Archive for July 9th, 2012
’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 5
Posted July 9, 2012
on:- In: Book Marks | Books | E-zines | Media | Reading | Serial
- 2 Comments
29
நடிகர் அமிதாப் பச்சன் அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து ஹிந்தியின் ‘நம்பர் 1’ நட்சத்திரமாகியிருந்த நேரம். பல பத்திரிகைகள் அவரைப் பாராட்டிக் கட்டுரைகள், பேட்டிகளை வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள்.
அப்படி ஒரு பேட்டியில், அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று, ‘உங்களுடைய வாழ்க்கையில் மிகவும் தர்மசங்கடமான அனுபவம் எது?’
அதற்கு அமிதாப் சொன்ன பதில்:
‘சமீபத்தில் ஒரு தமிழ் எழுத்தாளரை எதேச்சையாகச் சந்தித்தேன். ஆனால் அவருக்கு நான் யார் என்று தெரியவில்லை. ‘நீங்க என்ன வேலை பண்றீங்க?’ என்று அப்பாவியாகக் கேட்டார்.’
‘நான் அதிர்ந்துபோனேன். இந்தியாவிலேயே மிகப் பிரபலமான நடிகன் என்று என்னை நானே நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இந்த எளிய மனிதர் அந்த கர்வத்தைக் கலைத்துவிட்டார்.’
‘ஒருவேளை, அவர் பொய் சொல்கிறாரோ? உற்றுப்பார்த்தேன். ம்ஹூம், அந்த முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.’
‘அன்றைக்கு அவர்மட்டும் பொய் சொல்லியிருந்தால், என்னைவிடச் சிறந்த நடிகர் அவர்!’
இப்படி அமிதாபைக் கலங்கடித்த அந்தத் தமிழ் எழுத்தாளர், க. நா. சு. உண்மையில் அவருக்கு அமிதாபை நன்றாகத் தெரியும், சும்மா வேண்டுமென்றேதான் அப்படிக் கேட்டாராம்.
(ஆதாரம்: பாரதி மணி எழுதிய ‘க.நா.சு.’ கட்டுரை)
30
எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வேவுக்குப் ‘பாதுகாப்பான வாழ்க்கை’ என்றால் பிடிக்காதாம். ‘Adventure Lifestyle’ என்பதைப் பிரபலமாக்கியவர்களில் அவரும் ஒருவர்.
பதினெட்டு வயதில், இத்தாலியின் ரெட் க்ராஸ் அமைப்பில் சேர்ந்தார் ஹெமிங்வே. அங்கே அவருக்குத் தரப்பட்ட வேலை, போர் முனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுவது. சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்.
இதனால் அவர் ஏகப்பட்ட விபத்துகள், காயங்களைச் சந்திக்க நேர்ந்தது, ஒவ்வொருமுறை அவற்றிலிருந்து தப்பும்போதும் ’திரும்பப் பிறந்த புத்துணர்ச்சி’ என்றார்.
பின்னர், ஸ்பெயின் உள்நாட்டுப் போர், இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றில் செய்தி சேகரிக்கச் சென்றார் ஹெமிங்வே. காளைச் சண்டை, ஆழ்கடல் மீன் பிடித்தல், வேட்டையாடுதல் என்று எதையும் அவர் விட்டுவைக்கவில்லை. எல்லாச் சாகசங்களையும் ’அனுபவித்து’, அவற்றைத் தன்னுடைய படைப்புகளில் பதிவு செய்துவைத்தார்.
(ஆதாரம்: வெ. இறையன்பு எழுதிய ‘போர்த் தொழில் பழகு’ தொடர்)
31
கவிஞர் கண்ணதாசன் எட்டாம் வகுப்புவரைதான் படித்தார். அதற்குமேல் படிக்க வசதி இல்லை. ஒரு தொழிற்சாலையில் குமாஸ்தாவாகச் சேர்ந்தார். வாரம் ஐந்து ரூபாய் சம்பளம்.
இந்தத் தொகை கண்ணதாசனின் செலவுகளுக்குப் போதுமானதாக இருந்தது. ஆனால் அவருக்கு இந்த வேலை பிடிக்கவில்லை. ‘இதில் திருப்தி அடைந்துவிட்டால் என் வளர்ச்சி தடைபட்டுவிடும்’ என்று நினைத்தார்.
அப்போதே அவருக்குக் கவிதை எழுதுவதில் பெரிய ஆர்வம். 40 பக்க நோட்டு ஒன்று வாங்கினார். அலுவலக ரெஜிஸ்டருக்குள் அதை மறைத்துவைத்துத் தினந்தோறும் புதுப்புதுக் கவிதைகளை எழுதினார்.
ஒருநாள், அவருடைய சக ஊழியரான பத்மநாபன் என்பவர் இதைப் பார்த்துவிட்டார். ‘இந்த ஆசை உனக்கு வேண்டாம். கவிதை சோறு போடாது’ என்று கண்டித்தார்.
இதனால் சலனமடைந்த கண்ணதாசன், கதை எழுத முயற்சி செய்தார். பத்திரிகைகளில் இடம் தேடினார். இன்னும் ஏதேதோ முயற்சிகள்.
அதன்பிறகு, அவர் மீண்டும் கவிதைக்குத் திரும்பினார். அதுதான் அவருக்குச் சோறு போட்டது!
(ஆதாரம்: கண்ணதாசன் எழுதிய ‘துன்பங்களிலிருந்து விடுதலை’ நூல்)
32
சாவி எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ மிகப் பிரபலமான நகைச்சுவை நாவல். இப்போதும் தமிழில் அதிகம் விற்பனையாகும் புனைகதைகளில் அதுவும் ஒன்றாக இருக்கும்.
ஆனால், பலருக்குத் தெரியாத விஷயம், கிட்டத்தட்ட இதேமாதிரி இன்னொரு படைப்பையும் வழங்கியிருக்கிறார் சாவி. அந்தப் புத்தகத்தின் பெயர் ‘வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.’
இந்தியத் தேர் ஒன்று ஜப்பான் தெருக்களில் ஓடுகிறது. இதுதான் ஒன்லைன். இந்தக் கதைக்குள் பல நிஜப் பிரபலங்களையும் கற்பனையாக உள்ளே நுழைத்து நகைச்சுவையை ஓடவிட்டிருப்பார் சாவி.
ஜப்பான் தேர்த் திருவிழாவைப்பற்றி மேலும் வாசிக்க ஆசையா? சாவி அவர்களின் படைப்புகள் நாட்டுடைமை ஆகிவிட்டதால், இந்த நாவல் உள்ளிட்ட அவரது பல நூல்கள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. இங்கே : http://tinyurl.com/saavibooks
33
நடிகை பானுமதி ராமகிருஷ்ணா ஒரு சகலகலா வல்லவர். திரைத்துறையில் வெறுமனே நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஒரு நல்ல பாடகியாக, திறமையுள்ள இசையமைப்பாளராக, இயக்குனராக, தயாரிப்பாளராகவும் முத்திரை படைத்தவர்.
திரைக்கு வெளியே, அவர் ஒரு பிரமாதமான (தெலுங்கு) எழுத்தாளரும்கூட. பானுமதியின் ‘அத்தகாரி கதலு’ (அத்தைக் கதைகள்) வரிசை நகைச்சுவைப் படைப்புகள் மிகவும் புகழ் பெற்றவை. இந்தக் கதைகளின் தொகுப்பு நூலுக்காக அவருக்கு ஆந்திர மாநில சாஹித்ய அகாதெமி விருது கிடைத்தது.
அதெல்லாம் போக, கவியரசர் கண்ணதாசன் ஒரு படத்தில் பானுமதியின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்காக எழுதிய வசனம்தான், அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டாக இருக்கும். அந்த வசனம்:
’ஞானத்தில் பானு, நளினத்தில் மதி!’ (பானு = சூரியன், மதி = சந்திரன்)
34
‘மனோ மஜ்ரா’
குஷ்வந்த் சிங் எழுதிய முதல் நாவலின் பெயர் இது. அந்தக் கதை நிகழ்கின்ற கிராமத்தின் பெயரையே நாவலுக்குச் சூட்டியிருந்தார் அவர்.
நாவலை எழுதி முடித்ததும், அதைத் தட்டச்சு செய்கிற பணி தொடங்கியது. இதைச் செய்தவர் குஷ்வந்த் சிங்கின் நண்பர் ஒருவருடைய மனைவி. அவர் பெயர் டாட்டி பெல்.
தட்டச்சுப் பிரதி தயாராகில் வந்தவுடன், டாட்டி பெல்லிடம் ஆர்வமாகக் கேட்டார் குஷ்வந்த் சிங், ‘எப்படி இருக்கு நாவல்?’
‘ம்ஹூம்’ என்று அலட்சியமாக உதட்டைப் பிதுக்கினார் டாட்டி பெல். ‘ஒண்ணும் சரியில்லை, இதை யாரும் பிரசுக்கமாட்டாங்க!’
குஷ்வந்த் சிங்கிற்க்கு ஏமாற்றம். வெறுப்பு. பல நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்கிற பதற்றம். வந்த எரிச்சலில் பேசாமல் அந்த நாவல் பிரதியைக் கிழித்து எறிந்துவிடலாமா என்றுகூட யோசித்தார்.
ஆனாலும், அவருக்கு ஏதோ ஒரு நம்பிக்கை. அதைத் தூக்கி வீசாமல் பத்திரமாக வைத்திருந்தார்.
கொஞ்சநாள் கழித்து. ’க்ரூவ் ப்ரெஸ்’ என்ற பதிப்பகம் இந்திய நாவல்களுக்கான போட்டி ஒன்றை அறிவித்தது. அதற்கு ‘மனோ மஜ்ரா’வை அனுப்பிவைத்தார் குஷ்வந்த் சிங்.
அந்தப் போட்டியில் அவருக்குதான் முதல் பரிசு கிடைத்தது. ’மனோ மஜ்ரா’ என்ற தலைப்புமட்டும் மாற்றப்பட்டு வெளியான அந்த நாவல், இன்றுவரை சுடச்சுட விற்றுக்கொண்டிருக்கிறது. இப்போது அதன் பெயர் ‘Train To Pakistan’
(ஆதாரம்: ஆர். கே. தவான் தொகுத்த ‘Khushwant Singh: The Man and The Writer’ நூல்)
35
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கவிதைகளைப் படித்திருப்பீர்கள். குறிப்பாக, ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’, ‘கதர்த் துணி வாங்கலையோ’ உள்ளிட்ட அவரது காந்தியப் பாடல்களும், ‘தமிழன் என்றோர் இனம் உண்டு’ போன்ற தமிழின் பெருமையைச் சொல்லும் பாடல்களும் மிகவும் புகழ் பெற்றவை.
அவர் ஒரு நல்ல ஓவியரும்கூட, அது தெரியுமா?
மிக இளம் வயதிலேயே அவர் ஓவியம் வரையப் பழகிவிட்டார். தன்னுடைய கல்லூரி ஆசிரியரின் படத்தை வரைந்து கொடுத்து அவரிடமே பாராட்டும், பரிசும் பெற்றிருக்கிறார்.
அப்போது டெல்லியில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ராமலிங்கம் பிள்ளை மன்னரை ஓவியமாக வரைந்து கொடுத்துத் தங்கப் பதக்கம் பெற்றார்.
நாமக்கல் கவிஞரின் மற்ற ஓவியங்கள் என்ன ஆயின என்பது தெரியவில்லை. அவர் வரைந்த விவேகானந்தர் ஓவியம் ஒன்று திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் உள்ளதாகத் தெரிகிறது. அதன் புகைப்படப் பிரதி இங்கே : http://namakkal4u.com/?p=5442
(ஆதாரம்: புலவர் சிவ. கன்னியப்பன் தொகுத்த ‘நாமக்கல் கவிஞர் பாடல்கள்’ நூல்)
(தொடரும்)
நன்றி: http://www.facebook.com/600024books
***
என். சொக்கன் …
09 07 2012