மனம் போன போக்கில்

பிரித்தலும் சேர்த்தலும்

Posted on: May 30, 2012

சமீபத்தில் துருக்கி சென்ற நண்பர் ஒரு பேனா வாங்கி வந்து பரிசளித்தார். அதன் விசேஷம், மேலோட்டமாகப் பார்த்தால் பேனாபோலவே இருக்கும், அழகாக எழுதும், ஆனால் உண்மையில் அது ஒரு பென்சில். அதன் மூடியில் ஒரு தக்கனூண்டு பேனாவைப் பொருத்திவைத்திருக்கிறார்கள்.

இந்த விஷயம் புரிந்தபிறகு, அதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குப் பென்சிலாகவே தோன்றுகிறது, மிகச் சாதாரணமாக அதைக் கடந்துபோகிறேன், ஆனால் முதன்முறையாக அவர் அந்தப் பேனா முனையைப் பிரித்துப் பென்சிலை வெளிக்காட்டியபோது நான் அடைந்த ஆச்சர்யம் சாதாரணமானது அல்ல.

கிட்டத்தட்ட அதேமாதிரி ஓர் ’Easter Egg’ ஆச்சர்ய உணர்வு, சில கவிதைகளிலும் ஏற்படும். ஒரு வார்த்தையை மேலோட்டமாகப் பார்த்தால் ஓர் அர்த்தம், கொஞ்சம் பிரித்துப் பார்த்தால் முற்றிலும் மாறுபட்ட இன்னோர் அர்த்தம் என வித்தை காட்டும்.

உதாரணமாக, என் சமீபத்திய கிறுக்கு, கம்ப ராமாயணம், அதில் ஒரு பாட்டு. அசுரர்களின் கொடுமை தாங்க முடியாமல் தேவர்கள் திருமாலிடம் முறையிடுகிறார்கள். இப்படி:

’ஐ இரு தலையினோன், அனுசர் ஆதி ஆம்

மெய் வலி அரக்கரால் விண்ணும் மண்ணுமே

செய்தவம் இழந்தன, திருவினாயக

உய்திறன் இல்லை’யென்று உயிர்ப்பு வீங்கினார்

ஐ இரு தலை = 5 * 2 = 10 தலை கொண்ட ராவணன்

அனுசர் = தம்பிகள்

ஆதி ஆம் = முதலான

மெய் வலி அரக்கரால் = உடல் பலம் கொண்ட அரக்கர்களால்

விண்ணும் மண்ணும் செய் தவம் இழந்தன = வானுலகத்தில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் தவம் செய்யமுடியாமல் தவிக்கிறார்கள்

இதுவரை ஓகே, அடுத்து ‘திருவினாயக’ என்று வருகிறது. திருமாலைப்போய் யாராவது ‘பிள்ளையாரே’ என்று அழைப்பார்களோ?

அங்கேதான் நாம் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. அது ‘திரு வினாயகா’ (மரியாதைக்குரிய வினாயகரே) அல்ல, ‘திருவி நாயகா’, அதாவது திருமகளாகிய லட்சுமியின் கணவனே, திருமாலே!

இந்த மேட்டரைச் சினிமாக்காரர்கள் சும்மா விடுவார்களா? கவிஞர் வாலி ஒரு பாட்டில் அட்டகாசமாகப் புகுத்திவிட்டார்:

வராது வந்த நாயகன், ஒரே சிறந்த ஓர் வரன்

தராதரம் புரிந்தவன், நிரந்தரம் நிறைந்தவன்

வரம் தரும் உயர்ந்தவன், தரம் தரம் (?) இணைந்தவன்,

இவன் தலை விநாயகன்

இந்தப் பாடலை வீடியோ வடிவமாகப் பார்த்தவர்களுக்கு நினைவிருக்கும், நாயகனும் நாயகியும் ஒரு விநாயகர் கோயிலில் பாடுவதுபோன்ற காட்சி அமைப்பு. ஆகவே ‘இவன் தலை விநாயகன்’ என்ற வரிக்கு நேரடியான Religious அர்த்தமும் கொள்ளலாம், ‘இவன் தலைவி நாயகன்’ என்று பிரித்து Romantic அர்த்தமும் காணலாம்.

காதல் பாட்டிலேயே ரெட்டை அர்த்தம் வைக்கிற வாலி கலாட்டா பாட்டு என்றால் சும்மா விடுவாரா? எல்லாருக்கும் தெரிந்த ஓர் Easter Egg இது:

கட்ட வண்டி கட்ட வண்டி

காப்பாத்த வந்த வண்டி

நாலும் தெரிஞ்ச வண்டி

நாகரீகம் அறிஞ்ச வண்டி

இங்கே ’காப்பாத்த வந்த வண்டி’ என்று சாதாரணமாக வரும் வரியைக் கொஞ்சம் சேர்த்துப் படித்தால் ‘காப்பாற்ற வந்தவன்-டி, நாலும் தெரிஞ்சவன்-டி, நாகரீகம் அறிஞ்சவன்-டி’ என்று விவகாரமாக மாறிவிடுகிறது.

இதுவும் ஒரு ராமர் பாட்டிலிருந்து வந்த Inspirationதான் என்று நினைக்கிறேன். அருணாசலக் கவிராயர் எழுதிய ‘ராமனுக்கு மன்னன் முடி’ என்ற பாடலில் இப்படிச் சில வரிகள் வரும்:

பட்டம் கட்ட ஏற்றவன்-டி,

நாலு பேரில் மூத்தவன்-டி,

’கட்ட வண்டி’ பாட்டைப் பிரித்துக் கேட்டபிறகு, எனக்கு இந்த வரிகளைக் கேட்கும்போதெல்லாம் ‘பட்டம் கட்டுவதற்குச் சிறந்த வண்டி இது, நாலு வண்டிகளில் மிக மூத்தது’ என்றுதான் அர்த்தம் தோன்றுகிறது. ராமர் மன்னிப்பாராக.

இந்த ‘வாடி போடி’ உத்தியை வாலி இன்னொரு பாட்டிலும் மிகச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தியிருக்கிறார். அதையும் பாடியது கமலஹாசன்தான், ஆனால் பெண் குரலில்:

தூணுக்குள்ளும் இருப்பான்-டி,

துரும்பிலும் இருப்பான்-டி,

நம்பியவர் நெஞ்சில் நிற்பான்-டி

இப்படி இந்தப் பாட்டின் பல்லவி முழுவதும் பல ‘டி’யில் முடியும் வரிகள் இருக்கும். இவை மரியாதைக்குறைவாக எழுதப்பட்டவை அல்ல.  அப்படியே இருந்தாலும், கதைப்படி இவற்றைப் பாடுவது வயதான ஒரு பெண்மணி என்பதால் ஒன்றும் தவறில்லை.

ஆனால் உண்மையில் இத்தனை ’டி’களுக்குக் காரணம், அந்தப் படத்து ஹீரோவின் பெயர் பாண்டியன். கதாநாயகி அவனுடைய மனைவி, ஆனால் அவனைப் பிரிந்து வாழ்கிறாள்.

ஆகவே, அந்தப் பாண்டியனை அவளுக்கு நினைவுபடுத்தும்விதமாக, ஒவ்வொரு வரியின் கடைசிப் பகுதியிலும் ‘பாண்டி’, ‘பாண்டி’ என்று வருவதுபோல் எழுதியிருப்பார் வாலி.

இதுபோன்ற விஷயங்களை ஒருமுறை தெரிந்துகொண்டுவிட்டால், அப்புறம் ஆச்சர்யம் இருக்காது, ’ச்சே, இவ்ளோதானா?’ என்று தோன்றும், ஆனால் இந்த மேட்டர் புரியாமல் பாட்டின் நேரடிப் பொருளைமட்டுமே பலர் கேட்டுக்கொண்டிருப்பார்கள், அவர்களுக்கு இந்த  ’உள் குத்து’ விளங்கும்போது, ‘அட’ என்று ஒரு திகைப்பு தோன்றும், அதற்காகவே இதுமாதிரி சமத்காரப் பாடல்கள் எழுதப்படுகின்றன.

நிறைவாக, இன்னொரு Easter Egg. இதுவும் வாலிதான். என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை.

படம் ‘மெல்லத் திறந்தது கதவு’. முகம் காட்டாமலே காதலிக்கும் ஒரு பெண்ணைத் தேடிச் செல்கிறான் நாயகன். அப்போது அவன் பாடும் வரிகள்:

தேடும் கண் பார்வை தவிக்க, துடிக்க,

சொன்ன வார்த்தை காற்றில் போனதோ,

வெறும் மாயமானதோ!

நேரடியான, எளிய வரிகள்தான். காட்சிக்குப் பொருத்தமான பொருளைத் தருகின்றன.

ஆனால் அந்த மூன்றாவது வரி, ‘வெறும் மாயமானதோ’ என்பதைக் கொஞ்சம் மாற்றிப் பிரித்தால்? ‘வெறும் மாய மான் அதோ!’ … முகம் காட்டாமல் மறைந்து மறைந்து போகிறாளே, இவள் நிஜமாகவே பெண்தானா? அல்லது வெறும் மாயமானா?’

தூக்கிவாரிப்போடுகிறதில்லையா? அவ்ளோதான் மேட்டர்!

***

என். சொக்கன் …

30 05 2012

20 Responses to "பிரித்தலும் சேர்த்தலும்"

Reblogged this on Tamil Archives.

அட்டகாசம் சாமீயோவ்!

ஆஹா! நீவீர் நீடூழி வாழ்க! மிகவும் ரசித்தேன் 🙂
amas32

அருமை! அருமை! உங்களுக்கு அடிக்கடி பொழுது போகாமல் இருக்கக் கடவது! 🙂

Kalakkals of Chokkan:)

//இவன் தலை விநாயகன்//
= இவன் பேரு சொக்கன் :)))

//கட்ட வண்டி கட்ட வண்டி//
இதுக்கும் பொருள் இருக்கு! கட்டவன் = வென்றவன்
இப்போ முழுப் பாட்டையும் மாத்தீக்கலாம்:)

கட்டவன் டி கட்டவன் டி
காப்பாத்த வந்தவன் டி
நாலும் தெரிஞ்சவன் டி
நாகரீகம் அறிஞ்சவன் டி
:))

’மெல்லத் திறந்தது கதவு’ பாடல் வாலிதான் என்று Confirm செய்த நண்பர் ’பரிசல்’க்கு நன்றி 🙂

பொதுவா…
இது போன்ற ’கிக்’ பாடல்கள், வார்த்தை விளையாட்டுப் பாடல்கள் = அந்த நேர இன்பத்தோடு சரி! நிலைப்பதில்லை-ன்னு சிலர் சொல்லுவாங்க!
சில “எலக்கியவாதிகள்” காளமேகம் போன்ற வார்த்தை விளையாட்டுக் கவிஞர்களை, இலக்கியத்தில் ஏற்றுக் கொள்ளவே மாட்டாய்ங்க:))

ஆனா, இது போன்ற விளையாட்டுக்களை நினைச்சிப் பார்க்கும் போதெல்லாம், இன்பமும் சிரிப்பும் வருவதை அவங்களாலும் மறுக்க முடியாது!:))

இது போன்ற “வார்த்தை விளையாட்டுப்” பாடல்களில் வாலி கலக்குவாரு-ன்னு பலருக்கும் தெரியும்!

ஆனா கண்ணதாசன் கலக்குவாரா?
—————

உள்ளமெலா மிளகாயோ
ஒவ்வொரு பேச் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுபோல்
வெண்ணிலவே நீ சிரிக்காயோ

காதலன், காதலியின் கோபத்தைத் திட்டுவது போல் திட்டிக், கொஞ்சுகிறான், கெஞ்சுகிறான்….

* உள்ளம் எலாம் மிளகாயோ? = அவ்வளவு காரமா?
* ஒவ்வொரு பேச்சும் சுரைக்காயோ? = அவ்வளவு உவர்ப்பா?
* உள்ளம் எல்லாம் இளகாயோ?
* ஒவ்வொரு பேச்சு உரைக்காயோ?

– TMS & PBS அழுத்துவாங்க Tuneஐ! அது இன்னும் அழகு!:)) One more Easter Egg to chokkan:)

இன்னும் நிறைய சொல்லலாம்…

மலைத்-தேன் இவள் என மலைத்தேன் – கண்ணதாசன்

எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே – வாலி

அதே போல், விண்ணைத் தாண்டி வருவாயா-வில், ஓமணப் பெண்ணே! கொஞ்சம் அழுத்தினா, ஓ, மணப் பெண்ணே:)

இப்பிடி நுணுக்கி விட்டு வெளயாடறது, அதுவும் இசையில், இன்பமோ இன்பம்!:)

ஒரு குட்டிக் கதை…

கண்ணதாசன் குடிப் பழக்கம் ஒங்களுக்கே தெரியும்! ரொம்ப லேட்டா வராரு!
இயக்குநர் ஸ்ரீதருக்கோ Tension!
சுசீலாம்மா காத்துக் கெடக்கறாங்க! எல்லாரும் வேற படப்பிடிப்புக்குப் போவணும்!

MSV என்னைக்கும் இல்லாத திருநாளா…பயங்கரமாக் கத்திப்புட்டாரு…அந்தக் “குடிகாரன்” வரானா இல்லையா? போன்ல கேட்டுச் சொல்லுங்கய்யா….
எல்லாருக்கும் அதிர்ச்சி; MSV இப்படிப் பேசுறவரு கிடையாது!

கண்ணதாசன் வந்துட்டாரு! ஸ்ரீதர் Situation சொல்லுறாரு! MSV Tune போட…கண்ணதாசனுக்கு அன்னிக்கு ன்னு பாத்து மூடே வரல! பாட்டும் வரல!
எல்லாரும் செம டென்சன்…

பாத்ரூம் போறேன் ன்னு எழுந்த கவிஞர் கிட்ட, எவனோ ஒருத்தன் போட்டுக் குடுத்துட்டான் – கவிஞரே ஒங்கள, MSV பப்ளிக்கா குடிகாரன் ன்னு திட்டிட்டாரு…

வந்தாரு கவிஞரு, MSV கிட்ட..
டேய் விசு, சொன்னது நீ தானா? சொல்லுடா சொல்லுடா ன்னு உலுக்க…
பாட்டைக் கொட்டுறாரு – சொன்னது நீ தானா? சொல் சொல் சொல்…
Everybody was stunned!

ஆனா கண்ணதாசன் பாட்டை நிறுத்தி, விசு, பாட்டுல ஒன்னை அஃறிணைல திட்டிட்டேன் டா….
சொன்ன்ன்- “அது” நீதானா சொல் சொல் ன்னு “அது”-வை அழுத்த….மொத்த யூனிட்டும் டென்சன்-ல சிரிச்சிடுச்சாம்:))

கதை ஓவர்! போய் புள்ள குட்டிய படிக்க வைங்க:))

பாலைவன ரோஜாக்களில் ‘காதல் என்பது’ பாடலில் வரும் வரி – வாழ்க்கையே கொஞ்ச காலம்தான் இந்த வாழ்க்கையில வாலிபம் கொஞ்ச நேரம்தான்

இதை

வாழ்க்கையே கொஞ்சும் காலம்தான் இந்த வாழ்க்கையில வாலிபம் கொஞ்சும் நேரம்தான்

என்று மாற்றிப் புரிந்து கொள்வதெல்லாம் சேர்த்துக்கலாமா?

அருமை சார். பொதிகை நேர்காணலில் திரு ஜெயந்தா திரு வாலியிடம் கேட்டார். ஒரு பாடலில் உங்கள் நடையும், திரு கண்ணதாசன் அவர்களின் நடையும், வார்த்தைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கிறதே என்று. அதற்கு திரு வாலி சொன்னார் – ஆமாம், இருவர் எடுத்ததும் ஒரே இடத்தில் தான் என்று எங்கிருந்து எடுத்திருக்கிறோம் என்று சொன்னார். நமக்கு எளிமைப் படுத்தி தருகிறார்களே. இப்போது கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு அப்புறமும் பேசுகிறோம், அந்த பாடல்களுக்கு உயிர் இருப்பதால். இப்போது உள்ள பாடல்கள் காலத்தால் கடந்து நிற்குமா? பார்க்கலாம். நன்றி சார்.

Keep up the good work. Best of luck. From http://www.kochiflorist.com

என்ன ஒரு ஆராய்ச்சி!

சலங்கை ஒலி படத்தில் வரும் ‘நாத வினோதங்கள்’ பாடலைக் கேட்டிருப்பீர்கள். பாடல் ஆரம்பிக்கும்போது காளிதாசரின் ரகுவம்சத்தில் இருந்து ஒரு ஸ்லோகம் வரும். அதன் கடைசி வரி – “வந்தே பார்வதி பரமேஸ்வரம்” . SPB அந்த வரியை இரண்டாவது முறையாக பாடும்போது – “வந்தே பாரவதீப ரமேஸ்வரம்” என்று பாடி இருப்பான் (SPB KJY எல்லாம் எனக்கு அவன் இவன்தான் கண்டுக்காதீங்க – சொல்லடி சிவசக்தி மாதிரி :-)). ‘பார்வதீப’ , குட்டி gap விட்டு ‘ரமேஸ்வரம்’ என்று வரும். நன்றாகவே சமஸ்கிருதம் தெரிந்த இளையராஜா இதை எப்படி அனுமதித்தார் என்று ஆச்சர்யமாக இருந்தது.

சமீபத்தில் படித்தேன், அது வேண்டுமென்றே இளையராஜா செய்தது. முதலில் ‘பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கும் வந்தனம்’, இரண்டாவது ‘பார்வதீப’ – பார்வதியோட பதி – சிவன் மற்றும் ரமேஸ்வரம் – ரமா என்பது மகாலக்ஷ்மியோட இன்னொரு பெயர் , அதனால் ரமாவின் ஈஸ்வரன் விஷ்ணு , So, ‘சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் வந்தனம்’ என்கிற அர்த்தம் வருமாறு இளையராஜா SPB ஐ வேண்டுமென்றே பாடச் செய்தது.

கமல் இதை அற்புதமாக புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு அபிநயம் பிடித்திருக்கிறார். முதலில் பார்வதி மற்றும் சிவன்(0:22-0:30). இரண்டாவது முறை வரும்போது ‘பார்வதீப’ என்பதற்கு அர்த்தநாரீஸ்வருடைய அபிநயம், ‘ரமேஸ்வரம்’ என்பதற்கு மகாலக்ஷ்மியோட பாற்கடலில் சயனம் கொண்டிருக்கும் விஷ்ணுவோட அபிநயம் (0:34-0:40) – What a classic team work?

தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இள மயிலே

(அந்தி மழை பொழிகிறது — இளமையிலே / இள மயிலே)

[…] வரும் சில Easter Egg Momentsஐக் குறிப்பிட்டு ‘பிரித்தலும் சேர்த்தலும்’ பதிவை நான் எழுதியபோதே, இதேபோன்ற […]

தேடும் கண்பார்வை எழுதினது கங்கை அமரன்-னு நினைக்கிறேன். எங்கயோ பேட்டில கேட்ட ஞாபகம்.

**********************************************************************************
Comment from Balamurugan Dakshinamurthy (Via Email)
**********************************************************************************
Very much liked your post ‘piriththalum Serthalum’. Interesting one.

Especially when you think you discovered it without others telling it to you, that is a sweet surprise. I too have felt it couple of times.

On a related note, a blog post which I made in 2007, when I had this same feeling.

http://beemorgan.blogspot.co.uk/2007/02/blog-post_15.html

[…] கதையை நமக்கு நினைவுபடுத்தும் Easter Eggதானா? ஒரு காதல் பாட்டுக்கு நடுவே இதை […]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,069 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

May 2012
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
%d bloggers like this: