தோசைப் பாட்டு
Posted November 23, 2012
on:- In: Books | Introduction | Kids | Poetry | Tamil
- 15 Comments
சென்ற வாரம் சென்னையில் வாங்கி வந்த அழ. வள்ளியப்பா பாடல் சிடியைக் குழந்தைகள் மிகவும் ரசித்துக் கேட்கிறார்கள், ஒரு நாள் தவறாமல்.
இத்தனைக்கும், அவை ‘மாடர்ன்’கூட இல்லை. எப்போதோ எழுதப்பட்ட எளிய பாடல்கள், கதைகள்தாம். அழ. வள்ளியப்பா பாடல்களில் பெரும்பாலும் கிராமத்து, சிறு நகரக் குழந்தைகளே அதிகம் வருவார்கள், ’ஆகாயக் கப்பல்’, ‘வந்தனன்’மாதிரி அருகிவிட்ட வார்த்தைகளும், கந்தன், குப்பன்மாதிரி நாமே மறந்துவிட்ட பெயர்களும், ’அறுபது ரூபாய் மரக்குதிரை’மாதிரி அன்றைய விலைகளும் அடிக்கடி தட்டுப்படும்.
ஆனால் இதையெல்லாம் தாண்டி, அவற்றில் இருக்கும் சந்த நயமும், லகுத்தன்மையும் என்றைக்கும் குழந்தைகளை ஈர்க்கும். ஆங்கில ரைம்ஸ், அந்த ஊர் Folk Tales, டிஸ்னியால் உருவாக்கப்பட்ட (அ) பிரபலப்படுத்தப்பட்ட Modern Folk Tales அளவுக்கு அழ. வள்ளியப்பா, கவிமணி, வாண்டுமாமா, பூவண்ணன், ரேவதி, அ. செல்வகணபதி போன்றோர் நம்மால் கொண்டாடப்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.
அழ. வள்ளியப்பா பாடல்களை நாங்கள் எங்கே தேடுவது என்று கேட்காதீர்கள். அவரது பெரும்பாலான புத்தகங்கள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. எல்லாவற்றையும் டவுன்லோட் செய்ய நேரம் இல்லாவிட்டாலும், ‘மலரும் உள்ளம்’ இரண்டு பாகங்களைமட்டுமாவது கொத்திக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்: http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-35.htm
அது நிற்க. நான் சொல்லவந்த விஷயம் வேறு. அழ. வள்ளியப்பா பாடல்களை ஒருவாரம் தொடர்ந்து கேட்டபடியால், இன்றைக்குக் குழந்தைகள் இருவருக்கும் எதுகை, மோனை, இயைபு சமாசாரங்களை அறிமுகப்படுத்தினேன். அவர் பாட்டுகளில் இருந்தே அவற்றுக்கு உதாரணம் காட்டினேன். அவர்கள் பள்ளியில் படித்த Rhyming Words பாடத்தை நினைவுபடுத்தித் தொடர்பு உண்டாக்கினேன்.
நான் எதிர்பார்த்ததுபோலவே, அவர்கள் இதைச் சட்டென்று பிடித்துக்கொண்டுவிட்டார்கள், விதவிதமான உதாரணங்களை அடுக்கினார்கள், இன்றைய காலை டிஃபனான தோசையை எடுத்துக்கொண்டு, அழ. வள்ளியப்பா அடிக்கடி பயன்படுத்திய அதே மெட்டில் நாங்கள் நால்வரும் சேர்ந்து ஒரு சுமாரான பாட்டுக் ‘கட்டினோம்’.
குட்டிக் குட்டி தோசை,
….குண்டு குண்டு தோசை,
வட்ட வட்டமாக அம்மா
….வார்த்துத் தந்த தோசை,
அட்டகாசம், அற்புதம்,
….ஆசையாகத் தின்னலாம்,
தட்டு காலி ஆனதும்
….தண்ணீர் வாங்கிக் குடிக்கலாம்!
இனி ஒவ்வொரு சாப்பாட்டு வேளையும் இட்லி, சப்பாத்தி, சட்னி, சாம்பாருக்கெல்லாம் புதுப்புதுப் பாட்டுகளை உருவாக்கலாம் என்று மகள்கள் உறுதியளித்திருக்கின்றனர். ஜாலி ஜாலி!
***
என். சொக்கன் …
23 11 2012
பின்குறிப்புகள்:
1. மேற்சொன்ன சிடி ‘அபிராமி ஆடியோஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பு. ‘செல்லமே செல்லம்’ பாகம் 3, 4, 5 என்று வாங்கலாம், விலை தலா ரூ 99/-
2. இந்த சிடிகளில் அழ. வள்ளியப்பா பெயர் குறிப்பிடப்பட்டிருக்காது. ஆனால் எழுதியது அவர்தான். நம்பி வாங்குங்கள், நான் கேரன்டி 🙂
3. இதே ‘செல்லமே செல்லம்’ பாகம் 1, 2வும் நல்ல தயாரிப்புகள்தாம். ஆனால் அவற்றில் வரும் பாடல்களை எழுதியது அழ. வள்ளியப்பா இல்லை
15 Responses to "தோசைப் பாட்டு"

Thank you. Ordered செல்லமே செல்லம்’ பாகம் 3, 4, 5 :))


>>> கந்தன், குப்பன் மாதிரி நாமே மறந்துவிட்ட பெயர்களும்…
குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவதைப்பற்றி நீங்கள் ஒரு வலைப்பதிவோ, கட்டுரையோ எழுதவேண்டும் என்பது என் ஆசை. அதே கருத்தில் நானே ஒரு கதை எழுத முனைந்திருக்கிறேன். சில குறிப்புகள் எடுத்து வைத்திருக்கிறேன். முடியுமா என்று தெரியவில்லை.


//வட்ட வட்டமாக அம்மா//
இந்த வரி சற்று மாற்றப்பட வேண்டுமோ? நெருடலாக இருக்கிறது.


There is a new Audio Cd called Aadum Mayil with Azha Valliappa Songs that can be used for dance. Plans are in pipeline to bring more Animation DVD solely with Azha Valliappa Songs


குழந்தைக் கவிஞர், பூவண்ணன், கவிமணி, ஆகியோர் நம்மால் கொண்டாடப் படுவதில்லை என்பது வருந்தத்தக்கது.


அருமை.


வட்டமாக அம்மா
வார்த்துத் தந்த தோசை -enough!


Test

1 | யாழினி அப்பா (@yazhini_appa)
November 23, 2012 at 9:56 am
சீடி எங்கே கிடைக்கிறது. #உதவி