Archive for July 23rd, 2012
அலங்கரிப்பு
Posted July 23, 2012
on:- In: Fiction | Magazines | Media | Short Story | Uncategorized
- 9 Comments
பஸ்ஸிலிருந்து இறங்கியதும், ரஞ்சனாவின் கால்களில் சக்கரம் தொற்றிக்கொண்டாற்போலிருந்தது.
கைக்கடிகாரத்தில் நேரம் பார்க்கக்கூட அவசியப்படவில்லை. மணி ஒன்பதைத் தொடப்போகிறது என்று ஏதோ ஒரு பழகிப்போன உள்ளுணர்வு உந்தியதில், சட்டென்று சரிந்து விலகிய குறுக்குவழி மண் பாதையில் இறங்கி விரைந்தாள்.
லேசான சாக்கடை நாற்றம். ஒழுங்கற்ற மண் தரையும் சமீபத்திய மழையொன்றில் நசிந்திருந்தது. ஆகவே, மலிவான செருப்பால் புடவையின் பின்புறத்தில் சேறு அடிக்கிறதோ என்று சந்தேகம் தோன்றியது அவளுக்கு. ஆனால் நின்று அதைச் சோதிப்பதற்கு நேரமில்லை.
ஒன்பது மணியை நெருங்கியபின் ஒவ்வொரு நிமிடமும் முள்ளின்மீது நகர்வதுபோல்தான். அவள் வேலை பார்க்கிற உசத்தி ஹோட்டலில் இத்தனை காலையில் அப்படியொன்றும் வெட்டி முறிக்கிற வேலை இல்லை. என்றாலும், தனது பதவியின் ஆளுமையைக் காட்டுவதற்காகவே ‘ஏன் லேட்?’ என்று அவள்மீது கோபமாகப் பாய்கிற மேனேஜரிடம் குழைந்து நிற்பது சலித்துப்போய்க்கொண்டிருக்கிறது.
‘என்றைக்காவது அந்த ஆள் கழுத்தில் கத்தியைப் பாய்ச்சிவிடப்போகிறேன்’ என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள் ரஞ்சனா. அவளது பொருந்தாத வன்மத்தைப் பரிகசிப்பதுபோல் கூடவே சிரிப்பும் வந்துவிட்டது.
அனிச்சையாகக் கைப்பையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டாள் ரஞ்சனா. உள்ளே சின்னதும், பெரியதுமாக நான்கு கத்திகள் இருப்பது உண்மைதான். ஆனால், அவற்றை வைத்துக்கொண்டு கழுத்து நறுக்கமுடியாது, கேரட்தான் நறுக்கலாம்.
ரஞ்சனாவுக்கு வெள்ளரி, தக்காளி, பப்பாளி, கேரட் முதலான காய்கறிகளை நறுக்கி, அலங்கரிக்கிற வேலை. கேரட்டிலிருந்து ரோஜாப்பூ, வெள்ளரியில் சிறு முதலை, தக்காளியில் தாமரை என்று விதவிதமாகச் செய்து, சூடாகத் தயாராகி வருகிற வடக்கத்தி மற்றும் சீனப் பதார்த்தங்களைப் பாங்காக அலங்கரித்து வழியனுப்பவேண்டும்.
ஆரம்பத்தில் இதையெல்லாம் யார், எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு. கேரட்டை நறுக்கிப் பொறியல் செய்யாமல் அதில் சிற்பம்போல் எதையோ செதுக்கிப் பார்க்கவேண்டும் என்று முதன்முதலாக யாருக்குத் தோன்றியது? ‘சாப்பிடும் பொருளைப் பூவாகச் செய்துவிட்டால் பிறகு அதைச் சாப்பிடுவதற்கு மனம் வராதே?’ என்றுதான் சரசக்காவிடம் சந்தேகம் கேட்டாள்.
‘நிஜ ரோஜாப் பூவையே பிச்சுச் சாப்பிடறவங்க இல்லையா?’ என்று அலட்சியமாகச் சொன்னாள் சரசக்கா. ‘இப்படியெல்லாம் அர்த்தமில்லாம கேள்வி கேட்டா நான் எழுந்து போயிடுவேன்.’
அந்த அக்கா எப்போதுமே இப்படிதான். முணுக்கென்றால் கோபம் வந்துவிடும். அந்தக் கோபம்தான் அவளுடைய வாழ்க்கையையே சீரழித்துவிட்டது என்று சரசக்காவின் அம்மா எப்போதும் குறை சொல்லிக்கொண்டிருப்பாள்.
ப்ளஸ் ஒன் வயதில் ரஞ்சனாவுக்கு அதுபோன்ற தகவல்களில் ஆர்வம் இருக்கவில்லை. விரலளவில் அடங்கிவிடக்கூடிய சிறிய கத்தியை லாகவமாகச் சுழற்றி, நுணுக்கமான செதுக்கல்களுடன் காய்கறிச் சிற்பங்கள் செய்கிற சரசக்காவை வியந்து பார்த்துக்கொண்டிருப்பாள் அவள்.
எந்தக் காய்கறியானாலும், சரசக்காவின் கைகளில் கலைப்பொருளாகிவிடும். ஓர் உருளைக்கிழங்கைப் பாதியில் நறுக்கி, அதன் பின்பகுதியில் சிறிய வெண்டை நுனியொன்றை வெட்டிப் பொருத்தி, மறுபக்கம் சிறு கடுகுகளைப் பதித்துவைத்து, சிரிக்கிற வாய் செதுக்கி, முக்கால் நிமிடத்துக்குள் கிழங்கை எலியாகவோ, முயலாகவோ, முதலையாகவோ உருமாற்றிவிடுவாள். அப்போது அவளுடைய முகத்தில் தெறிக்கும் பெருமிதம் கலந்த உற்சாகத்தைப் பார்க்கிறபோது, இந்த அக்காவின் வாழ்க்கையில் அப்படி என்ன சீரழிந்துவிட்டது என்று ரஞ்சனாவுக்குப் புரிந்ததே இல்லை.
காய்கறி அலங்காரக் கலையை சரசக்கா எங்கே கற்றுக்கொண்டாள் என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், எப்படியாவது அக்காவிடமிருந்து அதைக் கற்றுக்கொண்டுவிடவேண்டும் என்றுமட்டும் மனத்துக்குள் ஒரு விதை விழுந்துவிட்டது.
அந்த ஆசை அத்தனை சீக்கிரத்தில் நிறைவேறிவிடவில்லை. ரொம்பவே கெஞ்சிக் கூத்தாடவேண்டியிருந்தது. பள்ளிக்குச் சென்று வந்ததுபோக மீதி நேரமெல்லாம் சரசக்கா வீட்டிலேயே பழிகிடந்து, அவள் காலால் இட்டதைத் தலையால் செய்துமுடித்தும் அவள் மனம் இரங்கவில்லை. ‘இதெல்லாம் கத்துக்குடுக்கிற விஷயமில்லை’ என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.
ரஞ்சனாவுக்குப் பெரிய ஏமாற்றம். என்றாலும், அதன்பிறகும் அவள் சரசக்காவிடம் மணிக்கணக்காகப் பேசுவதையோ, அவளது காய்கறிப் படைப்புகளை வியந்து, ரசித்துப் பாராட்டுவதையோ நிறுத்திவிடவில்லை. கடைசியில், அவள் கல்லூரியில் சேர்ந்தபிறகு சரசக்காவே முன்வந்து அவளுக்கு இந்த விஷயத்தைச் சொல்லிக்கொடுப்பதாக ஒத்துக்கொண்டாள்.
முதலில் ஏன் மறுத்தாள், இப்போது ஏன் ஒப்புக்கொண்டாள் என்று ரஞ்சனாவுக்குத் தெரியவில்லை. சரசக்காவுக்குக்கூடத் தெரியுமோ, என்னவோ. ரஞ்சனாவைப் பொறுத்தவரை, அவளுடைய ஆசை நிறைவேறிவிட்டது. அக்காவைப்போலவே விதவிதமான குறுங்கத்திகளை வாங்கிவைத்துக்கொண்டு வீட்டுச் சமையல் காய்கறிகளைப் பாழாக்கத் தொடங்கினாள்.
விரல்களை நறுக்கிக்கொண்டு ரத்தம் சொட்டச்சொட்டக் கற்ற கலை. காலேஜில் சக பெண்கள் அவளுடைய விரல் வெட்டுகளைப் பார்த்துவிட்டு ‘வீணை கத்துக்கறியாடீ?’ என்று விசாரித்தார்கள். ரஞ்சனா அவர்களுக்குப் பதில் சொல்லவில்லை. கூச்சம்.
ஆனால், அப்படிக் கௌரவம் பார்த்துப் படித்த கல்லூரிப் பாடம் அவளுக்குச் சோறு போடவில்லை. ரகசியமாக ஒளிந்து படித்த காய்கறி அலங்காரக் கலைதான் வேலை வாங்கித்தந்தது.
சரசக்காவுக்கு இந்த விஷயம் தெரியவந்தபோது ரொம்ப சந்தோஷப்பட்டாள். ‘பரவாயில்லைடீ, பெரிய ஹோட்டல்ல வேலை வாங்கிட்டே’ என்றாள் அவளை உச்சிமுகர்ந்து.
வீட்டிலிருந்து இந்தப் ‘பெரிய’ ஹோட்டல் சற்று அதிக தூரம்தான். தினசரி பேருந்துப் பிரயாணம், சம்பளத்தில் கிட்டத்தட்ட பாதியை பஸ்ஸுக்குக் கொடுக்கவேண்டியிருக்கிறது. என்றாலும், தான் ரசித்துக் கற்றுக்கொண்ட ஒரு விஷயத்தையே நாள்முழுதும் வேலையாகச் செய்துகொண்டிருப்பது அவளுக்கு ரொம்பப் பிடித்திருந்தது.
