மனம் போன போக்கில்

பெயர்கள்

Posted on: November 7, 2012

இன்றைக்கு ராமாயணத்தில் பெயர்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். அநேகமாக எல்லாப் பெயர்களுக்குப் பின்னாலும் வெவ்வேறு காரணங்கள், கதைகள்.

தசரதன் மகன் என்பதால் ராமனுக்கு ‘தாசரதி’ என்று ஒரு பெயர் உண்டு.

லட்சுமணனும் அதே தசரதன் மகன்தானே? அவனுக்கும் ஒரு unique பெயர் வேண்டாமா?

சுமித்திரையின் மகன், ஆகவே லட்சுமணனுக்கு ‘சௌமித்ரி’ என்று பெயர்.

அனுமன் காற்றின் மைந்தன். காற்றுக்கு ‘மாருதம்’ என்று பெயர் உண்டு. அதன் மகன் என்பதால்தான் அனுமனை ‘மாருதி’ என்று அழைக்கிறோம்.

பெண்களுக்கும் இதே கதைதான். கேகயன் மகள், கைகேயி. ஜனகன் மகள் ஜானகி.

இதே பாணியில் பெயர் சூட்டல் அரக்கர் பக்கமும் உண்டு. இராவணன் மகன் இந்திரஜித்துக்கு ’இராவணி’ என்று ஒரு பெயர்.

இந்திரஜித் என்பதே காரணப் பெயர்தான். இந்திரனை ஜெயித்தவன் என்பதால் அப்படிப் பெயர் சூட்டினார்கள். அவனது இயற்பெயர் மேகநாதன்.

அட, அதுவும் காரணப்பெயர். பிறந்தவுடன் அவன் மேகத்தில் இடிபோல ஒலி எழுப்பிக் கத்த, அப்படிப் பெயர் சூட்டிவிட்டார்கள்.

அந்த மேகநாதனின் சித்தப்பா கும்பகர்ணன். இது சினையாகுபெயர், அதாவது சினை (உடல் உறுப்பு) ஒன்று (கும்பம் : குடம் போன்ற கர்ணம் : காதுகள்) அதைக் கொண்டிருக்கும் நபருக்கே பெயராகி வருவது.

‘மகளிர் மட்டும்’ மேனேஜர் நாசரை நினைவிருக்கும். அவருக்குப் பெண்கள் ‘மூக்கன்’ என்று பெயர் சூட்டுவது இப்படிதான். இதேமாதிரி உடல் உறுப்புகள் / குறைபாடுகளை மையமாக வைத்துச் சூட்டப்படுகிற பெயர்கள் நிறைய. பெரும்பாலும் கேலி நோக்கத்துடன்.

இவைதவிர, ஊர் பெயரைச் சூட்டுவதும் உண்டு. வாழப்பாடியார், வீரபாண்டியார் முதலான அரசியல் பெயர்களும், கரகாட்ட ராமராஜன் ‘சேந்தம்பட்டியாரே’ என்று செல்லமாக அழைக்கப்படுவதும் இந்த வகைதான்.

எனக்கு ராமாயண உதாரணமேதான் வேண்டும் என்றால், அந்த வகை பெட்ரோமாக்ஸ் விளக்குகளும் நிறைய இருக்கின்றன. கோசல தேசத்து அரசி கோசலை. மிதிலையின் இளவரசி மைதிலி.

கோசலை கணவன், மைதிலியின் மாமனார் தசரதனுக்கு எப்படி அந்தப் பெயர் வந்தது?

4 மெயின் திசைகள், 4 இடைத்திசைகள் மேலே, கீழே என ஒரே நேரத்தில் பத்து திசைகளிலும் அதிவேகமாக ஓடிச் சென்று எதிரிகளைத் தாக்கக்கூடிய ரதம் கொண்டவன் அவன். ஆகவே, தச(10)ரதன்.

ராமாயணத்துக்கு வெளியேயும் இதுமாதிரி அழகிய காரணப் பெயர்கள் ஏராளம். என் ஃபேவரிட், மால்மருகன்.

சும்மா முருகா, மால்மருகா என ரைமிங்குக்காகச் சூட்டிய பெயர் அல்ல அது. கொஞ்சம் பிரித்துப் படித்தால் அர்த்தம் தெளிவாகப் புரியும்.

முருகனின் மாமன் விஷ்ணு, அதாவது (திரு)மால். ஆகவே, முருகனை நாம் ‘மால் மருமகன்’ என்று சொல்லலாம்.

தமிழில் மருமகனைக் குறிக்கும் இன்னோர் அழகிய சொல், மருகன். அதேபோல் மருமகளுக்கு மருகி.

அந்த விதிப்படி, முருகன், மால்மருகன். சரிதானே?

’முருகன்’ என்பதும் காரணப் பெயர்தான். ’முருகு’ என்றால் அழகு, ஆகவே அழகன் முருகன்!

இதுமட்டுமில்லை, அநேகமாக முருகனின் எல்லாப் பெயர்களுமே காரணப் பெயர்களே. உதாரணமாக, சரவணன் (அந்தப் பெயர் கொண்ட ஒரு பொய்கையில் பிறந்தவன்), சிவக்குமார் (சிவனின் மைந்தன்), கார்த்திகேயன் (கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்).

இப்படிக் காரணத்துடன் பெயர் சூட்டும் அழகான கலாசாரத்தை நாம் நடுவில் எங்கேயோ, எப்படியோ இழந்துவிட்டோம்.

***

என். சொக்கன் …

07 11 2012

6 Responses to "பெயர்கள்"

இப்படி எழுத்தில் சொக்க வைப்பதால் சொக்கன் என்று பெயர் வைத்திருக்கிறீர்களோ!

நீங்கள் மற்ற பெயர்களை ஆராய்ந்தால் உங்கள் பெயரை ஆராய்ந்து வியக்கும் ரசிகை!

உங்களது ‘பெயர்கள்’, உங்களின் பெயர் காரணம் இரண்டையும் ரசித்தேன்.

இங்கும் ஒரு மூக்கன் உண்டு, யார் தெரியுமா?

ரசிக்க வைத்த கட்டுரை. காரணப் பெயர்களை அறிவதே ஒரு தனி சுகம்.

//
காசியிலிருந்து விசாலமான இந்திய நிலப்பரப்பை ஆள்வதால், அவள் பெயர் விசாலாட்சி!

மீனைப் போல கண் இமைக்காமல் மதுரையைக் காப்பவள் / மீனைப் போல கண்களை உடையவள் மீனாட்சி!
//

உண்ணி கிருஷ்ணன் பாடி, அடுத்த வாரம் வெளிவரும் பாடலில், ஐயப்பனை நான் குறிப்பிட்ட பெயர்… ஹரிபாலன் 🙂

Saravanan…. Not because of the water body. Sara means a variety of grass… Vana is forest. The Lord was found in a forest of grass.. Hence Saravanan.

இந்த கலாச்சாரத்தை இழந்தது மட்டுமல்ல.. பெயர்களின் அர்த்தம் புரியாமல் அவற்றை சுருக்கி சில சமயம் விபரீத அர்த்தம் தொனிக்க அழைக்கவும் எப்படியோ கற்றுக் கொண்டுவிட்டோம். 🙂

உதாரணமாக ராம்குமார் என்று பெயரிட்டு ராம் என்று அழைப்பது, கோபிநாத்-ஐ கோபி என்று அழைப்பது.. உச்சகட்டமாக மதுசூதனன் என்று பெயரிட்டு மது என்று அழைப்பது. 😀

சார் ‘இந்திரஜித்’ என்றால் ‘இந்திரனை ஜெயித்தவன்’ மட்டுமல்ல… ‘இந்திரியங்களை ஜெயித்தவன்’னு கூட சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 528 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 471,215 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

November 2012
M T W T F S S
« Oct   Dec »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
%d bloggers like this: