மனம் போன போக்கில்

அண்ணலும் அவளும்

Posted on: August 6, 2012

’வடக்கு வாசல்’ ஆகஸ்ட் 2012 இதழ் தொடங்கி ’கம்பனின் வார்த்தைகள்’ என்ற தலைப்பில் நான் எழுதத் தொடங்கியிருக்கும் பத்தியின் முதல் அத்தியாயம் இது. கம்ப ராமாயணத்தில் நாடக அம்சம் நிறைந்த சில பகுதிகளை எடுத்துக்கொண்டு, முடிந்தவரை கம்பனின் வர்ணிப்புடன் கட்டுரையாகத் தரும் முயற்சி. கவி நுட்பங்களை ஆழமாக எழுதுமளவு எனக்கு வாசிப்பு இல்லை. இது ஓர் அறிமுகமாகமட்டுமே அமையும்.

விசுவாமித்திரன் முன்னே நடக்க, ராமனும் அவன் தம்பி லட்சுமணனும் பின்னால் வருகிறார்கள். மிதிலை நகர எல்லைக்குள் கால் பதிக்கிறார்கள்.

அந்த ஊர் மதில்கள்மீது கொடிகள் பறக்கின்றன. அவை ராமனை நோக்கிக் கை அசைத்து ‘வா, வா’ என்று அழைப்பதுபோல் தோன்றுகிறதாம்.

ராமன் ஏன் மிதிலைக்குள் வரவேண்டும்?

காரணம் இருக்கிறது. ‘மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து செய்யவள் இருந்தாள்’ என்று அந்தக் கொடிகள் சொல்வதாகக் கம்பர் வர்ணிக்கிறார்: குற்றமில்லாத தாமரை மலரை விட்டு நீங்கிய திருமகள், எங்கள் நகரம் செய்த தவத்தினால் இங்கே சீதையாக வந்து பிறந்திருக்கிறாள். ஆகவே, ராமா நீ இங்கே வா, அவளுடைய கைத்தலம் பற்றிக் கொள்!

சீதை அப்பேர்ப்பட்ட அழகியா?

பின்னே? ‘மதனற்கும் எழுத ஒண்ணாச் சீதை’ என்கிறார் கம்பர். அந்த மன்மதனால்கூடச் சீதையின் அழகை ஓவியமாகத் தீட்டமுடியாதாம்.

மன்மதன் யோசித்தான், மற்ற வண்ணங்களெல்லாம் சீதையைப் படமாக வரையை போதாது என்று, அமுதத்தை எடுத்தான், அதில் தூரிகையைத் தோய்த்தான், படம் வரைய நினைத்தான்.

ம்ஹூம், அப்பேர்ப்பட்ட அமுதத்தால்கூட அந்தப் பேரழகைப் பதிவு செய்ய முடியவில்லையாம். மன்மதன் திகைத்துப்போய் நிற்கிறான். ‘ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து அவயம் அமைக்கும் தன்மை யாதெனத் திகைக்கும்!’

இப்படிக் கம்பர் வர்ணித்துக்கொண்டிருக்கும்போதே, ராமரும் லட்சுமணரும் விசுவாமித்திரருடன் மிதிலைக்குள் நுழைந்துவிடுகிறார்கள். பல காட்சிகளைக் கண்டபடி நடக்கிறார்கள்.

அங்கே ஒரு நடன சாலை. அதில் ‘ஐயம் நுண் இடையார்’, அதாவது இடை இருக்கிறதா, இல்லையா என்று சந்தேகம் வரும்படி நுட்பமான இடுப்பைக் கொண்ட பெண்கள் நடனமாடுகிறார்கள்.

இன்னொருபக்கம், சில பெண்கள் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறார்கள், எப்படி? ’மாசு உறு பிறவிபோல் வருவது போவது ஆகி’, தவறு செய்தவர்கள் மீண்டும் மீண்டும் இந்தப் பூமியில் பிறப்பதைப்போல, அவர்களுடைய ஊஞ்சல் முன்னும் பின்னும் ஆடுகிறதாம். அதைப் பார்த்த ஆண்களின் உள்ளமும் அதோடு சேர்ந்து தடுமாறுகிறதாம்.

வேறொருபக்கம், சில பெண்கள் பாடிக்கொண்டிருக்கிறார்கள், சில பெண்கள் பூப்பறிக்கிறார்கள், பந்தாடுகிறார்கள், குளிக்கிறார்கள்… ஆனால் இவர்களில் யாரையும் ராமன் நிமிர்ந்து பார்க்கவில்லை. சமர்த்தாக முனிவரின் பின்னே நடந்துகொண்டிருக்கிறான்.

சிறிது நேரத்தில், அவர்கள் அரண்மனையை நெருங்குகிறார்கள். அங்கே கன்னிமாடத்தில் சீதை நிற்கிறாள். அந்தக் காட்சியைக் கம்பர் இப்படி வர்ணிக்கிறார்:

பொன்னின் சோதி, போதின் நாற்றம், பொலிவேபோல்
தென் உண் தேனின் தீம் சுவை, செம் சொல் கவி இன்பம்,
கன்னி மாடத்து உம்பரின் மாடே களி பேடோடு
அன்னம் ஆடு முன் துறை கண்டு ஆங்கு அயல் நின்றார்

தங்கத்தின் பிரகாசம், பூவின் நறுமணம், வண்டுகள் அருந்துகின்ற தேனின் இனிமையான ருசி, சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதிய நல்ல கவிதை தரும் இன்பம்… இவை எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டியதுபோன்ற ஓர் உருவம், கன்னி மாடத்தில் நிற்கிறது. அங்கே அன்னங்கள் சேர்ந்து விளையாட, அவற்றின் நடுவே சீதை தோன்றுகிறாள்.

சீதையைப் பார்த்த மனிதர்களெல்லாம் ‘அடடா, தேவர்களைப்போல நமக்கும் இமைக்காத விழி கிடைத்தால் இவளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாமே’ என்று ஏங்குகிறார்களாம். அந்தத் தேவர்களோ ‘நமக்கு இரண்டு கண்கள்தானே இருக்கிறது, சீதையைப் பார்க்க இவை போதாதே, இன்னும் ஏழெட்டுக் கண் கிடைத்தால் நன்றாக இருக்குமே’ என்று தவிக்கிறார்களாம். (’இமையா நாட்டம் பெற்றிலம் என்றார், இரு கண்ணால் அமையாது என்றார் வானத்தவர்’)

கன்னிமாடத்தில் சீதையின் அருகே பல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் சீதையுடைய அழகுக்கு இணையாகமாட்டார்கள். ‘சதகோடி முன் சேவிக்க, மின் அரசு எனும்படி நின்றாள்’ என்கிறார் கம்பர். நூறு கோடி மின்னல்கள் சுற்றிலும் வந்து நின்று வணங்கி நிற்க, நடுவில் அவர்களுக்கெல்லாம் தலைவியாக நின்ற ‘மின்னல் அரசி’யாம் சீதை!

இன்னும், சீதையின் அழகைக் கண்டு ‘குன்றும், சுவரும், திண் கல்லும், புல்லும்’ உருகுகின்றன, அவள் அணிந்திருக்கிற நகைகளால் சீதைக்கு அழகு இல்லை, சீதையால்தான் அந்த ஆபரணங்களுக்கு அழகு (’அழகெனும் மணியுமோர் அழகு பெற்றவே’), பெண்களே அவளைக் கண்டு காதல் கொள்கிறார்கள் (’மங்கையர்க்கு இனியது ஓர் மருந்து’)… இப்படிக் கம்பர் அடுக்கிக்கொண்டே போகிறார்.

அப்பேர்ப்பட்ட சீதையை, ராமன் பார்க்கிறான், அவளும் அவனைப் பார்க்கிறாள், புகழ் பெற்ற ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ பாடல் இப்படித் தொடங்குகிறது:

எண் அரு நலத்தினாள், இனையள் நின்று உழிக்
கண்ணொடு கண்ணினைக் கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்

நினைக்கவும் அரிதான அழகைக் கொண்ட சீதை கன்னிமாடத்தில் நிற்க, அவளுடைய கண்களும் ராமனின் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி உண்கின்றன, இருவரும் நிலை தடுமாறுகிறார்கள், காதல்வயப்படுகிறார்கள்.

இந்தக் காட்சி வால்மீகியில் இல்லை. அங்கே ராமன் வில்லை உடைத்தபிறகுதான் சீதையைப் பார்க்கிறான். அதிலிருந்து சற்றே மாறுபட்டு, தமிழுக்காகக் கம்பர் வடித்துத் தந்த அற்புதமான பகுதி இந்தக் ‘காட்சிப் படல’ப் பாடல்கள். ஒவ்வொன்றும் அற்புதமான அழகு கொண்டவை.

’நோக்கு எனும் பாசத்தால் பிணித்து’, கண் பார்வை என்கிற கயிற்றினால் ஒருவரை ஒருவர் கட்டி ஈர்த்துக்கொள்கிறார்கள். ராமன் மனம் சீதையை இழுக்க, சீதையின் மனம் ராமனைத் தன்னருகே இழுக்க… ’இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார்’ என்று முடிக்கிறார் கம்பர்.

என்ன இது? சினிமாவில் வருவதுபோல் முதல் பார்வையிலேயே காதலா?

முதல் பார்வையா? யார் சொன்னது? திருமால் அவதாரம் ராமன், திருமகளின் அவதாரம் சீதை, இருவரும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் பிரியாமல் வாழ்ந்தவர்கள்தான். இந்தப் பிறவியில் ரொம்ப நாள் கழித்துச் சந்திக்கிறார்கள், அதனால், சட்டென்று காதல் பற்றிக்கொள்கிறது. ‘பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ’ என்று உருகுகிறார் கம்பர்.

இதெல்லாம் முனிவர் விசுவாமித்திரருக்குத் தெரியுமா? அவர்பாட்டுக்கு நடக்கிறார். ராமனும் அவருக்குப் பின்னே சென்றுவிடுகிறான்.

சீதை துடித்துப்போகிறாள். அதைச் சொல்லும் கம்பன் வர்ணனை: ‘கண் வழி புகுந்த காதல் நோய், பால் உறு பிரை என எங்கும் பரந்தது.’

பாலில் ஒரு துளி மோரைதான் பிரை ஊற்றுகிறோம். அது பால்முழுவதும் சென்று அதனைத் தயிராக மாற்றிவிடுகிறது அல்லவா? அதுபோல, கண்களின்வழியே சீதைக்குள் நுழைந்த காதல் நோய், அவளுடைய உடல்முழுவதும் பரந்து வருத்தியது. அவள் துடிதுடித்தாள்.

இதைப் பார்த்த தோழிகள் சீதைக்கு ஏதேதோ வைத்தியம் செய்கிறார்கள். மலர்ப் படுக்கையில் படுக்கவைக்கிறார்கள், சந்தனம் பூசுகிறார்கள், சாமரம் வீசுகிறார்கள், திருஷ்டி கழிக்கிறார்கள்.

ம்ஹூம், எந்தப் பலனும் இல்லை. சீதை பலவிதமாகப் புலம்பத் தொடங்குகிறாள். அவற்றுள் ஓர் அருமையான பாட்டு:

இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்,
சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும்,
சுந்தர மணி வரைத் தோளுமே அல
முந்தி, என் உயிரை அம் முறுவல் உண்டதே!

’என்னை வருத்துவது எது? இந்திர நீலம் என்ற உயர்ந்த கல்லைப்போல இருண்ட அவனுடைய தலைமுடியா? நிலவைப் போன்ற முகமா? நீண்ட கைகளா? அழகான ரத்தின மலை போன்ற தோள்களா?’

‘இவை எதுவுமே இல்லை, எல்லாவற்றுக்கும் முன்பாக, அவனுடைய உதட்டில் பரவிய அந்தப் புன்சிரிப்பு, அதுதான் என்னுடைய உயிரை உண்டுவிட்டது!’

இங்கே ‘தாழ்ந்த கைகளும்’ என்ற பிரயோகத்தைக் கவனிக்கவேண்டும். அதாவது, நீண்ட கைகள், அதனை ராஜ லட்சணம் என்று சொல்வார்கள்.

என்னதான் ராஜாவானாலும், காதல் வந்துவிட்டால் அவன் நிலைமையும் பரிதாபம்தான். சீதையைப் பார்த்துவிட்டு விசுவாமித்திரருடன் சென்ற ராமனும் அப்படிப்பட்ட ஒரு தவிப்பில்தான் சிக்கிக் கிடந்தான்.

‘பொருள் எலாம் அவள் பொன்னுருவாயவே’ என்கிறார் கம்பர். ‘பார்க்கும் இடத்திலெல்லாம் நந்தலாலா’ என்று பாரதி பாடியதுபோல, ராமனுக்கு எதைப் பார்த்தாலும் சீதையின் பொன் வடிவம்மட்டுமே தெரிகிறதாம். அவளையே நினைத்துக்கொண்டு படுத்துக் கிடக்கிறான்.

திடீரென்று ராமனுக்கு ஒரு சந்தேகம். ‘ஒருவேளை, அந்தப் பெண் ஏற்கெனவே திருமணமானவளாக இருந்துவிட்டால்? என்னுடைய காதல் பிழையாகிவிடுமே!’

மறுகணம், அவனே தன்னைச் சமாதானப்படுத்திக்கொள்கிறான். ‘நல் வழி அல் வழி என் மனம் ஆகுமோ?’… என்னுடைய மனம் எப்போதும் கெட்ட வழியில் போகவே போகாது, ஆகவே, இன்றைக்கு நான் இந்தப் பெண்ணைப் பார்த்துக் காதல்வயப்படுகிறேன் என்றால், அவள் எனக்கெனப் பிறந்தவளாகதான் இருக்கவேண்டும்.

ராமன் இப்படிப் பலவிதமாக யோசித்துக்கொண்டிருக்கையில், பொழுது விடிகிறது. விசுவாமித்திரர் அவனை ஜனகரிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்துகிறார். சிவ தனுசு கொண்டுவரப்படுகிறது. யாராலும் தூக்கக்கூடமுடியாத அந்த வில்லை ராமன் எடுத்துப் பூட்டி முறித்துவிடுகிறான்.

அந்த ஓசை, மூன்று உலகங்களில் இருந்த எல்லாருக்கும் கேட்டதாம், இதற்குச் சாட்சி, ராமனின் தந்தை தசரதன்!

ராமன் வில்லை முறித்தபோது, தசரதன் ஏதோ ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறான். திடீரென்று ஒரு பெரிய சத்தம் கேட்கிறது. ‘என்ன அது?’ என்று குழம்புகிறான்.

பின்னர் ஜனகனின் தூதுவர்கள் அவனை வந்து சந்தித்து விஷயத்தைச் சொன்னபிறகு, தசரதனுக்கு அந்த மர்மம் விளங்குகிறது. ‘வில் இற்ற பேரொலி கொல் அன்று இடித்தது ஈங்கு’ என்று வியப்பாகச் சொல்கிறான்.

ஆனால், எங்கேயோ அயோத்தியில் இருக்கும் தசரதனுக்குக் கேட்ட இந்த ‘வில் முறியும் சத்தம்’, அதே மிதிலை நகரில் இருக்கும் சீதைக்குக் கேட்கவில்லை. காரணம், அவள் ராமனை எண்ணி மயக்கத்தில் இருக்கிறாள். ஆகவே, அந்த ராமன் வில்லை முறித்த செய்தியும் அவளுக்குத் தெரியவில்லை.

அப்போது, மிதிலை நகரெங்கும் கொண்டாட்டம். ’இவ்வளவு நாளாக ஜனகனின் சிவதனுசை வளைக்கும் ஆண் மகன் யாருமே இல்லையா என்று ஏங்கினோமே, அப்படி ஒரு பெரிய வீரன் வந்துவிட்டான், சீதையின் திருமணம் நிச்சயமாகிவிட்டது’ என்று எல்லாரும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்கள்.

மற்றவர்கள் சொல்வது இருக்கட்டும். மணப்பெண் சீதையிடம் செய்தியைச் சொல்லவேண்டாமா? ‘மாலை’ என்ற தோழி உற்சாகத்துடன் சீதை இருக்கும் இடத்தை நோக்கி ஓடுகிறாள்.

முன்பு சீதையை ‘மின் அரசு’ என்று வர்ணித்த கம்பர், இப்போது அதே உவமையைச் சற்றே மாற்றிப் பயன்படுத்துகிறார், ’நுடங்கிய மின் என’, துவண்ட மின்னலைப்போலப் படுக்கையில் கிடக்கிறாள் சீதை.

அப்போது, தோழி உள்ளே நுழைகிறாள். நடந்ததை விவரிக்கிறாள்:

மாத்திரை அளவில் தாள் மடுத்து, முன்பயில்
சூத்திரம் இதுவெனத் தோளின் வாங்கினான்,
ஏத்தினர் இமையவர் இழிந்த பூமழை,
வேந்து அவை நடுக்கு உற முறிந்து வீழ்ந்ததே!

’இளவரசியே, யாரோ ஒருவன், ராமன் என்று பெயராம், தம்பியோடும் முனிவரோடும் வந்தான், பெரிய சிவ தனுசைக் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் கையில் பிடித்துத் தூக்கினான், ஒரு பக்கத்து முனையைக் காலால் மிதித்தான், ஏற்கெனவே பலமுறை பழகிய ஒரு வில்லைக் கையாள்வதுபோல் சுலபமாக வளைத்தான், அதைப் பார்த்து வியந்த தேவர்கள் பூமாலை தூவிப் பாராட்டினார்கள், மறுகணம், அந்த வில் முறிந்து விழுந்தது, நம் அவையில் உள்ள எல்லாரும் நடுக்கத்துடன் அவனைப் பார்த்தார்கள்!’

சீதைக்கு மகிழ்ச்சி. காரணம், ‘யாரோ ஒருவன், தம்பியோடும் முனிவரோடும் வந்தான்’ என்கிற வர்ணனை, அவள் மனத்தில் உள்ள அந்த ஆணுக்குப் பொருந்திப்போகிறது. வில்லை முறித்தவன் அவன்தானா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனாலும், அவனாகதான் இருக்கவேண்டும் என்று அவளுடைய உள்ளுணர்வுக்குத் தோன்றுகிறது.

முன்பு ராமன் ‘என் மனம் கெட்ட வழியில் போகாது’ என்று யோசித்துத் திருப்தி அடைந்தான் அல்லவா? அதுபோலதான் சீதை அடைந்த மகிழ்ச்சியும். ‘நான் அவனை மனத்தில் நினைத்திருக்கிறேன், உடனே ஒருவன் தோன்றி என்னுடைய சுயம்வர வில்லை முறிக்கிறான், அப்படியானால் இருவரும் ஒருவராகதான் இருக்கவேண்டும்’ என்று திருப்தி அடைகிறாள்.

ராமனுக்கும் அதே போன்ற ஒரு குழப்பம்தான். ‘வில்லை முறித்துவிட்டேன், அதற்காக ஓர் இளவரசியை எனக்குத் திருமணம் செய்து தரப்போகிறார்கள். ஆனால், இந்த இளவரசியும், நான் அன்றைக்குக் கன்னிமாடத்தில் பார்த்த அந்தப் பெண்ணும் ஒருவர்தானா? அதை எப்படி உறுதிசெய்துகொள்வது?’

இதற்கான வாய்ப்பு ராமனுக்கோ சீதைக்கோ உடனே கிடைக்கவில்லை. நெடுநேரம் கழித்து, சீதையைத் தசரதன்முன்னால் அழைத்துவந்து அறிமுகப்படுத்தும்போதுதான், அவளும் ராமனும் மறுபடி சந்திக்கிறார்கள்.

ராமன் சீதையை நிமிர்ந்து பார்க்கிறான். குழப்பம் தீர்ந்து மகிழ்ச்சியடைகிறான். அந்தக் காட்சியை ஒரு மிக அழகான பாடலில் தொகுக்கிறார் கம்பர்:

அன்னவளை அல்லள் என, ஆம் என அயிர்ப்பான்,
கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன்
உன்னு உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து ஆண்டு
இன் அமிழ்து எழக் களிகொள் இந்திரனை ஒத்தான்

சீதையை அங்கே பார்ப்பதற்கு முன்புவரை, ராமனின் மனத்தில் ஒரே தடுமாற்றம், ‘நான் அன்றைக்குப் பார்த்த பெண்ணும், இப்போது என் மனைவியாகப்போகிற இந்தப் பெண்ணும் ஒருவர்தானா? இல்லையா?’ என்று தவிக்கிறான்.

இப்போது, அவளை நேரில் பார்த்தாகிவிட்டது. ‘அவள்தான் இவள்’ என்று ஆனந்தம் அடைகிறான். இங்கே ராமனை இந்திரனுக்கு ஒப்பிடுகிறார் கம்பர்.

இந்திரனுக்கும் ராமனுக்கும் என்ன சம்பந்தம்?

பாற்கடலில் அமுதத்தைத் தேடிப் பல காலம் கடைந்தார்கள். அதிலிருந்து அமுதம் எழுந்து வந்தது. அதைக் கண்ட இந்திரன் மகிழ்ந்தான்.

அதுபோல, இன்றைக்குச் சீதை சபையில் எழுந்து நிற்கிறாள். அவளைக் கண்ட ராமனுக்குக் குழப்பம் தீர்ந்தது ஒருபக்கம், இன்னொருபக்கம், அவளைப் பார்த்து உறுதி செய்துகொண்டுவிட்ட காரணத்தால், போன உயிர் திரும்பக் கிடைக்கிறது, அதனால்தான் சீதையைக் ‘கன்னி அமிழ்தம்’ என்கிறார் கம்பர்.

ராமனின் சந்தேகம் தீர்ந்தது, சந்தோஷம். சீதையின் நிலைமை என்ன?

சாதாரணமாகப் பெண்கள் ஆண்களை நிமிர்ந்து பார்ப்பது அந்தக் காலத்தில் வழக்கம் இல்லையே. ஏதாவது தந்திரம்தான் செய்யவேண்டும்.

எய்ய வில் வளைத்ததும், இறுத்ததும் உரைத்தும்
மெய் விளைவு இடத்து முதல் ஐயம் விடல் உற்றாள்,
ஐயனை அகத்து வடிவே அல, புறத்தும்
கை வளை திருத்துபு கடைக்கணின் உணர்ந்தாள்

’ஒருவன் வில்லை வளைத்தான், உடைத்தான்’ என்கிற செய்தி கேட்டதுமே சீதையின் சந்தேகம் பெருமளவு தீர்ந்துவிட்டது. என்றாலும், தன் மனத்தில் உள்ள அவன்தான் இங்கே நிஜத்திலும் இருக்கிறான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள அவள் விரும்பினாள். கையில் இருக்கும் வளையல்களைச் சரி செய்வதுபோல், ஓரக்கண்ணால் ராமனைப் பார்த்தாள், ’அவனே இவன்’ என்று மகிழ்ந்தாள்.

அப்புறமென்ன? காதல் நோயால் வாடிக் கிடந்த சீதையின் உடல் மீண்டும் பழையபடி ஆகிறது. ‘ஆரமிழ்து அனைத்தும் ஒருங்குடன் அருந்தினரை ஒத்து உடல் தடித்தாள்’ என்கிறார் கம்பர். ‘அரிய அமுதம் முழுவதையும் தனி ஆளாகக் குடித்துவிட்டவளைப்போலப் பூரித்துப்போனாள்.

இப்படியாக, அன்றைக்குக் கன்னிமாடத்தில் தொடங்கிய பார்வை நாடகம், இங்கே ஓர் ஓரப்பார்வையில் வந்து இனிதே முடிகிறது!

***

என். சொக்கன் …
15 07 2012

32 Responses to "அண்ணலும் அவளும்"

கம்பன் பாக்களை இடையிடையே நீங்கள் கீச்சிடும் போதே கம்பனை ஊன்றிப் படிக்கிறீர்கள் என நினைத்தேன். அதன் காரணம் புரிந்து விட்டது. உங்களைப் போன்றவர்கள் கம்பனை ஊன்றிப் படிக்க வேண்டும். அப்போதுதான் ஊடகங்கள் வழியாக நல்ல தமிழ்ப்பாக்கள் மக்களைப் போய்ச் சேரும்.

காட்சிப் படலம் வால்மீகி ராமயணத்தில் கிடையவே கிடையாது. முழுக்க முழுக்க கம்பன் கற்பனை. அண்ணலும் அவளும் திருமணத்துக்கு முன்னே நோக்குவது தமிழ்க் காப்பியத்துக்குத் தேவைப்படுகிறது. தலைவனும் தலைவியும் உடன் போவது தென்னாட்டு வழக்கமல்லவா. ஆதலால் கண்களோடு கண்கள் உடன் போகும் அண்ணலும் அவளும் நோக்கும் நாடகத்தைக் கம்பன் புதிதாக வைத்தான்.

பொதுவாகவே கம்பனின் இராமகாதையில் நாடகத்தனம் தூக்கலாகவே உண்டு. உப்பும் உறைப்பும் தூக்கலாக இருந்தால் சுவையும் தூக்கலாகத்தானே இருக்கும். அப்படித்தான் கம்பன் காட்டும் நாடகங்களும்.

ரசித்து எழுதியதை ரசித்தேன் ஐயா…
தொடர வாழ்த்துக்கள்… நன்றி…

என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

அருமை! (கம்பன் வரிகளை இன்னும் தாராளமாக ஆங்காங்கே ஊடாட விடலாம் என்பது தாழ்மையான விண்ணப்பம்)

டிகேசி ஒரு கடிதத்தில் குறிப்பிட்டது இது (வார்த்தைகள் மாறியிருக்கும், கருத்து இதுதான்):

‘ஆடு ஓட்டமாக ஓடும், ஆற்றைப் பார்த்தால் நின்றுவிடும். அதுபோல, நம் மக்கள் கட்டுரை படிப்பார்கள், பாட்டு வந்தால் நின்றுவிடுவார்கள், கதையைச் சொல்லுமையா என்பார்கள்.’

இன்றைக்கும் இதுதான் நிலைமை. கலந்து கொடுத்தால்மட்டுமே வாசிக்கிறார்கள். ஆகவே அப்படிச் செய்யவேண்டியிருக்கிறது, மற்றபடி, கம்பன் சொல்லுக்குமுன் என் எழுத்து எம்மாத்திரம்!

விறு விறு விறு -ன்னு ஒரு வரி விடாமல், Window மாத்தாமல், வேறு வேலை ஊடே பார்க்காமல்….

வா சித்து முடித்தேன்
சுவா சித்து முடித்தேன்

இப்படியொரு ஆர்வத்தைக் கம்பனின் பொருளே தர முடியும்! மிக்க நன்றி!
————————

ஒரு கேள்வி:
1. அச்சு இதழில் எத்தனை பக்கங்கள் வரும் இது?
2. ஓவியங்கள் வருமா?
3. பாட்டை, ஊடால குடுக்கும் போது, பதிவில் உள்ளது போலவே குடுக்க முடியுமா? – Highlighted background & பத்தி பிரித்து, so that readers attempt to read..

அலுவலகம் முடித்து வீட்டுக்கு வருவதற்குள் 4-5 times வாசித்து விட்டேன்:)
நீங்கள் சொன்ன குறிப்புகளில் இருந்து, கொஞ்சம் கோர்வையாக, இதோ… சரியா?-ன்னு பாருங்களேன்!
———————

சீதையும் இராகவனும், ஒருவரை ஒருவர் கண்டு கொள்ளும் காட்சி = எத்தனை வினாடிகள்?
60 வினாடி இருக்குமா?:)

* கன்னி மாடத்தில் இருந்து அவள் பார்வை
* சாலையில் இருந்து இவன் பார்வை
அவ்ளோ தான்..
அப்பறம் முனிவனின் வேகத்துக்கு ஈடு குடுத்துச் சென்று விட்டான்…

இந்த 60 விநாடிப் பார்வை, அதுக்கு அப்பறம் படுத்திய பாடு இருக்கே!
எத்தனை நாள்? 6 நாள்??
= 144 மணி நேரம்
= 5,18,400 விநாடிகள்:)
ஐஞ்சு லட்சம் விநாடி-ன்னா சும்மாவா?:))
————————

மனசு கண்டதையும் யோசிக்குது!
அதே நிலவை, இரண்டு பேரும் ஒருத்தர் மேல் ஒருத்தர் ஏவி விடுறாங்க; பாவம் நிலா:)

கம்பன், இதை வேணும்-ன்னே இழுக்குறான் :))
* மிதிலைக் காட்சிப் படலம்!
* அதுக்கு அப்பறம் 10 படலங்கள்…
* அப்பறம் தான் கடிமணப் படலம்; திருமணத்தின் போது மீண்டும் பாத்துக்கறாங்க!

கம்பன், ஏன் இத்தனை இழு, இழுக்கணும்?

ஏன்-ன்னா, தமிழ் இலக்கிய மரபுப் படி, காதல் மணம்…
அதுக்கு முதலில்
1) ஆற்றி, இருத்தலும், இருத்தல் நிமித்தமும்
அப்பறம் தான்..
2) புணர்தலும், புணர்தல் நிமித்தமும்

அந்த மரபில், அவர்கள், தங்கள்-தங்கள் மனங்களில் ஆற்றி இருப்பதைக் காட்டவே, இத்தனை இழு:))
————————

மேலும், இது “கண்டவுடன் காதலா”?

ரோட்டோரத்தில் பாத்துட்டு, மன-அழகையே பார்க்காமல், அவ ஒடம்பு அழகில் இவன் சிக்கி, அவ சிக்கி…
நேத்து ஒருத்தரை ஒருத்தரு பாத்தோம்… பாத்து ஒருத்தரை ஒருத்தரு மறந்தோம்-ன்னு பாடலாமா?:))

இது, “கண்டவுடன் காதல்” அல்ல என்பதை, அவர்கள் வாயாலேயே, இடைப்பட்ட படலங்கள் முழுக்கப் பேசுகிறான், கம்பன்!
சீதையின் மொழிகள்: “அவரு என்னவர் தான்; ஆனா், சேர்ந்தே இருந்தவர்கள், தள்ளி இருப்பது தான் துன்பமா இருக்கு” -ன்னு சொல்லுறா!

அந்தச் “சேர்ந்தே இருந்தவர்கள்” – திருமகளும், திருமகனும்!
பூர்வ ஜென்ம வாசம், வந்து தாக்குது!

அதான், தோழிகள் மூலமா, முனிவனோடு வந்தவன் யாரு? என்ன?-ன்னு கூட அவ விசாரிக்கலை!
இராகவனைப் பற்றி, முனிவன் அவையில் சொன்ன சேதிகள் கூடச் சீதையின் காதுக்கு வரவில்லை!
அதற்கும் முன்பே = “சேர்ந்தே இருந்தவர்கள்” ன்னு தேர்ந்து விட்டாள்:))

Thanks Ravi,

1. அச்சு இதழில் எத்தனை பக்கங்கள் வரும் இது?

Depends on size of the magazine, in Kalki size it will be 10 pages, Kumudam size 20 pages, Vikatan size 7 pages (Roughly)

2. ஓவியங்கள் வருமா?

Yes, 1 or 2,

3. பாட்டை, ஊடால குடுக்கும் போது, பதிவில் உள்ளது போலவே குடுக்க முடியுமா? – Highlighted background

Difficult, layout is not in our hands 🙂

Thanks GiRa

முக்கியமா ஒன்னைச் சொல்லணும்!
அவன் முதலில் பார்த்தானா?
இல்லை…
அவள் முதலில் பார்த்தாளா?:)))

தமிழில் உம்மை/ உம்மைத் தொகையின் அழகைப் பாருங்கள்!

அண்ணலு”ம்” நோக்கினான், அவளு”ம்” நோக்கினாள்
——————————–

இந்தக் கம்பனின் வரியை மேலோட்டமாப் படிச்சா….
* அண்ணல் நோக்கினான்
* அப்பறம் அவள் நோக்கினாள் -ன்னு தோனும்!

ஆனா கம்பன் “உம்” போடுகிறான்!
அண்ணலு”ம்” நோக்கினான், அவளு”ம்” நோக்கினாள்!

ரகு: “டேய், நீ அவ கிட்ட பேசுறதை Boss பாத்துட்டாரா?”
ரவி: “ஆமாம் டா!”
ரகு: “அவரு பாத்தாரு -ன்னு ஒனக்கு எப்படிடா தெரியும்?”
ரவி: “அவரு பார்த்ததை நானு”ம்” பார்த்துட்டேன்-டா”

நானு”ம்” பாத்துட்டேன் -ன்னா என்ன அர்த்தம்?:)
வேற ஒருத்தர் பாத்தாரு…
அதை நானு”ம்” பாத்துட்டேன் -ன்னு அர்த்தம்!:))

இப்போ சொல்லுங்க!
* அண்ணலு”ம்” நோக்கினாள் = அவ மொதல்ல பாத்தா; அதை அண்ணலு”ம்” பாத்துட்டான்:)
* அவளு”ம்” நோக்கினாள் = இப்போ அண்ணலு”ம்” தன்னைப் பார்ப்பதை, அவளு”ம்” பார்த்துட்டா:))

ஆக, மொதல்ல லுக்கு வுட்டது = சீதையே!:)
“உம்”மையின் தமிழ் அழகு இதுவே!

எந்தப் பிறவியிலும் அவனைப் பிரியாதவள் அவள்!

அகலகில்லேன் என்று இறையும்,
அலர்மேல் மங்கை உறை மார்பா
-ன்னு சொல்லுவாய்ங்க!

பிரம்மச்சாரி (வாமனனாய்) வந்த போது கூட பிரிய முடியலையாம்; மார்போடு அவள்!
உறை மார்பா = உறைந்த மார்பா, உறைகின்ற மார்பா, உறையும் மார்பா!

தன் குட்டு வெளிப்பட்டுருமே -ன்னு, மார்பை மான் தோலால் போர்த்திக்கிட்டு, மூவடி மண்ணு தானம் வாங்கப் போனானாம் அந்தப் பிரம்மச்சாரி:)
————————-

அது ஒவ்வொரு அவதாரம் / பிறவியிலும் தொடர்கிறது!
= முன் சென்ம வாசனை!

அதான், கம்பன், குறிப்பால, வரிசையா “உணர்த்திக்கிட்டே” வரான்!
* ஊருக்குள் நுழையும் போதே கொடிகள் = மையறு மலரின் நீங்கி…”செய்யவள்”
* அவளே முதலில் நோக்கினாள்! தாயார் பார்வை பட்டாத் தானே, அப்பறம் பெருமாள் பார்வை படுவதற்கு?:))

* அண்ணலு”ம்” நோக்கினான், அவளு”ம்” நோக்கினாள்
அதுக்கப்பறம் தான் முக்கியமான “நோக்கல்” இருக்கு!

நோக்கிய நோக்கு எனும் – நுதி கொள் வேல் இணை,
ஆக்கிய மதுகையான் – தோளின் ஆழ்ந்தன,
வீக்கிய கனை கழல் – வீரன் செங்கணும்,
தாக்கு அணங்கு அனையவள் – தனத்தில் தைத்தவே.

அவ பார்வை = அவன் தோளில் தைக்க..
அவன் பார்வை = அவள் மார்பில் தைத்தது:))

அடப் பாவி ராகவா:))
————————

யாரையுமே அப்படி முன்பின் பார்க்காதவன்…
அவன் பார்வை ஒரு பெண்ணின் மார்பில் தைத்தது என்றால்..
அவனுக்கு முன்பே உரியவள் அவள்!
அலர் மேல் மங்கை உறை மார்பா – மார்பிலேயே தைத்தது

-ன்னு விளக்குவார்… கம்ப மணி, ரசிக மணி டி.கே.சி!

பின்பு, அவரவர் அறைகளுக்குச் சென்று விட்ட பின்னரும் கூட, ஒருவரை ஒருவர் நினைப்பில் வாடும் போதும், இந்தப் பூர்வ ஜென்மக் குறிப்புகளை வரீசையாக் குடுப்பாரு கம்பர்!

* முன்பு பாம்புக் கட்டிலில் படுத்த கலவி நீங்க, இப்போ இந்தக் கட்டிலில் படுத்துள்ளாளோ?
* முன்பு கால் வருடிய கைகள், இன்றும் தென்றலாய் வந்து என்னை வருடுதோ
….
இப்பிடி நிறைய்யய கம்பன் பெய்யப் பெய்ய, அவர்கள் உறவு அவுங்களுக்கே புரிஞ்சிடும்
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு…

இம்மை மாறி, மறுமை ஆயினும்
நீ ஆகியர் எம் கணவனை
நான் ஆகியர் உன் நெஞ்சு நேர்பவளே (குறுந்தொகை)

சீதை, இராகவனை விட வயசில் பெரியவ:)
பூமியில், அவன் பிறக்கும் முன்னரே, அவள் “தோன்றி” விடுகிறாள், சனகன் மகளாய்!

அதனால், பெரியவ, அவ முதலில் பார்த்தாள்; அவ பார்த்ததை அண்ணலு”ம்” நோக்கினான்
-ன்னு சொல்வாரும் உளர்!!:))

//மாலை’ என்ற தோழி உற்சாகத்துடன் சீதை இருக்கும் இடத்தை நோக்கி ஓடுகிறாள்.//

அவ பேரு “நீலமாலை” ன்னு நினைக்கிறேன் சொக்கரே; சரி பார்க்கணும்; Bad Memory:)
—————–

//இப்படியாக, அன்றைக்குக் கன்னிமாடத்தில் தொடங்கிய பார்வை நாடகம், இங்கே ஓர் ஓரப்பார்வையில் வந்து இனிதே முடிகிறது!//

ha ha ha
* அன்று, பொதுவில் என்ன தைரியமா, அவ தானே முதலில் “லுக்கு” விட்டாள்?
* இன்று, கை வளையல் adjust பண்ணிக்குறா மாதிரி பார்வையா?

இந்தப் பொண்ணுங்களே இப்படித் தான்:))))

எங்கோ கேள்விப்பட்டது…பகிர்ந்து கொள்ள ஆசை…

“அண்ணலும் நோக்கினான்..அவளும் நோக்கினாள்..”

மேலோட்டமாக பார்க்கையில்…சீதை தெருவில் போகிறவர்களை சைட் அடித்து கொண்டிருக்கையில் ராமனை பார்த்ததாகவும்…அதே போல்…ராமனும் சைட் அடித்து கொண்டே செல்கையில் சீதையை பார்த்ததாகவும் தோன்றும்…

உண்மையில்…
சீதை… பெண்ணாகையால் தலை குனிந்து மாடத்தின் மேல் நின்று கொண்டிருந்தாள்…
ராமன்…ஆணுக்கே உள்ள தோரணையில்…நிமிர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தான்….
ஆகையால்தான் இருவர் கண்களும் ஒருவரை ஒருவர் நோக்கியதாம்!!!

//ஆடு ஓட்டமாக ஓடும், ஆற்றைப் பார்த்தால் நின்றுவிடும்.
அதுபோல, நம் மக்கள் கட்டுரை படிப்பார்கள், பாட்டு வந்தால் நின்றுவிடுவார்கள்//

செம; செம; மிகவும் ரசித்தேன்:))
டிகேசி -க்கு இத்தனை நகைச்சுவை ரசனையா!
———————

எப்படித் தான் கம்பனின் நேரடிப் பாட்டை, Skip பண்ண முடியுதோ, மக்களால?

ஆடே, ஆடே, இது ஆறு அல்ல, ஓடை! தாமரைத் தண்டு எல்லாம் மிதக்கும், இன்பமாத் திங்கலாம் -ன்னு ஆசை காட்டணுமோ ஆட்டுக்கு?:)
ஏதோ என்னால முடிஞ்ச ஆசையைக் காட்டுறேன்….
———————

இராகவனைக் கண்ட/கொண்ட பின் சீதைக்கு உயிர் இருக்கா? -ன்னு கேக்குறாங்க அவ தோழிகள்:)
என் உயிரை நீங்க கூடப் பார்க்கலாமே -ன்னு சொல்லி இந்தப் பாட்டைச் சொல்லுறா…

நாண் உலாவு மேருவோடு
நாண் உலாவு பாணியும்,

தூண் உலாவு தோளும், வாளி
ஊடு உலாவு தூணியும்,

வாள் நிலாவின் நூல் உலாவும்
மாலை மார்பும், மீளவும்

காணல் ஆகும் ஆகின், ஆவி
காணல் ஆகுமே கொலாம்

What a rhyme! What a speed!
——————

இளைக்கல் ஆத கொங்கைகாள்,
எழுந்து விம்மி என் செய்தீர்?

முளைக்கலா மதிக் கொழுந்து
போலும் வாள் முகத்தினான்,

வளைக்கலாத வில் கையாளி,
வள்ளல், மார்பின் உள் உறத்

திளைக்கல் ஆகும் ஆகில், ஆன
செய் தவங்கள் செய்மினே
——————

பஞ்சு அரங்கு தீயின், ஆவி
பற்ற நீடு கொற்ற வில்

வெம் சரங்கள், நெஞ்சு அரங்க
வெய்ய காமன் எய்யவே,

சஞ்சலம் கலந்த போது,
தையலாரை உய்ய வந்து,

‘அஞ்சல்! அஞ்சல்! ‘என்கிலாத
ஆண்மை, என்ன ஆண்மையே?

wow, ஆண்மை என்ன ஆண்மையே! how daring she is in words!:)

“அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி,செரும் நாள் பார்க்கச் சொல்லடி” ஏனோ நினைவவிற்கு வருகிறது 🙂 புரிய வேண்டியவர்களுக்குப் புரியும் 🙂

நீலின் விளக்கம் அருமையாக உள்ளது.

தெய்வீகக் காதல் என்று குறிப்பிடுவது இராம சீதை காதலில் தான் முதன் முதலில் தோன்றியதோ?

