தீவுகளின் தொகுப்பாகமட்டுமே இருக்கும்.

***

என். சொக்கன் …

02 10 2011

நீஈஈஈஈஈஈண்ட இடைவெளிக்குப்பின் என்னுடைய புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது. ‘ஃபேஸ்புக் வெற்றிக் கதை’ (கிழக்கு பதிப்பகம் வெளியீடு : 168 பக்கங்கள் : ரூ 115/-)

’ஃபேஸ்புக்கா? நீ ட்விட்டர் பைத்தியமாச்சே’ என்று கேட்கிறீர்களா? ‘ட்விட்டர் வெற்றிக் கதை’தான் முதலில் எழுதினேன். அதைவிட ஃபேஸ்புக் மிகப் பிரபலம் என்பதாலோ என்னவோ, பதிப்பகத்தார் ‘ஃபேஸ்புக் வெற்றிக் கதை’யை முதலில் வெளியிடத் தீர்மானித்துவிட்டார்கள்போல, ட்விட்டர் அடுத்து வரும் 😉

இந்தப் புத்தகம்பற்றி மேலும் வாசிக்கவும் ஆன்லைனில் வாங்கவும் இங்கே செல்லலாம்: https://www.nhm.in/shop/978-81-8493-690-2.html

***

என். சொக்கன் …

22 10 2011

 

 

 

 

என்னுடைய முந்தைய இரண்டு பதிவுகளில் (விழுந்த எண்ணங்கள் & மழை) ஒரு சின்னக் குழப்பம், ஒரு பெரிய குழப்பம். இதுபற்றி இங்கேயும் ட்விட்டரிலும் பலர் கருத்துச் சொல்லியிருந்தார்கள். நண்பர் ஸ்ரீதர் நாராயணன் விரிவான மின்னஞ்சல்கூட எழுதியிருந்தார். ஆனால் என்னுடைய வழக்கமான சோம்பேறித்தனத்தால் யாருக்கும் சரியாகப் பதில் சொல்லமுடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும்.

விஷயத்துக்கு வருவோம். அந்த இரண்டு பதிவுகளின் இறுதியில் நான் சொன்ன விஷயங்கள் இவை:

1. ‘மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள்’ என்று ஒரு பாடலில் வைரமுத்து எழுதியுள்ளார். உண்மையில் அவர் சொல்ல நினைத்தது ‘ மின்னல் ஒளி’, அதை மெட்டுக்குள் உட்காரவைப்பதற்காக ‘மின்னொளி’ என்று சுருக்கிவிட்டார். ஆகவே அது ‘மின்சார ஒளி’ என்று அனர்த்தமாகிவிட்டது

2. இன்னொரு பாட்டில் ’பூங்கதவே தாழ் திறவாய்’ என்று ஒரு கவிஞர் எழுதியுள்ளார். அதைப் பாடகர்கள் ‘தாள்’ என்று பாடிவிட்டார்கள். அது சரியில்லை

இந்த இரண்டு பாடல்களிலும் கவிஞர்கள் எழுதியதுதான் சரி, நான் சொல்வது தவறு என்று நண்பர்கள் வாதிடுகிறார்கள். அதற்குச் சாட்சியாக முன்வைக்கப்பட்டிருக்கும் முக்கியமான சில கருத்துகள், சாட்சிகள் இவை:

1. மின் ஒளி:

  • ’மின்’ என்றாலே மின்னல்தான். ’மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் என்னும் இடத்து இறை – உன்னுமின் நீரே’ அப்படிங்கறது நம்மாழ்வார் வரி – டகால்டி
  • ’பொன்னார் மேனியனே’ பதிகத்திலும் ‘…மின்னார் செஞ்சடை…’ என்றும் வருமே – கோபி ராமமூர்த்தி

2. தாழ் / தாள்:

  • ’தாள்’ என்றாலும் தாழ்ப்பாள்தான். தம்மதி தான் “திறப்பர் தாள்” = புறப்பொருள் வெண்பா மாலை, புத்தியைத் “திறக்குந் தாள்” = சீவக சிந்தாமணி – ரவிசங்கர்
  • தாள் என்பது இலக்கியப் பேச்சு மட்டுமில்லை!
    இன்றும், பல கிராமங்களில், தாளைப் போடு-ன்னு சொல்லுறதும் வழக்கம் தான்! – ரவிசங்கர்
  • ‘மணிக் கதவம் தாள் திறவாய்’ என்று திருப்பாவையில் ஆண்டாள் பாடியுள்ளாரே! ‘கதவைத் திற’ என்பதைத்தானே அது குறிக்கிறது – கார்த்திக் அருள்
  • தாள் என்பதற்கு மலரின் இதழ் என்றும் பொருள் உண்டு – ஐஷ்வர்யா கோவிந்தராஜன்
  • ‘தாழ்’ என்னும் வேர்ச்சொல் பனையை குறிப்பதாகவும், தாழ், தாலி, தாள் எல்லாம் அதிலிருந்து உருவாகிவந்தன என்றும் ந. கணேசன் மற்றும் தமிழ்நெட் பதிவர்கள் பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள் – ஸ்ரீதர் நாராயணன்
  • பண்டைய பிங்கல அகராதியிலேயே ‘தாள்’ இடம்பெற்றிருக்கிறது – ஸ்ரீதர் நாராயணன்
  • பூவின் Stamensஐ ‘மகரந்த தாள்’ என்றே அழைக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் ‘பூங்கதவே தாள் திறவாய்’ மிகவும் பொருத்தமாக இருப்பதாக தோன்றியது.    தன் மகரந்தங்களை மறைத்துக் கொண்டிருக்கும் பெண்ணிடம் ‘தாள் திறவாய்’ என்று பாடுவது படு ரொமாண்ட்டிக்காக இருக்கிறது – ஸ்ரீதர் நாராயணன்

’மின் ஒளி’கூடச் சின்னப் பிரச்னைதான். இந்தத் தாழ் / தாள் விவகாரம் பெரிய சண்டையாகிவிட்டது. ஆகவே என்னுடைய கருத்தைப் பதிவு செய்ய இதை எழுதுகிறேன்.

ஒரு மொழியில் ஒரே பொருளைக் குறிக்கப் பல வார்த்தைகள் இருக்கலாம். அதில் ஒன்று சரி என்பதால் மற்றதெல்லாம் தவறு என்று சொல்லமுடியாது.

’மின் ஒளி’ என்பது ஒருகாலத்தில் மின்னலைக் குறித்திருக்கலாம். இப்போது மின்சாரத்துக்கும் அதே வார்த்தையைப் பயன்படுத்துவதால் மின்னலுக்கு ‘மின்’ என்ற வார்த்தை கூடாது என்று பேசுவது தவறு. அதை முழுமையாக ஏற்கிறேன்.

அதேபோல் ‘தாள்’ என்ற வார்த்தையும் ஒருகாலத்தில் புழக்கத்தில் இருந்திருக்கலாம், சில இலக்கியப் பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம், அல்லது ‘தாழ்’ என்று எழுதியது படியெடுக்கும்போது ‘தாள்’ என்று மாறியிருக்கலாம், இன்றைக்கும் கிராமத்து / நகரத்துக் கொச்சை வழக்கில் ‘தாள்’ என்று அது தொடர்வது உண்மை. ஆகவே தாள் என்ற வார்த்தையும் தாழ்ப்பாளைதான் குறிக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.

இப்போது நான் ஒரு கட்டுரை எழுதுகிறேன் என்றால் அதில் எந்த இடத்தில் எந்த வார்த்தை பயன்படுத்தப்படவேண்டும் என்று யோசிப்பேன். தவறான வார்த்தைகளைத் தவிர்ப்பேன். ஆனால் எல்லாச் சரியான வார்த்தைகளையும் நான் பயன்படுத்திவிடமுடியாது, அவை அர்த்தம் பொருத்தமாக இருந்தாலும்கூட.

குழப்புகிறதா? ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்:

என்மேல் ஒரு சிறு நீர்த்துளி விழுந்தது

இந்த வாசகத்தில் தப்பு எதுவும் இல்லை. ‘சிறு’ என்றால் small, ’நீர்த்துளி’ என்றால் droplet. எல்லாம் சரி.

ஆனால், இந்த வாக்கியத்தை நீங்களோ நானோ எழுதவேண்டியிருந்தால், அங்கே ‘சிறு’வுக்குப் பதில் ‘சிறிய’ என்று மாற்றுவோம். இல்லையா? என்ன காரணம்?

’சிறு’ மற்றும் ‘நீர்’ இரண்டுக்கும் தனித்தனி அர்த்தங்கள் சரியாக இருப்பினும், ‘சிறுநீர்’ என்று சேர்ந்தால் அர்த்தம் மாறுகிறது. ஆகவே, ’சிறு’ என்ற வார்த்தை சரியான பொருளைத் தந்தாலும், இங்கே என்னால் அதைப் பயன்படுத்தமுடியாது. பயன்படுத்தக்கூடாது. காரணம் அது வாக்கியத்தின் பொருளை மாற்றிவிடுகிறது.

இதே விதிமுறையைதான் நான் ‘மின்னொளி’க்கும் ‘தாழ் திறவாய்’க்கும் வைக்கிறேன். மின் = மின்னல், ஆனால் ‘மின் ஒளி’ என்றால் இன்றைய அர்த்தம் Electric lightதான். குழப்பத்துக்கு இடம் அளிக்கக்கூடாது என்பதற்காக அதைத் தெளிவாக ‘மின்னல் ஒளி’ என்று எழுதவே விரும்புவேன்.

திரைப்பாடலில் அந்த சவுகர்யம் கிடையாது. ’தன்னனன தனனன தானந்நானே’ என்பது ரஹ்மானின் மெட்டு. அதற்கு ‘மின்னலொளியில் மலர்வன தாழம்பூக்கள்’ என்பது பொருந்தாது. வேண்டுமானால் ‘மின்னல்வர மலர்ந்திடும் தாழம்பூக்கள்’ என்பதுபோல் கொஞ்சம் நெருக்கிப் பிடிக்கலாம். அதைத்தான் சொன்னேன்.

தாழ் / தாள் விஷயத்தில் அந்தக் குழப்பமே இல்லை. இரண்டும் ‘நேர்’ அசை. ‘தாள்’க்குப் பதில் ‘தாழ்’ என்று எழுதிவிடலாம். ‘தாள் திறவாய்’ என்பதற்குத் தவறான அர்த்தம் வரக்கூடும், ‘தாழ் திறவாய்’க்கு வராது. அவ்வளவுதான் விஷயம்.

சரி, இதை ஏன் இப்போது விரிவாக எழுதவேண்டும்?

நிச்சயம் விவாதத்தைத் தொடர்கிற நோக்கமோ, நான் பிடிச்ச முயலுக்கு அஞ்சே கால்தான் என்று நிரூபிக்கும் வீம்போ, இன்னொருத்தரை ‘மடக்கும்’ எண்ணமோ இல்லை. இது என் கருத்து, உங்களுடைய கருத்து மாறுபடலாம். அதை நான் மதிக்கிறேன். அதே எதிர்மரியாதையை உங்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்.

இந்தப் பதிவுகள் என்று இல்லை. இணையத்திலோ அதற்கு வெளியிலோ இதுபோன்ற விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கமே எதையாவது புதுசாகத் தெரிந்துகொள்ளலாமே என்பதுதான். அதுவும் மொழி விஷயத்தில் நமக்குத் தெரிந்தது 1%கூட இல்லை. இதுபோன்ற விவாதங்களால் பாக்கி இருக்கிற 99%ல் இன்னொரு 1%ஐயாவது கூடுதலாகத் தெரிந்துகொள்ளலாமே என்கிற விருப்பம்தான் மேலோங்கி நிற்கிறது என்று நான் நினைக்கிறேன்.

மொழியை ஒழுங்காக எழுதுவது அவ்வளவு முக்கியமா? சில பல தவறுகள் இருந்தால் என்ன குடி முழுகிவிடும்?

நான் ஏழெட்டு புத்தகங்கள் எழுதியிருந்த நேரம். ஒருநாள் என்னுடைய ஆசிரியர் பா. ராகவன் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். அன்றைக்கு நான் எழுதி முடித்துக் கொடுத்திருந்த புத்தகத்தின் Manuscriptஐக் கையில் வைத்துக்கொண்டு வரிவரியாகப் படித்துக் காண்பித்து நான் செய்திருந்த எழுத்து / இலக்கண  / பயன்பாட்டுப் பிழைகளைச் சொன்னார், திருத்தினார்.

அதுவும் ஒன்று, இரண்டு அல்ல, இருபதோ முப்பதோ திருத்தங்கள். அவையெல்லாம் பிழையான பயன்பாடுகள் என்று தெரியாமலே தொடர்ந்து தவறாக எழுதிவந்திருக்கிறேன்.

அவர் இதையெல்லாம் சொல்லி முடித்தபிறகு அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். ‘அடுத்தமுறை இந்தத் தப்பெல்லாம் செய்யாம பார்த்துக்கறேன் சார்’ என்றேன்.

கொஞ்ச நாள் கழித்து நான் என்னுடைய அடுத்த புத்தகத்தை எழுதி முடித்திருந்தேன். அவருக்கு அனுப்பினேன். படித்துவிட்டு ஃபோன் செய்தார். எடுத்த எடுப்பில் முதல் வாசகமாக ‘நீயெல்லாம் எதுக்குடா எழுதறே? குப்பை அள்ளப் போகவேண்டியதுதானே?’ என்றார்.

எனக்குப் பகீரென்றது. ’வழக்கமாக எதற்கும் கோபம் கொள்ளாத இவரே இப்படி எரிச்சலாகும் அளவுக்கு நான் என்ன தப்புச் செய்துவிட்டேன்?’ என்று குழம்பினேன்.

இத்தனைக்கும் போன புத்தகத்தைவிட இந்தப் புத்தகத்தில் பிழைகள் குறைவு. ஆனால் அவர் ஏற்கெனவே சொல்லியிருந்த அதே தவறுகளில் சிலவற்றை நான் மீண்டும் செய்திருந்தேன். அதனால்தான் அவருக்குக் கோபம்.

உண்மையில் ராகவனுக்கு அன்று வந்தது கோபம் அல்ல. ஆதங்கம். என்மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை நான் வீணடித்துவிட்டேனே என்கிற ஏமாற்றம். மூன்றே வார்த்தைகளில் என்னைக் கூனிக்குறுகச் செய்துவிட்டார்.

அதன்பிறகு, அவர் சொன்ன அந்தத் தவறுகளை நான் மீண்டும் செய்வதில்லை. புதுப்புதுத் தவறுகள் செய்வேன். ஆனால் பழைய தவறுகள் மீண்டும் வராது.

இப்போதும் என்னுடைய எழுத்தில் ஏகப்பட்ட பிழைகள் உண்டு. இதோ இந்தப் பதிவில்கூட அவை மலிந்திருக்கும். ஆனால் யாராவது அவற்றைச் சுட்டிக்காட்டித் திருத்தினால் கேட்டுக்கொள்வேன், சொல்பவர் யார் என்று பார்க்கமாட்டேன், அவர்கள் சொல்வது சரியா என்றுதான் பார்ப்பேன், நான் எழுதியது தவறென்றால் மன்னிப்புக் கேட்டுக்கொள்வேன். அடுத்தமுறை அதே தவறைச் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். இந்த விஷயத்தில் Perfectionஐவிட, அதை நோக்கிய நேர்மையான முயற்சிதான் முக்கியம். இல்லையா?

***

என். சொக்கன் …

21 10 2011

இன்றைக்கு ஒரு விஷயம் படித்தேன்.

லீ அயகோக்கா (உச்சரிப்பு சரிதானா? எதற்கும் ஆங்கிலத்திலேயே சொல்லிவிடுகிறேன் : Lee Iacocca) பெரிய மேனேஜ்மென்ட் பிஸ்தா. மேல்விவரங்கள் விக்கிபீடியாவில் கிடைக்கும். அல்லது அவர் எழுதிய புத்தகங்களில்.

எண்பதுகளின் மத்தியில் லீ அயகோக்கா க்ரைஸ்லர் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவருடைய பிரபலம் காரணமாக வெளி நிறுவனங்கள், அமைப்புகளெல்லாம் தங்களுடைய விழாக்களில் அவரைப் பேச அழைப்பது வழக்கம்.

இப்படி ஒரு பெரிய நிறுவனம் லீ அயகோக்காவைத் தொடர்புகொண்டது. ‘நீங்க எங்களோட சீனியர் மேனேஜர்ஸ் மத்தியில வந்து பேசணும்’ என்று கேட்டுக்கொண்டது.

‘ஓ, தாராளமா வர்றேனே’ என்றார் லீ. ‘ஆனா ஒரு கண்டிஷன்.’

‘என்னது?’

‘எங்களோட க்ரைஸ்லர் தயாரிக்கிற வாகனங்கள் ஏதாவது உங்க கம்பெனிக்குச் சொந்தமா இருக்கா?’

‘தெரியலையே.’

’முதல்ல அதை விசாரிச்சுச் சொல்லுங்க. அப்புறம் பேசுவோம்.’

அவரைப் பேச அழைத்த கம்பெனிக்கு ஒன்றும் புரியவில்லை. விசாரித்தார்கள். க்ரைஸ்லர் வாகனங்கள் எவையும் அங்கே இல்லை என்று தெரிந்தது. மறுபடி அவரை அழைத்தார்கள். விஷயத்தைச் சொன்னார்கள்.

‘ஓஹோ, முதல் வேலையா நீங்க எங்க கம்பெனி வண்டிகள் நாலஞ்சை  வாங்கிப் போடுங்க, அப்புறமா நான் அங்கே பேச வர்றேன்’ என்று ஃபோனை வைத்துவிட்டார் லீ.

இதென்ன கூத்து? இந்த மனுஷன் நிஜமாச் சொல்றாரா? விளையாடறாரா? அவரைப் பேச அழைத்தவர்கள் பாயைப் பிறாண்டாத குறை. இதைப்பற்றி அக்கம்பக்கத்தில் விசாரிக்க ஆரம்பித்தார்கள். விஷயம் புரிந்தது.

லீ அயகோக்கா எப்போதும் இப்படிதானாம். அவரை யாராவது பேச அழைத்தால் அந்த இடத்தில் தங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்புகள் சிலது இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பாராம். ‘எனக்கு பிஸினஸ் தராத இடத்தில் நான் ஏன் பேசவேண்டும்?’ என்பது அவருடைய கட்சி.

நியாயம்தான். ஆனால் க்ரைஸ்லரின் வண்டிகளை விற்பதற்கு ஆயிரம் விற்பனைப் பிரதிநிதிகள் இருப்பார்களே. இவர் ஏன் அந்த வேலையைச் செய்யவேண்டும்?

அது அப்படிதான். ஒரு நிறுவனத்தில் சிலர்மட்டும் ‘விற்பனை’யைச் செய்தால் போதாது. தலைவர் முதல் அடிமட்டத் தொண்டர்வரை எல்லோரும் கிடைக்கிற வாய்ப்புகளிலெல்லாம் தங்களுடைய தயாரிப்புகளை விற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்பது லீ அயகோக்காவின் கட்சி.

இதே ஃபார்முலாவைப் பின்பற்றுகிற ஒருவர் நம் ஊரிலும் உண்டு. ‘விப்ரோ’ தலைவர் அஜிம் ப்ரேம்ஜி.

அவருடைய ‘விப்ரோ’ குழுமம் பல தொழில்களில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு அதிக வருமானம் தருவது மென்பொருள் / BPO பிரிவுகள்தான். ஆகவே அந்தப் பிரிவு சார்ந்த முக்கியமான வாடிக்கையாளர்களை அஜிம் ப்ரேம்ஜி நேரில் சந்தித்துப் பேசுவது வழக்கம்.

அந்தக் கூட்டங்களிலெல்லாம் சாஃப்ட்வேர் விஷயங்களைப் பேசி முடித்தபிறகு, கடைசியாக இவர் ஒரு கேள்வி கேட்பாராம். ‘உங்க ஆஃபீஸ்ல lighting systemலாம் எப்படி? எந்த brand பயன்படுத்தறீங்க?’

அநேகமாக இந்தக் கேள்வி யாருக்குமே சரியாகப் புரியாது. அத்தனை பெரிய கம்பெனியின் தலைவர் எதற்குச் சாதாரண அலுவலக விளக்குகளைப்பற்றி விசாரிக்கவேண்டும் என்று குழம்புவார்கள்.

காரணம் இருக்கிறது. விப்ரோவின் ஒரு தொழில் பிரிவு விளக்குகளைத் தயாரிக்கிறது. அந்த விளக்குகள்தான் இந்த வாடிக்கையாளரின் அலுவலகத்தில் பயன்படுத்தப்படுகின்றனவா என்று அஜிம் ப்ரேம்ஜி விசாரித்துத் தெரிந்துகொள்கிறார்.

ஒருவேளை, அவர்கள் வேறு கம்பெனி விளக்குகளைப் பயன்படுத்தினால் போச்சு. ‘எந்தவிதத்தில் அவர்கள் விப்ரோவைவிட பெட்டர்? நீங்கள் ஏன் எங்களுடைய தயாரிப்புகளை ஒருமுறை பயன்படுத்திப் பார்க்கக்கூடாது?’ என்றெல்லாம் இவர் சீரியஸாகத் தோண்டித் துருவ ஆரம்பித்துவிடுவாராம்.

CXOக்கள் வண்டி விற்பதும் விளக்கு விற்பதும் கொஞ்சம் ஆச்சர்யம்தான். இதை வெறும் அல்பத்தனம் என்றோ வெட்கங்கெட்டத்தனம் என்றோ ஒதுக்கிவிடாமல் இருந்தால் அவர்களுடைய வெற்றிக்கான காரணங்களில் ஒன்று புரியும்.

முக்கியமான பின்குறிப்பு:

இந்தப் பதிவில் என்னுடைய ‘அஜிம் ப்ரேம்ஜி’ புத்தகத்துக்கு இணைப்புத் தரலாமா என்று யோசித்தேன். ‘ச்சே, தப்பு’ என்று தோன்றியது. விட்டுவிட்டேன். நண்பர் அப்பு (https://twitter.com/#!/zenofzeno) அடிக்கடி சொல்வதுபோல், நான் என்றைக்கும் CXO ஆகமுடியாது ; )

***

என். சொக்கன் …

20 10 2011

நண்பர் விக்கி (விக்னேஷ் அண்ணாமலை https://twitter.com/#!/VickyAnnap) ட்விட்டரில் ஒரு வித்தியாசமான படத்தைப் பிரசுரித்து ‘இது என்ன?’ என்று ஊகிக்கக் கேட்டிருந்தார்:

424502292

சிறிது நேரம் கழித்து அவரே விடையும் சொன்னார். சென்னை ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட படம் இது. மறுநாள் காலை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான க்யூவுக்காக முந்தின நாளே சிலர் தங்களுடைய பொருள்களை வரிசையாக அடுக்கி வைத்து முன்பதிவு செய்துள்ளனர். அதாவது, ரிஸர்வேஷன் க்யூவுக்கு ரிஸர்வேஷன்!

அந்தப் பொருள்களைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்: துணிக்கடை பை, பத்திரிகைகள், செய்தித்தாள்கள், போஸ்டர்கள், நோட்டீஸ்கள், அவை பறக்காமல் இருக்க மேலே ஒரு கல், காசித்துண்டு, ஷூ, செருப்பு, தண்ணீர் பாட்டில்… நம் மக்களுடைய க்ரியேட்டிவிட்டிக்கு அளவே இல்லை Smile

இந்தப் படத்தைப் பிரசுரித்த விக்கியிடம் ‘இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஃபோட்டோ. உங்களுடைய Blogல் பதிவு செய்து வையுங்கள்’ என்றேன். ‘எனக்கேது ப்ளாக்?’ என்றார். அவர் அனுமதியுடன் இங்கே ஓசிப் பதிவாகப் பிரசுரிக்கிறேன் : >

***

என். சொக்கன் …

19 10 2011

சில பாடல்களை எந்நேரமும் கேட்கலாம். வேறு சில பாடல்களை எந்நேரமும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்போல் தோன்றும். நிறுத்த மனமே வராது. அடுத்த பாட்டுக்குப் போய்விட்ட எம்பி3 ப்ளேயரை மூக்கணாங்கயிறு போட்டுப் பின்னால் இழுத்து முந்தைய பாட்டை மீண்டும் மீண்டும் பாடச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருப்போம். நேரம் ஓடுவதும் தெரியாது, செய்யவேண்டிய வேலைகளும் மறந்துபோய்விடும்.

போனவாரம் அப்படி ஒரு பாட்டில் மாட்டிக்கொண்டேன் : ‘அமுதே தமிழே, அழகிய மொழியே, எனதுயிரே’ (http://www.youtube.com/watch?v=errR7iLYuuU). அதிலிருந்து விடுபட்டு வெளியே வந்தால் இன்றைக்கு இன்னொரு மூக்கணாங்கயிறு : ‘பூங்கதவே, தாழ் திறவாய்!’.

‘நிழல்கள்’ படத்தில் எல்லாப் பாடல்களுமே அற்புதமானவைதாம். ஆனால் இந்தப் பாட்டுக்கு ஒரு விசேஷம், இதில் மெட்டைவிட இசை ஒரு படி மேலே நிற்கும். அதாவது, சுமார் 250 விநாடிகள் ஒலிக்கும் பாடலில் பல்லவி, அனுபல்லவி, இரண்டு சரணங்கள் என பாடகர்கள் பாடுகிற நேரம் பாதிக்கும் குறைவு, அதிலும் சரணம் மிக மிகச் சிறிது, ஐந்தே வரிகள்தாம், மீதி நேரத்தையெல்லாம் வாத்திய இசை நிரப்பியிருக்கிறது.

அதிலும் ராஜா ஒரு விசேஷம் செய்திருப்பார். இந்தப் பாடல் முழுவதும் இரண்டு இசைக் கருவிகள் இணைந்து டூயட் பாடுவதுபோன்ற ஓர் அமைப்பு இருக்கும். வயலின், வீணை, அப்புறம் வீணை, புல்லாங்குழல், அப்புறம் நாதஸ்வரமும் வயலினும், அப்புறம் வயலினும் மணியோசையும் என்று ஜோடி ஜோடியாக ராணுவ அணிவகுப்புபோல் நிறுத்திவைத்திருப்பார். ஆனால் மொத்தமாகக் கேட்கும்போது ஏகப்பட்ட கருவிகள் ஒரே நேரத்தில் இணைந்து இசைத்த ஒரு Rich Orchestration தருகிற திருப்தியும் நமக்குக் கிடைத்துவிடும்.

பாடலின் தொடக்கம் மழை நாளை நினைவுபடுத்துகிறது. பலமான சூறைக் காற்றில் தொடங்கிப் பல திசைகளில் இருந்து மெல்லச் சுழன்று சுழன்று வலுப்பெற்றுக்கொண்டு கடைசியில் மின்னல், இடி, பெரு மழையாகப் பொழியும்.

’ஆல்பம்’ என்ற படத்தில் ‘காதல் வானொலி’ என்று எனக்கு ரொம்பப் பிடித்த ஒரு பாடல் உண்டு. அதில் நா. முத்துக்குமார் எழுதிய ஒரு வரி:

மழை நின்று போனாலும், மரக்கிளை தூறுதே

கிட்டத்தட்ட அதேமாதிரி ஓர் உணர்வு ‘பூங்கதவே’யின் ஆரம்ப இசையிலும் உண்டு – பிரமாண்டமான பெருமழைக்கான ஒலி முடிந்த மறுவிநாடி, மழை நின்றபின் மரங்களிலிருந்து சொட்டும் நீர்த்துளியின் தூறல்போல மென்மையான ஒரு சின்ன வீணை ஒலி,  அதோடு சேர்ந்து டூயட் பாடும் புல்லாங்குழல், பின்னர் நைஸாகப் புல்லாங்குழலைப் பின்னே தள்ளிவிட்டு வயலினோடு சேர்ந்துகொள்ளும் வீணை… கடைசியாகப் பாடகரின் (தீபன் சக்கரவர்த்தி) குரல் ஒலிக்கும்போது, இதற்கே முக்கால் நிமிஷம் தீர்ந்துவிட்டது!

இங்கே முக்கியமாகக் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம், பாடகர் குரல் ஒலிக்க ஆரம்பித்தவுடன், அதுவரை அதகளம் பண்ணிக்கொண்டிருந்த இசைக் கருவிகள் காணாமல் போய்விடுகின்றன. பின்னணியில் பெரும்பாலும் தாளம்மட்டும்தான். இதை நாம் உணர்வதற்குள் (முப்பது விநாடிகளுக்குள்) சரணம் முடிந்துவிடுகிறது. மீண்டும் இசையின் ஆட்சி.

இந்த இடையிசையும் சரியாக முக்கால் நிமிடத்துக்கு நீடிக்கிறது. கல்யாண நாதஸ்வரமும் மேளமும் சேர்ந்து பாரம்பரியமான கெட்டிமேளத்தில் முடிய, அதற்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத மெட்டில் பெண் குரல் (உமா ரமணன்) அறிமுகமாகிறது.

சாதாரணமாக இதுபோன்ற ஓர் இசையையும் மெட்டையும் வித்தியாசம் தெரியாமல் தைப்பது மிகவும் சிரமம். கொஞ்சம் அசந்தாலும் இரண்டும் தனித்தனியே உறுத்திக்கொண்டு நிற்கும்.

ராஜா இந்த விஷயத்தில் பெரிய கில்லாடி. உதாரணமாக, ‘காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’ என்ற பாடலின் முன்னிசையைக் கேளுங்கள், அந்த இசை முடியப்போகும் நேரம், பல்லவியின் முதல் வரி ஒலிக்கவேண்டும், ஆனால் இசைக்கும் அந்த வரிக்கும் பொருந்தாதே என்று நமக்குத் தோன்றும், சரியாகக் கடைசி விநாடிகளில் ஒரு சின்ன மணி ஒலியைச் சேர்த்து அதை அட்டகாசமாகப் பல்லவியில் பொருத்திவிடுவார் ராஜா.

ஆனால் இந்தப் பாடலில் அதுபோன்ற ஜிம்மிக்ஸுக்கெல்லாம் அவசியமே ஏற்படவில்லை. திருமணத்தின் Climax ஆகிய கெட்டிமேள ஒலியை அப்படியே நிறுத்திவிட்டு அரை விநாடி அமைதிக்குப்பிறகுதான் ‘நீரோட்டம்’ என்று சரணத்தைத் தொடங்குகிறார் ராஜா. அடுத்த காட்சி என்ன (முதலிரவு? ஹனிமூன்?) என்பது நம் ஊகத்துக்கு விடப்படுகிறது.

சரணத்தில் இன்னொரு விசேஷம், மெட்டு நின்று திரும்புகிற எல்லா வார்த்தைகளும் ‘ம்’ என முடியும் : நீரோட்டம், போலோடும், ஊர்கோலம், ஆனந்தம், பூவாரம், தெய்வம், வாழ்த்தும், ராகம், திருத்தேகம், எனக்காகும், உள்ளம், பொன்னாரம், பூவாழை (இது ஒன்றுமட்டும் odd man out), ஆடும், தோரணம், எங்கெங்கும், சூடும், அந்நேரம், கீதம், இந்த ஒவ்வொரு ‘ம்’க்கும் மெட்டு எப்படி வளைந்து நெளிந்து குழைந்து ஓடுகிறது என்று கேட்டால்தான் புரியும்.

இந்தப் பாட்டை எழுதியவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. அவராக விரும்பி இத்தனை ‘ம்’களைப் போட்டாரா, அல்லது ராஜாவின் ஐடியாவா என்பதும் தெரியவில்லை, ஆனால் பாடல் வரிகளில் இத்தனை ‘ம்’ இருப்பதால் ராஜா அந்த ‘ம்ம்ம்ம்ம்ம்’மையே ஒரு தனித்துவமான கோரஸாக மாற்றிக்கோண்டிருக்கிறார், உண்மையில் இந்தப் பாடலை அழகாக முடித்துவைப்பதும் அந்த ‘ம்ம்ம்ம்ம்’கள்தான்.

‘ம்’களில்மட்டுமில்லை, இந்தப் பாடலின் சரணம்முழுவதுமே ஏகப்பட்ட twists and turns. உதாரணமாக முதல் சரணத்தில் இங்கே ஒற்றை மேற்கோள்குறி உள்ள இடங்களையெல்லாம் கவனித்துக் கேளுங்கள், பாடல் வரிகளையும் தாண்டிய ஒரு நீட்சியும் நடுக்கமும் தெரியும், அது கவனமாக யோசித்துச் செய்யப்பட்டதாகதான் இருக்கவேண்டும்: நீ’ரோட்டம், ஆ’சைக் கனவுகள், ஊ’ர்கோலம், ஆ’னந்தம், பூ’பா’ரம், கா’தல், கா’தலில், ஊ’றிய.

ஐந்தே வரிகளில் (மீண்டும் முப்பது விநாடிகளுக்குள்) சரணம் முடிந்துவிட, எட்டே விநாடிகளில் பல்லவியைச் சுருக்கமாகத் தொட்டுவிட்டு வாத்திய இசைக்குப் போய்விடுகிறார் ராஜா. மீண்டும் சுமார் முக்கால் நிமிடத்துக்கு இன்னொரு விஸ்தாரமான இடையிசை. அதைத் தொடர்ந்து மழைத் தண்ணீரினால் தோன்றிய சிற்றோடைபோல் வளைந்து நெளிந்து ஓடும் சரணம்.

இந்தப் பாடல் தருகிற அனுபவத்தை எத்தனை விளக்கமாக எழுதினாலும் போதாது, கேட்கத்தான் வேண்டும், இதுமாதிரி நேரங்களில்தான் இசையின்முன்னால் மொழி எப்பேர்ப்பட்ட ஏழை என்பது புரியும்.

இத்தனை அழகான பாட்டுக்கு ஒரு திருஷ்டிப் பொட்டு இல்லாமல் எப்படி? அதுவும் உண்டு : பாடலின் முதல் வரி ‘பூங்கதவே, தாழ் திறவாய்’. ஆனால் தீபன் சக்கரவர்த்தி, உமா ரமணன் இருவருமே பிடிவாதமாகத் திரும்பத் திரும்பத் ‘தாள் திறவாய்’ என்றுதான் பாடுகிறார்கள். ஏனோ ராஜா இதைக் கவனித்துத் திருத்தாமல் விட்டுவிட்டார்.

‘தாழ்’ என்பது ‘தாழ்ப்பாள்’ என்பதன் சுருக்கம். ‘அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்று திருக்குறளில் வரும்.

‘தாள்’ என்றால் பாதம். நாம் பாதத்தால் தட்டுவதால்தான் ‘தாளம்’ என்று பெயர் வந்தது எனச் சொல்வார்கள். ‘தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய் வாள்கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான்’ என்று குழந்தைக் கண்ணனைப் பாடுவார் பெரியாழ்வார். அதாவது, பாதத்தை நீட்டிச் சக்கரத்தை உதைத்து அசுரர்களைக் கொன்றானாம்!

ஆக, இந்தப் பாடலில் ‘தாழ் திறவாய்’ என்பதுதான் சரி. யாரிடமாவது ‘தாள் திறவாய்’ என்று கேட்டுத் தொலைத்துவிடாதீர்கள், அதற்கு விவகாரமான அர்த்தம் Smile

Followup: https://nchokkan.wordpress.com/2011/10/21/rgtwrng/

***
என். சொக்கன் …

19 10 2011

நீங்கள் கால்குலேட்டர் பயன்படுத்துகிறீர்களா? (மசாலா பொதிந்த எஞ்சினியரிங் கால்குலேட்டர் அல்ல, ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்று கணக்குப் போடும் சாதா கால்குலேட்டர்)

சிலரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டாலே கோபித்துக்கொள்வார்கள். ’சாதாரணக் கூட்டல் கழித்தல் கணக்குகளுக்கெல்லாம் கால்குலேட்டர் தேவைப்படும் அளவுக்கு எனக்கு மூளை மழுங்கிவிடவில்லை’ என்று ஆவேசமாகப் பதில் சொல்பவர்களைப் பார்த்திருக்கிறேன்.

எனக்குக் கால்குலேட்டர்களின்மீது அவ்வளவு விரோதம் கிடையாது. ஆனால் அதைத் தேடி எடுக்கும் நேரத்தில் மனத்துக்குள் விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று நினைக்கிற சோம்பேறி.

கால்குலேட்டர்களை ஏன் தேடவேண்டும்? இப்போதான் வாட்ச், செல்ஃபோன், கம்ப்யூட்டர், ஃப்ரிட்ஜ், மிக்ஸி, வாக்குவம் க்ளீனரில்கூட கால்குலேட்டர்களைப் பொதித்துவிடுகிறார்களே!

அது சரி. ஆனால் அவற்றையும் தேடித் திறந்து க்ளிக் செய்து டைப் செய்து கணக்குப் போட்டுச் சரிபார்ப்பதெல்லாம் வீண் வேலை என்றுதான் நான் யோசிப்பேன், அதற்குப் பதில் கையில் ஒரு பேனாவோ பென்சிலோ இருந்தால் அதன் முனையைப் பேப்பரில் உள்ள எண்களின்மீது மெல்ல ஓட்டி மளமளவென்று கணக்குப் போட்டுவிடலாம். ஸ்பூன், ஃபோர்க்கில் சாப்பிடத் தெரிந்தாலும்கூட கையால் பிசைந்து அடிப்பதுதான் மனத்திற்கு உகந்ததாக இருப்பதுபோல இது.

சமீபகாலமாக எனக்கு ஒரு விநோத வழக்கம் வந்திருக்கிறது. காகிதத்தில் எண்களைக் கூட்டியபிறகு, அதனை இன்னொருமுறை கம்ப்யூட்டரில் உள்ள கால்குலேட்டரில் தட்டிச் சரி பார்க்கிறேன்.

ஒவ்வொருமுறையும் என் பேப்பர் கணக்கும் கால்குலேட்டர் கணக்கும் சரியாகவே வருகிறது. இதுவரை ஒருமுறைகூடத் தப்புச் செய்யவில்லை. ஆனாலும் 43 + 36 = 79 என்பதுபோன்ற ‘செம ஈஸி’ கணக்குகளைக்கூட ஒருமுறை கால்குலேட்டரில் சரிபார்க்கும் கெட்ட பழக்கம் பீடித்திருக்கிறது.

எதற்கு இந்த வேண்டாத வேலை? என்னுடைய கணக்குப் பண்ணும், ச்சே, கணக்குப் போடும் திறன்மீது எனக்கே சந்தேகம் வந்துவிட்டதா? வயசாகிறதோ?

ஒருவேளை இது உண்மை என்று எடுத்துக்கொண்டாலும், இந்த ரெட்டை வேலை அநாவசியம் அல்லவா? எப்படியும் பேப்பரில் கணக்குப் போட்டுவிட்டுக் கம்ப்யூட்டரில் சரி பார்க்கப்போகிறேன் – கம்ப்யூட்டர் சொல்வதுதான் சரி என்று ஒப்புக்கொள்ளப்போகிறேன் – அப்புறம் எதற்கு வீணாக பேப்பர் கணக்கு? அந்தக் கணக்கை நேரடியாகக் கம்ப்யூட்டரிலேயே போட்டுவிட்டுப்போகலாமே, நேரம் மிச்சம், இருக்கிற தக்கனூண்டு மூளையைக் கசக்கி வீணாக்காமல் காப்பாற்றிவைக்கலாம்.

இப்படி Rationalலாக யோசித்தால் என்னுடைய பேப்பர் கணக்கு ஒரு வீண் வேலை என்பது புரிகிறது. ஒன்று, பேப்பர், பென்சில், மனக்கணக்கை நம்பவேண்டும், அல்லது கால்குலேட்டர் கணக்கை. இரண்டையுமே கட்டிக்கொண்டு நேரத்தை விரயம் செய்வது முட்டாள்தனம் என்பதும் விளங்குகிறது. ஆனால் இந்தப் பழக்கத்தை விடமுடியவில்லை. என்ன செய்யலாம்?

***

என். சொக்கன் …

17 10 2011

1

‘நீ யாரையாச்சும் லவ் பண்ணியிருக்கியா கதிரு?’

சுகன்யாவின் அந்தக் கேள்வி கதிரேசனைத் தூங்கவிடாமல் உறுத்திக்கொண்டிருந்தது. எந்தப் பக்கம் திரும்பிப் படுத்தாலும் சினிமாவில் வருவதுபோல் அந்த ஐந்து வார்த்தைகளும் திரும்பத் திரும்பக் கேட்பதுமாதிரி ஓர் உணர்வு.

எதற்காக அப்படிக் கேட்டாள்? எதார்த்தமாகத்தானா? அல்லது ஏதாவது உள்நோக்கம் இருக்குமா? என்னவாக இருக்கும்?

கதிரேசனுக்கும் சுகன்யாவுக்கு பல வருடப் பழக்கம். காலேஜில் நான்கு வருடங்கள் பக்கத்து பெஞ்ச்களில் உட்கார்ந்து படித்தபின்னர் இங்கே பெங்களூரில் மூன்று வருடங்களாக ஒரே கம்பெனியில் குப்பை கொட்டியாகிறது.

இந்த ஏழு வருடங்களில் அவர்கள் போகாத இடமில்லை, பேசாத பேச்சில்லை, இந்த ஒரு விஷயத்தைத்தவிர.

திடீரென்று சுகன்யாவுக்கு ஏன் அவனிடம் காதலைப்பற்றிப் பேசத் தோன்றவேண்டும்? அதுவும் அவள் வீட்டில் மாப்பிள்ளை தேடத் தொடங்கியிருக்கிற நேரம் பார்த்து?

இதற்கான Obvious காரணம் கதிரேசனுக்குப் புரிந்துதான் இருந்தது. ஆனால் அவன் அதைப்பற்றி யோசிக்கக்கூட விரும்பவில்லை.

சரேலென்று படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான் கதிரேசன். பக்கத்தில் கிடந்த செல்ஃபோனைத் தேடி எடுத்து மணி பார்த்தான். பத்தரை. ‘சுரேஷ் தூங்கியிருப்பானோ?’

தூங்கினால் என்ன? இது தள்ளிப்போடுகிற விஷயம் இல்லை. உடனே பேசியாகவேண்டும்.

சுரேஷின் நம்பரைத் தேடி அழைத்தான் கதிரேசன். மறுமுனையில் ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ ஒலித்தது. சில நிமிடங்கள் கழித்து, ‘ஹலோ.’

‘டேய் சுரேஷ், கதிர் ஹியர்.’

‘என்னடா இந்த நேரத்துல?’

‘உன்னோட ஒரு முக்கியமான மேட்டர் தனியாப் பேசணும்’ என்றான் கதிரேசன். ‘ரொம்ப அர்ஜென்ட்.’

‘கொஞ்சம் பொறு, வெளியே வந்துட்டு கால் பண்றேன்’ என்ற சுரேஷ் இணைப்பைத் துண்டித்தான்.

கல்லூரியில் கதிரேசனின் ரூம்மேட் சுரேஷ். சொந்த ஊர் திருநெல்வேலி. ‘எங்க ஊர் மண்ணுக்கும் தண்ணிக்கும் தனி குணம் உண்டுடா’ என்று பெருமையடித்துக்கொள்கிற ஆள்.

‘அப்புறம் ஏன்டா கோயம்பத்தூருக்குப் படிக்க வந்தே?’

‘நானா வந்தேன்? இங்கேதான் சீட் கிடைச்சுது! நாலே வருஷம், படிப்பை முடிச்சுட்டு எங்க ஊருக்குத் திரும்பிப் போய்டுவேன்.’

சொன்னதுபோலவே, நான்காவது வருடம் கேம்பஸ் இன்டர்வ்யூக்களை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டான் சுரேஷ். யாராவது விசாரித்தால், ‘இவங்கல்லாம் வேஸ்ட் மச்சி, ஒரு கம்பெனிக்குக்கூட திருநெல்வேலில ப்ராஞ்ச் இல்லையாம்.’

இத்தனைக்கும் ஊரில் சுரேஷ் குடும்பத்துக்கென்று சொந்தமாக நிலமோ, பூர்வீகச் சொத்தோ, பெரிய கம்பெனி, தொழிற்சாலையோ எதுவும் இல்லை. இவன்தான் தலையெடுத்துக் குடும்பத்தை முன்னேற்றவேண்டும்.

எங்கள் வகுப்பில் சுரேஷ்தான் டாப்பர். அவனுடைய மார்க்குக்கும் வசீகரமான முகத்துக்கும் நுனிநாக்கு ஆங்கிலத்துக்கும் எந்தக் கம்பெனியும் கொத்திக்கொண்டு ஓடியிருக்கும். சராசரி மாணவர்களெல்லாம் கிடைத்த வேலையில் தொற்றிக்கொண்டு பெங்களூர், மும்பை, சென்னை, அமெரிக்கா, ஆப்பிரிக்கா என்று எங்கு வேண்டுமானாலும் ஓடிப் பணம் தேடத் தயாராகிக்கொண்டிருக்கும்போது இவன்மட்டும் திருநெல்வேலிக்குதான் திரும்பப் போவேன் என்று ஒற்றைக்காலில் நின்றான்.

இறுதிப் பரீட்சை முடிந்த தினத்தன்று இரவு. கதிரேசனும் சுரேஷும் பெட்டி படுக்கைகளைத் தூக்கிக்கொண்டு ஒன்றாகக் கிளம்பினார்கள். இருவருடைய ரயில்களும் அரை மணி நேர இடைவெளியில் புறப்பட்டன.

அந்தக் கடைசி நாளன்றுதான் கதிரேசனிடம் சுகன்யாவைப்பற்றிப் பேச ஆரம்பித்தான் சுரேஷ். ‘அவளும் உன் கம்பெனிதானே?’

‘ஆமா, அதுக்கென்ன?’

’நத்திங்’ என்றவன் ஜன்னல் கம்பியின் உதிர்ந்த பெயின்டைச் சற்றே சுரண்டினான். பின்னர் ‘ஒரு விஷயம் சொன்னா கோச்சுக்கமாட்டியே?’ என்றான்.

‘என்னது?’

‘நம்ம சுகன்யா…’ என்ற சுரேஷ் கொஞ்சம் தயங்கினான். எங்கேயோ பார்த்தபடி ‘நானும் அவளும் லவ் பண்றோம்’ என்றான்.

‘சு-சுகன்யாவா?’ கதிரேசனுக்கு அதிர்ச்சியைவிட ஆச்சர்யம்தான் அதிகமாக இருந்தது. ‘நிஜமாவா சொல்றே?’

‘ஆமாண்டா’ என்றான் சுரேஷ். ‘இப்பதான் ஒன்னரை வருஷமா.’

‘அடப்பாவிகளா, நீங்க ரெண்டு பேரும் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்ன்னு நினைச்சுகிட்டிருந்தேன். இப்படி ஒரு பெரிய மேட்டரை மொத்தமா மூடி மறைச்சுட்டீங்களே’ என்று சுரேஷின் தோளில் தட்டினான் கதிரேசன். ‘ஸ்டில், என்னால நம்பமுடியலைடா. நீயாவது பரவாயில்லை, வாயைத் திறந்து சொல்லிட்டே, அந்த சுகன்யா, கடைசிவரைக்கும் கமுக்கமா இருந்துட்டுப் போய்ட்டாளே.’

‘ஆக்சுவல்லி, உன்கிட்ட இதைச் சொல்லக்கூடாதுன்னு அவ என்கிட்ட ப்ராமிஸ் வாங்கியிருக்கா’ என்றான் சுரேஷ்.

‘ஏன்?’

‘தெரியலை, நானும் போன நிமிஷம்வரைக்கும் யோசிச்சுப்பார்த்தேன், உன்கிட்ட சொல்லிடறதுதான் நியாயம்ன்னு தோணிச்சு.’

‘இதுவாவது ஏன்னு சொல்லு.’

‘எங்கயோ பாஷை தெரியாத ஊருக்கு வேலை பார்க்கப் போறா, ஏதாவது பிரச்னைன்னா என்னால ஓடி வரமுடியுமா சொல்லு, அதான் என்னோட ரெப்ரசென்டேடிவ்வா உன்னை அங்கே அனுப்பிவைக்கறேன்’ சுரேஷின் அசட்டுப் புன்னகையைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. ‘கொஞ்சம் பார்த்துக்கடா. நான் இதைச் சொன்னேன்னு அவகிட்ட சொல்லிடாதே.’

‘ஷ்யூர். அவளா இதைப் பத்திப் பேசறவரைக்கும் நான் வாயைத் திறக்கமாட்டேன். ஓகேயா?’

சுரேஷ் பதில் சொல்வதற்குள் ரயில் நீண்ட விசில் அடித்தது. கதிரேசன் பெட்டியில் ஏறிக்கொண்டான். ‘டேக் கேர்-டா, ஊருக்குப் போய் ஃபோன் பண்ணு.’

’ஓகே’ என்ற சுரேஷ் பின்னே நகர்ந்து நின்றுகொண்டான். லேசான புன்னகையுடன் கையசைத்தான். ரயில் புறப்பட்டுவிட்டது.

அதன்பிறகு, இன்றுவரை கதிரேசனும் சுரேஷும் சந்தித்துக்கொள்ளவில்லை. சுரேஷ் திருநெல்வேலியில் சொந்தத் தொழில் தொடங்கியிருப்பதாகவும் நன்கு வசதியாக வாழ்வதாகவும் கேள்விப்பட்டதோடு சரி. அவ்வப்போது ஃபோனில் பேசுவார்கள். ஆனால் ஒருமுறைகூட அவன் சுகன்யாவைப்பற்றிப் பேசியது இல்லை.

சில நேரங்களில், அன்றைக்கு ரயில் பிளாட்ஃபாரத்தில் நின்றபடி அவன் சுகன்யாவைக் காதலிப்பதாகச் சொன்னதுகூடக் கனவுதானோ என்று கதிரேசன் யோசிப்பது உண்டு. அந்த இரண்டு நிமிடத்தைக் கழித்துவிட்டுப் பார்த்தால் இந்த விஷயத்துக்கு வேறு சாட்சிகளே இல்லை.

சுகன்யாவும் சுரேஷைப்பற்றி அவனிடம் வாய் திறக்கவில்லை. அப்படி ஒரு ஜீவன் இருப்பதே தெரியாதவள்போல் தன்னுடைய வேலையில்மட்டும் கவனமாக இருந்தாள். வாரக்கடைசிகளில் சொந்த ஊருக்குப் போய்த் திரும்பினாள். ஒருமுறைகூட சுரேஷைச் சந்தித்ததாகவோ, அவனிடம் ஃபோனில் பேசியதாகவோ பேச்சுவாக்கில்கூடச் சொன்னதில்லை.

ஒருவேளை, சுரேஷுடையது ஒருதலைக்காதலாக இருக்குமோ? இல்லாவிட்டால் சுகன்யா இதைக் கதிரேசனிடம் பிடிவாதமாக மறைக்கவேண்டிய அவசியம் இல்லையே!

மூன்று வருடம் கழித்து, இன்றைக்கு சுகன்யா திடீரென்று காதலைப்பற்றிப் பேசியதும் கதிரேசனுக்குப் பகீரென்றது. இது என்ன விவகாரமோ தெரியவில்லையே, உடனடியாக சுரேஷிடம் பேசியாகவேண்டும்.

மீண்டும் செல்ஃபோனை உயிர்ப்பித்து மணி பார்த்தான் கதிரேசன். பத்து ஐம்பது. சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியே வருவதற்கு இவ்வளவு நேரமா?

அதே விநாடியில் ஃபோன் ஒலித்தது. சட்டென்று பச்சைப் பொத்தானை அழுத்தி ‘ஹலோ சுரேஷ்?’ என்றான்.

‘சுரேஷா?’ மறுமுனையில் கேட்டது பெண் குரல். ‘நான் சுகன்யா பேசறேன் கதிரு!’

(தொடரும்)

***

என். சொக்கன் …

10 10 2011

நேற்று சேலம் புத்தகக் கண்காட்சி சென்றிருந்தேன். பொன்னுசாமி கவுண்டர் கல்யாண மண்டபம், புதிய பேருந்து நிலையம் அருகே. சுமார் 50 ஸ்டால்கள், அநேகமாக எல்லாப் பதிப்பகங்களும் இடம்பெற்றுள்ளன. வழக்கம்போல் 10% தள்ளுபடி, அப்பள ஸ்டால், ஒரு மினி அபூர்வ நாணயங்கள் கண்காட்சி, ஓரமாக 50% விலையில் ஒரிஜினல் விசிடி, டிவிடிகள்.

கண்காட்சியில் பலரையும் ஈர்த்த விஷயம், வருகிற குழந்தைகளுக்கு இலவச உண்டியல் தருகிறார்கள். அதில் வருடம் முழுக்கக் காசு சேர்த்து புத்தகங்கள் வாங்கிக்கொள்ளும் நல்ல பழக்கத்தை ஊக்குவிக்க இந்த ஏற்பாடு.

கண்காட்சி இன்றே கடைசி. சேலத்தில் உள்ளவர்கள் அவசியம் ஒரு விசிட் அடிக்கலாம். அனுமதி இலவசம்.

***

என். சொக்கன் …
09 10 2011


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,740 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

October 2011
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31