Archive for July 30th, 2012
’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 8
Posted July 30, 2012
on:50
புத்தகங்களைப் பற்றிய புதுக்கவிதை (அல்லது பொன்மொழி) ஒன்று. எழுதியவர், நெல்லை ஜெயந்தா:
நாம் புத்தகங்களை மேலிருந்து கீழாக வாசிக்கிறோம், அவையோ நம்மைக் கீழிருந்து மேலாகத் தூக்கிவிடுகின்றன!
51
தமிழில் இது எதார்த்த எழுத்துகள், சோதனை முயற்சிகளின் காலம். இதற்குமுன்னால் ‘லட்சியவாத’ எழுத்துகள் ஆட்சி செய்தன. அந்தக் காலகட்டத்து எழுத்து வேந்தர்களில் ஒருவர், ’தீபம்’ நா. பார்த்தசாரதி. பரவலான வாசகர் வட்டத்துடன் எழுதியவர், அதேசமயம் பல விருதுகளையும் வென்றவர். ’சமுதாய வீதி’ என்ற அவரது நூலுக்கு இந்திய அரசு வழங்கும் ‘சாகித்ய அகாதெமி’ விருது கிடைத்தது.
நா. பார்த்தசாரதி ’கல்கி’ இதழில் ‘மணிவண்ணன்’ என்ற பெயருடன் எழுதிய ’சூப்பர் ஹிட்’ தொடர்கதை, ‘குறிஞ்சி மலர்’. பின்னர் இது ஒரு பிரபலமான தொலைக்காட்சித் தொடராகவும் வந்தது நினைவிருக்கலாம்.
‘குறிஞ்சி மலர்’ முன்னுரையில், லட்சியவாத எழுத்து பற்றி நா. பார்த்தசாரதி ஓர் அழகிய உதாரணம் தந்துள்ளார். அது:
‘மருக்கொழுந்துச் செடியில் வேரில் இருந்து நுனித் தளிர்வரை எங்கே கிள்ளி மோந்தாலும் மணக்கும். அதுபோல, என்னுடைய இந்த நாவலின் எந்தப் பகுதியை எடுத்து வாசித்தாலும் பண்பும் ஒழுக்கமும் வற்புறுத்தப்படுகிற குரல் ஒலிக்கவேண்டும் என்று நினைத்து நான் எழுதினேன். கல்லூரிகளிலும் பள்ளிக்கூடங்களிலும் இன்று வளர்ந்து வரும் தமிழ் நம்பியரும் நங்கையரும் எதிர்காலத் தமிழ்ச் சமுதாயப் பண்ணையின் நாற்றங்கால் என்று நினைவூட்ட விரும்பினேன்.’
52
தமிழின் சங்க இலக்கிய நூல்கள் அனைத்தும் வாசிக்கச் சுகமானவை, சொற்செறிவு, அற்புதமான கற்பனை நயம் போன்றவற்றைத் தாண்டி, அன்றைய வாழ்க்கைமுறையை, நம்பிக்கைகளை, மதிப்பீடுகளை (ஓரளவு சரித்திரத்தையும்) உணர்வதற்கு உதவுகிறவை.
ஆனால், இந்த நூல்கள் எப்போது எழுதப்பட்டவை என்பதுகுறித்துத் திட்டவட்டமாகச் சொல்வதுதான் மிகச் சிரமமாக இருக்கிறது. இதுபற்றிய ஆராய்ச்சியில் பல அறிஞர்கள் நேரம் செலவிட்டிருக்கிறார்கள். ‘அவை எப்போது எழுதப்பட்டால் என்ன? அதைப் பற்றிக் கவலைப்படாமல் வாசித்து மகிழ்வோம்’ என்று சொல்கிறவர்களும் பலர் உண்டு.
பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில், பல ஆதாரங்களின் அடிப்படையில், ’எட்டுத்தொகை’ எனப்படும் முதன்மையான சங்க இலக்கிய நூல்கள் இந்த வரிசையில்தான் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று ஊகித்துள்ளார்:
1. குறுந்தொகை
2. நற்றிணை
3. அக நானூறு
4. ஐங்குறுநூறு
5. பதிற்றுப் பத்து
6. புற நானூறு
7. கலித்தொகை
8. பரிபாடல்
53
ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற ‘ரோமியோ : ஜூலியட்’ நாடகம் பல மொழிகளில் வெளிவந்துள்ளது. தமிழிலேயே பலமுறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அப்படி ஒரு மொழிபெயர்ப்பு, 1992ம் வருடம் ’அன்னை வெளியீட்டகம்’ என்ற பதிப்பகத்தால் வெளியானது. இதை மொழிபெயர்த்தவர் பெயர் என்ன தெரியுமா?
தான்தோன்றிக் கவிராயர்!
சிரிக்காதீர்கள், நிஜமாகவே அதுதான் அந்த மொழிபெயர்ப்பாளரின் புனைபெயர்.
’மனிதர் நல்ல தமாஷான பேர்வழியாக இருப்பார்போல’ என்று உள்ளே போனால், முன்னுரையிலேயே ஏகப்பட்ட வெடிச்சிரிப்புகள். உதாரணமாக, அங்கே குறிப்பிடும் ஒரு குறும்புக் கவிதை:
தலைப்பு: ‘சோம்பல்’
கவிதை: ‘அட! நாளைக்கு எழுதலாம்.’
54
சோழ நாட்டை ஆண்ட பெருமன்னர்களில் ஒருவன், அனபாய சோழன். அவனுடைய சபையில் முதலமைச்சராகப் பணியாற்றியவர், அருண்மொழித் தேவர்.
அன்றைய சோழ நாட்டில் சமண இலக்கியங்கள்தான் பரவலாக வாசிக்கப்பட்டன. சிவனை வழிபடும் மரபில் வந்த அருண்மொழித் தேவர் சைவ இலக்கியங்களும் அப்படிப் பிரபலமாகவேண்டும் என்று விரும்பினார். சோழனிடம் அதுபற்றிப் பேசினார். சைவத் தொண்டர்கள் பலருடைய வாழ்க்கையை விவரித்துச் சொன்னார்.
சோழன் மகிழ்ந்தான். ‘இதைத் தாங்களே ஒரு பெருங்காப்பியமாக எழுதித் தரவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டான்.
இப்படி எழுதப்பட்ட நூல்தான், ’திருத்தொண்டர் புராணம்’ எனப்படும் ‘பெரிய புராணம்’. அதனை எழுதிய அருண்மொழித் தேவரை நாம் இப்போது ‘சேக்கிழார்’ என்ற பெயரால் அறிகிறோம். அது அவர் பிறந்த வேளாளர் குல மரபின் பெயர்.
(ஆதாரம்: மு. அருணாசலம் எழுதிய ‘சேக்கிழார்’ நூல்)
55
தமிழுக்குப் பல முக்கியமான திறனாய்வு நூல்களையும் மொழிபெயர்ப்புகளையும் தந்தவர் தி. க. சி. (திருநெல்வேலி கணபதி சிவசங்கரன்), இந்திய அரசின் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர், வண்ணதாசன், கல்யாண்ஜி என்ற புனைபெயர்களில் அற்புதமான சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ள எஸ். கல்யாணசுந்தரம் இவரது மகன்.
தி.க.சி.யைப் பற்றிப் பேசும்போது, அவரது கடிதங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். தனக்கு வரும் புத்தகங்கள், பத்திரிகைகள் அனைத்தையும் விடாமல் படித்துவிட்டு, தனது பாராட்டுகள், விமர்சனங்களை ஒரு போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பிவிடுவார். அவரது கடிதங்களைப் படித்து ஊக்கம் கொண்டவர்கள், அந்த அஞ்சல் அட்டையை ஒரு விருதுக்கு இணையாகப் பாதுகாக்கிறவர்கள், அதனாலேயே மிகத் தீவிரமாக எழுதத் தொடங்கிய இளம் எழுத்தாளர்கள் ஏராளம்.
முதிர்ந்த வயது காரணமாக, தி.க.சி.க்குக் கை நடுக்கம் ஏற்பட்டுவிட்டது. அப்போதும் தொடர்ந்து வாசித்து, கடிதங்கள் எழுதிவந்தார். நண்பர்கள் அதைக் கண்டித்தபோது அவர் சொன்ன பதில், ‘அரை மணி நேரம் எழுதுவேன், பிறகு அரை மணி நேரம் ஓய்வு எடுத்துக்குவேன், அப்படியே கொஞ்சம் கொஞ்சமா எழுத நினைச்சதை எழுதி முடிச்சுடுவேன்.’
‘கடிதங்களுக்கு இவ்வளவு சிரமப்பட்டுப் பதில் எழுதணுமா?’
’ரோட்டுல நடந்து போறோம், எதிர்த்தாப்ல ஒருத்தர் வர்றார், நம்மளப் பார்த்து வணக்கம் சொல்றார், ஒரு மரியாதைக்குத் திருப்பி நாமளும் வணக்கம் சொல்லணுமா, வேண்டாமா?’
(ஆதாரம்: வே. முத்துக்குமார் எழுதிய ’தி.க.சி. : மாறாத இலக்கியத்தடம்’ கட்டுரை)
56
தமிழில் உள்ள 42 எழுத்துகள் ’ஓரெழுத்து ஒரு மொழி’ என்ற வகையைச் சேர்ந்தவை. அதாவது, அந்த எழுத்தே ஒரு சொல்லாகப் பொருள் தரும். அவற்றின் பட்டியல் இங்கே, அதிகம் புழக்கத்தில் இல்லாத சொற்களுக்குமட்டும் அடைப்புக்குறியில் விளக்கம் தந்துள்ளேன்.
ஆ (பசு), ஈ, ஊ (இறைச்சி), ஏ (அம்பு), ஐ, ஓ, மா (பெரிய / விலங்கு), மீ (உயரம்), மு (மூப்பு), மே (மேன்மை), மை, மோ (முகர்தல்), தா, தீ, தூ (வெண்மை), தே (தெய்வம்), தை, பா, பூ, பே (நுரை, அழகு), பை, போ, நா, நீ, நே (அன்பு), நை, நோ (நோவு), கா (சோலை), கூ, கை, கோ (அரசன்), வா, வீ (பூ, அழகு), வை, வௌ (கௌவுதல்), சா, சீ, சே (எருது), சோ (மதில்), யா (மரம்), நொ (துன்பம்), து (கெடு)
(ஆதாரம்: ’ஊற்று’ சிற்றிதழ் : மே 2008)
நன்றி: http://www.facebook.com/600024books
***
என். சொக்கன் …
30 07 2012