கம்பனின் பாடல்களுக்கு அதி அற்புதமான விளக்க உரை. படிக்கப் படிக்க தெவிட்டாத தேன் இன்பம் உங்கள் எழுத்து. இப்படி எழுதுவதால் தான் கம்பனை என் போன்றோர் அனுபவிக்க முடியும், நன்றி.

amas32

நீல்,

நோக்குதல் என்பது வேறு, பார்த்தல் என்பது வேறு – வெறும் பார்வை என்றால் நீங்கள் சொன்னது போல சைட் அடித்தார்கள் என்று சொல்லலாம்.

இது பாற்கடல் பிரிந்தவர்கள் நோக்கும் நோக்கு.

Dear சொக்கன், I have a comment which is not relevant to this post, but still don’t know how to bring it to your attention. The calendar in this page is not reflecting the correct tamil date, the ஆவணி month starts from Aug 17th, but it is already showing as ஆவணி, just for your attention. Good article!!!

Yes boss, it’s a known problem with WordPress, I can’t correct it 😦

arumai. kambanin kavithai suvaiyai ungalain eluthu moolam suvaithen.mikka nandri. enathu page il pakirnthu kondullen.yaan petrra inbam peruka ivvaiyakam.sorry today my nhm software is not working.

இத்தனை அருமையாய் கம்பனை முன் எப்போதும் ரசித்ததில்லை. அற்புதம்.

Kamban endraale Kani amudhu.
Adhai thangal vilakki sonnadhu arumai.
Eravana vadham mudiya ethanai munner padugal.
Ellam Easun seyal

இந்தச் சொற்றொடரில் “கள்” இருப்பதாலோ என்னவோ கண்ணதாசனுக்கும் இதன் மேல் ஒரு மோகம்! 🙂 “கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்” என்ற சொல்லாட்சியை அப்படியே எடுத்தாளுகிறார் சினிமாப் பாட்டில்! கொடி மலர் என்னும் படம்! எம்.எஸ்.வி இசை… தேடி வந்த மாளிகையில் ஆதரவில்லை – அவள் தேர் செல்லும் பாதையிலே தெய்வமும் இல்லை பாவை அவள் வழக்கில் ஒரு சாட்சியும் இல்லை – தன் பாவமில்லை என்று சொல்ல ஒரு வார்த்தையும் இல்லை கானகத்தைத் தேடி இன்று போகின்றாள், கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஜானகி மானிடத்தைத் தேடி இன்று போகிறாள் தன் மணவாளன் கட்டளையால் ஜானகி! என் கண்ணாளா முருகா! இவள் வழக்கில் ஒரு சாட்சியும் இல்லை! “என் பாவமில்லை” என்று சொல்லக் கூட இவளுக்கு ஒரு வார்த்தையும் இல்லை! கானகம் தேடிப் போகின்றாள்! முருகா, இவள் பயந்த தனி வழிக்கு நீயே துணை! கம்பன் கவியை, இதோ, தமிழ்ச் சுவையாக மனப்பாடம் செய்து கொள்ளுங்கள் 🙂 கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை, மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி, உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி?

[…] அப்புறம் என்ன நடந்தது? இங்கே படிக்கலாம்: https://nchokkan.wordpress.com/2012/08/06/kv01/ […]

அற்புதம்ங்க… அதுவும் சீதையை பாக்கும்போது வர்ற உவமை ..அருமை

கண்ணோடு கண் கவ்வி , உண்டு , நிலை மறந்து , உணர்வு தடுமாறி பின்பு தான் அண்ணல் நோக்குகின்றான். கண் கவ்வியதில் இருந்து உணர்வு தடுமாற்றம் வரை நடந்தவைகளில் நோக்குதல் இல்லையா ? அல்லது நோக்குதல் நிகழ்ந்த முறையை விளக்குகின்றனவோ இந்த கண் கவ்வி …. வரிகள் ?

சமீபத்தில் நாஞ்சில் நாடனின் “கம்பனின் அம்பறாத் தூணி ” படித்து திடீர் ஆர்வம் வந்து கம்பனைத் தேடி உங்களைப் பிடித்தேன். கவிதை ஆர்வம் பற்றிக் கொள்ளத் துவங்கி விட்டது. பற்ற வைத்து விட்டீர் .

அன்புடன்
வெங்கட்

“கன்னிமாடத்தில் பார்த்த பெண்ணும் இந்த இளவரசியும் ‘ஒருவர்’தானா” என்றெழுதியிருக்கிறீர்கள் !
‘ஒருத்தி’ தானே பெண்பால் ஒருமைக்கு வரும் ?
ஒருவேளை உங்களைப் போன்ற பெரும் புலவர்கட்கு இதுபோன்ற இலக்கணப் பிறழ்வுக்கு அனுமதி உண்டா ?
‘நன்னூலி’ல் மேற்கோள் காட்டி அன்புகூர்ந்து விளக்குக

ஒருவர் என்பது மரியாதைப் பன்மை, ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்.

’அர்’ விகுதியே இருபாலருக்கும் பொருந்தும். கவிஞர் போதும், கவிதாயினி என்று சொல்லவேண்டாம், மாணவர் போதும், மாணவி என்று (பிரித்துச் சொல்லவேண்டிய அவசியம் நேர்ந்தாலன்றி) எழுதவேண்டியதில்லை

பார்வை:- எமது 25-03-2015 / 1.47 a.m. (தம) உங்களது பதில் 07:53 pm.
-0-
மிக்க நன்றி !
இதுபோன்ற சந்தேகம் வரும்போது கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது!
நடையும் எழுத்தாற்றலும் படிக்க ஆரம்பித்ததிலிருந்து முடிக்கும்வரைக் கட்டிப்போட்டது!
வாழ்க; வளர்க!

[…] அப்புறம் என்ன நடந்தது? இங்கே படிக்கலாம்: https://nchokkan.wordpress.com/2012/08/06/kv01/ […]

[…] சொக்கன் அவர்களின் வலைப்பக்கத்தில் (https://nchokkan.wordpress.com/2012/08/06/kv01/)  கண்டெத்த முத்தான  கவிநயம். படித்து […]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 529 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 606,753 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

August 2012
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
%d bloggers like this: