மாற்றத்தான் வேண்டுமோ?
Posted July 26, 2012
on:- In: (Auto)Biography | Art | Fiction | Learning | Magazines | Reading | Reviews | Short Story | Uncategorized
- 16 Comments
சில நாள்களுக்கு முன்னால், ஒரு வித்தியாசமான அனுபவம்.
கடந்த பிப்ரவரியில், ஒரு பிரபல பத்திரிகையிலிருந்து சிறுகதை கேட்டிருந்தார்கள். உடனே எழுதிக் கொடுத்தேன்.
வழக்கம்போல், பல மாதங்கள் கழித்து ஒரு மாலை நேரம், அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘சார், கதை படிச்சோம், ரொம்பப் பிரமாதமா இருக்கு’ என்றார்கள்.
‘சரிங்க, சந்தோஷம்!’ என்றேன்.
‘இந்தக் கதை எந்த இஷ்யூல வருதுன்னு நாளைக்கு ஃபோன் பண்ணி கன்ஃபர்ம் பண்றேன் சார். நன்றி!’
சொன்னபடி மறுநாள் காலை ஃபோன் வந்தது. ‘சார், அந்தக் கதைபத்திக் கொஞ்சம் பேசணுமே. நேரம் இருக்குமா?’
‘பேசலாம், சொல்லுங்க!’
அடுத்த மூன்று நிமிடங்கள் அவர் அந்தக் கதையைச் சுருக்கமாக விவரித்தார். அதன்மூலம் நான் சொல்ல நினைத்த விஷயங்களையும் சொல்லாமல் விட்ட கருத்துகளையும் மிகத் தெளிவாக விளக்கினார்.
எனக்கு ஆச்சர்யம். ஒருபக்கம், கதை எழுதியவனிடமே கதையைக் குடலாப்ரேஷன் செய்கிறாரே என்கிற வியப்பு. இன்னொருபக்கம், என்னுடைய கதையை இத்தனை தெளிவாகப் புரிந்துகொண்டு பேசியவர்கள் இதுவரை யாருமே இல்லை, நானே அந்தக் கதையை இன்னொருவருக்கு விவரித்திருந்தால் எப்படிச் செய்திருப்பேனோ அந்த அளவு தெளிவாக அவர் பேசினார். சிறுகதைகள்பற்றி இத்தனை புரிதலும் முதிர்ச்சியும் கொண்ட ஓர் உதவி ஆசிரியரிடம் பேசி ரொம்ப நாளாகிவிட்டது.
கதையை முழுக்க விவரித்துவிட்டு அவர் கேட்டார். ‘சார், இதானே நீங்க சொல்லவந்தது? நான் சரியாப் புரிஞ்சுகிட்டிருக்கேனா?’
’ஆமாங்க. ரொம்ப அழகாச் சொல்லிட்டீங்க’ என்றேன் நான்.
அவர் சற்றுத் தயங்கினார். பிறகு, ‘சார், இந்தக் கதையைப் பிரசுரிக்கறதுல ஒரு சின்னப் பிரச்னை.’
‘என்னாச்சு?’
‘எங்க பொறுப்பாசிரியர் கதையை இன்னிக்குதான் படிச்சார். அவர் இந்த க்ளைமாக்ஸ் சரியில்லை, மாத்தணும்ன்னு ஃபீல் பண்றார்’ என்றார் அவர். கதைக்கு இன்னொரு வித்தியாசமான முடிவை விவரித்தார்.
எனக்கு அது சற்றும் பிடிக்கவில்லை. ‘ரொம்ப childishஷா இருக்குங்களே!’ என்றேன்.
‘ஆமா சார்’ என்றார் அவர். ‘உங்க கதைக்கு நீங்க எழுதியிருக்கிற முடிவுதான் மிகச் சரியானது. அதை இப்படி மாத்தினா கதையே வீணாகிடும்.’
‘சரிங்க, இப்ப என்ன செய்யறது?’
’சார், நான் சொல்றதைத் தப்பா நினைச்சுக்காதீங்க, அவங்க சொல்லிக் கேட்க வேண்டிய நிலைமையில நான் இருக்கேன்.’
‘ஒண்ணும் பிரச்னை இல்லைங்க, எதுவானாலும் தயங்காம சொல்லுங்க.’
’நீங்க இந்தக் கதையோட க்ளைமாக்ஸை மாத்தினாதான் இது எங்க பத்திரிகையில பிரசுரமாகும்ன்னு நினைக்கறேன். ஆனா அப்படி மாத்தினா மொத்தக் கதையும் கெட்டுப்போயிடும்.’
‘உண்மைதாங்க!’
‘ஆனா, இதை நான் எங்க எடிட்டர்கிட்ட சொல்லமுடியாது. நீங்க சொன்னதாச் சொன்னாலும் அவர் கோவப்படுவார்.’
‘ஓகே!’
‘எனக்கு என்ன தோணுதுன்னா, இந்தக் கதை இந்த வடிவத்துல பிரசுரமாகணும், இல்லாட்டி அது பிரசுரமாகாம இருக்கறதே நல்லது’ என்றார் அவர். ‘இது என் கருத்துமட்டுமே, நீங்க விரும்பினா க்ளைமாக்ஸை மாத்திப் பிரசுரிக்கறோம், என்ன சொல்றீங்க?’
நான் கொஞ்சம் யோசித்தேன். கொள்கைப் புடலங்காயெல்லாம் எனக்குக் கிடையாது. ஆனால் அந்தப் புது க்ளைமாக்ஸ் இந்தக் கதைக்குக் கொஞ்சமும் பொருந்தாது. மொத்தக் கதையையும் வெட்டிச் சாய்த்துவிடும்.
நான் வருஷத்துக்கு ரெண்டு கதை எழுதுகிறவன். ஒரு கதை பிரசுரமாகாவிட்டால் என்ன பெரிய பிரச்னை? அப்படி குப்பையாகக் கதையைச் செய்து அச்சில் பார்க்கவேண்டுமா என்ன?
‘பரவாயில்லைங்க, அந்தக் கதையைத் திரும்பக் கொடுத்துடுங்க, நான் புதுசா வேற கதை எழுதித் தர்றேன்’ என்றேன்.
அவருக்குப் பெரும் நிம்மதி. ‘ஒருபக்கம் சந்தோஷமாவும் இன்னொருபக்கம் ரொம்ப வருத்தமாவும் இருக்கு சார்’ என்றார்.
‘கவலைப்படாதீங்க, இந்தக் கதை இதே வடிவத்தில வேறு எங்காவது பிரசுரமாகும்ன்னு நம்பறேன். லட்சம் பேர் ஒரு சுமாரான கதையைப் படிக்கறதைவிட, நான் எழுதின வடிவத்தில நீங்கமட்டுமாவது படிச்சு ரசிச்சு இந்த அளவுக்குப் புரிஞ்சுகிட்டு எனக்கே விளக்கிச் சொன்ன அனுபவம், ரூபாய் கொடுத்தாக் கிடைக்காது. நன்றி’ என்றேன்.
சத்தியமாக அது புகழ்ச்சி வார்த்தை அல்ல. அந்தக் கணத்தில் ஆத்மார்த்தமாகத் தோன்றியது. சிறுகதைகள் வழக்கொழிந்துவரும் இன்றைய நாள்களில், எனக்கு இப்படி ஓர் அனுபவம் மறுபடி என்றும் கிடைக்கப்போவதில்லை என்று நினைக்கிறேன். ஆண்டவன் கருணையுள்ளவன்!
***
என். சொக்கன் …
26 07 2012
16 Responses to "மாற்றத்தான் வேண்டுமோ?"

enga vanthuchunnu sonna naanga thedi poi paddippom. please.. sollungalen.


கமென்ட் ஒன்றினை இட வந்தேன்,ஆனால் உங்களது இரண்டாவது கமென்ட் (பதிலை) பார்த்து விட்டு இப்போது இடும் கமென்ட்: நோ கமெண்ட்ஸ்.
மற்றபடி அட்டகாசமான ஒரு ஆர்டிகிள். உண்மையிலேயே அந்த உதவி ஆசிரியர் ஒரு நல்ல வாசிப்பாளர் என்றே தெரிகிறது.


Nanri. 🙂


http://www.vikatan.com/anandavikatan/Stories/22031-short-story-by-chokkan.html
சொக்கன் – உங்க திறனுக்கு இந்தக் கதை கொஞ்சம் சுமார் ரகம் தான். தப்பாக நினைக்க வேண்டாம். திருப்பம் நிறைந்த முடிவு, கச்சிதமான தலைப்பு என்பவற்றைத்தவிர மற்றவை அவ்வளவு சுவையாக இல்லை. இந்தக்கதையை மூன்று மணி நேரம் முன்னரே படித்து விட்டேன். கதையாசிரியர் பெயரை, படித்தபின்பு நோக்கவில்லை என்பதே (கதையை சேமிக்கவில்லை என்பதும்) அத்தாட்சி.


அன்புள்ள சொக்கன்,
’உங்கள் மாற்றத்தான் வேண்டுமோ?’ கட்டுரை வாசித்தேன். தற்செயலாக இந்த வார ஆனந்த விகடனில் உங்கள் ‘கனவான்களின் ஆட்டம்’ கதையையும் வாசித்தேன்.
உங்கள் கட்டுரையில் குறிப்பிட்ட சிறுகதை இதுதானா தெரியாது. ’கனவான்களின் ஆட்டம்’ கதையின் முடிவு தேவையில்லாத திருப்பம். தர்மனுக்கும், அவன் குடும்பத்திற்கும் உதவியதால் ’நான்’ என்ற அந்தப் பையனின் நல்ல எண்ணத்தைப் பற்றிச் சொல்லாமல், அவனை கெட்டவனாக ஏன் மாற்ற வேண்டும்?
நல்லவனும், குடும்பஸ்தனுமான தர்மனை ஏன் பொல்லாதவனாகக் காட்ட வேண்டும்?
இருவரையுமே கெட்டவர்களாக காட்டி விட்டீர்கள். நல்லதை மட்டும் சொல்லுங்கள். சமுதாயத்திற்கு நல்லது.
அன்புடன்,
வ.க.கன்னியப்பன் .


அன்புள்ள சொக்கன்,
பொறுப்பாசிரியர் சொல்லிய, ரொம்ப childishஷா இருக்குங்களே!’ என்றீர்களே – அந்தக் கருத்துப்படியாகவா முடித்திருக்கிறீர்கள்? உண்மையிலேயே இந்த முடிவு childish தான்.
அந்த ’நான்’ என்ற பையன், பள்ளியில் படிப்பவன், 18 வயதிற்குள் உள்ள பையன், திருமணமாகாதவனாக இருக்க வேண்டும், 3 பிள்ளைகள் பெற்ற தர்மன் 25 வயதாவது இருக்க வேண்டும். தர்மனை கிரிக்கெட் விளையாடத் தெரிந்த, பெரிய டீமில் சேர்த்துக் கொள்ளப்படாதவனாகவும், அவனுக்கு ’நான்’ என்ற பையன், நல்ல வேலைக்கு வாய்ப்பளித்த நல்லவனாகவும் உருவகப்படுத்தியிருக்கலாம்.
அன்புடன்,
வ.க.கன்னியப்பன்


சில சமயங்களில் நல்ல கதைகூட நிராகரிக்கப்படலாம். பிரபல பத்திரிகைஆசிரியர் குழுவினர் தேர்ந்தெடுத்த என் கதையொன்று, இறுதியில் ஆசிரியரால் நிராகரிக்கபட்டது. இதே கதை பிறகு ஓர் இலக்கியப் பத்திரிகையில் வெளியாகி அதற்கு கதா ப்ரிசு கிடைத்தது. ப்ல்வேறு மொழிகளிலும் வெளியானது. இன்னொன்று எழுதுபவனுக்கு ஏறக்க்குறைய தன் படைப்ப்புகள் எல்லாமெ நல்லாத்தான் தெரியும்.
புதுவை ரா. ரஜனி

1 | Prabu Krishna
July 26, 2012 at 10:06 am
பிரசுரிக்கப்படாத கதை வேறு எதிலாவது வந்ததா சார்?