மனம் போன போக்கில்

கடலில் கரைத்த அறிவுரைகள்

Posted on: July 10, 2012

தூதனாகச் சென்ற அனுமன் வாலில் ராவணன் நெருப்பை வைக்க, அதனால் மொத்த இலங்கையும் எரிந்துபோனது எல்லாருக்கும் தெரியும். அதன்பிறகு என்னாச்சு?

இலங்கை எரிந்தபோது, ராவணனும் அவனுடைய குடும்பத்தினர், மந்திரிமார்களும் ஒரு புஷ்பக விமானத்தில் ஏறித் தப்பிவிட்டார்கள். சூடெல்லாம் தணிந்தபின் இலங்கைக்குத் திரும்பினார்கள். விசுவகர்மா / தெய்வதச்சனை அழைத்து இலங்கையைப் பழையபடி மீண்டும் கட்டச் செய்தார்கள்.

இப்படி உருவாக்கப்பட்ட ‘புது இலங்கை’யை ராவணன் மிகவும் ரசித்தான். ‘முன்னையின் அழகு உடைத்து’ என்று கோபம் தணிகிறான்.

இலங்கையை மறுபடிக் கட்டியாச்சு, ஆனால், ஒரு குரங்கினால் அசுரர்கள் நகரம் அழிந்தது என்கிற அவப்பெயரை எப்படித் துடைப்பது? ராவணன் தன் மந்திரிகளையும் நெருக்கமானோரையும் அழைத்து ஆலோசனை நடத்துகிறான்.

அப்போது சேனைகாவலன், மகோதரன், வச்சிரதந்தன், துன்முகன், மகாபார்சுவன், பிசாசன், சூரியசத்துரு (இவர் பெயரை ‘சூரியன் பகைஞன்’ என்று மொழிபெயர்க்கிறார் கம்பர்), யஜ்ஞஹா (இந்தப் பெயர் ‘வேள்வியின் பகைஞன்’ ஆகிறது), தூமிராட்சன் (புகைநிறக் கண்ணன்) என்று பலர் பேசுகிறார்கள். இவர்கள் எல்லாரும் சொல்லும் விஷயங்கள் கிட்டத்தட்ட ஒன்றுதான்:

அசுரர்களின் திறமைக்கு முன்னால் மனிதர்கள் மிகச் சிறியவர்கள். வானரர்கள் அவர்களைவிடச் சிறியவர்கள். ஆகவே, நாம் இதைப்பற்றி ஆலோசித்துக்கொண்டிருப்பதே தப்பு, உடனே புறப்பட்டுச் சென்று அவர்களை நசுக்கி அழித்துவிட்டு வரலாம்

இப்படி எல்லாரும் சொல்லும்போது, ராவணனின் சகோதரன் கும்பகர்ணன் பேச ஆரம்பிக்கிறான். அவன் சொல்லும் கருத்துகள் கொஞ்சம் மாறுபட்டுள்ளன:

1. ராவணா, பிரம்மன் குலத்தில் வந்தவன் நீ, வேதத்தின் பொருள் அறிந்தவன் (’ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய்’), ஆனாலும், நெருப்பை விரும்பிவிட்டாய் (’தீயினை நயப்புறுதல்’), அதனால் வந்த வினைதான் இது

2. சித்திரம்போல் அழகான இலங்கை நகரம் எரிந்துவிட்டதே என்று வருந்துகிறாய், அரசியல் (இதற்குக் ‘கோவியல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் கம்பர் : ‘கோ இயல்’) கெட்டுப்ப்பொனது என்று புலம்புகிறாய். இன்னொருவன் மனைவிமேல் ஆசைப்பட்டு அவளைச் சிறை வைத்த பாவத்துக்கு வேறு என்ன பரிசு கிடைக்கும்? (’வேறொரு குலத்தான் தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ?’)

3. உன்னுடைய நல்ல நகரம் அழிந்துவிட்டது என்று இத்தனை தூரம் வெட்கப்படுகிறாயே (’நல் நகர் அழித்தது என நாணினை’), இதற்கு முன்னால், உன்னுடைய மனைவிமார்களெல்லாம் அழகான புன்சிரிப்போடு காத்திருக்கையில் யாரோ ஒருவனுடைய மனைவியின் காலில் விழுந்து விழுந்து எழுந்தாயே (’ஒருத்தன் மனை உற்றாள் பொன் அடி தொழத் தொழ’), அது ரொம்பப் பெருமையான செயலோ?

4. இலங்கை நேற்றைக்குதான் எரிந்தது. ஆனால் என்றைக்கு நீ சீதையைக் கதறக் கதறத் தூக்கி வந்து, இரக்கமில்லாமல் சிறை வைத்தாயோ, அன்றைக்கே அரக்கர் புகழ் அழிய ஆரம்பித்துவிட்டது. பின்னே? அற்பத் தொழில் செய்தவர்களுக்குப் புகழா கிடைக்கும்? (’புன் தொழிலினார் இசை பொறுத்தல் புலமைத்தோ?’)

5. எந்தத் தவறும் செய்யாத ஒருத்தியைச் சிறையில் அடைப்போம், ஆனால் அதைப்பற்றி யாரும் பேசக்கூடாது, நம்மைப் புகழவேண்டும், வாயைத் திறந்தால் ‘மானம் பெரிது’ என்று பேசுவோம், ஆனால் உள்ளுக்குள் காமத்தை வளர்த்துக்கொண்டு நிற்போம் (’பேசுவது மானம், இடை பேணுவது காமம்’), கடைசியில் மனிதர்களைச் ‘சிறியவர்கள்’ என்று கேலி பேசுவோம், நல்லாயிருக்குய்யா  நம்ம நியாயம்!

6. ராவணா, நீ பெரியவர்களுக்கான முறைப்படி நடந்துகொள்ளவில்லை, சிறுமையான ஒரு செயலைச் செய்தாய், அந்தப் பழி மறையவேண்டுமானால், உடனே சீதையை விடுவித்துவிடு (’மட்டவிழ் மலர்க் குழலினாளை இனி மன்னா விட்டிடுது’), அதனால் நமக்குப் பெருமைதான் அதிகரிக்கும்,

7. ஒருவேளை நீ அவளை விடுவிக்காவிட்டால், அந்த மனிதர்கள் போருக்கு வருவார்கள், நம்மை வெல்வார்கள், இப்போது நீ சேகரித்துக்கொண்டிருக்கிற பழியோடு ஒப்பிடும்போது, ‘மனிதர்களிடம் போரில் தோற்றோம்’ என்கிற பழி சிறியதுதான்

8. மரங்கள் நிறைந்த காட்டில், தன்னுடைய வில் திறமையினால் கரன் என்ற அரக்கனை ஜெயித்தான் ராமன். அங்கே அவன் தொடங்கிவைத்த ‘அரக்கர் ஒழிப்புப் பணி’ இன்னும் முடியவில்லை. நம்மை அழித்தால்தான் அது முடியும். இப்போது நடப்பதெல்லாம் அதற்கான முன்னோட்டங்கள்தான்

9. ஒருவேளை அவர்கள் நம்மீது படையெடுத்துவந்தால், அந்த ராமன் தனியாக நிற்கப்போவதில்லை, அவனோடு சகல தேவர்களும், ஏழு உலகங்களும் சேர்ந்துவிடும், அதனால் நமக்குதான் அவஸ்தை

10. நான் இத்தனை சொல்லியும் நீ கேட்கப்போவதில்லை. சீதையை விடுவிக்கப்போவதில்லை. குறைந்தபட்சம், இந்த ஒரு விஷயத்தையாவது கேள். போர் என்று வந்தபின், ராமன் இங்கே வரும்வரை காத்திருக்கவேண்டாம், இப்போதே கடலைக் கடந்து சென்று அந்த மனிதர்களையும் குரங்குகளையும் மடக்கி மொத்தமாக அழித்துவிடுவோம்

இந்த நீண்ட பகுதியில், கும்பகர்ணனின் மனத்தில் என்ன உள்ளது என்பது தெளிவாக வெளிப்படுகிறது. மற்றவர்களெல்லாம் ராஜாவுக்குச் சோப்புப் போட்டுக்கொண்டிருக்கையில், இவன்மட்டும் நேரடியாக அவன் செய்த குற்றத்தைச் சொல்கிறான், அதைத் திருத்திக்கொள்வதற்கான வழியைச் சொல்கிறான், ‘ஆனா, நீ இதையெல்லாம் கேட்கமாட்டே’ என்றும் சொல்கிறான்.

ஆகவே, முத்தாய்ப்பாக ‘சரி, எப்படியும் அவங்களோட சண்டை போடறதுன்னு ஆகிடுச்சு, அந்தச் சண்டையில நாம ஜெயிக்கறதுக்கு வாய்ப்புகள் ரொம்பக் குறைவு, இருந்தாலும், போர் நிச்சயம்ங்கறதால, இப்பவே போய் அவங்களை அழிக்க முயற்சி செய்யறதுதான் புத்திசாலித்தனம்’ என்கிறான் கும்பகர்ணன்.

இதற்கு ராவணன் சொல்லும் பதில் என்ன?

நாம் கேட்பது வேறு, கேட்க விரும்புவது வேறு. ராவணனுக்குக் கும்பகர்ணன் சொன்ன எந்த அறிவுரையும் காதில் விழவில்லை, அவன் தன்மீது சாட்டும் குற்றங்களையும் கேட்டும் கேட்காததுபோல் அலட்சியப்படுத்துகிறான், நிறைவாக அவன் சொன்ன ‘இப்பவே சண்டைக்குப் போகலாம்’ என்ற பகுதியைமட்டும் பிடித்துக்கொள்கிறான்:

’நன்று உரை செய்தாய் குமர, நான் இது நினைத்தேன்,

ஒன்றும் இனி ஆய்தல் பழுது, ஒன்னலரை எல்லாம்

கொன்று பெயர்வோம், நமர் கொடிப்படையை எல்லாம்

இன்று எழுத, நன்று’ என இராவணன் இசைத்தான்

எப்படி இருக்கிறது கதை? ‘நீ சொன்னது ரொம்பக் கரெக்ட் தம்பி, நானும் அதேதான் நினைச்சேன், இனிமே எதுவும் தப்பு நடக்காது, உடனே கிளம்பு, எல்லாரையும் அழிச்சுட்டு வந்துடுவோம்’ என்கிறான் ராவணன். கும்பகர்ணன் அத்தனை நீளமாகச் சொன்ன அறிவுரைகளைப் பற்றியோ, சீதையை விடுவிப்பதுபற்றியோ ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை, அதில் தனக்கு வேண்டியதைமட்டும் எடுத்துக்கொண்டு ’இப்பவே சண்டைக்குப் போகலாம், வா’ என்கிறான்.

கேட்க விரும்புவதைமட்டுமே கேட்கிற இந்த மனோபாவம் ராவணனுக்குமட்டும் சொந்தமானது அல்ல. இன்றைக்கும் இதனைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம்.

சில வாரங்களுக்கு முன்னால் எங்கள் அலுவலகத்தில் ஒரு பிரச்னை. பணிநிமித்தம் செய்கிற பயணங்களுக்குத் தரும் தினசரி Allowance போதவில்லை என்று சிலர் குரல் எழுப்பினார்கள். அந்தத் தொகையை உயர்த்துவதுபற்றி ஓர் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். பலர் தங்களுடைய கருத்துகளைப் புள்ளி விவரங்களுடன் சொன்னார்கள். நிர்வாகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பிடிவாதமாகத் தங்களுடைய மறுப்புகளை முன்வைத்தார்கள்.

இதனால் கடுப்பான என்னுடைய நண்பர் ஒருவர் இப்படிக் கேலி செய்தார்: ‘நாங்க இவ்ளோ சொல்லியும் நீங்க கேட்கமாட்டேங்கறீங்க, ட்ராவல் பண்றவங்களோட ப்ராக்டிகல் கஷ்டங்களைப் புரிஞ்சுக்கமாட்டேங்கறீங்க, பேசாம அலவன்ஸே கிடையாதுன்னு அறிவிச்சுடுங்க, நாங்க எங்க சொந்தக் காசுலயே பயணம் செய்யறோம்.’

அதற்கு அந்த Admin Manager சொன்ன பதில், ‘நல்ல ஐடியா. இதையே Final Decisionனா எடுத்துக்கலாமா?’

அட, ராவணா!

***

என். சொக்கன் …

10 07 2012

6 Responses to "கடலில் கரைத்த அறிவுரைகள்"

அருமை! உங்கள் கதை சொல்லும் பாணி எனக்கு ரொம்பப் பிடிக்கும். கதையோடு கருத்தையும் சேர்த்துத் தருவது உங்கள் USP 😉

amas32

இன்றைய தேதி ஆடி 10 ஆ?

இதே போல் எங்கள் அலுவலகத்திலும் சமகால இராவணன்கள் பலர் உள்ளனர். கூடிய விரைவில் கம்ப இராமாயணத்திற்கு எளிய உரைநடை தங்களிடமிருந்து எதிர்பாக்கலாம் போல :))

அனுமன் வைத்த தீயினால் முழு இலங்கையுமா அழிந்தது? இல்லை என நினைக்கிறேன். அரண்மனைப் பகுதியில் ஒரு பகுதி எரிந்தது என நினைவு. சரி பார்த்துச் சொல்லுங்களேன். நானும் பார்க்கிறேன் 🙂

கும்பகர்ணன் ஒரு உயர்ந்த பாத்திரம். என்னைக் கேட்டால் வீடணனை விடவும் உயர்ந்த பாத்திரம்.

கும்பகர்ணனுக்கு நடப்பதும் நடக்கப்போவதும் நன்றாகப் புரிந்து விடுகிறது. ஆனாலும் ஒரு முயற்சியாக அறிவுரை சொல்கிறான். இராவணன் கேட்க வேண்டுமே!

வீடணனும் நல்லதை எடுத்துச் சொல்கிறான். ஆனால் எந்த இடத்தில் கும்பகர்ணனின் சிந்தனை உயர்ந்து இருக்கிறது?

நடக்கப் போவது தெரிந்து விடுகிறது கும்பகர்ணனுக்கு. பெருவாழ்வு வாழ்ந்த ஊரும் உறவும் வீழப்போகிறது என்று புரிந்து அண்ணனோடு போர் புரிய முடிவு செய்கிறான்.

போர்க்களத்திலும் ஆள் பிடிக்க வருகிறான் வீடணன். மறுபக்கம் வரச்சொல்லி அழைக்கிறான். அதனால் கிடைக்க இருக்கும் பலன்களை அடுக்கிறான்.
ஆனால் கும்பகர்ணன் நல்லவன். ஒரு பாட்டு வைக்கிறார் கம்பர். அந்த ஒரு பாட்டில் வீடணனையும் இராமனையும் லபக்கென தூக்கிச் சாப்பிட்டு விடுகிறான் கும்பகர்ணன்.

செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்ச் செல்வந்தேறி
வம்பிட்டத் தெரியல் என்முன் உயிர் கொன்ற பகையை வாழ்த்தி
அம்ம்பிட்டுத் துன்னம் கொண்ட புண்ணுடை நெஞ்சோடைய
கும்பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றையும் ஆடல் கொள்வேன்

”கும்பிட்டு வாழ்கிலேன்” என்ற ஒரு பேச்சில் உயர்ந்து போகின்றான் கும்பகர்ணன்.

வடக்கில் அயோத்தியை ஆண்டவனாகவே இருக்கட்டும். போர் முடிந்த பிறகு வீடணன் வாழ்ந்த வாழ்வு “கும்பிட்டு வாழ்ந்த” வாழ்வுதான். ஆனால் போருக்கு முன்? அனைவரும் கும்பிட வாழ்ந்த வாழ்வு.

அப்படிப்பட்ட கும்பிட்டு வாழும் வாழ்க்கையைக் கும்பகர்ணன் விரும்பவில்லை. வீடணனுக்கு வெறும் மறுமொழியை மட்டும் கூறாமல் அவனுக்கு அறிவுரையையும் வைத்துச் சொல்கிறான்.

“வீடணா, இந்த இலங்கையின் மதிற்சுவர்கள் செம்பு கலந்து உறுதியாகக் கட்டப்பட்டவை. ஏன்? இலங்கைத் திருநகரில் இருக்கும் செல்வம் அப்படி அளப்பரியது! அதைப் பாதுகாக்கத்தான் உறுதியான மதில்கள்.

அந்த உறுதியான மதில்கள் நிறைந்த இலங்கை நகரத்தையும் அதன் செல்வங்களையும் விரும்பி, கூற்றுவனையும் முன்பு வெற்றி கொண்ட நான், மலர் மாலைகளை அணிந்தவனாகிய என்னுடைய முன்னன்(அண்ணன்) இராவணனை அம்பிட்டுத் துளையிட்டுக் கொன்ற பகைவனை கும்பிட்டு வாழேன்.”

இந்த விளக்கத்தில் கும்பகர்ணனுடைய நிலையை விட, வீடணுக்கான அறிவுரைதான் மறைபொருளாக உள்ளது.
வீடணுக்குப் புரிந்தாலும் தன்னிலை மாறாமல் இருக்கிறான்.

அவன் அங்கிருத்தல் தகாது என்று திருப்பி அனுப்புகிறான் கும்பகர்ணன். அதற்கு முன் ஒரு செயல் செய்கிறான். அந்த ஒரு செய்கையில் வீடணன் பாத்திரம் கீழே விழுந்து விடுகிறது.

தம்பி வீடணனை அழைத்து அணைக்கிறான் கும்பகர்ணன். அப்போது ஒரு சொல் சொல்கிறான்.
“இன்றொடு தவிர்ந்தது அன்றே உடன்பிறப்பே”
இன்றோடு உடன்பிறப்பு என்ற உறவு அற்றுப் போனது என்று உண்மையை உரக்கச் சொல்லி விடுகிறான்.

நாம் இங்கு இரண்டு பாடல்கள் பார்த்தோம். கும்பகர்ணன் பேசும் ஒவ்வொரு பேச்சும் சுருக். நறுக். ஆனாலும் போட்ட புனிதப் பசு வேடம் கலையாமல் வீடணன் விலகிச் செல்ல வேண்டியிருக்கிறது.

அழகு அழகு 👌

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,069 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

July 2012
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
%d bloggers like this: