Archive for October 19th, 2012
நறுக்கல்
Posted October 19, 2012
on:- In: (Auto)Biography | Bangalore | Characters | Reviews | Uncategorized | Value | Walk | Women
- 15 Comments
போன வாரத்தில் ஒருநாள், Big Bazaar பக்கமாக நடந்துகொண்டிருந்தேன். அங்கே வாசலில் சிறு கூட்டம். ‘ஐயா வாங்க, அம்மா வாங்க’ என்று கூவாத குறையாக யாரோ அழைத்துக்கொண்டிருந்தார்கள். பெங்களூரில்கூட பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுவார்களா என்ன?
லேசாக எட்டிப்பார்த்தேன். மையத்தில் ஒரு சின்ன மேஜை போட்டு அதில் ஏழெட்டு கூடைகள். கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் அவற்றில் குவிக்கப்பட்டிருந்தன.
மேஜைக்கு அந்தப் பக்கம் நின்ற நபர் பரிதாபமான டை அணிந்திருந்தார். ‘இன்னும் கொஞ்சம் கூட்டம் சேர்ந்தால் நன்றாக இருக்குமே’ என்பதுபோல் அவருடைய முகபாவம்.
நான் நிற்கலாமா, போகலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோதே, அவர் பேச ஆரம்பித்தார். ‘இந்த Vegetable Cutter நீங்க இதுவரைக்கும் பார்த்திருக்கமுடியாத ஒரு புதுமையான Product, ஸ்விஸ் டெக்னாலஜி, கரன்ட்டே தேவையில்லை, அரை நிமிஷத்துல எல்லாக் காய்கறிகளையும் கச்சிதமா நறுக்கிக் கொடுத்துடும்.’
அவருடைய குரலும் உடல்மொழியும் டிவியில் இதேமாதிரி பொருள்களை விற்கும் ’வீடியோ ஷாப்பிங்’ பிரபலங்களை நினைவுபடுத்தியது. அதைப் பார்த்துதான் பயிற்சி எடுத்துக்கொண்டாரோ என்னவோ!
ஒரே வித்தியாசம், அவர் விற்பனை செய்யவிருந்த பொருள், Prestige நிறுவனத்தின் தயாரிப்பு. அதற்கென்று ஒரு Brand Value உண்டல்லவா? ஆகவே, கொஞ்சம் நின்று கவனித்தேன்.
அவர் உடனடியாகச் சில கேரட்களை எடுத்து முனை நறுக்கினார், குறுக்கே நெடுக்கே நான்காக வெட்டி ஒரு தக்கனூண்டு கண்ணாடிப் பாத்திரத்தினுள் போட்டார். ஸ்விட்ஸர்லாந்திலிருந்து வந்திருக்கும் விசேஷக் கத்தி ஒன்றை (கிட்டத்தட்ட மின்விசிறிமாதிரி இருந்தது) அதனுள் பொருத்தினார். பாத்திரத்தை மூடினார், வெளியே இருந்த கைப்பிடி ஒன்றைப் பிடித்து, ஆட்டோ டிரைவர்கள் வண்டியை ஸ்டார்ட் செய்வதுபோல் நான்கைந்துமுறை திரும்பத் திரும்ப இழுத்தார். பாத்திரத்தைத் திறந்து காட்டினார். கேரட் பொடிப்பொடியாக நறுக்கப்பட்டிருந்தது.
நான் நிஜமாகவே அசந்துபோனேன். இதைக் கையால் நறுக்குவதென்றால் (அதுவும் இந்த அளவு நுணுக்கமாக) குறைந்தது கால் மணி நேரம் தேவைப்படும். இங்கே சில விநாடிகளில் வேலை முடிந்துவிட்டது.
ஒருவேளை, இது ஏமாற்றுவேலையாக இருக்குமோ? மேஜிக் ஷோக்களில் வருவதுபோல் அந்தக் கண்ணாடிப் பாத்திரத்தை இரண்டாகப் பிரித்து, கீழ்ப் பகுதியில் முழுக் கேரட்களைப் போட்டு, பின்னர் மேல் பகுதியில் ஏற்கெனவே நறுக்கிவைத்த கேரட்களைத் திறந்து காட்டுகிறார்களோ?
வாய்ப்பில்லை. அங்கிருந்த பலரும் தாங்களே வெவ்வேறு காய்கறிகளை அதனுள்ளே போட்டுச் சரேல் சரேல் என்று இழுத்து வெட்டிப் பார்த்தார்கள். எல்லாரும் பத்தே விநாடிகளில் துண்டுதுண்டாக நறுக்கப்பட்ட காய்கறிகளைக் கண்டு முகம் மலர்ந்தார்கள்.
அடுத்து, மொபைல் ஃபோனைத் திறந்து, இணையத்திலும் இந்தத் தயாரிப்பின் பெயரைத் தட்டித் தேடிப் பார்த்தேன். பலரும் நல்லவிதமாகவே கருத்துத் தெரிவித்திருந்தார்கள். சிலர் ‘இப்படி ஒரு பிரமாதமான நறுக்கியந்திரத்தைப் பார்த்ததே இல்லை, என்னுடைய நேரம் கணிசமாக மிச்சமாகிறது’ என்றெல்லாம் நெகிழ்ந்திருந்தார்கள்.
தவிர, இது Prestige தயாரிப்பு, ஒரு வருடம் உத்திரவாதம், நூறு ரூபாய் தள்ளுபடி, வாங்கினால் என்ன?
வாங்கலாம். ஆனால், இதை வைத்துக் காய் நறுக்கப்போவது நான் இல்லை. என் மனைவி. அவர்தானே இதை வாங்குவதுபற்றித் தீர்மானிக்கமுடியும்?
ஆனால், அவரை அழைத்து வந்து காட்டும்வரை இந்த டை கட்டிய கீரி வித்தைக்காரர் காத்திருப்பாரா? அதைவிட முக்கியம், நூறு ரூபாய் தள்ளுபடி இருக்குமா?
பேசாமல், இதை ஒரு Surprise Giftஆக வாங்கித் தந்துவிட்டால் என்ன?
என் மனைவிக்கு Gift வாங்குவதே சிரமம், Surprise Gift அதைவிட சிரமம்.
காரணம், அவர் பதினேழாம் நூற்றாண்டில் அல்லது, அதற்கு முன்னால் பிறந்திருக்கவேண்டியவர். வீட்டு வேலைகளைச் செய்வதற்குத் துணைக் கருவிகளைப் பயன்படுத்தினால், அதன்மூலம் அந்த இல்லத்தரசியின் புனிதத்தில் அரைக்கால் இஞ்ச் குறைந்துவிடுகிறது என்று உறுதியாக நம்புகிறவர்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், ஒரு சாதாரண வாஷிங் மெஷின் வாங்குவதற்கு அவர் 2 வருஷம் யோசித்தார். அதை வாங்கியபிறகும், ‘கையால துவைக்கறமாதிரி வராது’ என்றுதான் இன்றுவரை புலம்பிக்கொண்டிருக்கிறார்.
அப்பேர்ப்பட்டவரிடம் காய்கறி நறுக்குவதற்கு மெஷின் வாங்கித் தந்தால் என்ன பதில் வரும் என்று எனக்குத் தெரியும். ‘எனக்கு இது வேணும்ன்னு நான் கேட்டேனா?’ என்பார் முதலில். அடுத்து, ‘இந்தமாதிரி மெஷினெல்லாம் சுத்த ஏமாத்து, எதையும் வெட்டாது’ என்பார், மூன்றாவதாக, ‘இதற்கு நீ கொடுத்த விலை ரொம்ப அதிகம், யாரோ உன் தலையில நல்லா மிளகாய் அரைச்சுட்டான்’ என்பார்.
அந்த மூன்றாவது முணுமுணுப்புக்கு என்னிடம் பதில் உண்டு. அவருக்குத் தெரியாமல் நான் எதை வாங்கினாலும் 20% விலை குறைத்துச் சொல்லிவிடுவேன். அவர் திருப்தியடைந்துவிடுவார். ஆனால் மற்ற இரண்டு முணுமுணுப்புகளை எப்படிச் சமாளிப்பது?
இதில் பெரிய பிரச்னை, அவருக்குத் தன்னுடைய நேரத்துக்கு மதிப்பு போடத் தெரியாது. ‘வீட்ல சும்மாதானே இருக்கேன், கால் மணி நேரம் செலவழிச்சு கேரட் வெட்டினா என்ன? அதுக்காக ஒரு மெஷினைக் காசு கொடுத்து வாங்குவாங்களா?’ என்று ஒரேயடியாகத் தாக்கிவிடுவார்.
ஆனாலும், இத்தனை பிரமாதமான ஒரு தயாரிப்பை விடுவதற்கு மனம் இல்லை. எதற்கும் இருக்கட்டும் என்று நானும் ஒருமுறை காய்கறிகளை வெட்டிப் பார்த்துவிட்டு, அதைக் காசு கொடுத்து வாங்கிவிட்டேன்.
வீடு செல்லும்வரை தயக்கம் இருந்தது. அதன்பிறகு எப்படியோ தைரியம் வந்துவிட்டது. ‘டொட்டடொய்ங்’ என்று இதை அவர்முன் வைத்தேன்.
விழிகளில் துளி ஆச்சர்யம் இல்லை. ‘இதுவா’ என்றார் அலட்சியமாக. ‘டிவில பார்த்திருக்கேன்.’
’ம்ஹூம், டிவி தயாரிப்பு இல்லை, ப்ரெஸ்டீஜ், ஒரு வருஷம் கேரன்டிகூட உண்டு’ என்று பாதுகாப்பாகச் சொன்னேன்.
அவர் ஆர்வம் காட்டவில்லை. ‘இதெல்லாம் ஒழுங்காக் காயை வெட்டுமா?’ என்றார் சந்தேகமாகவே.
முதல் சவால். நான் தயாராகவே இருந்தேன். ‘ஏதாவது காய்கறி இருந்தா கொண்டுவாயேன், வெட்டிக் காட்டறேன்’ என்றேன் மிகவும் தைரியமாக.
அவர் ஃப்ரிட்ஜிலிருந்து சில பீன்ஸ்களைக் கொண்டுவந்தார். அவற்றை முனை நறுக்கி, நான்காக ஒடித்து உள்ளே போட்டு மூடினேன். ஊரில் உள்ள எல்லா உம்மாச்சிகளையும் நினைத்துக்கொண்டு உறையினின்றும் வாளை உருவுகிற அரசன் தோரணையில் கைப்பிடியைப் பிடித்து இழுத்தேன்.
ம்ஹூம், உள்ளே எதுவும் நடக்கவில்லை. கண்ணாடி வழியே தெரிந்த பீன்ஸ்கள் அப்படியேதான் இருந்தன.
என்னாச்சு? வழக்கம்போல் ஏமாந்துவிட்டேனா?
அப்போதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த ஸ்விட்ஸர்லாந்துக் கத்தியை உள்ளே பொருத்தவே இல்லை. அப்புறம் கைப்பிடியைமட்டும் இழுத்து என்ன புண்ணியம்?
நாக்கைக் கடித்துக்கொண்டு அந்தப் பெட்டியைத் திறந்தேன். அங்கே பிளாஸ்டிக் கவசத்தினுள் பத்திரமாக இருந்த மின்விசிறி வடிவக் கத்தியை எடுத்து பீன்ஸ்களுக்கு நடுவே பொருத்தினேன். மறுபடி டப்பாவை மூடி சரேல், சரேல், சரேல், சரேல். நான்கே இழுப்புகளில் பீன்ஸ் பொடிப்பொடியாகிவிட்டது.
ஏதோ நானே தயாரித்த இயந்திரம்போல் பெருமிதமாக டப்பாவைத் திறந்து காண்பித்தேன். பாராட்டுக்காகக் காத்திருந்தேன்.
அவர் துண்டு பீன்ஸைக் கையில் எடுத்து லேசாக வருடிப் பார்த்தார். என் முகத்தைப் பார்த்தார். ‘நல்லாதான் வெட்டியிருக்கு. ஆனா…’ என்றார்.
’என்ன ஆனா?’
‘இவ்ளோ பொடிப்பொடியா நறுக்கிட்டா எப்படி? இது பீன்ஸா, வெண்டைக்காயா, கீரையான்னே தெரியலையே, இதுல பொரியல் செஞ்சா யார் நம்புவாங்க?’
***
என். சொக்கன் …
19 10 2012
ராமன் எத்தனை ராமனடி
Posted October 19, 2012
on:நம் ஊரில் ராமாயணக் கதையைத் தெரியாதவர்களே இருக்கமுடியாது. வால்மீகி எழுதிய ஒரிஜினலாகட்டும், அதிலிருந்து பிறந்த பலமொழிக் காவியங்களாகட்டும், புதுமையான பெயர்களுடன் வெளிநாடுகளில் வளைய வருகிற விதவிதமான ராமாயணங்களாகட்டும், எல்லாமே கிட்டத்தட்ட ஒரே சரித்திரத்தைதான் சிறு மாற்றங்களுடன் விவரித்துச் செல்கின்றன. மேடைப் பேச்சாளர்கள் இப்போதும் அதை வாரக்கணக்கில் விரிவுரையாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இத்தனைக்கும் அது ஒரு பெரிய, விரிவான கதைகூடக் கிடையாது. சந்தேகமிருந்தால் அமர் சித்ர கதாவைப் பாருங்கள், காமிக்ஸ் மகாபாரதத்தை 1500 ரூபாய் விலைக்குப் பெரிய வால்யூமாக வெளியிட்டிருக்கிறார்கள், ஆனால் காமிக்ஸ் ராமாயணம்? வெறும் நூறு ரூபாய்தான்!
ஆனால் அந்தத் தக்கனூண்டு கதையை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு பாத்திரத்தையும், ஒவ்வொரு பாடலையும், அதற்குள் இருக்கும் ஒவ்வொரு வரியையும் வெவ்வேறு கோணங்களில் மிக விரிவாக அலசிப் பிழிந்து காயப்போடுவதில் நமக்கு ஒரு சந்தோஷம். அதே கதையை, அதே சம்பவத்தை இவர் எப்படிச் சொல்லப்போகிறாரோ என்று தெரிந்துகொள்கிற ஆர்வம்.
அதனால்தான், இப்போதும் யாராவது ராமாயணத்தைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள், மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள், காரசாரமாக வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள், விருத்தம், வெண்பா, புதுக்கவிதை, ஹைக்கூ, ட்விட்டர் என்று எத்தனை வடிவத்தில் வந்தாலும், அந்தக் கதைமீது நமக்கு ஈர்ப்பு குறைவதில்லை.
நூலாக வெளிவந்த ராமாயணங்கள் நூறு என்றால், சொற்பொழிவுகளாக, பட்டிமன்றங்களாக, வழக்காடுமன்றங்களாக, கலந்துரையாடல்களாக, விவாதங்களாகக் காற்றில் கரைந்துபோன ராமாயணங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும். ரசிகமணி டி. கே. சி., கம்பன் அடிப்பொடி சா. கணேசன், தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், புலவர் கீரன், கி. வா. ஜகந்நாதன், அ. ச. ஞானசம்பந்தன், நீதியரசர் மு. மு. இஸ்மாயில் என்று தொடங்கிப் பல்வேறு அறிஞர்கள் ராமாயணக் கதையை, மாந்தர்களை, நிகழ்வுகளை, சாத்தியங்களை, உணர்வுகளைப் பலவிதமாக அலசியிருக்கிறார்கள். அதையெல்லாம் நேரில் உட்கார்ந்து கேட்டவர்கள் பாக்கியவான்கள், வேறென்ன சொல்ல?
அபூர்வமாக, இவற்றுள் சில உரைகள்மட்டும் ஒலி நாடாக்களாக, புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன, அவையும் இன்றுவரை விற்பனையில் இல்லை, டிஜிட்டல் வடிவத்தில் பாதுகாக்கப்படவும் இல்லை, இனிமேலும் அதற்கான வாய்ப்பு ஏற்படுமா என்று தெரியாது.
இந்தப் பின்னணியுடன் பார்க்கும்போது, விகடன் பிரசுரம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ‘கம்பனில் ராமன் எத்தனை ராமன்’ உரைத் தொகுப்பு நூல் ஓர் ஆனந்த அதிர்ச்சியாகவே உள்ளது. ’இதையெல்லாம் இந்தக் காலத்துல யார் படிக்கப்போறாங்க’ என்று அலட்சியமாக ஒதுக்காமல் இதனைச் சிறப்பானமுறையில் பதிப்பித்திருக்கும் விகடன் குழுமத்தைப் பாராட்டவேண்டும்.
சில ஆண்டுகளுக்குமுன்னால் சென்னையில் நடைபெற்ற ஏழு சொற்பொழிவுகளின் தொகுப்பு இது. சுதா சேஷய்யன், கு. ஞானசம்பந்தன், சத்தியசீலன், அறிவொளி, செல்வக்கணபதி, தெ. ஞானசுந்தரம், பெ. இலக்குமிநாராயணன் ஆகியோர் ராமனை மகனாக, மாணவனாக, சகோதரனாக, கணவனாக, தலைவனாக, மனித நேயனாகப் பல கோணங்களில் அலசியிருக்கிறார்கள். கே. பாசுமணி இவற்றைத் தொகுத்திருக்கிறார்.
இந்த நூலின் சிறப்பு அம்சம், சொற்பொழிவுகளின் எழுத்து வடிவம் என்கிற விஷயமே தெரியாதபடி தேர்ந்த இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளைப்போல் கட்டமைக்கப்பட்டுள்ளது. எளிமையான மொழி, பொருத்தமான மேற்கோள்கள், ஆசிரியர்கள் (சொற்பொழிவாளர்கள்) பற்றிய நல்ல அறிமுகம் எல்லாம் உண்டு. ஒவ்வொரு கட்டுரையும் அதே பாத்திரத்தை (ராமன்) வெவ்வேறுவிதமாக அணுகுவதால் நமக்கு ஒரு முழுமையான பார்வை கிடைக்கிறது.
தொகுப்பின் மிக நேர்த்தியான கட்டுரை, முனைவர் சத்தியசீலன் எழுதியுள்ள ‘கம்பனில் ராமன் : ஒரு கணவனாக…’. பொதுவாகப் பலரும் விவாதிக்கத் தயங்கும் அக்கினிப் பிரவேசக் காட்சியையே எடுத்துக்கொண்டு அதனை உளவியல் நோக்கில் ஆராய்ந்து தன் வாதங்களைச் சிக்கலில்லாமல் முன்வைக்கும் அவரது லாகவம் எண்ணி வியக்கவைக்கிறது.
இதேபோல், முனைவர் இலக்குமிநாராயணனின் கட்டுரை ராமன் ஏன் ஒரு சிறந்த மாணவன் என்று விவரிக்கிறது. அதன்மூலம் மாணவர்களுக்கு இருக்கவேண்டிய நற்பண்புகள் என்னென்ன என்று தெளிவாகச் சொல்லிவிடுகிறது.
குறைகள் என்று பார்த்தால், ஆழமான கட்டுரைகளுக்கு நடுவே சில மேம்போக்கான கட்டுரைகளும் தலைகாட்டுகின்றன. குறிப்பாக, சில ’பிரபல’ பேச்சாளர்கள் கம்பனைச் சும்மா ஊறுகாய்மாதிரி தொட்டுக்கொண்டு மற்ற கதைகளையே சொல்லி மேடையில் நேரத்தை ஓட்டியிருப்பதை ஊகிக்கமுடிகிறது. அவையெல்லாம் இங்கே பக்க விரயமாகத் துருத்திக்கொண்டு நிற்கின்றன.
இன்னொரு பிரச்னை, கம்பனில் பல ஆயிரம் பாடல்கள் இருப்பினும், பல பேச்சாளர்கள் சுமார் 25 முதல் நூறு பாடல்களைதான் திரும்பத் திரும்ப மேற்கோள் காட்டுவார்கள். இந்தத் தொகுப்பிலும் பெருமளவு அவையே இடம்பெறுவது மிகவும் ஆயாசம் அளிக்கிறது. அதிகம் அறியப்படாத அற்புதமான கம்பன் பாக்களை அறிமுகப்படுத்தியிருக்கலாமே என்கிற ஆதங்கம் எழுகிறது.
இதுபோன்ற சில சிறிய குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இது ஓர் அருமையான முயற்சி. இன்னும் அச்சு வடிவத்தில் வெளியாகாத நல்ல கம்ப ராமாயண உரைகள் இதேபோல் தொகுக்கப்படவேண்டும். முக்கியமாக, தூர்தர்ஷன் யாரும் பார்க்கமுடியாத நேரங்களில் அடிக்கடி ஒளிபரப்புகிற பழைய கம்பர் கழகச் சொற்பொழிவுகளைத் தொகுத்து வெளியிட்டால் புண்ணியம்!
அது சரி, இந்த நூலின் முதல் பதிப்போடு அந்தந்தச் சொற்பொழிவுகளின் ஆடியோ சிடி இலவசமாகத் தரப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் நான் வாங்கிய இரண்டாம் பதிப்பில் அது இல்லை. அறியாப்புள்ளையை இப்படி ஏமாத்தலாமா விகடன் தாத்தா? 🙂
(கம்பனில் ராமன் எத்தனை ராமன் : விகடன் பிரசுரம் : 160 பக்கங்கள் : ரூ 70)
***
என். சொக்கன் …
10 10 2012
(Originally Published In : http://omnibus.sasariri.com/2012/10/blog-post_12.html )
ஓடிய திருக்கு
Posted October 19, 2012
on:திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் ஒரு மினி சுற்றுலா சென்றிருந்தோம். கொஞ்சம் அலுவல், நிறைய ஊர் சுற்றல்.
(பயப்படாதீர்கள், இது பயணக் கட்டுரை அல்ல!)
நாட்டரசன் கோட்டைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த நேரம். உறவினர் ஒருவர் ஃபோன் செய்தார், ‘நீங்க வர்ற வழியிலதான் திருக்கோஷ்டியூர் இருக்கு, அருமையான கோயில், ராமானுஜரோட வாழ்க்கையோட நெருங்கின தொடர்பு கொண்டது. அவசியம் பார்த்துட்டு வாங்க.’
சிறிது நேரத்தில், அவர் சொன்ன திருக்கோஷ்டியூர் வந்தது. ’சௌம்ய நாராயணப் பெருமாள்’ ஆலயத்தின் வாசலில் காரை நிறுத்தினோம்.
சின்னக் கோயில்தான், ஆனால் மிக உயரமாகத் தென்பட்டது. நான்கு தளங்களில் பெருமாள். கீழ்த்தளத்திலும் மேல்தளத்திலும் ராமானுஜரும் உண்டு.
(பயப்படாதீர்கள், இது ஆன்மிகக் கட்டுரை அல்ல!)
கோயிலைவிட, எனக்கு அந்த ஊரின் பெயர்தான் வியப்பைத் தந்தது. அதென்ன திருக்’கோஷ்டி’யூர்? காங்கிரஸ் செல்வாக்கு நிறைந்த இடமோ?
(பயப்படாதீர்கள், இது அரசியல் கட்டுரை அல்ல!)
உடனடியாக, மொபைல் இணையத்தைத் திறந்து தேட ஆரம்பித்தேன். ‘மிஸ்டர் கூகுள், திருக்கோஷ்டியூர் என்ற பெயருக்குக் காரணம் என்னவோ?’
ஓர் அசுரன், அவனை அழிப்பதற்காகப் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் எல்லாரும் கலந்தாலோசனை நடத்துகிறார்கள். அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம்தான், இந்த ஊர். ஆகவே, தேவர்கள் ‘கோஷ்டி’ சேர்ந்து பேசிய இடம் என்ற அர்த்தத்தில் அதற்குத் ‘திருக்கோஷ்டியூர்’ என்று பெயர் வந்ததாம்.
சுவாரஸ்யமான கதைதான். பொருத்தமான விளக்கம்தான், ஆனால், இந்தப் பெயரில் ஒரு கிரந்த எழுத்து (ஷ்) இருக்கிறதே. அதைத் தவிர்த்துவிட்டால் ‘திருக்கோட்டியூர்’ என்று மாறிவிடுமே.
எனக்குத் தெரிந்து ஹைதாராபாதில் ‘கோட்டி’ என்ற பெயரில் ஓர் இடம் உண்டு. அதே ஆந்திராவில் ராஜ் கோட்டி என்ற பெயரில் இரண்டு இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம்தான் துள்ளிசையின் நுட்பங்களைக் கற்றுக்கொண்டதாக ஏ. ஆர். ரஹ்மான் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்.
(பயப்படாதீர்கள், இது சினிமாக் கட்டுரை அல்ல!)
ஆனால் தமிழ்நாட்டின் தென் மூலையில் உள்ள இந்த ஊருக்கும், அந்தக் ‘கோட்டி’களுக்கும் சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை. அல்லவா?
மொழிமாற்றம், கிரந்தம் தவிர்ப்பு போன்றவற்றில் இந்தப் பிரச்னை எப்போதும் உண்டு. கொஞ்சம் அசந்தாலும் அர்த்தம் சுத்தமாக மாறிவிடும்.
உதாரணமாக, ’ஸ்ரீனிவாசன்’ என்று ஒரு பெயர். ’ஸ்ரீ’ என்றால் ‘திரு’, ‘செல்வம்’, ‘வளம்’, ஆக, இந்தப் பெயரின் அர்த்தம், மிகவும் வளமாக / வளத்தில் வாசம் செய்பவன்.
அந்தப் பெயரைக் கிரந்தம் தவிர்த்து ‘சீனிவாசன்’ என்று எழுதுகிறோம். எல்லாருக்கும் பழகிவிட்டது. தவறில்லை. ஆனால் இந்தத் தமிழ்ப் பெயருக்குச் ‘சர்க்கரையில் வாசம் செய்கிறவன்’ (அதாவது எறும்பு) என்று ஓர் அர்த்தம் (அனர்த்தம்) வருகிறதல்லவா?
சில வருடங்களுக்குமுன்னால் நாங்கள் ‘தினம் ஒரு கவிதை’ என்ற பெயரில் ஒரு மின்னஞ்சல் குழுமத்தை நடத்திக்கொண்டிருந்தோம். ‘Dhinam Oru Kavithai’ என்ற ஆங்கிலப் பெயர் நீளமானது என்பதால், அந்தக் குழுவுக்கு ‘DOKAVITHAI’ என்று சுருக்கமாகப் பெயர் சூட்டியிருந்தோம்.
அந்தக் குழுமத்தின் ஆண்டு விழாவில் ஒருவர் பேசினார், ‘தினம் என்பது வடமொழிச் சொல், ஆகவே அதை ‘நாளும் ஒரு கவிதை’ என்று மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.’
இன்னொருவர் இதற்குப் பதில் சொன்னார், ‘நண்பர் சொன்னது நல்ல யோசனைதான். ஆனால் அப்படி மாற்றினால் நம் குழுவின் ஆங்கிலப் பெயரை ‘NaaLum Oru Kavithai’ அதாவது ‘NOKAVITHAI’ என்று மாற்றவேண்டியிருக்கும். கவிதையே இல்லை என்கிற அர்த்தம் வந்துவிடுமே.’
இதை வேடிக்கைக்காகக் கேட்கும்போது சிரிப்பு வருகிறது. ஆனால் கொஞ்சம் முயன்றால், மொழியின் சாத்தியங்களைப் பயன்படுத்தி எந்தப் பெயருக்கும் நல்ல அர்த்தம் ஒன்றைச் சொல்லிவிடமுடியும் என்பது என் கட்சி.
உதாரணமாக, ‘நீடாமங்கலம்’ என்று ஓர் ஊர். திருவாரூர் பக்கத்தில் உள்ளது. அந்த ஊர் பால் திரட்டு முன்பு ரொம்பப் பிரபலம். இப்போது கிடைப்பதில்லை.
ஒரு பெரிய பேச்சாளர் (கி. வா. ஜகந்நாதன் என்று நினைவு) அந்த ஊரில் சொற்பொழிவு ஆற்ற வந்திருந்தாராம். அவரை வரவேற்று அழைத்துச் சென்ற உள்ளூர்ப் பிரமுகர் பேச்சுவாக்கில் ஒரு விஷயத்தைச் சொன்னாராம், ‘ஐயா, இந்த ஊர் ரொம்ப நல்ல ஊர்தான், ஆனா இதுக்கு ஏன் நீடாமங்கலம்ன்னு பேர் வெச்சாங்க? தப்பான அர்த்தம் வருதே!’
அவருடைய புலம்பலில் நியாயம் உண்டு. ‘நீடா’ (நீளா) மங்கலம் என்றால், நல்ல விஷயங்கள் தொடர்ந்து நிகழாத ஊர் என்ற பொருள்தான் வருகிறது.
ஆனால், அந்தச் சொற்பொழிவாளர் அசரவில்லை, ‘நீங்கள் வார்த்தையைச் சரியாகப் பிரிக்கவில்லை’ என்றார், ’அது நீடா + மங்கலம் அல்ல, நீள் + ஆம் + மங்கலம் என்று பிரிக்கவேண்டும், அதாவது, மங்கலம் எப்போதும் நீண்டு தங்கியிருக்கும் ஊர் இது!’
அதுபோல, ‘திருக்கோட்டியூர்’ என்ற கிரந்தம் தவிர்த்த பெயருக்கும் ஏதாவது பொருத்தமான அர்த்தம் இருக்குமோ? தொடர்ந்து கூகுளை விசாரித்தேன். அட்டகாசமான விளக்கம் ஒன்று சிக்கியது.
தமிழில் ’திருக்கு’ என்றால் துன்பம், தீய வினைகள், மாறுபாடு, வஞ்சனை போன்ற பொருள்கள் உண்டு. கம்ப ராமாயணத்தில் ‘திருக்கு இல் சிந்தையர்’ என்று வானரப் படையினரைப் புகழ்கிறார் கம்பர். அதாவது ‘புத்தி குறுக்கால யோசிக்காத பயல்கள்’, Straightforward Personalities!
ஆக, உங்களுக்குக் ‘கோஷ்டி’ பிடிக்காவிட்டால், திருக்கோட்டியூர் = திருக்கு + ஓட்டி + ஊர், நம்முடைய துன்பங்களை, பழைய வினைகளை, பொல்லாத்தனங்களை விரட்டும் ஊர் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
இப்படித் தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஊருக்கும் பெயர்க்காரணம் இருக்கிறது. பஸ்ஸில் செல்லும்போது வரிசையாக வரும் ஊர்களின் (குறிப்பாகக் கிராமங்களின்) பெயர்ப்பலகைகளை ஒவ்வொன்றாக வாசித்து, ‘இதற்கு என்ன பெயர்க் காரணமாக இருக்கும்’ என்று யோசிக்கத் தொடங்கினால், அற்புதமான பல புதிய (அதாவது, பழைய) தமிழ் வார்த்தைகளைத் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பும் அது.
ஆர்வம் உள்ளவர்கள், ரா. பி. சேதுப்பிள்ளை எழுதிய ‘ஊரும் பேரும்’ என்ற நூலை வாங்கி வாசிக்கலாம். இணையத்திலேயே இலவசமாகவும் கிடைக்கிறது. கொஞ்சம் தேடுங்கள்.
***
என். சொக்கன் …
12 10 2012
(Originally Published In : http://www.idlyvadai.blogspot.in/2012/10/blog-post_12.html )