சில வாரங்களுக்குமுன்னால், லாண்ட்மார்க் புத்தகக் கடை க்யூவில் காத்திருந்தேன். எனக்குப் பக்கத்து க்யூவில் ஒருவர், கை நிறைய சாக்லெட்களுடன் நின்றிருந்தார்.
அநேகமாக அன்று அவருடைய குழந்தைக்குப் பிறந்த நாளாகவோ, வீட்டில் வேறு விசேஷமாகவோ இருக்கவேண்டும், அதற்கு வருகிற பிள்ளைகளுக்குத் தருவதற்காக அந்த விசேஷ சாக்லெட்களைப் பெரும் எண்ணிக்கையில் வாங்கியிருந்தார்.
அந்த சாக்லெட்கள் எனக்கும் நன்கு பழக்கமானவைதான். டிவியில் அடிக்கடி விளம்பரங்களாக வரும். நீங்களும் பார்த்திருப்பீர்கள். முப்பது ரூபாய் விலை. முட்டை சைஸ். உடைத்தால் இந்தப் பாதியில் கொஞ்சூண்டு சாக்லெட், அதைச் சாப்பிட அமீபா அளவிலும் வடிவத்திலும் ஒரு ஸ்பூன், மற்ற பாதியில் சுண்டைக்காய் சைஸுக்கு ஒரு சின்ன பொம்மை, அதை Assemble செய்வது எப்படி என்கிற குறிப்புப் புத்தகம், அதில் உள்ள பொடி எழுத்துகளை லென்ஸ் கொண்டு படித்துப் புரிந்துகொண்டு அந்த பொம்மையைச் ‘செய்து’ விளையாட ஆரம்பிப்பதற்குள் அது விரல் இடுக்கில் நழுவிக் காணாமல் போய்விடும்.
மற்றதெல்லாம் இருக்கட்டும், தக்கனூண்டு சாக்லெட்டை இப்படி Package செய்து முப்பது ரூபாய்க்கு விற்கிற புண்ணியவான் இருக்கிறானே, அவன் வீட்டில் மாதம் தவறாமல் மும்மாரி பொழியட்டும் என்று நான் எப்போதும் வேண்டிக்கொள்வேன்.
முப்பது ரூபாய் என்பதற்காக யாராவது யோசிக்கிறார்களா? அதுவும் பெங்களூரில்? இதோ, கை நிறைய சாக்லெட் முட்டைகளை அள்ளிவைத்திருக்கும் இவரே சாட்சி.
ரொம்ப நேரமாக க்யூவில் நின்று எனக்குப் போரடித்தது. அவர் கையில் உள்ள சாக்லெட்களை எண்ண ஆரம்பித்தேன்.
ஒவ்வொரு டப்பாவிலும் 3 முட்டைகள். மொத்தம் 20 டப்பாக்கள். அப்படியானால் 60 முட்டைகள். 60 * 30 = 1800 ரூபாய்கள்.
யம்மாடி. என் மனைவியிடம் இதைச் சொன்னால், ‘இந்தக் காசுக்கு எங்க ஊர்ல ஒரு மாசம் சமையலே செஞ்சுடுவோம்’ என்பார்.
அதற்குள் முட்டைக்காரர் அவருடைய கவுன்டரை நெருங்கியிருந்தார். இருபது டப்பாக்களையும் பொத்தென்று வைத்துவிட்டுப் பர்ஸைத் திறந்து க்ரெடிட் கார்டை எடுத்தார்.
கவுன்டரில் இருந்தவர் ரொம்ப நல்லவர்போலிருக்கிறது, ‘எக்ஸ்க்யூஸ் மீ சார், நான் ஒரு சின்ன ஆலோசனை சொல்லலாமா?’ என்றார்.
‘வாட்?’
‘இதே சாக்லெட் 4 உள்ள பேக்ஸ் கிடைக்குது சார், அதுல இப்போ 20% டிஸ்கவுன்ட் இருக்கு’ என்றார் கவுன்டர்மணி, ‘நீங்க இதுல 20 டப்பா வாங்கறதுக்குப் பதிலா அதுல 15 டப்பா வாங்கினாப் போதும், யு வில் சேவ் அரவுண்ட் 350 ருப்பீஸ்.’
முட்டைக்காரர் முகத்தில் எரிச்சல், ‘ஃபர்கெட் இட்’ என்றார் சத்தமாக, ‘யு மைண்ட் யுவர் பிஸினஸ், ப்ளீஸ்!’
அப்புறமென்ன? எல்லா முட்டைகளுக்கும் பில் போடப்பட்டது. 1800 ரூபாய்க்கு க்ரெடிட் கார்டைத் தேய்த்துக் கையெழுத்துப் போட்டுவிட்டு அவர் போய்க்கொண்டே இருந்தார்.
எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. ’பில் கேட்ஸ் கீழே விழுந்த ரூபாயைப் பொறுக்கமாட்டார், ஏனெனில் அதைப் பொறுக்கும் நேரத்தில் அவர் அதைவிட அதிகத் தொகையைச் சம்பாதித்துவிடுவார்’ என்று ஒரு பொன்மொழி(?) சொல்வார்கள், இவர் அதுமாதிரி நபராக இருப்பாரோ?
இவரைப் போன்ற நபர்களை நான் நிறைய சூப்பர் மார்க்கெட்களில் பார்த்திருக்கிறேன். பொருள்களை அள்ளிப் போடுவார்கள். எதையும் விலை பார்க்கமாட்டார்கள். ஒப்பிடமாட்டார்கள். பில் போட்டபின் பட்டத்தின் சற்றே நீண்ட வாலைப் போல் அச்சிட்டு வரும் ரசீதைச் சரிபார்க்கமாட்டார்கள். பணத்தைக் கட்டு, காருக்கு நட, அவ்ளோதான்!
இதெல்லாம் பார்த்தால்தான் ஆச்சு என்று நான் சொல்லவில்லை. அதன்மூலம் சில நூறு ரூபாய்கள் பணம் மிச்சமாவது அவர்களுக்கு அவசியப்படாமல் இருக்கலாம். அதைக் கவனிக்கும் நேரத்தில் வேறு உருப்படியான வேலைகளைச் செய்யவேண்டியிருக்கலாம்.
அது நிற்க. இந்த க்யூ சமாசாரம் நடந்து பல நாள்கள் கழித்து, இன்றைக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்.
எங்கள் அலுவலகத்தில் உள்ள ஒரு சிறிய குழுவினர் ப்ராஜெக்ட் ஒன்றைப் பிரமாதமாகச் செய்து முடித்தோம். அதைக் கொண்டாடுவதற்காக எல்லாரும் ஒன்றாக மதிய உணவுண்டோம்.
அது ஓர் ஆந்திர உணவகம். வாசல் கதவு திறந்துவிடுகிறவரில் ஆரம்பித்து, காத்திருக்கும் அறையின் செய்தித் தாள்கள்வரை எங்கு நோக்கினும் சுந்தரத் தெலுங்கின் பாட்டிசைப்பு.
போதாக்குறைக்கு, என்னுடன் வந்தவர்கள் அறுவர், எல்லாரும் தெலுங்கர்கள். அவர்கள் தங்களுக்குள் செப்போ செப்பென்று செப்பித் தள்ள எனக்குக் காது புளித்துவிட்டது.
தெலுங்கு தெரியாத ஒருத்தன் பக்கத்தில் இருக்கிறானே என்கிற அடிப்படை நாகரிகமும் அவர்களுக்கு இல்லை, ஆந்திராவில் (ஹைதராபாதில்) மூன்று வருடம் வசித்தபோதும், உள்ளூர் மொழியான தெலுங்கைப் பேசக் கற்றுக்கொள்கிற சமர்த்தும் எனக்கு இல்லை. தானிக்குத் தீனி, சரியாப் போச்சு.
தீனி. அதுதான் மேட்டர். என்னோடு வந்திருந்த அறுவரும் ஆளுக்கு ஒரு சிக்கன் பிரியாணி சொன்னார்கள். அதுவும் ஒரு சிறிய குண்டான் சைஸுக்கு வந்து சேர்ந்தது.
ஒரு குண்டான் இல்லை, ஆளுக்கு ஒரு குண்டான். அது நிறையச் சோறு, ஆங்காங்கே சிக்கன் துண்டுகள்.
‘இவர்கள் இதை மொத்தமும் எப்படிச் சாப்பிட்டு முடிப்பார்கள்?’ என்று நான் வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்க, அவர்கள் உற்சாகமாக ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பித்தார்கள்.
சும்மா சொல்லக்கூடாது, அந்த பிரியாணி நிஜமாகவே ரொம்ப ருசியாக இருந்திருக்கவேண்டும். மகிழ்ச்சியில் அவர்களுக்குத் தெலுங்கு பேசக்கூட மறந்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
அப்படி முழுத் தீவிரத்துடன் சாப்பிட்டும்கூட, ஆளுக்குக் கொஞ்சம் பாக்கி வைத்துவிட்டார்கள். சுமார் ஒரு குண்டான் பிரியாணி மிஞ்சிவிட்டது.
பொதுவாக இதுமாதிரி ஹை க்ளாஸ் உணவகங்களில் இப்படி மிஞ்சும் உணவை அப்படியே விட்டுவிட்டு வருவதுதான் ‘நாகரிகம்’. ஒரு குண்டான் சிக்கன் பிரியாணி 200 ரூபாயோ என்னவோ விலை, போகட்டுமே, அதனால் என்ன?
நல்லவேளையாக, இந்தக் குழுவின் தலைவர் அப்படி நினைக்கவில்லை. ‘இதை பார்ஸல் செஞ்சு கொடுங்க’ என்று வெயிட்டரைக் கேட்டுக்கொண்டார். வீட்டுக்குக் கொண்டுபோய் சூடு செய்து சாப்பிடுவாராக இருக்கும்.
பில் வந்தது. காசைக் கொடுத்தோம். கிளம்பினோம். அலுவலகத்துக்குத் திரும்பினோம். உள்ளே நுழையுமுன், அங்கே இருந்த காவலாளியிடம் பிரியாணிப் பொட்டலத்தைக் கொடுத்தார் தலைவர். ‘சிக்கன் பிரியாணி’ என்றார் சுருக்கமாக.
’நன்றி சார்’ என்று அவர் வாயெல்லாம் பல்லாக வாங்கிவைத்துக்கொண்டார். விறைப்பாக ஒரு சல்யூட்டும் அடித்தார்.
’அடடே, அடிமட்ட ஊழியருக்குச் சிக்கன் பிரியாணி வாங்கித் தருவதற்கு மனம் இல்லாவிட்டாலும், மிஞ்சியதையாவது வீணடிக்காமல் ஞாபகமாக அவருக்குக் கொண்டுவந்து கொடுக்கத் தோன்றுகிறதே, நல்ல மனிதர்தான்’ என்று நினைத்துக்கொண்டேன்.
ஒரு மணி நேரம் கழித்து, வேறொரு வேலைக்காக அலுவலகத்துக்கு வெளியே வந்தேன். அதே செக்யூரிட்டி, அதே சல்யூட். பதிலுக்குப் புன்னகை செய்து, ‘என்னங்க, பிரியாணி சாப்டாச்சா?’ என்றேன்.
‘இல்லை சார், வீட்லேர்ந்து சாப்பாடு கொண்டாந்திருந்தேனே, அதைதான் சாப்பிட்டேன்’ என்றார் அவர்.
’ஏன்? என்னாச்சு? பிரியாணி நல்லால்லயா?’
‘வீட்ல பிள்ளைங்களுக்காக எடுத்துவெச்சிருக்கேன் சார்’ என்றார் அவர்.
***
என். சொக்கன் …
22 08 2012
Like this:
Like Loading...
Related
1 | Banu Venkat
August 22, 2012 at 5:31 pm
Interesting write up .. u hav simply showed d three kinds of people before us .. 😉