மனம் போன போக்கில்

வாடகை சைக்கிள்கள்

Posted on: November 11, 2011

’வாடகை சைக்கிள்’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை தமிழகத்தின் எல்லாக் கிராமங்கள், நகரங்களிலும் தெருவுக்கு ஒரு வாடகை சைக்கிள் நிலையமாவது இருக்கும். கீற்றுக் கொட்டகை அல்லது சிமென்ட் கூரையின் கீழ் ஏழெட்டுப் புராதன சைக்கிள்களை வரிசையாகப் பூட்டுப் போட்டு நிறுத்தியிருப்பார்கள். பெயின்ட் உதிரும் அவற்றின் முதுகுப் புறங்களில் 1, 2, 3 என்று நம்பர் அடையாளங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

வீட்டுக்கு ஒரு சைக்கிள் இருப்பதே பெரிய ஆடம்பர வசதியாக அறியப்பட்ட காலம் அது. நடுத்தரக் குடும்பங்களில் மோட்டார் பைக்கைப் பார்ப்பதே அபூர்வம். காரெல்லாம் பெரும் பணக்காரர்களுக்குமட்டுமே சாத்தியம்.

சைக்கிள் இருக்கிற வீடுகளில் அது எந்நேரமும் பிஸியாகவே காணப்படும். தினசரி வேலைக்குப் போவது, பொருள்களை வாங்கிவருவதற்காகக் கடைத்தெருவுக்குச் செல்வது, கோயில், சினிமா, இன்னபிற பொழுதுபோக்குத் தேவைகள் என எல்லாப் போக்குவரத்துகளுக்கும் சைக்கிள்தான் சிக்கனம்.

இதனால், அந்த வீடுகளில் உள்ள சின்னப் பையன்களுக்குதான் பெரிய பிரச்னை. அவர்களுக்குச் சைக்கிள் ஓட்டவேண்டும் என்று ஆசை இருக்கும். குரங்குப் பெடல் அடிக்கக் கற்றுக்கொண்டிருப்பார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் சைக்கிளைத் தொடமுடியாது. சனி, ஞாயிறுவரை காத்திருந்து, தந்தையிடமோ அண்ணனிடமோ கெஞ்சிக் கூத்தாடி சைக்கிளை வாங்கி ஓட்டினால்தான் உண்டு.

இப்படிப்பட்ட சிறுவர்களுக்குதான் வாடகை சைக்கிள் நிலையங்கள் பெரிய வரப்பிரசாதமாக இருந்தன. இவற்றில் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்துக்கு இத்தனை காசு என்கிற விகிதவீதத்தில் சைக்கிள்கள் வாடகைக்கு விடப்படும். எந்த நேரமும் காசைக் கொடுத்துவிட்டுச் சைக்கிளை உரிமையோடு ஓட்டிச் செல்லலாம். ஒரு பயல் கேள்வி கேட்கமுடியாது!

வாடகை சைக்கிள்களைப் பெரியவர்களும் அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்துவது உண்டு. ஆனால் பெரும்பாலும் அங்கே சிறுவர்கள், இளைஞர்களின் ராஜ்ஜியம்தான்!

கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியாவின் மத்யமக் குடும்பங்களுடைய சம்பாத்தியம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. முன்பு சைக்கிள் இருந்த இடத்தில் இப்போது பைக் அவசியத் தேவை. ‘நானோ’ போன்ற கண்டுபிடிப்புகள், முன்னேற்றங்களால், கார்கூட எளிதில் கைக்கு எட்டிவிடுகிறது.

இதனால், சைக்கிள் என்பது யாராலும் சுலபமாக வாங்கமுடிகிற ஒரு பொருளாக மாறிவிட்டது. குழந்தைகளுக்கான பொம்மை சைக்கிள்களுக்குக்கூட ஆயிரக்கணக்கில் செலவிடத் தயாராக இருக்கிறார்கள் மக்கள். அரசாங்கமும் மற்ற பல தனியார் அமைப்புகளும் ஏழை மாணவ மாணவியருக்குச் சைக்கிள்களை இலவசமாகவே வழங்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஆகவே, இப்போது நம் ஊரில் (குறைந்தபட்சம் சிறிய, பெரிய நகரங்களில்மட்டுமேனும்) வாடகை சைக்கிள் நிலையங்களுக்கான தேவை குறைந்துவிட்டது. அந்த இடத்தை மொபைல் ஃபோன் ரீசார்ஜ் கடைகளும் இன்டர்நெட் மையங்களும் பிடித்துக்கொண்டுவிட்டன!

அதேநேரம், வாடகை சைக்கிள்கள் காணாமல் போய்விடவில்லை. காலத்துக்கு ஏற்ப ஒரு புதிய அவதாரம் எடுத்திருக்கின்றன, சமீபத்தில் பெங்களூரு மகாத்மா காந்தி சாலையில் அதுமாதிரி ஒரு மாடர்ன் வாடகை சைக்கிள் கடையைப் பார்த்து அசந்துபோனேன்.

போன தலைமுறையில் நடுத்தரக் குடும்பங்களுடைய போக்குவரத்து சாதனமாக இருந்த சைக்கிள், இப்போது பெருநகரங்களில் உடல் ஆரோக்கியம் மற்றும் மாசுக் கட்டுப்பாடு ஆகியவற்றின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது. பைக் அல்லது கார் ஓட்டுகிற நேரத்தில் சைக்கிள் ஓட்டினால் உடம்புக்கு நல்லது, புகை குறையும், செலவும் மிச்சம் என்று ’சிட்டி’ ஜனம் கணக்குப் போடுகிறது.

அதேசமயம் எல்லோரும் சைக்கிள் வாங்கத் தயாராக இல்லை. காரணம், அதை நிறுத்துவதற்கு இடம், பராமரிப்பு என்று ஏகப்பட்ட அவஸ்தைகள் உண்டு. அத்தனை சிரமப்படுவதற்குப் பதில் ஒரு டாக்ஸி அல்லது ஆட்டோவைப் பிடித்துப் போய்விடலாமே என்று யோசிக்கிறார்கள்.

இந்த விஷயத்தை மனத்தில் கொண்டு பெங்களூரு மாநகராட்சியும் கெர்பெரொன் என்ற பொறியியல் நிறுவனமும் சேர்ந்து ‘ATCAG’ என்ற புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. தற்போது சோதனை அடிப்படையில் ஜெயநகர் மற்றும் எம். ஜி. ரோட் என்ற இரண்டு முக்கியப் பகுதிகளில்மட்டும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இது பெங்களூரு நகரம் முழுவதும் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

01

‘ATCAG’ திட்டம் இதுதான்: நகரின் முக்கியமான இடங்களிலெல்லாம் தானியங்கி சைக்கிள் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட பேருந்து நிறுத்தத்தைப்போலவே தோற்றமளிக்கும் இந்த ‘சைக்கிள் ஸ்டாப்’களில் மூன்று முதல் பத்து சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருக்கும். இந்தத் திட்டத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்கள் இந்த சைக்கிள்களைத் தேவையான நேரத்தில் வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

முக்கியமான விஷயம், ஒரு மணி நேரத்துக்கு இத்தனை ரூபாய் என்று நாம் கணக்குப் போட்டுக் காசைத் தேடிக்கொண்டிருக்கவேண்டியதில்லை. மாதத்துக்கு இருநூறு ரூபாய் செலுத்திவிட்டால் உங்களுடைய விவரங்கள் அனைத்தையும் ஒரு ஸ்மார்ட் கார்டில் பதித்துக் கொடுத்துவிடுகிறார்கள். இந்த ATCAG நிலையங்களில் அந்த கார்டைத் தேய்த்தால் ஒரு சைக்கிள் தானாகத் திறந்துகொள்ளும், நீங்கள் அதை ஓட்டிச் செல்லலாம். பத்து நிமிடமோ, அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ சைக்கிளைப் பயன்படுத்தியபிறகு, வேறொரு ATCAG நிலையத்தில் அதை நிறுத்திப் பூட்டிவிட்டு நம் வேலையைப் பார்க்கப் போகலாம். எல்லாமே ஆட்டோமேடிக்!

02

சுருக்கமாகச் சொன்னால், ஊர்முழுக்க எங்கே வேண்டுமானாலும் சைக்கிளை எடுத்துக்கொள்ளலாம், எங்கே வேண்டுமானாலும் கொண்டுபோய் விடலாம். ஷாப்பிங், சும்மா ஊர் சுற்றுவது, அலுவலகம் செல்வது என்று எதற்கு வேண்டுமானாலும் இந்த சைக்கிள்களைப் பயன்படுத்தலாம், மாதம் இருநூறு ரூபாய்தான் செலவு. பாக்கெட்டில் ஸ்மார்ட் கார்ட்மட்டும் இருந்தால் போதும். பஸ்ஸுக்குக் காத்திருக்கவேண்டாம், ஆட்டோவுக்குச் செலவழிக்க வேண்டாம், கார் அல்லது பைக்கை நிறுத்துவதற்கு இடம் தேடிச் சுற்றிச் சுற்றி வரவேண்டாம், பெட்ரோல், டீசல் செலவு குறையும், போக்குவரத்து நெரிசல் குறையும், காற்று மாசுபடுவது குறையும், எல்லாவற்றையும்விட முக்கியமாக, இது நமக்கு ஒரு நல்ல உடற்பயிற்சியும்கூட!

ஏற்கெனவே பெங்களூருவிலும் மற்ற பல இந்திய நகரங்களிலும் சைக்கிள்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. பலர் அலுவலகத்துக்குத் தினமும் சைக்கிளில் சென்றுவரத் தொடங்கியிருக்கிறார்கள். அதை ஓர் அவமானமாக நினைக்காமல், பெருமையாக எண்ணுகிற சூழலும் ஏற்பட்டிருக்கிறது. பல அலுவலகங்கள் சைக்கிளில் வரும் ஊழியர்களுக்கு ஊக்கப் பரிசுகள்கூடத் தருகின்றன!

ATCAGபோன்ற ’மாடர்ன் வாடகை சைக்கிள் நிலைய’ங்கள் இதனை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லும். எங்கு வேண்டுமானாலும் சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் திருப்பித் தரலாம் என்கிற சவுகர்யத்தால் பலரும் புதிதாகச் சைக்கிள் ஓட்டத் தொடங்குவார்கள் என்று பெங்களூரு மாநகராட்சி எதிர்பார்க்கிறது. அதன்மூலம் பெட்ரோல், டீசல் போன்ற மாசு ஏற்படுத்துகிற, அளவில் குறைந்துவருகிற எரிபொருள்களுக்கு ஒரு நல்ல மாற்றும் கிடைக்கும்.

03

காலத்தின் வேக ஓட்டத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும் என்று பலரும் நினைத்த சைக்கிள்கள், இப்போது இன்னொரு ரவுண்ட் வரும்போல!

***

என். சொக்கன் …

31 10 2011

(பின்குறிப்பு : இந்த வாரப் ‘புதிய தலைமுறை’ இதழில் வெளியான என்னுடைய கட்டுரை இது. பதிவுக்காகச் சற்றே மாற்றியுள்ளேன்.)

18 Responses to "வாடகை சைக்கிள்கள்"

நல்ல திட்டம்!
லண்டன் மாநகரில் பார்த்து நம்ம ஊரூக்கு இது எப்போ வரும்ன்னு வியந்தேன்
http://www.tfl.gov.uk/roadusers/cycling/14808.aspx

வாவ் அப்டியே 1986-1988 க்கு ஒரு ரவுண்ட் போய்ட்டு வந்தாச்சு !

வாடகைக்கு சைக்கிள் கொடுக்கிற கடைகள் தரங்கை சாலையில் ரெண்டு மூணு இருந்தாலும் குட்டி சைக்கிள் ரெண்டரை அடி உயரத்திற்கு ஒரு மளிகை கடையில் மட்டுமே உண்டு அதை சனி ஞாயிறுகளில் போய் ஒரு மணி நேரம் வாடகைக்கு எடுக்க காலை 6 மணிக்கே போய் தவம் கிடப்போம் கடை 7 மணிக்கு திறக்கப்பட்டு பிறகுதான் கிடைக்கும் அதை தள்ளிக்கொண்டே [ஓட்ட தெரியாது] டிரெயினிங் ஏரியாவுக்கு வந்து டிரெயினரை வைச்சுக்கிட்டு ஓட்டணும்! பிறகு கொஞ்சம் தைரியம் பெற்று பெரிய சைக்கிள் வாடகைக்கு எடுத்து குரங்கு பெடல் . இவையனைத்தையும் விட வாடகைக்கு சைக்கிள் எடுக்கப்போகையில் அங்கு சைக்கிள் இருக்குமா இருக்காதா என்ற மனப்போராட்டத்தினை கண்டிப்பா அனுபவிச்சு பாக்கணும் பாஸ் 🙂

ரொம்ப சந்தோஷமான செய்தி. நான் இன்னமும் சைக்கிளை பிரியமுடன் ஓட்டுகிறேன். இத்திட்டம் வெற்றியடைய என்னாலான பிரார்த்தனைகள்.

நான் சைக்கிள் ஓட்டிய கதை, பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/3.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

hope you have read about it
http://en.wikipedia.org/wiki/V%C3%A9lib

//போன தலைமுறையில் நடுத்தரக் குடும்பங்களுடைய போக்குவரத்து சாதனமாக இருந்த சைக்கிள், இப்போது பெருநகரங்களில் உடல் ஆரோக்கியம் மற்றும் மாசுக் கட்டுப்பாடு ஆகியவற்றின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது.//

உண்மைதான். நல்ல திட்டங்கள் பெரிய நகரங்கள் அனைத்திலும் வரவேண்டும்.

பழைய நாட்களைக் கொண்டுவந்து நிறுத்தியதற்கு மிகவும் நன்றி.
மற்றவாகனங்களைவிட சைக்கிள்களால் விபத்து குறைவுதான். பங்களூரைப் பற்றி அறிய ஆச்சரியமாக இருக்கிறது.
முக்கியமாக மனதுக்குப் பிடித்தவர்களைப் பார்க்கச் சுற்றும் வாகனமாகச் சைக்கிள் செயல் பட்டதை விட்டுவிட்டீர்களே:)

என்னோட சின்ன வயசு சைக்கிள் அனுபவங்கள் ப்ளாஷ்பேக்காக மனதில் வந்துபோனது. இந்தத் திட்டம் ரொம்பவே நல்லா இருக்கு. நீயா நானான்னு அடிச்சுக்கற இந்நாள், முன்னாள் முதல்வர்கள் சென்னையிலயும் இ‌ந்தத் திட்டத்தைக் கொண்டு வரணும்னு பிரார்த்திப்போம். வேறென்ன செய்ய…?

தூது தொடரின் 2வது அத்யயம் என்ன சார் ஆச்சு?
உங்கள் ஊரில் சைக்கிளின் புதிய அவதாரம் நல்லாவே
இருக்கு.

சுவையான கட்டுரை…என்னை முப்பது வருடம் முன்பு நிகழ்ந்த ஒரு சம்பவத்தை அசை போட வைத்தது. என் சிநேகிதன் ஒருவன் என் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த சைக்கிள் வாடகைக்கடையிலிருந்து வாங்கிப்போன சைக்கிள்-ஐ பழுது செய்து திருப்பிக்கொடுத்தான்.
அதனால், அந்த கடைக்காரர், என் சிநேகிதனுக்கு சைக்கிள் வாடகைக்கு தருவதேயில்லை. அவர் எங்கள் குடும்ப நண்பர் என்பதனால், என் நண்பன் என் பெயர் சொல்லி நான் எடுத்துக்கொள்வதாக ஒரு சைக்கிள்-ஐ வாடகைக்கு எடுக்கசொன்னான். பின்னர் அதனை தெருமுக்கிலிருந்து அவனே ஒட்டிக்கொண்டு போனான் (கமல்ஹாசன் நடித்து வெளிவந்த “சங்கர்லால்” என்ற படத்தின் காலைக்காட்சி காண !). இந்த முறையும் கவனமில்லாமல் ஒட்டி சைக்கிள் பழுது படுத்தி என்னிடம் கொடுத்தான். சைக்கிள்-ஐ திருப்பிக்கொடுக்கும்போது “இரு உன் அப்பாவிடம் பேசுகிறேன்” என்றார். எனக்கு செம பயம். அப்பா ரொம்ப கண்டிப்பு. சைக்கிள் கடை காரருக்கு எப்படியோ தெரிந்துவிட்டது, அன்றைய தினம் சைக்கிள்-ஐ ஒட்டிப்போனது என் சிநேகிதன் தானென்று. “அவனுடன் சேர்ந்து கூட்டு களவாணியா?..இரு உன் அப்பாவிடம் சொல்லுகிறேன்” என்று ஓரிரு முறை மிரட்டியதோது சரி…அப்பாவிடம் அவர் முறையிடவில்லை.

நல்ல பதிவு.

வாடகைச் சைக்கிள் கடைகளில் முக்கியாமாக ஒரு விஷயத்தைப் பார்ப்பார்கள், அது வண்டியை திரும்ப விடும்போது நல்ல நிலையில் விடுகிறார்களா, இல்லை டேமேஜ் ஏதேனும் ஆகியுல்லாதா என்பது. இந்த தானியங்கி சைக்கிள் கடையில் அதை எப்படிப் பார்ப்பார்கள்? எப்படியோ, இந்து நல்ல முன்னேற்றம்.

இப்போதுதான் மக்கள் உணர ஆரம்பித்து உள்ளனர் இந்த நன்மையை. இந்த ஐடியா நல்லா இருக்கு. ஆனால் கிராமங்களில்,சிறு நகரங்களில் இது உதவாது.

என் அப்பா ஒரு முன்னாள் சைக்கிள் கடைக்காரர். கிட்ட தட்ட இருபது வருடங்கள் வைத்து இருந்தார் எங்கள் கிரமாத்தில். தொண்ணூறுகளில் நல்ல நிலைதான். ஆனால் இப்போது அப்படி இல்லை குறைந்த பட்சம் வீட்டில் டிவிஎஸ் எக்ஸ்.எல் உள்ளது. எனவே 2009 இல எடுத்து விட்டு இப்போது தனியார் நிறுவனம் ஒன்றில் இருக்கிறார்.

200 ரூபாய் கார்டு வாங்கிவிட்டு சைக்கிளை அப்படியே தள்ளிக்கொண்டு போய்விடமாட்டார்களா?

.Hello Chokan sir,

I have seen these system in London and nice to see same in bangalore too.I think prices price rises ,ore fastly then gold and other prices. This system ill become fanyc and this ill be trendy

ஹையர் சைகிள் மருவி ஹவர் சைகிள் என்று அந்த நாளில் நாங்கள் சொல்லுவோம் 🙂 ( ஒரு மணி நேர வாடகை என்பதால்). வயதான பிறகு தான் தவறு தெரிந்தது!
amas32

நல்லதோர் யோசனை. போக்குவரத்து பெருகிவரும் இந்நாளில்,காற்று மாசுபடுவதை தடுக்கவும் இத்திட்டத்தை எல்லா மாநில அரசும் ஊக்குவிக்க வேண்டும்.நாமும் ஈகோ இல்லாமல் நம் ஆரோக்கியம் கருதியாவது முனையவேண்டும்.நன்றி.

Nice article. Reminded of what writer Sujatha once wrote. He said that old things (technology) never dies. Instead they come back in a new avatar. He wrote this in the context of typing in Tamil. How he first wrote by hand, then used a typewriter and then moved on to a computer and finally he was able to create a new font from his handwritten text. And that applies to everything now :-)..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,070 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

November 2011
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
%d bloggers like this: