’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 6
Posted July 16, 2012
on:- In: Book Marks | Books | E-zines | Media | Reading | Serial
- 5 Comments
36
பிறருக்காக எழுதுகிறவர்கள் ஒருபக்கமிருக்க, தனக்காக எழுதுகிறவர்கள்தான் உலகில் அதிகம். டைரி / தினசரி நாள்குறிப்புப் பழக்கம் உள்ளவர்களைச் சொல்கிறேன்.
இப்படிப் ‘பர்ஸன’லாக எழுதப்பட்ட பல டைரிக் குறிப்புகள் பின்னர் பொதுவெளியில் புத்தகமாக வெளியாகிப் பிரபலமடைந்திருக்கின்றன. தமிழில் அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய நாள்குறிப்புகளை எழுதிப் புகழ் பெற்றவர், ஆனந்தரங்கம் பிள்ளை. 18ம் நூற்றாண்டில் இந்தியாவின் சில பகுதிகளை ஆட்சி செய்த பிரெஞ்சு அரசாங்கத்தைப்பற்றிய பல சுவாரஸ்யமான விவரங்கள் இவரது டைரியில் கிடைக்கின்றன. இந்தக் குறிப்புகளைப் பின்புலமாகக் கொண்டு பிரபஞ்சன் எழுதிய ஓர் அருமையான சரித்திர நாவல், ‘மானுடம் வெல்லும்’.
இன்னும் இருநூறு வருடங்கள் கழித்து, இன்றைய வலைப்பதிவுகள் அப்படிப்பட்ட சரித்திர / வாழ்வியல் ஆவணங்களாக அமையுமா?
37
எழுத்தாளர் ஆர். கே. நாராயணுக்குக் குடைகள்மீது அலாதி பிரியமாம். உலகின் பல பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட குடைகளைச் சேகரித்துவைத்திருந்தாராம்.
இத்தனைக்கும், அவர் வாழ்ந்த மைசூரில் அடிக்கடி மழையெல்லாம் பெய்யாது. ஆனாலும் மடித்துவைக்கப்பட்ட குடையோடுதான் அவர் எப்போதும் வெளியே கிளம்புவார்.
சரி, ஆர். கே. நாராயணிடம்தான் இத்தனை குடைகள் இருக்கின்றனவே என்று யாராவது அவரிடம் ஒரு குடையை இரவல் கேட்டுவிட்டால் போச்சு. என்னதான் அடைமழை கொட்டினாலும், பொக்கிஷம்போல் சேமித்துவைத்திருக்கும் தன்னுடைய குடை கலெக்ஷனிலிருந்து ஒரு குடையை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அவருக்கு மனமே வராதாம்.
ஆக, அவரைப் பொறுத்தவரை குடைக்கும் மழைக்கும் சம்பந்தமே இல்லை. ’எனக்கு அது ஒரு Status Symbol, நடைக்குத் துணைவன்’ என்பார். இந்தக் காரணத்தாலே, குடைப் பிரியர்களான மலையாளிகளை அவருக்கு ரொம்பப் பிடிக்குமாம்.
(ஆதாரம்: புகைப்படக் கலைஞர், பத்திரிகையாளர் டி. எஸ். நாகராஜன் எழுதிய ’The R. K. Narayan Only I Knew’ கட்டுரை)
38
ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தவரிடம் ‘எப்படி இருக்கு?’ என்று கேட்கிறோம். என்ன பதில் வரும்?
சிலர் ‘சூப்பர்’ அல்லது ‘குப்பை’ என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுவார்கள். இந்த மிகைப் பாராட்டும் சரி, தடாலடி எதிர்ப்பும் சரி, அந்தப் புத்தகத்தை எழுதியவர்களுக்குச் சுத்தமாகப் பயன்படாது.
வேறு சிலர், கொஞ்சம் விரிவாகத் தங்களது கருத்துகளைச் சொல்வார்கள், ‘இந்தப் பகுதி சுவையா இருந்தது, அதுக்கப்புறம் நாலஞ்சு சாப்டர் ரொம்ப இழுவை, எப்படா முடியும்ன்னு ஆகிடுச்சு, க்ளைமாக்ஸ் படு போர்’… இப்படி.
இதுபோன்ற வாசகர் கருத்துகளைச் சில எழுத்தாளர்கள் கேட்க விரும்புவதே இல்லை. ‘நான் எழுதியதை விமர்சிக்க நீ யார்?’ என்று வாசகனை ஒரு படி கீழே வைத்துப் பார்க்கிற அந்த மனப்பான்மை ஒருபுறமிருக்க, இப்படிப்பட்ட அனுபவக் குறிப்புகளைத் தொகுத்து அலசினால், எந்தப் பகுதி பலரால் விரும்பப்படுகிறது, எந்தப் பகுதி வெறுக்கப்படுகிறது, எதைத் தாண்டிச் செல்ல அவர்கள் சிரமப்படுகிறார்கள் என்று பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளமுடியும். அதன் அடிப்படையில் ஒரு சுமாரான புத்தகத்தைக்கூட நன்கு எடிட் செய்து சுவையாக்கிவிடமுடியும், அல்லது, அடுத்த புத்தகத்தை எப்படி வடிவமைக்கலாம் என்று புரிந்துகொள்ளமுடியும். கிட்டத்தட்ட சினிமா எடிட்டிங்மாதிரிதான்.
அதற்கான ஒரு சாத்தியத்தை, இப்போதைய ஈபுத்தகங்களும் அவற்றை படிப்பதற்கான கருவிகளும் (Ebook Readers) உருவாக்கியிருக்கின்றன. பல ஆயிரம் பேர் ஒரே புத்தகத்தை டவுன்லோட் செய்து இந்தக் கருவிகளின்மூலம் வாசிக்கிறபோது, யார் என்ன செய்கிறார்கள், எதை எப்படி வாசிக்கிறார்கள் என்று எளிதில் வேவு பார்த்துவிடலாம். அதை அடிப்படையாக வைத்து அந்தப் புத்தகத்தையோ, மற்ற புத்தகங்களையோ சிறப்பாக்கலாம். இதுபற்றி ஒரு மிகச் சுவையான கட்டுரையை ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது : http://online.wsj.com/article/SB10001424052702304870304577490950051438304.html
இன்னொருபக்கம், இப்படிப்பட்ட புள்ளி விவரச் சேமிப்புகளைப் பலர் எதிர்க்கிறார்கள். ’புத்தக வாசிப்பு என்பது ஒரு தனிப்பட்ட அனுபவம். அதில் மற்றவர்கள் எட்டிப்பார்ப்பது அழகல்ல’ என்பது ஓர் எதிர்ப்பு, ‘இதுபோன்ற வாசக அனுபவத்தின் அடிப்படையில் புத்தகங்கள் வடிவமைக்கப்படுவது தவறு, அது எழுத்தாளர்களின் உரிமையைப் பாதிக்கிறது, படைப்பு என்பது ஒரு கலை, Product Design அல்ல’ என்பது இன்னோர் எதிர்ப்பு.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
39
நீங்கள் ஒரு புதிய புத்தகத்தை எழுதி முடித்து வெளியிடுகிறீர்கள். உடனே அதற்கான பதிப்புரிமை உங்களுக்குத் தானே கிடைத்துவிடுகிறது. இதைத் தனியே எங்கும் பதிவு செய்யத் தேவையில்லை.
அதேசமயம், நாம் விரும்பினால், அல்லது ’இந்தப் படைப்பு மற்றவர்களால் காப்பியடிக்கப்படக்கூடும், பிரச்னைகள் எழும்’ என்று முன்கூட்டியே எதிர்பார்த்தால், நம்முடைய உரிமையை முறைப்படி பதிவு செய்துகொள்ளலாம். இதற்கான வழிமுறை:
- நம்முடைய நூல்பற்றிய விவரங்கள், அதன் மூன்று பிரதிகள், பதிவுக் கட்டணம் ரூ 50 ஆகியவற்றைச் சேர்த்துத் தில்லியில் உள்ள காப்புரிமைப் பதிவாளருக்கு அனுப்பவேண்டும்
- அவர்கள் இதனைப் பரிசீலித்துப் பதிப்புரிமைச் சான்றிதழ் வழங்குவார்கள்
- கூடவே, நூலின் பிரதி ஒன்றில் முத்திரை குத்தி உங்களுக்கே திரும்ப அனுப்பிவைப்பார்கள்
- அதன்பிறகு, யாரேனும் உங்கள் நூலைத் தவறுதலாகக் காப்பியடித்தால், அல்லது வேறுவிதத்தில் பயன்படுத்தினால், அவர்கள்மீது வழக்குத் தொடுக்கலாம், தவறு நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதங்கள்முதல் மூன்று வருடங்கள்வரை சிறைத் தண்டனையோ, ஐம்பதாயிரம் ரூபாய்மூலம் இரண்டு லட்ச ரூபாய்வரை அபராதமோ விதிக்கப்படலாம்
- அதேசமயம், நூலின் சில வரிகள், பக்கங்கள், பகுதிகளைச் சொந்தப் பயன்பாட்டுக்காகவோ, ஆராய்ச்சிக்காகவோ, விமர்சனத்துக்காகவோ, மதிப்புரைக்காகவோ, சட்டம் தொடர்பான பணிகளுக்காகவோ யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இது உரிமை மீறல் ஆகாது
(ஆதாரம்: பழ. அதியமான் எழுதிய ‘காப்புரிமை பற்றிச் சில குறிப்புகள்’ கட்டுரை)
40
கடந்த சில பத்தாண்டுகளாகத் தமிழ்ப் பத்திரிகைகளைத் தொடர்ந்து வாசிக்கிற எவரும் ஓவியர் ’ஜெ’ என்கிற ஜெயராஜை அறியாமல் இருக்கமுடியாது. பல பிரபலங்களின் கதைகள், தொடர்களுக்கு வரைந்திருந்தாலும், அவரை மிகப் பிரபலமாக்கியவை, சுஜாதாவின் கணேஷ், வசந்த் தொடர்களுக்கு அவர் வரைந்த ஓவியங்களும், மற்ற பலருடைய கதைகளுக்குத் தீட்டிய ’கவர்ச்சி’ கலந்த சித்திரங்களும்தாம். குறிப்பாக, சாண்டில்யனின் சரித்திர நாவல்களுக்கு அவர் வரைந்த ஓவியங்களை இன்றைக்கும் நினைவில் வைத்திருப்பதாகப் பலர் ‘ஜொள்’வார்கள்.
பலருக்குத் தெரியாத விஷயம், ஜெயராஜ் பெயரில் உள்ள ‘ராஜ்’ என்பது மூதறிஞர் ராஜாஜியைக் குறிக்கிறது. இவர் பிறந்த தினத்தன்று ராஜாஜி ஒரு முக்கியமான தேர்தலில் வென்று பெரிய பதவி ஒன்றில் அமர்ந்தாராம். அதைக் குறிக்கும்வகையில் ஜெயராஜின் தந்தை அவருக்கு இந்தப் பெயரைச் சூட்டினராம்.
ஜெயராஜின் கையெழுத்திலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் உண்டு. ’ஜெ’ என்ற அந்தப் பெயரின் முன்னும் பின்னும் உள்ள புள்ளிகள் ஒவ்வொன்றும், அவரது குடும்ப உறுப்பினர்களைக் குறிக்கின்றன. ஜெ வரைந்த ஓவியங்களைக் கால வரிசைப்படி எடுத்துப் பார்த்தால், இந்தப் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதைக் காணலாம்!
(ஆதாரம்: பத்திரிகையாளர் ஸ்ரீஹரி பதிவு செய்த ஓவியர் ஜெயராஜின் பேட்டி)
41
கவிஞர் சுரதாவின் இயற்பெயர் ராஜகோபாலன். பாரதிதாசன் பாடல்கள்மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், புதுவைக்குச் சென்று அவரை நேரில் சந்திக்க விரும்பினார்.
அப்போது சுரதா (ராஜகோபாலன்) பள்ளிச் சிறுவர். புதுச்சேரி சென்று திரும்புவதற்கான காசு கைவசம் இல்லை.
ஆகவே, அவர் ஒரு வீட்டில் சுண்ணாம்பு பூசும் வேலையை ஏற்றுக்கொண்டார். அதில் கிடைத்த கூலியை வைத்துப் பயணம் செய்து புதுச்சேரி சென்று சேர்ந்தார். பாரதிதாசனை நேரில் சந்தித்தார். ‘நான் உங்களுக்குப் பணிவிடை செஞ்சுகிட்டு இங்கேயே இருந்துடறேன்’ என்றார்.
பாரதிதாசன் அதை ஏற்கவில்லை. ’அப்பா, அம்மாவுக்குச் சொல்லாம நீ இப்படித் தனியாப் புறப்பட்டு வந்ததே தப்பு’ என்று கண்டித்தார். ‘வேணும்ன்னா அவங்க அனுமதியோட வா, என்னோட தங்கலாம்’ என்று அறிவுரை சொன்னார். திரும்பிச் செல்வதற்கான தொகையையும் கையில் கொடுத்து அனுப்பிவைத்தார்.
அந்தச் சந்திப்பின்போது பாரதிதாசன் அன்பாகப் பேசிய விதம் இளைஞர் ராஜகோபாலனை மிகவும் ஈர்த்துவிட்டது. ’கனக சுப்பு ரத்தினம்’ என்ற இயற்பெயரைக் கொண்ட அந்தப் பாரதிதாசனின் தாசன் என்ற அர்த்தத்தில் தன்னுடைய பெயரைச் ‘சுரதா’ (சுப்பு ரத்தின தாசன்) என்று மாற்றிக்கொண்டுவிட்டார்.
‘சுரதா’வின் இந்தப் பெயர்க் காரணம் எல்லாருக்கும் தெரியும். உவமைகளைக் கையாளும் அற்புதத் திறமை காரணமாக, அவருக்கு ‘உவமைக் கவிஞர்’ என்று இன்னொரு பெயர் உள்ளதும் தெரியும்.
ஆனால், சுரதாவுக்கு ’உவமைக் கவிஞர்’ என்று பெயர் சூட்டியது யார், தெரியுமோ?
1945, 46ம் ஆண்டுவாக்கில், பிரபல நாவலாசிரியர் ஜெகச்சிற்பியன் ’சிரஞ்சீவி’ என்ற பெயரில் ஒரு பத்திரிகை நடத்திவந்தார். அதில் அவர்தான் சுரதாவை ‘உவமைக் கவிஞர்’ என்று முதன்முறையாகக் குறிப்பிட்டார். அதன்பிறகு எல்லாரும் அதனைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள்.
(ஆதாரங்கள்: சுரதா எழுதிய ‘வினாக்களும், சுரதாவின் விடைகளும்’ புத்தகம் & விக்கிரமன் எழுதிய ‘உவமைக் கவிஞர் சுரதா’ கட்டுரை)
42
ஒரு பெரிய கவிஞர், இன்னொரு சிறந்த கவிஞரின் புத்தகத்துக்கு எழுதிய வாழ்த்து வெண்பா இது. யார் யாருக்காக எழுதியது என்று ஊகிக்கமுடிகிறதா பாருங்கள்:
நித்தம் இளமை நீடிக்கும் படிஈசன்
வைத்திலனே என்று வருந்துகிறேன், சித்த(ம்)மகிழ்
சித்திரமும் பாட்டும் சிறந்து விளங்கிடும்இப்
புத்தகத்தைப் பார்க்கும் பொழுது
விடை:
பாராட்டியவர்: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
பாராட்டுப் பெற்ற நூல்: குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா எழுதிய ’மலரும் உள்ளம்’
(தொடரும்)
நன்றி: http://www.facebook.com/600024books
***
என். சொக்கன் …
16 07 2012
5 Responses to "’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 6"

அப்போ ஆர்.கே.நாராயணன் ‘கொடை வள்ளல்’ இல்லையா?
ஜெவிற்குப் பின் உள்ள புள்ளிகள் பற்றி ஒருமுறை நானும் விகடனும் பகுதியில் அவர் சொன்னதாக நினைவு


சொக்கரே!! ஆடிக்கு ஒரு முறை அம்மாவசைக்கு ஒரு முறை என எழுதும் உத்தேசமோ? ; )

1 | திண்டுக்கல் தனபாலன்
July 16, 2012 at 5:54 pm
நல்லதொரு தொகுப்பு…
பகிர்வுக்கு நன்றி… தொடர வாழ்த்துக்கள்…