Archive for June 7th, 2012
வண்ணம்
Posted June 7, 2012
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Poetry | Relax | SPB | Tamil | Uncategorized | Vairamuthu
- 13 Comments
நேற்று முன் தினம் இரவு. பெங்களூரு பிரதான ரயில் நிலையத்தையும் பேருந்து நிலையங்களையும் இணைக்கும் அழகான பாலத்தில் நடந்துகொண்டிருந்தேன். மேலே மேகங்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட முழுநிலவு.
அந்த நேரம் பார்த்து, என்னுடைய ஃபோனிலும் பொருத்தமான ஒரு பாட்டு ஒலித்தது. வைரமுத்துவின் வரிகளுக்கு எஸ்.பி.பி. இசையமைத்துப் பாடிய ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே, வானம் விட்டு வாராயோ!’
பாட்டை ரசித்தபடி கீழிறங்கி பஸ் பிடித்தேன். திடீரென்று ஒரு சந்தேகம், ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே’ என்றால் என்ன அர்த்தம்?
Of course, வெள்ளையும் ஒரு வண்ணம்தான். ஆனால் அதையா வெறுமனே ‘வண்ணம்’ என்று குறிப்பிட்டுப் பாடியிருப்பார் கவிஞர்? எங்கேயோ உதைத்தது.
தமிழ் சினிமாப் பாடல்களில் வேறு எதற்கெல்லாம் ‘வண்ண’ அடைமொழி தரப்பட்டுள்ளது என்று யோசித்தேன். சட்டென்று ஞாபகம் வந்தது ‘வண்ணக் குயில்’.
இங்கே வண்ணம் என்பது என்ன? கருப்பு நிறமா?
கருப்பும் ரசனைக்குரிய நிறம்தான். மறுப்பதற்கில்லை. ஆனால் ‘வண்ணக் குயில்’ என்று சொல்கிறோம், அதே கருப்பு நிறத்தைக் கொண்ட இன்னொரு பறவையை ‘வண்ணக் காக்கை’ என்று சொல்வதில்லை, ஏன்?
இன்னொரு சினிமாப் பாட்டில் ‘வண்ணத் தமிழ்ப் பெண் ஒருத்தி என் அருகே வந்தாள்’ என்று வருகிறது. இங்கே ‘வண்ணம்’ எதற்கான முன்னொட்டு?
வண்ணப் பெண்? கலர்ஃபுல் கன்னி?
அல்லது வண்ணத் தமிழ்? மொழிக்கு ஏது நிறம்? செம்மொழி என்பதால் சிவப்பு நிறமா?
இப்படிக் கிறுக்குப் பிடித்தாற்போல் ஏதேதோ யோசித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். இணையத்தில் புகுந்து ஆன்லைன் அகராதிகளில் வண்ணத்துக்கு அர்த்தம் தேட ஆரம்பித்தேன்.
வர்ணம் என்ற வடமொழிச் சொல்லின் அர்த்தம், நிறம். அதிலிருந்துதான் தமிழின் ‘வண்ணம்’ வந்திருக்கவேண்டும் என்று பல இணைய தளங்கள் குறிப்பிட்டன.
ஆனால் அதற்காக, தமிழில் வண்ணமே கிடையாது என்று முடிவுகட்டிவிடவேண்டாம், இங்கே வேறு பல ‘வண்ண’ங்கள் வெவ்வேறு பொருளில் உள்ளன. அவற்றுள் ஒன்று, வண்ணம் = அழகு.
சோப்பு விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள். ‘உங்கள் மேனி வண்ணத்தைப் பாதுகாக்கும்…’, இங்கே வண்ணம் என்பதை நிறமாகக் கொள்வதைவிட, ஒட்டுமொத்த அழகாகப் புரிந்துகொண்டால் இன்னும் பொருத்தமாக இருக்கிறது.
தமிழில் நாம் சகஜமாகப் பயன்படுத்தும் ‘வண்ணான்’ என்ற சொல்கூட, வண்ணத்துக்கு ‘அழகு’ என்ற பொருள் கொண்டு வந்தது என்கிறார்கள். துணிகளில் இருக்கும் அழுக்கை நீக்கி அழகுபடுத்தித் தருபவர் என்கிற அர்த்தமாகக் கொள்ளலாம்.
அடுத்து, ‘வண்ணம்’ என்பது வெறும் உடல் அழகு அல்ல, செயல் அழகையும் குறிக்கிறது.
கம்ப ராமாயணத்தில் ஒரு பாட்டு. கல்லாக இருந்த அகலிகை ராமரின் பாதம் பட்டதும் உயிர் பெறுகிறாள். அப்போது விஸ்வாமித்திரர் ராமனைப் பார்த்துச் சொல்கிறார்:
இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன்
கைவண்ணம் அங்கு கண்டேன், கால்வண்ணம் இங்கு கண்டேன்
இந்தப் பாட்டில் எத்தனை வண்ணம்! ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பொருள்:
இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் = இப்படி நடந்தபடியால்
இனி இந்த உலகுக்கெல்லாம் = இனிமேல் இந்த உலகம் முழுமைக்கும்
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவது உண்டோ = நல்லது அல்லாமல் வேறு துயரங்கள் வந்துவிடுமோ?
மை வண்ணத்து அரக்கி போரில் = மை போன்ற கரிய நிறம் கொண்ட அரக்கி தாடகையுடன் போர் செய்தபோது
மழை வண்ணத்து அண்ணலே = கார்மேகத்தின் நிறம் கொண்ட ராமனே
உன் கைவண்ணம் அங்கு கண்டேன் = உன் கையின் அழகை (செயலை) அங்கே பார்த்தேன்
கால்வண்ணம் இங்கு கண்டேன் = உன் காலின் அழகை (செயலை) இங்கே பார்த்தேன்
இங்கே கம்பர் வண்ணத்துக்கு நிறம் என்ற பொருளையும் பயன்படுத்துகிறார், அழகு / செயல்திறன் என்கிற பொருளையும் பயன்படுத்துகிறார்.
இந்த வரிகளைக் கண்ணதாசன் தன் திரைப்பாடல் ஒன்றில் அழகாகப் பயன்படுத்தியிருப்பார்:
கண் வண்ணம் அங்கே கண்டேன்,
கை வண்ணம் இங்கே கண்டேன்,
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
இங்கே முதல் இரண்டு வண்ணமும், அழகைக் குறிக்கிறது, மூன்றாவதாக வரும் ‘பெண் வண்ணம்’ என்பது கதாநாயகியின் நிறத்தைக் குறிக்கிறது, பசலை நோய் வந்து அவளது உடலின் நிறம் மாறிவிடுகிறதாம்.
இந்த மூன்றாவது ‘வண்ண’த்துக்கும் அழகு என்றே பொருள் கொள்ளலாம், ‘உன்னை நினைச்சுக் காதல் நோய் வந்ததால, என் அழகே குறைஞ்சுபோச்சுய்யா’
கிட்டத்தட்ட இதேமாதிரி பொருள் கொண்ட இன்னொரு பாட்டு, ‘ஐந்திணை எழுபது’ என்ற நூலில் வருகிறது. மூவாதியார் என்பவர் எழுதிய வெண்பா அது:
தெண் நீர் இருங்கழி வேண்டும் இரை மாந்தி
பெண்ணைமேல் சேக்கும் வணர் வாய்ப் புணர் அன்றில்!
தண்ணம் துறைவற்கு உரையாய் ‘மடமொழி
வண்ணம் தா’ என்று தொடுத்து
இதன் அர்த்தம்: ‘கடற்கரை உப்பங்கழியில் வேண்டிய சாப்பாட்டை உண்டு பக்கத்தில் உள்ள பனைமரத்தின்மீது தங்கும் அன்றில் பறவையே, இந்தப் பெண்ணின் காதலனைத் தேடிப் போ, அவனிடம் ஒரே ஒரு விஷயத்தைமட்டும் சொல்லி வா.’
என்ன விஷயம்?
‘இவளைக் காதலித்தபோது, இவளிடம் இருந்த அழகையெல்லாம் திருடிக்கொண்டு போய்விட்டாயே, அதைத் திருப்பிக் கொடுத்துவிடு’ என்று அவனிடம் தூது சொல்லிவிட்டுத் திரும்பி வா!’
இங்கேயும், ’வண்ணம் தா’ என்ற வாக்கியத்துக்கு இரண்டு பொருள் கொள்ளலாம்:
- உன்னைக் காதலிச்சதால, இப்ப உன்னைப் பிரிஞ்சு வாடறதால இவ அழகு கெட்டுப்போச்சு, அதைத் திருப்பிக் கொடு
- உன்னைக் காதலிச்சதால, இப்ப உன்னைப் பிரிஞ்சதால இவ உடம்புல பசலை வந்து, இயற்கை நிறம் கெட்டுப்போச்சு, அதைத் திருப்பிக் கொடு
இதில் நமக்குப் பிடித்த அர்த்தத்தை எடுத்துக்கொள்ளலாம். தப்பில்லை.
ஆனால் சில நேரங்களில் இந்த ‘வண்ணம்’ நாம் எதிர்பார்க்காத விபரீதமான அர்த்தத்தையும் தந்துவிடக்கூடும். உதாரணமாக, ஆசாரக்கோவையில் ஒரு பாட்டு, ‘வண்ண மகளிர்’ என்று தொடங்குகிறது.
‘வண்ண மகளிர்’ என்றால்? பல நிறங்களில் ஆடை அணிந்தவர்களா? அழகான பெண்களா?
ம்ஹூம், இரண்டும் இல்லை. ’தங்களைத் தாங்களே அழகுபடுத்திக்கொள்ளும் விலைமாதர்’ என்று உரை ஆசிரியர்கள் சொல்கிறார்கள்
இதுபற்றி நண்பர் பெனாத்தல் சுரேஷிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘அப்போ ‘வண்ண வண்ணப் பூக்கள்’ன்னா என்ன அர்த்தம்? பல நிறங்களைக் கொண்ட அழகான பூக்களா?’ என்றார்.
‘இருக்கலாம்’ என்றேன்.
அப்புறம் யோசித்தபோது, ‘வண்ண வண்ண’ என்று அடுக்குத்தொடராக ஒரு வாக்கியத்தைப் பயன்படுத்துவது ‘பல வண்ணம்’ (அல்லது ‘நிறைய அழகு’) என்கிற அர்த்தத்தில்தான் என்று தோன்றியது.
இதற்கு இன்னோர் உதாரணம்: ஊர் ஊராத் திரிதல் = பல ஊர்களில் திரிதல், ஆசை ஆசையா சமைச்சேன் = மிகுந்த ஆசையுடன் சமைத்தேன்.
அப்படிப் பார்க்கும்போது, ‘வண்ண வண்ணப் பூக்கள்’ = பல வண்ணப் பூக்கள் அல்லது மிக அழகான பூக்கள், இல்லையா?
இப்போ என்னான்றே நீ? வண்ணம்ன்னா நிறமா, அழகா?
அதற்கும் பதில் ஒரு சினிமாப் பாட்டில் இருக்கிறது:
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
***
என். சொக்கன் …
07 06 2012