மனம் போன போக்கில்

மன்மதச் சிலை

Posted on: November 22, 2011

’சிறைச்சாலை’ படத்தில் வருகிற ‘செம்பூவே பூவே’ பாட்டைக் கேட்டிருப்பீர்கள். அதில் அறிவுமதி எழுதிய ஒரு வரி:

படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ

இந்த வரிக்கு நேரடி அர்த்தம் எல்லோருக்கும் தெரியும். மன்மதன் வடித்த சிலை இந்தப் பெண், அவளது உடலையே படையாகக் கொண்டு நடக்கிறாள், ஒவ்வோர் அசைவாலும் தன் காதலனைத் ’தாக்கு’கிறாள்.

ஆனால், இந்த வரிகளுக்கு வேறோர் அர்த்தமும் இருக்கக்கூடுமோ என்று இன்றைய #365paa பதிவு எழுதும்போது தோன்றியது.

தமிழில் ’சிலை’ என்ற சொல்லுக்கு ‘வில்’ என்ற பொருளும் உள்ளது. மன்மதன் சிலை என்றால், மன்மதன் கையில் உள்ள கரும்பு வில்.

மன்மதனும் அவனுடைய கரும்பு வில்லும் தமிழ்த் திரையுலகில் ரொம்பப் பிரபலம். ஹீரோவும் ஹீரோயினும் சந்திக்கிறபோது மன்மதன் தன்னுடைய கரும்பு வில்லில் மலர் அம்புகளை (’மலர்க் கணைகளை’ என்று சொன்னால் இலக்கியத்துவம் :>) வீசுவான். அவர்களும் காதல் வயப்பட்டு, தயாரிப்பாளரின் பட்ஜெட்டுக்கு ஏற்ப உள்ளூரிலோ வெளியூரிலோ வெளிநாட்டில் டூயட் பாடச் செல்வார்கள்.

’சிலை’க்கு வில் என்கிற அர்த்தத்தை இங்கே பொருத்தி யோசித்தால், இந்த வரி இன்னும் அழகாகிவிடுகிறது: மன்மதனின் ஆயுதமாக அவன் கையில் உள்ள வில், இந்தப் பெண்ணாக உருவம் எடுத்து நடக்கிறது!

இந்தச் சுவாரஸ்யமான கோணம் தோன்றியபின், ‘மன்மதச் சிலை’ என்ற வார்த்தையை இதற்குமுன் வேறு யாரேனும் பயன்படுத்தியிருக்கிறார்களா என்று இணையத்தில் தேடினேன். கச்சிதமாக இதே அர்த்தத்தில் திருப்புகழ் பாட்டு ஒன்று கிடைத்தது:

மன்மத சிலை அதுவென, மகபதி தனுவென மதி திலதமும் வதி நுதன் மேலும்…

முழுப்பாடல் இங்கே : http://www.kaumaram.com/thiru_uni/tpun0526.html

ஆக, அருணகிரிநாதரின் ‘மன்மத சிலை’ வில்லைதான் குறிக்கிறது என்று புரிகிறது. அறிவுமதி எழுதியது எந்த அர்த்தத்தில்? அவருக்கு அணுக்கமானவர்கள் யாராவது இங்கே இருந்தால் கொஞ்சம் விசாரித்துச் சொல்லுங்கள் 🙂

அப்புறம், இன்னொரு விஷயம். அருணகிரிநாதர் ‘மன்மத சிலை’ என்று எழுதுகிறார், அறிவுமதி ‘மன்மதச் சிலை’ என்கிறார். புணர்ச்சி விதிப்படி இவற்றில் எது சரி?

யோசித்தபோது ‘மன்மதச் சிலை’தான் சரியாக இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. மன்மதன் விஷயத்தில் ‘இச்’ இல்லாவிட்டால் எப்படி? 😉

***

என். சொக்கன் …

22 11 2011

9 Responses to "மன்மதச் சிலை"

அறிவுமதி அவர்கள் என்ன பொருளில் எழுதியிருந்தாலும் சரி… நீங்கள் சொல்லியிருக்கும் மன்மதன் வில் என்ற விஷயம் மிக ரசனைக்குரியதாக இருக்கிறது. இதையே கொள்வோம். நன்று.

அழகான இலக்கிய வரிகளூம் இசைஞானியின் ரிங்காரமிடும் இசையும் இந்த பாடலை அலங்கரித்திருந்தது.. இன்று உங்க சிலையின் விளக்கம் இன்னும் மெருகூட்டியிருக்கிறது

சுவாரசியமான பதிவு. நீங்கள் ரசித்ததை நாங்கள் ரசிக்கும் படியாக அழகாக பதிந்திருக்கிறீர்கள்.

சுமார் ஒன்றரை ஆண்டுகளாக திருப்புகழுக்கு பொருள் சொல்வாரை தேடிக் கொண்டிருந்தேன். நானறிந்த எந்த தமிழாசிரியரும் அதற்கு முன்வரவில்லை. இன்று உங்கள் மூலமாக எனது கவலை இன்று தீர்ந்தது. உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.

சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர்
ஏந்து தடந்தோள், இழிகுருதி – பாய்ந்து
திசைஅனைத்தும், வீரச் சிலைபொழிந்த அம்பும்,
மிசைஅனைத்தும் புள்குலமும் வீழ்ந்து

எடுக்கும் சிலைநின்று எதிர்ந்தவரும், கேளும்,
வடுக்கொண்டு உரம் துணிய, வாளி – தொடுக்கும்
கொடையும், திருவருளும், கோடாத செங்கோல்
நடையும் பெரும்புலவர் நா

புலவர் சொக்கரே, நீங்க எப்பவும் யோசித்துக் கொண்டே இருபீங்களோ? பாராட்டுகள்!
amas32

அ.ச.ஞானசம்மந்தன், புலவர் கீரன், நடிகர் சிவகுமார் வரிசையில் உமது பழந்தமிழ் இலக்கியத் தொண்டு சிறக்க வாழ்த்துக்க்க்கள்.

நீங்க சொன்ன அர்த்தம்தான்னு நினைக்கிறேன். படைங்கற சொல் தேர்வும் நல்லா சேர்ந்து வருது.

nice to hear and read.. thanks to share… please read my tamil kavithaigal in http://www.rishvan.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 621,011 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

November 2011
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
%d bloggers like this: