வீட்டுக்கு வீடு வாசப்படி வேணாம்
Posted by: என். சொக்கன் on: October 6, 2012
- In: Courtesy | Lazy | Learning | Life | Magazines | Media | People | Pulambal | Social Responsibility
- 7 Comments
’புதிய தலைமுறை’ சென்ற இதழில் வெளியான என்னுடைய கட்டுரையின் முழு வடிவம்
போன வாரம், நண்பர் ஒருவர் எங்கள் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவரை வாசலில் சென்று வரவேற்றேன், ‘உள்ளே வாங்க, காபி சாப்பிட்டுகிட்டே பேசலாம்!’ என்று அழைத்தேன்.
‘பரவாயில்லை, இங்கே கார்லயே பேசலாமே’ என்று மறுத்தார் அவர்.
‘சேச்சே, ஏஸி கான்ஃபரன்ஸ் ரூம்ல சௌகர்யமா உட்கார்ந்துகிட்டுப் பேசறதை விட்டுட்டு இங்கே ஏன் சிரமப்படணும்?’ என்றேன் நான்.
அவர் தயக்கமாகச் சிரித்துவிட்டுச் சொன்னார், ‘எனக்குக் கால்ல ஒரு சின்னப் பிரச்னை, மாடிப்படி ஏறமுடியாது.’
’நோ ப்ராப்ளம், லிஃப்ட் இருக்கே!’
’லிஃப்ட் சரிதான். ஆனா, அந்த லிஃப்டை நெருங்கறதுக்கு முன்னாடி நாம அஞ்சாறு படி ஏறணும் போலிருக்கே. அது எனக்குச் சிரமம்.’
அவர் அப்படிச் சொன்னபிறகுதான் நான் யோசித்தேன். உண்மையிலேயே எங்கள் அலுவலகத்தில் லிஃப்டுக்குச் செல்லவேண்டுமென்றால் சில படிகளை ஏறத்தான் வேண்டும். இவரைப்போல் உடல் ஊனமுற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள், சக்கர நாற்காலியில் செல்கிறவர்கள், வயதானவர்களுக்கு அது கடினம்தான்.
ஆச்சர்யமான விஷயம், நான் இதே அலுவலகத்தில் எட்டு வருடங்களாக வேலை செய்கிறேன், இந்தப் படிகளில்தான் தினமும் பலமுறை ஏறிச் செல்கிறேன், இறங்கி வருகிறேன். ஆனால் இத்தனை ஆண்டுகளில் ஒருமுறைகூட இதைப்பற்றி யோசித்தது கிடையாது.
‘நானும் அப்படிதான் சார் இருந்தேன்’ என்றார் அவர். ‘சில வருஷங்களுக்கு முன்னாடி எனக்குப் பக்கவாத அட்டாக், உயிர் பிழைச்சு எழுந்ததே பெரிய விஷயம், ரொம்ப நாள் ரெஸ்ட் எடுத்துட்டு, இப்பதான் தைரியமாக் குச்சியை ஊனிகிட்டுக் கொஞ்சம் நடமாட ஆரம்பிச்சுருக்கேன்!’
‘இந்த அட்டாக்குக்கு முன்னாடிவரைக்கும், நானும் இதுமாதிரி படிகளைப் பற்றி அலட்டிகிட்டதே கிடையாது. எனக்கே நடக்கறது, படி ஏறுறது சிரமம்ன்னு ஆனப்புறம்தான், ஒவ்வோர் இடத்தையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பிச்சேன். இருக்கிற கட்டடங்கள்ல பாதிக்கு மேல, என்னைமாதிரி ஆள்கள் உள்ளே நுழைய லாயக்கில்லைன்னு புரிஞ்சது.’
’இப்போ உங்க கட்டடத்திலேயே, படிகளுக்குப் பக்கத்துல ஒரு சாய்வுப் பாதை அமைச்சாப் போதும், நான் சவுகர்யமா உள்ளே வந்துடுவேன். அதுக்குச் சில ஆயிரம் ரூபாய் செலவாகும். அது ஒரு பெரிய விஷயமே இல்லை. ஆனா அப்படிச் செய்யணும், அது அவசியம்ன்னு உங்களுக்குத் தோணணுமே, அதுதான் பெரிய பிரச்னை.’
‘இந்தக் கட்டடம்மட்டுமில்லை, பல ரெஸ்டாரன்ட்கள், தியேட்டர்கள், ஷாப்பிங் மால்ஸ், தொழிற்சாலைகள், பெரிய கார்ப்பரேட் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஏன், சில ஹாஸ்பிடல்ஸைக்கூட, எங்களைமாதிரி ஆள்கள் உள்ளே நுழைய வசதியில்லாதபடிதான் கட்டியிருக்காங்க, அதுவும் முக்கியம், அவசியம்ன்னு யாருக்கும் தோணறதே இல்லை. என்ன செய்ய?’
இப்படி அவர் ஆதங்கத்துடன் கேட்டபிறகு, எனக்கு ஒட்டுமொத்த உலகமும் புதிதாகத் தோன்ற ஆரம்பித்தது. கண்ணில் படுகிற ஒவ்வொரு கட்டடத்தையும், உடல் ஊனமுற்ற ஒருவர் இதனுள் நுழைவது எளிதா, சிரமமா என்று கவனித்து எடை போட ஆரம்பித்தேன்.
சோகமான விஷயம், மிகப் பெரிய நகரங்களில்கூட, ஒரு ஏரியாவில் நூறு கட்டடங்கள் இருக்கின்றது என்று வைத்துக்கொண்டால், அதில் பத்து அல்லது பதினைந்துமட்டுமே உடல் ஊனமுற்றோர் எளிதில் அணுகும்வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற அனைத்துக் கட்டடங்களும் வாசலில் குறைந்தது இரண்டு முதல் ஐந்து அல்லது ஆறு படிகளை அமைத்து அவர்களைத் தடுத்து நிறுத்திவிடுகின்றன.
இதைப் படிக்கும்போது, உங்களது வீடு அல்லது அலுவலகத்தை மனக்கண்ணில் கொண்டுவந்து பாருங்கள், அங்கே சாய்வுப் பாதை உண்டா? சக்கர நாற்காலியிலோ, கைத்தடியின் துணையுடனோ நடமாடும் ஒருவர் அதில் எளிதாக நுழைவது சாத்தியமா?
சாய்வுப் பாதை இல்லாவிட்டால் என்ன? மற்றவர்கள் உதவியுடன் அவர்கள் உள்ளே வரலாமே.
நிச்சயமாக வரலாம். ஆனால் அதேசமயம், உடல் குறைபாடு கொண்ட அவர்கள் பிறரின் துணை இன்றி சுதந்தரமாகவும் தன்னம்பிக்கையோடும் நடமாடவே விரும்புகிறார்கள். நம்முடைய உதவியோ, பரிதாப உச்சுக்கொட்டலோ அவர்களுக்கு அவசியம் இல்லை என்று நினைக்கிறார்கள். அதற்கான ஏற்பாட்டை நாம் செய்து தருவதுதானே நியாயம்?
இந்தியாவில்மட்டுமில்லை. உலகம்முழுக்க இந்த வாசல் படிக்கட்டுகளின் பிரச்னை இருக்கிறது. கட்டட உரிமையாளர்களோ அவற்றை வடிவமைப்பவர்களோ இதுபற்றி யோசிப்பதே இல்லை. இதனால் உடல் ஊனமுற்றவர்களின் உலகம் வெகுவாகச் சுருங்கிப்போய்விடுகிறது.
உதாரணமாக, ஒருவர் நல்ல வாசகராக இருக்கலாம். ஆனால் ஊரில் உள்ள எல்லாப் புத்தகக் கடைகளின் வாசலிலும் இதுபோல் பெரிய படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தால், அவர் உள்ளே போய்ப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துத் தேர்ந்தெடுத்து வாங்கமுடியுமா?
இதேபோல், பத்து தியேட்டர்கள் உள்ள ஓர் இடத்தில், ஒரே ஒரு தியேட்டரில்மட்டுமே சாய்வுப்பாதை உள்ளது என்றால், அவரைப் பொறுத்தவரை மற்ற ஒன்பது தியேட்டர்களும் இருந்தும் இல்லாதவைதான். இதைதான் ’அவர்களுடைய உலகம் மிகச் சிறியதாகச் சுருங்கிவிடுகிறது’ என்று சொல்கிறார்கள்.
இந்தப் பிரச்னையைச் சரி செய்யும் நோக்கத்துடன் பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுள் லேட்டஸ்ட், ‘ஆக்ஸஸ் மேப்.’
ஆங்கிலத்தில் ‘ஆக்ஸஸ்’ என்றால், அணுகுதல், அதாவது, நடப்பதில் பிரச்னை உள்ள யாரேனும் ஒரு கட்டடத்தை அணுகுவது எந்த அளவுக்கு எளிது என்பதைக் கவனித்து, அதன் அடிப்படையில் கட்டடங்களுக்கு மார்க் போடுகிறார்கள்.
உதாரணமாக, ஒரு கட்டடத்தின் வாசலில் வெறும் படிக்கட்டுகள்தான் என்றால் 1 மார்க், நல்ல சாய்வுப் பாதை உள்ளது என்றால் 2 மார்க், அங்குள்ள லிஃப்டினுள் சக்கர நாற்காலிகள் செல்லும் அளவுக்கு இடம் இருக்கிறது என்றால் இன்னொரு மார்க், கட்டடத்தினுள் நெருக்கடி அதிகம் இல்லாமல், அவர்கள் எளிதில் வளைய வரும்படி விசாலமான வசதிகள் இருந்தால் இன்னொரு மார்க், மாற்றுத் திறனாளிகளுக்காகத் தனி டாய்லெட் வசதி இருந்தால் இன்னொரு மார்க், இப்படி சகல வசதிகளும் சிறப்பாகச் செய்து தரப்பட்டிருந்தால், முழுசாக ஐந்து மார்க்!
இப்படி ஒவ்வொரு கட்டடத்துக்கும் பொதுமக்களை மார்க் போடச் சொல்கிறார்கள். அவற்றை மொத்தமாகக் கூட்டிச் சராசரி கணக்கிட்டு, அதன் அடிப்படையில் ஒவ்வொரு நகரத்திலும் ‘ஆக்ஸஸ்’ எளிதாக உள்ள இடங்களை ஒரு வரைபடமாகக் குறிக்கிறார்கள்.
ஒரு தெருவில் நான்கு உணவகங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் ஒன்றுதான் சாய்வுப்பாதையுடன் உள்ளது என்றால், இந்த ‘ஆக்ஸஸ் மேப்’ அந்த உணவகத்தைமட்டும் விசேஷமாக எடுத்துக் காண்பிக்கும். மற்றவற்றைச் சுற்றிச் சிவப்பு வட்டம் போட்டு எச்சரிக்கும்.
சக்கர நாற்காலியில் இயங்கும் ஒருவர் வீட்டை விட்டுக் கிளம்பும்போதே, கம்ப்யூட்டரிலோ, தனது மொபைல் ஃபோனிலோ இந்த மேப்பைப் பார்த்துக்கொள்ளலாம். எந்தெந்த இடங்கள் தான் எளிதில் செல்லும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று தெரிந்துகொண்டு அதற்கு ஏற்பத் திட்டமிடலாம்.
இதன் அடுத்தகட்டமாக, நல்ல சாய்வுப் பாதை, உள்ளே சக்கர நாற்காலிகள் எளிதில் சென்று திரும்பும் வகையில் இட வசதி போன்றவற்றைச் செய்து தருகிற வணிக நிறுவனங்களைப் பாராட்டி ஊக்குவிக்கிறார்கள். இதன்மூலம் படிக்கட்டுகளைக் காண்பித்துப் பயமுறுத்தும் மற்ற கட்டடங்களும் திருந்தும் என்கிற எண்ணம்தான்.
தற்சமயம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மிக வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் இந்த ‘ஆக்ஸஸ் மேப்’, இந்தியாவிலும் உள்ளது. ஆனால் நம் மக்கள் இன்னும் கட்டடங்களைக் கவனித்து மார்க் போடத் தொடங்கவில்லை. அதிகப் பேர் மார்க் போட்டால்தான், நல்ல கட்டடங்களைத் தேர்ந்தெடுக்கவும், கெட்ட கட்டடங்களைச் சுழித்து வட்டம் போடவும் வசதியாக இருக்கும்.
ஆகவே, நீங்கள் சாதாரணமாக நடப்பவரானாலும் சரி, சக்கர நாற்காலியில் இயங்குபவரானாலும் சரி, நீங்கள் செல்லும் ஒவ்வொரு கட்டடத்தையும் இந்தக் கண்ணோட்டத்தில் கவனித்து மார்க் போடுங்கள். அதைக் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் ஃபோன்மூலம் ‘ஆக்ஸஸ் மேப்’ இணைய தளத்தில் (http://www.axsmap.com/) இலவசமாகப் பதிவு செய்யுங்கள். உங்களது நண்பர்களையும் இதையே செய்ய உற்சாகப்படுத்துங்கள்.
நாம் ஒவ்வொருவரும் சேர்ந்து தேர் இழுத்தால், அடுத்த சில மாதங்களுக்குள் இந்தியாவுக்கும் அட்டகாசமான ஓர் ஆக்ஸஸ் மேப் தயாராகிவிடும். அதன்பிறகு, நம் ஊர் மாற்றுத் திறனாளிகளின் உலகம் சுருங்கிக் காட்சியளிக்காது.
***
இதனுடன் தொடர்புடைய இன்னொரு கட்டுரை / பேட்டியும் இதே பக்கத்தில் வெளியானது. நண்பர் ஈரோடு நாகராஜ் எழுதிய அந்தக் கட்டுரை இங்கே : http://erodenagaraj.blogspot.in/2012/10/blog-post.html
7 Responses to "வீட்டுக்கு வீடு வாசப்படி வேணாம்"