இப்போதெல்லாம் சரசக்காவைவிட வேகமாகிவிட்டாள் ரஞ்சனா. ஆர்வத்தைவிட, அவசியம்தான் காரணம். அடுப்பில் பதார்த்தங்கள் தயாராகிற வேகத்தில் அவளுடைய காய்கறி அலங்காரங்களும் தயாரானால்தான் சூடு ஆறுவதற்குள் கேட்டவர்களின் மேஜைக்குச் சென்று சேர்க்கமுடியும்.
ஒன்றரையணா வேலைதான். என்றாலும், ஹோட்டலில் ரஞ்சனாவுக்கு நல்ல மரியாதை. அத்தனை பரபரப்பான சமையலறையின் மூலையில் அவள் ஒருத்திதான் பெண் என்பதாலோ, பெரும்பாலான பதார்த்தங்கள் அவளது மேஜையைத் தொட்டுக்கொண்டுதான் வெளியே போகமுடியும் என்பதாலோ, சமையலாட்கள், பரிமாறுபவர்கள் என்று எல்லாரும் அவளோடு நன்கு பழகியிருந்தார்கள்.
இந்த மேனேஜர் ஒருவன்தான் காய்ச்சல் பேர்வழி. தன் கையில் ஒரு சவுக்கு இருப்பதுபோலவும், அதைச் சொடுக்கிக்கொண்டே இருந்தால்தான் இந்த உணவகம் நகரும் என்பதுபோலவும் அலட்டுகிறவன். அவனை யாருக்கும் பிடிப்பதில்லை. ஆனால், ஏதோ ஒரு தூரச் சொந்தத்தில் முதலாளியின் உறவினன், அவனைப் பகைத்துக்கொள்ளவும் முடியாது.
ரஞ்சனா அவனைப்பற்றிக் கவலைப்படுவதை நிறுத்தி நெடுநாள்களாகிவிட்டது. சமீபகாலமாக அவளை அரித்துக்கொண்டிருக்கும் கவலை, திருமணத்தைப்பற்றியது.
சென்ற மாதம்வரை, அவள் தனது கல்யாணத்தைப்பற்றி நினைத்துப்பார்த்ததுகூடக் கிடையாது. ஆனால், பேருந்தில் எதேச்சையாகச் சந்தித்த ஒரு கல்லூரித் தோழி, தோளில் குழந்தையும் கைப்பிடிப்பில் கணவனுமாக அவளை நலம் விசாரித்துப் பிரிந்தாள். அப்போது அவள் சாதாரணமாகக் கேட்ட ஒரு கேள்விதான் உள்ளே உறுத்தலாக இறங்கி நின்றுவிட்டது, ‘நீ ஏன் இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலே?’
தனக்குக் கல்யாண வயது வந்துவிட்டதா என்று ரஞ்சனாவுக்குத் தெரியவில்லை. கல்யாண வயது என்று ஏதேனும் இருக்கிறதா என்றுகூடத் தெரியவில்லை. விளையாட்டுப் பெண்ணாகப் பார்த்த அந்தத் தோழியை, தோளில் பிள்ளையோடு பார்த்தபோதுகூட அவளுக்குள் எந்தச் சலனமோ ஏக்கமோ உண்டாகவில்லை. ஆனால், அவள் கேட்ட கேள்வியை அப்படிப் புறக்கணிக்கமுடியவில்லை.
இங்கே ஹோட்டலில் தனக்குப் பழக்கமாகியிருந்த வித்யாவிடம் இதைப்பற்றிப் பேசினாள் ரஞ்சனா. அவள் இந்தக் குழப்பத்துக்குத் தீர்வு சொல்வாள் என்று பார்த்தால், வேறொரு புதிய சிக்கலை உண்டாகிவிட்டாள்.
அதாவது, ரஞ்சனாவின் சம்பளத்தில்தான் குடும்பம் ஓடுகிறதாம். அதனால்தான் அவளுடைய அப்பா அவளுக்கு மாப்பிள்ளை எதுவும் பார்க்காமல் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறாராம். ‘எங்க வீட்லயும் இதே கதைதான்’ என்றிருந்தாள் வித்யா.
அவள் சொல்வதைக் கேட்க ரஞ்சனாவுக்கு ஆபாசமாக இருந்தது. அப்பாவைப்பற்றி அவளால் அப்படித் தவறாக நினைக்கமுடியவில்லை. தவிர, அவளுடைய சம்பளம் அப்படியொன்றும் அதிகமில்லை.
ஆனால், அப்பா இன்னும் தனது திருமணப் பேச்சை எடுக்காமல் இருப்பதற்கு வேறு காரணம் எதையும் அவளால் ஊகிக்கமுடியவில்லை. அதைவிட மோசம், அதற்காகத் தான் இப்படி வருத்தப்படவேண்டுமா என்பதுகூட நிச்சயமாகத் தெரியவில்லை.
வீணாக மனத்தைப் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கிறேன் என்று நிச்சயமில்லாத உறுதியோடு நினைத்துக்கொண்டாள் ரஞ்சனா. எனக்குத் தேவை என்று (இன்னும்) தோன்றாத ஒரு விஷயத்தை, அது ஏன் நடக்கவில்லை என்று எண்ணி வருத்தப்படுவது எத்தனை முட்டாள்தனம்!
இந்த எண்ணம் தோன்றியபிறகு மனம் ஓரளவு அமைதிப்பட்டிருந்தது. என்றாலும், அதன்பிறகு ஏனோ அவளது வேலையில் கவனம் சற்றுக் குறைந்துவிட்டது. கேரட் பூக்களை அடுக்கும்போது, கீழே சிதறிக் கிடக்கும் மிஞ்சிய காய்கறித் துணுக்குகள் மனத்தில் அர்த்தமற்ற வெறுமையை உண்டாக்குகிறது.
இருபுறமும் முள்புதர்கள் அடர்ந்த அந்த மண்பாதையைக் கடந்து ரஞ்சனா வெளியேறியபோது, புதிதாகக் கட்டிய அந்த அபார்ட்மென்ட் கண்ணில் பட்டது. அதன் இரண்டாவது மாடி பால்கனியில், எப்போதும்போல் குழந்தைக்குச் சோறூட்டிக்கொண்டிருக்கிற புது அம்மாவும்.
‘ஹேய், அக்கா பாரு’ என்று குழந்தைக்கு ரஞ்சனாவைக் கைகாட்டினாள் அவள், எங்கோ பறந்த புறாவைத் தேடிக்கொண்டிருந்த குழந்தை கவனம் சிதறிக் கீழே திரும்புகையில் அதன் வாயில் அரை உருண்டை சாதத்தை அடைத்துவிட்டு ‘குட்மார்னிங்’ என்றாள் ரஞ்சனாவிடம்.
‘குட்மார்னிங்’ என்றாள் ரஞ்சனா, ‘கொஞ்சம் லேட் ஆயிடுச்சு, ஈவினிங் பார்ப்போம்’ என்று சொல்லிவிட்டு மளமளவென்று நடக்கலானாள்.
அடுத்த அரையாவது நிமிடம் ஹோட்டல் வாசலில் சல்யூட் வைத்த காவலாளிக்குப் பதில் மரியாதை செய்தபோதுதான், அந்தக் குழந்தைக்குக் கைகாட்டிவிட்டு வந்திருக்கலாமே என்று தோன்றியது அவளுக்கு.
முன்பின் தெரியாத நடைபாதைச் சிநேகிதம்தான். ஆனால், தினந்தோறும் அவள் பஸ்ஸிலிருந்து இறங்கிக் குறுக்குவழியாக வேலைக்கு வருகிற அதே நேரம்தான் அந்தக் குழந்தைக்குச் சாப்பாட்டு வேளை. சில நேரங்களில் அம்மா மடியில், பல நேரங்களில் தரையெங்கும் ஓடியாடியபடி சாப்பிட்டுக்கொண்டிருக்கிற குழந்தைக்குக் கையசைத்து, முடிந்தால் கொஞ்சமாகக் கொஞ்சிவிட்டு வருவது தினசரி வழக்கமாகி, இப்போது அதன் அம்மாவிடமும் பேசிப் பழகிவிட்டது.
ஆனால், ஒன்பது மணிக்குத் தாமதமாகிவிடுகிற இதுபோன்ற நாள்களில், கடவுளே எதிரில் வந்தாலும் வரம் கேட்பதைத் தள்ளிப்போடவேண்டியிருக்கிறது என்று சலிப்புடன் நினைத்துக்கொண்டாள் ரஞ்சனா. அவளது மேஜையினருகே வெட்டிச் செதுக்கவேண்டிய கேரட்கள் கழுவிய பளபளப்பில் மிளிர்ந்தன.
அபூர்வமாக, மேனேஜனைக் காணவில்லை. இருக்கையில் தளர்ந்து அமர்ந்த ரஞ்சனா ஒரு கேரட்டை முனை முறித்துக் கடித்தாள். லேசாகக் கசந்தது.
நூற்றுக்குத் தொண்ணூறு பேர் அலங்கரித்த காய்களைச் சாப்பிடுவதில்லை, குழந்தைகள்தான் அவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் சாப்பிடும். பெரும்பாலான பெரியவர்கள் அதை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு, மிச்சத்தில்தான் கவனம் செலுத்துவார்கள்.
பிறகு எதற்கு அலங்கரிக்கவேண்டும்? கேட்டால், கண்தான் முதலில் சாப்பிடுகிறது என்பார்கள். பரிமாறப்படும் பண்டத்தைப் பார்த்ததும், அந்த முதல் பார்வையிலேயே காதல் உண்டானால்தான் வயிறு அதை உவந்து ஏற்றுக்கொள்ளுமாம். அந்தவிதத்தில் இந்த அலங்கரிப்புகளும் கறிவேப்பிலைபோல்தான்.
அந்த அலங்காரப் பிரியர்களிடம் இங்கே வீணாகிற மிச்சக் காய்கறிகளை ஃபோட்டோ பிடித்துக் காண்பிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள் ரஞ்சனா. ஆசைப்பட்டுக் கற்றுக்கொண்ட கலை, இப்போதெல்லாம் சலிப்பூட்டுகிறது. முன்பு தோன்றாத பலவிதமான முரண் நினைப்புகள் இப்போது மனத்தை ஆக்கிரமித்திருக்கிறது. எல்லாமே அர்த்தமற்றுப்போய்விட்டதுபோல் ஒரு பள்ள உணர்வு, வெறும் வெறுமை.
கைப்பையிலிருந்து குறுங்கத்திகளை வெளியிலெடுத்துக்கொண்டாள் ரஞ்சனா, கொஞ்சம் வெந்நீர் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டு, அன்றைய தினத்தின் முதல் காய்கறியைச் செதுக்கலானாள்.
**********
இரவுப் பதார்த்தங்களுக்கான அலங்கரிப்புகளைச் செய்து அடுக்கிவிட்டு ரஞ்சனா ஆறரை மணிக்குக் கிளம்பியபோது, லேசாக இருட்டியிருந்தது. அந்த அடுக்ககத்தை நெருங்குகையில் காலையின் குற்றவுணர்ச்சி மீண்டும் மேலெழுந்து தாக்க, அனிச்சையாக இரண்டாவது மாடியைப் பார்த்தாள்.
‘நாங்க இங்கே இருக்கோம்’ என்று கீழே குரல் கேட்டது. வழக்கமாகக் கார்களை நிறுத்துமிடத்தில் பெரிய பந்து ஒன்றை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது குழந்தை. கூடவே, கையில் சாப்பாட்டு வெள்ளிக் கிண்ணத்துடன் அதன் அம்மா.
‘காலையில ரொம்ப அவசரமாப் போய்ட்டிருந்தேன்’ என்றபடி கேட்டைத் திறந்துகொண்டு அவர்களை நெருங்கினாள் ரஞ்சனா, ‘குழந்தைக்கு டாட்டாகூட காட்டாம ஓடிட்டேன், ஸாரி!’
‘பரவாயில்லைங்க’ என்றாள் அவள், ‘எனக்கும் என் பொண்ணுக்கும்தான் வேற வேலையில்லை, எல்லாரையும் கூப்டுப் பேசிட்டிருப்போம், உங்களுக்கு ஆஃபீஸ் இருக்கில்லையா?’ என்றாள் சிரித்து.
அவள் சொன்னதில் ‘ஆஃபீஸ்’ என்ற பதம் ரஞ்சனாவுக்குப் பிடித்திருந்தது, ‘ஒரு கேரட் கிடைக்குமா?’, என்றாள் கண்கள் பரபரக்க.
‘கேரட்டா?’ அவள் முகத்தில் அப்பட்டமான ஆச்சரியம் தொனித்தது, ‘எதுக்கு?’
‘ஒரே ஒரு பெரிய கேரட் கொண்டுவாங்களேன், சொல்றேன்’ என்றாள் ரஞ்சனா, ‘நான் குழந்தையைப் பார்த்துக்கறேன்.’
அவள் என்ன செய்வது என்று இன்னும் தீர்மானிக்காதவள்போல் குழம்பித் தெரிந்தாள். பின்னர், கையிலிருந்ததைக் குழந்தையின் வாயில் திணிக்க, அது ‘ஹக் ஹக்’ என்று இருமியபடி அதை வெளியே தள்ள யோசித்தது, ‘மம்மா நல்லாயிருக்கா?’ என்றபடி அதைத் தூக்கிக்கொண்டாள் ரஞ்சனா. அதன் அம்மா லிஃப்டை நெருங்கிவிட்டுச் சட்டென்று படிகளில் ஏற ஆரம்பித்தாள்.
குழந்தை ரஞ்சனாவிடம் இல்லாத வார்த்தைகளில் கதையளந்தபடி அந்த அரை வாய் உப்புமாவையோ, பொங்கலையோ தின்று முடிப்பதற்குள் அவள் திரும்பிவிட்டாள், கையில் நடுத்தர அளவில் ஒரு கேரட்.
அதை இடதுகையில் வாங்கிக்கொண்டு குழந்தையைக் கீழே விட்டாள் ரஞ்சனா. அது அவளிடமிருந்த கேரட்டைப் பிடுங்கப் பாய்ந்தது.
‘கொஞ்சம் பொறும்மா, உனக்குதான் இது’ என்றபடி கைப்பையிலிருந்து ஒரு கத்தியை எடுத்துக்கொண்டாள் ரஞ்சனா. பழகிய நுணுக்கத்துடன் விரல்கள் சுழல, முக்கால் நிமிடத்துக்குள் கேரட் சிவப்பில் ரோஜாப்பூ உருவாகியிருந்தது.
மண்டியிட்டுக் குனிந்து, குழந்தையின் கையில் அந்த கேரட் பூவை வைத்தாள் ரஞ்சனா, ‘பாப்பாக்குப் பூ பிடிச்சிருக்கா?’ என்றாள் கண்கள் விரிய.
குழந்தை அதன் கையிலிருக்கும் புது விஷயத்தை ஆர்வமாகப் பார்த்தது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பூ செதுக்கியதுபோக ரஞ்சனாவின் இன்னொரு கையில் சேர்ந்துகிடக்கும் ஒழுங்கற்ற கேரட் துண்டங்களில் ஒன்றைப் பொறுக்கி வாயில் வைத்துக்கொண்டது, ‘ம்மா’ என்றபடி நுனிப்பற்களால் அதைப் பற்றிச் சிரித்தது.
சட்டென்று அந்தக் குழந்தையை அள்ளியெடுத்து முத்தமிட்டாள் ரஞ்சனா.
(’த சன்டே இந்தியன்’ இதழில் பிரசுரமான சிறுகதை)
***
என். சொக்கன் …
14 08 2005
’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 7
Posted July 23, 2012
on:- In: Book Marks | Books | E-zines | Media | Reading | Serial
- 3 Comments
43
தமிழகத்தில் திராவிட இயக்கம் பரபரப்பாக வளர்ந்துகொண்டிருந்த நேரம். கதாநாயகனைக் கடவுள் அவதாரமாகக் குறிப்பிடுகிற நூல் என்ற ஒரே காரணத்தால், ‘கம்ப ராமாயணம்’ கடுமையாகக் கிண்டலடிக்கப்பட்டது. பகுத்தறிவுக் கொள்கைகளை முன்வைத்த இயக்கங்களின் பேச்சாளர்கள் பல மேடைகளில் கம்பனிலிருந்து உதாரணங்களைக் காட்டிக் கேலி செய்து பேசினார்கள். ‘கம்ப ரசம்’ என்ற தலைப்பில் ஒரு ’வஞ்சப் புகழ்ச்சி’ப் புத்தகமே எழுதினார் அண்ணா.
அப்போது, கவிஞர் கண்ணதாசனும் கடவுள் மறுப்பில் ஆர்வம் கொண்டிருந்தார். ’சகாக்கள் எல்லாரும் கம்பனைத் திட்டுகிறார்களே, நாமும் திட்டலாம்’ என்று முடிவெடுத்தார். திட்டுவதற்கு Points வேண்டாமா? அதற்காகக் கம்பனை முழுக்கப் படிக்க ஆரம்பித்தார்.
’அவ்வளவுதான், அதுவரை நான் படித்தவை எல்லாம் வீண் என்று புரிந்துகொண்டேன், இவன்தான் கவிஞன், இதுதான் நிஜமான கவிதை என்று உணர்ந்துகொண்டேன். அதன்பிறகு கம்பனில் இருந்து மீளமுடியவில்லை’ என்று பின்னர் ஒரு மேடையில் குறிப்பிட்டார் கண்ணதாசன்.
(ஆதாரம்: தமிழறிஞர், எழுத்தாளர் ஹரி கிருஷ்ணன் நேரில் கேட்டது)
44
நந்தனார் சரித்திரம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவரைத் தெய்வ தரிசனம் செய்யவிடாது தடுத்தது யார்?
வேறு யார்? நந்தனாரின் முதலாளிதான். ‘மாடு தின்னும் புலையா, உனக்கு மார்கழித் திருநாளா?’ என்று சொல்லி அவர் நந்தனாரைத் தடுத்து நிறுத்திவிட்டார். அவர்மீது கொண்ட பயத்தால்தான் நந்தனார் சிதம்பரத்துக்குச் செல்லாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தார்.
உண்மையில், 63 நாயன்மார்களின் வரலாறைப் ‘பெரிய புராண’மாக எழுதிய சேக்கிழார் சொல்லுகிற நந்தனார் கதையே வேறு. அதில் அவர் தொழிலாளி இல்லை, (கிட்டத்தட்ட) முதலாளி. சொந்த நிலத்தில் பயிரிட்டுச் சம்பாதித்தவர், தன்னால் இயன்றவற்றைச் சிவன் கோயிலுக்கு நன்கொடையாகத் தந்து வாழ்ந்தவர்.
ஆனால், பிறப்பால் அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால், கோயிலுக்குள் அவரை அனுமதிக்க மறுக்கிறார்கள். அதை எண்ணிதான் அவர் வருந்துகிறார். எந்த ‘முதலாளி’யும் அவரைத் தடுத்து நிறுத்தவில்லை.
பின்னாள்களில் நந்தனார் வரலாறை எழுதிய கோபால கிருஷ்ண பாரதி, அதில் நாடகத்தன்மையைச் சேர்ப்பதற்காக ஒரு முதலாளியைக் கொண்டுவந்தார், நந்தனாரை அவருக்கு அடங்கியிருப்பவராக மாற்றினார், அதன்மூலம் அன்றைய சமூகத்தில் பலர் ஒடுக்கப்பட்டதை அழகாகப் பதிவு செய்தார்.
இன்னொரு சுவாரஸ்யமான தகவல், ‘கோபால கிருஷ்ண பாரதி’யின் ‘மாடு தின்னும் புலையா’ மெட்டில் மகாகவி சுப்ரமணிய பாரதி ஒரு பாட்டு எழுதியுள்ளார். விடுதலைக்காகப் போராடுகிற தொண்டர்களைப் பார்த்து ஆங்கிலேய அதிகாரிகள் பாடுவதுபோல் அமைந்த அந்தப் பாடல் ‘தொண்டு செய்யும் அடிமை, உனக்குச் சுதந்தர நினைவோடா?’ என்று தொடங்கும்.
45
ரசிகமணி டி.கே.சி. அவர்களைப் பற்றிய நூல் ஒன்று வெளியாகியிருந்தது. அதை அவருக்கே தபாலில் அனுப்பிவைத்தார்கள்.
பிரித்துப் பார்த்தவருக்கு முதலில் ஆச்சர்யம், அடுத்து, ஆர்வம், ‘அப்படி என்னதான் எழுதியிருக்கிறார்கள்?’ என்று ஆங்காங்கே புரட்டினார்.
இப்போது, ஆச்சர்யம், ஆர்வம் போய், வெட்கம் வந்துவிட்டதாம். காரணம், அந்தப் புத்தகத்தில் ஆங்காங்கே அவரைப் பாராட்டி எழுதப்பட்டிருந்த வரிகள்.
இதனால், டி.கே.சி.க்கு அந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து படிக்கக் கூச்சம். ‘யாராவது பார்த்தால் தவறாக நினைத்துவிடுவார்களோ’ என்று தயங்கினார்.
அதேசமயம், அதைப் படிக்காமலும் இருக்கமுடியாது. முழுக்கப் படித்துக் கருத்துச் சொல்லவேண்டும், ஏதாவது தவறான விவரங்கள் இருந்தால் பதிப்பாளருக்குத் தெரிவித்துச் சரி செய்தாகவேண்டும் அல்லவா?
ஆகவே, டி.கே.சி. ஒரு வேலை செய்தார். அந்தப் புத்தகத்தின் தலைப்பு யாருக்கும் தெரியாதபடி அட்டை போட்டுக் கொண்டுவரச் செய்தார். அதன்பிறகுதான் அதைத் தொடக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தார்.
நீங்கள் (பள்ளி / கல்லூரியிலிருந்து வெளியே வந்தபின்) எந்தப் புத்தகத்துக்காவது ‘அட்டை போட்டு’ப் படித்தது உண்டா? ஏன்?
(ஆதாரம்: இராஜேஸ்வரின் நடராஜன் தொகுத்த ‘ரசிகமணி டி.கே.சி.யின் கடிதங்கள்’ நூல்)
46
ஒரு நாவல் சினிமாவுக்குப் போகிறது. கதையைப் படித்துவிட்டுப் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் ‘ம்ஹூம், தேறாது’ என்று அதனை ஒதுக்கித் தள்ளிவிடுகிறார்கள்.
அப்படியானால், யார்மீது தவறு? இலக்கியக் கதைகள் சினிமா மொழிக்குப் பொருந்தவில்லையா? அல்லது, நல்ல கதையைச் சினிமாக்காரர்கள் பாழாக்கிவிடுகிறார்களா?
இந்தக் கேள்விக்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் பதில்:
’நாவலை எடுத்துக்கொண்டால், அது முழுக்க முழுக்க எழுத்தாளனின் ராஜ்யம். ஆனால், சினிமா என்பது பலர் கூடி இழுக்கும் தேர். சினிமாவுக்குப் போகிற எழுத்தாளன் சினிமா வேறு, எழுத்து வேறு என்பதில் சரியான புரிதலுடன் இருக்க வேண்டும்.
நான் வட்டார வழக்கில் எழுதிய ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல் ‘சொல்ல மறந்த கதை’ என சினிமாவாக வெளியானபோது, அதில் ஒரு வட்டார வழக்குச் சொல்கூட இல்லை. ஆனால், அதுதான் சினிமா!
ஆறு பக்கங்கள் நான் எழுதித் தள்ளுவதை இயக்குநர் ஒரே ஒரு ஷாட்டின் மூலம் கடந்து விடுவார். இதை எல்லாம் கணக்கில் கொண்டுதான் என் கதையைச் சினிமாவாக மாற்றுவதற்கு நான் சம்மதிக்கிறேன். அதன்பிறகு, ‘நாவலைச் சினிமா சிதைத்துவிட்டது!’ என்று புலம்புவதில் அர்த்தமே இல்லை!’
(ஆதாரம்: பத்திரிகையாளர் ரீ. சிவக்குமார் பதிவு செய்த எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் பேட்டி)
47
’குலதெய்வம்’ என்ற படத்தில் ஒரு பாட்டு. மனைவியால் பாதிக்கப்பட்ட ஒரு கணவன், எல்லாப் பெண்களையும் வெறுத்துப் பாடுவதாகச் சூழ்நிலை. அந்தப் பாடலை எழுதியவர், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
இந்தப் பாடல் வெளியாகிச் சில நாள்கள் கழித்து, பட்டுக்கோட்டையாருக்கு ஒரு கடிதம் வந்தது. அதன் சாரம்:
‘இதுபோல் பெண்களைக் கேவலப்படுத்தும் ஒரு பாடலை நீங்கள் எழுதலாமா? இப்போதெல்லாம் பல இளைஞர்கள் பெண்களைக் கிண்டல் செய்ய இந்தப் பாடலைதான் பயன்படுத்துகிறார்கள்.’
இதைப் படித்த கவிஞர் மிகவும் வருந்தினார். அந்தக் கடிதத்துக்கு அவர் எழுதிய பதில்:
‘நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடலை மீண்டும் படித்துப்பார்த்தேன். தங்களுடைய நியாயமான கோபம் எனக்குப் புரிகிறது. பெண்ணால் பாதிக்கப்பட்ட மனநிலையில் உள்ள ஓர் இளைஞனின் கோணத்திலிருந்துதான் நான் அந்தப் பாடலை எழுதினேன். ஆனால் அது பொதுவாகவே பெண்களைக் கிண்டல் செய்ய உபயோகப்படுகிறது என்று இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன். இனிமேல் இதுபோன்ற பாடல்களை எழுதும்போது கவனத்துடன் இருப்பேன், தவறு செய்யமாட்டேன்.’
(ஆதாரம்: கார்த்திகேயன் எழுதிய ‘பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை’ நூல் & சி. சேதுராமன் எழுதிய ’பாரதியும், பட்டுக்கோட்டையாரும்’ கட்டுரைகள்)
48
பெரும்பாலான நூல்களின் தொடக்கத்தில் ‘சமர்ப்பணம்’ என்று ஒருவருடைய பெயரைப் போட்டிருப்பார்கள். இது நிஜமாகவே பயனுள்ள ஒரு விஷயமா? வெறும் சடங்கா?
இந்தக் கேள்விக்கு எழுத்தாளர் வண்ணதாசனின் பதில்:
‘இன்னார்க்குச் சமர்ப்பணம் என்று போடுவதற்காகவே புத்தகங்கள் எழுதவும் வெளியிடவும் வேண்டும் என்று தோன்றுகிறது. எழுத்தாளன் தன் மரியாதையை, பிரியத்தை, காதலை எல்லாம் வேறு எப்படிச் சொல்லிக்கொள்ளமுடியும்? சமர்ப்பணத்தைவிட அருமையாகக் கட்டின மாலை எந்தப் பூக்கடையில் வாங்கிப் போடமுடியும்?’
(ஆதாரம்: ’தீராநதி’ இதழில் வெளியான வண்ணதாசன் நேர்காணல்)
49
பாரதியார் சுதேசமித்திரனில் வேலை செய்துகொண்டிருந்த நேரம். அவருக்குச் சம்பளம் 50 ரூபாய்.
ஒருமுறை பாரதி சம்பளம் வாங்கிக்கொண்டு ரிக்ஷாவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அந்த ரிக்ஷாவை ஓட்டியவரிடம் பேச்சுக்கொடுக்க, அவர் குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதைத் தெரிந்துகொண்டார். உடனே, தன் கோட் பையில் இருந்த ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டார்.
இந்தத் தகவல் தெரிந்த பாரதியின் மனைவி மிகவும் வருந்தினார். ஆனால் கணவரின் மனம் புரிந்ததால் நேரடியாக எதுவும் சொல்லவில்லை. அக்கம்பக்கத்து வீட்டாரிடம் இதைச் சொல்லிக் கவலைப்பட்டிருக்கிறார். ‘இப்படிச் சம்பளம் மொத்தத்தையும் தூக்கிக் கொடுத்துட்டா நம்ம வீட்டுச் செலவை எப்படிச் சமாளிக்கறது?’
நல்லவேளையாக, அந்த ரிக்ஷாக்காரரை அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவரைத் தேடிப் பிடித்து, ‘அய்யாகிட்ட மொத்தப் பணத்தையும் வாங்கிட்டியாமே’ என்று விசாரிக்க, அவர் அசடு வழிந்தபடி 45 ரூபாயைத் திருப்பிக் கொடுத்தாராம்!
(ஆதாரம்: அம்ஷன் குமார் எழுதிய ‘பாரதியின் இளம் நண்பர்கள்’ கட்டுரை)
நன்றி: http://www.facebook.com/600024books
***
என். சொக்கன் …
23 07 2012