மனம் போன போக்கில்

Archive for October 31st, 2011

முன்குறிப்பு:

இது கட்டுரை அல்ல. கற்பனைக் கதையும் அல்ல. ஆங்காங்கே கவனித்த உண்மைகள் கொஞ்சம், மிகைப்படுத்தல் கொஞ்சம், Rational Thinking கொஞ்சம், கெக்கேபிக்கே சிந்தனை கொஞ்சம், பொதுபுத்தி கொஞ்சம், உணர்ச்சிவயப்’படுத்தல்’ மிச்சம் என எல்லாம் கலந்த ஏதோ ஒன்று. ‘மல்லிகை மகள்’ இதழின் தீபாவளி மலரில் வெளிவந்தது

1

சில வருடங்களுக்கு முன்னால், பெங்களூரில் ஒரு புத்தக வெளியீட்டு விழா. அதற்குத் தலைமை தாங்கியவர் கணிதமேதை சகுந்தலா தேவி. ’குழந்தைகளுக்குக் கணக்கில் ஆர்வம் ஊட்டுவது எப்படி?’ என்கிற தலைப்பில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் சொன்ன ஒரு சம்பவம் இது:

எங்கள் வீட்டில் பழைய பேப்பர் நிறையச் சேர்ந்துவிட்டது. அவற்றை எடை போடுவதற்காக எடுத்துச் சென்றேன்.

பழைய பேப்பர் கடையில் ஒரு சிறுவன்தான் இருந்தான். பள்ளிச் சீருடைகூட அணிந்திருந்தான். அப்பாவுக்கு உதவியாக வேலை பார்க்கிறேன் என்றான். அவனுடைய பொறுப்புணர்ச்சியைப் பார்த்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

நான் கொண்டுசென்ற காகிதங்களை அவன் இரண்டாகப் பிரித்தான். செய்தித் தாள்களைத் தனியே எடை போட்டான், ‘நாற்பது ரூபாய்’ என்றான், மற்ற பத்திரிகைகளைத் தனியே எடை போட்டான், ‘முப்பது ரூபாய்’ என்றான்.

அடுத்து, அவன் ஒரு கால்குலேட்டரை எடுத்தான். 40 + 30 என்று கணக்குப் போட்டு ‘எழுபது ரூபாய்’ என்றான். எனக்கு அதிர்ச்சி!

’ஏன்ப்பா, உன்னைப் பார்த்தால் ஹைஸ்கூல் படிக்கிறவனைப்போல் இருக்கிறாய், நாப்பதும் முப்பதும் எழுபது என்று மனக்கணக்குப் போடமாட்டாயா? அதற்குக்கூடக் கால்குலேட்டர் தேவையா?’ என்று வருத்தத்துடன் கேட்டேன்.

அவன் சிரித்தான். ‘மேடம், கைக்கு எட்டற தூரத்துல கால்குலேட்டர்தான் இருக்கே, அப்புறம் எதுக்கு அநாவசியமா மூளையைக் கசக்கிக்கணும்? கால்குலேட்டரால சுலபமாச் செய்யமுடியற வேலைகளை நாம ஏன் சிரமப்பட்டுச் செய்யணும்? வேஸ்ட்தானே?’

2

கடந்த மாதம், என்னுடைய மகளின் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு தினம். அப்போது அங்கே ஒரு தாய் வீராவேசமாகப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது. ‘என் பையனுக்கு நீங்க ரொம்ப ஹோம்வொர்க் தர்றீங்க மேடம், அவன் பாவம், கையெல்லாம் வலிக்குதுன்னு அழறான்!’

‘ஸாரிங்க. மத்த பாடத்திலெல்லாம் அவனுக்கு ஹோம்வொர்க் அதிகம் தர்றதில்லை’ என்றார் ஆசிரியை. ‘இங்க்லீஷ்லமட்டும்தான். அதுவும் குறிப்பா ஹேண்ட்ரைட்டிங்க்குமட்டும்தான் நிறைய வீட்டுப்பாடம் தர்றோம்.’

‘அதான் ஏன்?’

‘இதென்ன கேள்வி?’ என்பதுபோல் ஆசிரியை அந்தத் தாயை விநோதமாகப் பார்த்தார். ‘உங்க பையன் ரெண்டாங்கிளாஸ் படிக்கறான். ஆனா அவனுக்குக் கையெழுத்து இன்னும் சரியா வரலைங்க. முதல் வரியில எழுத ஆரம்பிச்சா மூணாவது வரியில போய் நிக்கறான். எழுத்து எதுவும் நாலு வரியில நிக்காம ஒவ்வொண்ணும் ஒவ்வொரு சைஸ்ல ஏத்தியும் தாழ்த்தியும் இருக்கு. இதையெல்லாம் சரி செஞ்சாதானே நாளைக்கு அவன் சரியா எழுதமுடியும்? அதுக்காகதான் எக்ஸ்ட்ரா ஹோம்வொர்க் தர்றோம். தப்புகளைத் திருத்தறோம். எல்லாம் அவனோட நல்லதுக்குதானே?’

‘நான்சென்ஸ்’ என்றார் அந்தத் தாய். ‘இந்தக் காலத்துல யார் பேனா பிடிச்சு எழுதறாங்க மேடம்? முந்தின தலைமுறையில எல்லோரும் ஏ, பி, சி, டி எழுதினாங்கங்கறதுக்காக இவங்களுக்கும் சொல்லித்தர்றீங்க, அவ்ளோதான். மத்தபடி படிப்பை முடிச்சு வெளியே வந்தப்புறம் அவன் பேனாவையே தொடப்போறதில்லை, ஒரு வார்த்தைகூடப் பேப்பர்ல எழுதப்போறதில்லை. எல்லாம் கம்ப்யூட்டர்தான். இந்தக் காலத்துலபோல் ஹேண்ட்ரைட்டிங்கை அழகுபடுத்தறேன்னு நேரத்தை வீணடிக்கறீங்களே, சுத்தப் பைத்தியக்காரத்தனம். அதையெல்லாம் நிறுத்திட்டு ஒழுங்காப் பாடத்தைமட்டும் சொல்லிக்கொடுங்க. புரியுதா?’

3

பாட்டுப்போட்டி ஒன்று. எட்டு வயதுப் பையன் ராகங்களைப் போட்டுப் புரட்டிக்கொண்டிருந்தான். அட்டகாசமான குரல். பிசிறில்லாத உச்சரிப்பு. கச்சிதமான உணர்ச்சிகள். எல்லாவற்றையும்விட முக்கியமாக, சிரித்த முகம்.

ஆச்சர்யமான விஷயம், அவனை அடுத்துப் பாடவந்த எல்லோருமே இப்படிதான் தூள் கிளப்பினார்கள். மூன்று வயது மழலை ஒன்றுகூட மேடையேறி அசத்தியது. திகட்டத் திகட்ட இன்னிசை மழை!

ஒரே பிரச்னை, பாடியவர்கள் யாரும் ‘மூன்று நிமிட’ இலக்கை மதிக்கவில்லை. மணி ஒலித்தபின்னும் தொடந்து பாடிக்கொண்டே இருந்தார்கள். பாட்டை முடிக்காமல் யாரும் கீழே இறங்கவில்லை.

இதனால் ஒருகட்டத்தில் விழா அமைப்பாளர்கள் சலித்துப்போய்விட்டார்கள். ‘இப்படியே போய்க்கொண்டிருந்தால் ரெண்டு மணி நேர நிகழ்ச்சி எட்டு மணி நேரத்துக்கு நீண்டுவிடும்’ என்று மேடையிலேயே அறிவித்தார்கள். ‘இனிமேல் மூன்று நிமிடம் தாண்டியதும் மைக்கை அணைத்துவிடுவோம். நீங்கள் பாட்டை நிறுத்தியே தீரவேண்டும்.’

இப்போது ஒரு பெண் மேடையேறினாள். பன்னிரண்டு வயது மதிக்கலாம். நல்ல கம்பீரமான குரல். மேடை பயமெல்லாம் இல்லாமல் நன்றாகப் பாடினாள்.

மூன்று நிமிடம் முடிந்தது. மணி ஒலித்தது. ஆனால், பாடல் முடியவில்லை. இன்னொரு கால் நிமிடம் பொறுத்துப் பார்த்த விழா அமைப்பாளர்கள் மைக்கை அணைத்துவிட்டார்கள்.

அவ்வளவுதான். அதுவரை சிரித்தபடி பாடிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் முகம் சட்டென்று மாறியது. கோபத்தில் மைக்கைப் பிடுங்கிக் கீழே அடித்து உடைத்துவிட்டாள். அதோடு நிறுத்தாமல், மைக்கே தேவைப்படாத சுருதியில் பெரிதாக அழத் தொடங்கினாள். பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி.

இதைவிடக் கொடுமை, அந்தப் பெண்ணின் பெற்றோர் நடந்துகொண்ட விதம். மேடையில் தங்களுடைய மகள் செய்தது தவறு என்பதை ஒப்புக்கொள்ளக்கூட அவர்கள் தயாராக இல்லை. ‘மத்தவங்கல்லாம் தாராளமா அஞ்சு நிமிஷம், ஏழு நிமிஷம்கூடப் பாடினாங்க, இவளுக்குமட்டும் மூணு நிமிஷமா?’ என்று சண்டைக்குதான் போனார்கள்.

அன்றைக்கு அந்தப் பெண்ணுக்குப் பரிசு கிடைக்கவில்லை. காரணம், அவளது திறமைக்குறைவு அல்ல.

4

மாதாந்திர ஷாப்பிங். ஆட்டோவில் சில கிலோமீட்டர்கள் பயணம்.

வழியில் ஒரு டிராஃபிக் சிக்னல் வந்தது. சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. ஆட்டோவை நிறுத்திய ஓட்டுனர் முன்னும் பின்னும் பார்த்தார். இறங்கி அந்தப் பக்கமாக எட்டிப்பார்த்தார். திருப்தியுடன் தலையாட்டிவிட்டு ஆட்டோவைக் கிளப்பி ஓட்ட ஆரம்பித்தார்.

என் மகளுக்கு அதிர்ச்சி. ‘அப்பா, Red Means Stopன்னு படிச்சோமே. இந்த டிரைவர் அங்கிள் ரெட் லைட் எரியும்போது வண்டியை ஓட்டறாரே!’

இதைக் கேட்ட ஆட்டோ டிரைவர் சிரித்தார். ‘பாப்பா, அதையெல்லாம் பார்த்துகிட்டிருந்தா பொழைக்கமுடியாது, டிராஃபிக் கான்ஸ்டபிள் இருக்காரா-ன்னு ஒரு லுக் விட்டுட்டு, அவர் இல்லாட்டி வண்டியை ஓட்டிகிட்டுப் போகவேண்டியதுதான், ரெட் லைட்டாவது இன்னொண்ணாவது!’

சிறிது நேரத்தில், சூப்பர் மார்க்கெட் வந்துவிட்டது. ஆட்டோவுக்குப் பணம் கொடுத்துவிட்டு உள்ளே சென்று எங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கினோம். பில் போடும் இடத்துக்கு வந்தோம்.

அங்கே ஏழெட்டு வரிசைகள். அநேகமாக ஒவ்வொன்றிலும் பத்துப் பேருக்குமேல் நின்றுகொண்டிருந்தார்கள். ஆளுக்கு மூன்று நிமிடம் என்று வைத்துக்கொண்டால்கூட, அரை மணி நேரத்துக்கு மேலாகிவிடும். பெருமூச்சுடன் ஏதோ ஒரு க்யூவில் நின்றோம்.

எங்களுக்குப் பக்கத்துக் க்யூவில் ஒரு குடும்பம். அப்பா, அம்மா, இரண்டு குழந்தைகள். அவர்கள் கையில் இருந்த கூடையில் நான்கைந்து பொருள்கள்தான் இருந்தன. அவற்றை பில் போடுவதற்காகச் சுமார் 15 நிமிடங்கள் காத்திருக்க அவர்கள் விரும்பவில்லை.

ஆகவே, அந்தக் குடும்பத் தலைவர் தன்னுடைய மனைவி, மகன், மகளை அழைத்தார். அவர்கள் கையில் ஆளுக்கு ஒரு பொருளைக் கொடுத்தார். ‘நீங்கல்லாம் வெவ்வேற க்யூவில போய் நில்லுங்க, ஒரே ஒரு ஐட்டம்தான், நான் முன்னாடி பில் போட்டுக்கறேன்னு சொல்லுங்க, நாம சட்டுன்னு வெளியே போயிடலாம்.’

அவர் சொன்னபடியே நடந்தது. நாங்களெல்லாம் மாக்கான்களைப்போல் ஒழுங்குமுறைப்படி வரிசையில் நின்றிருக்க, அவர்கள் எல்லோருக்கும் முன்பாக பில் போட்டுவிட்டு வெளியேறினார்கள். அந்தக் குழந்தைகள் முகத்தில் தங்களுடைய ’பிழைக்கத் தெரிந்த’ தந்தையின் ‘புத்திசாலித்தன’த்தைப்பற்றிய பெருமிதம்.

5

நண்பர் மகனுக்குப் பிறந்த நாள். அவர் வீட்டிலேயே ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

வழக்கமாக இதுபோன்ற பார்ட்டிகளின்போது குழந்தைகள் பாட்டுப் பாடும், ஆட்டம் போடும், கேக் வெட்டும், பலூன்களைத் தூக்கிப் போட்டுத் துரத்தும், கையில் முகத்தில் ’டாட்டூ’ படங்களை வரைந்துகொள்ளும், சின்னச் சின்ன விளையாட்டுகளெல்லாம் இருக்கும்.

ஆனால் இந்தப் பார்ட்டி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. குழந்தைகளுக்கென்று ஓர் அறை ஒதுக்கப்பட்டு அங்கே ஏழெட்டுக் கம்ப்யூட்டர்கள், லாப்டாப்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் வெவ்வேறு வீடியோ கேம்ஸ்.

போதாதா? பார்ட்டிக்கு வந்த குழந்தைகள் எல்லாம் அந்த அறைக்குள் புகுந்துகொண்டு வெளியே வரவே இல்லை. சிப்ஸ், மிக்ஸர், கேக், ஸ்வீட் என எல்லாம் அங்கேயே மேஜையில் பரிமாறப்பட்டது. குழந்தைகள் மாறி மாறி விளையாடியபடி வளையவந்தார்கள். பெரியவர்கள் வெளியே அரட்டையடித்துக்கொண்டிருந்தார்கள்.

நான் சும்மா அந்த அறைக்குள் எட்டிப்பார்த்தேன். இரண்டு பொடியன்கள் லாப்டாப்பில் கார் ரேஸ் ஆடிக்கொண்டிருந்தார்கள். எதிர்ப்பட்டவர்களையெல்லாம் டமால் டமால் என்று அடித்து வீழ்த்தினார்கள். ‘எங்கப்பா காரை இவ்ளோ ஸ்பீடா ஓட்டமாட்டேங்கறார், வேஸ்ட்’ என்றான் ஒரு சிறுவன்.

அன்றைக்குப் பிறந்தநாள் கொண்டாடும் சிறுவனின் தந்தையிடம் சென்றேன். ‘பர்த்டே பார்ட்டியில வீடியோ கேம்ஸெல்லாம் எதுக்குங்க?’ என்றேன்.

‘இந்தக் காலப் பசங்க வேற எதை விளையாடறாங்க, சொல்லுங்க?’ என்றார் அவர். ‘என் பையனுக்கு லேட்டஸ்ட் வீடியோ கேம் கன்ஸோல் வாங்கிக் கொடுத்திருக்கேன், ஸ்கூல்லேர்ந்து வந்ததும் அதுமுன்னாடி உட்கார்ந்துடறான். ஒன் ஹவர் அந்த ரூம்லேர்ந்து வெளியே வரமாட்டான், கிரிக்கெட், டென்னிஸ், கபடி, கார் ரேஸ்ன்னு எல்லா கேம்ஸையும் விளையாடிச் சலிச்சப்புறம்தான் ஹோம் வொர்க்ல்லாம்.’

‘இதே கேம்ஸை அவன் வெளியே போய் நிஜமான ஃப்ரெண்ட்ஸோட விளையாடலாமே?’

’வாஸ்தவம்தான். ஆனா இந்தக் காலத்துல யாரை நம்பமுடியுது சொல்லுங்க? யாரோட பழகினாலும் ஏதாவது கெட்ட பழக்கங்களைக் கத்துகிட்டு வந்துடறான், இல்லாட்டி அடிதடி, சண்டை, காயம், கலாட்டா, அப்புறம் அவனைப் பிடிச்சு வீட்டுக்கு இழுத்துட்டு வர்றதுக்குள்ள நம்ம தாவு தீர்ந்துடுது. அதான், வீட்டுக்குள்ளயே விளையாடுடா-ன்னு விட்டுட்டேன், ஒன் ஹவர் முடிஞ்சதும் கரண்டைப் பிடுங்கிடுவேன்னு மிரட்டினா ஒழுங்கா கேம்ஸை அணைச்சுட்டு ஹோம்வொர்க் செய்ய உட்காருவான்.’

6

உறவினரின் மகள் சிநேகா. ப்ளஸ் டூ படிக்கிறாள். நல்ல படிப்பாளி. எப்போதும் முதல் ரேங்க். சராசரிக்குமேல் ஐ.க்யூ.

சிநேகா ஓர் இன்டர்நெட் பிரியை. எந்நேரமும் ஃபேஸ்புக், ட்விட்டர் என்று வளையவருகிறவள். அவள் எங்கே போகிறாள், என்ன செய்கிறாள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரிவதற்குமுன்னால் இணையத்திற்குத் தெரிந்துவிடும். ‘ஃபேஸ்புக்ல எனக்கு 1500 ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க, தெரியுமா?’ என்று அடிக்கடி பெருமையாகச் சொல்லிக்கொள்வாள்.

சமீபத்தில் ஒரு பிரச்னை. ‘ஆன்லைன் சிநேகிதி’ ஒருத்தி சிநேகாவுடன் ‘காய்’ விட்டுவிட்டாள். ஃபேஸ்புக்கில் அவளைக் கண்டபடி திட்டி எழுதிவிட்டாள்.

அவ்வளவுதான். சிநேகாவின் உற்சாகமெல்லாம் எங்கேயோ பறந்துவிட்டது. எதையோ பறிகொடுத்தவளைப்போலவே வளையவந்துகொண்டிருந்தாள்.

சிநேகாவின் பெற்றோர் மகளுக்கு எதார்த்தத்தைப் புரியவைக்க முயன்றார்கள். ‘ஃப்ரெண்ட்ஸ் வர்றதும் போறதும் சகஜம், ஃப்ரெண்ட்ஸுக்குள்ள சண்டையும் சகஜம். ஒருவேளை நிஜமாவே அந்தப் பொண்ணு உன்னோட சண்டை போட்டாக்கூட, ஃபேஸ்புக்ல உனக்கு இன்னும் 1499 ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களே!’

இந்தச் சமாதானங்கள் சிநேகாவுக்குப் போதவில்லை. அவள் தொடர்ந்து புலம்பியபடிதான் இருந்தாள். ஆன்லைன் சிநேகிதங்களெல்லாம் வெறும் டிஜிட்டல் புள்ளிவிவரங்கள்தான் என்பதும் அவளுக்கு விளங்கவில்லை, இதை நிஜம் என்று நம்பத் தொடங்கும்போது உண்மையான நட்புகளைத் தொலைத்துவிடுகிறோம் என்பதும் புரியவில்லை.

ஒருவிதத்தில் சிநேகாகூடப் பரவாயில்லை. இந்தியாவின் மிகப் பெரிய தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஒன்றில் படிக்கிற மாணவி ஒருத்தி, ஃபேஸ்புக்கில் தன் காதலன் ஏதோ எழுதிவிட்டான் என்பதற்காக மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டுவிட்டாள்.

தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் உலகம் சுருங்கிக்கொண்டுவருகிறது என்கிறோம். அதோடு சேர்ந்து மனிதர்களும் சுருங்க ஆரம்பித்துவிட்டோமோ? இன்றைய உலகத்தில் பிழைப்பதற்கான வழிகள் இவை இவை என்கிற வரையறைகளை அமைத்துக்கொண்டு அவற்றில்மட்டும் கவனம் செலுத்துவதற்கான சேணங்களைக் கட்டிக்கொண்டுவிட்டோமோ? நம் குழந்தைகளுக்கும் அவற்றை வலுக்கட்டாயமாகக் கட்டிவிடுகிறோமோ?

படிப்பு, புத்திசாலித்தனம், ஐ.க்யூ. என்பவை ஒருபக்கம். அதனால் மார்க் வருகிறது, நல்ல காலேஜில் சீட் கிடைக்கிறது, பிரமாதமான வேலை வாய்க்கிறது, கை நிறையச் சம்பளம் குவிகிறது, வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளமுடிகிறது. இந்த விஷயத்தில் குறைபட்டவர்கள் வாழ்நாள்முழுக்கச் சிரமத்தை அனுபவிக்கவேண்டியதுதான். இதைத்தான் எல்லாத் தலைமுறைகளிலும் பெற்றோர் குழந்தைகளுக்குத் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். ‘படிக்காட்டிக் கழுதை மேய்க்கவேண்டியதுதான்!’

ஆனால் அதேசமயம் வெறுமனே படிப்பில்மட்டும் கவனம் செலுத்தினால் போதும், அதற்காக வேறெதையும் இழக்கலாம் என்கிற மனோநிலை மிகவும் ஆபத்தானது. இதனால் தனி மனிதர்களும் சரி, சமூகமும் சரி, வருங்காலத்தில் பல அதிர்ச்சிகளைச் சந்திக்கவேண்டியிருக்கும்.

மனித வள நிபுணர்கள் ஒருவரை எடைபோடும்போது ‘முழுமையான வளர்ச்சி இருக்கிறதா’ என்று பார்க்கிறார்கள். ஒருவருக்குக் கை, கால்மட்டும் சரியாக வளர்ந்து தலையும் வயிறும் மிகப் பெரியதாக இருந்தால் பார்ப்பதற்கு அவலட்சணமாக இருக்குமல்லவா? அதுபோல புத்திசாலித்தனத்தை வளர்த்துக்கொள்வதோடு நிறுத்திவிடாமல் அடுத்தவர்களுடன் பழகுவது, குழுவாக இணைந்து வேலை பார்ப்பது, படைப்பூக்கத்துடன் புதிதாகச் சிந்திப்பது, அடுத்தவர்களது கோணத்திலிருந்து சிந்தித்து மனிதாபிமானத்துடன் செயல்படுவது, சூழ்நிலைக்கு ஏற்ப ‘அட்ஜஸ்ட்’ செய்துகொண்டு முன்னேறுவது, வேலையையும் வாழ்க்கையையும் சமமாக மதித்து ஒன்றுக்காக இன்னொன்றை இழந்துவிடாமல் இருப்பது, பரபரப்பு வாழ்க்கைக்கு நடுவே ரிலாக்ஸ் செய்துகொள்ளப் பழகுவது, இயற்கையை ரசிப்பது, நாம் முன்னேறுவதற்காக இன்னொருவரை மிதித்துச் செல்வது நியாயமில்லை என்பதை உணர்வது, நம்மைப்போலவே இந்த உலகம் மற்ற மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும்கூடச் சொந்தமானது என்பதை உணர்வது, நேர்மை, காலம்தவறாமை, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல் உள்ளிட்ட பல மென்கலைகளும் இன்றைய உலகத்திற்குத் தேவைப்படுகின்றன. அவற்றைப் புறக்கணித்துவிட்டு வெறும் அறிவு வளர்ச்சியில்மட்டும் கவனம் செலுத்தினால், நாளைய உலகம் புத்திசாலித் தீவுகளின் தொகுப்பாகமட்டுமே இருக்கும்.

***

என். சொக்கன் …

02 10 2011


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,069 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

October 2011
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31