ஈதல்
Posted by: என். சொக்கன் on: June 6, 2012
- In: (Auto)Biography | நவீன அபத்தங்கள் | Bangalore | Characters | Cheating | Confusion | Corruption | Courtesy | Differing Angles | Expectation | Honesty | Learning | Life | Magazines | Media | Open Question | People | Perfection | Social Responsibility | Uncategorized | Value
- 14 Comments
சில மாதங்களுக்கு முன்னால் ஒருநாள், சோம்பலானதொரு ஞாயிற்றுக்கிழமைப் பிற்பகல். எங்கள் வீட்டுக் கதவு மெதுவாகத் தட்டப்பட்டது.
கிட்டத்தட்ட ஒரு மினி ஹார்மோனியப் பெட்டி சைஸுக்கு வீடியோ கேமெராவுடன் காலிங் பெல் பொருத்தியிருக்கிற வீட்டின் கதவுகள் தட்டப்படுவதே ஒரு பெரிய அதிசயம்தான். யாராக இருக்கும் என்கிற சந்தேகத்துடன் திறந்தோம். மூன்று நடுத்தர வயதினர் கையில் ஒரு கசங்கிய ஆல்பத்துடன் நின்றிருந்தனர். எங்களைப் பார்த்தவுடன் பெரிதாகப் புன்னகைத்து ஒரு வண்ணமயமான விசிட்டிங் கார்டை நீட்டினார்கள்.
‘என்ன விஷயம்?’
‘நாங்க ஆத்ரேயா ஹோம்லேர்ந்து வர்றோம்’ என்றார் முதல் நபர். ‘இங்கே ஆதரவில்லாத குழந்தைங்க, வயசானவங்களுக்கெல்லாம் சாப்பாடு, துணிமணி கொடுத்து மருத்துவ வசதிக்கு ஏற்பாடு செஞ்சு அக்கறையாக் கவனிச்சுக்கறோம், இப்போ எங்க ஹோம்ல சுமார் 400 பேர் இருக்காங்க. அவங்களோட ஆல்பம் இது!’ என்று நீட்டினார்.
‘பரவாயில்லை, உள்ளே வாங்க’ என்றோம், அவர் நீட்டிய புகைப்படங்களைப் பார்க்காமலே.
‘இருக்கட்டும் சார்’ என்று அவர்கள் மறுத்துவிட்டார்கள். முதல் நபர் மீண்டும் பேசினார், ‘எங்க ஹோமுக்கு உங்களால முடிஞ்ச உதவியைச் செஞ்சா நல்லாயிருக்கும்’ என்றவர் சட்டென, ‘காசாக் கொடுக்கமுடியலைன்னாலும் பரவாயில்லை, நீங்க பயன்படுத்தின பழைய துணிமணி, பாத்திரங்கள், மளிகை சாமான்கள்ன்னு நீங்க எதைக் கொடுத்தாலும் சந்தோஷமா வாங்கிப்போம்!’
சாதாரணமாக இதுபோல் வீடு தேடி வந்து உதவி கேட்கிறவர்களைக் கையாள்வது கொஞ்சம் தர்மசங்கடமான விஷயம். முதலில் அவர்கள் நிஜமாகவே ஒரு சமூக சேவை நிறுவனத்திலிருந்து வருகிறார்களா, அல்லது டுபாக்கூர் ஏமாற்றா என்கிற சந்தேகம். நம்பிக் காசு கொடுத்தால் ஏமாந்துவிடுவோமோ என்கிற தயக்கம், அதற்காக எதுவும் தராமல் வெளியேற்றிவிட்டால் பாவக் கணக்கில் ஒன்று கூடிவிடுமோ என்கிற பயம்.
அந்தவிதத்தில் ‘காசு வேண்டாம், பயன்படுத்திய பொருள்களைக் கொடுங்கள்’ என்கிற இந்த டீலிங் எங்களுக்குப் பிடித்திருந்தது. ஒருவேளை இவர்கள் நிஜமான சேவை நிறுவனமாக இருந்தால், அந்தப் பொருள்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள், ஏமாற்றுக்காரர்களாக இருந்தால், நாம் பழைய பொருள்களைதானே தந்தோம், பெரிதாக ஒன்றும் இழப்பு இல்லை.
சில விநாடிகள் யோசனைக்குப்பிறகு என் மனைவி பேசினார். ‘நாங்க கொஞ்சம் திங்க்ஸ் தேடி எடுத்துவைக்கறோம், ஈவினிங் வந்து எடுத்துகிட்டுப் போகமுடியுமா?’
‘ஷ்யூர் மேடம்’ என்று உடனடி பதில் வந்தது. ‘நாங்க மத்த வீடுகளைப் பார்த்துப் பேசிகிட்டிருப்போம், எங்க வேன் கீழேதான் நிக்குது, நீங்க எப்ப வேணும்ன்னாலும் கூப்பிடலாம், வந்து எடுத்துக்கறோம்’ என்றார் ஒருவர். ‘பை த வே, உங்களுக்கு நேரம் இருக்கும்போது எங்க ஹோமுக்கு நீங்க நேர்ல வரலாம், சொல்லிட்டு வரணும்ன்னுகூட அவசியம் இல்லை, எப்ப வேணும்ன்னாலும் வாங்க, அங்கே இருக்கறவங்ககிட்ட நாலு வார்த்தை இதமாப் பேசதான் ஆள் இல்லை இப்போ!’
அவர்களைக் கை கூப்பி வழியனுப்பி வைத்தோம். மதியத் தூக்கத்தைத் தியாகம் செய்துவிட்டுப் பழைய துணிகள், பாத்திரங்கள், விளையாட்டுப் பொம்மைகள், மற்ற பொருள்களைத் தனித்தனியே பிரித்து மூட்டை கட்ட ஆரம்பித்தோம்.
அரை மணி நேரத்தில், வீடு சுத்தமானது. பழைய, பயன்படாத பொருள்களைமட்டுமே தருகிறோமே என்கிற குற்றவுணர்ச்சியில் கொஞ்சம் மளிகை சாமான்களையும் அதில் சேர்த்தோம். எல்லாவற்றையும் கீழே கொண்டுபோனோம்.
அங்கே ஒரு பெரிய வேன் நின்றிருந்தது. இருபுறமும் ‘ஆத்ரேயா ட்ரஸ்ட்’ என்று பெரிதாக எழுதிச் சில வறிய குழந்தைகளின் புகைப்படங்கள் கொலாஜ் செய்யப்பட்டிருந்தன. கீழே கொட்டை எழுத்தில் செல்ஃபோன் நம்பர், ‘24 மணி நேரமும் அழைக்கலாம்’ என்கிற வாசகம்.
வேனுக்குள் எட்டிப்பார்த்தோம், எங்கள் வீட்டுக்கு வந்த மூன்று நபர்களில் ஒருவர் களைத்துப் படுத்திருந்தார். சத்தம் கேட்டு எழுந்து ‘வாங்க சார், வாங்க மேடம்’ என்றார். நாங்கள் தந்த பொருள்களை வாங்கி வைத்துக்கொண்டு மனதார நன்றி சொன்னார். ‘நேரம் இருக்கும்போது கண்டிப்பா ஹோம்க்கு வாங்க சார்’ என்றார். ‘உங்களுக்குத் தெரிஞ்ச மத்தவங்களுக்கும் எங்க ஹோமைப் பத்திச் சொல்லுங்க.’
அதோடு அந்த அத்தியாயம் முடிந்தது. அரை மணி நேர திடீர் சமூக சேவை(?)யில் திருப்தியாகி எங்களது சுயநல வாழ்வுகளுக்குத் திரும்பினோம். அதோடு அந்த ‘ஆத்ரேயா ஹோம்’ பற்றி மறந்தே போனோம்.
சில வாரங்கள் கழித்து, அலுவலகத்தில் சற்றும் எதிர்பாராத ஒரு போனஸ் வந்தது. அதற்கு ஒரு நல்ல சோஃபா வாங்குவதாக முடிவெடுத்தோம்.
’பழைய சோஃபாவை என்ன செய்யறது?’
‘எக்சேஞ்ச்ல அவனே எடுத்துப்பான், விசாரிப்போம்!’
விசாரித்தோம். பழைய சோஃபாவுக்கு 800 ரூபாய் தருவதாகச் சொன்னார்கள். கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் கொடுத்து வாங்கிய சோஃபா, அதுவும் இன்னும் நன்றாகவே இருக்கிற ஒன்றை இப்படி அடிமாட்டு விலைக்குத் தள்ளிவிட மனம் இல்லை.
தவிர, அந்த 800 ரூபாயை வைத்து நாங்கள் கோட்டை எதுவும் கட்டிவிடப்போவதில்லை, அதற்குப் பதிலாக, இந்தப் பழைய சோஃபாவைத் தேவை உள்ள யாருக்காவது இலவசமாகக் கொடுத்துவிட்டால் என்ன? அவர்களுக்கும் சந்தோஷம், எங்களுக்கும் சந்தோஷம்.
முதலில் எங்கள் அபார்ட்மென்டில் தூய்மைப் பணி செய்கிற பெண்ணை விசாரித்தோம், பின்னர் செக்யூரிட்டி தாத்தா, பக்கத்து ஃபேக்டரியின் காவல்காரர்… இவர்கள் யாருக்கும் சோஃபா தேவைப்படவில்லை என்று புரிந்தது.
அடுத்து, எங்கள் அலுவலகம் மூலமாகவும் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்னபிற சோஷியல் நெட்வொர்க் நண்பர்கள் வாயிலாகவும் சில சமூக சேவை நிறுவனங்கள், அரசுப் பள்ளிகள், முதியோர் இல்லங்களைத் தொடர்பு கொண்டோம். ‘உங்களுக்கு சோஃபா தேவைப்பட்டா வந்து எடுத்துக்கோங்க’ என்றோம்.
இவர்களில் சிலர், ‘உடனே வண்டி அனுப்பறோம் சார்’ என்றார்கள். வேறு சிலர் ‘யோசிச்சுச் சொல்றோம்’ என்றார்கள். யாரும் மறுபடி அழைக்கவில்லை. ஆடம்பரப் பொருள்களை இலவசமாகக் கொடுப்பதுகூடச் சிரமம்தான் என்று புரிந்தது.
அப்போதுதான் எனக்கு அந்த ‘ஆத்ரேயா ஹோம்’ ஞாபகம் வந்தது. ‘பேசாம அவங்களைக் கூப்பிட்டா என்ன? கண்டேன் கண்டேன்னு ஓடி வந்து எடுத்துகிட்டுப்போவாங்க!’
இதைச் சொன்னதும் என் மனைவியின் முகம் மாறியது. ‘அந்தத் திருட்டுப் பசங்களைப் பத்திப் பேசாதீங்க’ என்றார் சட்டென்று.
‘ஏன்? என்னாச்சு?’
‘அன்னிக்கு நம்ம தெருவில இருக்கற எல்லா வீட்டுலயும் கெஞ்சிக் கூத்தாடி ஏதேதோ பொருள்களை அள்ளிகிட்டுப் போனாங்கதானே?’
‘ஆமா, அதுக்கென்ன?’
’அதுல பெரியவங்களுக்கான ட்ரெஸ், நல்லா இருக்கற பாத்திரம், மளிகை சாமான், இப்படிச் சில விஷயங்களைமட்டும் வெச்சுகிட்டு பாக்கி எல்லாத்தையும் தெரு முனைக் குப்பைத்தொட்டியில வீசிட்டுப் போயிருக்காங்க.’
ஏனோ, இதைக் கேட்டதும் எனக்கு அவர்கள்மேல் கோபம் வரவில்லை. பெருநகரச் சூழலில் இதுபோல் ஒருவர் ‘ஏதாவது கொடுங்க’ என்று கேட்கும்போது, மக்கள் மத்தியில் சேவை மனப்பான்மையைவிட, கொஞ்சம் பொருள்களைக் கழித்துக்கட்டி இடம் சேமிக்கும் எண்ணம்தான் அதிகமாக இருக்கும். அதன்படி நாங்கள் எங்களுக்குத் தேவையில்லாத எல்லாவற்றையும் மூட்டை கட்டி அவர்களிடம் தள்ளிவிட்டிருப்போம். அவர்களும் முகத்துக்கு எதிராக எதையும் சொல்ல விரும்பாமல் (இலவச மாட்டுக்குப் பல்லைப் பிடித்தல் எட்ஸட்ரா பழமொழிகள் கன்னடத்திலும் இருக்குமல்லவா?) வாங்கிக்கொண்டிருப்பார்கள், அதில் எத்தனை விஷயங்கள் ஒருவருக்கும் பயன்படாத குப்பையோ, யாருக்குத் தெரியும்?
ஆக, நாங்கள் தள்ளிவிட்ட பொருள்களில் அவர்கள் தங்களுக்கு எது பயன்படுமோ அதைமட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை வீசி எறிந்தது பெரிய தவறாக எனக்குப் படவில்லை. என்ன, அதை எங்கள் கண்ணில் படாத இன்னோர் இடத்தில் வீசியிருக்கலாம், அவ்வளவுதான்.
ஆனால் ஏனோ, என் மனைவி இந்த விஷயத்தில் அவர்கள்மீது துளி இரக்கம் காட்டவோ, Benefit of doubtஐ வழங்கவோ தயாராக இல்லை. ’நாங்கள் தந்ததில் அவர்கள் பிரித்து எடுத்துச் சென்ற பொருள்களையெல்லாம் புதுப்பித்து விற்பனை செய்து காசு பண்ணியிருப்பார்கள், அப்படி விற்கமுடியாத விஷயங்களைத் தூக்கி எறிந்துவிட்டார்கள்’ என்று உறுதியாக அடித்துச்சொன்னார்.
‘உனக்கு அவ்ளோ சந்தேகம்ன்னா அந்த ஹோமுக்கு ஒருவாட்டி நேர்ல போய்ப் பார்த்துட்டு வருவோம்!’
‘எதுக்கு? நமக்கு வேற பொழப்பில்லையா?’
‘இப்ப இந்த சோஃபாவை என்ன செய்ய?’
‘எண்ணூறு ரூபா காசு சும்மா வருதா? எக்சேஞ்ச்லயே கொடுத்துடலாம், இல்லாட்டி நாமே அதை ஒரு குப்பைத்தொட்டியில வீசிடலாம், அந்தத் திருடனுக்கு நான் தரமாட்டேன்!’
உண்மையான சேவை மனப்பான்மை இல்லாமல் நம்மிடம் மிஞ்சியதைத் தரும்போதுகூட, நம் கை உயர்ந்திருக்கவேண்டும், அடுத்த கை தாழ்ந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்கள் பக்கத்தில் இருக்கக்கூடிய நியாயங்களைக் கருத மறுக்கிறோம். வேறென்ன சொல்ல?
மீண்டும் சோஃபாக் கடைக்காரரை அணுகினோம். ‘புது சோஃபா டெலிவரி தரும்போது பழைய சோஃபாவை நீங்களே எடுத்துக்குவீங்களா?’ என்றோம்.
‘அது முடியாது சார்’ என்றார் அவர், ‘நீங்க சோஃபாவை இங்கே கொண்டுவரணும், அதைப் பார்த்துட்டுதான் எக்சேஞ்ச் பில் போடமுடியும்.’
போச்சுடா. இந்த சோஃபாவை இங்கிருந்து அவ்வளவு தூரம் எடுத்துச் செல்லக் குறைந்தது ஐநூறு ரூபாயாவது செலவாகும். தேவையா?
மறுபடி மனைவியாரிடம் விண்ணப்பம் போட்டேன். ‘நமக்கு வேற வழியில்லை, பேசாம அந்த ஆத்ரேயா ஹோமுக்கே சோஃபாவைக் கொடுத்துடுவோம், நமக்கு இதை நன்கொடையாக் கொடுத்த திருப்தி, அப்புறம் அவன் அதை என்னவோ செஞ்சுட்டுப் போறான். என்ன சொல்றே?’
அவருக்கும் ஐநூறு ரூபாய் வெட்டியாகச் செலவழிக்க மனம் இல்லை. ‘உன் இஷ்டம்’ என்று ஒப்புக்கொண்டார்.
எங்கோ ஒளிந்திருந்த ஆத்ரேயா ஹோம் விசிட்டிங் கார்டைத் தேடிப் பிடித்தேன். அழைத்தேன். ஒரு மணி நேரத்துக்குள் நேரில் வந்து சோஃபாவை எடுத்துக்கொண்டு போனார்கள். அந்த இடத்தில் புது சோஃபா வந்து சேர்ந்தது.
அடுத்தமுறை அந்தத் தெரு முனைக் குப்பைத்தொட்டியைக் கடக்கும்போதுதான் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று கண்ணை இறுக மூடிக்கொண்டு நடையைக் கட்டினேன்.
***
என். சொக்கன் …
14 04 2012
(’வடக்கு வாசல்’ மே 2012 இதழில் வெளியானது)
14 Responses to "ஈதல்"

2 | Snapjudge
June 6, 2012 at 11:07 pm
You shd write more like these. Looks like fiction; feels like truth; impacts like literature.


4 | Manionion
June 7, 2012 at 12:52 am
அப்ப அவிங்க உண்மைலேயே நல்லவிங்க தானா?
நீங்க தான் கொடுத்து சஸ்பென்சு ஏத்தீடீங்கள்ளா?


5 | Manionion
June 7, 2012 at 1:04 am
அப்ப அவிங்க உண்மைலேயே நல்லவிங்க தானா?
நீங்க தான் Build up கொடுத்து சஸ்பென்சு ஏத்தீடீங்கள்ளா?


6 | SREE GURUPARAN
June 7, 2012 at 5:38 am
அருமையா சொல்லிருக்கீங்க. ரசித்து படிக்க முடிந்தது. இதை வகை படுத்தும் போது “(auto)biography” பதிலா “(auto)fiction” -ன்னு வகைபடுத்திருக்கலாம். 😀


7 | prabukrishna
June 7, 2012 at 8:02 am
எங்கள் ஏரியாவிலும் சிலர் அடிக்கடி வந்து கேட்பார்கள். எதற்கும் பயன்பாடாத துணியை கொண்டு போய் அவர்கள் மட்டும் என்ன செய்வார்கள், அதனால் தான் பயன்படும் துணிகளை மட்டும் எடுத்து சென்றிருக்கிறார்கள். முதல் விசயத்தில் அவர்கள் செய்தது சரியே.


11 | GiRa ஜிரா
June 7, 2012 at 3:45 pm
வீட்ல நடந்த ஒரு நிகழ்ச்சிய எவ்வளவு அழகா எழுதியிருக்கீங்க. எழுத்தாளர் எழுத்தாளர்தான். 🙂
குடுக்கனும்னு நெனைக்கிற எல்லாருக்கும் வர்ர ஐயம்தான் இது. எனக்கும் இருந்தது. அதுனாலயே யாருக்கும் எதையும் குடுக்குற பழக்கம் இல்லாம இருந்தது.
ஒரு வாட்டி வடநாட்டுல எங்கயோ நிலநடுக்கம் வந்து அதுக்கு நிறைய பேர் உதவி கேட்டாங்க. பெங்களூர் அலுவலகத்துல ஒரு பெட்டி வெச்சிருந்தாங்க. அதுல பழைய துணிகள் நெறைய பேர் கொண்டாந்து போட்டாங்க. நான் என்ன போடுறதுன்னு யோசிச்சு ஆஷீர்வாத் கோதுமை மாவு பாக்கெட்டுகள் ஒரு பத்து கிலோ வாங்கீட்டுப் போய் போட்டேன்.
படபடன்னு எல்லாரும் கேள்விகள்… ஏன் நல்ல பொருளை கொண்டு வந்து போடுற? இது அவங்களுக்குப் போய்ச் சேரும்னு நம்புறியா? வழியிலேயே யாரும் அடிக்க மாட்டாங்கன்னு நெனைக்கிறியா?
இப்படிதான் கேள்விகள் வந்தது. அப்ப யோசிச்சு ஒரு பதில் சொன்னேன்.
கொடுக்குறது என் வேலை. அத சரியான ஆளுக்குக் கொண்டு போய்ச் சேக்குறது ஆண்டவனோட வேலை.
நான் போட்ட பத்துகிலோ மாவுல நூறுகிராம் மாவு கடைசியா அந்த மக்களுக்குப் போகலாம். பத்துகிலோ போட்டதுக்கே நூறுகிராம்தான் போகும்னா… ஒன்னுமே போடலைன்னா அவங்களுக்கு என்ன கிடைக்கும்.
இந்த பதில் எனக்குள்ளயே ஒரு நம்பிக்கையை உண்டாக்குச்சு.
அந்த நம்பிக்கை பின்னால என்னைத் தயக்கமில்லாம உதவுவதற்கு வழி செய்தது. அதிலும் குறிப்பா கடந்த இரண்டு மாதங்களா, அடுத்தவங்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவுறேன். செய்றதைச் சொல்லக் கூடாதுன்னு சொல்வாங்க. நான் இங்க சொல்றதுக்குக் காரணம் இதப் பாத்தாவது இன்னும் யாராவது யாருக்காச்சும் உதவுவாங்களோன்னு நம்பித்தான். 🙂


12 | rathnavelnatarajan
June 9, 2012 at 7:04 am
அருமை சார்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.


13 | கிரி ராமசுப்ரமணியன் (@rsGiri)
June 10, 2012 at 1:48 am
க்ளாஸ்!
பாலாஜி சொன்ன ”ஸேம் டயலாக்”
Looks like fiction; feels like truth; impacts like literature.


14 | கிரி ராமசுப்ரமணியன் (@rsGiri)
June 10, 2012 at 1:49 am
அண்ட் ஒன் மோர்….
இந்த நிகழ்வும் ரெண்டு நாள் முன்ன எங்க வீட்டு வாசல்ல நடந்தது.
வண்ணம் போன சில துணிமணிகளைத் தந்து அனுப்பினேன் :))))

1 | Snapjudge
June 6, 2012 at 11:07 pm
Reblogged this on Tamil Archives.