2 | haris (@viuha)
October 7, 2012 at 12:06 am
எனது அலுவலகத்தில் சகா ஒருவர் மிகவும் கஷ்டபடுகிறார்!
நமது நாட்டில் நல்ல நடைபாதைகளே கிடையாது…அதாவது நடைபாதைகள் சக்கர நாற்காலிகள் செல்ல
ஏதுவானதாக இல்லை…
நல்ல செய்தி! வாழ்த்துக்கள்


3 | ranjani135
October 10, 2012 at 11:52 am
அன்புள்ள திரு சொக்கன்,
உங்களது இந்தப் பதிவு பற்றி இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.
வருகை தருக, ப்ளீஸ்!
http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_10.html
நன்றி!


4 | Maniraj
October 10, 2012 at 12:45 pm
ஒட்டுமொத்த உலகமும் புதிதாகத் தோன்ற ஆரம்பித்தது. கண்ணில் படுகிற ஒவ்வொரு கட்டடத்தையும், உடல் ஊனமுற்ற ஒருவர் இதனுள் நுழைவது எளிதா, சிரமமா என்று கவனித்து எடை போட ஆரம்பித்தேன்.
சிந்திக்கவைத்த பகிர்வுகள்..


5 | Unshrink Their World « Naga Chokkanathan
October 10, 2012 at 5:27 pm
[…] (Originally Published in Tamil @ https://nchokkan.wordpress.com/2012/10/06/axsmap/ […]


6 | Cheena ( சீனா )
October 13, 2012 at 1:35 am
அன்பின் சொக்கன் – புதிய தலைமுறையில் கட்டுரை வெளி வந்தமைக்க்குப் பாராட்டுகள் – அருமையான் சிந்தனை – மாற்றுத் திறனாளிகளை – அவர்கள் படும் துயரத்தை – நினைத்துப் ப்பார்ப்பது கூட கிடையாது. இது தான் இன்றைய உலகம் – ஆக்ஸஸ மேப் – அருமையான சிந்தனையில் உருவாக்கப் பட்ட ஒன்று – நன்று நன்று – நல்வாழ்த்துகள் சொக்கன் – நட்புடன் சீனா


7 | nathnaveln
December 2, 2013 at 6:45 am
வீட்டுக்கு வீடு வாசப்படி வேணாம் திரு என். சொக்கன் அவர்களின் அவசியமான பதிவு. மாற்றுத் திறனாழிகள் பற்றியது. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் படிக்க வேண்டுகிறேன். நன்றி திரு என். சொக்கன்

1 | ranjani135
October 6, 2012 at 4:57 pm
சில மாதங்களுக்கு முன் இதைபோல ஒரு கட்டுரை செய்தித்தாளில் படித்தேன். கேட்கும் திறன் குறைந்த ஒருவர் தனது அல்லல் பற்றி சொல்லி இருந்தார். தங்களது குறை வெளியே தெரியாதது; இவர்கள் அதை வெளிப் படுத்தும்போது புரிந்துகொள்ளக் கூட பொறுமை இருப்பதில்லை என்று மிகவும் நொந்து கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி.
நமக்கு எல்லாம் இருக்கிறது என்று இன்னொருவரின் குறையை பற்றிய ஒரு சின்ன பரிதாப உணர்ச்சி கூட இல்லாமல் இருப்பது எத்தனை பெரிய குற்றம்!
உங்களது முயற்சி பாராட்டுக்குரியது.