மனம் போன போக்கில்

சில பாடல்களை எந்நேரமும் கேட்கலாம். வேறு சில பாடல்களை எந்நேரமும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்போல் தோன்றும். நிறுத்த மனமே வராது. அடுத்த பாட்டுக்குப் போய்விட்ட எம்பி3 ப்ளேயரை மூக்கணாங்கயிறு போட்டுப் பின்னால் இழுத்து முந்தைய பாட்டை மீண்டும் மீண்டும் பாடச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருப்போம். நேரம் ஓடுவதும் தெரியாது, செய்யவேண்டிய வேலைகளும் மறந்துபோய்விடும்.

போனவாரம் அப்படி ஒரு பாட்டில் மாட்டிக்கொண்டேன் : ‘அமுதே தமிழே, அழகிய மொழியே, எனதுயிரே’ (http://www.youtube.com/watch?v=errR7iLYuuU). அதிலிருந்து விடுபட்டு வெளியே வந்தால் இன்றைக்கு இன்னொரு மூக்கணாங்கயிறு : ‘பூங்கதவே, தாழ் திறவாய்!’.

‘நிழல்கள்’ படத்தில் எல்லாப் பாடல்களுமே அற்புதமானவைதாம். ஆனால் இந்தப் பாட்டுக்கு ஒரு விசேஷம், இதில் மெட்டைவிட இசை ஒரு படி மேலே நிற்கும். அதாவது, சுமார் 250 விநாடிகள் ஒலிக்கும் பாடலில் பல்லவி, அனுபல்லவி, இரண்டு சரணங்கள் என பாடகர்கள் பாடுகிற நேரம் பாதிக்கும் குறைவு, அதிலும் சரணம் மிக மிகச் சிறிது, ஐந்தே வரிகள்தாம், மீதி நேரத்தையெல்லாம் வாத்திய இசை நிரப்பியிருக்கிறது.

அதிலும் ராஜா ஒரு விசேஷம் செய்திருப்பார். இந்தப் பாடல் முழுவதும் இரண்டு இசைக் கருவிகள் இணைந்து டூயட் பாடுவதுபோன்ற ஓர் அமைப்பு இருக்கும். வயலின், வீணை, அப்புறம் வீணை, புல்லாங்குழல், அப்புறம் நாதஸ்வரமும் வயலினும், அப்புறம் வயலினும் மணியோசையும் என்று ஜோடி ஜோடியாக ராணுவ அணிவகுப்புபோல் நிறுத்திவைத்திருப்பார். ஆனால் மொத்தமாகக் கேட்கும்போது ஏகப்பட்ட கருவிகள் ஒரே நேரத்தில் இணைந்து இசைத்த ஒரு Rich Orchestration தருகிற திருப்தியும் நமக்குக் கிடைத்துவிடும்.

பாடலின் தொடக்கம் மழை நாளை நினைவுபடுத்துகிறது. பலமான சூறைக் காற்றில் தொடங்கிப் பல திசைகளில் இருந்து மெல்லச் சுழன்று சுழன்று வலுப்பெற்றுக்கொண்டு கடைசியில் மின்னல், இடி, பெரு மழையாகப் பொழியும்.

’ஆல்பம்’ என்ற படத்தில் ‘காதல் வானொலி’ என்று எனக்கு ரொம்பப் பிடித்த ஒரு பாடல் உண்டு. அதில் நா. முத்துக்குமார் எழுதிய ஒரு வரி:

மழை நின்று போனாலும், மரக்கிளை தூறுதே

கிட்டத்தட்ட அதேமாதிரி ஓர் உணர்வு ‘பூங்கதவே’யின் ஆரம்ப இசையிலும் உண்டு – பிரமாண்டமான பெருமழைக்கான ஒலி முடிந்த மறுவிநாடி, மழை நின்றபின் மரங்களிலிருந்து சொட்டும் நீர்த்துளியின் தூறல்போல மென்மையான ஒரு சின்ன வீணை ஒலி,  அதோடு சேர்ந்து டூயட் பாடும் புல்லாங்குழல், பின்னர் நைஸாகப் புல்லாங்குழலைப் பின்னே தள்ளிவிட்டு வயலினோடு சேர்ந்துகொள்ளும் வீணை… கடைசியாகப் பாடகரின் (தீபன் சக்கரவர்த்தி) குரல் ஒலிக்கும்போது, இதற்கே முக்கால் நிமிஷம் தீர்ந்துவிட்டது!

இங்கே முக்கியமாகக் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம், பாடகர் குரல் ஒலிக்க ஆரம்பித்தவுடன், அதுவரை அதகளம் பண்ணிக்கொண்டிருந்த இசைக் கருவிகள் காணாமல் போய்விடுகின்றன. பின்னணியில் பெரும்பாலும் தாளம்மட்டும்தான். இதை நாம் உணர்வதற்குள் (முப்பது விநாடிகளுக்குள்) சரணம் முடிந்துவிடுகிறது. மீண்டும் இசையின் ஆட்சி.

இந்த இடையிசையும் சரியாக முக்கால் நிமிடத்துக்கு நீடிக்கிறது. கல்யாண நாதஸ்வரமும் மேளமும் சேர்ந்து பாரம்பரியமான கெட்டிமேளத்தில் முடிய, அதற்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத மெட்டில் பெண் குரல் (உமா ரமணன்) அறிமுகமாகிறது.

சாதாரணமாக இதுபோன்ற ஓர் இசையையும் மெட்டையும் வித்தியாசம் தெரியாமல் தைப்பது மிகவும் சிரமம். கொஞ்சம் அசந்தாலும் இரண்டும் தனித்தனியே உறுத்திக்கொண்டு நிற்கும்.

ராஜா இந்த விஷயத்தில் பெரிய கில்லாடி. உதாரணமாக, ‘காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’ என்ற பாடலின் முன்னிசையைக் கேளுங்கள், அந்த இசை முடியப்போகும் நேரம், பல்லவியின் முதல் வரி ஒலிக்கவேண்டும், ஆனால் இசைக்கும் அந்த வரிக்கும் பொருந்தாதே என்று நமக்குத் தோன்றும், சரியாகக் கடைசி விநாடிகளில் ஒரு சின்ன மணி ஒலியைச் சேர்த்து அதை அட்டகாசமாகப் பல்லவியில் பொருத்திவிடுவார் ராஜா.

ஆனால் இந்தப் பாடலில் அதுபோன்ற ஜிம்மிக்ஸுக்கெல்லாம் அவசியமே ஏற்படவில்லை. திருமணத்தின் Climax ஆகிய கெட்டிமேள ஒலியை அப்படியே நிறுத்திவிட்டு அரை விநாடி அமைதிக்குப்பிறகுதான் ‘நீரோட்டம்’ என்று சரணத்தைத் தொடங்குகிறார் ராஜா. அடுத்த காட்சி என்ன (முதலிரவு? ஹனிமூன்?) என்பது நம் ஊகத்துக்கு விடப்படுகிறது.

சரணத்தில் இன்னொரு விசேஷம், மெட்டு நின்று திரும்புகிற எல்லா வார்த்தைகளும் ‘ம்’ என முடியும் : நீரோட்டம், போலோடும், ஊர்கோலம், ஆனந்தம், பூவாரம், தெய்வம், வாழ்த்தும், ராகம், திருத்தேகம், எனக்காகும், உள்ளம், பொன்னாரம், பூவாழை (இது ஒன்றுமட்டும் odd man out), ஆடும், தோரணம், எங்கெங்கும், சூடும், அந்நேரம், கீதம், இந்த ஒவ்வொரு ‘ம்’க்கும் மெட்டு எப்படி வளைந்து நெளிந்து குழைந்து ஓடுகிறது என்று கேட்டால்தான் புரியும்.

இந்தப் பாட்டை எழுதியவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. அவராக விரும்பி இத்தனை ‘ம்’களைப் போட்டாரா, அல்லது ராஜாவின் ஐடியாவா என்பதும் தெரியவில்லை, ஆனால் பாடல் வரிகளில் இத்தனை ‘ம்’ இருப்பதால் ராஜா அந்த ‘ம்ம்ம்ம்ம்ம்’மையே ஒரு தனித்துவமான கோரஸாக மாற்றிக்கோண்டிருக்கிறார், உண்மையில் இந்தப் பாடலை அழகாக முடித்துவைப்பதும் அந்த ‘ம்ம்ம்ம்ம்’கள்தான்.

‘ம்’களில்மட்டுமில்லை, இந்தப் பாடலின் சரணம்முழுவதுமே ஏகப்பட்ட twists and turns. உதாரணமாக முதல் சரணத்தில் இங்கே ஒற்றை மேற்கோள்குறி உள்ள இடங்களையெல்லாம் கவனித்துக் கேளுங்கள், பாடல் வரிகளையும் தாண்டிய ஒரு நீட்சியும் நடுக்கமும் தெரியும், அது கவனமாக யோசித்துச் செய்யப்பட்டதாகதான் இருக்கவேண்டும்: நீ’ரோட்டம், ஆ’சைக் கனவுகள், ஊ’ர்கோலம், ஆ’னந்தம், பூ’பா’ரம், கா’தல், கா’தலில், ஊ’றிய.

ஐந்தே வரிகளில் (மீண்டும் முப்பது விநாடிகளுக்குள்) சரணம் முடிந்துவிட, எட்டே விநாடிகளில் பல்லவியைச் சுருக்கமாகத் தொட்டுவிட்டு வாத்திய இசைக்குப் போய்விடுகிறார் ராஜா. மீண்டும் சுமார் முக்கால் நிமிடத்துக்கு இன்னொரு விஸ்தாரமான இடையிசை. அதைத் தொடர்ந்து மழைத் தண்ணீரினால் தோன்றிய சிற்றோடைபோல் வளைந்து நெளிந்து ஓடும் சரணம்.

இந்தப் பாடல் தருகிற அனுபவத்தை எத்தனை விளக்கமாக எழுதினாலும் போதாது, கேட்கத்தான் வேண்டும், இதுமாதிரி நேரங்களில்தான் இசையின்முன்னால் மொழி எப்பேர்ப்பட்ட ஏழை என்பது புரியும்.

இத்தனை அழகான பாட்டுக்கு ஒரு திருஷ்டிப் பொட்டு இல்லாமல் எப்படி? அதுவும் உண்டு : பாடலின் முதல் வரி ‘பூங்கதவே, தாழ் திறவாய்’. ஆனால் தீபன் சக்கரவர்த்தி, உமா ரமணன் இருவருமே பிடிவாதமாகத் திரும்பத் திரும்பத் ‘தாள் திறவாய்’ என்றுதான் பாடுகிறார்கள். ஏனோ ராஜா இதைக் கவனித்துத் திருத்தாமல் விட்டுவிட்டார்.

‘தாழ்’ என்பது ‘தாழ்ப்பாள்’ என்பதன் சுருக்கம். ‘அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்று திருக்குறளில் வரும்.

‘தாள்’ என்றால் பாதம். நாம் பாதத்தால் தட்டுவதால்தான் ‘தாளம்’ என்று பெயர் வந்தது எனச் சொல்வார்கள். ‘தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய் வாள்கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான்’ என்று குழந்தைக் கண்ணனைப் பாடுவார் பெரியாழ்வார். அதாவது, பாதத்தை நீட்டிச் சக்கரத்தை உதைத்து அசுரர்களைக் கொன்றானாம்!

ஆக, இந்தப் பாடலில் ‘தாழ் திறவாய்’ என்பதுதான் சரி. யாரிடமாவது ‘தாள் திறவாய்’ என்று கேட்டுத் தொலைத்துவிடாதீர்கள், அதற்கு விவகாரமான அர்த்தம் Smile

Followup: https://nchokkan.wordpress.com/2011/10/21/rgtwrng/

***
என். சொக்கன் …

19 10 2011

26 Responses to "மழை"

Classical song, and an awesome post 🙂 your song series is very nice.

//இந்தப் பாட்டை எழுதியவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை.//
சொக்கன்!
வேறே யாரு! வைரமுத்துதான் (அந்தப் படம்தானே அவரது முதல் பாடல் இடம்பெற்ற படம்!)

அன்புடன்
வெங்கட்ரமணன்

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

இந்தப்பதிவைப் படிக்கப் படிக்கவே பூங்கதவே தாழ்திறவாய் பாடல் முழு ஆர்கஸ்ட்ரேஷனுடன் மனதிற்குள் ஓட ஆரம்பித்துவிட்டது. (அதாவது ஆடியோவே தேவையில்லாமல் மனதிற்குள்ளேயே இசைக்கிற பாடல்).

ஆல்பம் படத்தின் ’காதல் வானொலி’ என்னுடைய ஃபேவரிட் பாடல்களில் ஒன்று, ஆனால் அது அது அதிகம் கவனிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இதேபோல்தான் பாப்கார்ன் படத்தில் ’பூவைத்த பூவில் தீவைத்த ஸ்நேகிதா’ என்ற பாடலும்.

இப்போது வந்து போன தம்பி அர்ஜூனா என்ற படத்தில் கூட ”நல்ல மழை நடுங்கும் குளிர்..” என்ற ஒரு அருமையான பாடல் ஒன்று உண்டு (இசை தீனா). படம் ஒரே நாள் மட்டுமே ஓடியதால் யாராவது கேட்டார்களா என்றே தெரியவில்லை.

Poonkathave Thaazh Thiravai was not Written by vairamuthu.Thats sure.Probably its by Gangai Amaran.

On @nchokkan’s suggestion…posting this alternate viewpoint here

//தீபன் சக்கரவர்த்தி, உமா ரமணன் இருவருமே பிடிவாதமாகத் திரும்பத் திரும்பத் ‘தாள் திறவாய்’ என்றுதான் பாடுகிறார்கள். ஏனோ ராஜா இதைக் கவனித்துத் திருத்தாமல் விட்டுவிட்டார்//

தாள் – தாழ் = தமிழில், இரண்டுமே சரி! தாழ்ப்பாளைக் குறிக்கும்!

* தம்மதி தான் “திறப்பர் தாள்” = புறப்பொருள் வெண்பா மாலை!
* புத்தியைத் “திறக்குந் தாள்” = சீவக சிந்தாமணி

இலக்கியத்தில் எழுத்துப் பிழை இருக்கலாமே-ன்னு சிலர் கேட்கலாம்! ஒன்றில் இருந்தாப் பிழை…பல இலக்கியங்களிலும் இருந்தால்?
பல்வேறு காலங்களில், பல்வேறு கவிஞர்கள்/அறிஞர்கள் பயன்படுத்தியது அத்தனையும் எழுத்துப் பிழை-ன்னு சொல்லீற முடியுமா?
——————–

சரி, இலக்கியத்தை விடுவோம்! அன்றாட நடைமுறையில், எது நேரான பொருளைத் தருகிறதோ, அதையே பயன்படுத்த வேண்டும் என்ற வாதத்தை வைக்கிறார்கள்

தாள்-தாழ் என்பது இலக்கியப் பேச்சு மட்டுமில்லை!
இன்றும், பல கிராமங்களில், தாளைப் போடு-ன்னு சொல்லுறதும் வழக்கம் தான்!
ஒரு குமுகாய வழக்கை, பிழை-ன்னு அத்தனை சீக்கிரம் ஒதுக்கி விடுதல் கூடாது!
——————–

* தாள் = பாதம்
தாள் திறவாய் -ன்னா வேற மீனிங் வந்துருமே-ன்னு சிலர் சொல்லலாம்!
* தாழ் = கீழே (தாழ்தல்)
தாழ் திறவாய்-ன்னா…..கீழே தொற-ன்னு, இதுலயும் வேற மீனிங் வரத் தான் செய்யும்:))

இப்படியே பாத்துக்கிட்டு இருந்தா, மொழியில் ஒவ்வொரு சொல்லாத் தூக்கிற வேண்டியது தான்:)
ஆனா அது மொழிக்குக் கேடாய் முடியும்! மொழி, வளப்பமான சொற்களை இழக்க நேரும்!

—————-

Thatz why I am “REQUESTING”….dont banish the other usage!
* தாழ் என்றே புழங்குங்கள்
* ஆனால் தாள் என்பதைத் “தவறு”/மொழிப் பிழை என்று ஒதுக்கி வைக்காதீர்கள்!
இதையே, தமிழுக்காக, மன்றாடிக் கேட்டுக் கொள்வது!!!

(மற்றபடி, ஒருவர் கூற்றை மறுக்க வேணும் என்றோ, நான் பிடிச்ச முயலே மூன்று கால் என்றோ அல்ல!)

தாழ்ப்பாள் என்றுதான் சொல்கிறோம். அதன் சுருக்கமே தாழ். தாள்ப்பாழ் என்று இருக்கிறதா என்ன?

தாழ் என்றால் தாழ்வது என்றுதான் பொருளே தவிர கீழே என ஒருவரும் சொல்வது இல்லை. தாழ் என்பதை கிராமங்களில் தாள் எனச் சொல்வது உச்சரிப்பு பிரச்சினை தவிர வேறு ஒன்றும் இல்லை. சென்னை வாயப்பயம் என்பதால் நாளைக்கு அதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற வாதம் வரும் போலும்.

தாழ் என்றே சொல்லுங்கள். இலக்கியங்களில் சில இடங்களில் வருவதால் தாள் எனச் சொல்ல வேண்டாம்.

/Thatz why I am “REQUESTING”….dont banish the other usage!/

அப்படியே, மழைக்குப் பதிலாக மயை, மலை போன்ற உச்சரிப்புக்களையும் Banish செய்ய வேண்டாம். Thatz என்பதை ஆக்ஸ்ஃபோர்ட் டிக்‌ஷனரியில் சேர்க்க வேண்டும் என்றும் போராடலாமா?

🙂

தாள்-தாழ் எல்லாம் இருக்கட்டும்…
இவ்ளோ தூரம் வந்துட்டு, இசையைப் பத்திச் சொல்லாமப் போனா, அதுவும் இளையராஜா இசையைப் பத்திச் சொல்லாமப் போனா….நரகத்துக்குத் தான் போவேன்:))
—————–
முக்கியமா ஒன்னைக் கவனிச்சீங்களா சொக்கரே? நிழல்கள் ரவி காற்று ஊதுவாரு! அதில் இருந்து பாட்டு ஆரம்பிக்கும்!:)

காற்று வரும் போது இசை
ஒளி தோன்றும் போது, டடடடடடடங்-ன்னு துள்ளும்
அப்பறம் வயலின் வந்து கதவை ஒவ்வொன்னாத் திறக்கும்:)
கடைசிக் கதவைத் திறக்கும் போது, டங் ன்னு ஒரு Drum Beat….
அப்பறம் தான் மெல்லிய வீணை!

அப்பறம் நீங்க சொன்ன..
வீணை-வயலின்,
வயலின்-குழல்
நாதசுரம்-வயலின்…
One of the best preludes & interludes of Raja!
—————

பல்லவிக்கு அடுத்த கட்டத்தில்…ஜலதரங்கம் வேற இருக்கு!
அது ஒன்னு வாசிக்க, அதுக்குப் போட்டியா வயலின் இன்னோன்னு வாசிக்கும்:) Wow!
நாதசுரத்தில் கடைசியா ஒலிக்கும் கெட்டி மேளம் கூட, பாட்டின் இசையை ஒட்டித் தான் வரும்!

இன்னோன்னு note பண்ணீங்களா? ரோகிணி குளத்தில் குதிக்கும் காட்சி!
அப்போ Bubbles வரும்! நீர்க்குமிழி-க்கு கூட இசை குடுப்பாருய்யா இந்தாளு….ட்டொடங் ட்டொடங் ட்டொடங்…man, i just love this song:)

‘மணிக் கதவம் தாள் திறவாய்’ என்று திருப்பாவையில் ஆண்டாள் பாடியுள்ளாரே! ‘கதவைத் திற’ என்பதைத்தானே அது குறிக்கிறது

@penathal, @elavasam
There is no end to this discussion!:)

தாழ்ப்பாள்-இல் பாள்-ன்னா என்ன?
* தாழிசை=தாழ்+இசை=தாழ்ந்து ஒலிப்பதால் (“கீழ்” ஸ்தாயி-ன்னு சொல்றீங்களே..அது போல)
* தாழ்வான பகுதி = “கீழ்” உள்ள பகுதி!

உங்க பாணியில், தாழ் திற-ன்னு சொன்னாலும்…கீழே தொற-ன்னு பொருள்-ல்லயும் எடுத்துக்கலாம்! நீங்க உங்க அளவில் எடுத்துக்க மாட்டீங்க! ஆனா இன்னொருத்தர் எடுத்துக்கிட்டா?

என்னளவில் சரி, என்னை மதிக்கும் அன்பர்கள் நான் சொல்வதைக் கேளுங்க என்பதெல்லாம்…மொழி அமைவியலில் வராது!
மொழித்தன்மை = பொதுத்தன்மை! Standards! அதான் தொல்காப்பியம், நன்னூல்-ன்னு Standards இருக்கு!
———————–

மழை=மள; வாழைப்பழம்=வாளப்பளம்…இதையெல்லாம் மக்கள் பேசறாங்களே-ன்னு சேர்க்கச் சொல்லல!

ஆனா
* மக்களும் பேசி,
* இலக்கியத்திலும் ஏறி,
* பல நூற்றாண்டுகளாக இருக்கும் சொற்களை….
“பழுதான சொல்” என்று முத்திரை குத்தி, துரத்தி விட முடியாது! அவை பழுதான சொல் என்பதை நன்னூலும் (Standards) சொல்லவில்லை!

ஆனானப்பட்ட கம்பன், திருத்தக்கதேவர் எழுதியது தப்பு, ஆனா என்னளவில் நான் சொல்வது சரி-ன்னா….ஒன்னும் சொல்லுறத்துக்கு இல்லை!:))

Again, There is no end to this discussion!:)
Enjoy, as u like it 🙂

தாள் tāḷ : (page 1855)
(புறநா. 395). 12. [M. tāḷ.] Sheet of paper; ஒற்றைக் காகிதம். Mod. 13. cf. tāla. [K. tāḻ, M. tāḷ.]
Bolt, bar, latch; தாழ்ப்பாள். தம்மதி றாந்திறப்பர் தாள் (பு. வெ. 9, 24).
14. Wooden catch turning on a central screw that fastens a pair of shutters; கொய்யாக்கட்டை.
15. Pin that holds a tenon in a mortise;
முட்டுவாயின் ஊடுருவச் செறிக்கும் கடையாணி. தாளுடைக் கடிகை நுழைநுதி நெடுவேல் (அகநா. 35)
——-

Thatz it! Dot!

பாடலாசிரியர் கங்கை அமரன்.

‘மணிக் கதவம் தாள் திறவாய்’ என்று திருப்பாவையில் ஆண்டாள் பாடியுள்ளாரே! ‘கதவைத் திற’ என்பதைத்தானே அது குறிக்கிறது?

ஆனால் பாடலைப் பற்றி எழுதியிருக்கும் விதம் அபாரம்!

அருமையான பாட்டு. இசை. விவரிப்பு. நன்றி.

///Thatz why I am “REQUESTING”….dont banish the other usage!/

அப்படியே, மழைக்குப் பதிலாக மயை, மலை போன்ற உச்சரிப்புக்களையும் Banish செய்ய வேண்டாம். Thatz என்பதை ஆக்ஸ்ஃபோர்ட் டிக்‌ஷனரியில் சேர்க்க வேண்டும் என்றும் போராடலாமா?
//

பூ, புஷ்பம், புய்ப்பம் ? !!!!

@என்.சொக்கன்: ரசிகன் சார் நீங்க!

அருமையான பதிவு. பாட்டை iTunes -இல் loop-இல் ஓடவிட்டுட்டு வரி வரியாக ரசித்துப் படித்தேன். நன்றி சொக்கன்.

தங்கள் விமர்சனம் படித்த பிறகு பாடலை உன்னிப்பாக கேட்க தோன்றுகிறது. அனுபவிச்சி எழுதி இருக்கீங்க.

நல்ல பதிவு! என் காதுகளுக்கு தாழ் என்றே கேட்கிறது!

தாள் என்பதற்கு மலரின் இதழ் என்றும் பொருள் உண்டு.குமுத மலர் பற்றிய ஒரு வர்ணனையில் அதைப் படித்ததாக நினைவு

நல்ல ரசனை சார் உங்களுக்கு!!!!!!!

அணு அணுவாய் அனுபவித்து ஆராய்ந்து சொல்லியுள்ளீர்கள் . மெய்மறந்து போனேன்.நன்றி நன்றி தொடரவேண்டும் உங்கள் பணி

[…] பதிவுகளில் (விழுந்த எண்ணங்கள் & மழை) ஒரு சின்னக் குழப்பம், ஒரு பெரிய […]

[…] என்.சொக்கனின் தாள்/தாழ் சந்தேகத்திற்குப் பிறகு இதைப் பதிவு செய்யத் தோன்றியது. GA_googleAddAttr("AdOpt", "1"); GA_googleAddAttr("Origin", "other"); GA_googleAddAttr("theme_bg", "ffffff"); GA_googleAddAttr("theme_text", "444444"); GA_googleAddAttr("theme_link", "cd4517"); GA_googleAddAttr("theme_border", "2F2019"); GA_googleAddAttr("theme_url", "AD92C3"); GA_googleAddAttr("LangId", "1"); GA_googleAddAttr("Tag", "chummaa"); GA_googleAddAttr("Tag", "ilayaraja"); GA_googleAddAttr("Tag", "k-balachander"); GA_googleAddAttr("Tag", "music"); GA_googleFillSlot("wpcom_sharethrough"); Share this:TwitterFacebookEmailLike this:LikeBe the first to like this post.   […]

[…] இந்த ப்ளாகிலேயே அதைச் சிலாகித்து ஒரு நீண்ட வியாசம்கூட எழுதியிருக்கிறேன். ஆனால் இன்றைக்கு […]

[…] Posted by: என். சொக்கன் on: October 19, 2011 […]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,749 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

October 2011
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
%d bloggers like this: