நறுக்கல்
Posted October 19, 2012
on:- In: (Auto)Biography | Bangalore | Characters | Reviews | Uncategorized | Value | Walk | Women
- 15 Comments
போன வாரத்தில் ஒருநாள், Big Bazaar பக்கமாக நடந்துகொண்டிருந்தேன். அங்கே வாசலில் சிறு கூட்டம். ‘ஐயா வாங்க, அம்மா வாங்க’ என்று கூவாத குறையாக யாரோ அழைத்துக்கொண்டிருந்தார்கள். பெங்களூரில்கூட பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுவார்களா என்ன?
லேசாக எட்டிப்பார்த்தேன். மையத்தில் ஒரு சின்ன மேஜை போட்டு அதில் ஏழெட்டு கூடைகள். கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் அவற்றில் குவிக்கப்பட்டிருந்தன.
மேஜைக்கு அந்தப் பக்கம் நின்ற நபர் பரிதாபமான டை அணிந்திருந்தார். ‘இன்னும் கொஞ்சம் கூட்டம் சேர்ந்தால் நன்றாக இருக்குமே’ என்பதுபோல் அவருடைய முகபாவம்.
நான் நிற்கலாமா, போகலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோதே, அவர் பேச ஆரம்பித்தார். ‘இந்த Vegetable Cutter நீங்க இதுவரைக்கும் பார்த்திருக்கமுடியாத ஒரு புதுமையான Product, ஸ்விஸ் டெக்னாலஜி, கரன்ட்டே தேவையில்லை, அரை நிமிஷத்துல எல்லாக் காய்கறிகளையும் கச்சிதமா நறுக்கிக் கொடுத்துடும்.’
அவருடைய குரலும் உடல்மொழியும் டிவியில் இதேமாதிரி பொருள்களை விற்கும் ’வீடியோ ஷாப்பிங்’ பிரபலங்களை நினைவுபடுத்தியது. அதைப் பார்த்துதான் பயிற்சி எடுத்துக்கொண்டாரோ என்னவோ!
ஒரே வித்தியாசம், அவர் விற்பனை செய்யவிருந்த பொருள், Prestige நிறுவனத்தின் தயாரிப்பு. அதற்கென்று ஒரு Brand Value உண்டல்லவா? ஆகவே, கொஞ்சம் நின்று கவனித்தேன்.
அவர் உடனடியாகச் சில கேரட்களை எடுத்து முனை நறுக்கினார், குறுக்கே நெடுக்கே நான்காக வெட்டி ஒரு தக்கனூண்டு கண்ணாடிப் பாத்திரத்தினுள் போட்டார். ஸ்விட்ஸர்லாந்திலிருந்து வந்திருக்கும் விசேஷக் கத்தி ஒன்றை (கிட்டத்தட்ட மின்விசிறிமாதிரி இருந்தது) அதனுள் பொருத்தினார். பாத்திரத்தை மூடினார், வெளியே இருந்த கைப்பிடி ஒன்றைப் பிடித்து, ஆட்டோ டிரைவர்கள் வண்டியை ஸ்டார்ட் செய்வதுபோல் நான்கைந்துமுறை திரும்பத் திரும்ப இழுத்தார். பாத்திரத்தைத் திறந்து காட்டினார். கேரட் பொடிப்பொடியாக நறுக்கப்பட்டிருந்தது.
நான் நிஜமாகவே அசந்துபோனேன். இதைக் கையால் நறுக்குவதென்றால் (அதுவும் இந்த அளவு நுணுக்கமாக) குறைந்தது கால் மணி நேரம் தேவைப்படும். இங்கே சில விநாடிகளில் வேலை முடிந்துவிட்டது.
ஒருவேளை, இது ஏமாற்றுவேலையாக இருக்குமோ? மேஜிக் ஷோக்களில் வருவதுபோல் அந்தக் கண்ணாடிப் பாத்திரத்தை இரண்டாகப் பிரித்து, கீழ்ப் பகுதியில் முழுக் கேரட்களைப் போட்டு, பின்னர் மேல் பகுதியில் ஏற்கெனவே நறுக்கிவைத்த கேரட்களைத் திறந்து காட்டுகிறார்களோ?
வாய்ப்பில்லை. அங்கிருந்த பலரும் தாங்களே வெவ்வேறு காய்கறிகளை அதனுள்ளே போட்டுச் சரேல் சரேல் என்று இழுத்து வெட்டிப் பார்த்தார்கள். எல்லாரும் பத்தே விநாடிகளில் துண்டுதுண்டாக நறுக்கப்பட்ட காய்கறிகளைக் கண்டு முகம் மலர்ந்தார்கள்.
அடுத்து, மொபைல் ஃபோனைத் திறந்து, இணையத்திலும் இந்தத் தயாரிப்பின் பெயரைத் தட்டித் தேடிப் பார்த்தேன். பலரும் நல்லவிதமாகவே கருத்துத் தெரிவித்திருந்தார்கள். சிலர் ‘இப்படி ஒரு பிரமாதமான நறுக்கியந்திரத்தைப் பார்த்ததே இல்லை, என்னுடைய நேரம் கணிசமாக மிச்சமாகிறது’ என்றெல்லாம் நெகிழ்ந்திருந்தார்கள்.
தவிர, இது Prestige தயாரிப்பு, ஒரு வருடம் உத்திரவாதம், நூறு ரூபாய் தள்ளுபடி, வாங்கினால் என்ன?
வாங்கலாம். ஆனால், இதை வைத்துக் காய் நறுக்கப்போவது நான் இல்லை. என் மனைவி. அவர்தானே இதை வாங்குவதுபற்றித் தீர்மானிக்கமுடியும்?
ஆனால், அவரை அழைத்து வந்து காட்டும்வரை இந்த டை கட்டிய கீரி வித்தைக்காரர் காத்திருப்பாரா? அதைவிட முக்கியம், நூறு ரூபாய் தள்ளுபடி இருக்குமா?
பேசாமல், இதை ஒரு Surprise Giftஆக வாங்கித் தந்துவிட்டால் என்ன?
என் மனைவிக்கு Gift வாங்குவதே சிரமம், Surprise Gift அதைவிட சிரமம்.
காரணம், அவர் பதினேழாம் நூற்றாண்டில் அல்லது, அதற்கு முன்னால் பிறந்திருக்கவேண்டியவர். வீட்டு வேலைகளைச் செய்வதற்குத் துணைக் கருவிகளைப் பயன்படுத்தினால், அதன்மூலம் அந்த இல்லத்தரசியின் புனிதத்தில் அரைக்கால் இஞ்ச் குறைந்துவிடுகிறது என்று உறுதியாக நம்புகிறவர்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், ஒரு சாதாரண வாஷிங் மெஷின் வாங்குவதற்கு அவர் 2 வருஷம் யோசித்தார். அதை வாங்கியபிறகும், ‘கையால துவைக்கறமாதிரி வராது’ என்றுதான் இன்றுவரை புலம்பிக்கொண்டிருக்கிறார்.
அப்பேர்ப்பட்டவரிடம் காய்கறி நறுக்குவதற்கு மெஷின் வாங்கித் தந்தால் என்ன பதில் வரும் என்று எனக்குத் தெரியும். ‘எனக்கு இது வேணும்ன்னு நான் கேட்டேனா?’ என்பார் முதலில். அடுத்து, ‘இந்தமாதிரி மெஷினெல்லாம் சுத்த ஏமாத்து, எதையும் வெட்டாது’ என்பார், மூன்றாவதாக, ‘இதற்கு நீ கொடுத்த விலை ரொம்ப அதிகம், யாரோ உன் தலையில நல்லா மிளகாய் அரைச்சுட்டான்’ என்பார்.
அந்த மூன்றாவது முணுமுணுப்புக்கு என்னிடம் பதில் உண்டு. அவருக்குத் தெரியாமல் நான் எதை வாங்கினாலும் 20% விலை குறைத்துச் சொல்லிவிடுவேன். அவர் திருப்தியடைந்துவிடுவார். ஆனால் மற்ற இரண்டு முணுமுணுப்புகளை எப்படிச் சமாளிப்பது?
இதில் பெரிய பிரச்னை, அவருக்குத் தன்னுடைய நேரத்துக்கு மதிப்பு போடத் தெரியாது. ‘வீட்ல சும்மாதானே இருக்கேன், கால் மணி நேரம் செலவழிச்சு கேரட் வெட்டினா என்ன? அதுக்காக ஒரு மெஷினைக் காசு கொடுத்து வாங்குவாங்களா?’ என்று ஒரேயடியாகத் தாக்கிவிடுவார்.
ஆனாலும், இத்தனை பிரமாதமான ஒரு தயாரிப்பை விடுவதற்கு மனம் இல்லை. எதற்கும் இருக்கட்டும் என்று நானும் ஒருமுறை காய்கறிகளை வெட்டிப் பார்த்துவிட்டு, அதைக் காசு கொடுத்து வாங்கிவிட்டேன்.
வீடு செல்லும்வரை தயக்கம் இருந்தது. அதன்பிறகு எப்படியோ தைரியம் வந்துவிட்டது. ‘டொட்டடொய்ங்’ என்று இதை அவர்முன் வைத்தேன்.
விழிகளில் துளி ஆச்சர்யம் இல்லை. ‘இதுவா’ என்றார் அலட்சியமாக. ‘டிவில பார்த்திருக்கேன்.’
’ம்ஹூம், டிவி தயாரிப்பு இல்லை, ப்ரெஸ்டீஜ், ஒரு வருஷம் கேரன்டிகூட உண்டு’ என்று பாதுகாப்பாகச் சொன்னேன்.
அவர் ஆர்வம் காட்டவில்லை. ‘இதெல்லாம் ஒழுங்காக் காயை வெட்டுமா?’ என்றார் சந்தேகமாகவே.
முதல் சவால். நான் தயாராகவே இருந்தேன். ‘ஏதாவது காய்கறி இருந்தா கொண்டுவாயேன், வெட்டிக் காட்டறேன்’ என்றேன் மிகவும் தைரியமாக.
அவர் ஃப்ரிட்ஜிலிருந்து சில பீன்ஸ்களைக் கொண்டுவந்தார். அவற்றை முனை நறுக்கி, நான்காக ஒடித்து உள்ளே போட்டு மூடினேன். ஊரில் உள்ள எல்லா உம்மாச்சிகளையும் நினைத்துக்கொண்டு உறையினின்றும் வாளை உருவுகிற அரசன் தோரணையில் கைப்பிடியைப் பிடித்து இழுத்தேன்.
ம்ஹூம், உள்ளே எதுவும் நடக்கவில்லை. கண்ணாடி வழியே தெரிந்த பீன்ஸ்கள் அப்படியேதான் இருந்தன.
என்னாச்சு? வழக்கம்போல் ஏமாந்துவிட்டேனா?
அப்போதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த ஸ்விட்ஸர்லாந்துக் கத்தியை உள்ளே பொருத்தவே இல்லை. அப்புறம் கைப்பிடியைமட்டும் இழுத்து என்ன புண்ணியம்?
நாக்கைக் கடித்துக்கொண்டு அந்தப் பெட்டியைத் திறந்தேன். அங்கே பிளாஸ்டிக் கவசத்தினுள் பத்திரமாக இருந்த மின்விசிறி வடிவக் கத்தியை எடுத்து பீன்ஸ்களுக்கு நடுவே பொருத்தினேன். மறுபடி டப்பாவை மூடி சரேல், சரேல், சரேல், சரேல். நான்கே இழுப்புகளில் பீன்ஸ் பொடிப்பொடியாகிவிட்டது.
ஏதோ நானே தயாரித்த இயந்திரம்போல் பெருமிதமாக டப்பாவைத் திறந்து காண்பித்தேன். பாராட்டுக்காகக் காத்திருந்தேன்.
அவர் துண்டு பீன்ஸைக் கையில் எடுத்து லேசாக வருடிப் பார்த்தார். என் முகத்தைப் பார்த்தார். ‘நல்லாதான் வெட்டியிருக்கு. ஆனா…’ என்றார்.
’என்ன ஆனா?’
‘இவ்ளோ பொடிப்பொடியா நறுக்கிட்டா எப்படி? இது பீன்ஸா, வெண்டைக்காயா, கீரையான்னே தெரியலையே, இதுல பொரியல் செஞ்சா யார் நம்புவாங்க?’
***
என். சொக்கன் …
19 10 2012
15 Responses to "நறுக்கல்"

வாஸ்தவமான கேள்வி தான். 🙂


ha ha…fantastic.
//இது பீன்ஸா, வெண்டைக்காயா, கீரையான்னே தெரியலையே, இதுல பொரியல் செஞ்சா யார் நம்புவாங்க?//
unexpected climax 🙂 🙂


இந்த மிஷின்கள்ல காய் வெட்டறது பெரிசில்ல ஐயா.அதுக்கு அப்புறம் அதைக் கழுவறதுதான் ரொம்ப கஷ்டம்.


யாருமே எதிர்பாராத திகில் முடிவு.படித்து முடிக்கும் வரை இப்படி ஒரு கேள்வி கேட்க முடியும் என தெரியவில்லை.எதற்கும் தங்களது மணைவியும் மன்மோகன் சிங்கும் உடன் பிறப்புகளா?
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்


சேம் ஸ்டோரி இங்கே ஓடிக்கிட்டிருக்கு :))) இன்னும் மெஷின் ஒடல நானும் பொருத்தாத ப்ளேடு இல்ல மாத்தாத பவுல் இல்ல இன்னா பண்றதுன்னு முழிச்சிங் 🙂


//இந்த மிஷின்கள்ல காய் வெட்டறது பெரிசில்ல ஐயா.அதுக்கு அப்புறம் அதைக் கழுவறதுதான் ரொம்ப கஷ்டம்.//
அடப்பாவமே !!! முதலில் கை(காய்)களை கழுவி விட்டுதானே கட் பண்ணனும்.


//பதினேழாம் நூற்றாண்டில் அல்லது, அதற்கு முன்னால் பிறந்திருக்கவேண்டியவர்//
ஹா ஹா உங்க மனைவி இதெல்லாம் படிக்கமாட்டாங்கனு தைரியமா 😉


ஒரு முப்பது வருடங்கள் முன்பே இது மாதிரி அனுபவுண்டு ! ஆனால் அவர்களே வாங்கியிருந்தால் …காய்கறி வாங்கும் பழக்கம் உண்டா ? கொடுமை !! இதற்கேன்றே ஒரு கோர்ஸ் எடுக்கணும் !


//சொன்னால் நம்பமாட்டீர்கள், ஒரு சாதாரண வாஷிங் மெஷின் வாங்குவதற்கு அவர் 2 வருஷம் யோசித்தார். அதை வாங்கியபிறகும், ‘கையால துவைக்கறமாதிரி வராது’ என்றுதான் இன்றுவரை புலம்பிக்கொண்டிருக்கிறார்.//
ஹிஹிஹி, சேம் ப்ளட். நானும் தினமும் அப்படித்தான் சொல்லிட்டு இருக்கேன். இத்தனைக்கும் பதினைந்து வருஷத்துக்கும் மேலா வாஷிங் மெஷின். ஆனாலும் என்னோட சில, பல சேலைகள் வாஷிங் மெஷினையே பார்க்காது. :))))) (நான் எந்த நூற்றாண்டு?)
//அப்பேர்ப்பட்டவரிடம் காய்கறி நறுக்குவதற்கு மெஷின் வாங்கித் தந்தால் என்ன பதில் வரும் என்று எனக்குத் தெரியும். ‘எனக்கு இது வேணும்ன்னு நான் கேட்டேனா?’ என்பார் முதலில்.//
என்ன ஆச்சரியம், என்ன ஆச்சரியம், நம்ம ரங்க்ஸ் இப்படித்தான் நான் கேட்டாப்போல சில சமையலறைப் பொருட்களை வாங்கித் தள்ளுவார். எல்லாம் உபயோகம் ஆகாமல் கிடைக்கிறது தனிக்கதை. உங்க மனைவி சொன்னது தப்பே இல்லை. :)))) உடனே அவங்களைப் பார்க்கணும் போல இருக்கு.
//அடுத்து, ‘இந்தமாதிரி மெஷினெல்லாம் சுத்த ஏமாத்து, எதையும் வெட்டாது’ என்பார், மூன்றாவதாக, ‘இதற்கு நீ கொடுத்த விலை ரொம்ப அதிகம், யாரோ உன் தலையில நல்லா மிளகாய் அரைச்சுட்டான்’ என்பார்.//
அது என்னமோ உண்மை. சில நாட்கள் தான் இதெல்லாம் வேலை செய்யும். வெங்காயம் நறுக்கறச்சே என் கண்களிலே வர கண்ணீரைப் பார்த்துட்டு, என்னைக் கண்ணும், கண்ணீருமாப் பார்க்க விரும்பாத என்னோட ரங்க்ஸும், எங்க மாப்பிள்ளையுமா வெங்காயம் நறுக்கவென்றே யு.எஸ்ஸில் ஒரு மெஷின் வாங்கிக் கொடுத்தாங்க. இப்போ அது இருக்கிற இடமே தெரியலை.
அதோட கைகளால் காய் நறுக்குவது கைகளுக்குப் பயிற்சி. நேரம் ஒண்ணும் ஆகாது. (நேரத்தின் அருமை எனக்குத் தெரியும்; புரியும்.) ஆனாலும் பிசியோதெரபிஸ்ட் இதெல்லாம் தான் கைகளுக்குப் பயிற்சியாகக் கொடுக்கிறார். அதை நம் வீட்டு வேலையாகச் செய்தால் என்ன? நம்ம இஷ்டத்துக்குப் பெரிதாகவோ, சிறிதாகவோ, நடுவாந்திரமாகவோ நறுக்கிக்கலாமே. என்ன சொல்றீங்க?


குறை கூறாத பெண்கள் இவ்வுலகில் இல்லை..??


எனது இதயங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்

1 | salemdeva
October 19, 2012 at 7:04 pm
ஹி..ஹி…இந்தப்பிரச்சினைக்காகத்தான் நான் எதுவும் வாங்கிக் கொடுக்கறதே கிடையாது.