ட்விட்டர் என்ன புதுசா?
Posted October 1, 2012
on:- In: Communication | Grammar | Learning | Literature | Poetry | Tamil | Travel | Trichy | Uncategorized
- 19 Comments
திருச்சி பயணத்தின்போது புதிதாக அறிமுகமான நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல் அவரிடம் ட்விட்டர் பற்றிச் சிலாகித்தேன், ‘எதையும் 140 எழுத்துகளுக்குள் எழுதிப் பழகறது ரொம்ப நல்ல பயிற்சி சார்’ என்றேன். ‘வெறுமனே எண்ணி, அதாவது சிந்திச்சு எழுதினாப் போதாது, எழுத்துகளை 1, 2ன்னு எண்ணி எண்ணி எழுதணும். பிரமாதமான சவால் அது!’
‘உண்மைதான்’ என்றார் அவர். ‘ஆனா இது ஒண்ணும் புது விஷயம் இல்லை. இந்தமாதிரி மேட்டர், சொல்லப்போனா இதைவிட சிக்கலான சவால்கள் தமிழ்ல ஏற்கெனவே இருக்கு.’
‘எதைச் சொல்றீங்க?’
‘நிறைய இருக்கு, உதாரணமா, கட்டளைக் கலித்துறைன்னு ஒரு பா வகை, 4 வரிப் பாட்டுல ஒவ்வொரு வரியையும் எண்ணி 16 அல்லது 17 எழுத்துல முடிக்கணும்.’
‘அதாவது, புள்ளி வெச்ச எழுத்துகளை நீக்கிட்டுச் சரியா 64 அல்லது 68 எழுத்துகள்ல சொல்ல வந்த விஷயத்தைக் கச்சிதமாச் சொல்லி முடிக்கணும், எதுகை, மோனை இருக்கணும், சந்தமும் சரியா வரணும், கவிதைக்குரிய அழகும் குறைபடக்கூடாது.’
‘இப்ப சொல்லுங்க, கட்டளைக் கலித்துறையைவிடவா உங்க ட்விட்டர் சவால் கஷ்டம்?’ என்று முடித்தார் அவர்.
அவர் சொன்னதற்காக, கடந்த 2 நாள்களாகக் கட்டளைக் கலித்துறை ஒன்றை எழுத முயற்சி செய்கிறேன், பெண்டு நிமிர்கிறது. இன்னும் ஒன்றரை வரி கடந்தபாடில்லை. தமிழ்ப் புலவர்களை எண்ணி எண்ணி (pun intended 😉 வியக்கிறேன்.
***
என். சொக்கன் …
01 10 2012
19 Responses to "ட்விட்டர் என்ன புதுசா?"

பாஞ்சாலி சபதம். I rest my case.


நாலு சீர்களிலேயே எழுதிப் பழகியதால் இது பிடிபட நேரமாகிறதே தவிர வேறொன்றுமில்லை.
ரொம்ப எல்லாம் எண்ண வேண்டாம். தளை தட்டாமல் நாலு ஈரசை + ஒரு விளங்காய்ச்சீர் போட்டா 16 /17 கணக்குத் தப்பாது.
சீக்கிரமே கட்டளைக் கலித்துறை ப்ராப்திரஸ்து!


வெண்பா விரைவினில் நன்றாய் எழுதிட நன்குருவாய்
என்போல் இளையரும் அன்றே விளங்கிட நூல்படைத்தார்
எண்ணித் துணிகிற செய்யுள் வகையிதை நான்படைக்க
அண்ணன் இலவச கொத்தன் அருளதை வேண்டுவனே


ஏன்யா எல்லாரும் சீரியஸா இருக்கீங்க.. ஜாலியான மேட்டர் சொல்ல முடியாதா இதுல?
பாக்கை மடக்கிப் பகட்டை உணர்ந்திடும் இந்தியாவே
யாக்கை நிலையிலை யார்க்கர் நிலையாய் இருப்பதனால்
சாக்கீர் போட்டால் சரியாய், கவனமாய் ஆளமைத்து
போக்கைத் திருப்பிப் புதுக்களம் கண்டிடு வென்றிடவே.


இன்னொண்ணு – பகார்டி ம்யூஸிக் சிடியாமே? விளம்பரிக்கிறார்கள்:
இசைக்காய் விளம்பரம் எத்தனை எத்தனை காட்டுகிறார்
பசையாய் அழகியர் சிற்றுடை உடுத்தியே ஒட்டுகிறார்
வசையாய் வருகுது வாயில் வெறுப்பொடு வெஞ்சினமாய்
அசையா மதியோ எமக்கு அறிவோம் சரக்கெனவே!


எண்ணி எழுதிட இங்குமே தேவை இருப்பதில்லை
தண்ணியும் பட்டது போல்தான் இதுவும் உனக்கினிமே
கண்ணி தொடர்ந்திடும் கண்ணியாய்ச் சொற்களைக் கொண்டுநீயும்
கண்ணா எழுதிக் குவிப்பாய் கலித்துறை கட்டளையே


சிந்திடும் வெண்மணி சிப்பியில் ஆகுமே முத்துகளாய்
அந்தியில் சந்திரன் அற்புதம் செய்யுமே நித்திலமாய்
சந்தினில் வந்து சடுதியில் சென்றிடும் உன்முகமோ
எந்தன் மனத்தினை எப்படி வாட்டுது கண்மணியே


அருள்செல்வன் ட்விட்டர்ல சுட்டிய இந்த விதிகளிலிருந்து தொடங்கினதால் அப்பிடியே எழுதிட்டேன். அப்புறம் தான் இங்கே வந்தேன். (நேரசையில் தொடங்கியப்போ 10 எழுத்துகள் என்ற விதியில்):
பண்ணி லிங்கே சொல்ல வந்தேன் கந்த னருளை வள்ளி மணாளனெந்தன்
எண்ணங் கொண்ட வேடன் செந்தூரில் சி றுவன்வந்து அவனருளையேநான்
வண்ணமாயப் பாமாலை கோத்திட என்னைப் பணித்து பக்தியாம்பூங்
கண்ணியொன்று இட்டான் அவன்தன் தாள் பணிந்து நாளும் நானே போற்றுவனே!


சங்கரு பெனாத்தலு சொக்கனு எலவசம்
கேயாரெஸு டகால்டி கெக்கெபிக்குனி ராகவஞ்சி
எட்டுபேரு நீங்கல்லாரும் என்னென்னவோ சொல்லிட்டீங்க,
என்னத்தய்யா நாஞ்சொல்லுவேன் எதுவுமெனக்குப் பிரியல

1 | amas32 (@amas32)
October 1, 2012 at 3:39 pm
உங்களுக்கே சிரமம் என்றால்……. 🙂
amas32