Archive for July 24th, 2012
தேடல்
Posted July 24, 2012
on:- In: (Auto)Biography | நவீன அபத்தங்கள் | Books | Change | Lazy | Learning | Life | Memory | Open Question | Perfection | Reading | Uncategorized
- 5 Comments
இன்று காலை, எம். எஸ். சுவாமிநாதனைப் பற்றிய கட்டுரை ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு வரி, அவருடைய தந்தை கும்பகோணம் நகரத் தலைவராகப் பணியாற்றியதாகக் குறிப்பிட்டது.
இந்த வரியைப் படித்தவுடன், என் மண்டைக்குள் ஒரு பல்ப் எரிந்தது. இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமென்றால், ஒரு கொசு ரீங்காரமிட்டது.
காரணம், எம். எஸ். சுவாமிநாதனின் தந்தையைப் பற்றி நான் ஏற்கெனவே ’கொஞ்சூண்டு’ கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த நாள் கும்பகோணத்தின் மிகப் பெரிய பிரச்னையாக இருந்த கொசுத் தொல்லையையும், அதனால் வரும் நோய்களையும் ஒழிப்பதற்காக அவர் பல முயற்சிகளை எடுத்த கதையையும், அப்போது சிறுவராக இருந்த சுவாமிநாதன் அவற்றில் பங்கேற்றதையும்கூடப் படித்திருக்கிறேன்.
ஒரே பிரச்னை, இதையெல்லாம் எங்கே படித்தேன் என்று சுத்தமாக ஞாபகம் வரவில்லை.
அதனால் என்ன? கூகுளைத் திறந்து ‘M S Swaminathan, KumbakoNam, Mosquito problem’ என்று பலவிதமாகத் தட்டித் தட்டினால் மேட்டர் கிடைத்துவிடுமே.
உண்மைதான். ஆனால், நான் இதைப் படித்தது இணையத்தில் அல்ல. ஓர் அச்சுப் புத்தகத்தில்தான், நன்றாக நினைவிருக்கிறது.
அதுமட்டுமில்லை, அந்தப் புத்தகம் வெறுமனே தகவல்களை வறட்டு நடையில் தராமல், ஒரு கதைபோல இந்தச் சம்பவத்தை விவரித்திருந்தது. ஆகவே, இப்போது அதை மீண்டும் படிக்கவேண்டும் என்று எனக்கு ஆசை.
ஆனால், எங்கே போய்ப் படிப்பது? அது எந்தப் புத்தகம் என்பதுகூட நினைவில்லாமல் எதைத் தேடுவது?
ஞாபகசக்தி விஷயத்தில் நான் மிகச் சாதாரணன். யாராவது என்னிடம் ஃபோனிலேயோ, நேரிலேயே ‘நான் யாரு, சொல்லு பார்க்கலாம்’ என்று விளையாடினால் பேந்தப் பேந்த முழிப்பேன். அக்பர் பாபருக்குத் தாத்தாவா, அல்லது பாபர் அக்பருக்குக் கொள்ளுத்தாத்தாவா என்று சத்தியமாகத் தெரியாது, முதலாவது பானிப்பட் போர் எந்த வருடம் நடந்தது என்றெல்லாம் கேட்டால் ‘அபிவாதயே’ சொல்லி சாஷ்டாங்கமாக உங்கள் காலில் விழுந்துவிடுவேன்.
உண்மையில், இது ஒரு பலவீனம்மட்டுமல்ல. எந்தத் தகவலும், புள்ளிவிவரமும் ‘Just A Click Away’ என்பதால் வந்த அலட்சியம். அதுவும் இப்போதெல்லாம் ஃபோனிலேயே கூகுள் செய்ய முடிவதால் எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியமே இருப்பதில்லை.
அதேசமயம், எம். எஸ். சுவாமிநாதனின் தந்தை கும்பகோணம் முழுவதும் கொசு மருந்து அடிக்கச் செய்தார் என்கிற தகவல், எதற்காகவோ என் மூளையில் தங்கிவிட்டது. அது ஏன் என்று தெரியவில்லை.
இப்போதைய பிரச்னை, அந்தக் கொசு மருந்துக் கதையை நான் முழுக்கப் படித்தாகவேண்டும். அதற்குமுன்னால் அந்தப் புத்தகத்தைக் கண்டுபிடிக்கவேண்டும்.
எனக்குத் தெரிந்து என்னிடம் எம். எஸ். சுவாமிநாதன் வாழ்க்கை வரலாறு எதுவும் இல்லை. வேறு ஏதோ ஒரு பொதுவான புத்தகத்தின் நடுவில்தான் இந்தக் கதை இடம்பெற்றிருக்கவேண்டும்.
ஆகவே, புத்தகத்தின் அட்டையை வைத்துத் தேடமுடியாது. தலைப்பை வைத்துத் தேடமுடியாது. புத்தக அலமாரியில் தெரியும் முதுகுப் பகுதியை வைத்துத் தேடமுடியாது.
இதன் அர்த்தம், நான் ஒவ்வொரு புத்தகமாகப் பிரித்துப் பொருளடக்கத்தைப் பார்க்கவேண்டும், அல்லது உள்ளே வேகமாகப் புரட்டவேண்டும். வேறு வழியே இல்லை.
எங்கள் வீட்டில் உள்ள சில ஆயிரம் புத்தகங்களையும் இப்படிப் பிரித்துப் படிக்க எத்தனை நேரம் ஆகுமோ? தெரியவில்லை. இத்தனை சிரமப்பட்டு அந்தப் பகுதியைப் படித்து என்ன சாதிக்கப்போகிறேன்? அதுவும் தெரியவில்லை. ஆனால் அதைப் படித்தே தீரவேண்டும் என்று உள்ளுக்குள் ஒரு சாதாரண பிடிவாதம். அதனால் எத்தனை நேர விரயம் ஆனாலும் பரவாயில்லை, வீடு முழுக்கப் புத்தகங்கள் தூக்கி எறியப்பட்டு அசௌகர்யமானாலும் பரவாயில்லை என்று ஒரு வறட்டுப் பிடிவாதம்.
மற்ற வேலைகளை ஒதுக்கிவிட்டுப் புத்தகங்களை வேகமாகத் தள்ள ஆரம்பித்தேன். ஒவ்வொரு ஷெல்ஃபிலும் ‘புறநானூறு’, ‘வீரேந்திர சேவாக் வாழ்க்கை வரலாறு’, ‘ஐயங்கார் சமையல்’, ‘ரஷ்யச் சிறுகதைகள்’ போன்ற எம். எஸ். சுவாமிநாதனுக்குச் சம்பந்தமே இல்லாத பொதுவான தலைப்புகளை முதலில் Eliminate செய்தேன், மற்றவற்றைத் தனியே அடுக்கிவைத்துப் பிரித்துப் பார்த்தேன்.
காமெடியான விஷயம், நான் தேடுவது தமிழ்ப் புத்தகமா, ஆங்கிலப் புத்தகமா என்பதுகூட நினைவில்லை. அது இந்தப் புத்தக அலமாரிகளில்தான் இருக்கிறதா என்பதும் நிச்சயமாகத் தெரியவில்லை. ஒருவேளை நான் அந்தத் தகவலை ஏதோ ஒரு வார இதழில் படித்திருந்தால், அது அடுத்த சில நாள்களில் குப்பைக்குச் சென்றிருக்கும்.
ஆனால் எனக்கு ஏதோ ஒரு நம்பிக்கை, அந்தப் புத்தகம் இங்கேதான் இருக்கிறது என்று. மனைவியார் பின்னாலிருந்து முணுமுணுப்பதைக்கூடக் கண்டுகொள்ளாமல் ஷெல்ஃப் ஷெல்ஃபாகக் கலைத்தேன், மேலே பெட்டிகளில் கட்டிப் போட்டிருந்தவற்றைப் பிரித்தேன், படுக்கைக்கு அடியில் ஒளிந்திருந்தவற்றை இழுத்துத் தேடினேன்.
சுமார் முக்கால் மணி நேர அலைச்சலுக்குப்பிறகு, அந்தப் புத்தகம் அகப்பட்டுவிட்டது. ‘சாதனையாளர்கள் சிறு வயதில்’ என்று நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்ட தொகுப்பு. அழகான சிறுகதை வடிவத்தில் எம். எஸ். சுவாமிநாதனின் இளம்பருவச் சம்பவங்கள் சிலவற்றை விவரித்திருந்தது. அந்தக் கும்பகோணக் கொசுவும் அங்கே இருந்தது.
கலைத்துப்போட்ட புத்தகங்களுக்கு மத்தியில் உட்கார்ந்துகொண்டு அந்தக் கதையை ரசித்துப் படித்தேன். இரண்டே நிமிடங்கள்தான். புத்தகங்கள் மீண்டும் அதனதன் இடத்துக்குத் திரும்பின.
இதனால் பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை. ஆனாலும், ‘நான் நினைச்சபடி அந்தக் கதை இங்கே இருந்தது, பார்த்தியா?’ என்று என்னை நானே தட்டிக்கொடுத்துக்கொண்டேன். இதைத் தேடியபோது கிடைத்த மற்ற பல சுவாரஸ்யமான புத்தகங்களைப் படிக்கும் மேஜையில் அடுக்கிவைத்தேன். அலுவலகத்துக்குக் கிளம்பினேன்.
இதையெல்லாம் எதற்காக இங்கே எழுதுகிறேன் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. இவ்வளவு தூரம் எழுதியபிறகுதான் அதை யோசிக்கிறேன்.
கடந்த பத்து வருடங்களில் ‘research on a topic’ என்பதன் அர்த்தமே மாறிவிட்டது. கூகுளைத் திறந்து அந்தத் தலைப்பைத் தட்டித் தேடி, அதிலும் முதல் பத்து விடைகளைமட்டும் படித்துத் தொகுத்தால் வேலை முடிந்தது. அதனை முழுமையான ஆராய்ச்சியாக நாம் எல்லாருமே ஏற்றுக்கொள்கிறோம். என்னதான் கூகுள் மிகச் சிறந்த தேடல் இயந்திரமாக இருப்பினும், அது நம்முடைய ‘க்ளிக்’குகளைக் கவனித்து அதன் அடிப்படையில் தொடர்ந்து தன்னை முன்னேற்றிக்கொண்டே இருந்தாலும், நம்முடைய பொது அறிவின் எல்லையைத் தீர்மானிக்கிற உரிமையை ஒரு சாஃப்ட்வேர் ப்ரொக்ராமின் Artificial Intelligence வசம் ஒப்படைப்பது சோம்பேறித்தனமா, அலட்சியமா? ஒருவேளை, இந்தக் காலத்துக்கு அத்தனை ‘ஞானம்’ போதுமோ?
இந்தக் கேள்வியைக் கேட்கிற உரிமை எனக்கு இல்லை என்பது நன்றாகத் தெரியும். அலுவல் விஷயங்கள், தனிப்பட்ட வேலைகள் என்று எல்லாவற்றுக்காகவும் எந்நேரமும் கூகுள் இணைய தளத்திலேயே குடியிருக்கிறவன் நான். இப்படி ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கில் கூகுள் Searchகள் செய்தாலும், இன்றைக்குக் கம்ப்யூட்டர், இன்டர்நெட் உதவி இல்லாமல் சொந்தமாக ஒரு தகவலைத் தேடிக் கண்டுபிடித்த சந்தோஷம் புது அனுபவமாக இருக்கிறது.
எந்தக் குறிப்பிட்ட நோக்கமும் இல்லாமல் வெட்டியாக 45 நிமிடம் புத்தகங்களைப் புரட்டிய எனக்கே இப்படியென்றால், ஆராய்ச்சிக்காகக் கல்வெட்டுகளையும் பழங்காலக் கட்டடங்கள், கோயில்கள், சிற்பங்கள், மனிதர்களையும் தேடிச் சென்று சேதி சேகரிப்பவர்கள் எப்படி உணர்வார்கள் என்று யோசித்துப்பார்க்கிறேன். கிட்டத்தட்ட ஒரு துப்பறியும் நிபுணரின் லாகவத்தோடு ஓலைச் சுவடிகளைத் தேடிக் கண்டறிந்து சங்க இலக்கியங்களை நூலாக்கி வெளியிட்ட தமிழ்த் தாத்தா உ.வே.சா. எப்படி உணர்ந்திருப்பார் என்று கற்பனை செய்கிறேன்.
அத்தகு பேரனுபவத்தில் ஒரு துளி எனக்கு இன்று சித்தித்தது, எம். எஸ். சுவாமிநாதனுக்கும் அவருடைய தந்தை விரட்டிய கொசுக்களுக்கும் நன்றி!
***
என். சொக்கன் …
24 07 2012