மனம் போன போக்கில்

பொம்மை

Posted on: February 2, 2012

‘ஆனந்த விகடன்’ சென்ற வார இதழில் வெளியான என்னுடைய சிறுகதையின் எடிட் செய்யப்படாத வடிவம் இங்கே. இந்தக் கதை / சம்பவத்தைப் பற்றி ஒரு முழுப் பதிவு எழுதும் அளவுக்குக் கூடுதல் விஷயங்கள் இருக்கின்றன, ஏற்கெனவே கதை நீளமாகிவிட்டதால் அவையெல்லாம் பிறிதொரு நாள் சொல்கிறேன். இப்போதைக்கு ஒரு விஷயம், கதையில் திருப்பி அனுப்பப்படுகிற அந்தப் பொம்மை நிஜத்தில் சரியாகிவிட்டது, அந்தச் சோம்பேறிக் கணவனால் அல்ல, விடாப்பிடி மனைவியால் :))

மதிப்பிற்குரிய ‘பவார் அண்ட் கோ’ நிறுவனத்தாருக்கு,

வணக்கம். நலம். நலமறிய ஆவல்.

என் பெயர் விமலா. கோயம்பத்தூரில் வசிக்கிறேன். சில தினங்களுக்குமுன் உங்களுடைய வெப் சைட்வழியாக ஒரு பொம்மை வாங்கியிருக்கிறேன். இதற்குமேல் என்னை எப்படி உங்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று சரியாகத் தெரியவில்லை.

உண்மையில், வெப் சைட் என்று அட்சர சுத்தமாக எழுதிவிட்டேனேதவிர, அப்படியென்றால் என்ன அர்த்தம் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியாது. டபிள்யூ டபிள்யூ டபிள்யூ பவார் டாய்ஸ் டாட் காம் என்று நீங்கள் தொலைக்காட்சியில் அடிக்கடி விளம்பரம் செய்வதைப் பார்த்துவிட்டு, ‘இது என்ன புதுசா இருக்கு?’ என்று என் கணவரிடம் விசாரித்தேன்.

அப்போது அவர் உங்களுடைய வெப் சைட்பற்றி நீளமாக ஏதோ சொன்னார். அதன்பிறகும் அவர் சொல்லவருகிற அடிப்படை விஷயம் என்னவென்று எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை. இன்டர்நெட் என்கிற தொழில்நுட்பச் சிக்கலான இடத்தில் உட்கார்ந்துகொண்டு நீங்கள் பொம்மை விற்கிறீர்கள் என்பதுமட்டும் ஓரளவு விளங்கியது. இதற்குமேல் விளக்கம் கேட்டால், திட்டு விழுமோ என்று பயந்துகொண்டு, ‘அந்தக் கடையில நம்ம ப்ரியாவுக்கு ஒரு பொம்மை வாங்கிக் கொடுங்களேன்’, என்றுமட்டும் சொன்னேன்.

‘ஓ’, என்று பெரிதாகத் தலையாட்டியவர், மறுநாள் நீளமாக அச்சிட்ட ஒரு வால் கொண்டுவந்தார். அதில் நீங்கள் விற்கிற பொம்மைகளின் பட்டியலும், சிற்சில விளக்கக் குறிப்புகளும் இருந்தன. அதைக் காண்பித்து, ‘உனக்கு என்ன பொம்மை வேணும் ப்ரியா?’, என்று எங்கள் மகளிடம் விசாரித்தபோது, ‘வவ்வா’ என்று சொல்லிக்கொண்டு, பக்கத்து வீட்டு நாயைக் கொஞ்சப் போய்விட்டாள்.

ஆகவே, வழக்கம்போல அவளுக்காக பொம்மை தேர்ந்தெடுக்கவேண்டியது என்னுடைய பொறுப்பாயிற்று. நெடுநேரம் பொடி எழுத்து ஆங்கிலத்தைச் சிரமப்பட்டு எழுத்துக் கூட்டிப் படித்து, ஒவ்வொன்றாக நிராகரித்து, கடைசியில் ஒரு பொம்மையைத் தேர்ந்தெடுத்தேன்.

அதை பொம்மை என்று சொல்வதுகூட தவறுதான், அறிவுப்பூர்வமான விளையாட்டு சாதனம் என்று வேண்டுமானால் சொல்லலாம். அந்த அளவுக்கு உங்களுக்குத் தமிழ் புரியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. ஆகவே, நம் இருவரின் வசதிக்காக, அதை பொம்மை என்றே சொல்கிறேன்.

அந்த பொம்மையின் திரையில், ஏ, பி, சி, டி முதலான ஆங்கில எழுத்துகள் வரிசையாகத் தோன்றும். பின்னர், அதுவே ஒவ்வொரு எழுத்தாக இசையோடு வாசித்துக்காட்டும். சில சமயங்களில் வரிசை ஒழுங்கில்லாமலும் எழுத்துகள் காண்பிக்கப்படலாம். அப்போது திரையில் தோன்றும் எழுத்துக்கேற்ற பொத்தானைக் குழந்தை அழுத்தவேண்டும். சரியாக அழுத்தினால், பொம்மை அதனைக் கை தட்டிப் பாராட்டும். தவறாக அழுத்தினால், ‘அச்சச்சோ’ என்று பரிதாபம் காண்பிக்கும்.

இதெல்லாம் நான் உங்களுடைய விளக்கக் குறிப்பேட்டில் படித்துத் தெரிந்துகொண்டதுதான். அந்தக் குறிப்புகளைப் படிக்கும்போது என்னுடைய ஆரம்பப் பள்ளிக் காலம்தான் நினைவுக்கு வந்தது.

எங்களுக்கு ஆங்கிலம் சொல்லித்தந்த சரஸ்வதி டீச்சருக்கு, பிள்ளைகள் என்றால் ரொம்பப் பிரியம். ஆனால், அவர்கள் பிடிவாதமாக ஆங்கிலம் கற்க மறுக்கிறார்கள் என்று அடிக்கடி சொல்வார் அவர்.

இப்போது யோசிக்கையில் சிரிப்புதான் வருகிறது. பச்சைப் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் தெரியுமா, தமிழ்தான் தெரியுமா? முனைப்போடு கற்றுத்தராமல், அதுபற்றிய ஒரு பயத்தைப் பிள்ளைகள் மனதில் உருவாக்கியது யாருடைய தவறு?

இதற்குமேல் சரஸ்வதி டீச்சரை விமர்சிப்பது சரியில்லை, தேவையும் இல்லை. குருவைப்பற்றித் தவறாகப் பேசுகிறவர்களுக்கு ஏதோ ஒரு பிறவியில் நரகம்தான் சம்பவிக்கும் என்று இலக்கியங்களிலோ, புராணங்களிலோ சொல்லப்பட்டிருக்கலாம். எதற்கு வம்பு?

நான் சொல்லவந்தது, உங்களுடைய பொம்மைபற்றி. சரஸ்வதி டீச்சர்போல் சலிப்படையாமல், ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லித்தருவதற்குத் தயாராக இருக்கும் இந்த பொம்மை டீச்சர், இப்போதுதான் ‘ஏபிசிடி’ என்று ஏதோ மழலையில் உளறிப் பழகிக்கொண்டிருக்கிற எங்கள் மகளுக்கு ரொம்ப உபயோகமாக இருக்கும் என்று தோன்றியது. அதனால்தான், கிட்டத்தட்ட நானூறு ரூபாய் விலை குறிப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை என்று, அதனை வாங்கித் தரும்படி என் கணவரிடம் சொன்னேன்.

அவருக்கு இதுபோன்ற விஷயங்களில் ஆர்வம் போதாது, ஞானமும் போதாது. குழந்தைக்காகவோ, எனக்காகவோ, வீட்டுக்காகவோ எதைக் கேட்டாலும் மறுபேச்சில்லாமல் வாங்கிக் கொண்டுவந்து தந்துவிடுவார். இதற்காக சந்தோஷப்படுவதா, அல்லது ‘என்ன அலட்சியம்!’ என்று கோபம் கொள்வதா என்று இன்றுவரை எனக்குப் புரிந்ததில்லை.

இந்த பொம்மை விஷயத்திலும் அதுவேதான் நடந்தது. நான் பொம்மையைத் தேர்ந்தெடுத்த தினத்தன்று மாலையே, ‘ஆர்டர் பண்ணிட்டேன் விமலா’, என்றார் பேச்சுவாக்கில்.

‘எப்போ வரும்?’, என்று ஆர்வத்துடன் கேட்டேன் நான்.

‘சரியாத் தெரியலை’, என்றார் அவர், ‘இதெல்லாம் கொஞ்சம் லேட் ஆவும். அநேகமா பதினஞ்சு நாள்ல வந்துடும்-ன்னு நினைக்கறேன்’

எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான். பொம்மையைத் தேர்ந்தெடுத்து, அதற்குண்டான காசையும் கடன் அட்டை வழியே நயா பைசா மிச்சமில்லாமல் எண்ணிக் கொடுத்துவிட்டபிறகு, என்னத்துக்குப் பதினைந்து நாள் காத்திருக்கவேண்டும்?

இப்படிக் கோபப்பட்டாலும், நான் தேர்ந்தெடுத்திருந்த பொம்மையின் கவர்ச்சி என்னைக் கொஞ்சம் சமாதானப்படுத்திவிட்டது. எங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு ‘ஹைடெக்’ பொம்மையை, அதுவும் இன்டர்நெட்மூலம் வாங்கித்தந்து ஏ பி சி டி கற்பிப்பதன்மூலம், மற்ற பெற்றோரைவிட நாங்கள் ஒரு படி மேலே உயர்ந்துவிட்டதுபோல் பெருமிதமாகக்கூட உணர்ந்தேன்.

கேட்டால் சிரிப்பீர்கள். தபால் அல்லது கொரியரில் மேற்சொன்ன பொம்மை வரும்வரை, அதுபற்றிய குறிப்புகளைத் திரும்பத் திரும்பப் பலமுறை படித்துக்கொண்டிருந்தேன். அந்தப் பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்த புகைப்படத்தைப்போலின்றி, வேறு வண்ணத்தில், வேறு வடிவத்தில் பொம்மை இருக்கக்கூடும் என்று நீங்கள் எழுதியிருந்தது என் ஆவலையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

எங்கள் மகளுக்கு இதைப்பற்றியெல்லாம் எதுவும் தெரியாததால், அவள்பாட்டுக்கு வழக்கம்போல் விளையாடிக்கொண்டிருந்தாள். வருகிற பொம்மை உருப்படியாகவும், அவளுக்குப் பயன்படும்விதமாகவும் இருக்கவேண்டுமே என்கிற கவலையெல்லாம் எனக்குதான். அந்தத் தவிப்பைத் தீர்ப்பதற்காகவேனும் உங்கள் பொம்மை சீக்கிரத்தில் வந்து தொலைந்துவிட்டால் நல்லது என்று தோன்றியது.

இன்டர்நெட்டில் ஆர்டர் செய்து ஒன்பது தினங்களுக்குப்பிறகு, டொப் டொப் என்று வெடித்து விளையாட ஏற்ற சிறு பிளாஸ்டிக் குமிழ்கள் நிரம்பிய காகிதத்தால் பத்திரமாகச் சுற்றப்பட்டுக் கிடைத்தது உங்கள் பொம்மை. நீல நிறத்தில், அழகான கைப்பிடியுடன் பார்க்க ஜோராக இருந்தது.

ஆனால், அதைத் திறந்து, பிரதானமான சிவப்புப் பொத்தானை அமுக்கியபோது, திரையில் எதுவும் காணோம். திகைத்துப்போய் பொம்மையைத் தலைகீழாகத் திருப்பிப் பார்த்தால், அதன் பொக்கை வாய்த் திறப்பில் மூன்று பாட்டரிகள் பொருத்தவேண்டும் என்று தெரிந்தது.

கடந்த சில நிமிடங்களில் எனக்குள் பொங்கியிருந்த உற்சாகமெல்லாம், சடாரென்று சரிந்துவிட்டது. பொம்மை விற்ற மகராசன் கூடவே அதற்கான பாட்டரியும் தரமாட்டானோ என்று ஆதங்கமாக இருந்தது.

இதே பொம்மையை எங்கள் தெருமுனைக் கடையில் வாங்கியிருந்தால், பாட்டரிகளும் இலவசமாகத் தந்தால்தான் ஆச்சு என்று சண்டை போட்டு பேரம் பேசியிருப்பேன். இன்டர்நெட்டில் அதெல்லாம் முடியாதோ என்னவோ.

அப்படியே முடிந்தாலும், பேரம் பேசச் செலவழிக்கும் நேரத்தில் மூன்று பாட்டரிகள் காசு போட்டு வாங்கிவிடலாம் என்று வாதிடுவார் என் கணவர். அவருக்குப் பணத்தைவிட, நேரத்தை வீணடிக்காமல் இருப்பதும் சுயகௌரவமும்தான் முக்கியம் என்று ஒரு வேஷம், அதன் பின்னணியில் இருப்பதெல்லாம் சுத்தமான சோம்பேறித்தனம் ஒன்றுதான்.

ஆக, தேவையான பாட்டரிகளைத் தராமல் பொம்மையை உயிரின்றி அனுப்பிவைத்ததற்காக உங்கள்மேல் எழுந்த கோபம், அவர்மீது திரும்பி, கடைசியில் அம்பு முறிந்து விழுந்தது. உடனடியாக, வீட்டிலிருக்கிற சிறு கடிகாரங்களையெல்லாம் நோண்டி, எப்படியோ மூன்று பாட்டரிகளைத் தேற்றிவிட்டேன்.

ஆனால், அவற்றில் ஒரு பாட்டரி மிக மிகச் சிறியதாக, ஒன்றரை வயது ப்ரியாவின் சுண்டு விரல் தடிமன்தான் இருந்தது. ஆகவே, உங்கள் பொம்மை அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன்பிறகுதான், அஞ்சறைப் பெட்டியில் சில்லறை தேடி எடுத்துக்கொண்டு, குழந்தையையும் தூக்கிக்கொண்டு பாட்டரி வாங்கக் கிளம்பினேன்.

அடுத்த கால் மணி நேரத்துக்குள், புத்தம்புதுசாக மூன்று பாட்டரிகள் வாங்கி வந்து, உங்கள் பொம்மைக்குத் தின்னக் கொடுத்தேன். ஆனால், அதன்பிறகும் சிவப்புப் பொத்தான் மௌனம் சாதித்தது. அதன் பக்கத்திலிருக்கிற சிறு விளக்கும் எரிகிற வழியைக் காணோம்.

பொம்மையில் ஏதோ பிரச்னை என்று முதன்முறையாகத் தோன்றியது அப்போதுதான். அட்டைப்பெட்டியை வழிகாட்டியாக வைத்துக்கொண்டு, பாட்டரிகள் சரியான திசையில்தான் பொருத்தப்பட்டிருக்கிறதா என்று சோதித்தேன், கைப்பிடியை இறுகப் பிடித்துக்கொண்டு, அதை ஒருமுறை உலுக்கிப்பார்த்தேன். ம்ஹும், பயனில்லை.

ஐயோ, நானூற்றுச் சொச்ச ரூபாய் போச்சே என்று பதைபதைப்பாகிவிட்டது. அவருக்கு ஃபோன் செய்து விஷயத்தைச் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால், கண்டிப்பாகத் திட்டுதான் விழும், ‘எப்பப்பார் நான் முக்கியமான மீட்டிங்ல இருக்கும்போதுதான் ஃபோன் பண்றே நீ. அறிவில்லை?’

இவர் எப்போது மீட்டிங்கில் இருப்பார், எப்போது வெட்டியாக உட்கார்ந்து பல் குத்திக்கொண்டிருப்பார் என்று எனக்கென்ன ஜோசியமா தெரியும்? இப்போது இந்த பொம்மையை என்ன செய்வது?

வேறுவழியில்லாமல், மாலைவரை காத்திருந்தேன். புத்தக அலமாரிமேல் உபயோகமின்றிக் கிடந்த அந்த பொம்மையைப் பார்க்கும்போதெல்லாம் மனதில் என்னென்னவோ யோசனைகள், நானூறு ரூபாய் வீணாகிவிட்டது என்பதை ஏற்பதற்குமுடியாமல் தவித்தேன். கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணம், காரணமில்லாமல் அப்படிப் போய்விடாது என்று ஒரு நம்பிக்கை இருந்தது.

ஆகவே, இந்த பொம்மைக்கு உயிரூட்டுவதில் எனக்குத் தெரியாத ஏதோ ஒரு சூட்சுமம் இருக்கிறது என்று நிச்சயமாக எண்ணினேன் நான். அவர் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்ததும், என்னால் கண்டறியமுடியாத அந்த ரகசியத்தைக் கண்டுகொள்வார், பொம்மை இயங்கத்தொடங்கியதும், என்னைப் பார்த்து ‘மக்கு, மக்கு’ என்று கேலியாகச் சிரிப்பார். நானூறு ரூபாய் வீணாவதைவிட, அந்தக் கிண்டல் பேச்சைத் தாங்கிக்கொள்வது உத்தமம் என்று தோன்றியது.

என் வேண்டுதல் பலிக்கவில்லை. அவராலும் உங்கள் பொம்மையை இயக்கமுடியவில்லை. என்னைக் காட்டிலும் சற்று அதிக நேரம் அந்த பொம்மையை மேலும் கீழுமாகப் புரட்டிச் சோதித்தவர், தன்னுடைய எஞ்சினியர்ப் பட்டத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, ஸ்க்ரூ டிரைவர் கொண்டு சில திருகாணிகளைக் கழற்றிப் பிரித்துக்கூட பார்த்தார். ஆனால், அவருக்கு ஒன்றும் பிடிபடவில்லை.

‘ம்ஹும்’, என்று பெரிதாக உதட்டைப் பிதுக்கியவர், ‘வேற வாங்கிக்கலாம் விடு’, என்றார் சாதாரணமாக.

எனக்கு தூக்கிவாரிப்போட்டது. நானூறு ரூபாய் சமாசாரத்தை இப்படியா விட்டேத்தியாகத் தூக்கி எறிவார்கள் என்று பதட்டத்துடன் கேட்டேன்.

‘அதுக்கு என்னப்பா செய்யமுடியும்?’, என்று அலுத்துக்கொண்டவர், ‘இன்டர்நெட்ல வாங்கினா இப்படிதான்’, என்றார்.

‘இதை நீங்க முன்னாடி சொல்லலையே’, என்று நான் கோபமாகக் கேட்டதற்கு அவரிடமிருந்து பதில் வரவில்லை, ‘வேற நல்ல பொம்மையாப் பார்த்து கொழந்தைக்கு வாங்கிக்கலாம், டோன்ட் வொர்ரி’, என்றுமட்டும் சொல்லிவிட்டு, டிவியைப் பார்க்கத் திரும்பிக்கொண்டார்.

அவர் பிரித்துப் போட்டிருந்த பொம்மையைப் பல நிமிடங்களுக்கு வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன் நான். கண்முன்னே எங்களுடைய காசுக்கு இப்படி ஓர் அநியாயம் நடந்திருப்பதைப் பார்க்க மனதாகவில்லை. அதை இவர் கண்டுகொள்ளாமல் பொழுதுபோக்கிக்கொண்டிருப்பது இன்னும் ஆத்திரமாக இருந்தது.

அன்று இரவு தொடங்கி, அடுத்த மூன்று நாள்கள் எங்களிடையே தொடர் சண்டை. எப்படியாவது இதைச் சரி செய்தால்தான் ஆச்சு என்கிற என்னுடைய பிடிவாதமும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்குகிற அவருடைய சோம்பேறித்தனமும் கடுமையாக முட்டி மோதிக்கொண்டன.

‘உனக்கு ஒண்ணுமே புரியலை’, என்று என்னைத் தாழ்வு மனப்பான்மையில் தள்ள முயன்றார் அவர், ‘இந்தமாதிரி இன்டர்நெட்ல வாங்கற பொருளுக்கெல்லாம் எந்த கேரண்டியும் கிடையாது. இந்தக் கையில வாங்கி, அந்தக் கையில நமக்குக் கொடுக்கறதுக்காக அவனுக்குக் காசு. அவ்ளோதான், மத்தபடி இது பொம்மையா, பொட்டலம் கட்டின களிமண்ணான்னுகூட அவனுக்குத் தெரியாது’

‘அதை நீங்களா ஏன் முடிவு பண்றீங்க?’, என்று ஆவேசமாகத் திருப்பி வாதிட்டேன் நான், ‘இந்தமாதிரி ஒரு பொருள் டேமேஜ் ஆயிடுச்சு-ன்னு நீங்க இன்டர்நெட்ல சொன்னா, அவன் பதில் சொல்லமாட்டானா?’

‘மாட்டான்’, முடிவாகச் சொன்னார் அவர், ‘நீ நினைக்கிறமாதிரி இன்டர்நெட்ங்கறது உங்க ஊர்க் கடைத்தெரு இல்லை. அங்கே போய் அநாவசியமாக் கத்திகிட்டிருக்கிறது வேஸ்ட். நான் என்னோட நேரத்தை அப்படி வீணடிக்கத் தயாரில்லை’

அவ்வளவுதான். அதன்பிறகு பல மணி நேரங்களுக்கு நான் அவரைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை. அதெப்படி ஒரு மனிதருக்கு இப்படி நானூறு ரூபாயை வீணடிக்க மனசு வருகிறது? இதுபோல் அநியாயமாக ஒருவன் காசைப் பிடுங்கிக்கொண்டு ஓட்டைப் பொருளை விற்கும்போது, யாரும் எதிர்த்துக் கேள்வி கேட்கமுடியாது என்றால், அதென்ன மண்ணாங்கட்டி இன்டர்நெட்டு?

நினைக்க நினைக்க எனக்குத் தாங்கவில்லை. இந்தப் பிரச்னையைச் சுமுகமாகத் தீர்க்க ஏதோ ஒரு வழி நிச்சயமாக இருக்கவேண்டும், அதை ஒழுங்காக விசாரித்துக் கண்டுபிடிக்கத் துப்பில்லாமல்தான் இவர் இப்படி வெட்டி நியாயம் பேசிக்கொண்டிருக்கிறார் என்று உறுதியாகத் தோன்றியது.

மறுநாள் காலை, ‘நான் இந்த பொம்மையை அதே அட்ரஸுக்குத் திருப்பி அனுப்பப்போறேன்’, என்றேன் அவரிடம்.

‘வேஸ்ட்’, என்றார் அவர் ஒரே வார்த்தையில், ‘நான் வேணும்ன்னா காசு தர்றேன். பத்து கடை ஏறி, இறங்கி, இதேமாதிரி நல்ல பொம்மையைத் தேடி வாங்கிக்கோ. மத்தபடி இதைத் திருப்பி அனுப்பறது, அது ஒழுங்கா மறுபடி திரும்பி வரும்-ன்னு எதிர்பார்க்கறதெல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம்!’

நான் அவருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. பொம்மையைப் பழைய பெட்டிக்குள் இட்டு ஒட்டிவிட்டு, இந்தக் கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

இந்த விஷயத்தில் நான் நினைப்பது சரியா, அல்லது அவர் சொல்வதுதான் யதார்த்தமா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. சொல்லப்போனால், இந்தக் கடிதத்தை நீங்கள் பிரித்துப் படிக்கக்கூட மாட்டீர்கள் என்று அவர் சொல்கிறார். அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், என் மனதுக்குப் பட்டதைக் கொஞ்சமாவது சொல்லிவிட்டால்தான் எனக்கு நிம்மதி.

நீங்கள் அனுப்பிய பொம்மை இயங்காததைக் கண்டதும், நான் தவித்தது எனக்குதான் தெரியும். எத்தனை முயன்றாலும், அந்த மன வருத்தத்துக்கெல்லாம் சமமான ஓர் இழப்பீட்டை உங்களால் தரவேமுடியாது.

மேற்படி பொம்மைமீது ஆசை கொண்டவள் நான்தான். என் மகள் அல்ல. ஆகவே, இந்த பொம்மை இயங்காததுகுறித்து அவளுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. ஆசைப்பட்டதைக் குழந்தைக்கு விளையாடத் தரமுடியவில்லையே என்கிற ஏக்கம்தான் எனக்கு. அதற்காகச் செலவழித்த பணம் இப்படி வீணாகிவிட்டதே என்கிற ஆதங்கமும்.

இதே பொம்மையை நான் கடைத்தெருவில் எங்கேயாவது வாங்கியிருந்தால், நிச்சயமாக இப்படி ஓர் ஓட்டைப் பொருளை ஏற்றுக்கொண்டிருக்கமாட்டேன். எந்தக் கொம்பாதிகொம்பனும் என்னை இப்படி ஏமாற்றியிருக்கமுடியாது.

கடைத்தெருவும், இன்டர்நெட்டும் ஒன்றில்லை என்று என் கணவர் வாதிடுகிறார். ஆனால், பிரபஞ்ச நியாயங்கள் அப்படியெல்லாம் இடம், பொருள், ஏவல் பார்த்து மாறாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆகவே, நீங்கள் உங்கள் கடையை எங்கே விரித்திருந்தாலும், எங்களைப்போன்ற வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் உண்மையாக இயங்குவதுதான் ஒழுங்கு, அதுதான் முறையும்கூட.

உங்களைப்பொறுத்தவரை, இந்த பொம்மைக்கான முழு விலையையும் நாங்கள் பைசா மீதமின்றிச் செலுத்திவிட்டோம். அதற்கேற்ப, சரியாக இயங்கும் ஒரு பொம்மையை எங்களுக்குத் தரவேண்டியது உங்களுடைய பொறுப்பு. நீங்கள் அதில் தவறிவிட்டீர்கள்.

இந்த விஷயங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, நீங்கள் இந்த ஓட்டை பொம்மையை ஏற்றுக்கொண்டு, சரியாக இயங்கும் ஒரு பொம்மையை எங்களுக்கு உடனடியாக அனுப்பிவைக்கும்படி வேண்டுகிறேன்.

ஆண்டவன் எங்களை நன்றாகவே வைத்திருக்கிறான். இன்னொரு நானூறு ரூபாய் செலவழித்து, இதேபோன்ற பொம்மை ஒன்றைத் தேடி வாங்குவது எந்தவிதத்திலும் எங்களுக்குச் சிரமமான விஷயம் இல்லை. ஆனால், வாழ்வில் எல்லாம் நியாயத்துக்குக் கட்டுப்பட்ட ஓர் ஒழுங்கைப் பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்க்கிற என்னுடைய அப்பாவித்தனமான நம்பிக்கை, உங்களுடைய நேர்மையற்றதன்மையால் குலைவதை நான் விரும்பவில்லை, நீங்களும் விரும்பமாட்டீர்கள் என நம்புகிறேன்.

ஒருவேளை, நீங்கள் இந்தக் கடிதத்தைப் பிரித்துப் படிக்காமலேபோய்விடலாம். அப்படியாயின், இந்த பொம்மையை நான் வாங்கவே இல்லை என்று நினைத்துக்கொண்டுவிடுகிறேன். ஓர் அநீதியின் சாட்சியாக இந்த பொம்மை என்னை வாழ்நாள்முழுதும் உறுத்திக்கொண்டே இருக்கவேண்டாம். அந்தவிதத்திலும், இதைத் திருப்பியனுப்பிவிடுவதுதான் நல்லது என நினைக்கிறேன்.

நன்றிகள்.

என்றும் அன்புடன்,
விமலா.

***

என். சொக்கன்

6 Responses to "பொம்மை"

/ஓர் அநீதியின் சாட்சியாக இந்த பொம்மை என்னை வாழ்நாள்முழுதும் உறுத்திக்கொண்டே இருக்கவேண்டாம்./ அழகான வரிகள்! 🙂 மிகவும் பிடித்திருந்தது!

விகடனில் வந்தபொழுதே படித்துவிட்டேன். இன்ஃபாக்ட் புதுப்பிக்கபடாத சப்ஸ்க்ரிப்ஷனை உங்க கதை படிக்கிறதுக்காக புதுப்பிச்சாசு 🙂

கடிதம் எழுதுகிற பாணியில் கதை எழுதும் உத்தி எல்லாம் நன்றாக இருந்தது. ஆனால் கதை என்னவோ கொஞ்சம் Hallow வாகிவிட்டது போன்ற உணர்வு. இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் எக்ஸ்சேஞ்ச், ரீஃபண்ட் பாலிஸி எல்லாம் கிடையாதா என்ன? பாலிஸி இருந்து அதை யாரும் பின்பற்றவில்லை என்பது வேறு.

// கடைத்தெருவும், இன்டர்நெட்டும் ஒன்றில்லை என்று என் கணவர் வாதிடுகிறார் // என்பது கொஞ்சம் மிஸ்லீடிங் கூற்றாக இருக்கிறது 🙂

இதையே கொஞ்சம் மாற்றி பணம் கொடுக்காமல் ட்ரைவிங் லைசன்ஸ் வாங்க பாடுபடும் ஹவுஸ்வொய்ஃபாக இருந்தால் ஓரளவுக்கு ஒன்றிப் போக முடியும் எனத் தோன்றுகிறது.

// என்றும் அன்புடன்,
விமலா.
//
சட்டுன்னு ‘என்றும் அன்புடன் பாலா’ன்னு படிச்சிட்டேன். :))

அப்பப்ப இந்த மாதிரி புனைவுகளும் எழுதுங்க. விகடன்ல வெளியிட்டாத்தான் எழுதனும்னு அடம்புடிக்காம இங்கே உங்க வலைப்பதிவிலேயே வெளியிடுங்க. படிக்க நாங்க எல்லாம் காத்திருக்கோம். நன்றி! 🙂

அருமையான கதை, வாழ்த்துகள்!!!

நமது நம்பிக்கை சுக்கு நூறாக உடையும் போது ஏற்படும் உணர்வுகள் அழகாக சொல்லப்பட்டுள்ளது.
ஒரு கேள்வி: இதனை உங்கள் சொந்த அனுபவம் என நான் நம்புகிறேன். காரணம்: ஆசையின், நம்பிக்கையின், ஏமாற்றத்தின் உணர்வுகள் தத்ரூபகமாக சொல்லப்பட்டுள்ளது.

(I am the First 2 Like this POST ;-))

ஒரு ஏக்கம் கதையின் ஊடே இழையோடுகிறது. எங்கே தான் ஏமாற்றப்பட்டேன்னோ என்ற சோகம். இவ்வளவும் மீறி இன்றைய உலகில், எதார்த்ததில், வாணிகம் இப்படிதான் இருக்கோ என்ற பயம் மேலிடுகிறது. பதில் கடிதம் கிடைத்ததா? நமது யூகத்திற்க்கு!

குழந்தை கடிதம் எழுதுவது போல இருந்தாலும் நன்றாகத்தான் இருந்திருக்கும். இந்த வாரம் படித்த இன்னும் மொரு செய்தி, இதோ:

http://www.j-sainsbury.co.uk/media/latest-stories/2012/20120131-why-were-renaming-tiger-bread-to-giraffe-bread/

மூன்றரை வயது குழந்தை எழுதி, வணிக நிறுவனம் செவி சாய்த்தது பற்றியது. முடிவில் என்னமோ நிறுவனம்தான் லாபம் அடையபோகிறது.

இதை “பொம்மை” கம்பனிகளும் புரிந்து கொண்டால் சரி!

உங்கள் சிறுகதையை, என்னுடைய Blog-இல் (இதுவும், நீங்கள் சொல்லி நான் எழுத ஆரம்பித்ததுதான்!) பயன்படுத்திக் கொண்டேன். எனக்கு கதையும் பிடித்தது; அதுதாண்டி நடந்தவற்றை நீங்கள் தெரிவித்தவிதமும் பிடித்தது. 🙂

http://idhu-pudhisu.blogspot.in/

அருமை! மனைவி கணவனை பற்றி சொல்லுகின்ற அபிப்ராயங்களும்…கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நடக்கின்ற சம்பாஷனைகளும்…
உங்களின் மனசாட்சிக்கும் உங்களுக்கும் இடையே நடக்கின்ற உரையாடலாகவே பட்டது. சிறு சிறு விஷயங்களும் மிக தெளிவாக பதிவு செய்ய பட்டிருக்கிறது. மிகவும் ரசித்து படித்தேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 531 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 597,363 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

February 2012
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
272829  
%d bloggers like this: