’வாடகை சைக்கிள்’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை தமிழகத்தின் எல்லாக் கிராமங்கள், நகரங்களிலும் தெருவுக்கு ஒரு வாடகை சைக்கிள் நிலையமாவது இருக்கும். கீற்றுக் கொட்டகை அல்லது சிமென்ட் கூரையின் கீழ் ஏழெட்டுப் புராதன சைக்கிள்களை வரிசையாகப் பூட்டுப் போட்டு நிறுத்தியிருப்பார்கள். பெயின்ட் உதிரும் அவற்றின் முதுகுப் புறங்களில் 1, 2, 3 என்று நம்பர் அடையாளங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.
வீட்டுக்கு ஒரு சைக்கிள் இருப்பதே பெரிய ஆடம்பர வசதியாக அறியப்பட்ட காலம் அது. நடுத்தரக் குடும்பங்களில் மோட்டார் பைக்கைப் பார்ப்பதே அபூர்வம். காரெல்லாம் பெரும் பணக்காரர்களுக்குமட்டுமே சாத்தியம்.
சைக்கிள் இருக்கிற வீடுகளில் அது எந்நேரமும் பிஸியாகவே காணப்படும். தினசரி வேலைக்குப் போவது, பொருள்களை வாங்கிவருவதற்காகக் கடைத்தெருவுக்குச் செல்வது, கோயில், சினிமா, இன்னபிற பொழுதுபோக்குத் தேவைகள் என எல்லாப் போக்குவரத்துகளுக்கும் சைக்கிள்தான் சிக்கனம்.
இதனால், அந்த வீடுகளில் உள்ள சின்னப் பையன்களுக்குதான் பெரிய பிரச்னை. அவர்களுக்குச் சைக்கிள் ஓட்டவேண்டும் என்று ஆசை இருக்கும். குரங்குப் பெடல் அடிக்கக் கற்றுக்கொண்டிருப்பார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் சைக்கிளைத் தொடமுடியாது. சனி, ஞாயிறுவரை காத்திருந்து, தந்தையிடமோ அண்ணனிடமோ கெஞ்சிக் கூத்தாடி சைக்கிளை வாங்கி ஓட்டினால்தான் உண்டு.
இப்படிப்பட்ட சிறுவர்களுக்குதான் வாடகை சைக்கிள் நிலையங்கள் பெரிய வரப்பிரசாதமாக இருந்தன. இவற்றில் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்துக்கு இத்தனை காசு என்கிற விகிதவீதத்தில் சைக்கிள்கள் வாடகைக்கு விடப்படும். எந்த நேரமும் காசைக் கொடுத்துவிட்டுச் சைக்கிளை உரிமையோடு ஓட்டிச் செல்லலாம். ஒரு பயல் கேள்வி கேட்கமுடியாது!
வாடகை சைக்கிள்களைப் பெரியவர்களும் அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்துவது உண்டு. ஆனால் பெரும்பாலும் அங்கே சிறுவர்கள், இளைஞர்களின் ராஜ்ஜியம்தான்!
கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியாவின் மத்யமக் குடும்பங்களுடைய சம்பாத்தியம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. முன்பு சைக்கிள் இருந்த இடத்தில் இப்போது பைக் அவசியத் தேவை. ‘நானோ’ போன்ற கண்டுபிடிப்புகள், முன்னேற்றங்களால், கார்கூட எளிதில் கைக்கு எட்டிவிடுகிறது.
இதனால், சைக்கிள் என்பது யாராலும் சுலபமாக வாங்கமுடிகிற ஒரு பொருளாக மாறிவிட்டது. குழந்தைகளுக்கான பொம்மை சைக்கிள்களுக்குக்கூட ஆயிரக்கணக்கில் செலவிடத் தயாராக இருக்கிறார்கள் மக்கள். அரசாங்கமும் மற்ற பல தனியார் அமைப்புகளும் ஏழை மாணவ மாணவியருக்குச் சைக்கிள்களை இலவசமாகவே வழங்கத் தொடங்கிவிட்டார்கள்.
ஆகவே, இப்போது நம் ஊரில் (குறைந்தபட்சம் சிறிய, பெரிய நகரங்களில்மட்டுமேனும்) வாடகை சைக்கிள் நிலையங்களுக்கான தேவை குறைந்துவிட்டது. அந்த இடத்தை மொபைல் ஃபோன் ரீசார்ஜ் கடைகளும் இன்டர்நெட் மையங்களும் பிடித்துக்கொண்டுவிட்டன!
அதேநேரம், வாடகை சைக்கிள்கள் காணாமல் போய்விடவில்லை. காலத்துக்கு ஏற்ப ஒரு புதிய அவதாரம் எடுத்திருக்கின்றன, சமீபத்தில் பெங்களூரு மகாத்மா காந்தி சாலையில் அதுமாதிரி ஒரு மாடர்ன் வாடகை சைக்கிள் கடையைப் பார்த்து அசந்துபோனேன்.
போன தலைமுறையில் நடுத்தரக் குடும்பங்களுடைய போக்குவரத்து சாதனமாக இருந்த சைக்கிள், இப்போது பெருநகரங்களில் உடல் ஆரோக்கியம் மற்றும் மாசுக் கட்டுப்பாடு ஆகியவற்றின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது. பைக் அல்லது கார் ஓட்டுகிற நேரத்தில் சைக்கிள் ஓட்டினால் உடம்புக்கு நல்லது, புகை குறையும், செலவும் மிச்சம் என்று ’சிட்டி’ ஜனம் கணக்குப் போடுகிறது.
அதேசமயம் எல்லோரும் சைக்கிள் வாங்கத் தயாராக இல்லை. காரணம், அதை நிறுத்துவதற்கு இடம், பராமரிப்பு என்று ஏகப்பட்ட அவஸ்தைகள் உண்டு. அத்தனை சிரமப்படுவதற்குப் பதில் ஒரு டாக்ஸி அல்லது ஆட்டோவைப் பிடித்துப் போய்விடலாமே என்று யோசிக்கிறார்கள்.
இந்த விஷயத்தை மனத்தில் கொண்டு பெங்களூரு மாநகராட்சியும் கெர்பெரொன் என்ற பொறியியல் நிறுவனமும் சேர்ந்து ‘ATCAG’ என்ற புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. தற்போது சோதனை அடிப்படையில் ஜெயநகர் மற்றும் எம். ஜி. ரோட் என்ற இரண்டு முக்கியப் பகுதிகளில்மட்டும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இது பெங்களூரு நகரம் முழுவதும் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

‘ATCAG’ திட்டம் இதுதான்: நகரின் முக்கியமான இடங்களிலெல்லாம் தானியங்கி சைக்கிள் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட பேருந்து நிறுத்தத்தைப்போலவே தோற்றமளிக்கும் இந்த ‘சைக்கிள் ஸ்டாப்’களில் மூன்று முதல் பத்து சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருக்கும். இந்தத் திட்டத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்கள் இந்த சைக்கிள்களைத் தேவையான நேரத்தில் வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
முக்கியமான விஷயம், ஒரு மணி நேரத்துக்கு இத்தனை ரூபாய் என்று நாம் கணக்குப் போட்டுக் காசைத் தேடிக்கொண்டிருக்கவேண்டியதில்லை. மாதத்துக்கு இருநூறு ரூபாய் செலுத்திவிட்டால் உங்களுடைய விவரங்கள் அனைத்தையும் ஒரு ஸ்மார்ட் கார்டில் பதித்துக் கொடுத்துவிடுகிறார்கள். இந்த ATCAG நிலையங்களில் அந்த கார்டைத் தேய்த்தால் ஒரு சைக்கிள் தானாகத் திறந்துகொள்ளும், நீங்கள் அதை ஓட்டிச் செல்லலாம். பத்து நிமிடமோ, அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ சைக்கிளைப் பயன்படுத்தியபிறகு, வேறொரு ATCAG நிலையத்தில் அதை நிறுத்திப் பூட்டிவிட்டு நம் வேலையைப் பார்க்கப் போகலாம். எல்லாமே ஆட்டோமேடிக்!

சுருக்கமாகச் சொன்னால், ஊர்முழுக்க எங்கே வேண்டுமானாலும் சைக்கிளை எடுத்துக்கொள்ளலாம், எங்கே வேண்டுமானாலும் கொண்டுபோய் விடலாம். ஷாப்பிங், சும்மா ஊர் சுற்றுவது, அலுவலகம் செல்வது என்று எதற்கு வேண்டுமானாலும் இந்த சைக்கிள்களைப் பயன்படுத்தலாம், மாதம் இருநூறு ரூபாய்தான் செலவு. பாக்கெட்டில் ஸ்மார்ட் கார்ட்மட்டும் இருந்தால் போதும். பஸ்ஸுக்குக் காத்திருக்கவேண்டாம், ஆட்டோவுக்குச் செலவழிக்க வேண்டாம், கார் அல்லது பைக்கை நிறுத்துவதற்கு இடம் தேடிச் சுற்றிச் சுற்றி வரவேண்டாம், பெட்ரோல், டீசல் செலவு குறையும், போக்குவரத்து நெரிசல் குறையும், காற்று மாசுபடுவது குறையும், எல்லாவற்றையும்விட முக்கியமாக, இது நமக்கு ஒரு நல்ல உடற்பயிற்சியும்கூட!
ஏற்கெனவே பெங்களூருவிலும் மற்ற பல இந்திய நகரங்களிலும் சைக்கிள்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. பலர் அலுவலகத்துக்குத் தினமும் சைக்கிளில் சென்றுவரத் தொடங்கியிருக்கிறார்கள். அதை ஓர் அவமானமாக நினைக்காமல், பெருமையாக எண்ணுகிற சூழலும் ஏற்பட்டிருக்கிறது. பல அலுவலகங்கள் சைக்கிளில் வரும் ஊழியர்களுக்கு ஊக்கப் பரிசுகள்கூடத் தருகின்றன!
ATCAGபோன்ற ’மாடர்ன் வாடகை சைக்கிள் நிலைய’ங்கள் இதனை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லும். எங்கு வேண்டுமானாலும் சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் திருப்பித் தரலாம் என்கிற சவுகர்யத்தால் பலரும் புதிதாகச் சைக்கிள் ஓட்டத் தொடங்குவார்கள் என்று பெங்களூரு மாநகராட்சி எதிர்பார்க்கிறது. அதன்மூலம் பெட்ரோல், டீசல் போன்ற மாசு ஏற்படுத்துகிற, அளவில் குறைந்துவருகிற எரிபொருள்களுக்கு ஒரு நல்ல மாற்றும் கிடைக்கும்.

காலத்தின் வேக ஓட்டத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும் என்று பலரும் நினைத்த சைக்கிள்கள், இப்போது இன்னொரு ரவுண்ட் வரும்போல!
***
என். சொக்கன் …
31 10 2011
(பின்குறிப்பு : இந்த வாரப் ‘புதிய தலைமுறை’ இதழில் வெளியான என்னுடைய கட்டுரை இது. பதிவுக்காகச் சற்றே மாற்றியுள்ளேன்.)