மனம் போன போக்கில்

புதுப் பாட்டு

Posted on: March 10, 2012

நண்பர் வீட்டில் ஒரு சிறிய விழா. ஐந்தாறு குடும்பங்களைமட்டும் அழைத்து எளிமையான மாலை விருந்தொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இப்படி வந்தவர்களில் ஏழெட்டுக் குழந்தைகள். நான்கு வயதுமுதல் பத்து வயதுவரை. பையன்களும் பெண்களும் கிட்டத்தட்ட சம விகிதத்தில்.

பெரியவர்கள் காபியும் கையுமாக அரட்டையடித்துக்கொண்டிருக்கையில் இந்தக் குழந்தைகளால் சும்மா உட்கார்ந்திருக்கமுடியாதே. அவர்கள் வீட்டை வலம் வரத் தொடங்கினார்கள். கண்ணில் பட்ட பொருள்களெல்லாம் அவர்களுடைய விளையாட்டுச் சாதனங்களாக மாறின.

விருந்துக்கு ஏற்பாடு செய்த நண்பர் தன்னுடைய மகனுக்காகத் தனி அறை ஒன்றை ஒதுக்கியிருந்தார். அந்த அறையின் சுவர்களில் ஏ, பி, சி, டி, ஒன்று, இரண்டு, மூன்று, நர்சரி ரைம்ஸ் உள்ளிட்ட பல விஷயங்கள் வண்ணமயமாகப் பூசப்பட்டிருந்தன. ஆங்காங்கே பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் புன்னகைத்தன.

இதனால், வீட்டைச் சுற்றி வந்த குழந்தைகளுக்கு அந்த அறை மிகவும் பிடித்துப்போய்விட்டது. சமர்த்தாக அங்கேயே சுற்றி உட்கார்ந்துகொண்டு விளையாட ஆரம்பித்தார்கள்.

ஹால் சோஃபாக்களை ஆக்கிரமித்திருந்த நாங்கள் இதைக் கவனிக்கக்கூட இல்லை. கொஞ்சநேரம் கழித்துதான் ‘குழந்தைங்கல்லாம் எங்கே போச்சு?’ என்று தேடினோம். அவர்கள் பத்திரமாக இருப்பதைத் தெரிந்துகொண்டு எங்களுடைய அரட்டையைத் தொடர்ந்தோம்.

அரை மணி நேரம் கழித்து, இரண்டு குழந்தைகள்மட்டும் அந்த அறையிலிருந்து ஓடி வந்தன. ‘உங்களுக்கெல்லாம் ஒரு சர்ப்ரைஸ்’ என்றன.

’சர்ப்ரைஸா? என்னது?’

‘நாங்கல்லாம் சேர்ந்து உங்களுக்காக ஒரு நர்சரி ரைம் ரெடி பண்ணியிருக்கோம்’ என்றது ஒரு குழந்தை. ‘சீக்கிரமா வாங்க, பார்க்கலாம்!’

பெரியவர்களைப் பொறுத்தவரை, குழந்தைகளின் கற்பனை விளையாட்டுகள் அசட்டுத்தனமானவை, பெரிதாகப் பொருட்படுத்தத்தக்கவை அல்ல, ஆனாலும் அவர்கள் ஓர் ஆச்சர்யம் கலந்த ‘வெரி குட்’ சொல்லவேண்டியிருக்கிறது, குழந்தைகள் இழுக்கும் திசையில் நடக்கவேண்டியிருக்கிறது. நாங்களும் நடந்தோம்.

அந்தச் சிறிய அறைக்குள் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக வெளிச்சம் பரவியிருந்தது. குழந்தைகள் ஆளுக்கு ஒரு மூலையில் நின்றபடி எங்களுக்காகக் காத்திருந்தார்கள். எங்களை அழைத்து வந்த குழந்தைகள் உள்ளே நுழைந்ததும், எல்லாரும் ஒருவரை ஒருவர் வெட்கப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டார்கள். பின்னர் ஒரே குரலில் பாட ஆரம்பித்தார்கள்.

முதல் வரி, ‘One Bird is singing’… உடனே அதற்கு ஏற்றாற்போல் வாயில் கை வைத்துக் குவித்தபடி ‘கூ, கூ, கூ’ என்று action.

அடுத்த வரி ‘Two Cars are racing’ என்று பாடிவிட்டு ‘ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று வண்டிகள் உறுமுகிற ஒலியுடன் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடின.

மூன்றாவது வரி ‘Three dogs are barking’. எல்லாரும் நான்கு கால்களால் தரையில் ஊர்ந்தபடி ‘வவ் வவ் வவ்’ என்று குரைத்தார்கள்.

இப்படியே ‘Four bees flying’, ‘five fishes swimming’ என்று தொடர்ந்து ‘Ten Stars are twinkling’ என அந்தப் பாட்டு முடிவடைந்தது, ஒவ்வொரு வரிக்கும் மிகப் பொருத்தமான Action செய்கையுடன்.

நியாயமாகப் பார்க்கப்போனால், அந்தப் பாட்டில் எந்த விசேஷமும் இல்லை. ஆனாலும், குழந்தைகள் (அதுவும் எங்களுடைய குழந்தைகள்) ஆடி, நடித்துக் காட்டுகிறார்கள் என்பற்காக நாங்கள் அனைவரும் சிக்கனமாகக் கை தட்டினோம். ‘வெரி குட், இந்தப் பாட்டு உங்க ஸ்கூல்ல சொல்லித்தந்தாங்களா?’ என்று கேட்டார் ஒருவர்.

‘இல்லை அங்கிள், நாங்களே ரெடி பண்ணோம்!’ என்றது ஒரு குழந்தை.

‘நிஜமாவா? எப்படி?’

எங்களுக்குப் பின்னால் இருந்த சுவரைக் கை காட்டியது ஒரு குழந்தை. ‘அதோ, அந்த பெயின்டிங்கை வெச்சு நாங்களே ஒரு ரைம் எழுதினோம், அதுக்கு ஏத்தமாதிரி டான்ஸ் பண்ணோம்.’

மற்றவர்களுக்கு எப்படியோ, அந்தக் குழந்தையின் பேச்சு எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. என்னதான் சாதாரணமான 1, 2, 3 ரைம் என்றாலும், இந்த வயதுக் குழந்தைகளால் சொந்தமாகப் பாட்டு எழுதவெல்லாம் முடியுமா என்ன? சும்மா புருடா விடுகிறார்கள் என்றுதான் நினைத்தேன். அவர்கள் கை காட்டிய திசையில் திரும்பிப் பார்த்தேன்.

அங்கே இருந்தது ஒரு சுமாரான ஓவியம். குழந்தைகள் ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணிப் பழகுவதற்காக ஒன்றன்கீழ் ஒன்றாகப் பத்து சதுரங்கள் போட்டு அதனுள் ஒரு பறவை, இரண்டு கார்கள், மூன்று நாய்கள், நான்கு வண்டுகள், ஐந்து மீன்கள், ஆறு பலூன்கள், ஏழு பட்டங்கள், எட்டு ஆப்பிள்கள், ஒன்பது புத்தகங்கள், பத்து நட்சத்திரங்கள் ஆகியவற்றை வரைந்திருந்தார்கள்.

நீங்களோ நானோ அந்த ஓவியத்தைப் பார்த்தால் விசேஷமாக எதுவும் நினைக்கமாட்டோம். பக்கத்தில் ஒரு குழந்தை இருந்தால் One, Two, Three என்று சொல்லித்தர முனைவோம். அல்லது ‘இதுல எத்தனை பட்டம் இருக்குன்னு எண்ணிச் சொல்லு, பார்க்கலாம்’ என்று அதற்குப் பரீட்சை வைப்போம்.

ஆனால் அந்தக் குழந்தைகளுக்கு, அந்த ஓவியம் ஒரு பாட்டுப் பயிற்சியாகத் தோன்றியிருக்கிறது. ஒரு பறவை என்றவுடன் ‘One Bird is singing’ என்று வாக்கியம் அமைத்து, அதற்கு ஏற்பப் பாடும் பறவையின் Action சேர்த்திருக்கிறார்கள், இப்படியே ஒவ்வொரு சதுரத்துக்கும் ஒரு வரியாக அவர்களே தங்களுக்குத் தெரிந்ததைச் சொந்தமாக எழுதியிருக்கிறார்கள், ஒவ்வொரு வரிக்கும் ஏற்ற Actions என்ன என்று யோசித்து நடனம் அமைத்திருக்கிறார்கள். அதை எல்லாரும் பலமுறை பாடி, ஆடிப் பார்த்துப் பயிற்சி எடுத்திருக்கிறார்கள். எங்கள்முன் நடித்துக் காண்பித்திருக்கிறார்கள்.

மறுபடி சொல்கிறேன், அந்தப் பாட்டில் விசேஷமான வரிகள் எவையும் இல்லை. எல்லாம் அவர்கள் எங்கேயோ கேட்ட பாடல்களின் சாயல்தான். நடன அசைவுகளும்கூட அற்புதமானவையாக இல்லை.

அதேசமயம், அந்த வயதில் இந்தப் பத்து சதுரங்களை என்னிடம் யாராவது காட்டியிருந்தால் சட்டென்று ஒரு பாட்டு எழுதுகிற Creativity எனக்கு இருந்திருக்காது. ஏழெட்டுக் குழந்தைகளுடன் சேர்ந்து அதற்கு நடனம் அமைக்கவும் தோன்றியிருக்காது. ‘உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்’ என்று பெற்றோரை இழுத்துவந்து பாடி, ஆடிக் காண்பித்திருக்கமாட்டேன்.

இந்தக் குழந்தைகளால் அது முடிகிறது என்றால், அதற்கு என்ன அடிப்படைக் காரணம்? இன்றைய வகுப்பறைகள் Creativityஐ ஊக்குவிக்கத் தொடங்கிவிட்டனவா? ஆசிரியர்கள் புதுமையான வழிகளில் பாடம் சொல்லித்தருகிறார்களா? ’எந்தப் படத்தைப் பார்த்தாலும் அதற்குப் பொருத்தமாகப் பாட்டு எழுதுவது எப்படி?’ என்று யாரேனும் இவர்களுக்குக் கற்றுத்தந்தார்களா? அவர்கள் புத்தகப் பாடங்களைமட்டும் உருப்போடாமல் புதிதாக எதையாவது யோசித்துச் செய்தால் கவனித்துப் பாராட்டும் சூழல் பள்ளியில், வெளியில் இருக்கிறதா? இந்தக் காலப் பெற்றோர் ‘ஒழுங்காப் படிக்கற வேலையைமட்டும் பாரு’ என்று குழந்தைகளை அடக்கிவைக்காமல் அவர்களுடைய இஷ்டப்படி செயல்பட அனுமதிக்கிறார்களா? ’நாம் பாடுவது சரியோ தப்போ’ என்று தயங்காமல் தன்னம்பிக்கையோடு அடுத்தவர்கள்முன் அதை Perform செய்து காண்பிக்கும் தைரியம் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? இந்தக் கோஷ்டியில் ஏதோ ஒரு குழந்தைக்குதான் அந்தப் பாட்டெழுதும் ஐடியா தோன்றியிருக்கவேண்டும், மற்ற குழந்தைகள் வரிகளை, Actionகளைச் சேர்த்திருக்கவேண்டும், இன்னொரு குழந்தை தலைமைப்பண்புடன் செயல்பட்டு இந்தப் பயிற்சி முழுவதையும் coordinate செய்திருக்கவேண்டும், சரியாகப் பாடாத, ஆடாத குழந்தைகளுக்கு மற்றவர்கள் சொல்லித்தந்து தேற்றியிருக்கவேண்டும், அரை மணி நேரத்துக்குள் ஒரு புத்தம்புது விஷயத்தை இப்படி ஆளுக்கொரு Role எனக் கச்சிதமாகப் பிரித்துக்கொண்டு செயல்படுத்துவது அவர்களுக்குள் எப்படி இயல்பாக நிகழ்ந்தது?

இதற்கெல்லாம் எனக்குப் பதில் தெரியவில்லை. ஆனால் இந்தக் கேள்விகளை யோசித்த அந்தக் கணத்தில் நான் அடைந்த பரவசத்தை வார்த்தைகளில் விவரிப்பது சிரமம். அரட்டை பார்ட்டிக்கு நடுவே அந்தச் சாதாரணமான பாடல் உருவான சூழல் ஓர் அசாதாரணமான அனுபவமாக அமைந்துவிட்டது.

குழந்தைகள் நிதம் நிதம் நமக்கு ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

***

என். சொக்கன் …

10 03 2012

9 Responses to "புதுப் பாட்டு"

அதை ஒரு வீடியோ பதிவாக்காமல் விட்டு விட்டீர்களே!

Really amazing! What creativity and uninhibited expression! Also I applaud their working as a team. Thanks for sharing this with us.
amas32

அருமை.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.

குழந்தைகள் ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருப்பார்கள்.

கல்வி முறை என்பது மட்டுமல்ல, பெற்றோர்-குழந்தை உறவு நெருக்கமாகவும் சீராகவும் இருக்கும் சூழலில் இதெல்லாம் தானாக நடக்கும்.

சில நாட்களுக்கு முன்பு என் மருமகளுடன் பேசிக்கொண்டிருந்தேன். சாக்லேட் நிறைய தின்னக்கூடாது என்பதற்காக ஒரு சின்னக் கதை சொன்னேன். சாக்லேட் நிறைய தின்ற ஒரு பையனுக்குப் பற்கள் எல்லாம் விழுந்து விடுவதுதான் கதை. கதை முடிந்தபின், “மாமா, நான் ஒரு கதை சொல்லட்டுமா” என்று தொடங்கினாள்.

நான் சொன்ன அதே கதைதான். ஆனால் கூடுதலாக சில பாத்திரங்கள். பள்ளி நண்பர்களின் பெயர்கள் என்று நினைக்கிறேன். சற்று அங்கும் இங்கும் மாற்றி அதே கருத்து வருமாறு கதையைச் சொல்லி விட்டாள். அவள் இரண்டாம் வகுப்பு மாணவி.

இன்னொன்னு தோணுது. அது ஓரளவு உண்மையும் கூட. எல்லாக் குழந்தைகளும் தங்கள் தனித்திறனை குழந்தைப் பருவத்தில் வெளிப்படுத்தும். சென்ற தலைமுறையில் நானும் நீங்களும் கூட வெளிப்படுத்தியிருப்போம். ஆனால் பெற்றோர்கள் அவற்றைக் கவனித்திருப்பார்களா என்பதும் கேள்விக்குறி. நூற்றுக்கு தொன்னூற்றொன்பது சதவிகிதப் பெற்றோர்கள் கவனிக்கவில்லை என்பதுதான் உண்மை.

”…குழந்தைகள் நிதம் நிதம் நமக்கு ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்….”
மிகவும் உண்மை. அவர்கள் புத்திசாலிகள். சிறந்த ஆக்கம்.

வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

சொக்கன், நம் சிறு வயது காலத்தை அளவு கோலாக வைத்துப் யோசித்துப்பார்த்தால் இந்தக் காலத்துக் குழந்தைகளின் கிரியேட்டிவிட்டி நீங்கள் சொன்னமாதிரி உண்மையிலேயே ஆச்சரியப்படத்தக்க விஷயம்தானா என்று மறு ஆராய்ச்சி செய்யலாம். நல்ல டாபிக்கும்கூட. நம் சிறு வயதில் நமது கிரியேட்டிவிட்டி என்பது வீட்டுக்கு வெளியே இருந்தது. ஆரிகமி, பட்டம் செய்து விடுதல், அழி ரப்பரில் ப்ளேடால் பெயர் செதுக்கி இங்க் கொண்டு சீல் வைத்தல், நாமாகவே கிரீட்டிங் கார்டுகள் செய்து நண்பர்களுக்கு அனுப்புதல், சைக்கிள் டயரில் சிகரெட் அட்டையை சொருகி மோட்டார் வாகனமாக்குதல், கட்ட வண்டி மையினால் கட்டபொம்மன் மீசையை வரைதல் (நன்றி நா.முத்துக்குமார்), பனங்காய் வண்டி எட்ஸெட்ரா. இப்போது குழந்தைகளுக்கு நான்கு சுவர்களும் நாலைந்து ஒளிர் திரைகளும்தான் உலகம் (டிவி, மொபைல், கம்ப்யூட்டர்). ஆனால் அதற்குள்ளாகவே இத்தனை பண்ணுகிறதென்றால் பாராட்டாமல் இருக்க முடியாதுதான். நல்ல பதிவு. நன்றி சொக்கன்.

அசத்தலானக் கட்டுரை.
நானும் இது போன்ற குழந்தைகலைக் கண்டு அதிசயித்திருக்கிறேன். ஒப்புகொள்கிறேன்.
“அதேசமயம், அந்த வயதில் இந்தப் பத்து சதுரங்களை என்னிடம் யாராவது காட்டியிருந்தால் சட்டென்று ஒரு பாட்டு எழுதுகிற Creativity எனக்கு இருந்திருக்காது. ஏழெட்டுக் குழந்தைகளுடன் சேர்ந்து அதற்கு நடனம் அமைக்கவும் தோன்றியிருக்காது. ‘உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்’ என்று பெற்றோரை இழுத்துவந்து பாடி, ஆடிக் காண்பித்திருக்கமாட்டேன்.”

அருமையான பதிவுங்க 🙂 குழந்தைகளின் உலகம் ஆச்சர்யம் நிறைந்தது.. தொடர்ந்து உற்சாகபடுத்தினால் போதும். நிச்சயம் மிளிர்வார்கள்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,480 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2012
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
%d bloggers like this: