Archive for July 2nd, 2012
’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 4
Posted July 2, 2012
on:22
நம் ஊர் ராமாயணம் பல நாடுகள், மொழிகள், கலாசாரங்களில் சற்றே மாறுபட்ட வடிவத்தில் உண்டு. தாய்லாந்தில் அதன் பெயர் ‘ராமகியான்’.
இந்தியாவில் எழுதப்பட்டுள்ள ராமாயணங்கள் அனைத்தின் அடிப்படைக் கதை ஒன்றுதான் என்றாலும், கிளைக்கதைகள், சம்பவங்களில் பல மாறுபாடுகள் இருக்கும். தாய்லாந்து ராமாயணமும் அப்படிப் பல இடங்களில் வேறுபடுகிறது. குறிப்பாக, கதாபாத்திரங்களின் பெயர்களில்.
இந்த இரண்டு ராமாயணங்கள் இடையே ஓர் ஒப்பீடு இங்கே, இடது பக்கம் உள்ள பெயர் இந்திய ராமாயணத்திலிருந்து, வலது பக்கம் உள்ள பெயர் தாய்லாந்து ராமாயணத்திலிருந்து.
ராமன் : ராமன்
சீதை : சீதை
அனுமன் : அனுமன்
லட்சுமணன் : லட்சுமணன்
பரதன் : பரதன்
சத்ருக்கனன் : சத்ரு
தசரதன் : தோசரத்
கோசலை : கோசூரியா
கைகேயி : கையாகேசி
சுமித்திரை : சமுத்ரா
ராவணன் : தோத்ஸகின்
மண்டோதரி : நங் மோன்டோ
இந்திரஜித் : ரோனபாக்
சூர்ப்பனகை : சமநக்கா
வசிஷ்டர் : வஸிட்
விசுவாமித்திரர் : ஸவாமிட்
மந்தரை : குச்சி
வாலி : பாலி
சுக்ரீவன் : சுக்ரீப்
தாரை : நங்கதாரா
அங்கதன் : ஓங்கட்
விபீஷணன் : பிபெக்
லவன் : லோப்
குசன் : மோங்குட்
(ஆதாரம்: மு. சீனிவாசன் எழுதிய ‘கலை, வரலாற்றுப் பயணங்கள்’ நூல்)
23
இலக்கியச் சிறுபத்திரிகைகளில் மிகப் பிரபலமானது, கணையாழி. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக (சிறு இடைவெளிகளுடன்) தொடர்ந்து வெளியாகிறது. தமிழின் நேற்றைய, இன்றைய பிரபல எழுத்தாளர்கள் பலரும் ஆரம்ப காலத்தில் கணையாழியில் வளர்ந்தவர்கள்தாம்.
ஆனால் பலருக்குத் தெரியாத விஷயம், ‘கணையாழி’ தொடங்கப்பட்டபோது அது ஓர் இலக்கியப் பத்திரிகையாக இல்லை. ’அரசியல், ஆன்மிகம், மருத்துவம், அத்துடன் கொஞ்சம் இலக்கியம்’ என்றுதான் திட்டமிட்டு வெளியிடத் தொடங்கினார்கள். பின்னர்தான் அது இலக்கியத்தில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தது.
முதல் கணையாழி இதழ் வெறும் 24 பக்கங்கள்தான். ஜெயகாந்தன் பேட்டி, அரசியல் கட்டுரைகள், சில கதைகள், விமர்சனங்கள், அட்டைப்படத்தில் ஜவஹர்லால் நேருவும், லால் பகதூர் சாஸ்திரியும்!
(ஆதாரம்: வே. சபாநாயகம் எழுதிய ‘கணையாழியின் கதை’ கட்டுரை)
24
‘பிக்ஸார்’ நிறுவனத்தின் அனிமேஷன் படங்கள் உலகப் பிரபலம். பல நேரங்களில் நிஜ மனிதர்கள் / நடிகர்கள்கூட ஏற்படுத்தமுடியாத உணர்வுகளை அவர்களது கார்ட்டூன் கதாபாத்திரங்கள் நம் மனத்தில் உருவாக்கி அழுத்தமாகப் பதிந்துவிடுகின்றன. இதற்குச் சிறந்த உதாரணமாக, ‘Finding Nemo’ படத்தில் வரும் மீன்களையும், ‘Toy Story’ வரிசைப் படங்களில் வரும் பொம்மைகளையும் குறிப்பிடலாம்.
இந்த மாயம் எப்படி நிகழ்கிறது? பிக்ஸாரில் பணிபுரியும் எம்மா கோட்ஸ் என்பவர் அவர்களுடைய ‘கதை ரகசிய’ங்களை இணையத்தில் பகிர்ந்துகொண்டார். எல்லாக் கதாசிரியர்களுக்கும் பயன்படக்கூடிய பயனுள்ள அந்த டிப்ஸில் சில, இங்கே:
- பிரமாதமான கதை யோசனை ஒன்று உங்கள் மூளையில் தோன்றிவிட்டதா? சந்தோஷம், அதைப் பேப்பரில் எழுதுங்கள், அப்போதுதான் அதில் எத்தனை ஓட்டைகள் உள்ளது என்று தெரியும், பொறுமையாக உட்கார்ந்து சரி செய்யுங்கள், அடுத்தவர்களிடம் காண்பித்து ஆலோசனை கேளுங்கள்
- முதலில், உங்கள் கதையின் க்ளைமாக்ஸை எழுதிவிடுங்கள், மற்றதெல்லாம் அப்புறம்
- கதையைப் பாதி எழுதிவிட்டீர்கள், அடுத்து என்ன செய்வது என்று குழப்பமா? பிரச்னையே இல்லை. ’அடுத்து என்னவெல்லாம் நிகழவே நிகழாது’ என்று யோசித்து ஒரு பட்டியல் போடுங்கள், அந்தப் பட்டியலுக்குள்தான் உங்களுடைய அடுத்த காட்சி ஒளிந்திருக்கிறது
- உங்கள் கதையின் முதல் வடிவம் (first draft) எழுதியாகிவிட்டதா? அதைக் கிழித்துப்போடுங்கள், அப்படியே 2ம், 3ம், 4ம், 5ம் வடிவங்களையும் கிழித்து வீசுங்கள், அதன்பிறகுதான் ஆச்சர்யகரமான மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கும்
- ஒரு கதாபாத்திரம் வெற்றியடைவதுகூட இரண்டாம்பட்சம்தான். அந்த வெற்றிக்காக அது உண்மையுடன் முயற்சி செய்கிறதா? அதுதான் முக்கியம், அதற்காகதான் மக்கள் அந்தப் பாத்திரத்தை ரசிப்பார்கள்
- ஒரு கதாபாத்திரத்தைக் கச்சிதமாக உருவாக்கிவிட்டீர்களா? அது என்னவெல்லாம் சிறப்பாகச் செய்யும் என்று தீர்மானித்துவிட்டீர்களா? இப்போது அந்த நிலையிலிருந்து அதனை 180 டிகிரி எதிர் திசைக்குக் கொண்டுசெல்லுங்கள், முற்றிலும் மாறுபட்ட இந்தச் சூழலில் அந்தக் கதாபாத்திரம் என்ன செய்கிறது என்று பாருங்கள்
- உங்கள் கதாபாத்திரங்கள் ‘எதேச்சையாக’ச் சிக்கலில் மாட்டலாம், தப்பில்லை. ஆனால் அவர்கள் ‘எதேச்சையாக’ அதிலிருந்து மீளமுடியாது, அது ஏமாற்று வேலை, அதுபோன்ற சூழ்நிலைகளில் லாஜிக் மீறாமல் ஒரு தீர்வை யோசியுங்கள்
- உங்களுக்கு எழுதச் சந்தோஷமாக இருக்கும் விஷயங்களைமட்டும் எழுதிக்கொண்டிருந்தால் போதாது, மக்களுக்கு எதைப் பார்க்கச் சந்தோஷமாக இருக்கும் என்பதையும் யோசியுங்கள், இவை இரண்டும் ஒன்றல்ல
- ஒரு யோசனை சரியானபடி அமையாவிட்டால், மனம் தளராதீர்கள். அதை ஓரமாக வைத்துவிட்டு வேறு யோசனையைக் கவனியுங்கள், என்றாவது ஒருநாள் நீங்கள் ஓரங்கட்டி வைத்த இந்தப் பழைய யோசனை திரும்ப வந்து பலன் தரும். உங்கள் உழைப்பு நிச்சயம் வீணாகாது
25
கதை, கவிதை, கட்டுரைகளுக்குத் தலைப்பு எந்த அளவு முக்கியம்?
எனக்குத் தெரிந்த பலருக்கு, நல்ல, புத்திசாலித்தனமான, அதேசமயம் ஜனரஞ்சகமான, ‘அட’ என்று அனைவரையும் வியக்கவைக்கும்படியான ஒரு தலைப்பு வைக்காவிட்டால் எதுவுமே எழுதவராது. கதை எழுதுகிற நேரத்துக்குச் சமமாக, அல்லது அதைவிட அதிகமாகவே தலைப்புக்காக மெனக்கெடுவார்கள்.
இன்னும் சிலர், எழுதி முடித்துவிட்டுத் தலைப்பை யோசிப்பார்கள். என்னைப்போன்ற சோம்பேறிகள் சட்டென்று தோன்றும் ஒற்றை வார்த்தையை Working Titleஆக வைத்துவிட்டு எழுதுவோம், அதன்பிறகு அந்தத் தலைப்பை யோசித்துச் சரி செய்வோம், அப்படியும் எதுவும் சிக்காவிட்டால் ’எடிட்டர்கள் பார்த்துக்கொள்வார்கள்’ என்று விட்டுவிடுவோம்.
கதைகளுக்குத் தலைப்பு வைப்பதுகுறித்து அசோகமித்திரன் என்ன சொல்கிறார்?
”சில படைப்புகள், தலைப்பிலிருந்து உருவாகுபவை. சில, படைப்பு முடிந்தபின் தலைப்பைத் தானே நிர்ணயித்துக்கொள்பவை, தலைப்பு உட்பொருளில் இருந்து இயல்பாக எழுவது.
ஒரு படைப்பு நினைவுகூரப்படுமானால், அது அதன் தலைப்பிற்காக அல்ல. அதன் உட்பொருளுக்காகதான்.”
(ஆதாரம்: அசோகமித்திரன் எழுதிய ‘விடுதலை’ நூலின் பின்னுரை)
26
லியோ டால்ஸ்டாய், அன்டன் செகாவ் இருவரும் ரஷ்ய மொழியின் முக்கியமான எழுத்தாளர்கள்.
ஒருமுறை டால்ஸ்டாய் செகாவைச் சந்திக்கச் சென்றிருந்தார். அப்போதுதான் அவர் செகாவ் எழுதிய ஒரு கதையைப் படித்திருந்தார். அதன் முக்கியக் கதாபாத்திரங்களைப்பற்றியும், அவர்களை செகாவ் எத்தனை அருமையாகச் சித்திரித்திருக்கிறார் என்பதைப்பற்றியும் நீளமாகப் பாராட்டிப் பேசினார் டால்ஸ்டாய். நெகிழ்ச்சியில் அவரது கண்களில் நீர்த்துளிகள் ததும்பி நின்றன.
இத்தனை பாராட்டுகளையும் கேட்ட செகாவுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார். பிறகு ஒரு பெருமூச்சு விட்டபடி சொன்னார், ‘அந்தக் கதையில் அச்சுப் பிழைகள் நிறைய!’
(ஆதாரம்: மாக்ஸிம் கார்க்கி எழுதிய ‘Literary Portraits’ நூல்)
27
அந்தக் காலத்தில் சில எழுத்தாளர்கள் ’நான் எழுதியது அப்படியே அச்சாகவேண்டும். ஒரு காற்புள்ளி, அரைப்புள்ளி, நிறுத்தல்குறிகளைக்கூட மாற்றக்கூடாது’ என்று பத்திரிகை ஆசிரியர்களிடம் சொல்வார்களாம். இப்போதும் அதுமாதிரி நிபந்தனை போடுகிறவர்கள் இருக்கலாம். அவர்களுக்குத் தங்களது எழுத்தின்மீது அப்படி ஒரு நம்பிக்கை.
இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால், எந்த வகை எழுத்துக்கும் எடிட்டிங் / மெருகேற்றல் அவசியப்படுகிறது. எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்துவதில் தொடங்கி, தகவல் பிழைகளைச் சரி செய்வது, வாசிப்பை எளிமையாக மாற்றுவது என்று பலவகையான மாற்றங்களுக்குப்பிறகு அந்தப் படைப்பு வெளியானால், இன்னும் அதிகப் பேரைச் சென்று சேரும்.
இந்த இரண்டு கட்சிகளில் எது சரி? எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதுபற்றி ஒரு பழைய கதையைச் சமீபத்தில் படித்தேன்:
நேரு பிரதமராக இருந்த நேரம். அவருடைய மேடைப் பேச்சுகளைத் தொகுத்து ஒரு நூல் வெளியாகவிருந்தது.
அப்போது, அந்த நூலை எடிட் செய்யவிருந்தவரை நேரு அழைத்தார். ‘இதெல்லாம் நான் எழுதிப் படித்தவை அல்ல, மேடையில் அப்படியே நேரடியாகப் பேசியவை’ என்று சொன்னார். ‘அதனால், பல விஷயங்களைத் திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்லியிருப்பேன், அல்லது ஏதாவது விவரங்களைத் தவறாகச் சொல்லியிருக்கவும் வாய்ப்பு உண்டு. அவை மேடைக்குச் சரியாக இருக்கலாம். ஆனால், புத்தகமாக வரும்போது சரிப்படாது.’
‘ஆகவே, நீங்கள் இந்தப் புத்தகத்தை எடிட் செய்யும்போது பிரதமரோட எழுத்தாச்சே என்று கரிசனம் காட்டவேண்டாம்’ என்றார் நேரு. ‘உங்கள் வேலையைச் சுதந்தரமாகச் செய்யுங்கள். புத்தகமாக வாசிக்கும்போது எதெல்லாம் பொருந்தாது என்று தோன்றுகிறதோ அதையெல்லாம் தாராளமாக வெட்டி எறிந்துவிடுங்கள்!’
(ஆதாரம்: National Book Trust வெளியிட்ட ‘Editors On Editing’ நூலின் முன்னுரை)
28
’தமிழ்த் தாத்தா’ உ. வே. சாமிநாத அய்யர் அவர்களைச் சந்திப்பதற்காக ’தணிகைமணி’ டாக்டர் செங்கல்வராயப் பிள்ளை என்பவர் வந்திருந்தார்.
டாக்டர் செங்கல்வராயப் பிள்ளை மிகப் பெரிய அறிஞர். தேவாரம், திருப்புகழ் ஆகிய நூல்களை ஆராய்ந்து புகழ் பெற்றவர்.
ஆகவே, அவரைப் பார்த்ததும் தமிழ்த் தாத்தா நெகிழ்ந்துபோனார். அவரது கைகளைப் பற்றிக்கொண்டு கண்களில் ஒற்றினார்.
‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று பதறினார் டாக்டர் செங்கல்வராயப் பிள்ளை.
’பின்னே? இவை திருப்புகழை ஆராய்ச்சி செய்த கைகள் ஆயிற்றே, உரிய மரியாதை தரவேண்டாமா?’
சட்டென்று உ.வே.சா. அவர்களின் காலில் விழுந்தார் டாக்டர் செங்கல்வராயப் பிள்ளை, ‘சங்கத் தமிழ் ஏடுகளைத் தேடித் தேடி அலைந்த கால்கள் உங்களுடையவை, உரிய மரியாதை தரவேண்டாமா?’ என்று வணங்கினார்.
(ஆதாரம்: முல்லை பி. எஸ். முத்தையா எழுதிய ‘புலவர்கள் உதிர்த்த முத்துகள்’ நூல்)
(தொடரும்)
நன்றி: http://www.facebook.com/600024books
***
என். சொக்கன் …
02 07 2012