Archive for June 11th, 2012
‘புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 1
Posted June 11, 2012
on:- In: Blogs | Book Marks | Books | E-zines | Media | Reading | Serial | Uncategorized
- 3 Comments
1
‘புத்தகம்’ என்ற சொல் எப்படி வந்தது?
அந்தக் காலத்தில் காகிதம் கிடையாது. நூல்களைப் பனை ஓலையில்தான் எழுதினார்கள்.
பனையைக் குறிக்கும் தமிழ்ச் சொல் ‘போந்து’, பனை ஓலையைக் குறிப்பது ‘போந்தை’. இந்தச் சொற்கள் பின்னர் ‘போத்து’ என மாறின, ‘பொத்து’ எனக் குறுகின, அதில் எழுதப்பட்ட விஷயங்களைப் ‘பொத்தகம்’ என்று அழைத்தார்கள்.
தமிழில் பல சொற்கள் ஒகரம் மாறி உகரம் ஆவது வழக்கம், அதன்படி, பின்னர் ‘பொத்தகம்’ என்பது ‘புத்தகம்’ என்று மாறிவிட்டது.
ஆக, ‘பொத்தகம்’ என்பதுதான் சரியான பழந்தமிழ்ச் சொல். ‘புத்தகம்’ என்பது இப்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் சொல்.
(ஆதாரம்: இரா. இளங்குமரனார் எழுதிய ‘பிழை இல்லாமல் எழுதுவோம்’ நூல்)
2
‘இதய ஒலி’
டி. கே. சி. என்றும் ‘ரசிகமணி’ என்றும் செல்லமாக அழைக்கப்பட்ட டி. கே. சிதம்பரநாத முதலியார் எழுதிய புத்தகம் இது. பல பழைய தமிழ் இலக்கியங்களைச் சுவையாக அறிமுகப்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு.
பல வருடங்களுக்குமுன்னால், இந்தப் புத்தகம் வெளியான நேரம். ஓர் இளைஞன் அதைப் படிக்க விரும்பினான். ஆனால் அதைக் காசு கொடுத்து வாங்கும் வசதி இல்லை.
பின்னர் ஒருநாள், எதேச்சையாக ஒரு நண்பரின் வீட்டில் அந்தப் புத்தகத்தைப் பார்த்தான், புரட்டினான், படித்தான், சொக்கிப்போனான், இந்தப் புத்தகத்தைப் படித்தே தீரணும் என்று அதை ரகசியமாகச் ‘சுட்டுக்கொண்டு’ ஓடிவிட்டான்.
பல வருடங்கள் கழித்து, அந்த இளைஞர் ஒரு சிறந்த புத்தகப் பதிப்பாளர் ஆனார். டி. கே. சி. யின் நெருங்கிய நண்பராகவும் ஆனார், தான் திருடிச் சென்ற அதே புத்தகத்தை வைத்து அச்சுக் கோர்த்து, அந்த ‘இதய ஒலி’யின் இரண்டாவது பதிப்பை வெளியிட்டார்.
அவர் பெயர், சின்ன அண்ணாமலை. விடுதலைப் போராட்ட வீரர், நல்ல பேச்சாளர், எழுத்தாளர், ‘தமிழ்ப்பண்ணை’ என்ற புத்தக வெளியீட்டு நிறுவனத்தை நடத்தியவர்.
(ஆதாரம் : சின்ன அண்ணாமலை எழுதிய ‘சொன்னால் நம்பமாட்டீர்கள்’ நூல்)
3
புகழ் பெற்ற கிரேக்கப் பேச்சாளர் டெமாஸ்தனிஸ். எந்தத் தகவலையும் உரிய உணர்ச்சிகளோடு சொல்வதில் கில்லாடி. சிறந்த வழக்கறிஞரும்கூட.
ஒருவிதத்தில், டெமாஸ்தனிஸ் ஓர் எழுத்தாளராகவும் இயங்கியிருக்கிறார். இவருடைய மேடைப் பேச்சுகள், நீதிமன்ற வாதங்களைப் பார்த்துக் கிறங்கிப்போன பலர் தங்களுடைய சொற்பொழிவுகளுக்கான உரையை எழுதித் தருமாறு இவரைக் கேட்க ஆரம்பித்தார்கள். இவரும் ஒப்புக்கொண்டார், அதன்மூலம் நன்றாகச் சம்பாதித்தார்.
பலருக்குத் தெரியாத விஷயம், பின்னாள்களில் மேடையில் பிரமாதமாக முழங்கிப் பெயர் வாங்கிய டெமாஸ்தனிஸுக்குச் சின்ன வயதில் திக்குவாய். ஒரு வார்த்தைகூட ஒழுங்காகப் பேசமுடியாமல் ஊராரின் கேலியைச் சம்பாதித்துக்கொண்டவர் அவர்.
அப்போது, ஸாடிரஸ் என்ற புகழ் பெற்ற நடிகரைச் சந்தித்தார் டெமாஸ்தனிஸ். அவர் இவருடைய பிரச்னையைக் கேட்டுவிட்டுப் பேச்சுக்கலைபற்றியும் உணர்ச்சியுடன் பேசவேண்டியதன் அவசியம்பற்றியும் ஏராளமான டிப்ஸ்களை அள்ளி வீசினார். ‘முக்கியமா, வாய்ல கூழாங்கல்லை வெச்சுகிட்டுக் கண்ணாடி முன்னாடி நின்னு பேசிப் பழகு’ என்றார்.
ஸாடிரஸின் அறிவுரைப்படி, டெமாஸ்தனிஸ் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். தன் வீட்டிலேயே ஒரு பாதாள அறை அமைத்துக்கொண்டார். அதற்குள் புகுந்த கதவைச் சாத்திக்கொண்டு மணிக்கணக்காகப் பேசத் தொடங்கினார்.
எப்போதாவது வெளியே போகிற ஆர்வம் வந்தால்? அது கூடாது என்பதற்காக, தன் தலையின் ஒரு பகுதியை மொட்டை அடித்துக்கொண்டுவிட்டார் டெமாஸ்தனிஸ். வெளியே போனால் கேலி செய்வார்கள் என்கிற பயத்தில் எந்நேரமும் பயிற்சி, பயிற்சி, பயிற்சி.
சில மாதங்கள் கழித்து அவர் அந்தப் பாதாள அறையிலிருந்து வெளியே வந்தபோது, திக்குவாய்ப் பிரச்னை காணாமல் போயிருந்தது. உலகை வெல்லும் ஒரு பேச்சாளர் உருவாகியிருந்தார்.
(ஆதாரம்: மதன் எழுதிய ’கிளியோபாட்ரா, மற்றும் சிலர்’ நூல்)
4
க்ளாசிக் தமிழ்ப் படங்களில் ஒன்றான ‘தில்லானா மோகனாம்பாள்’, பத்திரிகையில் தொடர்கதையாக எழுதப்பட்ட நாவல். அதன் சுருங்கிய வடிவத்துக்குதான் சிவாஜியும் பத்மினியும் பாலையாவும் நாகேஷும் இன்னபிறரும் திரையில் உயிர் கொடுத்தார்கள்.
ஆனால் இவர்கள் பிரபலமான அளவுக்குத் ‘தில்லானா மோகனாம்பா’ளைப் படைத்த எழுத்தாளர் பிரபலமாகவில்லை. அவர் பெயர் ‘கலைமணி’, நிஜப் பெயர் ‘கொத்தமங்கலம் சுப்பு’.
பலருக்குத் தெரியாத விஷயம், கொத்தமங்கலம் சுப்பு ஓர் ஆல் ரவுண்டர். மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார், வில்லுப்பாட்டுக் கச்சேரிகளை நடத்தியிருக்கிறார், பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார், சினிமாக் கதை, வசனம், பாடல்கள் என்று சகலத்திலும் பங்காற்றியிருக்கிறார், பின்னர் விகடன் ஆசிரியர் குழுவிலும், ‘ஜெமினி’ கதை இலாகாவிலும் முக்கியப் பொறுப்பு வகித்தார், நான்கு படங்களை இயக்கினார்.
‘தில்லானா மோகனாம்பாள்’போலவே இன்னொரு தமிழ் சினிமா க்ளாசிக், ‘ஔவையார்’. அந்தப் படத்தை இயக்கியது கொத்தமங்கலம் சுப்புதான்!
5
’திரு வி. க.’ என்று எப்போதும் கௌரவ அடைமொழியோடே மரியாதையுடன் அழைக்கப்பட்ட திரு. வி. கலியாண சுந்தரனார், சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், அரசியல், சமுதாயம், ஆன்மிகம் என்று பலதுறைகளில் முக்கியப் பணியாற்றியவர்.
ஒருமுறை திரு. வி. க.வைச் சந்திக்கப் பெரியார் வந்திருந்தார். அவர் பெரிய நாத்திகர் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்.
ஆனால் திரு. வி. க. அதுபற்றிக் கவலைப்படவில்லை. நேராக அவரிடம் சென்று விபூதிப் பிரசாதத்தை நீட்டினார். சுற்றியிருந்தவர்கள் திகைத்துப்போனார்கள்.
பெரியார் ஒரு கணம்கூட யோசிக்கவில்லை. சட்டென்று விபூதியை எடுத்து இட்டுக்கொண்டார். எதுவும் நடக்காததுபோல் அவருடன் உரையாட ஆரம்பித்தார்.
அங்கிருந்து அவர் புறப்பட்டபோது, பெரியாரின் தொண்டர்கள் அவரை நெருங்கி, ‘அந்த விபூதிய அழிச்சுடுங்க’ என்றார்கள்.
‘ம்ஹூம், நானா அழிக்கக்கூடாது, அதுவா அழிஞ்சாப் பரவாயில்லை’ என்றார் பெரியார். ‘அதுதான் திரு. வி. க.வுக்கு நான் காட்டும் மரியாதை!’
(ஆதாரம்: பிரபுசங்கர் எழுதிய ‘கரும்புச் சாறு’ நூல்)
6
இன்றைக்கும், உலக அளவில் அதிகப் புகழ் பெற்ற இந்தியக் கதை என்றால், ’தி ஜங்கிள் புக்’தான். ருட்யார்ட் கிப்ளிங்கின் இந்தக் கதை சிறுவர்களுக்காக எழுதப்பட்டிருந்தாலும்கூட, பெரியவர்கள்தான் இதை அதிகம் வாசிக்கிறார்கள்.
ருட்யார்ட் கிப்ளிங் இந்தியாவில் பிறந்தவர். அவரை வளர்த்த ’ஆயா’க்களிடம் ஹிந்தி பேசக் கற்றுக்கொண்டார்.
இந்த ‘ஆயா’க்கள்தான் இந்தியக் காடுகளைப் பற்றி அவருக்குக் கதைகதையாகச் சொன்னார்கள். காட்டு வர்ணனையும், மிருகங்களைப் பற்றிய அறிமுகமும், அவை வளரும் விதம்பற்றிய தகவல்களும், அவற்றைப் பின்னணியாக வைத்து உருவாகியிருக்கும் விதவிதமான கற்பனைகளும் அவருக்குச் சோற்றுடன் சேர்ந்து ஊட்டப்பட்டன.
பின்னர், கிப்ளிங் அலஹாபாத்தில் பத்திரிகையாளராகப் பணியாற்றினார். அப்போது இந்தச் சிறுவயது நினைவுகளையும் தன்னுடைய கற்பனையையும் சேர்த்துக் காட்டில் வளரும் ஒரு சிறுவனின் கதையாக ‘தி ஜங்கிள் புக்’கை எழுதினார்.
1894:95ம் ஆண்டுவாக்கில் வெளிவந்த இந்த நாவல் உடனடி ஹிட். அப்போது பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த இந்தியாவைப்பற்றிப் பல ’வெள்ளைக்காரர்’களுக்கு முதல் அறிமுகம், இந்தக் கற்பனைக் கதைதான். பின்னர் பல வருடங்கள் கழித்து இந்தக் கதை கார்ட்டூன் சித்திரமாகவும் வெளியாகி நிரந்தரப் புகழ் பெற்றது.
கிட்டத்தட்ட ஒன்றே கால் நூற்றாண்டுக்குப்பிறகு இப்போதும் ‘தி ஜங்கிள் புக்’ தொடர்ந்து வாசிக்கப்படுகிறது. பக்கத்துப் புத்தகக்கடையிலோ, கூகுள் செய்தால் இலவசமாகவோ கிடைக்கும்.
7
அமெரிக்காவில் நடைபெற்ற விழா ஒன்று. சிறப்பு விருந்தினர், எழுத்தாளர் த. ஜெயகாந்தன்.
விழாவின் முடிவில் ஜெயகாந்தனுடன் கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. ஒருவர் இந்தப் புராதனக் கேள்வியைக் கேட்டார், ‘இன்றைய இளைய தலைமுறைக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?’
ஜெயகாந்தன் சட்டென்று பதில் சொன்னார், ‘ஒன்றுமில்லை!’
‘ஏன்? உங்களைப் போன்ற பெரிய எழுத்தாளர் எங்களுக்குச் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்குமே!’
‘உண்மைதான். ஆனால், அந்த வயதில் நான் யாருடைய அறிவுரையையும் கேட்டதில்லையே!’
(ஆதாரம்: டாக்டர் வைத்தியலிங்கம் கங்காதர தேவ் பேட்டி : ‘தென்றல்’ மாத இதழ், ஜனவரி 2010)
(தொடரும்)
நன்றி : https://www.facebook.com/600024books
***
என். சொக்கன் …
11 06 2012