புலவர் கீரன்
Posted June 28, 2012
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Introduction | Uncategorized
- 26 Comments
புலவர் கீரனின் கம்ப ராமாயண உரை கேட்டிருக்கிறீர்களா?
நான் சமீபத்தில்தான் கேட்டேன். அசந்துபோனேன்.
ஒரு கண்டிப்பான ஸ்கூல் வாத்தியார், மாணவர்களை முன்னால் உட்காரவைத்துக்கொண்டு ‘யாராவது நடுவுல பேசினீங்கன்னா பிச்சுப்புடுவேன்’ என்று அதட்டிவிட்டு ராமாயணப் பாடம் எடுக்கத் தொடங்கியதுபோல் ஒரு தொனி அவருடையது. Interactionக்கு வாய்ப்பே இராது. யாராவது Interact செய்ய நினைத்தால் அடித்துவிடுவாரோ என்கிற அளவுக்கு வேகம். பல நேரங்களில் அவர் கையில் இருப்பது மைக்கா அல்லது பிரம்பா என்று எனக்குச் சந்தேகமாகவே இருந்தது.
ஆனால் அதேசமயம், கீரனின் பேச்சுப் பாணியின் பலம், நாம் குறுக்கிட்டுக் கேள்வி கேட்கவேண்டிய அவசியமே எழாது. ஒவ்வொரு விஷயத்தையும் அத்தனை தெளிவான உதாரணங்களுடன் புட்டுப்புட்டு வைத்துவிடுகிறார்.
சில பிரபல சொற்பொழிவாளர்கள் பழந்தமிழ்ப் பாடல்களை Quote செய்யும்போது ‘எனக்கு எத்தனை தெரிஞ்சிருக்கு பாரு’ என்கிற அதிமேதாவித்தனம்தான் அதில் தெரியும். வேண்டுமென்றே சொற்களைச் சேர்த்துப் பேசி (அல்லது பாடி) பயமுறுத்துவார்கள்.
கீரனிடம் அந்த விளையாட்டே கிடையாது. ஒவ்வொரு பாடலையும் அவர் அழகாகப் பிரித்துச் சொல்கிறபோது, ‘அட, இது கம்ப ராமாயணமா கண்ணதாசன் எழுதின சினிமாப் பாட்டா?’ என்று நமக்கு ஆச்சர்யமே வரும். அத்தனை அக்கறையுடன் பாடல்களைப் பதம் பிரித்து, கடினமான சொற்களுக்கு எவருக்கும் புரியும்படி எளிமையான விளக்கங்களைச் சொல்லி, அதற்கு இணையான பாடல்களை எங்கெங்கிருந்தோ எடுத்து வந்து உதாரணம் காட்டி… அவர் தனது ஒவ்வொரு சொற்பொழிவையும் எத்தனை அக்கறையுடன் தயாரிப்பாராக இருக்கும் என்று வியக்கிறேன்.
கம்ப ராமாயணத்தில் தொடங்கி அவரது பல உரைகளைத் தேடிப் பிடித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இதுவரையில் என் கண்ணில் (காதில்) பட்ட ஒரே குறை, மேடைப்பேச்சு என்பதாலோ என்னவோ, பலமுறை சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார். ‘பரதன் என்ன செய்தான் என்றால்… பரதன் என்ன செய்தான் என்றால்…’ என்று அவர் நான்கைந்து முறை இழுக்கும்போது நமக்குக் கடுப்பாகிறது. (ஆனால் ஒருவேளை அவர் எதையும் தயார் செய்துகொள்ளாமல் பேசுகிறவராக இருந்தால், இப்படி ஒரே வாக்கியத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வது அடுத்த வாக்கியத்தை யோசிப்பதற்கான இடைவெளியைப் பெற்றுக்கொள்ளும் உத்தியாக இருக்கலாம்).
மிகவும் உணர்ச்சிமயமான பேச்சு என்பதால், சில நேரங்களில் கீரன் தேர்ந்த நடிகரைப்போலவும் தெரிகிறார். குறிப்பாகக் கைகேயி காலில் விழுந்து தசரதன் கதறும் இடத்தை விவரிக்கும்போது எனக்கு ‘வியட்நாம் வீடு’ சிவாஜி கணேசன்தான் ஞாபகம் வந்தார். குறையாகச் சொல்லவில்லை, அத்தனை உணர்ச்சியுடன் கம்பனைச் சொல்லக் கேட்பது தனி சுகமாக இருக்கிறது.
அதேசமயம், கீரன் மிகப் புத்திசாலித்தனமாக இன்னொரு வேலையும் செய்கிறார். ஒரு தேர்ந்த வழக்கறிஞருக்கு இணையான வாதங்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு, கம்பன் பாடல்களில் இருந்தே அருமையான உதாரணங்கள் காட்டி அதை நிறுவுகிறார். சும்மா ஒரு ‘Assumption’போலத் தொடங்கிப் படிப்படியாக அதை நிஜம் என்று அவர் விரித்துக் காண்பிக்கும்போது நம் மனத்தில் ஏற்படும் பரவசம் சாதாரணமானதல்ல.
அதாவது, ஒருபக்கம் Rational thought process, இன்னொருபக்கம் அதைச் சொல்வதற்கு அவர் தேர்ந்தெடுத்த Emotional outburst பாணிப் பேச்சு. ஒன்றுடன் ஒன்று கொஞ்சம்கூடப் பொருந்தாது எனத் தோன்றும் இருந்த இரு விஷயங்கள், கீரனிடம் பெட்டிப் பாம்புகளாக அடங்கிக் கிடக்கின்றன. அவர் சொன்ன பேச்சைக் கேட்டு நடக்கின்றன.
இரண்டு உதாரணங்கள் சொல்கிறேன்: பரதன் & வாலி.
ராமாயணத்தில் பரதன் ஒரு துணைப் பாத்திரம்தான். அவன் நல்லவன் என்று நமக்கு இப்போது தெரியும். ஆனால் அந்தக் காலத்தில் பரதனை யாருமே சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று தொடங்குகிறார் கீரன்.
அதுவும் ஒரு முறை, இரண்டு முறை அல்ல, ஆறு முறை, ஆறு பேர் பரதனின் நல்ல மனத்தைப் புரிந்துகொள்ளாமல் அவனைப் புண்படுத்துகிறார்கள். இந்தக் காலச் சினிமாப் பாத்திரமாக இருந்தால் அவன் ‘என் கேரக்டரையே புரிஞ்சுக்கமாட்டீங்களாய்யா?’ என்று ஆறு முறை புலம்ப நேர்ந்திருக்கும்.
யார் அந்த ஆறு பேர்? அவர்கள் பரதனை ஏன் புரிந்துகொள்ளவில்லை?
1. பரதனின் தாய் கைகேயி
கூனி சொன்னதைக் கேட்டுப் பரதனை அரசனாக்கத் துணிந்தாள். ஏதேதோ நாடகங்கள் ஆடினாள், அவள் இத்தனையையும் செய்தது பரதனுக்காகதான்.
ஆனால் ஒரு விநாடிகூட, ‘பரதன் இந்த ஆட்சியை ஏற்றுக்கொள்வானா?’ என்று அவள் யோசிக்கவே இல்லை. ‘அவன் இதை நிச்சயமாக மறுத்துவிடுவான்’ என்கிற உண்மை அவளுக்குப் புரிந்திருந்தால், இத்தனை சிரமப்பட்டிருப்பாளா?
2. பரதனின் தந்தை தசரதன்
கைகேயி நாடகத்தைக் கண்டு, வேறு வழியில்லாமல் அவளுக்கு இரண்டு வரங்களைத் தந்து மயங்கி விழும் தசரதன் ‘நீ என் மனைவி இல்லை’ என்கிறான். நியாயம்தான்.
ஆனால் அடுத்த வரியிலேயே ‘ஆட்சி செய்வதற்காக வந்துகொண்டிருக்கும் பரதன் என் மகன் இல்லை’ என்கிறான் தசரதன். இது என்ன நியாயம்?
ஆக, பரதனும் இந்த விஷயத்தில் கைகேயிக்குக் கூட்டு, இப்போது அவன் அரசன் ஆகிற கனவோடு கிளம்பி வந்துகொண்டிருக்கிறான் என்று தசரதன் நினைக்கிறான். பரதன் ஒருபோதும் அப்படி நினைக்கமாட்டான் என்று அவனுக்கும் புரியவில்லை.
3. பரதனின் சகோதரன் லட்சுமணன்
ஆட்சி ராமனுக்கு இல்லை, பரதனுக்குதான் என்று தெரிந்தவுடன் லட்சுமணன் போர்க்கோலம் அணிகிறான். ‘சிங்கத்துக்கு வைத்த சாப்பாட்டை நாய்க்குட்டி தின்பதா?’ என்றெல்லாம் கோபப்படுகிறான். ‘பரதனை வென்று உன் நாட்டை உனக்குத் திருப்பித் தருவேன்’ என்று ராமனிடம் சொல்கிறான்.
ஆக, அவனுக்கும் பரதனைப் புரியவில்லை. ஏதோ பரதன்தான் சூழ்ச்சி செய்து அரசனாகிவிட்டதாக எண்ணி அவனை எதிர்க்கத் துணிகிறான்.
பின்னர் காட்டில் பரதன் ராமனைத் வருவதை முதலில் பார்ப்பவனும் லட்சுமணன்தான். அப்போதும் அவன் இதேமாதிரி உணர்ச்சிவயப்படுகிறான். பரதன் பதவி ஆசை பிடித்தவன் என்றே நினைக்கிறான்.
4. ராமனின் தாய் கோசலை
பரதன் நாடு திரும்புகிறான். நடந்ததையெல்லாம் உணர்ந்து புலம்புகிறான். தாயைத் திட்டுகிறான். நேராக ராமனின் தாய் கோசலை காலில் போய் விழுகிறான். அழுகிறான்.
உடனே, கோசலை சொல்கிறாள், ‘என்னய்யா இது? அப்படீன்னா உங்கம்மா செஞ்ச சூழ்ச்சியெல்லாம் உனக்குத் தெரியவே தெரியாதா?’
ஆக, கோசலையும் அவனைப் புரிந்துகொள்ளவில்லை. இவ்வளவு நாளாகக் கைகேயி உடன் சேர்ந்து பரதனும் நாட்டைத் திருடத் திட்டமிட்டிருப்பதாகவே நினைத்திருக்கிறாள்.
5. பரதனின் குல குரு வசிஷ்டர்
இந்த நேரத்தில், வசிஷ்டர் பரதனை அணுகுகிறார். ‘பட்டாபிஷேகத்துக்கு நாள் குறிக்கட்டுமா?’ என்று கேட்கிறார்.
இவரும் பரதனின் மனோநிலையை உணரவில்லை. அவன் ராமனைத் திரும்ப அழைத்துவந்து நாட்டை அவனுக்கே தர விரும்புவதை உணராமல் நாட்டுக்கு அடுத்த ராஜாவை முடி சூட்டும் தன்னுடைய வேலையில் குறியாக இருக்கிறார். உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே கிடையாதாய்யா?
6. குகன்
பரதனின் மனத்தை அவனது சொந்தத் தந்தை, தாய், பெரியம்மா, தம்பி, குல குருவே உணராதபோது, எங்கோ காட்டில் வாழும் வேடன் குகன் உணர்வானா? அவனும் பரதனை முதன்முறை பார்த்துவிட்டுப் போர் செய்யத் துடிக்கிறான். ‘எங்க ராமனைக் கொல்லவா வந்திருக்கே? இரு, உன்னைப் பிச்சுப்புடறேன்’ என்று குதிக்கிறான்.
ஆக, எந்தப் பிழையும் செய்யாத பரதன்மீது ஆறு முறை, ஆறு வெவ்வேறு மனிதர்கள் அடுத்தடுத்து சந்தேகப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் நீங்களும் நானும் என்ன செய்திருப்போம் என்று கொஞ்சம் யோசியுங்கள்.
அப்படியானால், உண்மையில் பரதனைப் புரிந்துகொண்டவர்கள் யார்? ‘ஆயிரம் ராமர் உனக்கு இணை ஆவார்களோ’ என்ற வசனமெல்லாம் எப்போது, யார் சொன்னது? கம்பனைத் தேடிப் படியுங்கள், அல்லது கீரனைத் தேடிக் கேளுங்கள்
இரண்டாவது உதாரணம், வாலி. இவனை மூன்றாகப் பிரிக்கிறார் கீரன்:
1. குரங்கு வாலி
2. மனித வாலி
3. தெய்வ வாலி
வாலி கதை எல்லாருக்கும் தெரிந்ததுதான். தம்பியைத் தவறாக நினைத்து அவனை உலகம் முழுக்கத் துரத்திக் கொல்லப்பார்த்தவன். பிறகு ஒரு சாபம் காரணமாக அவனைப் போனால் போகிறது என்று விட்டுவைத்தவன்.
இந்தத் தம்பிக்கு ஒரு துணை கிடைக்கிறது. வாலியைத் தந்திரத்தால் கொல்வதற்காக வருகிறான். ‘டாய் அண்ணா, தைரியம் இருந்தா என்னோட மோத வாடா’ என்று அலறுகிறான்.
உடனே, வாலி ஆவேசமாக எழுகிறான். தம்பியைக் கொல்ல ஓடுகிறான்.
வழியில், வாலியின் மனைவி தாரை அவனைத் தடுத்து நிறுத்துகிறாள். ‘போகாதே, போகாதே, என் கணவா, பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்’ என்று பாடுகிறாள்.
‘சொப்பனமாவது, சோன் பப்டியாவது, நான் அந்த சுக்ரீவனை நசுக்கிப் பிழிஞ்சு கொன்னுட்டுதான் வருவேன்’ என்கிறான் வாலி.
இவனைதான் ‘குரங்கு வாலி’ என்கிறார் கீரன். அதாவது, சொந்தத் தம்பியையே கொல்லத் துடிக்கும் மிருக குணம்.
தாரை வாலிக்குப் புத்தி சொல்கிறாள். ‘நேற்றுவரை உனக்குப் பயந்து ஒளிந்திருந்தவன் இன்று உன்னுடன் மோத வருகிறான் என்றால், ஏதோ காரணம் இருக்குமல்லவா?’
‘என்ன பெரிய காரணம்?’
‘ராமன் அவனுக்குத் துணையாக இருக்கிறானாம். சுக்ரீவனுடன் நீ மோதும்போது அந்த ராமன் உன்னை ஏதாவது செய்துவிட்டால்?’
வாலி சிரிக்கிறான். ‘பைத்தியக்காரி, ராமன் எப்பேர்ப்பட்டவன் என்று தெரியுமா? அவன் எங்களுடைய சண்டைக்கு நடுவில் வருவான் என்று நினைத்தாயே, உனக்குக் கிறுக்குதான் பிடித்திருக்கிறது!’ என்கிறான்.
இந்தக் கணம் தொடங்கி, அவன் ’மனித வாலி’ ஆகிவிடுகிறான் என்கிறார் கீரன். ராமன்மீது அவனுக்கு அத்தனை நம்பிக்கை.
பின்னர் அதே ராமன் வாலியை மறைந்திருந்து கொல்கிறான். அவனிடம் ஏகப்பட்ட நியாயங்களைப் பேசுகிறான், வாதாடுகிறான் வாலி. இவை எல்லாமே மனித குணங்கள்.
நிறைவாக, ராமனிடம் வாலி ஒரு வரம் கேட்கிறான். ‘என் தம்பி சுக்ரீவன் ரொம்ப நல்லவன், என்ன, கொஞ்சம் சாராயம் குடிச்சா புத்தி மாறிப்புடுவான், அப்போ தன்னையும் அறியாமல் ஏதாவது பிழை செய்துவிடுவான், அந்த நேரத்துல நீ அவன்மேலே கோபப்படாதே, என்னைக் கொன்ற அம்பால் நீ அவனைக் கொன்றுவிடாதே!’
ஆக, சற்றுமுன் தம்பியைக் கொல்லத் துடித்த வாலி, இப்போது அவன் உயிரைக் காப்பதற்காக ராமனிடம் வரம் கேட்கிறான். இதைத் ‘தெய்வ வாலி’ என்கிறார் கீரன்.
இந்த மூன்று வகை வாலிகளையும் கம்பன் பாடல்களில் இருந்து ஏகப்பட்ட உதாரணங்களுடன் அவர் விளக்கியது ஒரு சிறு நூலாகவும் வெளியாகியுள்ளது. இப்போது அச்சில் இல்லை.
நூல்மட்டுமா? கீரனின் பேச்சுகள்கூட இப்போது பரவலாக விற்பனையில் இல்லை. இணையத்தில் சிலது கிடைக்கின்றன. சிடி வடிவில் ஆனந்தா கேஸட்ஸ் வெளியிட்ட நான்கு பேச்சுகள்மட்டும் விற்பனையில் உள்ளன(எனக்குத் தெரிந்து).
கம்ப ராமாயண உரையைக் கேட்டபின், கீரனின் மற்ற சொற்பொழிவுகளையும் எப்படியாவது கேட்டுவிடவேண்டும் என்று எனக்கு ஓர் ஆசை. அவரது கேஸட்களை வெளியிட்ட வாணி, ஆனந்தா நிறுவனங்களைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விசாரித்தேன். ’ரைட்ஸ்லாம் எங்ககிட்டதான் இருக்கு, ஆனா இப்போதைக்கு வெளியிடற திட்டம் இல்லை’ என்றார்கள் அதட்டலாக.
‘ஏன்? எப்போ வெளியிடுவீங்க!’
‘அதெல்லாம் தெரியாது’ என்றார்கள். ‘நீ எப்ப ஃபோனை வைக்கப்போறே?’ என்றுமட்டும் கேட்கவில்லை. அவ்வளவே.
இதுமாதிரி அட்டகாசமான contentகளின் உரிமையைக் கையில் வைத்துக்கொண்டு அதை வெளியிடாமல் கடுப்பேற்றுகிறவர்களை என்ன செய்வது? கேசட், சிடி, மார்க்கெட்டிங் போன்றவை சிரமம், கீரன் விலை போகமாட்டார் எனில், iTunesபோல அதிகச் செலவில்லாத On Demand Content Delivery Platforms பயன்படுத்தலாமே, இதெல்லாம் தமிழ் Content Publishersக்குப் புரியக் குத்துமதிப்பாக எத்தனை நூற்றாண்டுகள் ஆகும்?
ஆகவே, கீரனின் சொற்பொழிவு கேசட்கள் எவையேனும் உங்களிடம் இருந்தால், முதல் வேலையாக அவற்றை எம்பி3 ஆக்கி இணையத்தில் வையுங்கள். அது பைரசி அல்ல, புண்ணியம்.
***
என். சொக்கன் …
28 06 2012
26 Responses to "புலவர் கீரன்"

ஆஹா, சீக்கிரம் கேட்டிரணும் போல்ருக்கே. நான் கேட்டதே இல்லை. கேள்விப்பட்டிருக்கேன். அவ்வளவுதான்.
பைரசி புண்யவான்களுக்கு அப்போதைக்கு இப்போதே நன்றி சொல்லிடறேன்.


கீரன் அவர்களின் சொற்பொழிவுகளை நேரில் பார்த்து, கேட்டு, வியந்து,‘கட்டுண்டு’ போன நிமிஷங்கள் நிறைய. வாரியார் சுவாமிகள் கூட சில சமயம் ‘போர்’ அடிப்பார். கீரன் எப்பவுமே ‘விறுவிறு’ தான். ஆனால் அப்போது எனக்கு சிறு வயது என்பதால் content பற்றி சிந்திக்கிற முதிர்ச்சி இல்லாம்ல் போனது எனது துரதிருஷ்டமே


|| ‘ஆயிரம் ராமர் உனக்கு இணை ஆவார்களோ’ என்ற வசனமெல்லாம் எப்போது, யார் சொன்னது? கம்பனைத் தேடிப் படியுங்கள், அல்லது கீரனைத் தேடிக் கேளுங்கள் || இரண்டுமே இப்போதைக்கு ஆகாது. ஆனால், சொன்னது யார், அனுமனோ? நந்திகிராமத்தில் பரதனைச் சந்தித்தபோதோ?


பாரதச்சொற்பொழிவு முழுதும் என்னிடம் இருக்குன்னு நினைக்கிறேன். தேடனும். இராமாயணம் முழுக்கவும் இருக்கக் கூடும்.


அருமை.


I attend and listen to his meetings in more than 100 times.very nice days


Not sure if this website gives all the audio which we are looking at. However, not sure about its quality. http://mp3skull.com/mp3/keeran.html


I found some of keeran discourse in the following website
http://www.panchamirtham.org/2012/05/blog-post.html
I hope it is helpful.


புலவர் கீரனின் சொற்பொழிவுகள் அத்தனையும் குறுந்தகடுகளாக கிடைக்கின்றன. 29.09.2012 அன்று வாங்கினேன். கிடைக்குமிடம் – ஹைதர் காலம் ஒலி நாடாக் கடை, கோபிசெட்டிபாளையம். தொடர்புக்கு குணசேகரன், 04285 227239, 9043700699


Dear all, I attended several programs in 70 to 75s.Also organized his programs In south arcot .Right now iam having villibharatham and ramayanam CDs.


Pulavar Keeranin sorpozhivugalai ketta bhagyasaaligalil naanum oruvan.
Crystal thelivu! Pure Aanantham!!


ennitam keeran peruman nin anithu sorpozhivugalum irrukinrana.yarukavathu venumentral email thodarbu kollungal.


Muralikrishnan,
Please share your email id


Pulavar Keeran Discourses on Ramayana and Kanda Puranam is now available in book form. Kindly contact Vanathi Pathippagam or you can order through nhm.in


Mrs. keeran could do all we want.


Mr. N. Chokkan
Mail me the address where I can download ramayanam a wonderful speech by pulavar .. We had 4 cassette but while shifting my parents missed.. I m searching for this plz help me if I know sum thing about ramayanam its becz of him
Waiting for ur reply


I am so proud to express that i am a fan of Pulavar Keeran. Also i would like to mention here that I belong to Mayiladuthurai where pulavar resided. I never missed the discourses delivered by pulavar 40 years back in Thiruindalur Parimala Renganathar Temple which was very interesting to hear. His discourses are very popular in the midst of youngsters in those days. He is well known person to my father and his wife Chellapappa is my sister’s classmate. I am trying to collect his discourses and books. His way of discourse is entirely different from others which is interesting. His demise is a great loss.
srimathi ramesh


i heard several times thiru.keeran speech from 1969 to 1975 at trichy thillainagar.ihv not studied kambaramayana in detail. but i know details,
important events in kambaramayana are still recorded in my mind by keerans speech. proudly says i was the classmate of thanigaimani s/o pulavar keeran.during the period our erhss trichy schooll friends lsr ie l.ramasubbu associate publisher dhinamalar,thilagar grandson of thiyagi arunachalam & others.from today i ll try collect keerans speech,books…….balakrishnan,asst manager,tdcc bank,trichy.


உங்கள் வியாக்கியானம் அருமை . ஒரு சிறிய தகவல் . . குகன் அடுத்து ஒரு முனிவர் குடில் விழையும் பரதன் , அங்கே முனிவரும் அவனை சந்தேகிக்க , துக்க எல்லையில் அவன் ‘


By virtue that I did in my previous birth, I got an opportunity to witness His Discourse at the National College, Tiruchirappalli in the year 1970.What a scintillating speech and racy style! He is an immortal God, I consider.


சிறந்த திறனாய்வு….

1 | GiRa ஜிரா
June 28, 2012 at 5:55 pm
புலவர் கீரனின் பேச்சு எனக்கும் மிகவும் பிடிக்கும். அவருடைய சொற்பொழிவு பற்றி எனக்கு என்ன கருத்து உண்டோ அதே கருத்தை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்.
பரதனின் மாண்பு, திருவெம்பாவை, குயில்பாட்டு ஆகியவை எம்.பி3 ஆகக் கிடைக்கின்றன. கந்தபுராணம் நெட்டில் இறக்கினேன். ஆனால் தரம் அவ்வளவு நன்றாக இல்லை. இராமாயணமும் அப்படியே. மாபாரதமும் அப்படியே.