மனம் போன போக்கில்

வீடு கண்டானடி மும்பையிலே

Posted on: June 15, 2012

சென்ற வாரத்தில் ஒருநாள், பணி நிமித்தம் மும்பை சென்றிருந்தோம்.

சம்மரில் மும்பை கொதிக்கிறது. என் பாக்கெட்டிலிருந்த கர்ச்சீப் அரை மணி நேரத்துக்குள் வியர்வையில் நனைந்து சொதசொதவென்று ஆகிவிட்டது. அதற்கு ஏன் கைக்’குட்டை’ என்று பெயர் வைத்தார்கள் என்று இப்போதுதான் புரிந்துகொண்டேன்!

ஆக, ஒருவேளை நீங்கள் இந்த நேரத்தில் மும்பைப் பக்கம் செல்வதென்றால், சட்டை, பேன்ட்கூட இரண்டாம்பட்சம்தான். ஒருநாளைக்குக் குறைந்தபட்சம் ஏழெட்டு கர்ச்சீப்கள் என்ற விகிதத்தில் Pack செய்வீர்களாக.

மும்பையில்  நாங்கள் சந்தித்த நபர், பெரும் பணக்காரர். பெரிய ரியல் எஸ்டேட் காந்தம் (அதாங்க ’பிஸினஸ் மேக்னெட்டு’ம்பாங்களே!). அவருடைய நிறுவனத்துக்குத் தேவையான சில மென்பொருள்களைப் பற்றி நாங்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்த நேரம், அருமையான காபி வந்தது.

காபியை உறிஞ்சும்போது ஏதாவது பொதுவாகப் பேசவேண்டுமில்லையா, வெய்யிலின் கொடுமையைப் பற்றி ஏஸி ரூமில் கொஞ்சம் அலசினோம், அதன்பிறகு, என்னுடைய அலுவலகத் தோழர் ஒருவர் எதார்த்தமாக அவரிடம் கேட்டார், ‘நீங்க கட்டற ஃப்ளாட்ல்லாம் பொதுவா என்ன விலை வரும் சார்?’

அவர் மர்மமாகப் புன்னகைத்தார். ’எவ்ளோ இருக்கும்? சும்மா கெஸ் பண்ணுங்களேன்!’

என் நண்பர் பெங்களூர்க்காரர். ஆகவே அந்த ரேஞ்சில் யோசித்து, ‘டூ பெட்ரூம் ஃப்ளாட் ஒரு அம்பது, அறுபது லட்சம் இருக்குமா?’ என்றார்.

ரியல் எஸ்டேட் காந்தம் சிரித்தது. ’கொஞ்சம் இப்படி வாங்க’ என்று எங்களை ஜன்னல் அருகே அழைத்துச் சென்றது. சற்றுத் தொலைவில் அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்த ஒரு கட்டடத்தைக் காண்பித்து ‘அது எங்க ப்ராஜெக்ட்தான்’ என்றது, ‘அங்கே ஒரு ஃப்ளாட்டோட விலை பதினஞ்சு கோடியில ஆரம்பிக்குது!’

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. பெங்களூருவில் சில அபார்ட்மென்ட் விளம்பரங்களில் ‘1.5 Crores Onwards’ என்று படித்திருக்கிறேன். அதுவே எனக்குத் திகைப்பாக இருக்கும், ‘செங்கல்லுக்குப் பதில் தங்க பிஸ்கோத்துகளை அடுக்கிவைத்துக் கட்டுவார்களோ?’ என்று கிண்டலடிப்பேன்.

ஆனால் இங்கே, பதினைந்து கோடிக்கு அபார்ட்மென்ட். உற்றுப்பார்த்தேன், அந்தக் காலப் பாட்டுகளில் வருவதுபோல் நவரத்தினங்களெல்லாம் பதிக்கப்படவில்லை, சாதாரண சிமென்ட், காங்க்ரீட்தான்.

எங்களுடைய குழப்பத்தை அவர் நிதானமாக ரசித்தார். பிறகு விளக்க ஆரம்பித்தார். ‘எங்களோட க்ளையன்ட்ஸ் எல்லாம் பெரிய பணக்காரங்க. பேங்க் லோன் போட்டு வீடு வாங்கி மாசாமாசம் EMI கட்டறவங்க இல்லை, பதினஞ்சு கோடின்னா ஒரே செக்ல செட்டில் செய்வாங்க.’

‘இவங்கள்ல பெரும்பாலானோர் இதை முதலீடாதான் செய்யறாங்க. இப்ப பதினஞ்சுக்கு வாங்குவாங்க, கொஞ்ச நாள் கழிச்சு இருபதுக்கு வித்துடுவாங்க, அவ்ளோதான் மேட்டர்.’

‘இருந்தாலும், பதினஞ்சு கோடிக்கு இங்கே அப்படி என்ன இருக்கும்?’

’நிறைய இருக்கும், மொதல்ல ஏரியா, அப்புறம் நிறைய எக்ஸ்க்ளூஸிவ் வசதிகள்.’

‘அப்படி என்ன பெரிய எக்ஸ்க்ளூசிவ்?’

‘ஏகப்பட்டது உண்டு. உதாரணமாச் சிலது சொல்றேன், இந்த அபார்ட்மென்ட்ல எல்லா ஃப்ளோர்லயும் கார் பார்க்கிங் உண்டு. நேராப் பத்தாவது மாடியில காரை நிறுத்திட்டு வீட்டுக்குள்ளே போகலாம். நோ லிஃப்ட் பிஸினஸ்!’

‘இதே ஏரியால இன்னொரு ப்ராஜெக்ட். அங்கே ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி லிஃப்ட் கொடுத்துடறோம். கார்டைக் காட்டினா நேரா உங்க ஹால்ல போய்த் திறக்கும்.’

‘இன்னொரு அபார்ட்மென்ட்ல, கார் லிஃப்ட் உண்டு. அதுல நீங்க காரை நிறுத்தி உங்க கார்டைக் காட்டிட்டா, அதுவே கொண்டு போய் எங்கேயாவது பார்க் பண்ணிடும். திரும்ப வெளியே வந்து கார்டைக் காட்டினா கரெக்டா காரைக் கொண்டுவந்து உங்க முன்னாடி நிறுத்தும், எல்லாமே ஆட்டோமேட்டிக்.’

‘அப்புறம், நாங்க கட்டற வீடுகள் எல்லாமே ஒவ்வொரு சுவரும், ஒவ்வொரு கதவு, ஜன்னலும் மிகப் பெரிய டிசைனர்களால வடிவமைக்கப்பட்டது. நாங்க பயன்படுத்தற மெட்டீரியல்ஸும் பெஸ்ட், நூறு வருஷமானாலும் அப்படியே நிக்கும். கேரன்ட்டி!’

‘அதுமட்டுமில்லை, இந்த வீடுகளை மெயின்டைன் பண்றதும் ஈஸி, உதாரணமா, நாங்க பயன்படுத்தற  பெயின்ட்னால, சுவத்துல கறை பட்டா அப்படியே துடைச்சாப் போதும், பழையபடி பளபளக்கும், ஏதாவது ரிப்பேர்ன்னா நாங்களே செஞ்சு கொடுத்துடுவோம்.’

‘அதுக்குன்னு தனியா maintenance charge உண்டுதானே?’

‘அஃப்கோர்ஸ், அது வருஷத்துக்குச் சில லட்சங்கள் போகும்’ என்று கண் சிமிட்டினார் அவர். அவரது நக்கல் சிரிப்பு ‘உங்களைமாதிரி மிடில் க்ளாஸ் பேர்வழிங்களால இதையெல்லாம் புரிஞ்சுக்கவேமுடியாதுடா டேய்’ என்பதுபோல் இருந்தது.

‘அபார்ட்மென்ட்ஸுக்கே இப்படிச் சொல்றீங்களே, நாங்க கட்டற தனி வீடெல்லாம் நூறு கோடியைத் தொடும், ஒவ்வொண்ணும் Unique Design.’

‘உதாரணமா, ஹைதராபாத்ல ஒரு வீடு, சின்ன மலையோட உச்சியில நிலம், ஏழெட்டு ஃப்ளோர் ப்ளான் பண்ணோம், ஆனா உயரம் ஜாஸ்தின்னு சொல்லி ரெண்டு ஃப்ளோருக்குதான் அனுமதி கிடைச்சது.’

‘சரிதான் போடான்னு அந்த கஸ்டமர் என்ன செஞ்சான் தெரியுமா? மொத்த வீட்டையும் தலைகீழாக் கட்டுன்னுட்டான். அதாவது, மலை உச்சியில ஆரம்பிச்சு அண்டர்க்ரவுண்ட்ல 7 ஃப்ளோர். ஹால்ல நுழைஞ்சு படியில இறங்கி பெட்ரூமுக்குப் போகணும்.’

‘இன்னொரு வீட்ல, மாஸ்டர் பெட்ரூம்லேர்ந்து நீச்சல் குளத்துல குதிக்கறதுக்கு ஒரு சறுக்குப் பலகை உண்டு. ஸ்விம் சூட்டைப் போட்டுகிட்டுக் குட்டிக் கதவைத் திறந்து அப்படியே சறுக்கிப் போய்க் குளத்துல விழவேண்டியதுதான்.’

‘இப்படிச் சின்னதும் பெருசுமா ஏகப்பட்ட உதாரணங்களைச் சொல்லலாம்’ என்று முடித்தார் அவர். ‘கைல பணம் இருந்தாமட்டும் போதாதுங்க, அதை அனுபவிக்கவும் தெரியணும், அந்தமாதிரி ஆட்கள்தான் எங்க க்ளையன்ட்ஸ்.’

காபி தீர்ந்தது. நாங்கள் பிழைப்பைப் பார்க்க ஆரம்பித்தோம்.

***

என். சொக்கன் …

15 06 2012

14 Responses to "வீடு கண்டானடி மும்பையிலே"

//கைல பணம் இருந்தாமட்டும் போதாதுங்க, அதை அனுபவிக்கவும் தெரியணும்,// சத்தியமான உண்மை.

//காபி தீர்ந்தது. நாங்கள் பிழைப்பைப் பார்க்க ஆரம்பித்தோம். // இதுவும்தான்.

Why do you think Ambaani’s sons are so morbidly obese ? Total lack of any physical activity. If you dont have to walk even to go to the toilet and can slide from your bedroom, what else will happen 😉 Remember the WallE movie humans ?

This reminded http://blogs.timesofindia.indiatimes.com/extraordinaryissue/entry/the-sanctity-of-price

படிக்கிறப்ப அதிர்ச்சில நமக்கு வீடுபேறு கிடைச்சிடும்போல இருக்கு 🙂

நம்ம ஊர்ல joint-free tiles போட்டாலே, அது delux flat அல்லது luxury வில்லா.நமாளுங்க கொரச்ச காசுலே இத சொர்கம்ன்னு நம்ப வச்சிடறாங்க.அதுவும் நல்லதுக்கு தான் போலருக்கு.
அருமையான பதிவு

சில ஃபோட்டோக்களுடன் இந்த கட்டுரையை அப்படியே மெயின் ஸ்ட்ரீம் பத்திரிகைல போடுங்க பாஸ். செம இன்ட்ரெஸ்டிங் 🙂

ம்ஹூம்…இது ஆவுறதில்ல….நாங்க கனவுலயே வாழ்ந்துட்டுப்போறோம். 🙂

த்ரீ மில்லியன் டாலர்ஸ்… எம்மாடீயோவ்

அடேங்கப்பா. பிசங்கர் சொல்ற மாதிரி வால்-ஈ படம் மாதிரியே இருக்கே. சொகுசு கூடக்கூட சீக்கும் கூடும் சொல்றாங்க. ஆனா சொகுசுக்குச் செலவழிக்கிறத சீக்குக்கும் செலவழிச்சிரலாம்னு நெனச்சிட்டா ஒன்னும் பண்ண முடியாது.

வாழ்க வளமுடன் 🙂

வாழ்க்கைங்குறதே சிலருக்கு பரிசு. சிலருக்கோ வாழ்க்கை முழுக்கவே பரிசு. 🙂

காபி தீர்ந்தது நாங்கள் பிழைப்பை பார்க்கத்துவங்கினோம் // நச்

சார், நன்றாக எழுதிவிட்டீர்..!

அம்மாதிரி வீடுகளில் வசிப்போர்கள் சில பேர் எனக்கு நன்றாக தெரியும். ’கழுத்துவரைக்கும் காசு இருந்தால் அதுதான் மனிதனுக்கு எசமானன்’ என்று ரஜினி சார் எதோ ஒரு பாட்டில் சொன்னதுபோல்தான் இவர்களுடைய வாழ்க்கையும்.

கையில் இருக்கிற பணத்தை வைத்து என்னென்ன செய்வது.. என்ற குழப்பத்தில் வழி தெரியாமல் சுற்றி அலைகிறார்கள். இவர்கள் வீட்டில் உறவுகள் சம்பந்தமான பிரச்சினைகளும் நிறைய இருக்கும், அதில் பிஸினஸ் ரிலேஷன்ஸ் பிரச்சினை வேற.. அதேபோல், தொழில் சம்பந்தமான பிரச்சினைகளும் இருக்கும். அதை தவிர, இவர்கள் வீட்டில் சில பேருக்கு கண்டிப்பாக எதோ ஒரு உடல் பிரச்சினை இருக்கும். அதிலும், இப்படித்தான் செலவு செய்வார்கள். எடுத்துக்காட்டாக சொல்லப்போனால், இருநூறு ரூபாய்க்கு வரும் மாத்திரை இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து எதோ ஒரு ஃபைவ் ஸ்டார் ஆஸ்பத்திரியில் போய் படுத்து சாப்பிடுவார்கள்…! ஐயோ ஃபைவ் ஸ்டார் ஆஸ்பத்திரி எதுக்குங்கோ? வீட்ல தூக்கம் வராததால்தான்…!

வீட்டில் நிறைய குழப்பங்கள் இருந்தாலும் அதை வெளியே காட்டாமல்; முகத்தில் ஒரு பொய்ப்புன்னகையை கொண்டுதான் வாழ்கிறார்கள். இதுவும் ஒரு வாழ்க்கையா? பெரிய பணக்காரர் இருந்தால் என்ன.. எங்கேயாவது போய் EMI செட்டில் செய்யத்தான் ஆகணும். வாழ்க்கைக்கு ஒரு பக்கம் மட்டும் கிடையாது. நிறைய பக்கங்கள் உண்டு….

அமித் சந்திரன்

(என் தமிழில் எங்கு பிழைகள் கண்டால் தயவு செய்து திருத்தவும்)

இந்தியா தானா?

கைல காசை வெச்சிகிட்டு என்ன பண்றதுன்னு தெரியாத ஆட்களுக்குதான் இது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 528 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 609,220 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

June 2012
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
%d bloggers like this: