Archive for June 25th, 2012
’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 3
Posted June 25, 2012
on:- In: Book Marks | Books | E-zines | Media | Reading | Serial | Uncategorized
- Leave a Comment
15
ஆண்டாளுக்கும் தெனாலி ராமனுக்கும் என்ன சம்பந்தம்?
மொட்டைத்தலை, முழங்கால் ஞாபகம் வருகிறதா? நிஜமாகவே இந்த இருவருக்கும் பொதுவான ஒரு மனிதர் இருக்கிறார்: கிருஷ்ண தேவராயர்.
தெனாலி ராமனை விகடகவியாக நியமித்து அழகு பார்த்த கிருஷ்ண தேவராயர், ஒரு நல்ல கவிஞரும்கூட. அவர் படைத்த ஒரு நூல் ’அமுக்த மால்யதா’ (சூடப்படாத மாலை), இதில் அவர் ஆண்டாளைப்பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
இந்த நூல் எழுதப்பட்டதுபற்றியும் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. விஷ்ணுவே கிருஷ்ண தேவராயரின் கனவில் தோன்றி ‘ஆண்டாளைப்பற்றித் தெலுங்கில் விரிவாக எழுது’ என்று ஆணையிட்டதாகச் சொல்கிறார்கள்.
’அமுக்த மால்யதா’ தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்லதா? விசாரித்துச் சொல்லுங்கள்!
16
எழுத்தாளர் ’கடுகு’வின் இயற்பெயர், பி. எஸ். ரங்கநாதன், ‘அகஸ்தியன்’ என்ற தலைப்பில் பிரபலமான ‘கமலா, தொச்சு’ சீரிஸ் கதைகளை எழுதியவரும் இவர்தான்.
’கல்கி’யால் எழுத வந்த இந்தக் ‘கடுகு’வுக்கு அவர்மீது பக்தி அதிகம். ஆகவே, தான் கட்டிய வீட்டுக்குக் ‘கல்கி’ என்று பெயர் வைத்தார், மகளுக்கு ‘ஆனந்தி’ என்று பெயர் சூட்டினார், தன் புத்தகங்களைப் பிரசுரிக்கும் நிறுவனத்துக்கு ‘நந்தினி’ என்று பெயர் வைத்தார்.
அதோடு நிறுத்தவில்லை, இவர் உருவாக்கிய தமிழ் எழுத்துருக்கள் (Fonts) அனைத்துக்கும் கல்கியின் கதாபாத்திரங்களையே பெயராகச் சூட்டினார்: குந்தவி, வந்தியத்தேவன், ராஜராஜன், தாரிணி, கரிகாலன் மற்றும் ‘பொன்னியின் செல்வன்’.
(ஆதாரம்: ‘கடுகு’ எழுதிய ‘கமலாவும் நானும்’ நூல்)
17
பிரபல எழுத்தாளர் ஜெஃப்ரே ஆர்ச்சர் சமீபத்தில் ஜெயிலுக்குப் போனார். அங்கே தனது அனுபவங்களை ‘டயரி’யாகவும் சிறுகதைகளாகவும் எழுதி வெளியிட்டார்.
பல வருடங்களுக்கு முன்னால் இதேபோல் இன்னோர் எழுத்தாளரும் ஜெயிலுக்குப்போனார். அவர் பெயர் வில்லியம் சிட்னி போர்ட்டர்.
’இந்தப் பெயரைக் கேள்விப்பட்டமாதிரியே இல்லையே’ என்கிறீர்களா? நிஜம்தான், ஜெயிலில் அவர் தனக்கு ஒரு புனைபெயர் சூட்டிக்கொண்டார். அந்தப் பெயர் இப்போது உலகப் பிரபலம்: ஓ. ஹென்றி.
‘வில்லியம் சிட்னி போர்ட்டர்’ எப்படி ஓ. ஹென்றி ஆனார் என்பதுபற்றிப் பல கதைகள் உண்டு. அவற்றில் மிகப் பிரபலமான ஒன்று: ஜெயிலில் இருந்தபடி சில கதைகளை எழுதிய இவர், அவற்றைத் தன்னுடைய சொந்தப் பெயரில் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கக் கூசினார், அப்போது அந்தச் சிறையின் காவலாளிகளில் ஒருவரான ஓரின் ஹென்றி என்பவருடைய பெயரைச் சுருக்கித் தன்னுடைய புனைபெயராக்கிக்கொண்டார்.
(ஆதாரம்: Dover Publications வெளியிட்ட ‘Best Short Stories Of O. Henry’ நூலின் முன்னுரை)
18
புலவர் ஔவையாரை நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும், அவரது பாடல்களை நிறையப் படித்திருக்கிறோம், பல கதைகளைக் கேட்டிருக்கிறோம்.
உண்மையில், தமிழ்ச் சரித்திரத்தில் ஒன்று அல்ல, பல ‘ஔவையார்கள்’ உண்டு என்று சொல்கிறார்கள். இதுபற்றி நிறைய ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன.
ஊர் ஊராகச் சென்று தமிழ் பரப்பிய ஔவைக்குத் தமிழகத்தில் பல கோயில்களும் இருந்தனவாம். ’ஔவையாரம்மன்’, ‘தமிழ்வாணி’ என்கிற பெயர்களில் அவர் வழிபடப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
இந்தக் கோயில்களில் பல, கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்டன. தற்போது மிஞ்சியிருப்பவை சில : கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முப்பந்தல், நெல்லிமடம், முல்லைவாடி, குரத்தியறை, ஆதிச்சபுரம், தோவாளை, தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், தாழக்குடி, பூதப்பாண்டி, நாவல்காடு, திருஇடும்பாவனம், துளசியாபட்டிணம், ஔவைக்கோட்டம் (திருவையாறு), குற்றாலம், சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், கல்வராயன் மலை, கராங்காடு, உத்தமசோழபுரம் மற்றும் பசுபதிபாளையம்.
(ஆதாரம்: ஔவையார் எழுதிய ‘கல்வியொழுக்கம்’ நூலிற்கு வேம்பத்தூர் கிருஷ்ணனின் பின்னுரை)
19
‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ படத்துக்கு வசனம் எழுதியது யார் தெரியுமா?
சொன்னால் நம்பமாட்டீர்கள், ‘பாரதிதாசன்’!
அந்தக் காலத்தில் பாரதிதாசன் இந்தப் படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டதும் அவரது சுயமரியாதை இயக்கத் தோழர்கள் கோபத்தில் கொதித்தார்கள். ‘புராணங்கள், இதிகாசங்களையெல்லாம் எதிர்க்கும் பாரதிதாசன் இப்படிப்பட்ட கதைக்கு வசனம் எழுதலாமா?’ என்றார்கள்.
பாரதிதாசன் அவர்களுக்குக் கூலாகச் சொன்ன பதில், ‘மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்று வரும் திரைப்படத்துறையில் நான் நுழைந்திருக்கிறேன், பிராணநாதா, ஸ்வாமி, சஹியே, தவஸ்ரேஷ்டரே போன்ற சொற்களை நீக்கி, தமிழில் அத்தான், தோழி, குருவே என்று அழைக்கவைக்கிறேன். அசுரர்களாகக் காட்டப்பட்டுவந்தவர்களைத் தமிழ் அறிந்த, இரக்க சிந்தை உடையவர்களாகப் படைத்திருக்கிறேன். இந்தத் தொடக்க நிலையில் இதைதான் செய்யமுடியும். இன்னும் முன்னேறி, முற்போக்குக் கருத்துக்குச் சிறப்பான இடம் அளிக்கமுடியும்.’
அவர் சொன்னது அப்படியே நடந்தது. தமிழ் சினிமாவில் புராணக் கதைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, இப்போது காணாமலேபோய்விட்டன!
(ஆதாரம்: டி. வி. ராமநாத் எழுதித் தொகுத்த ‘திரை வளர்த்த தமிழ்’ நூல்)
20
ஒரு கவிதை:
உன்னைப் பார்க்காமல்,
எனக்கு ஒரு கணமும் அமைதி இல்லை!சாப்பாடு பிடிக்கவில்லை,
கண்கள் தூக்கம் மறந்தன,
பிரிவின் வலி என்னைத் துன்புறுத்துகிறது.
இந்தத் துயரத்தை உணர்ந்தவர்கள் யாருமே இல்லை!உன்னைப் பிரிந்த வருத்தத்தில்
வாழ்க்கை மறைந்துவிட்டது,
அழுது அழுது,
கண்களில் பார்வை மறைந்துவிட்டது!காதலால் இத்தனை வலி வரும் என்று
முன்கூட்டியே தெரிந்திருந்தால்,
ஊரெல்லாம் முரசு அறைந்து அறிவித்திருப்பேன்,
‘யாரும் காதல் செய்யாதீர்கள்!’என் காதலா,
நீ எப்போது வருவாய்?
உன்னைப் பார்த்தவுடன்தான்
என்மனம் அமைதி பெறும்!
இதை எழுதியது யாராக இருக்கும்?
உணர்ச்சிகளைப் பார்த்து மாடர்ன் கவிஞர்களை வம்புக்கு இழுக்காதீர்கள். இதை எழுதியது பக்த மீரா!
இன்றைய ’உருகுதே, மருகுதே’ ரகக் காதல் கவிதைகளுக்கெல்லாம் முப்பாட்டி அவள்தான். ஒரே வித்தியாசம், இது ‘தெய்விகக் காதல்’, மீராவின் பிரபு, அந்தக் கிரிதர கோபாலன்!
21
உலகில் அதிகம் பதிப்பிக்கப்பட்ட, விற்பனையான புத்தகங்கள் யாருடையவை?
முதல் இடம் (பலரும் எதிர்பார்த்ததுபோல்) பைபிள், இரண்டாவது இடம், வில்லியம் ஷேக்ஸ்பியர் நாடகங்கள்.
இந்தப் பட்டியலின் மூன்றாவது இடத்தில் உள்ளவர் அகதா க்ரிஸ்டி. இவரது புத்தகங்கள் இதுவரை 400 கோடிப் பிரதிகளுக்குமேல் விற்பனையாகியிருப்பதாக கின்னஸ் சாதனைப் புத்தகம் சொல்கிறது.
அகதா க்ரிஸ்டியின் கிரீடத்தில் இன்னொரு சாதனைச் சிறகும் உண்டு. உலகிலேயே அதிகமுறை அரங்கேறியிருக்கும் நாடகம் இவருடையதுதான். அதன் பெயர் ‘Mousetrap’. சுமார் ஐம்பது வருடங்களுக்குமுன்னால் முதன்முறையாக நிகழ்த்தப்பட்ட இந்த நாடகம் இதுவரை கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரம்முறை மேடையேறியிருக்கிறது.
(ஆதாரம்: Agatha Christie Estate)
(தொடரும்)
நன்றி : https://www.facebook.com/600024books
***
என். சொக்கன் …
25 06 2012