43 + 36 = 79
Posted October 17, 2011
on:- In: Open Question | People | Technology | Uncategorized
- 9 Comments
நீங்கள் கால்குலேட்டர் பயன்படுத்துகிறீர்களா? (மசாலா பொதிந்த எஞ்சினியரிங் கால்குலேட்டர் அல்ல, ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்று கணக்குப் போடும் சாதா கால்குலேட்டர்)
சிலரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டாலே கோபித்துக்கொள்வார்கள். ’சாதாரணக் கூட்டல் கழித்தல் கணக்குகளுக்கெல்லாம் கால்குலேட்டர் தேவைப்படும் அளவுக்கு எனக்கு மூளை மழுங்கிவிடவில்லை’ என்று ஆவேசமாகப் பதில் சொல்பவர்களைப் பார்த்திருக்கிறேன்.
எனக்குக் கால்குலேட்டர்களின்மீது அவ்வளவு விரோதம் கிடையாது. ஆனால் அதைத் தேடி எடுக்கும் நேரத்தில் மனத்துக்குள் விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று நினைக்கிற சோம்பேறி.
கால்குலேட்டர்களை ஏன் தேடவேண்டும்? இப்போதான் வாட்ச், செல்ஃபோன், கம்ப்யூட்டர், ஃப்ரிட்ஜ், மிக்ஸி, வாக்குவம் க்ளீனரில்கூட கால்குலேட்டர்களைப் பொதித்துவிடுகிறார்களே!
அது சரி. ஆனால் அவற்றையும் தேடித் திறந்து க்ளிக் செய்து டைப் செய்து கணக்குப் போட்டுச் சரிபார்ப்பதெல்லாம் வீண் வேலை என்றுதான் நான் யோசிப்பேன், அதற்குப் பதில் கையில் ஒரு பேனாவோ பென்சிலோ இருந்தால் அதன் முனையைப் பேப்பரில் உள்ள எண்களின்மீது மெல்ல ஓட்டி மளமளவென்று கணக்குப் போட்டுவிடலாம். ஸ்பூன், ஃபோர்க்கில் சாப்பிடத் தெரிந்தாலும்கூட கையால் பிசைந்து அடிப்பதுதான் மனத்திற்கு உகந்ததாக இருப்பதுபோல இது.
சமீபகாலமாக எனக்கு ஒரு விநோத வழக்கம் வந்திருக்கிறது. காகிதத்தில் எண்களைக் கூட்டியபிறகு, அதனை இன்னொருமுறை கம்ப்யூட்டரில் உள்ள கால்குலேட்டரில் தட்டிச் சரி பார்க்கிறேன்.
ஒவ்வொருமுறையும் என் பேப்பர் கணக்கும் கால்குலேட்டர் கணக்கும் சரியாகவே வருகிறது. இதுவரை ஒருமுறைகூடத் தப்புச் செய்யவில்லை. ஆனாலும் 43 + 36 = 79 என்பதுபோன்ற ‘செம ஈஸி’ கணக்குகளைக்கூட ஒருமுறை கால்குலேட்டரில் சரிபார்க்கும் கெட்ட பழக்கம் பீடித்திருக்கிறது.
எதற்கு இந்த வேண்டாத வேலை? என்னுடைய கணக்குப் பண்ணும், ச்சே, கணக்குப் போடும் திறன்மீது எனக்கே சந்தேகம் வந்துவிட்டதா? வயசாகிறதோ?
ஒருவேளை இது உண்மை என்று எடுத்துக்கொண்டாலும், இந்த ரெட்டை வேலை அநாவசியம் அல்லவா? எப்படியும் பேப்பரில் கணக்குப் போட்டுவிட்டுக் கம்ப்யூட்டரில் சரி பார்க்கப்போகிறேன் – கம்ப்யூட்டர் சொல்வதுதான் சரி என்று ஒப்புக்கொள்ளப்போகிறேன் – அப்புறம் எதற்கு வீணாக பேப்பர் கணக்கு? அந்தக் கணக்கை நேரடியாகக் கம்ப்யூட்டரிலேயே போட்டுவிட்டுப்போகலாமே, நேரம் மிச்சம், இருக்கிற தக்கனூண்டு மூளையைக் கசக்கி வீணாக்காமல் காப்பாற்றிவைக்கலாம்.
இப்படி Rationalலாக யோசித்தால் என்னுடைய பேப்பர் கணக்கு ஒரு வீண் வேலை என்பது புரிகிறது. ஒன்று, பேப்பர், பென்சில், மனக்கணக்கை நம்பவேண்டும், அல்லது கால்குலேட்டர் கணக்கை. இரண்டையுமே கட்டிக்கொண்டு நேரத்தை விரயம் செய்வது முட்டாள்தனம் என்பதும் விளங்குகிறது. ஆனால் இந்தப் பழக்கத்தை விடமுடியவில்லை. என்ன செய்யலாம்?
***
என். சொக்கன் …
17 10 2011
9 Responses to "43 + 36 = 79"

ஹா ஹா ஹா ..
உங்கள் மனதில் தோன்றியதை எங்களிடம் கேட்டு உள்ளீர். பேசாம கணினியையே பயன்படுத்துங்கள்பேப்பர் வீணாகாது.
ஐடியா விளம்பரம் போல இருக்குல்ல?


இதில் தவறேதும் உள்ளதாக எனக்குத் தோன்றவில்லை. கணினி தவறு செய்யாது எனினும், உள்ளிடும் மனித விரல்கள் தவறிழைக்க வாய்ப்புண்டு. ஆகவே இந்த டபுள் செக் விடையை உறுதி செய்கிறது.


இந்த மாதிரியெல்லாம் நடக்கும் என்று தெரிந்தோ தெரியாமலோ, நான் 13 + 31 க்கும் கால்குலேட்டரைத் தேடுகிறேன்.
அதைவிட எக்ஸெல் ஷீட் வசதியாயிருக்கிறது.


அப்ப எக்ஸ்செல் வேண்டாமா?


ஒரே வழி இம்மாதிரி மொக்கை பதிவுகள் எழுதுவதுதான்.


அதே நிலை தான் எனக்கும்கூட. ஒவ்வொரு வரியும் என்னிலிருந்து வந்ததுபோல் இருந்தது. எங்கு பணத்தின் தொகை அறிய வேண்டியது உள்ளனவோ, அங்கெல்லாம் என்னையும் அறியாமல் உங்களைப்போல ஈடுபடுகிறேன்.நன்றி.


இது ஒரு அடிக்சன் என நினைக்கிறேன். நேற்று ரூ80-க்குப் பொருள் வாங்கி 100-ஐ நீட்டினேன். அந்த அம்மணி சிரத்தையாக கால்குலேட்டரை எடுத்து 100 – 80 கணக்குப் போட்டு சரி பார்த்துதான் மீதியைத் தந்தார் 🙂
ஒண்ணு செய்யுங்க.
பேப்பர் கூட்டலுக்குப் பின் அதையே தங்கள் இரு மகள்களையும் செய்யச் சொல்லுங்க. அவர்களுக்கும் நல்லது, உங்களுக்கும் டிரிபிள் செக் செய்த திருப்தி. ஆனால் நீங்க தப்பு செஞ்சுட்டா, விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல 🙂

1 | Sekkaali
October 17, 2011 at 5:04 pm
எந்திரத்திடம் மனித அறிவு இன்னும் தோற்கவில்லை என்று உங்களையறியாமலேயே உங்கள் மனம் ஒவ்வொரு முறையும் சந்தோசப் பட்டுக் கொள்கிறதோ என்னவோ?