பாயும் புலி
Posted August 31, 2012
on:- In: (Auto)Biography | Auto Journey | Bangalore | Characters | Feedback | Kids | Learning | Travel | Uncategorized
- 12 Comments
இன்று சின்ன மகளின் வேன் டிரைவருக்குக் காய்ச்சல். அவளை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்றேன்.
அந்த ஆட்டோவின் உள்பகுதி மொத்தமும் புலியின் உடல்போல அலங்கரிக்கப்பட்டிருந்ததுபோல, நான் அதைக் கவனிக்கவில்லை. தினந்தோறும் எத்தனையோ ஆட்டோக்களில் ஏறுகிறோம், இதையெல்லாமா பார்த்துக்கொண்டிருக்கமுடியும்?
ஆனால் சின்னப் பிள்ளைகள் இதையெல்லாம் தவறவிடாது. மகள் அதைக் கவனித்து, ‘இந்த வண்டி ஏன்ப்பா புலிமாதிரி இருக்கு?’ என்றாள்.
நான் அசுவாரஸ்யமாகச் சுற்றிப் பார்த்துவிட்டு, ‘சும்மா ஒரு டிசைன்தான்’ என்றேன். ‘நீ Doraமாதிரி ட்ரெஸ் போடறேல்ல? அதுபோல இந்த ஆட்டோ புலி ட்ரெஸ் போட்டிருக்கு.’
‘அதெப்படி? புலி ட்ரெஸ் வெளியிலதானே போடணும்? ஏன் உள்ளே போட்டிருக்கு?’ என்றாள் அவள்.
நான் பதில் சொல்வதற்குள் ஆட்டோ டிரைவர் திரும்பிப் பார்த்துச் சிரித்தார். அவருக்குத் தமிழ் தெரியும்போல, ‘பாப்பா, இந்த வண்டி புலிமாதிரி ஸ்பீடாப் போகும், அதனாலதான் புலி அலங்காரம் செஞ்சிருக்கேன்’ என்றார்.
‘ஓ’ என்று தாற்காலிகத் திருப்தி அடைந்தாள் அவள். சில விநாடிகள் கழித்து, ‘ஸ்பீடாப் போகும்ன்னு சொல்றீங்க, ஆனா இந்த வண்டி ரொம்ப ஸ்லோவாப் போகுதே.’ என்றாள்.
ஆட்டோ டிரைவர் முகத்தில் ஈயாடவில்லை. ஐந்து வயதுப் பிள்ளைக்கு பெங்களூரு ட்ராஃபிக்கின் மகத்துவத்தை விளக்கவா முடியும்?
ஆனால் அதற்காக, நிஜப் புலிகூட இந்த ஊர்ப் போக்குவரத்துக்கு நடுவே மெதுவாகதான் ஊர்ந்து செல்லும், வேறு வழியில்லை என்று சொன்னால் குழந்தை ஏமாந்துவிடாதோ?
அந்த சிக்னலில் பச்சை விளக்கு தோன்றிய மறுவிநாடி, எங்கள் ஆட்டோ சீறிப் பாய்ந்தது. சகல வாகனங்களையும் முறியடித்துக்கொண்டு, சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்து, அதேசமயம் மிகப் பத்திரமாகவும் பயணம் செய்தது. ஏழெட்டு நிமிடங்களில் கடக்கவேண்டிய தூரத்தை இரண்டே நிமிடத்தில் ஊதித் தள்ளிவிட்டது.
மகளுக்கு ரொம்ப சந்தோஷம். முகத்தில் பளீரென்று ஜில் காற்று அடிக்க முடியெல்லாம் பறக்கும் சுகத்தை ரசித்து அனுபவித்தாள், ‘நிஜமாவே புலிமாதிரி ஓடுதுப்பா இந்த ஆட்டோ’ என்றாள். அப்போது அந்த டிரைவர் முகத்தைப் பார்த்திருக்கவேண்டும்!
யோசித்தால், பல நேரங்களில் முதுகில் தட்டிக்கொடுப்பதைவிட, கேலி செய்து சீண்டிவிடுவதுதான் Performance Enhancementக்கு உத்தமமான வழி என்று தோன்றுகிறது.
***
என். சொக்கன் …
31 08 2012
12 Responses to "பாயும் புலி"

ஒத்துகொள்ள முடியாது. அங்கே ஆட்டோகாரரைப் பறக்க வைத்தது உங்கள் மகளின் கேலி அல்ல, அவளின் அப்பாவித்தனமும், வயதும்!! இதையே நீங்களோ நானோ செய்திருந்தால் “வந்து சேந்துச்சு பாரு சாவுக்ராக்கி, காலங்காத்தால” என்று சொல்லி இருப்பார்.
Nicely narrated though! 🙂


முதுகுக்குப்பின்னால் தட்டிக்கொடுப்பதை மட்டும் செய்ன்னு கேட்ட நினைவு… இருந்தாலும் உணர்வுகளால் வருடுறீங்க 🙂


கடைசி இரு வரிகள் உண்மைதான். வித்தியாசமான அனுபவத்தை ரசித்தேன்.


அழகான பகிர்வு:)!


வித்தியாசமான பதிவு சார்… நன்றி…


அய்யா!உங்களுடைய தளம் காணக்கிடைத்தது!மிக்க மகிழ்ச்சி, எம் போன்ற இளைய தளப்பதிவர்களுக்கு!தாங்கள் முன்னோடியாகக் காண்கிறேன்! உங்கள் தளத்தை எமக்கு காணக்கிடைக்க செய்த மரியாதைக்குரிய “தமிழ்தொகுப்புகள்” சிங்கமணி அய்யா அவர்களுக்கு நன்றி! இவன்:-தெ.கு.தீரன்சாமி,மாநில தலைவர்,கொங்குதமிழர்கட்சி,மற்றும் தீரன்சின்னமலை-புலனாய்வு,செய்தி ஊடகம்-http://theeranchinnamalai.blogspot.com


Nice 🙂

1 | அனுஷா
August 31, 2012 at 11:37 am
”பல நேரங்களில் முதுகில் தட்டிக்கொடுப்பதைவிட, கேலி செய்து சீண்டிவிடுவதுதான் Performance Enhancementக்கு உத்தமமான வழி என்று தோன்றுகிறது.” அது ஆட்களைப் பொறுத்தது என்று நினைக்கிறேன்.